முட்டாள்களில் உயர்ந்தவர்

 

 

 

முட்டாள்களில் உயர்ந்தவர்

-----

 

     திருக்குறளில் "பேதைமை" என்னும் ஓர் அதிகாரம். பேதைமை என்பது அறிய வேண்டுவது ஏதும் அறியாமை ஆகும். முட்டாள்தனம் என்றும் கூறலாம்.

 

     முட்டு --- தட்டுப்பாடு, சங்கடம், குறைவு. முட்டுற்றவன் --- அறிவில்லாதவன், குறைவு உள்ளவன்.  முட்டு, முட்டன், முட்டை.

 

     நட்பு என்பது காமத்தால் உண்டாவது. பகை என்பது கோபத்தால் உண்டாவது. காமம், கோபம் என்னும் இவ்விரண்டு குற்றங்களையும் முழுதும் நீக்குவது அரிது. கோபத்தால் வரும் பகையினை ஐந்து அதிகாரங்களாலும், காமத்தால் வரும் பகையினை ஐந்து அதிகாரங்களால் கூறினார். கோபத்திற்கும் காமத்திற்கும் அடிப்படையாக உள்ள மயக்க அறிவினை இரண்டு விதமாக்கி, ஒன்றைப் "பேதைமை" என்றும், மற்றொன்றைப் "புல்லறிவாண்மை" என்றும் கூறி அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "மனம், மொழி, மெய்கள் அடங்குவதற்குக் காரணமாகிய நூல்களை ஓதியும், அதன் பயனை அறிந்தும், அதனை அறியும்படி பிறர்க்குச் சொல்லியும், மனம், மொழி, மெய்களால் தான் அடங்கி ஒழுகாத மூடரைப் போடன்ற மூடர் உலகத்தில் இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     ஓதி, உணர்ந்து, பிறர்க்கு எடுத்துக் கூறுகின்ற வல்லமை உடைய ஒருன் திரிகரணங்களாலும் அடங்கி ஒழுகவில்லையானால், அவனைப் பிறர் திருத்துவது கூடாத காரியம்.

 

ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், தான் அடங்காப்

பேதையின் பேதையார் இல்.                  

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

வேதசன்மா பல்கலையின் மிக்குமுனி வர்ப்பழிப்பான்

மூதுஅரக்கன் ஆனான், முருகேசா! - காதலினால்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப்

பேதையில் பேதையர் இல்.          

 

இதன் பொருள் ---

 

         முருகேசா --- முருகப் பெருமானே, வேதசன்மா --- வேதசன்மா என்னும் அந்தணன், பல்கலையினால் மிக்கு --- பலகலைகளை நன்கு கற்று உணர்ந்து இருந்தும், முனிவர்ப் பழிப்பான் --- முனிவர்களைப் பழித்துக்கொண்டு இருந்தபடியினாலே, மூதரக்கன் ஆனான் --- அவர்கள் வைத வசவால் பெரிய அரக்கனாக மாறிவிட்டான். காதலினால் --- விருப்பத்தோடு, ஓதி உணர்ந்தும் --- நூல்களைக் கற்று உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும் --- மற்றவர்கட்குப் போதித்தும், தான் அடங்காப் பேதையில் --- தான்மட்டும் அவ்வழியில் அடங்கி நடவாத அறிவற்றவனைப் போல், பேதையார் இல் --- அறிவற்றவர்கள் இல்லை.

 

         வேதசன்மா என்பவன் பல கலைகளையும் நன்கு ஓதி உணர்ந்தும், முனிவர்களைப் பழித்தபடியினாலே பெரிய அரக்கன் ஆனான். விருப்பத்தோடு நூல்களை ஓதி உணர்ந்தும்,  பிறர்க்குப் போதித்தும், தான் மட்டும் அவ்வழியில் அடங்கி நடவாதவனைப் போல அறிவற்றவன் இல்லை எனப்பட்டது.

 

                                                 வேதசன்மாவின் கதை

 

         கௌசிகன் வழிமுறையில் பிறந்த வேதசன்மா என்னும் அந்தணன் மனமொழி மெய்கள் அடங்குவதற்குரிய அறிவு நூல்களைக் கற்றிருந்தான். பிறர்க்குப் போதிப்பதிலும் வல்லவனாக இருந்தான். ஆயினும் அவனுடைய உள்ளம் அடங்கி நிற்கவில்லை. பேதைமையால் கற்றோர் பலரையும் இழித்துரைத்துப் கொண்டு திரிந்தான். ஒருநாள் அரச அவையில் சில முனிவர்களோடு வீணே சொற்போரிட்டான். அதனால் அவர்கள் சினம் கொண்டு வசவுரை வழங்கினார்கள். அவ் வசவுரையினால் வேதசன்மா அர்க்கனானான்.

 

     திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளை வைத்தே திருப்போரூர் முருகப் பெருமான் மீது பாடியருளிய ஒரு பாடல்..

                                                              

ஓதியும், உணர்ந்தும், பிறர்தமக்கு உரைத்தும்,

     உ(ள்)ள முதல் தான் அடங்காத

பேதையில் போதையார் இலர் என்ற

     பெரியவர் சொற்கு இலக்கு ஆனேன்,

கோதுஅறும் ஆறு கொடுமுடிப் பவளக்

     குன்றம் ஒத்து இலகு கட்டழகா!

வேத கோடங்கள் முழங்கிய போரூர்

     வீறிவாழ் ஆறுமா முகனே.

                           --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.

 

இதன் பொருள் ---

 

     குற்றமற்ற ஆறு பவளக் குன்றுகளின் உச்சியைப் போல் உயர்ந்து விளங்கும் கட்டழகினை உடையவனே! வேதகோஷங்கள் முழங்குகின்ற திருப்போரூர் என்னும் திருத்தலத்தில் பெருமையுடன் வீற்றிருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே! மனம், மொழி, மெய்கள் அடங்குவதற்கு ஏதுவாகிய நூல்களை ஓதியும், அவற்றை உணர்ந்தும், பிறர்க்கு அவற்றின் பொருளை உணர எடுத்துச் சொல்லியும், மனமொழி மெய்களால் அடங்கி வாழாத அறிவிலியைப் போல அறிவிலி இல்லை என்னும் பெரியவர்களுடைய சொல்லுக்கு இலக்கணமாக நான் ஆனேன்.

 

     நூல்களை ஓதியும், மனம் அடங்காத பேதைகளை, கலதிகள் என்கின்றார் திருமூல நாயனார்.

 

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்

சுற்றமும் வீடார், துரிசு அறார், மூடர்கள்,

மற்றும் பலதிசை காணார் மதியிலோர்,

கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே  --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் மூதேவிகள் ஆவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிந்தவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால், அவர் கற்றும் கல்லாத மூடரே ஆவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோர் ஆவர்.

 

     ஒழுக்கம் இல்லாதவர், தீக்குணம் உடையோர், "கலதி" எனப்படுவர்.

 

 

அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிகஇனிதே;

பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே;

தந்தையே ஆயினும் தான்அடங்கான் ஆகுமேல்,

கொண்டு அடையான் ஆகல் இனிது.     --- இனியவை நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே --- அந்தணர்க்கு வேதத்தினை மறவாமை மிக இனிது; பந்தம் உடையான் படை ஆண்மை முன் இனிதே --- (மனைவி மக்கள் முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன் சேனையை ஆளுந்தன்மை முற்பட இனிது ; தந்தையே ஆயினும் தான் ஆடங்கான் ஆகுமேல் --- (தன்னைப் பெற்ற) தந்தையே ஆனாலும், அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கண் சென்று) அடங்கான் எனின், அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதான் ஆதல் இனிது;

 

     அந்தணர் --- உள்ளத்தால் அழகிய தன்மை உடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள்.

 

கற்றுப் பிறர்க்கு உரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம் 

வெற்று உரைக்கு உண்டுஓர் வலிஉடைமை, - சொற்றநீர் 

நில்லாதது என்என்று நாண்உறைப்ப நேர்ந்துஒருவன் 

சொல்லாமே சூழ்ந்து சொலல்.            --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     கற்றுப் பிறர்க்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம் வெற்று உரைக்கு ஓர் வலி உடைமை உண்டு --- நூல்களைப் படித்துப் படித்ததன்படி ஒழுகவேண்டுமென்று அக்கருத்துக்களைப் பிறர்க்கு மட்டும் எடுத்துக் கூறிக் கூறியபடி தாங்கள் அவ்வொழுக்கத்தில் நில்லாமல் இருக்கின்றவர்கள் வாயில் உண்டாகும் சொல்லுக்கு ஒரு வலியுடைமை இருப்பது உண்டு; (அது), சொற்ற நீர் நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல் --- நாங்கள் கற்றதன்படி ஒழுகவேண்டும் என்று சொல்லிய நீங்கள், அங்ஙனமே அவ்வொழுக்கத்தில் நில்லாதது ஏனோ? என்று வெட்கம் உறைக்கும்படி எதிர்த்து ஒருவன் இகழ்ந்து சொல்லாதபடி, அறிவுறுத்தும் போது பிறர்க்கு நினைத்துப் பார்த்து அறிவுறுத்தலாம்.

        

பூத்தாலும் காயா மரமும்உள, நன்றுஅறியார்

மூத்தாலும் மூவார்,  நூல்தேற்றாதார் - பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துஉள, பேதைக்கு

உரைத்தாலும் செல்லாது உணர்வு.       --- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் ---

 

     பூத்தாலும் காயா மரமும் உள --- பூத்து இருந்தனவாயினும், காய்க்காத, மரங்களும் உண்டு, (அதுபோல) நன்று அறியார் --- நன்மையறியாதவர், மூத்தாலும் --- ஆண்டுகளால் முதிர்ந்தாலும், மூவார் --- அறிவினால் முதிரார்; நூல் தேற்றாதார் --- அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர் (அத்தன்மையரே ஆவர்); பாத்தி புதைத்தாலும் --- பாத்தி கட்டிப் புதைத்தாலும், நாறாத --- முளைக்காத, வித்து உள --- வித்தும் உண்டு, (அது போல) பேதைக்கு --- அறிவில்லாதவனுக்கு, உரைத்தாலும் --- நன்மையை எடுத்துக் கூறினாலும், உணர்வு செல்லாது --- அறிவு தோன்றாது.

 

         பூத்தாலும் காயா மரம் போன்றவர் ஆண்டு முதிர்ந்ததும் அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவிலானுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.

 

 

நல் பெருங் கல்விச் செல்வம்

     நவை அறு நெறியை நண்ணி,

முன் பயன் உணர்ந்த தூயோர்

     மொழியொடும் பழகி, முற்றி,

பின் பயன் உணர்தல் தேற்றாப்

     பேதைபால், வஞ்சன் செய்த

கற்பனை என்ன ஓடிக்

     கலந்தது, கள்ளின் வேகம்.   ---  கம்பராமாயணம், களியாட்டுப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     நல்பெருங் கல்விச் செல்வம் நவைஅறு நெறியை நண்ணி  --- நல்லதாகிய பெரிய கல்விச் செல்வத்தால் குற்றமற்ற வழியைப் பொருந்தி; முன்பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி --- முற்காலத்து அந்நெறியின்  பயனை உணர்ந்த தூயோர் தம் உபதேச மொழியோடு பழகி  முதிர்ச்சியுற்று;  பின்பயன் உணர்தல் தேற்றாப் போதைபால் வஞ்சன் செய்த --- பின்னால் அந்த உபதேச மொழியினால்   உண்டாகும் பயனை (உணரவேண்டி இருக்க,  அதனை) உணர்தல்  இல்லாத பேதைபால் வஞ்சகன் ஒருவன் செய்த; கற்பனை என்ன ஓடிக் கலந்தது கள்ளின் வேகம் --- கற்பனை, அப்பேதையின் உள்ளத்தில் விரைந்து நம்பப்பட்டு பரவுவது போலக் கள்ளின் வேகம் மகளிர் கூட்டத்தில் விரைந்து பரவியது.

 

     நூலறிவோடு கேள்வி ஞானமும் எய்தி, அதன் பயனை உணராதாரைப் பேதை என்றார். "ஓதியுணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பேதையிற் பேதையாரில்" என்னும் திருக்குறள் காண்க.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...