மெய்யினைப் பொய் என்பவனே பேய்

 

 

மெய்யைப் பொய் என்பவனே பேய்

----

 

     திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். புல்லறிவாண்மை என்பது, அறிவில் சிறுமையையே பெருமையாகக் கருதி நடந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, சிற்றறிவினனாக இருந்துகொண்டே, தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து, உயர்ந்தோர் சொல்லும் உறுதிக் சொல்லை மனத்துள் கொள்ளாமை ஆகும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "உலகத்து உயர்ந்தோர் பலரும் உண்டு என்று சொல்லுவதை, தனது புல்லறிவால் இல்லை என்று சொல்லுபவன், மனிதன் என்று நினைக்கப் படாமல், பூமியில் கண்ணால் காணப்படுகின்ற பேய் என்று நினைக்கப்படுவான்" என்கின்றார் நாயனார்.

 

     "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பது கொண்டு, உலகத்து உயர்ந்தோரைக் கொள்ளப்பட்டது.

 

     கடவுள் உண்டு என்றும், மறுபிறப்பு உண்டு என்றும், நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும், அவற்றின் பயன்களும் உண்டு என்றும் உயர்ந்து ஞானியர் கூறுவதை மனத்துள் கொள்ளாது, தனது அறியாமையால் தான் எண்ணிய ஒன்றையே வலியுறுத்திக் கொள்பவன், தான் கெடுவது மாத்திரம் அல்லமால், உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஒழுக்கத்தில் நின்று உய்யலாம் என்று எண்ணுபவரையும் கெடுப்பான். இத்தகைய மக்களை, மக்கள் வடிவில் காணப்படுகின்ற பேய் என்று நாயனார் காட்டினார்.

 

     மக்கள் உடம்பில் தோன்றி, தனது உடம்பை வெளிக்காட்டாது மறைந்து நின்கின்ற பேயைப் போல, இந்தப் புல்லறிவாளன், உயர்ந்தோர் கூறும் ஒழுக்கத்தில் நிற்பவனைப் போல் இருந்துகொண்டு, கடவுள், மறுபிறப்பு, இருவினைப் பயன்கள் ஆகியவற்றை மறுத்துப் பேசுகின்றான். உருவத்தால் மனிதனாகவும், உள்ளத்தால் பேயாகவும் இருக்கின்ற இவனைப் பேயாகவே கருதவேண்டும்.

 

     இறைபரம்பொருளுக்கு ஒரு பெயரோ, ஒரு உருவோ இல்லை என்பது அருளாளர்கள் எல்லோரும் அறிவித்த உண்மை. கடவுள் அறிவுப் பொருள். ஆற்றல் நிறைந்தது. கருணை வடிவானது. "ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்பது திருவாசகம். யார் யார் எந்த எந்த வடிவில் நினைக்கின்றார்களோ, அந்த அந்த வடிவத்தை மேற்கொள்ளும் அளப்பரிய ஆற்றல் நிறைந்தது.

 

     ஆற்றலாக விளங்குவதை, "சத்தி" என்றும், ஆற்றலுக்கு இருப்பிடமாக விளங்குவதை "சிவம்" என்றும் கொள்கின்றோம். சத்தி என்பது இயங்கு ஆற்றல் (KINETIC ENERGY), சிவம் என்பது இயக்கு ஆற்றல் (POTENTIEL ENERGY).

 

     கண்ணால் காணப் படாத மின்சாரமானது, நாம் கைக்கொள்ளும் கருவிகளுக்கு ஏற்ப வந்து பயன் தருதல் போல, இயற்கை வடிவில் தானாகவும்,, மக்கள் கற்பனை செய்துகொண்ட வடிவில் அவரவர் வேண்டுதலின்படியும் கடவுள் நின்று அருள்புரியும். கண்ணால் காணப்படாத இறைவனின் இருப்பை, கண்ணால் காணப்படும் பொருள்களைக் கொண்டு அறியலாம் என்பதற்குப் பின்வரும் பாடல்கள் எடுத்துக்காட்டு.

 

மண்டபம் ஆதி கண்டோர்

     மயன்உளன் என்னல் போலும்,

குண்டலம் முதல் கண்டோர் பொற்

     கொல்லன் உண்டு என்னல் போலும்,

ஒண்துகில் கண்டோர் நெய்தோன்

     ஒருவன்உண்டு என்னல் போலும்,

அண்டம்மற்று அகண்டம் செய்தோன்

     உளன் என அறிவாய் நெஞ்சே.      

 

         மண்டபம் முதலான அழகிய கட்டுமானங்களைக் காண்பவர், அவற்றைக் கட்டிய வேலைப்பாடு உடைய ஒருவன் உண்டு என்று உய்த்து உணர்வது போலவும், குண்டலம் முதலிய அழகிய அணிகலன்களைக் கண்டால், அவற்றை அழகுற வடித்த பொற்கொல்லன் ஒருவன் உண்டு என்று உய்த்து உணர்வது போலவும், ஆடை முதலிய செயப்படுபொருள்களைக் கண்டதும், அவற்றை அழகுற நெய்து அமைத்தவன் ஒருவன் உண்டு என்று உய்த்து உணர்வது போலவும், இந்த உலகமும் பிறவும் கண்டதும், இவற்றைப் படைத்தருளிய முழுமுதல் ஒன்று உண்டு என்று நெஞ்சே உய்த்து உணர்வாயாக.

 

     ஒரு முதல்வன் இல்லாமல், தானே எதுவும் உருவாவது இல்லை. பெற்றெடுத்த தாய் தந்தையரைக் காண்ணால் காணவில்லை என்பதற்காக, தனக்குத் தாயோ தந்தையோ இல்லை என்று ஒருவன் கூறுவது எத்தகைய அறிவின்மை.

 

 

தீட்டுவோன் இன்றி ஆமோ

     சித்திரம்? திகழ்பொற் பாவை

ஆட்டுவோன் இன்றித் தானே

     ஆடுமோ? திவவி யாழின்

மீட்டுவோன் இன்றிக் கீதம்

     விளையுமோ? சராச ரங்கள்

நாட்டுவோன் ஒருவன்இன்றி

     நன்கு அமைந்து ஒழுகும் கொல்லோ?       

 

         தீட்டுபவன் ஒருவன் இல்லாமல் சித்திரம் உண்டாகுமோ? இல்லை. பொம்மையை ஒருவன் கயிற்றினால் ஆட்டினால் அன்றி, அது ஆடுமோ? இல்லை. சிறப்பான யாழினை ஒருவர் மீட்டினால் அன்றி, அதில் இனிய இசை தோன்றுமோ? இல்லை. அதுபோலவே, இந்த அண்டத்தில் உள்ள அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் அனைத்தும் கடவுள் என்னும் ஒரு பொருள் இல்லாமல் இந்த இலகத்தில் இயக்கம் கொள்ளமாட்டா.

 

மரமுதல் அசைதலால் கால்

     உளது என மதிப்பார், ங்கும்

பரவிய புகையால் செந்தீ

     உளது எனப் பகர்வார், சுற்றும்

விரவிய மணத்தால் பாங்கர்

     வீ உளது என்று தேர்வார்,

பரன் உளன் எனும் உண்மைக்குப்

     பார் எலாம் சான்றும் மன்னோ.

 

     மரம் முதலானவைகளை அசைவதைக் கொண்டு காற்று வீசுகின்றது என்றும், எங்கும் பரவுகின்ற புகையைக் கொண்டு, நெருப்பு உண்டு என்றும், சுற்றிலும் வீசுகின்ற நறுமணத்தால், மலர்கள் உண்டு என்றும் அறிந்து கொள்வர். அதுபோலவே, இயங்குகின்ற இந்த உலகத்தைக் கொண்டு, அதனை இயக்கும் மேலான ஒரு பொருள் உண்டு என்று கொள்ளலாம்.     

 

 

நாதன் இல்லாத வீடு

     நாளுமே நடவாது என்னில்,

வேத நாயகன் இலானேல்

     விரிகதிர் மீன் உதித்தல்,

சீதநீர் பெயல், தருக்கள்

     சீவ ராசிகள் கதித்தல்

பூத பௌதீகம் எல்லாம்

     புரை அற ஒழுகற் பாற்றோ.   

 

     வீடு என்றால் வீட்டுத் தலைவன் ஒருவன் இருத்தல் வேண்டும். தலைவன் இல்லாத வீடு நடவாமைபோலக், கடவுளில்லாத உலகமும், உலகத்தில் ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியன தோன்றலும், மழைபெய்தலும், உயிர்கள் வாழ்தலும் நிகழமாட்டா.

 

பூதம் யாவுக்கும் ஏணாய்ப்

         பொருந்திய விசும்பைக் காற்றை,

வேத நூல் அதனை மண்ணோர்

         மெய்யுரை உயிரை நெஞ்சை

ஏதம் இல் அறத்தைக் கண்ணால்

         பார்த்திலோம் எனினும் உண்டு என்று

ஓதல்போல், தெய்வந்தான் ஒன்று

         உளது எனல் தேற்றம் அம்மா.           

 

         நீலம், நீர், தீ முதலிய பூதங்களுக்கு ஆதராமாய் உள்ள காற்றை, வானத்தை, அறிவை, உயிரை, அறத்தைக் கண்ணால் பார்ப்பதில்லை. ஆனால் உண்டென்று ஒப்புக்கொள்கின்றோம். அதுபோன்று தெய்வம் உண்டு என்பதும் தெளிவு.

 

வாசம் மூக்கு அறியும், ன்றி

     வாய்செவி விழிமெய் தேரா;

பேச வாய் அறியும் அன்றிப்

     பின்னை ஓர் புலன் தேராது;

நேசம் ஆர் தொண்டர் ஞான

     நேத்திரம் கொண்டு காணும்

ஈசனை, முகத்தில் கண்ணால்

     இகத்தில் யார் காண வல்லார்.               

 

         வீசுகின்ற நறுமணத்தை மூக்கு அறியுமே அல்லாமல், காது முதலிய ஏனைப் புலன்கள் அறியமாட்டா. பேச வாய் அறியுமே அல்லாது, மற்றவை அறியமாட்டா. அதுபோலக் கடவுளை மெய்யன்பர்கள் ஞானக்கண் கொண்டு காண்பர். அப்படியிருக்க உலகத்தில் முகக்கண்ணால் காண்பவர் யார்?

 

வான் இன்றி மழையும் இல்லை;

     வயல் இன்றி விளைவும் இல்லை;

ஆன் இன்றி கன்றும் இல்லை;

     அரி இன்றி ஒளியும் இல்லை;

கோன் இன்றிக் காவல் இல்லை;

     குமரர் தாய் இன்றி இல்லை;

மேல் நின்ற கடவுள் இன்றி

     மேதினி இல்லை மாதோ.                

 

         மேகம் இல்லாமல் மழை இல்லை; வயல் இல்லாமல் விளைவு இல்லை; பசு இல்லாமல் கன்று இல்லை; ஞாயிறு இல்லாமல் வெளிச்சமில்லை; அரசன் இல்லாமல் காவல் இல்லை. தாய் இல்லாமல் மக்கள் இல்லை. இவைபோலக் கடவுள் இல்லாமல் உலகம் இல்லை (என்று உணர்தல் வேண்டும்)

 

     இக் கருத்துக்களை எல்லாம் உள்ளடக்கி, தெய்வத் திருவள்ளுவ நாயனார்,

 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான், வையத்து

அலகையா வைக்கப் படும்.              

 

என்று அருளிச் செய்தார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

எறும்பு கடை யானை தலை ஈசனைப் பூசித்துப்

பெறும் கதி கண்டும் தேறார் பேய்கள், ---  அறிந்த

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான், வையத்து

அலகையா வைக்கப் படும்.

 

இதன் பொருள் ---

 

     எறும்பு முதல் யானை வரை உள்ள உயிர்களுமே இறைவனைப் பூசித்துப் பேறு பெற்றன என்பதை அறிந்து இருக்கின்றோம். அவைகளை ஈசனைப் பூசித்து நற்கதியை அடையும்போது, மேலான ஆறறிவு உள்ள மனிதவர்க்கமும் அவ்வாறு ஒழுகி நற்கதியை அடைதல் வேண்டும். அந்த உண்மையைத் தெளியமாட்டாதவர்கள் பேய்கள் எனப்படுவார்.

 

     எறும்பு ஈசனைப் பூசித்துப் பெறு பெற்ற தலம் திருஎறும்பியூர். யானை பூசித்துப் பேறு பெற்ற தலம் திருக்காளத்தி. தேறார் --- சிவபெருமானை வழிபட்டு நாம் உய்ய வேண்டுமென்று தெளியமாட்டார். அலகை --- பேய். தெளியாதாரைப் பேய்கள் என்றார்.

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க.

 

     தன்னை அடைக்கலமாக வந்து அடைந்த விபீடணனை ஏற்றுக் கொண்டதற்கு, இராமபிரான் காட்டிய விளக்கம். மெய்யைப் பொய் என்பவன் மீளாத நரகில் வீழ்வான்.

                                                                   

'உய்ய, 'நிற்கு அபயம்!" என்றான்

     உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்

கய்யனும், ஒருவன் செய்த

     உதவியில் கருத்திலானும்,

மய் அற, நெறியின் நோக்கி,

     மாமறை நெறியில் நின்ற

மெய்யினைப் பொய் என்றானும்,

     மீள்கிலா நரகில் வீழ்வார். --- கம்பராமாயணம், வீடணன் அடைக்கலப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன் உயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும்;  ஒருவன் செய்த உதவியைக்  கருத்தில் கொள்ளாது மறந்தவனும்;   உயிர்க் குற்றம் நீங்க, அறநெறியை அறிந்து, சிறந்த வேத நெறிப்படி நின்று ஒழுகும்  உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும், மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார்.

 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...