செல்வத்துப் பயனே ஈதல்

 

 

செல்வத்துப் பயனே ஈதல்

-----

 

    மதுரைக் கணக்காயனார் என்பவர் மதுரையில் அக்காலத்தில் சிறந்த ஆசிரியராக இருந்து பலர்க்கும் அரிய நூல்களை ஓதுவித்த சிறப்பால் கணக்காயனார் என்றே வழங்கப்பட்டனர். இவருடைய மகனார் நக்கீரனார் ஆவர். இவர் காலத்துப் புலவர்களுள் இவர் தலைமைப் புலவராய் விளங்கினது கொண்டே, “தந்தையர் ஒப்பர் மக்கள்” என்னும் தொல்காப்பியத்தின்படிக்கும், "தந்தை அறிவு மகன் அறிவு" என்னும் பழமொழி நானூற்றின் கூற்றுப் படிக்கும், இவரின் தந்தையாரின் சிறப்பு இனிது உணரப்படும்.

 

    இந் நக்கீரனார், திருமுருகாற்றுப்படை பாடி முருகன் திருவருள் சிறக்கப் பெற்றவர். தமிழகம் முழுவதையும் நன்கு அறிந்தவர். இவர் அந்தணர் அல்லர்.

 

         இத்துணைச் சிறப்புடைய புலமை சிறந்த நக்கீரனார், மலையும் காடும் நாடும் கடலுமாகிய எப்பகுதியிலும் வாழும்  மக்கள் பலருடைய முயற்சி முற்றும் தம் புலமைக் கண்ணால் நோக்கினார். எல்லாருடைய உள்ளமும் பொருளை ஈட்டுவதிலேயே பெரிதும் ஆர்வம் உற்று இயங்குவது  தெரிந்தது. நாட்டுக்குத் தலைவனாக உள்ளவனும், அவனது தொழிலைப் புரிவதும், காடுகளில் வாழும் விலங்குகளை வேட்டையாடித் திரியும் வேட்டுவரும் இரவும் பகலும் தமக்குரிய விலங்குகளை வேட்டையாடுவதையே எண்ணி முயல்வதும் நக்கீரர் கருத்தை ஈர்த்தன. இவர்களது உழைப்பின் முடிவு, என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தார் இவர். அனைவர்க்கும் வேண்டுவன உணவும் உடையுமே என்றும், அவற்றுள் உண்பது நாழியும், உடுப்பவை இரண்டும் என்றும், பிறவற்றில் வேற்றுமை ஏதும் இல்லை என்று தெளிந்தார்.

 

    இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தால், தேவை சிறிதும், ஈட்டுவன பெரிதுமாக இருப்பதை உணர்ந்தார். தேவைக்குப் போக எஞ்சியுள்ள செல்வத்தால் என்ன பயன் என்று ஆராய்ந்தால், பிறர்க்குக் கொடுத்து உதவுதல் ஆகிய அறம் ஒன்றே என்றும், உயிர்க்குத் துணையாக எப்பிறவியிலும் வரும் அந்த அறத்தைச் செய்யாது, தாமே அனுபவிக்கலாம் என்றால், எல்லோரும் அந்த வாய்ப்பை இழந்தவர்களாகவே உள்ளனர்.

 

    இதை உலகோர்க்கு உணர்த்த, பின்வரும் பாடலைப் பாடினார்.

 

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

 பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்,

துய்ப்பேம் எனினே தப்புந பலவே. 

 

இதன் பொருள் ---

 

    தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டு உள்ள இந்த உலகில், "எல்லார்க்கும் பொதுவானது அல்ல, எனக்கே உரியது" என்று ஒரு குடையின் கீழ் ஏகச் சக்கராதிபதியாக வாழ்ந்த மாமன்னர்களுக்கும்; பகல் பொழுதிலும் உறங்காமல், நள்ளிரவில் கணி விழித்து, விரைந்து செல்லுகின்ற காட்டு விலங்குகளை வேட்டை ஆடித் திரியும், கல்வி அறிவு இல்லாத வேடர்களுக்கும் தேவைப்படுவது --- உண்பதற்கு ஆழாக்குத் தானியமும், உடுப்பதற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு துண்டு உடைகளுமே ஆகும். மற்ற மற்றத் தேவைகள் எல்லாம் கூட, இந்த இரண்டு விதமானவர்க்கும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. எனவே, செல்வத்தை ஈட்டுவதன் பயன், பிறருக்குக் கொடுத்து மகிழவே. இதை உணராமல், ஈட்டிய செல்வம் தமக்கே உரியது; தாமே அனுபவித்து கிழலாம் என்று இருந்த பலரும், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு, உயிரை இழந்து இருக்கின்றார்கள்.

 

    தெண் கடல் --- தெளிந்த தீரை உடைய கடல். வளாகம் --- வளைக்கப்பட்ட பகுதி. நடுநாள் யாமம் --- நள்ளிரவுப் பொழுது. கடுமா --- விரைந்து ஓடுகின்ற காட்டு விலங்கு. நாழி --- ஆழாக்கு (என்னும் ஓர் அளவு) தப்புந --- தவறியவர்.

 

    "சருகு அரிக்க நேரம் உண்டு, குளிர் காய நேரம் இல்லை" என்னும் தலைப்பில், நான் வெளியிட்ட ஒரு பதிவை இதனோடு சேர்த்துப் படித்துக் கொள்ளலாம்.

 

    ஔவையார் "நல்வழி" என்னும் நூலில் பாடி அறிவுறுத்தியதையும் காணலாம்.

 

சேவித்தும், சென்று இரந்தும், தெண்ணீர்க் கடல்கடந்தும்,

பாவித்தும், பார்ஆண்டும், பாட்டுஇசைத்தும், - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்

 

இதன் பொருள் ---

 

     வயிற்றுப் பசியின் கொடுமையால் பிறரைத் தேடிச் சென்று வணங்கியும், பலரிடத்தில் சென்று யாசித்தும், தெளிந்த நீரை உடைய கடலைக் கடந்து, வேற்ற நாடுகளுக்குச் சென்றும், அற்பர்களை எல்லாம் பெரியவர்களாகப் பாவித்தும், உலகை ஆண்டும், செல்வர்களைப் புகழ்ந்து பாடியும், இப்படிப் பலவிதமாக நாம், உடம்பினை ஓம்புவதற்கு வேண்டிய படி அரிசிக்காகவே உழைத்துக் காலத்தைக் கடத்துகின்றோம்.

 

     போவிப்பம் --- கடத்துகின்றோம், செலுத்துகின்றோம்.

 

     வீட்டு நெறியில் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனித உடம்பினை, உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் என்பது கருத்து.

 

     இதை, திருவள்ளுவ நாயனா ர்,

 

"ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது,

ஊதியம் இல்லை உயிர்க்கு"

 

என்னும் திருக்குறளின் வழி, "பிறர்க்குக் கொடுத்து உதவி வாழ்தல், அதனால் புகழ் பெறுதல் ஆகிய இரண்டைத் தவிர, உயிருக்கு ஊதியமாக வருவது வேறு இல்லை" என்றும்,

 

"ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்? தாம் உடைமை

வைத்து இழக்கும் வன்கண் அவர்"

 

என்னும் திருக்குறளின்வழி, "தாம் தேடிய பொருளை பிறருக்கு வழங்கி மகிழ்வதால் உண்டாகும் இன்பத்தை, வழங்காமல் வைத்து, பின்னர் இழக்கின்ற கொடியவர்கள் அறியமாட்டார்கள் போலும்" என்றும் காட்டினார்.

 

     இப்படி அறியாமையால் உழலுகின்றவர்கள் வாழ்க்கை எப்போதும் சஞ்சலமாகத்தான் கழியும் என்கின்றார், "நல்வழி" என்னும் நூலில் ஔவைப் பிராட்டியார்.

 

 

உண்பது நாழி, உடுப்பது நான்குமுழம்,

எண்பது கோடிநினைந்து எண்ணுவன,-கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்.

 

இதன் பொருள் ---

 

     (எவ்வளவுதான் உழைத்துப் பொருளைக் குவித்தாலும்) உண்பது ஒரு நாழி அரிசிச் சோறுதான். உடுப்பது நான்கு முழ அளவு உள்ள உடையே தான். இப்படி இருக்க, மனத்தில் நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடிக்கும் மேலாக உள்ளன. (இதை உணர்ந்து தெளியாமல்) மனக் கண்ணானது குருடாக இருக்கின்ற மனிதர்கள் வாழுகின்ற வாழ்க்கையானது, மண்ணால் செய்த கலம் போல, சாகின்ற காலம் வரையில் சஞ்சலம் உள்ளதாகவே இருக்கின்றது.

 

     "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்னும் முதுமொழியின்படி, உள்ளதே போதும் என மனம் அமைதி பெற்று இருக்காதவர்கள், இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் என்பது கருத்து. மண்ணால் செய்த கலமானது எப்போது, எப்படி உடையும் என்பதை யாரும் கணிக்கமுடியாது.

 

இதனை,

 

"ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருது,

கோடியும் அல்ல பல"

 

என்னும் திருக்குறளின்வழி, "எப்படி வாழ்வாங்கு வாழ்வது என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியாதவர்கள், தமது வாழ்நாள் கோடி அல்ல, மேலும் உள்ளது என்று கருதுவார்கள்" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார்.

 

     வாழ்நாள் என்பது யாருக்கும் அவரவர் விதிப்படி வரையறுக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆம், நமது கண் முன்னரேயே, நமக்கு முதியவரும், இளையவரும் இறப்பதைக் காண்கின்றோம். நமக்கும் சாவு என்பது, எப்போதும் வரும் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பது இல்லை. நமது வாழ்நாள் இன்னும் உள்ளது என்றுதான் நாளும் பொழுதைக் கழிக்கின்றோம். பட்டினத்தடிகள் அருளியபடி, "செத்த பிணத்தின் முன், இனிச் சாகும் பிணங்கள் கத்துகின்ற கணக்கு என்ன?" என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

 

     நெடுவழிப் பயணம் மேற்கொள்ளுகின்றவர்கள், பயணத்திற்கு வசதியாக, தேவையானவற்றை எடுத்துக் கொண்டு சென்றால், பயணம் இனிமையாக இருக்கும். இல்லாவிட்டால், பயணம் துன்பமாகவே அமையும் என்பதை ஒரு பாடலின் மூலம், "கந்தர் அலங்காரம்" என்னும் நூலில், அருணகிரிநாதப் பெருமான் காட்டி உள்ளார்.

 

மலைஆறுகூறு எழ, வேல்வாங்கினானை வணங்கி,அன்பின்

நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும்

தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்

இலைஆயினும், வெந்தது ஏதுஆயினும் பகிர்ந்து, ஏற்றவர்க்கே.

 

இதன் பொருள் ---

 

     கிரௌஞ்ச மலையின் நடுப்பாகம் பிளவுபட்டு அங்கு வழி தோன்றுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப்பெருமானை அன்புடன் வணங்கி, யாசிப்பவர்களுக்குத் தானம் செய்வதாகிய நிலையான பெருந்தவத்தைச் செய்வீர்களாக. இத்தகைய தவத்தின் பயனானது, உங்களைத் தேடிவரப் போகின், தொலையாத இறுதி யாத்திரை வழிக்கு கட்டுச் சோறும் பொருந்திய உதவியும் போன்று அமையும் என்பதை உணர்வீர்களாக. உம்மிடம் வந்து யாசித்தவர்களுக்கு இலைக் கறியாயினும், வெந்தது எதுவாயினும், பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

     "தொலையா வழி" என்பது கூற்றுவன் ஊர்க்குச் செல்லுகின்ற மரண யாத்திரை. அது மிகவும் கடுமையான வழி. அத்தகைய கொடிய வழிக்குக் கட்டுச் சோறு வேண்டுமல்லவா? அது, ஏழைகள் வயிற்றில் இட்ட அன்னமும், நீரும் தான். "வேகாத பண்டம் பலநாள் உமக்குத் துணையாக இருக்கும். அதைக் கொடுக்க மனம் இல்லையானாலும், வெந்ததையாவது ஒரு பிடி கொடுத்து உதவுங்கள்" என்கின்றார் அருணகிரிநாதர். இறந்த பிறகு, ஒரு பிடி சாம்பலும் காணாது போகின்ற இந்த உடம்பைக் கொண்டு நாம் தேடிக்கொள்ளும் ஊதியம் அதுதான். "பிடி சோறு கொண்டு இட்டு, உண்டு இரு. இருவினையோம் இறந்தால் ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே" என்றும் அருளினார் அடிகளார்.

 

 

    

 


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...