தீயவருக்கு இடமளித்தால் துயரமே வரும்

 

தீயவருக்கு இடம்கொடுத்தால் துயரமே வரும்

-----

 

நன்றுஅறியாத் தீயோர்க்கு இடம்அளித்த நல்லோர்க்கும்,

துன்று கிளைக்கும் துயர்சேரும், --- குன்றிடத்தில்

பின்னிரவில் வந்தகரும் பிள்ளைக்கு இடம்கொடுத்த

அன்னமுதல் பட்டது போலாம்.

 

என்கின்றது "நீதிவெண்பா" என்னும் நூல்.

 

இதன் பொருள் ---

 

         முன்னொரு காலத்து மலையில் இரவில் வந்த காக்கைக்குத் தங்க இடம் கொடுத்த அன்னப் பறவை பின்பு துன்பப்பட்டது போல, செய்த நன்மையைத் தெரிந்துகொள்ள மாட்டாத தீயவர்களுக்குத் தமது இடத்தைக் கொடுக்கும் நல்லவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த உறவினர்களுக்கும் துன்பம் வந்து சேரும்.

 

(துன்று கிளை --- நெருங்கிய உறவு. கரும்பிள்ளை --- காக்கை.)

 

இதில் புனையப்பட்ட கதை

 

     ஒரு மலையில் ஓர் அன்னம் தன் இனத்தோடு வசித்து வந்தது. ஒருநாள் இரவில் மழை கடுமையாகப் பெய்தது. அம் மழையில் நனைந்த காக்கை ஒன்று அன்னத்திடம் வந்து இரவு தங்க இடம் கேட்டது.  அன்னமும் தங்க இடம் கொடுத்தது. காக்கை தங்கிய இடத்தில் எச்சம் இட்டுவிட்டது. அந்த எச்சத்தில் இருந்து ஒர் ஆலம் வித்து முளைத்துப் பெரிய மரமாகி விழுதுகள் விட்டுத் தொங்கின. அவ் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு மலை மீது பலர் ஏறி வந்து, அந்த அன்னத்தையும், அதனோடு சேர்ந்த பிற அன்னப் பறவைகளையும் பிடித்துச் சென்றனர். தாழ்ந்த காக்கைக்கு இடம் கொடுத்ததனால் அன்னத்திற்குக் கேடு வந்தது.

 

     நன்மை தீமைகளைத் தெளிந்து அறியாத தீயகுணம் படைத்தோர்க்கு இடம் தந்தால் துயரமே வரும் என்பதைக் காட்ட இப்படி ஒரு கதை புனையப்பட்டது. தமக்கு நன்மை விளைந்தால் நல்லது என்பர். தமக்குத் தீமை வந்தால் அடுத்தவர்க்குத் துன்பம் செய்யவும் தயங்காதவர் தீய குணம் படைத்தவர். மேற்குறித்த பாடலின் உண்மை அவரவர் அனுபவத்தில் விளங்கிக் கொள்ள வேண்டியது.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...