ஆத்திசூடி --- 11. ஓதுவது ஒழியேல்

 

 

11. ஓதுவது ஒழியேல்

 

பதவுரை ---

 

     ஓதுவது --- அறிவு (வேத) நூல்களை ஓதுவதை, ஒழியேல் --- எப்போதும் விட்டுவிடாதே.

 

     மேலே, நம்மை விட அறிவிலும் ஒழுக்க நிலையிலும் உயர்ந்தவர்களான துறவு நிலையில் உள்ளோர்க்கும், சான்றோர்க்கும், ஆசாரியருக்கும் தருவது "ஐயம்" ஆகும்; அவர்கள் கேட்டாலும் கேட்கலாம். கேட்காமலும் இருக்கலாம்; எனவே, ஐயம் வேறு, பிச்சை வேறு என்பதை அறிந்து, பசித்து வந்தோர் யாவர் ஆயினும், அவர்க்கு இட்டு உண்ணுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்த "ஐயம் இட்டு உண்" என்று நமது பெரியபாட்டி அறிவுறுத்தினார்.

 

     அடுத்து, யாவராயினும், இன்னார் இனியார் என்று பார்க்காமல், எல்லோர்க்கும் உபகாரம் செய்து வாழ்தல் வேண்டும் என்பதை அறிவுறுத்த, "ஒப்புரவு ஒழுகு" என்றும் அறிவுறுத்தினார்.

 

     உயிர்கள் புரியும் வினைகள், நல்வினை தீவினை என்னும் இரு கூறுகளை உடையது. நல்வினை செய்தவர்கள், புண்ணியத்தை அடைந்து, சுவர்க்க முதலான பதங்களை அடைந்து இன்புற்று இருப்பதும், தீவினை செய்தவர்கள் நரகத் துன்பத்தை அடைவதும், இவற்றை உயிர்களுக்கு ஊட்டுகின்ற கடவுளும், அக் கடவுளின் தன்மையையும் உள்ளவாறு உணர்ந்து தெளிந்தால், ஐயம் இட்டு உண்ணுதல், ஒப்புரவு ஒழுகல் ஆகியவற்றின் பயனை உணர்ந்து தெளிந்து, அவற்றை எந்நாளும் செய்து இன்புற்று வாழ்வார் என்பதால், அந்த உணர்ச்சி உண்டாகவேண்டும் என்பதற்காக, அந்த நல்லறிவைப் புகட்டும் நூல்களை எந்நாளும் ஓதி வருவதால், நல்லுணர்வும் நல்லொழுக்கமும் தலைப்படும் என்பதை உணர்த்த, "ஓதுவது ஒழியேல்" என்று அறிவுறுத்தினார்.

 

     "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்" என்று உலகநீதி வலியுறுத்துகின்றது. ஏன் நாளும் ஓதிவருதல் வேண்டும் என்றால், "ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்" என்று விடை பகருகின்றது "கொன்றைவேந்தன்". ஓதுவதன் பயன் ஒழுக்கம் உடைமை என்றும், ஒழுக்கம் இல்லாதார் ஓதியும் பயனில்லை என்றும் உணர்தல் வேண்டும். ஒழுக்கம் என்பது கசடு அறுதல் ஆகும்.

 

     கசடு என்னும் சொல்லுக்கு, குற்றம், அழுக்கு, மாசு, அடிமண்டி என்று பொருள் உண்டு. உயிர்க்கு உள்ள குற்றங்கள் ஆகிய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் ஆகிய நான்கும் உயிர்க்கு நன்மையைத் தராத கசடுகள் ஆகும். எனவேதான், திருவள்ளுவ நாயனார், "கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று அருளினார். கற்கும்போது கசடு அற்றது போல் தோன்றும். அற்றாக நீங்குவது எப்போது என்றால், கற்றதன் வழி நிற்கும் போதுதான்.

 

     ஓதுவது என்பது ஒழுக்க நெறியில் நிற்பதற்கே. ஓதியும் ஒழுக்கம் இல்லையானால், எவ்வளவு உயர்ந்த பிறப்பாக இருந்தாலும் அதன் பெருமை குன்றிப் போகும் என்பதை உணர்த்த, "மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

     மனிதப் பிறப்புக்கு இன்பத்தைத் தருவதும், பிறப்பின் பயனை அடைவதும், கற்பதற்கு உரிய நூல்களைப் படிப்பதும், படித்தவற்றைப் பெரியோர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதலும், தெளிந்த வழியிலை பொருந்த நிற்பதும் கூடுமானால், மனிதனாகப் பிறப்பது ஒருவனுக்கு இன்பத்தைத் தருவதாகும். அதுவே, மனிதப் பிறப்பு எடுத்ததனால் உண்டான சிறந்த பயனும் ஆகும் என்கின்றது "அறநெறிச்சாரம்" என்னும் நூலில் வரும் பாடல்.

 

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பில் பிறிது இல்லை --- அப்பிறப்பில்

கற்றலும், கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்.

 

     நல்லொழுக்கம் என்பது கல்வியின் பயன். அறம் செய்தலோடு இன்பத்தை நுகர்தல் என்பது செல்வத்தை முறையாக ஆளுதலின் பயன் என்பதை,

 

"ஆசாரம் என்பது கல்வி, அறம் சேர்ந்த

போகம் உடைமை பொருளாட்சி"

 

என்று "நான்மணிக் கடிகை" என்னும் நூல் கூறுவதால், கல்வியின் பயனாக நல்லொழுக்கம் சிறக்கும் என்பதை அறியலாம்.

 

     "கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்" என்கின்றது "வெற்றிவேற்கை".

 

     "ஒதுதல் என்பது பொருள் உணர்ந்து, உள்ளம் உருக ஓதுதல் ஆகும். நூல்பயனை உணர உணர உள்ளம் உருகும் என்பது ஒருதலை. உள்ளம் உருகி ஓத, நன்னெறியில் நிற்பது வாய்க்கும். "காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளியது காண்க.

 

படித்தல் --- எழுத்தை மேலெழுந்தபடி படித்தல்.

கற்றல் --- கருத்து ஊன்றி, திருத்தம் உறக் கவனித்தல்.

அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.

உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.

உய்தல் --- தெளிந்தபடி, ஒழுக்கமாய் வாழ்ந்து உயர்தல்.

 

     நூல்களைப் படித்து, அவற்றின் உட்பொருளைத் தெளிந்து கொள்ளாமல், படித்ததன் காரணமாகவே தனக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் பித்தர்கள், பிதற்றுபவர்கள். அது கழுதையானது குங்குமத்தைச் சுமந்த்து போன்றது என்கின்றது "தண்டலையார் சதகம்" என்னும் நூல்.

 

பேருரை கண்டு அறியாது தலைச்சுமை

     ஏடுகள் சுமந்து பிதற்று வோனும்,

போரில் நடந்து அறியாது பதினெட்டு

     ஆயுதம் சுமந்த புல்லி யோனும்,

ஆரணி தண்டலை நாதர் அகம் மகிழாப்

     பொருள் சுமந்த அறிவிலோனும்,

காரியம்ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த

     கழுதைக்குஒப் பாவர் தாமே.

 

இதன் பொருள் ---

 

     ஆர் அணி தண்டலைநாதர் அகம் மகிழாப் பொருள் சுமந்த அறிவு இலோனும் --- ஆத்திமாலை தரித்த தண்டலைப் பெருமானார் மனம் விரும்பாத பொருள்களைச் சுமந்த மூடனும், தலைச் சுமை ஏடுகள் பேர் உரை கண்டறியாது சுமந்து பிதற்றுவோனும் --- தலைக்குச் சுமையாக நூல்களை அவற்றின் சிறந்த பொருளை அறியாமல் சுமந்து குளறுபடி செய்பவனும், போரில் நடந்து அறியாது பதினெட்டு ஆயுதம் சுமந்த புல்லியோனும் --- போருக்குச் சென்ற பழக்கமின்றி எல்லாப் படைக்கலங்களையும் சுமந்த இழிஞனும், காரியம் ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த கழுதைக்கு ஒப்பாவர் - (எதனைச் சுமக்கிறோம் என்ற) தன் அலுவல் ஒன்றையும் உணராமல் குங்குமத்தைச் சுமந்த கழுதைக்குச் சமம் ஆவர்.

 

      தண்டலைநாதர் மகிழாப் பொருள்கள் சைவச் சின்னம் அல்லாதவை. குங்குமஞ் சுமந்த கழுதை' என்பது பழமொழி.

 

     "திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்கு, குவளைக் குடலை எடுக்காமல், கொழுத்த உடலை எடுத்தேனே" என்பார் வள்ளல்பெருமான். உடல் கொழுத்து என்ன பயன்? பயனுள்ள காரியங்களைச் செய்யவேண்டாமா?

 

கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால்,

     கைப்பர், பாழ் புக; மற்று அது போலப்

பழுது நான் உழன்று உள்தடுமாறிப்

     படு சுழித்தலைப் பட்டனன்; எந்தாய்!

அழுது நீ இருந்து என் செய்தி? மனனே!

     அங்கணா! அரனே!எனமாட்டா

இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய்

     இடை மருது உறை எந்தை பிரானே!

 

என்பது சுந்தரர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     என் அப்பனே! திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எமது குலதேவனே! கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து உடல் வருந்தினால், அதனால் சிறப்பு ஒன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர். அது போல, அடியேன் உனது தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனம் தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் கிடந்து மன வருத்தத்தில் சுழன்று கொண்டு இருக்கின்றேன். `மனமே! நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்` என்று எனது நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், "அங்கணனே! அரனே!"  என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறி யொன்றை வழங்கியருளாய்.

 

     குங்குமத்தைச் சுமக்கின்ற கழுதை, குங்குமத்தின் அருமையை அறியாது. அதுபோல, புத்தகங்களை நிறையத் தேடி படிக்கின்றோம்.ஆனால், அவற்றில் உள்ள உண்மைப் பொருள்களை அறிந்து உய்யாமல் கிடக்கின்றோம். "புத்தகங்களைப் படித்து, உண்மைப் பொருளை அறிந்து கொண்டது போல நடித்து, தான் அறிந்தவற்றையே பிதற்றுகின்றதை விட்டுவிட்டு, அறிவோடு உன்னைத் துதிக்க அருள் புரிவாய்" என்று அருணகிரிநாதப் பெருமான், முருகப் பெருமானை வேண்டுகின்றார்.

 

பொன் பதத்தினைத் துதித்து, நல் பதத்தில் உற்ற பத்தர்,

     பொற்பு உரைத்து, நெக்கு உருக்க ...... அறியாதே,

புத்தகப் பிதற்றை விட்டு, வித்தகத்து உனைத் துதிக்க,

     புத்தியில் கலக்கம் அற்று ...... நினையாதே,

 

முற்படத் தலத்து உதித்து, பின் படைத்த அகிர்த்யம் முற்றி,

     முன் கடைத் தவித்து நித்தம் ...... உழல்வேனை,

முட்ட இக் கடைப் பிறப்பின் உள் கிடப்பதைத் தவிர்த்து,

     முத்தி சற்று, எனக்கு அளிப்பது ...... ஒரு நாளே?

 

     சிலர் புத்தகங்களைப் படித்து, அதன் பயனைப் பெறாமல் அதைப் பிதற்றிக் கொண்டே திரிவார்கள்.  "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் என்பார் மணிவாசகர். கல்வியைக் கடல் என்றார் பெருமான். கடல்நீரை எவ்வளவு குடித்தாலும், தாகம் தணியாது. அதுபோலவே, புத்தகங்களைப் படிப்பதாலேயே ஒருவனுக்கு உண்மை அறிவு விளங்காது. உண்பதற்கு வாழை இலை உதவுகின்றது. உண்ட பின் வாழை இலையை எடுத்து எறிந்து விடுகிறோம். அதுபோல் இறைவனை அடைவதற்குக் கல்வி துணை செய்கின்றது. அடைந்த பின் கல்வியை விட்டுவிட வேண்டும். கற்றவற்றைச் சிந்தித்துத் தொளிதல் வேண்டும். "கற்பனவும் இனி அமையும்" என்னும் மணிவாசகக் கருத்தை எண்ணுக.

 

            சிலர் புத்தகங்களை நிறையத் தேடிச் சேகரிப்பர். அவற்றை முழுதும் படிக்காமலும், படித்தவற்றின் பொருளை முழுதும் உணராமலும், அவற்றை வீடெல்லாம் நிறைத்து வைத்து அழகு பார்ப்பர். ஆனால், புத்தகங்களின் பயனை அறிந்து படித்துப் பயன் பெறுபவர்கள் சிலர். அந்தச் சிலருள்ளும், தாம் படித்து அறிந்த கருத்துக்களை மற்றவர் மனம் கொள்ளுமாறு எடுத்து விளக்கிப் புரிய வைப்பவர்கள் மிகச் சிலரே என்கின்றது "நாலடியார்".

 

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும், - மற்றுஅவற்றைப்

போற்றும் புலவரும் வேறே! பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு.                         

 

     எனவே, கற்கவேண்டிய அறிவு நூல்களைத் தேர்ந்து, அவற்றின் பொருளை உணர்ந்து, நாளும் ஓதித் தெளிந்து, உய்தி பெறுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்த, "ஓதுவது ஒழியேல்" என்றார் ஔவைப் பிராட்டியார். "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்பது உலகநீதி.

 

     பாடல்களின் பொருளை உணர்ந்து உள்ளம் உருகப் பாடுவதால், அருட்பாடல்களை இசைப்பவர்களை, "ஓதுவார்" என்று போற்றும் பாங்கு உண்டானது. அப்படிப்பட்டவர்களையே மூர்த்தியாக வணங்கவும் வேண்டும் என்பதால், அவர்களை, "ஓதுவாமூர்த்திகள்" என்றும் வழங்குவதாயிற்று.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...