ஆத்திசூடி --- 10. ஒப்புரவு ஒழுகு

 

 

10. ஒப்புரவு ஒழுகு.

 

இதன் பதவுரை ---

 

     ஒப்புரவு --- உலக நடையை அறிந்து, ஒழுகு --- (அந்த வழியிலே) நட.

 

(பொழிப்புரை) உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.

 

     ஒப்பு + உரவு = உலக நடை. பெரியோரால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஞானம். லௌகிகம் --- உலக நடை; உலக ஒழுக்கம். நடை என்பது ஒழுக்கம். உலகநடை என்றால் உலகில் உள்ள மேலோர் அறிவுறுத்திய ஒழுக்கம். வேதநடை என்பது, ஞானநூல்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்கம்.

 

     உலக நடை என்னும் உலக ஒழுக்கமானது, வேத சாத்திரங்களில் சொல்லப்பட்ட ஒழுக்கங்கள் போல் அல்லாமல், தாமே அறிந்து செய்யப்படுவதாகும். வேத நடை என்பது அறநூல்களில் சொல்லப்பட்ட ஒழுக்கம்.

 

     ஒப்புரவு என்பது, இன்னார் இனியார் என்று பாராமல், எல்லோர்க்கும் உதவி புரிந்து வாழ்வது.

 

தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம், தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு.

 

என்பது "ஒப்புரவு அறிதல்" என்னும் அதிகாரத்தில், திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள். வேளாண்மை என்னும் சொல்லுக்கு, எல்லோர்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு என்று "வேளாண்மை என்னும் செருக்கு" என்று திருவள்ளுவ நாயனார் அருளிய மற்றொரு திருக்குறள் தொடருக்கு, பரிமேலழகர் விளக்கம் அளித்துள்ளதை அறியத் தெளிவாகும்.

 

     தமது உயிருக்கு வந்த இன்பதுன்பங்கள் எல்லா உயிர்க்கும் ஒக்கும் என்பதை அறிந்து உபகாரம் செய்து வாழ்வதே உயிர் வாழ்க்கை, அப்படி வாழாதவர் எல்லாம் உயிரோடு இருந்தாலும், செத்த பிணம் போலப் பயனற்றதாகவே கொள்ளப்படும் என்பதைக் காட்ட, "ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மற்றையார் செத்தாருள் வைக்கப்படும்" என்று நாயனார் அருளிய திருக்குறளின் வழி அறிந்து கொள்ளலாம்.

 

     பிறர்க்கு வந்த துன்பம் தமக்கு வந்ததாகவே எண்ணி வாழுகின்ற பண்பினை உடையவர்கள் உள்ளதால் இந்த உலகம் உள்ளது; இல்லையேல் அது மண்ணோடு மண்ணாகப் போய் இருக்கும் என்பதை, "பண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம், அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்று நாயனார் அருளிய திருக்குறள் வழி அறியலாம்.

 

     இந்த உலகமானது எத்தனை கோடி ஆண்டுகளாக இன்னும் அழியாமல், இயங்கிக் கொண்டே இருக்கின்றதே. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால், தேவர்களுக்கும், தேவர்கள் தலைவன் ஆகிய இந்தினுக்குமே கிடைக்கக் கூடிய அமுதமே தமக்குக் கிடைத்தாலும், அதைத் தாமே உண்டு, சாகாத நிலையாகிய பயனை அடைந்து கொள்ளலாம் என்று எண்ணும் மனம் இல்லாதவர்கள்; தன்னலம் கருதிப் பிறரிடம் கோபம் கொள்ளாதவர்கள்; பிறர் அச்சம் கொள்ளுகின்றவற்றுக்குத் தாமும் அச்சம் கொண்டு, அதைத் தீர்க்கும் பொருட்டுச் சோம்பல் இல்லாது இருப்பவர்கள்; புகழ் பெறுவது என்றால் தமது உயிரையும் கொடுப்பவர்கள்; பழிப்புக்கு உரிய செயல் என்றால், அதற்கு விலையாக இந்த உலகமே கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளாத உயர்ந்த பண்பினை உடையவர்கள்; என்பன போன்ற உயர்ந்த குணநலன்களைக் கொண்டு, தனக்கு என வாழும் தன்னலம் இல்லாது, பிறர் வாழத் தான் வாழவேண்டும் என்று பொதுநலத்தைப் பேணுபவர்கள் இன்னமும் இந்த உலகில் இருப்பதால்தான், இந்த உலகம் இன்னமும் அழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பது தெளிவாகும். இதனை,

 

உண்டால் அம்ம! இவ் உலகம், இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர், யர்வுஇலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகி,

தமக்கு என முயலா நோன்தாள்

பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.

 

என்னும் புறநனூற்றுப் பாடல் கருத்தும் இதனை வலியுறுத்தும். 

 

    ஒப்புரவுக்குச் சிறந்த இலக்கணமா, முல்லைக்குத் தேர் தந்த பாரிவள்ளல், மயிலுக்குப் போர்வை தந்த பேகன், தனது முதுகெலும்பை இந்திரனுக்குத் தந்த ததீசி போன்றோரின் வாழ்வைக் கொள்ளலாம்.

 

    "தாவிப் பரடக் கொழு கொம்பு இல்லாத் தனிக்கொடி போலப் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே" என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதப் பெருமானும், "கொம்பர் இல்லாக் கொடிபோல் அலமந்தனன், கோமளமே! வெம்புகின்றேனை விடுதி கண்டாய்" என்று திருவாசகத்தில் மணிவாசகப் பெருமானும் அருளிச் செய்துள்ளதைச் சிந்திக்கவேண்டும்.

 

    கொடியானது எப்போதும் ஒரு கொழுகொம்பைப் பற்றியே படரும். பற்றிப் படர்ந்து வளர்வதற்கு ஒரு கொடி இல்லாத நிலையில், அந்த ஒர் அறிவு உயிரானது, காற்றினால் மிகுந்த துன்பத்திற்க ஆளாகும். அது எப்படிப்பட்ட துன்பமாக இருக்கும் என்பதை உணர்ந்த பாரிவள்ளல், அந்தக் கொடியைக் காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து இருந்தால், ஓர் அழகான பந்தலை இடுமாறு தனது பணியாட்களுக்குக் கட்டளை இட்டு இருந்தாலே போதுமானது. எப்படி உதவலாம், எவ்வாறு உதவலாம் என்று சிந்திப்பு கூட, கொடியினுடைய துன்பத்தை வளர்ப்பதாக அமைந்துவிடும் என்பதால், தான் ஊர்ந்து வந்த தேரை நிறுத்திச் சென்றான். ஒரு கொடிக்குத் தேரைத் தந்தது அறிந்தே செய்த அறியாமைச் செயல் ஆகும் என்பது தோன்றும். ஆனால், இந்த அறியாமையே சான்றோர்க்கு அழகு தருவதாகும் என்கின்றது, "பழமொழி நானூறு" என்னும் நூல்.

 

முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும், - சொல்லில்

நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!

அறிமடமும் சான்றோர்க்கு அணி.

 

இதன் பொருள் ---

 

    நெருங்கிய மடல்களையும், பூக்களையும் உடைய தாழைகள் நிறைந்த கடற்கரையின் தலைவனே! முல்லைக்கொடி படர்வதற்காகத் தான் ஏறி வந்த தேரையே கொடுத்தான் பாரி; குளிர் காலத்திலே மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தான் பேகன் என்ற வரலாற்றைக் கேட்டறிந்துள்ளோம். இதைப் பற்றிச் சொன்னால் அறிவிலே மடமையும் சான்றோர்க்கு அணி ஆகும்.

 

    துன்பப்படுகின்ற உயிர்க்கு உதவ வேண்டும் என்னும் நற்பண்பு இருந்தால், அறிவு வேலை செய்யாது. அன்புதான் வேலை செய்யும். அன்பு தன்னலம் கருதாது. பயனையும் கருதாது.

 

    எனவே, பிறர்க்கு வரும் துன்பங்களைத் தனக்கு வந்ததாகவே உணர்ந்து, அதைப் போக்குகின்ற வகையில் எப்போதும் வாழவேண்டும் என்றார் பாட்டியார், "ஒப்புரவு ஒழுகு" என்னும் அமுத வாக்கால். "ஒழுகு" என்றால், ஒழுக்கமாகவே கொள்வாயாக என்று பொருள்.

 

    ஓர் உயிர்க்கும் அபகாரம் செய்து, "அபகார நிந்தை பட்டு உழலாமல்", எல்லா உயிர்க்கும் உபகாரியாக வாழ்தலை ஒழுக்கமாகக் கொள்ளுதல் வேண்டும்.


No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...