மாற்றவே முடியாதது அற்பகுணம்

 

மாற்றவே முடியாதது அற்பகுணம்

-----

 

     எட்டிக் காய்க்கு இயல்பாக உள்ள கசப்புத் தன்மையை மாற்ற முடியாது. கழுதையைக் குதிரை ஆக்க முடியாது. பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நஞ்சையே தரும். நாயினது வாலை நேராக்க முடியாது. அற்ப குணம் பொருந்தியவர்களையும், அறிவில்லாதவர்களையும் மாற்றவே முடியாது. 

 

மட்டி --- மூடன், ஒழுங்கின்மை. 

 

மட்டிகளை மாற்றவே முடியாது என்கின்றது "குமரேச சதகம்"

 

கட்டிஎரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்

     காஞ்சிரம் கைப்புவிடுமோ?

கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும்

     கதிபெறும் குதிரை ஆமோ?

 

குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும்

     கொடுவிடம் அலாது தருமோ?

குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்

     கோணாமலே நிற்குமோ?

 

ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம்இலா

     யோனிகண் ஆகிவிடுமோ?

உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்

     உள்ளியின் குணம் மாறுமோ?

 

மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில்

     மார்க்க மரியாதை வருமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

 

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     கட்டி எரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ --- வெல்லக் கட்டியை எருவாக இட்டு, நல்ல தேனை நீராக ஊற்றி வளர்த்தாலும் எட்டிக் காயின் கசப்பு நீங்குமா? நீங்காது.

 

     கழுதையைக் கட்டி வைத்து ஓமம் வளர்க்கினும் கதிபெறும் குதிரை ஆமோ --- கழுதையைக் கட்டிப் போட்டு, வேள்வியைச் செய்தாலும், பல கதிகளிலும் செல்லும் குதிரை ஆகுமோ? ஆகாது.

 

     குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடுவிடம் அலாது தருமோ --- பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் கொடிய விடத்தை அல்லாமல் வேறு நல்லது எதையாவது தருமா? தராது.

 

     குக்கல் நெடுவாலுக்கு மட்டையைக் கட்டினும் கோணாமலே நிமிருமோ --- நாயின் நீண்ட வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாலும், அதனுடைய கோணல் தன்மை மாறுமோ? மாறாது.

 

     ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயமிலா யோனி கண் ஆகி விடுமோ --- நிறைய மையினை நன்றாக இட்டாலும் பெண்குறியானது கண் ஆகுமா? ஆகாது.

 

     உலவு கன கற்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ --- இனிய மணம் கொண்ட கர்ப்பூரம் முதலான நறுமணப் பொருள்களோடு கூட்டினாலும், பூண்டின் குணம் மாறுமா? மாறாது.

 

அது போல,

 

     மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ --- அறிவில்லாத பேதைகளுக்குப் பலமுறையும் நல்ல அறிவு புகட்டினாலும், அதனால் அவருக்கு ஒழுங்கான நடத்தை வருமோ? வராது.

 

     பின்வரும் பாடல்களின் கருத்தை, இப் பாடலோடு ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை

எக்காலும் குன்றல் இலர்ஆவர்,  - அக்காரம்

யாவரே தின்னினும் கையாதாம், கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு.          --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     தகுதி உடைய பெரியவர்கள் நன்மை செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். தகுதியே இல்லாத தீயவர்கள் அவர்களின் இயல்புக்கு ஏற்ப, தீமையும் செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். வெல்லக் கட்டியை யார் தின்றாலும் கசக்காது. இனிக்கவே செய்யும். ஆனால், வேப்பங்காயை யார் தின்றாலும் இனிக்காது. கசக்கவே செய்யும்.     

 

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்

அடங்காதார் என்றும் அடங்கார்; - தடம் கண்ணாய்

உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்து அடினும்

கைப்புஅறா பேய்ச்சுரையின் காய்.        --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

         

     அகன்ற கண்களை உடைய பெண்ணே! என்னதான் உப்பும், நெய்யும், தயிரும், பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் பேய்ச் சுரைக்காயின் கசப்புத் தன்மை நீங்காது. அது போலவே, கீழ்மக்கள் எவ்வளவுதான் ஞான நூல்களைக் கற்றாலும், பிறருக்கு அடங்கி நடக்க மாட்டார்கள்.

 

     குமரேச சதகப் பாடலில் அறிவிலிகள் என்னதான் நல்ல புத்தி சென்னாலும் நன்னெறியில் நடக்கமாட்டார்கள் எனப்பட்டது. நாலடியாரில் என்னதான் அறிவு நூல்களைக் கற்றாலும் மனம் அடங்க மாட்டார் எனப்பட்டது.

 

     மேலான நறுமணப் பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும், உள்ளிப் பூண்டினுடைய தீயநாற்றம் நீங்காதது போல, பொறாமைக் குணம் கொண்ட நெஞ்சத்தை உடைய அறிவிலிகளை நல்லவர்களாக ஆக்க முடியாது என்கிறது "நீதிவெண்பா" என்னும் நூல்.

 

அவ்விய நெஞ்சத்து அறிவுஇலாத் துர்ச்சனரை

செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? -- திவ்வியநல்

கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது

கந்தம் மெடுமோ கரை.

 

     பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல்களையும் அவற்றின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் தகும்.

 

நாய்வாலை அளவு எடுத்து பெருக்கித் தீட்டின்

     நல் தமிழை எழுத எழுத்தாணி ஆமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

     பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடுஅது ஆமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

     சாற்றிடினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;

ஈவாரை ஈயவொட்டான், இவனும் ஈயான்;

     எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.

 

இதன் பொருள் ---

 

     நாயினது வாலை எழுத்தாணிக்கு உரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும், நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? ஆகாது. பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப்படுத்தி, அங்கு பெரிய விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? ஆகாது. தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது.

 

 

தூம்பினில் புதைத்த கல்லும்

     துகள் இன்றிச் சுடர் கொடாது;

பாம்புக்குப் பால் வார்த்து என்றும்

     பழகினும் நன்மை தாரா;

வேம்புக்குத் தேன் வார்த்தாலும்

     வேப்பிலை கசப்பு மாறா;

தாம்பல நூல் கற்றாலும்

     துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

 

இதன் பொருள் ---

 

     வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல்லானது காலப் போக்கில் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலையின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.

 

கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எருப்போட்டு,

     கமழ்நீர் பாய்ச்சி,

பொற்பு ஊர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப்

     பொருந்தக் காட்டும்;

சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும்

     எனவே சொல்லினாலும்,

நற்போதம் வாராது, அங்கு அவர் குணமே

     மேலாக நடக்கும்தானே.

 

இதன் பொருள் ---

 

     கற்பூரத்தால் வரப்புகளிட்டு, மணம் கமழும் கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை மிகுந்த நீரையே பாய்ச்சி, அழகு உண்டாக உள்ளிப் பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில்லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவருக்கு நல்லறிவு வராது. அவருக்கு இயல்பாக உள்ள தீய குணமே மேலிட்டு நிற்கும்.

 

            சரிதான். இந்த அற்பகுணமானது தீரவேண்டாமா? எப்போது தீரும்? என்று ஒரு ஐயம் உண்டாவது இயல்புதான். விடையை இப்போது காண்போம்.

 

அற்பர்க்கு வாழ்வுசற்று அதிகமானால், விழிக்கு

     யாவர் உருவும் தோற்றிடாது;

அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும்

     அவர் செவிக்கு ஏறிடாது;

 

முற்பட்சம் ஆனபேர் வருகினும் வாரும் என

     மொழியவும் வாய் வராது;

மோதியே வாதப் பிடிப்பு வந்தது போல

     முன்காலை அகல வைப்பார்;

 

விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும்

     வெடு வெடுத்து ஏசி நிற்பார்;

விருதா மகத்துவப் பேய் அது சவுக்கடி

     விழும்போது தீரும் என்பார்;

 

மல்புயம் தனில் நீப மாலையணி லோலனே!

     மார்பனே! வடிவேலவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

     இதன் பொருள் ---

 

     மல் புயம் தனில் நீபமாலை அணி லோலனே! மார்பனே! வடிவேலவா! --- வலிமை பொருந்திய திருத்தோள்களிலே கடப்பமாலையை அணிந்த இனியவரே! அழகிய திருமார்பினரே! கூர்மை பொருந்திய வேலாயுதத்தை திருக்கையில் ஏந்தியவரே!

 

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகம் ஆனால் விழிக்கு யாவர் உருவும் தோன்றிடாது --- இழிந்த குணம் உடைய கீழ்மக்களுக்கு செல்வாக்கு சிறிது அதிகமானால், அவர்கள் கண்களுக்கு எதிரில் வருபவர் யார் என்று தெரியாது.

 

     அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது --- அவர்களை நெருங்கி இருந்து நல்ல சொற்களைச் சொன்னாலும் செவியில் ஏறாது.

 

     முன் பட்சமான பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது --- முன்னர் தம்மிடத்தில் அன்பு கொண்டு இருந்தவர்கள் வந்தாலும், "வாருங்கள்" என்று கூறி வரவேற்கவும் வாயில் சொல் வராது.

 

      வாதப்பிடிப்பு வந்தது போல முன்காலை மோதியே அகல வைப்பார் --- அடக்கமாக நடப்பதை விடுத்து, வாதநோய் வந்தவர்கள் போல முன்காலை விரைந்து நீட்டி வைத்து நடப்பார்கள்.

 

     விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார் --- அறிவில் சிறந்த பெரியோர்கள் ஏதாவது சொன்னாலும், முகம் கடுகடுத்து அவர்களை ஏசுவார்கள்.

 

     விருதா மகத்துவப் பேயது சவுக்கடி விழும்போது தீரும் என்பார் --- இந்த வீண் பெருமை என்னும் இடும்பானது பேய்த் தன்மையைக் கொண்டது. தக்க தண்டனைக்கு உட்பட்டால் ஒழிய வேறு எதனாலும் அது தீராது.

 

       விளக்கம் ---

 

     "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று புறநானூறும், "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்று திருவள்ளுவ நாயனாரும் காட்டிய அருள்மொழிகளின்படி, மூடர்கள் அவர்களது தீய செயல்களுக்கு ஏற்ற தண்டனையை விதிப்படி அனுபவிக்கும் காலம் வரும். அப்போதுதான் அவர்கள் திருந்துவார்கள். அதை சவுக்கடி என்கின்றது மேற்குறித்த பாடல்.

 

     "விவேக சிந்தாமணி" இதை மேலும் விளக்குகின்ற ஒரு பாடலைக் காண்போம்...

 

பெருத்திடு செல்வமாம் பிணிவந்து உற்றிடில்,

உருத் தெரியாமலே ஒளி மழுங்கிடும்;

மருத்து உளதோ எனில், வாகடத்து இலை;

தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே.

 

இதன் பொருள் ---

 

     அற்பருக்கு அதிகமான செல்வம் என்னும் நோய் வந்து சேர்ந்ததானால், அந்த நோயின் தன்மையாலே, பலநாள் பழகியவர் அவர்கள் தம் எதிரில் வந்தாலும், வருபவரின் உருவமானது தெரியாதவாறு கண்கள் ஒளி மழுங்கிப் போய்விடும். (செல்வத்தின் செருக்கால், எதிர் வருவோரைக் கண்டும் காணாதது போல் செல்வர், அகம்பாவம் பிடித்த அச் செல்வர்.) இவ்வாறு கண்ணொளி மழுங்கிய நோய்க்கு மருந்து ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தோமானால், மருத்துவ நூல்களில் இல்லை. தரித்திரம் என்றுசொல்லக் கூடிய ஒப்பற்ற மருந்து ஒன்றினாலே தான் தீரும்.

 

     அறிவுரைகளைச் சொன்னால் அது சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. "நண்டுக்குப் பட்டால்தான் தெரியும்; குரங்குக்குச் சுட்டால்தான் தெரியும்" என்பது போ, பட்டால்தான் கீழ்மக்களுக்கு அறிவு வரும்.

 

     இதனை அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பாடல் ஒன்றால் அறியலாம்...

 

பற்றுஇலா வாழ்க்கை வாழ்ந்து

     பாழுக்கே நீர் இறைத்தேன்;

உற்று அலால் கயவர் தேறார்

     என்னும் கட்டுரையோடு ஒத்தேன்;

எற்று உளேன்? என்செய்கேன் நான்?

     இடும்பையால் ஞானம் ஏதும்

கற்றிலேன், களைகண் காணேன்,

     கடவூர் வீரட்டனீரே.

 

இதன் பொருள் ---

    

     திருக்கடவூர் வீரட்டத்தில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! உனது திருவடிப் பற்று இல்லாத வாழ்க்கையை நான் வாழ்ந்து, பயனற்ற பாழ் நிலத்துக்கு நீர் இறைப்பாரைப் போல, எனது அறிவு ஆற்றல்களை வீணாக்கிவிட்டேன். அநுபவித்தால்தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாக உள்ளேன். நான் எதற்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நான் என்ன செய்ய வல்லேன்? ஐம்பொறிகள் வசப்பட்டு வருந்தும் துயரத்தாலே, ஞான நூல்களை ஞானதேசிகர்பால் உபதேச முறையில் கற்கவில்லை. எனவே, அடியேனுக்குப் பற்றுக்கோடாக இருப்பார் ஒருவரையும் நான் காணேன்.

 

     நெல் முதலிய பயன்தரும் பயிர்களுக்கு நீரை இரைத்துப் பயனைப் பெறாமல், பாழான நிலத்துக்குப் பாய்ச்சிப் பயன் ஒன்றும் அறியாதவன் ஆனேன் என்றார் சுவாமிகள். திருவருளால் பெற்ற இந்த உடம்பைக் கொண்டு, ஞான நூல்களை நல்லாசிரியரிடம் கேட்டு, நல்லுணர்வு பெற்று, இறைவன் திருவடிப் பயனை அடையாது, வாழ்நாளே வீணாக்கி விட்டதாக வருந்துகின்றார் அப்பர் பெருமான். "பாழ் செய் விளாவி, பயனிலியாய்க் கிடப்பேற்கு" என்று மணிவாசகப் பெருமான் அருளியதும் காண்க.

 

     அற்பர்களுக்குச் செல்வம் வந்தால், என்ன நடக்கும் என்கின்றது பின்வரும் பாடல்...

 

செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்.   --- விவேகசிந்தாமணி.

 

     இந்த பாடல் இரண்டு சொற்களில் மட்டும் மாறுபட்டு, வில்லிபாரதத்திலும் வருகின்றது.

 

     இராமாவதாரத்தில் ஒரு தூதினைக் கொண்டு, இலங்காபுரிக்குச் சென்று இராவணனை வென்றவனான திருமால், கிருஷ்ணாவதாரத்தில், பாண்டவர்களுக்காத் தானே ஒரு தூதனாக வந்தான். வந்தவன், துரியோதனனுக்கு விருந்தாகச் செல்லாமல், விதுரருடைய விருந்தாகச் சென்றான். இது துரியோதனனுக்குச் சினத்தை உண்டாக்கியது. இராச சபையில் விதுரரைப் பழித்தும் இகழ்ந்தும் உரைத்தான் துரியோதனன். அவனது இழிமொழிகளைக் கேட்ட விதுரர், தான் இனிப் போரில் ஈடுபடப் போவது இல்லை என்று தனது வில்லை ஒடித்து எறிந்தார். பின்னர், வில்லை முறித்தது குறித்து, கண்ணன் வினவ, விதுரர் துரியோதனனைப் பற்றிக் கூறியதாக "வில்லிபாரதம்" கூறும் ஒரு பாடல்...

 

செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்;

சொல்வன அறிந்து சொல்லார்;

     சுற்றமும் துணையும் நோக்கார்;

வெல்வதே நினைவது அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்;

வல்வினை விளைவும் ஓரார்,

     மண்ணின் மேல்வாழும் மாந்தர்.

 

இதன் பொருள் ---

 

     பூமியில் வாழ்ந்திருக்கும் மனிதர்களில் சிலர், தமக்குப் பொருள் வந்து சேர்ந்த காலத்து, அது தன்னிடம் வந்து சேருவருதற்குக் காரணமாகத் திருவருள் புரிந்த கடவுளையும் சிறிதும் விரும்பிக் கொண்டாட மாட்டார்கள்; தாம் சொல்லுகின்ற வார்த்தைகளை ஆராய்ந்து உணர்ந்து சொல்லமாட்டார்கள்; உறவினர் என்றும் நண்பர் என்றும் தாட்சிண்ணியம் பார்க்கமாட்டார்கள்; தாம் வெற்றி பெறுவோம் என்பதையே கருதுவது அல்லாமல், கொடிய பகைவர்க்கம் தம்மினும் வலிமையுடையது என்று மதிக்கமாட்டார்கள்; எல்லாவற்றினும்) வலிமையுடைய ஊழ்வினையின் பயனையும்

ஆராயமாட்டார்கள். (இது பேதைமை? என்றபடி.)

 

    அற்பகுணம் உடையவனான துரியோதனன் தனக்குச் செல்வம் இருத்தலால், இங்குக் குறித்த துர்க்குணங்களை எல்லாம் மிகக் கொண்டுள்ளான் என்பற்கு, உலக நியதியைப் பொதுவாக வைத்து இது கூறினார், வில்லிபாதம் இயற்றிய ஆழ்வார்.

 

     அற்ப புத்தி உடையவருக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பார் என்கின்றது "தண்டலையார் சதகம்" என்னும் நூல்....

 

விற்பனர்க்கு வாழ்வு வந்தால் மிகவணங்கிக்

     கண்ணோட்டம் மிகவும் செய்வார்!

சொற்பருக்கு வாழ்வு வந்தால் கண் தெரியாது,

     றுமாந்து துன்பம் செய்வார்!

பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையா

     ரே! சொன்னேன்! பண்பு இல்லாத

அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்

     திரி குடைமேல் ஆகும்தானே!  

 

இதன் பொருள் ---

 

     பலதுறைப் பட்டவர்களுக்கும் வாழ்வை அருளும் திருத்தண்டலை இறைவரே! அறிவாளிகளுக்கு வாழ்வு நேர்ந்தால் மிகவும் வணக்கமாக யாரிடத்திலும் நாகரிகமாக நடந்துகொள்வர்;  அறிவிலார்க்கு வாழ்வு நேர்ந்தால் எதனையும் நோக்காமல் செருக்குடன் யாவருக்கும் இடையூறு செய்வார்கள்; நற்குணம் இல்லாத கீழ்மக்களுக்கு வாழ்வு கிடைத்தால் நள்ளிரவிலேயும் தலைக்குமேல் குடை இருக்கும்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...