பேதைக்கு அறிவு புகட்டல் ஆகாது

 

 

பேதைக்கு அறிவு புகட்டல் ஆகாது

-----

 

     திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். புல்லறிவாண்மை என்பது, அறிவில் சிறுமையையே பெருமையாகக் கருதி நடந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, சிற்றறிவினனாக இருந்துகொண்டே, தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து, உயர்ந்தோர் சொல்லும் உறுதிக் சொல்லை மனத்துள் கொள்ளாமை ஆகும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தன்னை எல்லாம் அறிந்தவனாக மதித்துக் கொண்டு, பிறரால் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை அறிவிக்கப் புகுபவன், பழிக்கு ஆளாகித் தான் அறியாதவனாகவே முடிவான். அறியும் தன்மை இல்லாத அவன், தான் அறிந்த வரையிலே அறிவு உள்ளவனாகத் தோற்றுவான்" என்கின்றார் நாயனார்.

 

     அற்ப அறிவினை உடையோர் தாம் உண்மையாகவே ஒன்றும் அறியாதவர்களாக இருந்தும், தமக்கு உள்ள கர்வத்தினால், எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை எண்ணிக் கொள்ளுகின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவனுக்கு நல்லறிவைப் புகட்ட, ஒருவர் சென்று உண்மையை உபதேசித்தாலும், அது அவனுக்குப் பயனைத் தராததோடு, சொன்னவர்க்கும் இழுக்கு உண்டாகும். அந்த அற்ப அறிவாளன் தான் உணர்ந்ததையே உண்மை என்று தீர்மானித்து, அதன் வழியே ஒழுகுவான். எனவே, புல்லறிவாளனுக்கு நல்லறிவை எவ்வழியாலும் புகட்ட முடியாது என்று அறியப்படும் என்பதை உணர்த்த,

 

காணாதான் காட்டுவான் தான் காணான், காணாதான்

கண்டான் ஆம் தான் கண்ட ஆறு.       

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     இத் திருக்குறளுக்குப் பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

 

கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்

சிலை வரையாகச் செற்றனர் ஏனும் சிராப்பள்ளித்

தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்

நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம்ஆமே.    

                                         --- திருஞானசம்பந்தர்.

 

இதன் பொருள் ---

 

     கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கையினராகிய அவுணர்களின் மும்மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும், திருச்சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவர் அல்லர் என்று நாள்தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?

 

 

பூத்தாலும் காயா மரமும் உள, மூத்தாலும்

நன்கு அறியார் தாமும் நனியுளர், - பாத்தி

விதைத்தாலும் நாறாத வித்து உள, பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு. --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     பூத்தாலும் காய்க்கப் பெறாத பாதிரி முதலாகிய மரங்கள் உள்ளன.  அதுபோலவே, வயது முதிர்ந்தாலும் நல்ல நூல்களை அறியாதவர்கள் தாம் மிகுதியும் உள்ளனர். எரு இட்டு வரம்பு கட்டப்பட்ட பாத்தியில் விதையினை விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உள. (அவை போல) அறிவில்லாதவனுக்கு அறிவுரைகளை உரைப்பினும் உண்மை உணர்வு அவனுக்குத் தோன்றாது.  (தான் கொண்டதே கருத்து என்பான்).

 

ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத

மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க, - மூர்க்கன்தான்

கொண்டதே கொண்டு விடான் ஆகும், ஆகாதே

உண்டது நீலம் பிறிது.                --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     ஆராய்ந்து வைத்த கருத்தும், உண்மையை அறியும் அறிவும் அறியாத மூர்க்கர்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாது ஒழிக. நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல), மூர்க்கனும் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு விடான்.

 

         மூர்க்கர்கள் பிறர் கூறுவனவற்றைக் கேட்டுத் திருந்தார். ஆராய்ந்த கருத்தும், ஆராயும் அறிவும் உடையார் அறிவுடையோர் ஆவர். பிறர் கூறுங்கால் அவர் கருத்தின் உண்மையையும் தம் கருத்தின் உண்மையையும் ஆராய்ந்து செம்மை உடையதனை மேற்கொள்ள வேண்டுதலின், உண்மையை ஆராயும் உணர்வு, அறிவுடையோர்க்கு இன்றியமையாதது. நீலம் உண்ட பொருள் தன்னை அடுத்த பொருளையும் நீலமாக்குதல் போல, மூர்க்கன் தான்கொண்ட தவறுடைய அப்பொருளையே பிறருக்கும் போதிக்க முற்படுவான்.

 

கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை

நாவாய் அடக்கல் அரிதாகும், - நாவாய்

களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி

வளிதோட்கு இடுவாரோ இல்.       --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     கள்ளுண்டு தள்ளாடி வருகின்ற குடியர்போல, மரக்கலங்கள் ஆடி அசைந்து கொண்டு இருக்கும் கடல் நாட்டவனே!, காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி,  தோள்மேலே போட்டுக் கொள்ளக் கூடியவர்கள் யாருமே இல்லை. அதுபோலவே, பொருத்தம் இல்லாதவைகளைக் கூறுகின்ற, நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கு ஒப்பாரை,  அவரது நீவினை அடக்கிப் பேச வைப்பது மிகவும் அருமையாகும்.

 

         கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது. காற்றைச் சேர்த்து வாங்கித் தோளிலிட வல்லார் இல்லையாதல் போல, நற்குண மில்லாதவர்களின் நாவினை அடக்குதலும் இல்லையாயிற்று.

 

பூவாதே காய்க்கும் மரமும் உள, மக்கள் உ(ள்)ளும்

ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே---தூவா

விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே, பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு.           --- நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு. அதுபோல, --- மனிதர்களுள்ளும், ஏவாமலே இருந்து தாமாகவே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு. ஆனால், தூவி விதைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, விளக்கமாக எடுத்து விளங்கச் சொன்னாலும்,  மூடனுக்கு அதனை அறியும் அறிவு உண்டாகாது.

 

         குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையோர். அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர்.

 

பூத்தாலும் காயா மரமும்உள, நன்றுஅறியார்

மூத்தாலும் மூவார்,  நூல்தேற்றாதார் - பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துஉள, பேதைக்கு

உரைத்தாலும் செல்லாது உணர்வு.       --- சிறுபஞ்சமூலம்

 

இதன் பொருள் ---

 

     பூத்து இருந்தாலும் காய்க்காத மரங்களும் உண்டு. அதுபோல, நன்மையறியாதவர் ஆண்டுகளால் முதிர்ந்தாலும், அறிவினால் முதிர்ந்து இருக்கமாட்டார். அவர்கள் அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர்கள். பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத வித்தும் உண்டு. அது போல, அறிவில்லாதவனுக்கு நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது.

 

        

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம் 

குற்றம் தமதே, பிறிதுஅன்று, முற்று உணர்ந்தும் 

தாம்அவர் தன்மை உணராதார் தம்உணரா 

ஏதிலரை நோவது எவன்.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     தாம் படித்த நூற் பொருள்களை, படிக்காத மூடர்களுடைய காதில் நுழைப்பதனால், அவமானம் உண்டாகும். அந்தக் குற்றம் கற்றவர்களையே சாரும். பிறரைச் சாராது. எல்லாம் தெரிந்திருந்தும், அம் மூடர்களுடைய மூடத் தன்மையை உணராதவர்கள், தம்மைக் கற்றவர்கள் என்று உணர்ந்து கொள்ளாத அம்மூடர்களை நொந்து கொள்வது ஏன்?

 

         நன்றாய்ப் படித்து எல்லாம் தெரிந்திருந்தும் கூடத் தம் அறிவுரைகளை அம்மூடர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்று அறிந்து கொள்ளாமல் போனால், அம்மூடர்கள் எவ்வாறு, ‘இவர்கள் படித்தவர்கள்: ஆதலால், இவர்களுக்கு மதிப்புக் கொடுத்து இவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வார்கள் என்பது இதன் கருத்து.

 

அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருள்அல்லா

ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும், பால்கூழை

மூழை சுவை உணரா தாங்கு.       --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பால் சோற்றின் அருமையை அதை உண்பவர்களே அறிவர். அல்லாது, அதைச் செய்யும் அகப்பைக்குத் தெரியாத்து போல, கருணை மனமும், கல்வி ஞானமும், அன்பு உள்ளமும் கொண்ட பெரியோர் கூறம் சொற்களின் பெருமையைக் கற்று அறிந்த மக்களே உணர்வர். அறிவில்லாதவர்கள் அதனை வெறும் சொல்லாகவே எண்ணி இகழ்வர்.

 

 

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்

குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க

கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்

மனம்புரிந்த வாறே மிகும்.           --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நொய்யரிசியைத் தவிடுபோகத் தெள்ளிக் கொழித்து, வேளை தவறாமல் கொடுத்து வந்தாலும், குப்பையைக் கிளறித் தின்னத்தான் கோழியானது போகும். அதுபோல, என்னதான் பெரிய, உயர்ந்த அறிவு நூல் கருத்துக்களை எடுத்துக் கூறினாலும், கீழ்மக்கள் காதில் அது ஏறாது. அவர்கள் தங்களுக்கே இயல்பான இழிதொழில்களைச் செய்துகொண்டுதான் இருப்பர்.

 

 

உறுதியை உரைத்தனன், உணர்வு இலாதவன்

வறிது எனை இகழ்ந்தனன், வருவது ஓர்கிலன்,

இறும் வகை நாடினன், யாது ஒர் புந்தியை

அறிவு இலர்க்கு உரைப்பவர் அவரில் பேதையோர்.

                     --- கந்தபுராணம், சூரன் அமைச்சியல் படலம்.   

 

இதன் பொருள் ---

 

(சூரபதுமன் தன்னை இகழ்ந்து பேசியது குறித்து, சிங்கமுகன் தனக்குள் எண்ணியது) நன்மை தருவதை நான் சொன்னேன். நல்லுணர்வு இல்லாத இவன் என்னை வீணாக இகழ்ந்தான். பின்னால் வரப்போவதை இவன் ஆராயவில்லை. அழிந்து போகும் வகையையே இவன் நாடுகின்றான். அறிவில்லாதவர்க்கு நல்ல புத்தியைப் புகட்டுகின்றவர்கள், அவரை விடவும் அறிவில்லாதவரே ஆவர்.

 

உய்த்தனர் தேன் மழை உதவிப் போற்றினும்

கைத்திடல் தவிருமோ காஞ்சிரங் கனி,

அத்தகவு அல்லவோ அறிவு இலாதவன்

சித்தம் அது உணர் வகை தெருட்டுகின்றதே.

                  --- கந்தபுராணம். சூரன் அமைச்சியல் படலம்.

 

இதன் பொருள் ---

 

     எட்டிப் பழத்தை, தேனில் தோய்த்துப் பாதுகாத்தாலும் அதன் கசப்புத் தன்மையில் மாறாது. அதைப் போன்றதுதான், அறிவில்லாத இவனுக்கு அறிவைத் தெளிவிக்க முயல்வதும். (என்று சிங்கமுகன் எண்ணினான்)

 

கல்வி, தூய நெஞ்சு இலாத அச் சுயோதனன்

     கழறிய மொழி கேட்டு,

வில் விதூரன், 'இவ் வேதியன் மொழிப்படி

    மேதினி வழங்காமல்,

புல் விதூடகரினும் உணர்வு இலாதவர்

     புகலும் வாசகம் கேட்கின்,

செல்வி தூரியள் ஆய்விடும்; சுற்றமும்,

     சேனையும், கெடும்' என்றான். --- வில்லிபாரதம், உலூகன் தூதுச் சருக்கம்.

 

இதன் பொருள் ---

 

     கல்வி அறிவினாலே, குற்றமற்றுச் சுத்தமான மனம் இல்லாத, அந்தத் துரியோதனன் உறுதியாகச் சொன்ன, அவ் வார்த்தையை, வில்வித்தையில் வல்ல விதுரன் கேட்டு, துரியோதனனை நோக்கி, "இந்த அந்தணனது வார்த்தையின்படி, பாண்டவருக்குப் பூமியைக் கொடாமல்,  இழிவான விதூஷகர்களைக் காட்டிலும் அறிவில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பாயானால், உனக்குத் திருமகள் தூரத்தில் உள்ளவளாய் விடுவள். உனது சுற்றமும் சேனைகளும் போரில் அழியும்" என்று சொன்னான்.

 

  

 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...