பேதையின் நட்பு இனியது, பிரிவின்போது துன்பம் தராது

பேதையின் உறவு மிகவும் இனியது;

பிரியும்போது துன்பம் தருவது இல்லை

-----

 

     திருக்குறளில் "பேதைமை" என்னும் ஓர் அதிகாரம். பேதைமை என்பது அறிய வேண்டுவது ஏதும் அறியாமை ஆகும். முட்டாள்தனம்.

 

     நட்பு என்பது காமத்தால் (விருப்பம், ஆசை) உண்டாவது. பகை என்பது கோபத்தால் உண்டாவது. காமம், கோபம் என்னும் இவ்விரண்டு குற்றங்களையும் முழுதும் நீக்குவது அரிது. கோபத்தால் வரும் பகையினை ஐந்து அதிகாரங்களாலும், காமத்தால் வரும் பகையினை ஐந்து அதிகாரங்களால் கூறினார். கோபத்திற்கும் காமத்திற்கும் அடிப்படையாக உள்ள மயக்க அறிவினை இரண்டு விதமாக்கி, ஒன்றைப் "பேதைமை" என்றும், மற்றொன்றைப் "புல்லறிவாண்மை" என்றும் கூறினார்.

 

 

     இந்தப் பேதைமை என்னும் அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அறிவில்லாதவனோடு கொண்ட நட்பே இனிமை தருவது ஆகும். ஏனெனில், அவனை விட்டுப் பிரியும் காலத்தில் துன்பம் சிறிதும் தருவதாக ஒன்றும் இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     அறிவில்லாதவர்கள் கொண்ட நட்பானது தேய்பிறை போல் நாளடைவில் குறைந்து போவதால், பிரிய நேருங்கால் துன்பம் தோன்றுவது இல்லை.

 

     பழகினவர் யாராயிருந்தாலும் அவரை விட்டுப் பிரிதல் என்பது எப்பொழுதும் துன்பம் தருவதே. ஆனால் பேதையரோடு கொண்ட நட்பை விலக்கிப் பிரியும் காலத்தில், அவருடன் நட்புச் செய்தவரது உள்ளம் சிறிதும் வருந்துவதில்லை. பேதையுடனான நட்பானது பிரிந்தால் இனிதாகவே இருக்கும். நிலையாகப் பிரிந்தால் இன்னும் இன்பம். பேதை என்பவன், நன்மை தீமைகளை உய்த்து உணரமுடியாதவன். அதனால் அவனோடு கூடியிருந்த சமயத்தில் துன்பம் தரக் காரணம் ஆகிறான். அத்தகைய பேதையரிடமிருந்து நீங்குவது நல்லதுதான் என்று வஞ்சப் புகழ்ச்சியாக, அதாவது புகழ்வார் போலப் பழித்துக்  கூறி அருளினார் நாயனார்.

 

     வாழ்நாளில் நாம் பலருடன் நட்புக்கொள்கிறோம். நட்பு கொண்டபோது அவன் பேதை என்று தெரியாது. தெரிந்திருந்தால் நட்புச் செய்திருக்க மாட்டோம். நட்புக் கொண்டு பழகும்போது தெரியாத பேதைமை, பின்னர் உணரப்பட்டால், அந் நட்பிலிருந்து எப்பொழுது விலகலாம் என்றுதான் தோன்றும். பழகிவிட்டதால் நட்பை எப்படி முறித்துக்கொள்வது என்ற எண்ணமும் உண்டாகும். பேதையினது செயற்பாடுகள் பொறுக்கமாட்டாத அளவு சென்றாலும் நம் தகுதியைக் காப்பதற்கும் பெருங்கேடு உண்டாகா வண்ணம் இருப்பதற்கும், அந்நட்பினை முறித்துக் கொள்வதுதான் நல்லது. அப்பேதை, தானே வெளியேறா விட்டால் "'ஒன்று ஈத்தும், ஒருவுக ஒப்பிலார் நட்பு" என்று நாயனார் அருளியதற்கு  இணங்க ஏதாவது கொடுத்து நீங்கும்படி செய்யலாம், பேதையே பிரிந்து செல்கின்றான் என்றாலோ அல்லது நாமே அவனது தொடர்பை நீக்கிக் கொண்டாலோ, அப்பிரிவு இனிதுதான். தீராத்துயர் தீர்ந்தது போல் உணரலாம். "தெரியாமல் பழகத் தொடங்கினோம், நல்ல வேளை, தப்பினோம்" என்ற நிம்மதி கிடைக்கும். அப்பிரிவு நிலையானது என்னும்போது மகிழ்ச்சி இன்னும் மிக உண்டாகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போன்றது என்பதால் அது பெரிதும் இனிதாகிறது. இந்த அரிய கருத்தை,

 

பெரிது இனிது பேதையார் கேண்மை, பிரிவின்கண்

பீழை தருவது ஒன்று இல்.               

 

என்னும் திருக்குறளால் நாயனார் நமக்கு அறிவுறுத்தினார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

அரன் அன்பர் வாகீசர் அன்று அமணை நீங்கப்

பெரிது இன்பம் அன்றி உண்டோ பீழை? ---  தெரியில்

பெரிது இனிது பேதையார் கேண்மை, பிரிவின்கண்

பீழை தருவது ஒன்று இல்.

 

         பீழை உண்டோ என மாற்றுக. பீழை --- வருத்தம். 

 

     வாகீசர் சமண சமயத்தை விட்டு, மீட்டும் சைவரான உடன் அவரது சூலைநோய் நீங்கியதும் அன்றி, முடிவில் அவர்க்கு வீடுபேறும் கிடைத்தது. பலகாலம் பழகிய சமணர்களை விட்டு நீங்கியதால், திருநாவுக்கரசருக்கு உள்ளத்தில் ஒருத்தம் உண்டானதில்லை. பிரியும்போது துன்பம் இல்லாமையால் அறிவில்லார் நட்பு நல்லது.

 

     இதே கருத்தை வைத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

வன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க்கு இன்பம்இன்றித்

துன்பம்என்பது இல்லையே, சோமேசா! - நன்காம்

பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதுஒன்று இல்.

 

இதன் பொருள்---

 

     சோமேசா! பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் --- பின் பிரிவு வந்து நேர்ந்தபோது, அது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது --- ஆகலான் பேதையாயினார் தம்முள் கொண்ட நட்பு மிக இனிது.

 

         நன்கு ஆம் --- நன்மையுமாம், வாகீசர்க்கு --- திருநாவுக்கரசு நாயனாருக்கு,  வன் சமணர் பிரிவால் --- கொடிய சமணரது பிரிவினால், இன்பம் அன்றி --- இன்பமல்லாது, துன்பம் என்பது இல்லை --- துன்பம் எனப்படுவது ஒன்றில்லை ஆகலான் என்றவாறு.

 

            திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில் வேளாள மரபில், குறுக்கையர் குடியில், புகழனார்க்கும் மாதினியார்க்கும் திருமகனாய் அவதரித்தவர் மருள்நீக்கியார் என்னும் பிள்ளைத் திருநாமம் உடைய திருநாவுக்கரசர். இளமையிலேயே தமது தாய்தந்தையரை இழந்து, பின்னம் தமது தமக்கையார் ஆகிய திலகவதியார்க்கு மணம் பேசி வைத்தவரும் இறந்து, திலகவதியார் தமது உயிரைப் போக்கிக் கொள்ள முயன்ற போது, அவரது திருவடியில் விழுந்து, "தாய்தந்தையரை இழந்த பின்னும் உம்முடைய ஆதரவால் உயிர் வாழலானேன். என்னே இப்படித் துன்பக் கடலில் விடுத்தால், நான் உயிர் விடுவேன்" என்றார் திருநாவுக்கரசர். தம்பி மீது வைத்த அன்பால், உயிரைப் போக்கும் எண்ணத்தை விடுத்து, துறவு மேற்கொண்டு, திருவதிகை என்னும் திருத்தலத்தில் இருந்து கொண்டு, இறை திருப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

 

     திருநாவுக்கரசு நாயனார் சகல கலைகளிலும் வல்லாராய் இருந்தும், சிவபரம்பொருளின் திருவருள் இல்லாமையால், நிலையாமை என்னும் நிலையைத் தெளிய முடியாதவராய், பாடலிபுத்திரம் என்னும் பதி புகுந்து, சமணரொடு கூடினார். "தருமசேனர்" என்னும் பெயரோடு சமண குருவாய் விளங்குவதைக் கேட்ட திலகவதியார் என்னும் அவர் தமக்கையார், தம் தம்பியைச் சமணப் படுகுழியினின்றும் எடுத்தருளல் வேண்டும் என்று சிவபெருமானை நாள்தோறும் பிரார்த்தித்தார். அவ்வாறு இருக்கையில் தருமசேனருக்குச் சூலைநோய் கண்டு சமணர் செய்த முயற்சி ஒன்றாலும் தீராமல் போக, தமது தமக்கையார் நினைவு உண்டாகி, தமக்கையார் தொண்டு செய்திருந்த திருவதிகை வீரட்டானம் அடைந்து, அவரைக் கண்டு திருநீறு பெற்று, வீரட்டானேசுவரர் சந்நிதி அடைந்து,

 

கூற்றாயின வாறு விலக்ககிலீர்,

         கொடுமைபல செய்தன நான்அறியேன்,

ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்

         பிரியாது வணங்குவன் எப்பொழுதும்,

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே

         குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன்அடி யேன், அதி கைக்கெடில

         வீரட்டா னத்துஉறை அம்மானே.

 

என்று தொடங்கும் பாடலைக் கொண்ட திருப்பதிகத்தைப் பாட அப்போதே சூலைநோய் விட்டொழிந்தது. அது அறிந்த சமணர்கள், தமது அரசனாகிய பல்லவனுக்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லி, நாயனாரை வருவித்து நீற்றறையில் வைத்தல், நஞ்சு கலந்த பால் சோற்றினை ஊட்டல், யானைக் காலில் இடறுதல், கல்லோடு கடலில் இடுதல் முதலிய பல கொடுமைகள் செய்தும் நாயனார் திருப்பதிகங்கள் ஓதிச் சிவாநுக்கிரகத்தால் ஒரு தீங்கும் இன்றி இருந்தார். இதைக் கண்ட பல்லவன் நாயனாரை வணங்கிச் சைவனாகிப் பாடலிபுத்திரத்து இருந்த சமண் பள்ளிகளையும் பாழிகளையும் அழித்து அங்குக் குணபரவீச்சரம் என்னும் திருக்கோயிலைக் கட்டினான்.

 

     நற்பண்பு இல்லாத கீழ்மக்களோடு கொண்ட நட்பானது பெருகி வளர்வதைக் காட்டிலும், குறுகி ஒழிவது நல்லது என்பதைக் காட்ட, "பண்பு இலார் கேண்மை பெருகலின், குன்றல் இனிது" என்று நாயனார் பிறிதொரு திருக்குறளில் காட்டியமை காண்க.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...