ஆத்திசூடி --- 08. ஏற்பது இகழ்ச்சி

 

 

ஆத்திசூடி

8. ஏற்பது இகழ்ச்சி.

 

இதன் பொருள் ---

 

     ஏற்பது --- (நீ பொருள் இல்லாதவனாகி, அது உள்ள ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி --- இகழப்படுவதாகும்.

 

     இரந்து உண்டு வாழ்வது பழிப்பு. ஆகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே என்று அறிவுறுத்தினார் பாட்டியார்.

 

     முதலில், "அறம் செய விரும்பு" என்று அறிவுறுத்தினார். அறத்தைப் புரிவதில் ஊக்கத்தைக் கைவிட்டு விடுதல் ஆகாது என்பதால், "ஊக்கமது கைவிடேல்" என்று அறிவுறுத்தினார். அதற்கு வேண்டிய பொருளை அறவழியில் ஈட்டுதல் வேண்டும். ஈட்டிய பொருளைத் திறம்படக் காத்து, அளவு அறிந்து கொடுத்து வாழ்தல் வேண்டும் என்பதால், "எண், எழுத்து இகழேல்" என்று அறிவுறுத்தினார்.

 

     ஊக்கம் மிகுதியால், எண்ணையும் எழுத்தையும் அறியாது இகழ்வதால், பொருள் வற்றி, வறுமை உண்டாகும். வறுமை வந்தபோது, பொருள் உள்ளோரைத் தேடிச் சென்று இருக்கின்ற நிலை வந்து சேரும். அது எல்லோராலும் இகழப்படும் நிலை ஆகும். அதற்கு அஞ்சவேண்டும் என்பதற்காக, "இரவச்சம்" என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து, ஓளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து ஈதலைச் செய்கின்ற, கண்போல் அருமை உடையவரிடத்தும், தன் பொருட்டு ஒருவன் இரத்தல் செய்யாமை கோடி மடங்கு தக்கது என்பதை உணர்த்த, "கரவாது உவந்து ஈயும் கண்அன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்" என்றும், தமக்கு உற்ற வறுமைத் துன்பத்தை, இரந்து பொருள் பெறுவதன் மூலம் நீக்கிக் கொள்ளலாம் என்று எண்ணக் கூடிய கொடுமையைப் போன்றதொரு கொடுமை ஒன்று இல்லை என்பதை அறிவுறுத்த, "இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையில் வன்பாட்டது இல்" என்னும் திருவள்ளுவ நாயனார் அருளி உள்ளது இங்கே வைத்து எண்ணத் தகும்.

 

     பசிக்கு உணவு என்று சென்று இரந்தால், பசி தீரும் மட்டும் தான் கொள்ள முடியும். ஆனால், பொருள் வேண்டி இரந்தால், மனம் நிரம்பாமல், 'இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்' என்னும் எண்ணத்தோடு, பலகாலும் சென்று இரந்து நிற்கும் நிலை தன்னால் உண்டாகும். அதனால், "இரவின் இளி வந்தது இல்" என்றும் திருவள்ளுவ நாயனார் உணர்த்தி அருளினார். எனவே, பொருள் இல்லாமை காரணமாக, பொருள் உடையாரிடத்தில் சென்று ஏற்பது இகழ்ச்சியையே தரும் என்று உணர்த்தினார் ஔவைப் பிராட்டியார்.

 

     தன்னிடத்து உள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுத்து உதவுதல் மட்டும் அல்லாது, பிற நற்செயல்களும் அறத்தில் அடங்கும் என்றாலும், அறவழியில் ஈட்டிய பொருளைப் பிறர்க்கு இல்லை என்னாது கொடுத்து உதவுவது மேலான அறம் என்பதால், "ஈதல் அறம்" என்றும், "ஈதற்குச் செய்க பொருளை" என்றும் நூலோர் கூறியுள்ளது மேலே காட்டப்பட்டது.

 

     அதுபோலவே, இகழ்ச்சிக்கு உரிய செயல்கள் பல இருந்தாலும், பிறரிடம் சென்று இரந்து நிற்பதுதான் இகழ்ச்சி. "ஆவிற்கு நீர் என்று இரப்பினும், நாவிற்கு இரவின் இளிவந்தது இல்" என்னும் திருக்குறளின்படி, பசுவினுடைய தாகத்திற்குத் தண்ணீர் வேண்டும் என் கேட்டு யாசித்தது நாக்குதான் என்றாலும், அதனைப் போன்ற இழிவு வேறு இல்லை என்று நாயனார் அறிவுறுத்தி உள்ளதால், "ஏற்பது இகழ்ச்சி" என்று ஔவைப்பாட்டி அறிவுறுத்தியது தெளிவாக விளங்கும்.

 

     தானாகக்  கிடைப்பதைப் பெறுதல் நல்ல வழிதான். என்றாலும், தனக்கு வேண்டி ஒருவன் அவ்வாறு கிடைப்பதைப் பெறுவது தீமையானது என்பதை, "நல் ஆறு எனினும் கொளல் தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று" என்னும் திருக்குறளால் நாயனார் உணர்த்தி உள்ளார் என்பதை எண்ண, "ஏற்பது இகழ்ச்சி" என்பது தெளிவாகும்.

 

     ஒருவரிடத்தில் சென்று ஒரு பொருளை இரந்து, அவர் கொடுக்க ஏற்றுக் கொள்ளாமையே நல்லது; ஈதல் அறம் என்றாலும், பண்பு இல்லாதவர்க்கு அவர் வேண்டுகின்ற பொருளைக் கொடுத்தல் தீது என்று, "சிறுபஞ்சமூலம்" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் அறிவுறுத்துவதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

 

     மறுமை இம்மை நலங்களைக் கருதி, முடிந்த வரையில் பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பது முடியாதபடி ஒருவனுக்கு வறுமை வந்து சேர்ந்தாலும்,  பிறரிடம் சென்று பிச்சை கேட்காமல் இருப்பது. தானம் தருவதைவிட, பிச்சை கேட்காமல் இருப்பது இரு மடங்கு சிறப்பானது என்கின்றது நாலடியார் என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்.

 

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு

உறுமாறு இயைவ கொடுத்தல் - வறுமையால்

ஈதல் இசையாது எனினும், இரவாமை

ஈதல் இரட்டி உறும்.             ---  நாலடியார்.

 

     எனவே, பொருள் இல்லை என்பதற்காக, அது உள்ளவரிடம் சென்று கையேந்துவது இகழ்ச்சிக்கு உரியது என்பதைக் காட்ட, "ஏற்பது இகழ்ச்சி" என்று ஔவைப் பிராட்டியார் அறிவுறுத்தினார்.

 

     பின்வரும் கம்பராமாயணப் பாடலிலும், கவிச்சக்கரவர்த்தி, மேற்கூறிய கருத்துக்களையே வலியுறுத்தி இருப்பது காண்க.

 

வெள்ளியை ஆதல் விளம்பினை. மேலோர்

வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்.

எள்ளுவ என் சில? இன் உயிரேனும்

கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.

 

 

இதன் பொருள் ---

 

     வெள்ளியை ஆதல் விளம்பினை - நீ  வெள்ளறிவுடையன் ஆதலின். உன் இயற்கைக்கேற்பவே சொல்லினை;  மேலோர் --- மேன்மைக் குணம் உடைய பெரியோர்கள்;   வள்ளியர் ஆக ---  தாம் வள்ளமை உடையோராயின்;   இன் உயிரேனும் --- தமது  இனிய உயிரையே என்றாலும்;  வழங்குவர் அல்லால் --- கொள்வோர்க்குக் கொடுப்பாரே அல்லாமல்; எள்ளுவ என் சில --- சிலகூறி பரிகசிப்பரோ?; கொள்ளுதல் தீது கொடுப்பது நன்று ---   பிறர்பால் ஏற்றல் தீமை, ஈதலே நன்மையாகும்.

 

     கொள்ளுதல் தீது கொடுப்பது நன்று. நல்லாறெனினும்   கொளல் தீது, மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று’’  என்ற  திருக்குறள் கருத்து அமைந்த பாட்டிது.

 


No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...