பொறாமைப் படுவதால் உயர்ந்தவர் இல்லை

 

 

பொறாமைப் படுவதால் உயர்ந்தவர்கள் இல்லை

----- 

 

     திருக்குறளில் "அழுக்காறாமை" என்னும் அதிகாரத்துள்  வரும் பத்தாம் திருக்குறள், "பொறாமைப்படுதலைச் செய்து பெரியவர் ஆனதும் இல்லை; அது இல்லாதவர் பெருக்கத்தில் இருந்து நீங்கினதும் இல்லை" என்கின்றது.

 

     பொறாமை என்பது பிறருடைய ஆக்கத்தைக் கண்டு மனம் பொறுத்துக் கொள்ளாமல், மனம் புழுங்குகின்ற நிலை. இது "வயிற்று எரிச்சல்" எனப்படும். வயிற்று எரிச்சல் கொள்வதால், பிறன் ஒருவனிடம் உள்ள செல்வம் எதுவும் வந்துவிடப் போவது இல்லை. மாறாக, "அல்சர்" எனப்படும் "வயிற்றுப் புண்" மட்டுமே வந்து சேரும் என்பதை வாழ்வியலாக நம்மில் பலரும் கண்கூடாகக் கண்டும், அனுபவித்தும் இருக்கலாம்.

 

     கேடு வருவதற்குக் காரணம் பொறாமையும், ஆக்கம் வருவதற்குக் காரணம் பொறாமை இன்மையும் காரணம் ஆகும்.

 

     பொறாமை கொண்ட மனத்தை உடையவன் புகழையும் புண்ணியத்தையும் அடைவது இல்லை. பொறாமை இல்லாதவன் புகழையும் புண்ணியத்தையும் அடைவான்.

 

"அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

புத்தன் இறந்தான் பொறாமை செய்து, செய்யார்க்கு

நித்தர் அருள் உண்டாய் நிறைந்த புகழ், --- மெத்த

அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

 

இதன் பொருள் ---

 

     புத்தன் --- புத்த நந்தி; பொறாமை செய்து --- ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர் சின்னமும் ஊர்தியும் பெற்று வருவதைக் கண்டு மனம் பொறுக்காமல், இறந்தான் --- இறந்து போனான்; செய்யார்க்கு --- பொறாமை செய்யாத சிவனடியார்களுக்கு; செம்மை உடையார்க்கு எனினும் ஆம்; நித்தர் அருள் உண்டாய் --- நித்தியப் பொருளாக உள்ள இறைவன் அருள் உண்டானது; நிறைந்த புகழ் --- புகழும் நிறைந்தது.

 

     எனவே, இந்த நிகழ்வானது, மெத்த --- மிகவும், அழுக்கற்று அகன்றாரும் இல்லை --- பொறாமைப்படுதலைச் செய்து பெரியவர் ஆனதும் இல்லை; அஃது இல்லார் --- அந்தப் பொறாமைக் குணம் இல்லாதவர், பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் --- அது (பொறாமைப்பபடுதல் என்னும் தீய குணம்) இல்லாதவர் (வாழ்வில் செல்வம் முதலான) பெருக்கத்தில் இருந்து நீங்கினதும் இல்லை (என்னும் திருக்குறள் பொருளை உணர்த்தி நிற்கின்றது)

 

         திருஞானசம்பந்தப் பெருமான் திருநள்ளாற்று இறைவரை வணங்கி,  அத்திருத்தலத்தில் சில நாள் தங்கி இருந்து, பின்னர் திருதெளிச்சேரி என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, போதி மங்கையை நெருங்கினார். போதிமங்கை என்பது, புத்தர்கள் நிறைந்த ஊர். சிவனடியவர்களின் ஆரவாரமும், திருச்சின்ன ஓசையும், திருவைந்தெழுத்து முழக்கமும் புத்தர்களுக்கு நாராசம் போல் இருந்தன. அவர்கள் எல்லாரும் ஒருங்கு திரண்டு, புத்தநந்தியைத் தலைவனாகக் கொண்டு, சிவனடியவர்களின் திருக்கூட்டத்தை மறித்தனர். அவர்கள், "உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு? எங்களை வாதில் வென்றீர்களா? வாதில் வென்று அல்லவா அவைகளை முழக்கவேண்டும்?" என்று வெகுண்டு விலக்கினார்கள். அவர்கள் செயலைக் கண்ட சிவனடியார்கள் "இத் தலைவனை மாய்த்தல் வேண்டும். இல்லையேல் இவன் தீங்கு விளைவிப்பான்" என்று கருதி, நிலைமையைத் திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார்கள். பிள்ளையார், "இதென்ன நன்றாய் இருக்கின்றது. புத்தநந்தியின் திறத்தை வாதத்தில் பார்ப்போம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்குள் நெருக்கு அதிகமாக, தேவாரத் திருமுறைகளை எழுதிவரும் அன்பர்,

 

'புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின,

வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு

அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே'

 

என்று திருஞானசம்பந்தபெ பெருமான் அருளிய திருப்பாட்டை ஓதி முடித்தார். முடித்ததும், புத்தநந்தி மீது இடி விழுந்தது. புத்தர்கள் நிலை கலங்கி ஓடினார்கள். அந் நிகழ்ச்சியை அடியார்கள் பிள்ளையாருக்கு அறிவித்தார்கள். பிள்ளையார் அவர்களை நோக்கி, "இது விதியால் நேர்ந்தது. அரன் நாமத்தை ஓதுங்கள்" என்றார். அடியார்கள் அப்படியே செய்தார்கள்.

 

         மருண்டு ஓடிய புத்தர்கள், சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு, மீண்டும் வந்தார்கள். வந்து, "மந்திர வாதம் வேண்டாம், தருக்க வாதம் செய்யுங்கள், பார்ப்போம்" என்று அடர்த்தார்கள்.   பிள்ளையார் சிவிகையில் இருந்து இறங்கி, ஒரு மண்டபத்தில் எழுந்தருளினார். புத்தர்களை அழைத்து வருமாறு பிள்ளையார் அடியார்களுக்குக் கட்டளை இட்டார். புத்தர்களை அழைத்து வந்தார்கள். சாரிபுத்தன் பிள்ளையார் அருகே நின்றான். புத்த நந்தியை இருகூறு படுத்திய அன்பர், பிள்ளையார் முன்னிலையில் வாதத்தைத் தொடங்கினார். சாரிபுத்தனும் வாதத்தில் ஈடுபட்டான். முடிவில் சாரிபுத்தன் தோல்வி

அடைந்தான். அவன் பிள்ளையாரை வணங்கினான். மற்ற புத்தர்களும் பிள்ளையாரை வணங்கினார்கள். பிள்ளையார் எல்லாருக்கும் திருநீறு அளித்து அருள் செய்தார்.

 

     பொறாமை காரணமா, திருஞானசம்பந்தரை வாதிற்கு அழைத்து, புத்தர்கள் தமது ஆக்கநிலையை இழந்தார்கள்.

        

         பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்.

 

     சீதையின் அழகில் மயங்கி,  காமமயக்கம் கொண்டிருந்தான் இராவணன். காம மயக்கத்தில் உள்ளவர்க்கு இரவுக் காலமும், குளிர்ந்த சந்திரன் ஒளியும் துன்பத்தைச் செய்யும். காம நோயினது தன்மையை இதுவரையில் அனுபவித்து இராதவனாகிய இராவணன், சந்திரனைப் பழித்துக் கூறுகின்றான். சீதையின் முகத்தில் மரு ஏதும் இல்லை. ஆனால், சந்திரனில் கருமை உண்டு. "நீ சீதையின் முகத்துக்குத் தோற்றுப் போனாய்" என்கின்றான். சந்திரனின் கலைகள் நாளுக்கு ஒன்றாகத் தேய்வது உண்டு. இந்த உண்மையைத் தனது காம மயக்கதால் அறிவிழிந்த இராவணன் உணராது, "நீ சீதையின் அழகினைக் கண்டு மெலிந்து போனாய். உன்னுடைய குளிர்ச்சி நிலையில் இருந்து மாறுப்படு, இப்போது என்னைச் சுடுகின்றாய். நீயும் ஒருவேளை சீதையின் மீது காதல் கொண்டாயோ?" என்று சந்திரனைப் பார்த்து இராவணன் பழித்துக் கூறினான். தனது பணியாளர்களைப் பார்த்து, "இந்த இரவோடு சந்திரனை நீக்கிவிட்டு, பகல் பொழுதையும் சூரியனையும் வரச் செய்யுங்கள்" என்று கட்டளை இட்டான்.

 

     "நீ மாற்றான் ஆகிய இராமனுக்குச் சொந்தமான சீதையைக் கண்டு மனம் புழுங்குகின்றாய். பிறனுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு மனம் அழிந்தால், வெற்றி பெறும் வல்லமை உண்டாகுமோ" என்று சந்திரனைப் பழித்துக் கூறுகின்றான்.

 

     காதல் நோயால் வாடுகின்ற எனது உயிரைக் கொல்லுகின்ற இயமனாக இப்போது சீதை இருக்கின்றாள் என்று சொல்லுகின்றான் இராவணன். இராவணன் சொன்ன சொல்லே அவனுக்குப் பின்னால் வரும் கேட்டினை முன்னால் உணர்த்தி நின்றது.

 

     திருக்குறள் கருத்தை, "மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால், வெற்றி ஆக வற்று ஆமோ?" என்னும் வாசகத்தால், பின்வரும் பாடலில், கம்பர் காட்டுகின்றார். சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் வரும் பாடலைக் காண்போம்...

    

 

'ஆற்றார் ஆகின், தம்மைக் கொண்டு

     அடங்காரோ? என் ஆர் உயிர்க்குக்

கூற்றாய் நின்ற குலச் சனகி குவளை

     மலர்ந்த தாமரைக்குத்

தோற்றாய்; அதனால், அகம் கரிந்தாய்;

     மெலிந்தாய்; வெதும்பத் தொடங்கினாய்,

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால்,

     வெற்றி ஆகவற்று ஆமோ?'

        

இதன் பொருள் ---

 

     என் ஆர் உயிர்க்கு --- என்னுடைய இனிய உயிருக்கு; கூற்றாய் நின்ற --- எமனாய் அமைந்த; குலச் சனகி --- நற்குடிச் செல்வியாகிய சீதையின்; குவளை மலர்ந்த தாமரைக்கு --- கண்களாகிய குவளைப் பூக்கள் பூத்திருக்கும் முகமாகிய தாமரைக்கு; தோற்றாய் --- நீ தோல்வியுற்றாய்; அதனால் அகம் கரிந்தாய் --- அக்காரணத்தால் உள்ளம் கரிந்து போனாய்; மெலிந்தாய் --- உடல் தேய்ந்தாய்; வெதும்பத் தொடங்கினாய் --- மேனி வெப்பமுறவும் தொடங்கினாய்; மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் --- பிறர் செல்வ வளம் கண்டு இப்படி மனம் சிதைவுற்றால்; வெற்றி ஆக வற்று ஆமோ --- வென்று உயர்தல் இயலுவதாகுமோ?; ஆற்றார் ஆகின் --- தம்மால் வெல்ல இயலாதது என உணர்ந்தால்; தம்மைக் கொண்டு அடங்காரோ? --- (அறிவு மிக்கோர்) தம் நிலை உணர்ந்து கொண்டு அடங்கி விட மாட்டார்களோ? (அடங்குதல் தானே பொருத்தம்!)

 

 

 

    

                             

 


பொறாமைக் குணம் உள்ளவன் தானே அழிவான்

 

 

பொறாமைக் குணம் உள்ளவன் தானே அழிவான்

-----

 

     திருக்குறளில் "அழுக்காறாமை" என்னும் ஓர் அதிகாரம்.

 

     அழுக்காறு என்னும் சொல், அழுக்கு+ஆறு (வழி) என இரண்டு சொற்களால் ஆனது என்றாலும், அதனை ஒரு சொல்லாகவே கொண்டு, அழுக்காறு என்றனர். அழுக்காறு என்பது சொல்லால், உடன்பாடாகத் தோன்றினாலும், பொருளால் எதிர்மறை ஆகி நின்று, அழுக்கைத் தவிர்த்தலையும், அழுக்கு வழியில் செல்லாமல் இருத்தலை உணர்த்தியது.  அழுக்கு என்பது உள்ளத்தில் உள்ள அழுக்கைக் குறித்தது. அழுக்காறு என்பது, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைப் பொறுத்துக் கொள்ளாத தீய குணம் ஆகும். "அழுக்காறாமை" என்பது, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தீய குணத்தை விடுதல் என்பது ஆகும்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "பொறாமை என்பது, பகைவர் இல்லாமலே தீமையைத் தருவது. எனவே, பொறாமைக் குணம் உடையார்க்கு, கேட்டினைத் தருதற்குப் பகைவர் வேண்டாம், அவர் கொள்ளும் பொறாமையே போதும்" என்கின்றது.

 

     பொறைமைக் குணம் கொண்டிருந்த சிசுபாலனைக் கண்ணன் அழிக்கவேண்டும் என்று எண்ணி இருந்தால், அவனை முதலிலேயே அழித்து இருக்கலாம். அவன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனபோதுதான் அவனை அழித்தார். சிசுபாலனுக்குப் பகையாக இருந்து அவன் அழிவுக்குக் காரணமாக இருந்தது, அவன் கொண்டிருந்த பொறைமைக் குணமே. எனவே, பொறாமைக் குணம் உடையவரை அழிப்பதற்குப் பகைவர் வேண்டாம். அவர் கொண்டிருக்கும் பொறாமையே போதுமானது என்றார் நாயனார்.

 

"அழுக்காறு உடையார்க்கு அது சாலும், ஒன்னார்

வழுக்கியும் கேடு ஈன்பது".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தர் ஆன மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் பாடல்.

 

அன்பரைக் கண்டு, அழுக்காறு ஆம்சமணர் தம்வாயால்

துன்பம்உற்றார் வெங்கழுவில், சோமேசா! --- வன்புஆம்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடு ஈன்பது.

 

இதன் பொருள் ---

 

         சோமேசா! வன்பு ஆம் --- கடுமை ஆகிய,  அழுக்காறு --- பொறாமையானது, ஒன்னார் வழுக்கியும் --- பகைவரை ஒழிந்தும், கேடு ஈன்பது --- கேடு பயப்பதொன்று ஆகலின், உடையார்க்கு அது சாலும் --- அப் பொறாமை உடையார்க்குப் பகைவர் வேண்டா, கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்,

 

         அன்பரை --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை, கண்டு --- பார்த்து, அழுக்காறு ஆம் சமணர் --- பொறாமை கொண்ட சமணர்கள், தம் வாயால் --- தமது வார்த்தையால், வெம் கழுவில் துன்பம் உற்றார் --- கொடிய கழுவினிடத்தே துன்பம் அடைந்தார்கள் ஆகலான் என்றவாறு.

 

         இதனால் பொறாமைக் குணம் கொண்டிருந்த சமணர்களுக்கு, அவர்கள் கொண்டிருந்த பொறாமைக் குணத்தால் உண்டான செயலே அவரது உயிர்க்குக் கேட்டினைத் தந்ததை அறியலாம்.

 

     இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவத்திற்கு ஏற்ப வகுக்கப்பட்டன. ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

 

     ஏழாம் நூற்றாண்டில் இருந்த சமணர் இந்த நெறியை விடுவித்து, நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர். திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர். "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?.  தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர்.  இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர்.

 

         பாண்டி நாட்டை சமணக் காடு மூடவே, கூன் பாண்டியனும் அவ் வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும், மந்திரியாகிய குலச்சிறையாரும் மனம் மிக வருந்தி, என்று பாண்டியன் நல்வழிப்படுவான் என்று இருக்கும் காலத்தில், திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமறைக்காடு என்னும் தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து,  அவ் இருவரும் விடுத்த ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். பிள்ளையார் அவர்க்கு விடை தந்து பின்னர்த் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மதுரை அடைந்தார். அச் செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இரவு நேரத்தில் தீயிட்டார்கள். பிள்ளையார் அத் தீயை, "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப் பற்றியது. அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள் எல்லாம் நோயை வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வருவிக்க அவர் சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை வாதுக்கு அழைத்து அனல்வாதம், புனல்வாதங்களில் தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

வெள்ளி கொடுத்தல் விலக்கி,விழி தோற்று உலகில்

எள்ளல் உற்றான் அன்றோ? இரங்கேசா! - உள்ளத்து

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியுங் கேடீன் பது.

 

இதன் பதவுரை --- 

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! வெள்ளி --- சுக்கிரன், கொடுத்தல் விலக்கி --- மாபலிச் சக்கரவர்த்தி திருமாலுக்குக் கொடுப்பதைத் தடுத்து, விழி தோற்று --- கண் இழந்து, எள்ளல் உற்றான் அன்றோ --- இகழ்ச்சி அடைந்தான் அல்லவா, (ஆகையால், இது) உள்ளத்து --- மனத்தில், அழுக்காறு உடையார்க்கு --- பொறாமை உடையவர்களுக்கு, ஒன்னார் --- பகைவர்கள், வழுக்கியும் --- கேடு செய்யத் தவறினாலும், கேடு ஈன்பது --- கேட்டைத் தருவதாகிய, அது சாலும் --- அப் பொறாமையாகிய பகையே போதுமானது (வேறு பகை வேண்டியதில்லை என்பதை விளக்குகின்றது).

 

         கருத்துரை ---  பொறாமை உடையவர்கள் (பகைவர் இன்றியும்) தாமே கெடுவார்கள்.

 

         விளக்கவுரை --- மாபலிச் சக்கரவர்த்தி, மேல் நடு கீழ் என்னும் மூவுலகங்களையும் தன் வசப்படுத்தி ஆளுகையில், அருமையான யாகம் முடித்து வேதியர்களுக்கு அவ் உலகங்களைத் தானம் செய்வானாயினான். அதனால் தங்களுக்கு இருக்க இடம் இல்லாமல் போகும் என்று உணர்ந்த தேவர்கள், அவன் கொடுமையைப் பொறாமல், அதினின்றும் விடுவிக்கும்படி திருமாலை வேண்டிக் கொண்டார்கள். பிரகலாதனனுக்குக் கொடுத்திருந்த வரத்தின்படி திருமால், மாபலியை நேரில் சென்று கொல்லக் கூடாதாகையால், அவன் செய்யும் பூதானத்தாலேயே அவனைக் கொல்ல எண்ணி. ஒரு வேதியச் சிறு குறளாய் (அந்தணச் சிறுவனாக) வடிவெடுத்துப் பூதானம் வாங்க அவனிடத்தில் போய்த் தமது சிற்றடியால் மூவடி மண் தானம் கேட்டார். மாயவன் மாயம் உணராத மாபலி, அதற்கு உடன்பட்டுக் கரக நீரைத் தாரை வார்க்கப் போனான். அது தெரிந்த சுக்கிரன் (மாபலியின் குலகுரு) கரகநீர் ஒழுக்கத்தைத் தடுக்க எண்ணி, வண்டாய் வடிவெடுத்து, நீர்த் துவாரத்தை அடைத்தான். அது கண்ட மாயவன் ஒரு சிறு துரும்பு எடுத்துக் குத்தினான். அதனால் சுக்கிரனுக்குக் கண் குருடாயிற்று. அது கண்ட தேவர்கள் சுக்கிரனை நோக்கி, "ஏ சுக்கிராசாரி, பொட்டைக் கண்ணா, கொடுத்ததைத் தடுத்த குருடா" என்று இகழ ஆரம்பித்தார்கள். அதுவே இங்குக் குறிக்கப்பட்டது.

                                                              

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

அழுக்கு அகலா அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடு ஈன்பது  எனலால் என் மனத்து அழுக்காற்று

இழுக்கு அறுதற்கு உன் இணையடி ஏத்தி இறைஞ்சுதற்கு

முழுக்கதி எய்துதற்கு என்றோ தினம், புல்லை முன்னவனே.

 

இதன் பொருள் ---

 

     திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் முதற்பொருளே! குற்றம் நீங்காத பொறாமைக் குணம் உடையவருக்கு, கேடு விளைவித்தற்கு அதுவே போதும், பகைவர் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருத்தலால், எனது மனத்திலே பொறாமை என்னும் குற்றம் நீங்கவேண்டி, உனது திருவடியை வழிபடுவதற்கும், பரிபூரண கதியாகிய வீடு பேற்றை அடைவதற்கும் ஏற்ற நாள் என்று வருமோ?

 

     அழுக்கு அகலா --- குற்றம் நீங்காத. அழுக்காறு --- பொறைமையின்.  இழுக்கு அறுதற்கு --- குற்றம் நீங்குதற்கு.  முழுக்கதி --- வீடுபேறு.

 

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்.

                               

 

மாங்கனி வாயில் கவ்வி

             மரத்திடை இருக்கும் மந்தி,

பாங்கர் நீர் நிழலை வேறு ஓர்

             பழம் உணும் குரங்கு என்று எண்ணித்

தாங்க அரும் அவாவில் தாவிச்

             சலத்திடை இறந்தது ஒப்ப,

நீங்க அரும் பொறாமை உள்ளோர்

             நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே. --- நீதிநூல்.

 

 இதன் பொருள் ---

 

     குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு மரத்திடை இருந்தது. பக்கத்து நீரில் அதன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து இறந்தது. இதைப் போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடு அடைவார்கள்.

 

 

அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்

கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று

தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்

கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை என்றான். --- கம்பராமாயணம், வேள்விப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     தீராத பழி வந்து சேரும்படி செய்தவர்களும் ஒருவருக்குப் பகைவர் ஆகமாட்டார். உண்மையான பகைவர் யார் என்று என்றால், பிறருக்குத் தானம் கொடுப்பவர் முன் நின்று, "கொடுக்காதே" என்று கூறித் தடுப்பவரே, கொடுப்பவர்களுக்குப் பகைவர் ஆவார். அவ்வாறு தடுப்பவர்கள் தம்மைத் தாமே பகைத்துக் கொள்பவர் ஆவார். எனவே, கொடுப்பதைத் தடுப்பதைப் போல ஒரு தீய செயல் வேறு இல்லை என்று மாபலிச் சக்கரவர்த்தி, தனது குருவாகிய சுக்கிராசாரியாருக்குச் சொன்னான்.

 

    

 


தீயோர் நட்பை விடுதலே பெரும் பாக்கியம்

 

தீயோர் நட்பை விடுதலே பெரும் பாக்கியம்

---

 

     "நட்பு ஆராய்தல்" என்னும் அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவரிடம் கொண்ட நட்பை விட்டுவிடுதலே ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     மூங்கில் காடு பற்றி எரியும்போது, அந்தக் காட்டில் உள்ள சநத்ன மரமும், வேங்கை மரமும் முதலானவைகள் வெந்து அழிவது போல, தீயவனுடன் கொண்ட நட்பால் தானும் அழியவேண்டி வரும். எனவே, அந்த நட்பை விட்டொழிக்கவேண்டும். அதுவே ஒருவன் பெறுகின்ற பாக்கியம் ஆக அமையும்.

 

"ஊதியம் என்பது ஒருவற்கு, பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்".  

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.             

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல். சென்னையின் ஒரு பகுதியா, "கொளத்தூர்" என்று இப்போது வழங்கப்பட்டு வரும், "குளத்தூர்" என்னும் பகுதியில் திருக்கோயில் கொண்டு இருக்கும், அமுதாம்பிகை உடனாய சோமேசப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராக வைத்து, திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடப்பட்ட நூல் இது ஆகும்.

 

"போற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்துஅகன்றான்

தோற்றுஇறைவி தும்மிடவும், சோமேசா! - ஏற்றதே

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்".

 

         துன்மார்க்கத்தில் செல்வதைத் தடுத்தும், நன்மார்க்கத்தில் செலுத்தியும், விதிவலியால் கேடு சம்பவித்தால் அதனைப் பகிர்ந்து அனுபவித்தும், உடம்புகளுக்கு ஒழிவு வந்தாலன்றி உயிர்களுக்குள் வேறுபாடு தோன்றாமல், அகமுகத்தால் ஒற்றுமைப்பட்டு, அரிய நூல்களை ஆராயும்தோறும் விளையும் இன்பம் போல மிக்க இன்பம் நாளாவண்ணம் பழகுந்தோறும் வளரும்படி சிநேகிப்பதே சிநேகத்துக்கு இலக்கணம் ஆகும்.

 

இதன் பொருள்---

 

         சோமேசா! ஒருவற்கு ஊதியம் என்பது --- ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் --- அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.

 

         போற்றும் சிசீலன் --- யாவரானும் போற்றித் துதிக்கப்பெறும் சுசீலன் என்னும் அந்தணன், தோற்று இறைவி தும்மிடவும் --- அவனைத் தடுத்தற்கேற்ற புத்தி தோன்றிய அரசி தும்மலைச் செய்யவும், புய பெலன் நீத்து அகன்றான் --- வங்கதேசத்து அரசனாகிய புயபலன் என்பவனை நீங்கிச் சென்றான் ஆகலான், ஏற்றதே --- அது அவனுக்குத் தக்கதே என்றவாறு.

 

         ஊதியம் --- இலாபம், பேறு. ஒன்றைப் பெறுவதால் உண்டாவது பேறு. அது ஊதியம். இங்கே பொல்லாதார் நட்பை விடுதலே ஊதியம் என்றார்.

 

         வங்கதேயத்து அரசனாகிய புயபலன் என்பான் முறை கோடாது அரசு செலுத்தும் நாளில், ஓராண்டு உத்தராயண புண்ணிய காலம் வர, அற்றை நாள் அந்தணர்க்குத் தானம் செய்ய எண்ணி அறிவித்தான். அதனைக் கேள்வியுற்ற சுசீலன் என்னும் பிராமணோத்தமன் விதர்ப்ப நாட்டினின்றும் அங்கு வர,  மற்றைப் பிராமணர்கள் யாவரும் அவனைக் கண்டு போற்றி அழைத்துச் சென்று அரசற்கு அவன் பெருமை கூறி, "முன்னர் அவற்கே தானம் செய்க" என்றார்கள். அரசன் மகிழ்ந்து தானம் வழங்கும்போது, சுசீலன் அவன் முகம் நோக்கி விபூதியில்லாமை கண்டு, "விபூதி அணியாயாயின் தானம் கொள்ள மாட்டேன்" என மறுத்தும்,

 

"செய்யதிரு நீறுதொட்டுத் தரியாதார்

         பெரும்செல்வம் சிதையும், மன்னர்

கொய்யுளைய பரித்திரளும் கரித்திரளும்

         மறுமன்னர் கொள்வர், வேட்ட,

தையல் ஒழிந்து, அருமகவு தணந்து

         பெரும் பிணியுடனாய்ச் சரிப்பர், அன்றி,

மெய்யின் உறுப்புக் குறைந்து

         புலையரினும் கடைப்பிறவி மேவுவாரால்"

 

என அவ்வாறு கொள்வதால் உண்டாகும் விளைவும் கூறியும், அரசன் ஓரே பிடிவாதமாய் விபூதி தரித்தற்கு இசையவில்லை. சுசீலன் உடன் எழ, அதுகண்ட அரசன் தேவி தனது நாசித் தொளையில் ஒரு துரும்பு திருகித் தும்மி, "இது தடை, நிற்க" என்று கூறினாள். மறையவன் அவ்வுரை செவி ஏலாது தன் நாடு சென்றான். பின்னர் அவன் கூறியவாறே அரசன் செல்வம் சிதைந்து நாடிழந்து, காடு புகுந்து, மனைவி ஒழிந்து, மகவு தணந்து, குட்டநோய் பெற்று உறுப்பு அரியுண்டு கிடக்கும் நிலையில் அவனைச் சந்தித்து வணங்கி, விபூதி பெற்றுப் பழைய நிலைமை அடைந்தான்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பின் வரும் பாடல்கள் அமைந்துள்ளமை காண்க...

                 

மனத்தான் மறுவு இலரேனும், தாம் சேர்ந்த

இனத்தால் இகழப்படுவர்; --- புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,

எறிபுனம் தீப்பட்டக் கால்.            --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

         தம்முடைய மனத்தளவில் குற்றம் அற்றவர் என்றாலும், தாம் சேர்ந்த தீயோர் சேர்க்கையால், பெரியோரும் கூடப் பழிக்கு ஆளாவர். எப்படி என்றால், காட்டிலே தீப்பற்றிக் கொண்டால், வாசம் மிகுந்த சந்தன மரமும் வெறும் வேங்கை ம,த்தோடு வெந்து கரியாகிப் போகும் என்பது போல.

 

    

         சான்றோர் மனநலம் நன்கு உடையராயினும், தீயவர் இனத்தின் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர்.

 

        

சந்தனத்தைச் சேர்தருவும் தக்கமணம் கமழும்,

சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற - அந்தவனம்

தானும்அச் சந்தனமும் தன்இனமும் மாள்வதுஅன்றித்

தானும் கெடச்சுடுமோ தான்.         --- நீதிவெண்பா.

 

         சந்தன மரத்தை ஒட்டி வளர்ந்துள்ள மரங்களும் அந்தச் சந்தன மரத்தைப் போல் அதன் சார்பினால் நல்ல மணத்தைப் பரப்பும். ஆனால், அந்தச் சந்தன மரத்தைச் சார்ந்துள்ள மூங்கில்கள் தீப்பற்றிக் கொள்ள, அந்தக் காடு முழுவதும் உள்ள இருவகை மரங்களும் அழிந்துவிடும். அல்லாமலும், நன்மை தரக்கூடிய பலவகை மரங்களைக் கொண்ட அந்த வனமும் பற்றி எரிந்து சாம்பல் ஆகிவிடும்.

 

         நல்லவர்களைச் சார்ந்து இருப்பவர்களில் சிலர், எல்லாருக்கும் நன்மை உண்டாக்கித் தாமும் நல்லவர் ஆவர். ஆனால், அப்படிச் சார்கின்றவர்களில் வேறு சில தீயோர், மற்றவர்களுக்கும் தமக்கும் கேடு தேடிக் கொள்வர். அத்துடன், பல பேருக்கும் நன்மையாய் இருக்கக்கூடிய தம்மைச் சார்ந்த நல்லவர்களையும் கெடுத்து விடுவர்.

 

பாடல் 4

“காளை வடிவுஒழிந்து, கையறவோடு, ஐயுறவாய் நாளும் அணுகி நலியாமுன், பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க் கவிழ்க முகம், கூம்புகஎன் கை.” இதன்...