வீட்டுக்குப் போக எளிய வழி

 


 

வீட்டுக்குப் போக எளிய வழி

-----

 

     வீடு என்பது, அழியாத இன்பநிலையில் உயிர்களை வைக்கின்ற மோட்சத்தைக் குறிக்கும். "வீடு" என்னும் சொல்லுக்கு, விடுகை, விடுதலை, வினைநீக்கம், முடிவு, அழித்தல், வீடுபேறு என்று பொருள்கள் உண்டு. விட வேண்டியதை விட்டு விட்டால், வீடுபேறு நிச்சயம். அது இல்லறத்தில் தொடங்கும் என்பதால், அதற்காக ஒருவன் வாழ்ந்து பயிலும் இடம் "வீடு" எனப்பட்டது. "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என்பது ஆழ்வார் அமுதமொழி. "பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     முருகனை வாழ்த்தி வாழ்கின்ற வாழ்வுதான் கைவரும் தொண்டு என்று சொன்ன அருணகிரிநாதர், அடயோகம் செய்பவர்களைப் பார்த்து இரங்குகிறார். யாரேனும் ஒருவருக்கு ஒரு காரியம் எளிதில் கைவரப் பெற்றால், அதனை முடிப்பதற்கு மிகவும் தொல்லைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, இப்படித் துன்பப்படுவதை விடுத்து,  நான் சொல்வது போல் செய்தால் காரியம் எளிதில் கைகூடிவிடுமே என்று சொல்லத் தோன்றும். அந்த வகையில் இறைவன் திருவருளைப் பெறுவதற்கு, யோகநெறியைக்  கடைப்பிடித்து, அது எளிதில் கைகூடாமல் துன்பப்படுகிறவர்களைப் பார்த்து அருணகிரிநாதர், "இறைவனை எண்ணி உருகி அன்பு செய்யும் வழி இருக்கும்போது இப்படித் துன்பப்படுகிறீர்களே" என்று இரங்குகிறார். 

 

     பத்தியில் ஈடுபட்டுப் படிப்படியாகத் தியானம் செய்து அனுபவத்தில் உயர்ந்தவர்கள் யோக மார்க்கத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவது இல்லை. நாயன்மார்களும், ஆழ்வார்களும் யோகத்தைப் பாராட்டவில்லை. யோகம் செய்வதாக எண்ணிக்கொண்டு, பலர் இடையில் சோரம் போய்விடுகிறார்கள். மனத்தை இறைவனுடைய திருவடியில் வைக்காமல், சுவாசபந்தனம் என்னும் மூச்சடக்கலைச் செய்து, அதனாலேயே எல்லாம் அடைந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். பிறருக்கு அவ்வாறே போதிக்கவும் செய்கிறார்கள். 

 

     யோகமுறை நாம் நினைக்கிறது போல அத்தனை எளிதானது அல்ல. சிலகாலம் அதனைப் பின்பற்றினால் போதாது. இளமை தொடங்கி அதற்கேற்ற வாய்ப்பு வேண்டும். நேற்று வரையிலும் உலக இயலில் ஈடுபட்டுக் கிடக்கிறவன்,தொண்டர் கூட்டத்தில் பயின்று மனம் மாறி நெஞ்சு உருகி அடியவன் ஆகவிடலாம். யோகம் அப்படி வாராது. உடம்பை வளைத்து வித்தை காட்டுகிறவனுக்குக் கூட சிலநாட்களிலேயே அந்தப் பயிற்சி உண்டாகாது. இளமை தொடங்கியே உடம்பை வளைத்தும், நிமிர்த்தியும் உடல் உறுப்புகளைத் தான் நினைத்தபடி இயக்கப் பழக வேண்டும். யோகத்தை எட்டு நிலைகளாகப் பிரிப்பார்கள். அதனால் அட்டாங்க யோகம் என்று பெயர் பெறும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டாகச் சொல்வார்கள்.

 

     யோக மார்க்கத்தில் முதல் படியாக இருப்பது இயமம். தவிர்க்கவேண்டியவைகளைத் தவிர்ப்பது இது. மனிதன் அடிப்படையான பல நல்ல குணங்களோடு இருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. இன்சொல் பேச வேண்டும். எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும். 

 

     மூச்சை அடக்கிக் காயசித்தி பெற்று உடம்பைப் பொன் மயமாக வைத்திருப்பதாகச் சொல்லி, பிறரையும் மயக்குவதற்காக  விளம்பரப்படுத்திக் கொள்வது யோகத்தின் இலக்கணம் அல்ல. உடற்பயிற்சி செய்து வித்தை காண்பிக்கிறவர்களைப் போல வேண்டுமானால், ஆசனம் முதலியவைகளைப் போட்டு காட்டிக் கொண்டிருக்கலாம். சில ஆசனங்களைப் பிராணாயாமத்தோடு பழக்கிக் கொள்ளலாம். அதோடு நின்றுவிட்டவரை யோகம் கைவரப் பெற்றவர் என்று சொல்ல முடியாது. இறைவனிடத்தில் ஈடுபடுகிற அடியவர்கள் எப்படித் தம்மை மறந்து சமாதி நிலையில் இருக்கிறார்களோ, அதுபோல், யோகநிட்டையில் இருப்பவர்கள், முடிந்த முடிவில் அந்த அனுபவத்தைப் பெறுகிறார்கள். ஞானியானாலும், பக்தனானாலும், கர்மயோகியானாலும், அட்டாங்க யோகியானாலும், முடிந்த முடிபாகச் சரீர அபிமானத்தை மறந்து, மேல் நிலையில் உலவுகிற கதியைப் பெற வேண்டும். அதற்குக் கீழே உள்ள படிக்கட்டுகள் பலவகை. அந்தப் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு மிகவும் அரிதாக இருப்பது யோகப் படிக்கட்டு. அந்த யோகப் படிக்கட்டில் ஏறுகிறவன் முதலில் நல்லவனாக இருக்க வேண்டும். அவன் குணம் தூயதாக இருக்க வேண்டும். அதைத் தான் இயமம் என்கிறார்கள். 

 

     நியமம் என்பது வரையறை. இன்ன காரியத்தை இப்படிச் செய்ய வேண்டும், இன்ன உணவு சாப்பிட வேண்டும், இப்படி நீராட வேண்டும் என்று யோகம் செய்பவர்களுக்குச் சில நியதி உண்டு. வாழ்க்கையில் நாம் நியமத்துடன் இருக்க வேண்டும். இயமம் நியமம் ஆகிய இரண்டும் யோகிகளுக்கு மாத்திரம் உள்ளன அல்ல; மனிதனாக உள்ள யாவருக்குமே அந்த இரண்டும் வேண்டும். நல்ல குணங்களும், வரையறையான வாழ்க்கையும் மனிதனுக்கு இன்பம் தரும் என்பதில் ஐயமில்லை. உடம்பை வைத்துக் கொண்டு வாழ்கிற நாம் உடம்பை நோய்க்கு உட்படுத்தாமல் இருக்கச் சில நியமங்களுடன் இருக்க வேண்டும். பேச்சில் வரையறை, உணவில் வரையறை, நீராடுவதில் வரையறை ஆகியவை இருந்தால்தான் இந்த உடம்பை வலியதாக வைத்திருக்க முடியும். மனத்தையும் தெளிவு உடையதாக வைத்திருக்கலாம். இத்தகைய நியமங்களைப் பின்பற்ற வேண்டியது யோகிகளுக்கு மிகவும் அவசியமாகும். தியானம் செய்வதற்கு உட்கார்ந்தால் வயிறு நிரம்பச் சாப்பிட்டவனுக்குத் தூக்கம்தான் வரும். தியானம் கைகூடாது. தேர்வுக்குப் படிக்கும் மாணவன் கூட வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டானானால்,புத்தகத்தைத் தலையணையாக வைத்துத் தூங்கத்தான் செய்வான். ஏதேனும் ஒரு காரியத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கே உணவில் வரையறை வேண்டுமானால், மூச்சை அடக்கி யோகம் செய்பவர்களுக்கு நிச்சயமாக உணவில் வரையறை வேண்டும். தாமச குணம் இல்லாத உணவை உட்கொள்ள வேண்டும்.

 

     நியமத்திற்கு அடுத்த படியாக வருவது ஆசனம். ஆசனம் என்றால் இருக்கை,  உட்காருகிற முறை என்று பொருள். நாம் ஒரிடத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க முடியவில்லை. கால்களைச் சம்மணம் போட்டு உட்காருகிற வழக்கம் வர வர நமக்கு மறந்துவிட்டது. நாற்காலியும்,  கட்டிலும் பிறவும் பயன்படுத்துகிற நாம் தரையில் வெகுநேரம் உட்கார ஆற்றல் இல்லாமல் இருக்கிறோம். நாற்காலியில் அமர்ந்து இருப்பதால், சில நோய்கள் வருகின்றன.  ஆனால், நம் நாட்டுக்கு ஏற்றபடி சம்மணம் போட்டு உட்கார்ந்தால் நோய் எதுவும் வருவது இல்லை. யோக மார்க்கத்தில் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது பத்மாசனம் முதலான சில ஆசனங்களே. இப்பொழுதெல்லாம் ஆசனம் போடத் தெரிந்தவர்களைப் பார்த்து, யோகிஎன்று நாம் நினைக்கிறோம். ஆசனத்தோடு நின்றுவிடுவது யோகம் ஆகாது. பலர் ஆசனப் பயிற்சியைக் காட்டி அதனால் பொருளை ஈட்டுகிறார்கள். உடம்பிலுள்ள உறுப்புகள் நல்ல வகையில் இயங்குவதற்கு மட்டுமே ஆசன வகை பயன்படும். 

 

     நம்முடைய உள்ளம் இறைவனிடத்தில் ஈடுபடுவதற்குச் சுவாச பந்தனம் என்னும் மூச்சடக்கலைச் செய்ய வேண்டுமென்று யோகிகள் கூறுகிறார்கள்.மனம் வாயுவின் அம்சம் உடையது. மூச்சைக் கட்டினால் மனம் சங்கடப்படும். மனம் தொழில் செய்யாமல் இருக்கிற மயக்க நிலை,மூச்சிலே மயக்க மருந்தை ஊட்டினால் உண்டாகிறது. மூச்சுக்கும் மனத்திற்கும் தொடர்பு உண்டு. 

 

     ஆசனத்திற்கு அடுத்தபடி உள்ளது பிராணாயாமம். சுவாசத்தை உள்ளே இழுத்து நிறுத்தி வெளியில் விடுவதுதான் பிராணாயாமம். நாம் இப்போது உள்ளே இழுத்து வெளியில் விடுவதோடு நிற்கிறோம். அதை உள்ளே கும்பிக்க வேண்டும். எவ்வளவு நேரம் உள்ளே இழுக்க வேண்டும், எவ்வளவு நேரம் அடக்க வேண்டும், எவ்வளவு வெளிவிட வேண்டுமென்று யோகத்தில் கணக்கு உண்டு. பிராண ஆயாமத்தை முறையாகச் செய்து, மூலாதாரத்தில் இருக்கும் அக்கினியை மேலே எழுப்புவதற்குரிய வழியில் பயிற்சி செய்பவன் யோகி ஆகிறான். 

 

     மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரம் வரைக்கும் மூன்று நாடிகள் இருக்கின்றன. இடப் புறம் இருப்பதை "இடைகலை" என்றும், வலப்புறம் இருப்பதைப் "பிங்கலை" என்றும், இரண்டிற்கும் நடுவில் இருப்பதைச்  "சுழுமுனை" என்றும் சொல்வார்கள். இடைகலையில் ஒடும்போது சுவாசம் இடப்பக்கம் ஒடும். பிங்கலையில் ஒடும்போது வலப்பக்கத்தில் ஒடும். சுழுமுனையில் சுவாசம் ஒடும்போது இரண்டு பக்கத்திற்கும் சமமாக ஒடும். இரண்டு பக்கத்திலும் சமமாக ஒடும்போதுதான் நம் மனத்தில் தெளிவு உண்டாகும். சுழுமுனை யில் மூச்சு ஓடவேண்டுமானால்,நாம் நினைத்தவுடன் செய்யமுடியாது. சுவாசத்தை இடைகலை பிங்கலை என்று மாற்றி மாற்றிப் பயிற்சி செய்ய வேண்டும். 

 

     இப்படிச் சுழுமுனையில் மூச்சு ஒடப் பழகி பிறகு சுவாச பந்தனம் செய்தால் மூலாதாரத்தில் சூடு எழும். அங்குள்ள மூலாக்கினியை எழுப்ப வேண்டும். மூலாதாரம் முதல் ஆதாரம். அங்கே அக்கினி எழும்பியவுடன் குண்டலினி சக்தி நீண்டு வழிகாட்டும். இந்த யோக மார்க்கத்தைக் குண்டலினி யோகம் என்றும் சொல்வார்கள்.

 

     எட்டு வகையாகச் செய்கிற அட்டாங்க யோகத்தின் இறுதி நிலை சமாதி. அது கைகூடுகிற வரைக்கும் யோகிகள் பயிற்சி செய்துகொண்டு வரவேண்டும். யோக முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு, சமாதி நிலைக்குச் செல்வதற்குரிய வாய்ப்புக் கிடைப்பது இல்லை. சில சமயங்களில் இடையில் சில அதிசயங்கள் அவர்களுக்குப் புலனாகும். சில அற்புதங்கள் செய்கிற ஆற்றல் வரும். அந்த அளவில் நின்று தாம் பெறவேண்டியவற்றைப் பெற்றுக்கொண்டவர் போல அவர்கள் ஏமாந்து போவார்கள். சித்தர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். பெரும்பாலும் ஆசனத்தோடு நின்று, அதைக் காட்டியே தம்மைப் பெரிய சக்தி உள்ளவர்களைப் போல மக்கள் எண்ணிக் கொள்ளும்படி செய்கிறார்கள். எத்தனைதான் யோகம் செய்தாலும் மனம் இறைவனிடத்தில் அன்பு கொண்டிருந்தால் அன்றி அது கைகூடாது. 

 

     அடித்துச் சிங்கத்தை மடக்கலாம் என்றால், அந்தச் சிங்கம் எந்தச் சமயத்தில் தப்பலாம் என்றே எண்ணும். தப்புவதற்கு வழி இருந்தால் தன்னை அடக்குபவனையும் அது கொன்று விடும். அதுபோலத்தான் யோகத்தினால் மனத்தை அடக்குவது. யோகநிலையில் அல்லமால்,  இறைவனிடத்தில் பத்தி செய்து மனத்தை உருகச் செய்து நிறுத்தினால், அது என்றும் மாறாமல் ஒரே நிலையில் இருக்கும். இந்த நாட்டில் யோக நெறியில் போகிறவர்கள் மிகச் சிலர். யோகத்தைப் பற்றிப் பேசுகின்றவர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள். யோக நெறியில் சென்று நோய்வாய்ப்பட்டு உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொண்டு திண்டாடுகிறவர்கள் பலர். யோகம் கைவரப் பெற்றவர்கள் என்று சொல்கிறவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். அவரையும் எளிதில் காண முடியாது. 

 

     அருணகிரிநாத சுவாமிகள் கண்டிப்பது அடயோகத்தை. இந்தக் ஒருவன் ஒரு காரியத்தைப் பிடிவாதமாகச் செய்தால் அவனை 'அடம்' பிடிக்கிறான் என்று சொல்வது வழக்கம். அடயோகத்தைச் சாதிப்பது மிகவும் அரிய காரியம். யோக நெறியின் அங்கமாகிய ஆசனம் செய்கின்ற எல்லோருமே இறைவனிடம் பக்தியோடு இருப்பவகள் என்று சொல்ல முடியாது. யோக நெறியில் செல்கிற எல்லோருமே ஆன்ம இன்பத்தைப் பெறுவார்கள் என்றும் சொல்ல இயலாது. உடம்பைப் பலவகையில் சிரமப்படுத்தி மூச்சை அடக்கி ஒடுக்கிக் கோடியில் ஓரிருவர் முடிந்த முடிபாகிய இன்பத்தைப் பெறுகிறார்கள். அத்தகைய கடுமையான செயலில் பல்லாண்டுகள் முயலாமல், எளிதாக இறைவன் திருவருளைப் பெறலாம் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். 

 

     தாய் மாடியில் நிற்கிறாள். குழந்தை கீழே நிற்கிறது. தாயிடம் செல்ல வேண்டும் என்று எண்ணிச் சின்னக் குழந்தை ஒவ்வொரு படியாக மெல்ல மெல்ல ஏற முற்படுகிறது. ஏறுவதற்குக் காலில் திண்மை வேண்டும். அந்தக் குழந்தை தன் காலைத் தவறி அவசரப்பட்டுக் கீழே வைத்துவிட்டால் உருண்டு உருண்டு கீழே விழநேரும். படியேற வலியில்லாத இல்லாத குழந்தை கீழே இருந்தபடியே அம்மா அம்மா என்று அழுது கொண்டிருக்கும். அப்போது குழந்தையின் அழுகை ஒலியினைக் கேட்டுத் தாய் கீழே இறங்கி வந்து அதை அணைத்துக் கொள்வாள். உடனே இறங்கி வரவில்லையானாலும் குழந்தைக்கு ஆபத்து ஏதும் இல்லை. எப்படியும் தாய் வந்து அணைத்துக் கொள்ளத்தான் போகிறாள்.

அம்மா இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று மாடிப்படி ஏற ஆரம்பித்தால்,ஒழுங்காக ஏறினால்தான் தாய் உள்ள இடத்தை அடையலாம். பெரும்பாலும் அது குழந்தையால் முடிவது இல்லை.  

 

     நாமே பலப்பல படிகளைக் கடந்து ஏறுவது மிகவும் கடினம். அம்மாவைக் கீழே வரும்படியாகச் செய்யக் குழந்தை போல அழுது புலம்பு என்று சொல்வது போல அருணகிரிநாதர் யோகிகளைப் பார்த்துச் சொல்கிறார்.  "அழுதால் உன்னைப் பெறல் ஆமே"  என்றார் மணிவாசகப் பெருமான். அப்படியானால் யோகம் செய்வதே தவறு என்று பொருள் கொள்ளக் கூடாது. யோகம்,செய்வதற்கு அரிதுதான். செய்து முடிக்கலாம் என்று நினைக்கிறவர்கள் அதற்குரிய தகுதிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். தகுதியோடு நம்மை வழி காட்டி அழைத்துச் செல்லும் குருநாதர் வேண்டும். யோகம் செய்யத் தொடங்கும் பலரும் ஆசனத்தோடு வரை கூடச் செல்வதில்லை.  பிரணாயாமம் வரை செல்கிறவர் வெகுசிலர். அதற்குமேல் உள்ள படியை அடைய முயன்று மூச்சுத் திணறி வயிறு வெடித்து இறந்து போகிறவர்கள் சிலர். அதனால்தான்,உயிரின் மீதுள்ள இரக்கத்தால் இந்த யோகநெறியைப் பக்தர்கள் அருளாளர்கள் கண்டிக்கின்றார்கள்.

 

     உடம்பை விரதங்களால் வாட்டுவதையே வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

"வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்

வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி

நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை

பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே". 

 

என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     வீடும் அதற்கு ஏதுவாகிய ஞானமும் பெறவிரும்புவீரானால், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்து கூடுமோ?  திருவலஞ்சுழியை அடைந்து திருஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவது ஒன்றே ஞானத்தைத் தருவதாகும்.

 

     மேலும், தவம் என்பது என்ன என்று அறிவுறுத்த வந்த திருஞானசம்பந்தப் பெருமான், "ஞானசம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே" என்று காட்டினார். அடியார்களின் திருவடிகளை வழிபடுவதே தவம் என்றார்.

 

     கடுமையான தவத்தைப் புரிந்தவர்க்கும் காணமுடியாத பரம்பொருள் எளிதாக வந்து தம்மை ஆட்கொண்ட தன்மையை நினைந்து உருகி, மணிவாசகப் பெருமான், தமக்கு உண்டான அருள் அனுபவத்தைப் பாடி மகிழ்கிறார்.

 

"வான்வந்த தேவர்களும் மால்அயனோடு இந்திரனும் 

கான்நின்று வற்றியும் புற்றுஎழுந்தும் காண்பரிய 

தான்வந்து நாயேனத் தாய்போல் தலையளித்திட்டு, 

ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து, 

தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த 

வான்வந்த வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்" --திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

    வானுலகத்தில் உள்ள தேவர்களும் திருமாலும் பிரமனும் இந்திரனும் காட்டில் பலகாலம் நின்று உணவில்லாமல் உடம்பு வற்றியும்,சுற்றிலும் புற்று எழுந்து நிற்கத் தவம் செய்தும் காண்பதற்கு அரிய இறைவன், அடியேன் இருக்கும் இடத்துக்கு வந்து,நாய் போல இழிந்த அடியேனைத் தாயைப் போலச் சிறந்த அன்பு காட்டி, என் உடம்புக்குள் புகுந்து, என் மயிர்க்கால்களுக்கு உள்ளே உயிரைப் புகுத்தி அவை புளகம் போர்க்கச் செய்து, தேனின் சுவை வரவும், தெளிந்த அமுதத்தின் சுவையும் ஒளியும் வரவும் செய்த,தம்மைப் போற்றினவர்களுக்கு இன்பம் வரும்படி செய்யும் பெருமையை உடைய நீண்ட திருவடியை, அம்மானை ஆடும் பெண்ணே, நாம் பாடுவோமாக!".

 

"ஊன் வாட உண்ணாது,உயிர் காவல் இட்டு

      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து,

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா;

      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்!

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே

      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்

தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே! 

 

என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். உடலை வருத்தித் தவம் செய்யவேண்டாம். தில்லைச் சித்திரகூடத்தைச் சென்று வழிபடுங்கள், இமையோர் உலகை ஆளலாம் என்கின்றார் ஆழ்வார்.   

 

"துருத்தி எனும்படி கும்பித்து,வாயுவைச் சுற்றிமுறித்து 

அருத்தி,உடம்பை ஒறுக்கில் என் ஆம்? சிவயோகம் என்னும் 

குருத்தை அறிந்து,முகம் ஆறு உடைக் குருநாதன் சொன்ன 

கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர், முத்தி கைகண்டதே"

 

என்று யோகிகளை நோக்கி அருணகிரிநாதர் சொன்ன பாட்டைப் பார்த்தோம். இப்போது வேறு வகையில் யோகத்தில் முயல்பவர்களைப் பார்த்துக் கூறுகிறார்.

 

     யோகம் என்பது ஞானத்தை அடைவதற்கு உரிய படிநிலைகளில் ஒன்றுதான். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிகளில் மூன்றாவது படியாக இருப்பது யோகம். யோகத்தின் முடிவில் ஞானம் வர வேண்டும். யோகத்தினால் உடம்பில் உண்டாகிற தடை முறியுமே ஒழிய,இறைவன் திருவருள் நேராகக் கைகூடாது. அந்த மூன்றாவது படியிலேயே அத்தகைய துன்பம் என்றால், அதற்குமேல் ஞானத்தை எப்படி அடைய முடியும்?  யோகத்தை மாத்திரம் நம்பிக் கொண்டு வாழ்ந்தால் உடம்புக்கும் உள்ளதிற்கும் கேடு. ஒரளவு அதில் வெற்றி பெற்றுவிட்டாலோ அகந்தை தலைக்கேறி விடும். 

 

     யோகமுயற்சியினால் மட்டுமே இறைவன் இருக்கும் இடத்திற்குப் போய் அவன் திருவடியைச் சார்ந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். காலில் பலமுடைய குழந்தைகளாக எண்ணி,இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள். காலில் திண்மை இல்லாவிட்டாலும், மனத்தில் திண்மை இல்லாவிட்டாலும் தடுக்கி விழ நேரும். அப்போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடலாம். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடனே தாய் எத்தனை வேலை இருந்தாலும், தான் எந்த இடத்தில் இருந்தாலும், வேலைகளை எல்லாம் விட்டுவிட்டுக் குழந்தை உள்ள இடத்திற்கு ஓடிவந்து வாரி அணைத்துக் கொள்வாள். அப்படி இறைவன் தன்னை நினைந்து புலம்புகிற அடியவரைக் காப்பாற்ற நிச்சயம் வருவான். குழந்தையாகி நாம் அவனை நினைந்து அழுதால், நாம் இருக்கும் இடத்திற்கே அவனை வரவழைத்துவிடலாம். அது எளிய காரியம். 

 

     மோட்ச வீட்டில் புகுவதற்காக மிகவும் அரிய காரியத்தைச் செய்கின்ற யோகிகளைப் பார்த்து, பத்திநெறியில் நின்றால் வீட்டில் புகுதல் மிக எளிது என்கிறார். பத்திநெறியில் நிற்கவேண்டுமானால், தவிர்க்க வேண்டியது ஒன்று மட்டுமே உண்டு. முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயலக் கூடாது.

 

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 

பத்திநெறி அறிவித்து, பழவினைகள் பாறும் வண்ணம்,

சித்தபலம் அறுவித்து, சிவம் ஆக்கி, என்னை ஆண்ட

அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே"

 

என்று மணிவாசகப் பெருமான் பாடியருளியதை உள்ளத்தில் உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும்.

 

     காட்டிலே வாழ்ந்திருந்த குறத்தியாகிய வள்ளியம்மை, தான் வளர்ந்த குறவர் குலத்திற்கு ஏற்ற வகையில் முருகனை உள்ளத்தில் வைத்துப் பக்தி பண்ணினாள். அவள் இந்திரிய நிக்கிரகம் செய்ய வில்லை. தவம் செய்யவில்லை. குலத்திற்கு ஏற்ற முறையில் முருகனை நினைந்து மனத்திற்குள் அன்பை வளர்க்கும் காரியத்தைத் தான் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு யோகம் தெரியாது. தவமுறைகளைத் தெரிந்த குலத்தில் அவள் வளரவில்லை. வேட்டுவ குலத்தைச் சார்ந்து, புன்செய்த் தானியமாகிய தினை முதலியவற்றைக் காப்பாற்றுவதற்காகக் கிளி ஒட்டிக் கொண்டிருந்தாள். ஒன்று மாத்திரம் அவளுக்குத் தெரியும். தன் குலத்திற்குத் தனித் தெய்வமாக இருப்பவன் முருகன் என்பதை நன்றாக உணர்ந்தும் நம்பியும் இருந்தாள். முருகனை எவ்வாறு வழிபடுவது என்னும் முறை அவளுக்குத் தெரியாது. குழந்தை தன் தாயை நினைந்திருப்பது போல எல்லாக் காலத்தும் முருகனை நினைந்திருக்க அவளுக்குத் தெரியும். கருத்தை முருகனிடத்தில் வைத்தபடி, காட்டில் குறத்தியாகத் தினைக் கொல்லையைக் காவல் செய்து வந்தாள். இறைவன் திருவருளுக்குப் பாத்திரம் ஆவதற்கு என்ன என்ன பயிற்சி வேண்டுமென்று சொல்லப்பட்டு உள்ளதோ, அவற்றில் ஒன்றுகூட எம்பிராட்டி செய்யவில்லை. அவள் ஆசனம் பயிலவில்லை. ஆனால், தனது உள்ளத்தை இறைவன் இருக்கத் தகுந்த ஆசனமாக மாற்றி இருந்தாள். 

 

     அந்த ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு முருகப் பெருமான் அவளைத் தேடிக் கொண்டு ஓடி வந்தான். தன்னை உள்ளத் தாமரையில் வைத்து உண்மையாக வழிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய நிலையைப் பாராமல் தானே வலிய வந்து ஆட்கொள்வான் முருகன் என்பதைக் காட்டுவதற்காகவே அந்தத் திருவிளையாடல் நிகழ்ந்தது. "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில்வீரனே" என்று முருகனின் பெருங்கருணையைப் போற்றிப் பாடினார் அருணகிரிநாதர். 

 

     வள்ளிநாயகியின் நிலையில் இருக்கிற நம்மைப் போன்றவர்களுக்கும்,தனது கருணை கிடைக்கும் என்பதைப் புலப்படுத்துவதே எம்பெருமான் புரிந்த அந்தத் திருவிளையாடல். அவனை அன்றி வேறு ஒன்றையும் நினையாமல் இருந்தால், அவன் நம்மையும் வந்து ஆட்கொள்வான். காட்டில் இருந்த குறத்தியாகிய வள்ளி நாயகியைப் போல, பெரும் கருணையை உடைய பெருமானாகிய முருகன் திருவடியில் கருத்தை வைத்தால்,அவன் தானாக வந்து நம்மை ஆட்கொண்டு அருள் புரிவான்.

 

     முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கும் இடத்தில் கமழும் திருவடி அது. ஆனாலும் அடியார்கள் தலையிலும், உள்ளத்திலும் அது வந்துவிடும். அவர்களை ஆட்கொள்வதற்காக அவர்கள் நடமாடும் இடத்தில் வந்து விடும். வள்ளிநாயகியை ஆட்கொள்வதற்காக, "சுனையோடு அருவித் துறையோடு பசுந் தினையோடு இதணோடு திரிந்தவனே" என்று கந்தர் அனுபூதியில் பாடுகிறார். வள்ளிநாயகி சுனைக்குப் பக்கத்தில் இருக்கிறாளா, அருவியில் நீராடுகிறாளா என்று தேடித் திரிந்து, தினைப் புனத்தில் பரண் (இதண்) மீது காவல் கொண்டு இருந்த பெருமாட்டியைக் கண்டானாம் முருகன்.

 

     "கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி,  நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி" என்றார் மணிவாசகப் பெருமான். தேவர்களுக்கு எல்லாம் அரியவன் ஆக இருக்கின்ற பெருமான், அடியவர்களை எளிவந்து இரங்கி ஆட்கொண்டு அருள்புரிகின்றான். பெருங்கருணை மிகுதியினால், அடியவர்களைத் தேடி வந்து ஆட்கொள்ளுகின்ற இறைவனை, அன்பு மிகுதியால் வழிபட்டு வந்தால், எளிதில் வீட்டின்பத்தைப் பெற்று விடலாம். எளிதான இந்த வழி இருக்கவும், உடம்பைப் பலவகையிலும் வருத்தி, உணவை வெறுத்து, யோகம் கைகூடுவதற்குத் திண்டாடுகின்றவர்கள் மீது கருணை நோக்கம் வைத்து, தான் பெற்ற இன்பத்தை அவர்களும் பெறுதல் வேண்டும் என்று வழிகாட்டுகிறார்.

 

     வீடு என்பது எந்த வழியில் சென்றாலும் ஒன்றுதான். அதன் உள்ளே நுழைந்தவர்களுக்குள் வேறுபாடு இல்லை. அந்த வீட்டுக்குள் நுழைவதற்குப் பல கதவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் கதவு உண்டு. ஆனால் ஒவ்வொரு கதவுக்கும் நேரே ஒவ்வொரு வகையான பாதை இருக்கிறது.  உண்மையில் மற்ற நெறிகளை எல்லாம்விடப் பக்தி நெறி, செல்லும்போதே இன்பத்தைத் தருவது. முத்தி என்று தனியே ஒர் இன்பம் இருக்கிறதென்றும், பக்தி நெறியினாலே அடைவதற்கு உரியது அது என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் பத்தி நெறியில் சென்றவர்கள் அப்படிச் சொல்வது இல்லை. பக்தியே முத்தி இன்பம் ஆகிவிடும் என்பது அவர்கள் கொள்கை. "இறவாத இன்ப அன்பு" என்றார் சேக்கிழார். இவ்வளவு எளிதான வழி ஒன்று இருக்கும்போது, அரியவற்றுள் எல்லாம் அரிதான யோக நெறியில் சென்று மாட்டிக் கொண்டு வாடவேண்டாம் என்பதே அருணகிரிநாதருடைய கருத்து.

 

"காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்,

வீட்டில் புகுதல் மிக எளிதே; விழி நாசி வைத்து

மூட்டிக் கபால மூலாதார நேர்அண்ட மூச்சை உள்ளே 

ஒட்டிப் பிடித்து, எங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே".    --- கந்தர் அலங்காரம்.

 

இதன் பொருள் ---

 

     கண் பார்வையை நாசியின் நுனியில் வைத்து, மூலக்கனலை மூள்வித்து, கபாலத்திற்கும் மூலாதாரத்திற்கும் நேரே பொருந்துமாறு சுவாசத்தை உள்ளிடத்தே உலாவுமாறு செய்து, அந்தப் பிராணவாயு வேறு எங்கும் ஓடிவிடாதபடி பிடித்து சாதிகம் செய்கின்ற யோகநெறியில் நின்றவர்களே! காட்டில் வாழுகின்ற வள்ளிநாயகியின் நலைவர் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடித் தாமரைகளில் உள்ளத்தைச் செலுத்தினால், முத்தி உலகில் செல்லுதல் மிகவும் எளிமையான காரியம் ஆகும்.

 

 

 

 

சிவயோகமும் அவயோகமும்

 


சிவயோகமும் அவயோகமும்

-----

     "சிவம்" என்னும் சொல் ஒரு தெய்வத்தைக் குறித்ததாக இருந்தாலும், அதன் உண்மையான பொருள், மங்கலம், உயர்வு, களிப்பு, நன்மை, முத்தி, கடவுளின் அருவுரு நிலை, முத்தி ஆகியவை ஆகும். "யோகம்" என்னும் சொல்லுக்கு, சேர்க்கை, புணர்ச்சி, கூட்டம், நற்பேறு, ஊக்கம், உயல்ச்சி, தகுதி வழி, சூத்திரம் ஆகிய பொருள்கள் உண்டு. "அவம்" என்னும் சொல்லுக்கு, வீண், பயனின்மை, கேடு என்று பொருள் உண்டு. இதிலிருந்தே சிவயோகம் என்பது என்ன? அவயோகம் என்பது என்ன? என்று விளங்கி இருக்கும்.

 

     இறைவன் திருவருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்கும் மக்களைப் பார்த்துப் பெரியவர்கள் இரங்குவது வழக்கம். திருவருளைப் பெருகின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற மக்களிடத்தில் அருணகிரிநாதருக்கு இரக்கம் தோன்றுகிறது. திருவருளில் ஈடுபட்டு இன்பம் பெறுவதற்குரிய வாய்ப்பு மனிதனுக்கு இருக்கும்போது, சரியான வழியில் போகாமல்,கோணல் வழிகளில் சென்று துன்பத்தைத் தேடிக் கொள்ளுகிறவர்களைப் பார்த்து அனுதாபம் பிறக்கிறது. 

 

     உயிர்கள் தன் திருவருளைப் பெற்று உய்வு பெறவேண்டும் என்பதற்காகவே இந்த உடம்பையும், இந்த உடம்பில் கருவி கரணங்களையும் நாம் வாழ்வதற்கு உரிய உலகத்தையும், இதில் பலவகையான போகங்களையும் இறைவன் அருளியிருக்கிறான். இவற்றை வைத்துக் கொண்டு நல்ல முறையில் வாழ்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் யாவுமே இறைவன் திருவருளை அடைவதற்குக் காரணமானவை என்று சொல்ல முடியாது. அறியாமை காரணமாக நம்பாதவர்களை நம்பி, தெளிவு இல்லாததனால் பயன் இல்லாத துறைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு பொருளைப் பெறவேண்டும் என்று விரும்புவது தவறு அல்ல. ஆனால்,அந்தப் பொருளைப் பெறுவதற்குரிய முறையான வழி இன்னது என்று தெரிந்து கொண்டே முயற்சி செய்ய வேண்டும். 

 

     மருத்துவர் நமது நோயை அறிந்து மருந்து கொடுக்கிறார். இன்ன பத்தியம் இருக்க வேண்டும் என்பதையும் அவர் அறிவிக்கிறார். மருந்தை மாத்திரம் குறிப்பிட்ட காலத்தில் உட்கொண்டு, பத்தியத்தை மேற்கொள்ளாமல் இருந்தால் நோய் போகாது. மருத்துவர் சொன்ன இரண்டையுமே நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல, இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்குரிய சாதனங்களை, பெருமக்கள் சொன்னபடி கடைப்பிடித்து வருதல் வேண்டும்.

 

     ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு,சுருதி, உத்தி, அனுபவம் என மூன்று முறைகள் உண்டு. சுருதி என்பது பெரியவர்கள் அருளிய நூல்கள். உத்தி என்பது, நம் பகுத்தறிவினாலும், பெரியவர்கள் சொல்வதைக் கேட்பதனாலும்அறிந்து தெளிவது. யுக்தி என்று வடமொழியில் சொல்லப்படும். அனுபவம் என்பது நம் வாழ்க்கையில் நாமே தெரிந்து கொள்வது. இந்த மூன்றில் இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு நமது உத்தி பயன்படுவது இல்லை. நமக்கு அனுபவமும் இல்லை. ஆகையால், அவன் திருவருள் அனுபவத்தைப் பெற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டும். அவர்கள் நூல் வடிவில் சொல்லி வைத்துச் சென்று இருக்கிறார்கள். எல்லா நூல்களையும், எல்லோரும் படித்துப் பயன்பெற முடியாது. பொதுவாக, நூல்களைப் படிப்பதற்கு முன்னால் இந்த நூல்களைப் படிப்பதற்குத் தக்கவர் இன்னார் என்ற வரையறை உண்டு. 

 

"தடுமாற்றம் அஞ்சுவான், தன்னை உவர்ப்பான்,

வடுமாற்றம் அஞ்சித் தற் காப்பான்-படும்ஆற்றால்

ஒப்புரவு செய்து ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன்

தக்கான் தரும உரைக்கு".

 

என்று "அறநெறிச்சாரம்" என்னும் நூல் கூறுகிறது.

 

இதன் பொருள் ---

 

     தன் சோர்வுபடுதலுக்கு அஞ்சுபவனும்,  பிறர் தன்னைப் புகழுங்கால் அதனை வெறுப்பவனும், பழி வராமல் தன்னைக் காத்துக்கொள்பவனும், தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்து, அந்நிலையில் பெரியோர்பால் உறுதி மொழிகளைக் கேட்டு அதன்வழி நிற்பவனுமாகிய ஒருவன், அறநூல் கேட்டற்கு உரியவனாவான்.

 

     மருத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியவன் சோதிட நூலைப் படித்துப் பயன் இல்லை. யோகத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவன் காமசாத்திரத்தைப் படித்துப் பயன் இல்லை. நூல் நல்லதாக இருந்தாலும் அதனைத் தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் படித்தால், அவர்களுக்குத் தீய பயனே உண்டாகும். நூல் அறிவு மட்டுமே நமக்கு அனுபவத்தை உண்டாக்குவதில்லை. அவை காட்டும் வழியில் சென்று அனுபவத்தை ஊட்டுவதற்கு உரிய குருநாதனைத் தேடித் தலைப்பட வேண்டும். 

 

     ஊரில் உள்ள ஒருவரைக் காண வேண்டும் என்று போகிறோம். அந்த ஊர் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, அவர் உள்ள தெருவைத் தெரிந்து கொண்டு, அந்தத் தெருவில் அவர் வாழும் வீட்டைத் தெரிந்து கொண்டு, அவர் பெயர் முதலியவற்றைத் தெரிந்து கொள்கிறோம். ஊருக்குச் சென்று, தெருவைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டையும் அடைந்து விடுகிறோம். ஆனால், அந்த வீட்டுக்குள் போகவேண்டும் என்றால் வீட்டுக்குள்ளே இருப்பவர் கதவைத் திறந்தால் மட்டுமே முடியும். வீட்டுக்கு வரும் வரைக்கும் நம்முடைய முயற்சி பயன்படுகிறது. அதற்கு அப்பால் நம் முயற்சி மாத்திரம் இருந்தால் போதாது. வீட்டுக்கு உடையவன் கதவைத் திறந்து வரவேற்க வேண்டும். 

 

     கதவைத் திறந்து வரவேற்பவரே குரு. இறைவன் திருவருளை அடைவதற்கு முன்பு, சரியை முதலிய படி நிலைகளைக் கடந்து செல்கிறோம். அப்படிச் செய்தால், நல்ல குருநாதனுடைய காட்சி கிடைக்கும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றைத் தரிசிப்பதும் குருநாதனுடைய அருளைப் பெறுவதற்காகத் தான். "மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கு, வார்த்த சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே"என்றார் தாயுமான அடிகாளர். திருத்தல யாத்திரையின் குறிக்கோள் நல்ல குருவை அடைவதுதான்.

 

     குருநாதன் நம்பால் கருணை கூர்ந்து, தாழ்ப்பாளைத் திறக்க வரும் சமயத்தில் சென்றால் உள்ளே நுழையலாம். அல்லது கதவு திறக்கும் மட்டும் காத்து இருக்க வேண்டும். நம்முடைய முயற்சியோடு குருநாதனுடைய கருணையும் சேர்ந்தால்தான், நமக்கு நல்ல பயன் உண்டாகும். குருநாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருத்திக் கொண்டால் முத்தி கைகண்ட ஒன்றாகும் என்கிறார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     அருணகிரிநாதர் யோகம் பயில்பவர்களைக் கடிந்து கொள்கிறார். யோகம் நல்லது தானே? எனத் தோன்றும்.  பணம் நல்லதுதான். பணம் இல்லாமல் வாழ முடியாது. ஆனால், அந்தப் பணத்தினால் தீங்கு அடைகிறவர்களைக் கண்டு, பணமே தீங்குதான் என்று சொல்ல முடியாது. யோகம் நல்லது தான். ஆனால், யோகம் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு பலர் தமக்குத் தீங்கு தேடிக்கொள்வதோடு, பிறருக்கும் தீங்கு செய்கிறார்கள். 

 

     "யோகம்" என்ற பொருளுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். பல வகையாகச் சிதறுண்டு போகாமல் மனம் அடங்கி ஒடுங்கி வரவேண்டும். அதுவே யோகம். மனம் ஒருமைப்பட்டு நிற்க, இறைவனோடு ஒன்றுபட வேண்டும்.இதற்காகத் தியானம் முதலியன செய்ய வேண்டும். சரியை, கிரியை, யோகம் என்று மூன்று படிகளைச் சொல்வார்கள். அந்த யோகம் என்பது, ஞானம் என்ற இலட்சியத்தை உடையது. யோகத்திற்கு மேலும் ஞானம் என்ற படி உள்ளது. யோகத்தை முடிந்த முடிபு என்று கொள்ளக்கூடாது. யோகத்தில் மட்டும் முழுப் பயன் அடைய முடியாது. இறைவனுடைய நினைவு இல்லாமல் செய்கிற யோகம் பயன்படாது. அதானல் ஞானமும் உண்டாவதில்லை. யோகத்தைத் தொடங்கும்போது இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்ற நினைவோடுதான் பலர் தொடங்குகிறார்கள். யோகம் செய்வதனால் ஒருவகையான வலிமை உண்டாகும். அதனால் ஒருவகையான இன்பமும் உண்டாகும். அதை அனுபவிக்கும்போது, அதுவே யோகத்தின். பயன் என்று சிலர் ஏமாந்து போகிறார்கள். என்றைக்கும் மாறாத திருவருள் இன்பத்தைப் பெற வேண்டும் என்ற நினைவு அப்போது போய்விடும். 

 

     யோகம் என்ற ஏணியை வைத்துக் கொண்டு இறைவனுடைய திருவருள் இன்பமாகிய இலட்சியத்தை அடைய வேண்டும். அந்த அனுபவம் கிடைப்பதற்கு முன்னால் யோக நிலைகளில் பலவகை அனுபவங்கள் ஏற்படும். சாமானிய மனிதனுக்குக் கிடைக்காத அனுபவங்கள் அவை. யோகத்தில் மாத்திரம் அல்ல. பக்திநெறியிலும் இப்படி இடையிடையே சில உயர்ந்த அனுபவங்கள் கிடைக்கும். அந்த அனுபவங்கள், உலகப் பற்றில் சிக்கி உழலுகின்ற மக்களுக்கு கிடைக்காதவை. ஆனால், அந்த அனுபவங்களை முடிந்த முடிவு என்று கருதி, நாம் மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று ஏமாந்து, அப்படியே நின்றுவிடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மீட்டும் உலக மாயையில் சிக்கிக் கொண்டு தடுமாறிக் கீழே விழுந்துவிடுவார்கள். பல துறவிகளும், யோகிகளும் மிகவும் தீவிரமாகச் சாதகம் செய்வார்கள். அதில் ஏதோ ஒரு நிலை வந்துவிடும். முடிந்த நிலை கிடைத்துவிட்டதாக எண்ணி நின்றுவிடுவார்கள். 

 

     யோகம் என்று நாம் சொல்வது அட்டாங்க யோகமே. அதில் ஒரு பயற்சி மூச்சை அடக்குவது. நம்முடைய உடம்பில், இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்று மூன்று நாடிகள் உள்ளன. இடப்பக்கத்தில் ஒடும் நாடி, இடைகலை;  வலப்பக்கத்தில் உள்ள நாடி பிங்கலை; இரண்டுக்கும் நடுவில் முதுகுத் தண்டின் நடுவிலே செல்வது சுழுமுனை என்ற நாடி. மூக்கில் இடப் பக்கமாக மூச்சு வந்தால் இடைகலையில் மூச்சு ஒடுகிறது. அப்படியே வலப்பக்க மூக்கில் வந்தால் அது பிங்கலை நாடியில் ஒடும். சுழுமுனை என்னும் நடுநாடியில் மூச்சு ஓடினால் இரண்டு மூக்குத் துளைகளில் இருந்தும் ஒரே மாதிரி மூச்சு வரும். இந்த நடுநாடியின் வழியாக மூச்சு வெளிப்பட்டால் மனம் மிகத் தெளிவாக இருக்கும். 

 

     மூச்சுக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டு. மூச்சுப் பிடித்துக் கொண்டிருந்தால் மனம் மயங்குகிறது. மூச்சு வழியாக மயக்கமருந்தைக் கொடுத்தாலும் மனம் மயங்குகிறது. துக்கம் வந்தாலும், கோபம் வந்தாலும் மூச்சு வேகமாக வருகிறது. மூச்சுக் காற்றின் பயிற்சியினால் மனத்தையே மாற்றலாம் என்று யோகிகள் இயல்பாக வரும் மூச்சை மாற்றினார்கள். மூச்சை உள்ளே இழுப்பதற்குப் 'பூரகம்' என்றும், உள்ளே நிறுத்துவதற்குக் 'கும்பகம்' என்றும், வெளியில் விடுவதற்கு 'இரேசகம்' என்றும் பெயர். நாம் மூச்சை விடுவதும், இழுப்பதுமாக இருக்கிறோம். நிறுத்துவது இல்லை. 

 

     மனத்தில் இறைவன் திருவுருவத்தைத் தியானம் பண்ணினால், நம்மை அறியாமல் சுழுமுனை நாடியில் மூச்சு ஒடும். மனம் தெளிவாக இருக்கும். மனம் தெளிவாக இருப்பதுதான் இலட்சியம். குளத்தில் நீர் தெளிவாக இருந்தால், நம் முகத்தின் பிம்பம் நன்றாகத் தெரியும். சிறிய கல் விழுந்து நீர் அசங்கினாலும் முகத்தைப் பார்க்க முடியாது. நீருக்கு அடியில் ஏதேனும் இருந்தால் தெளிவான தண்ணீரில் நன்றாகத் தெரியும். எவ்வளவு ஆழமாக இருந்தாலும் கீழே உள்ள பொருள் தெளிவாகத் தெரியும். குழம்பிய நீரில் கணுக்கால் அளவு கீழே இருக்கிற பொருள்கூடத் தெரியாது. நம் மனம் கவலையினாலும், உலக இயல் வாழ்க்கையில் அடைகின்ற ஆசாபாசங்களினாலும் கலங்கி இருக்கும்போது உள்ளத்தில் இருக்கும் இறைவனை உணர முடியாது. எல்லோருடைய உள்ளத்திலும் இறைவன் அந்தர்யாமியாக இருக்கிறான். நம் மனம் பன்முகப்பட்டுக் குழம்பி இருப்பதால்,அந்தரங்கத்தில் உள்ள இறைவனுடைய திருவுருவம் நமக்குத் தெரிவது இல்லை. அந்தக் கலக்கம் தெளியத் தெளிய இறைவன் திருவுருவமும் தெளிவாகத் தோன்றும். 

 

     மனம் ஒருமுகபட்டுத் தெளிவு பெறவே யோகம். மூச்சை இழுத்து விடுகின்ற பிராணாயாமம் அட்டாங்க யோகத்தின் ஒரு கூறு. பிராணாயாமம் செய்து மனத்தைத் தெளிவுறச் செய்துகொண்டு தியானம் செய்தால், இறைவனுடைய திருவுருவம் மிகத் தெளிவாக மனத்தில் அமையும். 

 

     யோகம் செய்வது தியானம் கைகூடுவதற்குத்தான். இப்போது யோகத்தை ஆசனத்தோடு நிறுத்திவிடுகிறார்கள். ஆசனம் என்பது மேலே இருக்கிற யோக வழிகளுக்குத் துணையாக நிற்பது. அந்த வழிக்குப் போகும் வழியைக் காட்டாமல், இக் காலத்தில் பலரும் உடல் பயிற்சி போலச் சொல்லிக் கொடுக்கிறார்கள். நீரில் மிதந்து காட்டுவதும், குழியில் சில நாட்கள் இருந்து காட்டுவதும் ஆகிய செயல்கள் எல்லாம் செப்பிடுவித்தையைப் போன்ற சாமானியச் செய்கைகள் "அடயோகம்" என்ற வகையைச் சார்ந்தவை. 

 

     அடயோகங்களைச் சாதித்து, இடையிலே வருகின்ற விசேட ஆற்றல்களில் மயங்கி நின்று,உலகத்தாரையும் ஏமாற்றுகின்ற யோகியர்கள் கூட்டத்தை அருணகிரிநாதப் பெருமான் பார்த்து, 'இறைவனுடைய திருவருளைப் பெற முயல்வதை மறந்துவிட்டு, மூச்சை அடக்கி அதனால் வருகின்ற சிறிய இன்பங்களில் மயங்கி, அதோடு நின்று விடுகிறார்களே' என்ற இரக்கம்  உண்டாயிற்று. இறைவனிடத்தில் பக்தி இல்லாவிட்டால் எந்த யோகமும் கைகூடுவது இல்லை. யோகத்தின் பயனே புலனடக்கம் ஆகும். இதனை "நிரோதனம்" வடமொழியில் சொல்வார்கள். புலனடக்கத்தை விட்டு, சிலர் பொன்னுக்கும் பொருளுக்கும், பிற சுகங்களுக்கும் பேராசை கொண்டு எல்லோரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். 

 

     முதலில் யோகம் செய்யும்போது மனத்தை அடக்க வேண்டும் என்றுதான் தொடங்குகிறார்கள். ஆனால், இடையே வருகின்ற சிலவகையான சித்திகளில் அவர்களே மயங்கி விடுவதோடு, பிறரையும் மயக்கம் கொள்ளச் செய்கிறார்கள். சிலர் கோயிலுக்கு அறங்காவலர்களாக, மனத்தில் பத்தி உணர்வோடு, நல்ல தொண்டு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் போவார்கள். போன பிறகு, அங்கே கிடைக்கும் சிறுசிறு பயன்களைக் கண்டு ஏமாந்து போய் இறைவனையே மறந்து விடுவார்கள். அதுபோல "அடயோகம்" பண்ணுகிறவர்கள் மூச்சு அடக்கல், ஆசனம் முதலியவற்றைப் பண்ணும்போது, ஏதோ ஒருவகையான இன்பத்தைப் பெற்று, அந்த அளவில் நின்று, இறைவனையே மறந்து விடுகிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் இந்த உடம்பு மறைந்து போனால், மறைந்து விடுபவை. உடம்பு உரம் உடையதாகவும், மேலும் மேலும் சாதனைகளைத் தருவதற்குரிய வன்மை உடையதாகவும் இருந்தால் போதாது. மனத்தை ஒருமுகப்படுத்தி, அதையும் மாய்க்கும் வகையில் யோகம் கைகொடுக்க வேண்டும். இல்லையானால் யோகம் செய்து பயன் இல்லை.

 

     அதனால்தான், இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கும் அதற்கு வழியாக மனத்தைத் தெளிவு அடையச் செய்வதற்கும் பத்தி என்ற எளிய முறை இருக்கவும், துருத்தியில் காற்றை அடைப்பதைப் போல வாயுவை அடைத்து, அது எந்தத் துவாரத்தின் வழியாக வெளியேறலாம் என்று முட்டிப் பார்க்கும்படி செய்து திண்டாடுகிறார்களே! என்று வருந்துகிறார். 

 

     அருணகிரிநாதர் காலத்தில் இப்படிச் சில யோகிகள் இருந்திருக்கக் கூடும் என்பது அவர் அருளிய திருப்புகழ்ப் பாடல்களின் மூலமாகவும் தெரியவரும். திருப்புகழில் ஒரு பாட்டில் பின்வருமாறு சொல்கிறார். "அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து, வாயு ஓடாத வகை சாதித்து, அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டுயோகி ஆகாமல்......சிவச் சொரூப மாயோகி என ஆள்வாய்"என்று பாடுகிறார். அசட்டுயோகம் கூடாது. சிவயோகம் வேண்டும் என்கிறார்.

 

     பொதுவாக,"யோகம் செய்தால் இந்த உடம்பு சாகாது. நரை திரை போய்விடும்.  மூப்பு நெருங்காது. கண் ஒளி மங்காது. பல காலம் சித்தர்கள் வாழ்கிறார்கள்" என்று சொல்கிறார்கள். மூக்கைப் பிடிக்கிற அனைவருமே சித்தர் ஆகிவிட முடியாது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். இந்த உடம்பு என்றைக்காவது ஒருநாள் நிச்சயமாக மறைந்துவிடும். 

 

     "ஐந்து விதமாகின்ற பூதபேதங்களினால் ஆன யாக்கை, நீர் மேல் குமிழி என நிற்கின்றது" என்பார் தாயுமான அடிகளார். நீர்க் குமிழி எப்போது, எப்படி அழியும் என்பது தெரியாது போலவே, இந்த உடம்பும் எப்போது, எப்படி அழியும் என்பதும் தெரியாது. இதை யோகம் முதலியவற்றாலும், மருந்து மூலிகைகளினாலும் நெடுங்காலம் வாழும்படி செய்யலாம். ஆனால் சாவாமல் செய்ய முடியாது. "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தர்மூர்த்தி சுவாமிகள் தேவாரம். தோன்றிய எதுவாக இருந்தாலும், காலக் கிரமத்தில் அழிந்தே போகும்.

 

     உடம்பைப் பலமுடையதாகச் செய்வது அவசியம். இந்த உடம்பை வலிமை உடையதாகப் பேணுவதற்குக் காரணம் இறைவன் திருவருளைப் பெறுவதே ஆகும். "உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டான் என்று, உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே" என்பார் திருமூல நாயனார்.

 

     ஒரு திருப்புகழ்ப் பாடலில், அருணகிரியார் இந்த அடயோகிகளைக் "அனாசாரக் கர்மயோகிகள்" என்று சொல்கிறார்.ஆனாசாரக் கர்மயோகி ஆகாமல், "ஆசார பரமயோகி" ஆக அருள் புரியுமாறு வேண்டுகிறார்.

 

"அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போய்வாயு 

அடைய மீளில் வீடு ஆகும் எனநாடி, 

அருள்பெறா அனாசார கருமயோகி ஆகாமல்,

அவனிமீதில் ஓயாது தடுமாறும் 

உடலம்வேறு, யான்வேறு, கரணம்வேறு வேறாக 

உதறி, வாசக அதீத அடியூடே 

உருகி, ஆரிய ஆசார பரமயோகி ஆமாறு உன் 

உபய பாத ராசீவம் அருள்வாயே."          --- திருப்புகழ்.

 

     மனத்தை வென்றவர்களே யோகிகள். இப்போது யோகி என்று சொன்னால் அடயோகம் செய்கிறவர்களையே நினைக்கிறோம். ஆனால், பத்தி செய்கின்றவனும் யோகிதான். 

 

     யோகத்தை விட மிக எளிதிலே இறைவன் திருவருளைப் பெறுவதற்கு ஏற்ற வழிதான் பத்தி. நம்முடைய மனத்தில் இறைவனுடைய திருவடி மலர்களைப் பதித்துத் தியானம் செய்ய வேண்டும். அப்படித் தியானம் செய்கின்ற நிலை வரவேண்டும் என்று அருணகிரியார் இந்தத் திருப்புகழ்ப் பாட்டில் வேண்டுகிறார். 

 

     தாயுமானவர் "சோற்றுத் துருத்திச் சுமை சுமப்பக் கண் பிதுங்கக் காற்றைப் பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே" என்று பாடுகிறார். இந்த உடம்பு சோற்றினால் வளர்ந்த துருத்தி போன்றது. உள்ளே காற்றை அடைத்து வயிறு உப்புவதனால் துருத்தி என்று சொன்னார். மூச்சை வாங்கி வெளிவிடும் பழக்கம் நமக்கு இருக்கிறது. தூங்கும்போது அது நன்றாகத் தெரியும். பெரிய வயிறு உடையவன் ஒருவன் குறட்டை விட்டுத் தூங்கும்போது வயிற்றை மாத்திரம் கவனித்தால் போதும். துருத்தி உப்பி வடிவது போலத் தோன்றும். "இந்தத் துருத்தி என்னும் சுமையைப் பலகாலம் சுமக்க வேண்டும் என்பதற்காகக் கண் பிதுங்கக் காற்றை உள்ளே அடைத்து அலைந்து திரிந்தேனே. சோற்றுத் துருத்தியைக் காற்றுத் துருத்தி ஆக்கி அலைந்ததனால் ஒரு பயனும் காணவில்லையே பராபரமே!" என்று வருந்துகிறார் தாயுமானவர். மற்றொரு பாட்டில், 

 

"சும்மா இருக்கச் சுகம் உதயம் ஆகுமே, 

இம்மாயா யோகம் இனி ஏனடா? - தம்அறிவின் 

சுட்டாலே ஆகுமோ சொல்லவேண்டாம், கன்ம 

நிட்டா! சிறுபிள்ளாய் நீ.” 

 

என்று கூறுகிறார். "கன்ம நிட்டா" என்றால் கர்ம யோகியே என்று பொருள். மாய யோகத்தினால் பயன் இல்லை. அதனால் இன்பம் சாதிக்க ஒண்ணாது என்பது அவர் கருத்து. 

 

     சிவயோகம் என்று கூறுகின்ற முறையைத் தெரிந்து, ஆறு திருமுகங்களை உடையகுருநாதன் உபதேசித்து அருளியதை மனத்தில் இருத்தினால் முத்தி கைகண்டது ஆகும் என்று அருணகிரிநாதர் சிவயோகத்தைச் சொல்கிறார். அது ஆறு திருமுகங்களையுடைய குருநாதன் உபதேசம் செய்தது என்று அடையாளம் காட்டுகிறார். சிவயோகம் என்பது ஒரு குருத்து. அந்தக் குருத்தை அறிந்துகொள்ள,குருநாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருத்த வேண்டும் என்று அருணகிரிநாதர் காட்டியதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், திருப்புகழ்ப் பாடல்களையும் பொருள் உணர்ந்து ஓதவேண்டும். சொல்லக் கூடியவற்றை ஒரே பாட்டில் சொல்லிவிட முடியாது. ஆகையால் அருளாளர்கள் தமது உள்ளக் கருத்தை அங்கங்கே வைத்திருப்பார்கள். 

 

     பெட்டியை எப்போதும் திறந்து போட்டிருக்கமாட்டார்கள். அதைப் பூட்டி, சாவியை அந்தப் பெட்டியின் வாயிலே வைத்திருக்கமாட்டார்கள். சாவி வேறிடத்தில் இருக்கும். சாவியைத் தேடிப் பெட்டியைத் திறந்தால், அதன் உள்ளே இருக்கும் பொருள் இன்னது என்று தெரிந்து கொள்ளலாம். 

 

     இந்த முறையில் அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் சிவயோகம் என்பதைச் சொன்னார். அதற்குச் சாவி இங்கே இல்லை. ஆறுமுகமுடைய குருநாதன் சொன்னான் என்று மாத்திரம் சொன்னார். கந்தர் அலங்காரத்தைப் படிப்பவர்கள் திருப்புகழையும் கொஞ்சம் தேடிப் பார்த்தால் சிவயோக இலக்கணத்தை அங்கே எவ்வாறு சொல்கிறார் என்பது தெரியவரும்.திருப்புகழில் ஓரிடத்தில் சிவயோகம் என்பது என்னவென்று தெரிவிக்கிறார்.

 

"ஐந்து பூதமும் ஆறு சமயமும் 

மந்த்ர வேத புராண கலைகளும் 

ஐம்ப தோர்விதம் ஆன லிபிகளும் - வெகுரூப 

அண்டர் ஆதி சராசரமும் உயர் 

புண்ட ரீகனும், மேக நிறவனும் 

அந்தி போல் உருவானும், நிலவொரு - வெயில்காலும் 

சந்த்ர சூரியர் தாமும், அசபையும் 

விந்து நாதமும் ஏகவடிவம் 

தன்சொரூபம் அதாக உறைவது - சிவயோகம்."    --- திருப்புகழ்.

 

     பஞ்சபூதங்களாகிய அடிப்படைத் தத்துவம் முதற்கொண்டு நாத தத்துவம் வரைக்கும் எல்லாத் தத்துவங்களும் ஒன்றன் விரிவு என்று கருதி, அந்த நிலையில் எல்லாவற்றையும் ஒன்றாக நினைந்து கொண்டு அனுபவித்து நிற்பதுதான் சிவயோகம் என்று சொல்கிறார்.

 

     'எல்லாம் ஒன்றுதான். இதனை நான் அறிவேன்'  என்று ஒருவர் சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கும், நினைப்பதற்கும் தனித் திறமை வேண்டும். அப்படிச் சொன்னாலும் போதாது. எங்கும் இறைவன் இருக்கிறான் என்பதை நூல்கள் சொல்கின்றன. அயல்நாடு ஒன்றைப் பற்றிப் பூகோளப் பாடத்தில் படித்தும், கேட்டும் அறிந்து வைத்து இருக்கிறோம். அது எப்படி உள்ளது என்று அங்கு போய்ப் பார்த்தால்தான், படித்ததும் கேட்டதும் பற்றிய உண்மை தெரியும். படிக்காத,கேட்காத உண்மைகளும் அங்கே இருக்கும்.

 

     அதுபோல, இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை நூல்கள் வாயிலாகப் படித்தும் கேட்டும் இருப்போம். ஆனால் அதை அனுபவத்தில் உணருவது இல்லை. உலகிலுள்ள எல்லாவற்றையும் இறைவனாகவே காணவேண்டும் என்ற ஆசை உள்ளவன் முதலில் அந்த நினைவை மனத்தில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல மெல்ல அந்த நினைவில் ஈடுபட்டு, உள்ளத்தை ஒருமுகப் படுத்தினால் இறைவன் என்ற நினைவே மிகுந்து, நம்முடைய நினைவு குறைந்து போகும். இப்படி எல்லாம் மறைந்து, ஏக வடிவம் ஆகியவனது நிலையைத் தான் "சிவயோகம்" என்றார் அருணகிரிநாதர்.

 

     இந்த நிலை வரவேண்டுமானால், பார்க்கிற பொருள்களை எல்லாம் இறைவனுடைய திருவுருவாகப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்பதைக் கேட்டும் கற்றும் செய்தி அளவில் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அறிவோடு நின்றுவிடுவதால், அனுபவம் உண்டாகாது அறிவுக்கு மேலே உணர்ச்சி வரவேண்டும். 

 

     ஏதேனும் ஒரு பொருளின்மீது நமக்கு அதிகமான ஆசை இருக்குமானால், எந்தப் பொருளைப் பார்த்தாலும் அந்தப் பொருளோடு நம்முடைய மனத்திலுள்ள ஆசைப் பொருளையும் தொடர்புபடுத்திப் பார்க்கிற நிலை உண்டாகும். புதிதாகத் திருமணம் பண்ணிக்கொண்ட பெண்ணுக்கு எந்தப் பொருளைப் பார்த்தாலும் தன் கணவனோடு தொடர்புபடுத்த நினைக்கிற நிலை உண்டாகும். பார்க்கிற பொருள், பிறர் மூலமாகக் கேட்கிற செய்தி எல்லாவற்றையும் அவள் தன் நாயகனோடு தொடர்புபடுத்திப் பார்க்க முயல்வாள். இதற்குக் காரணமாக இருப்பது,அவள் நெஞ்சில் உள்ள காதல். அதுபோல், இறைவனிடத்தில் உண்மையான பக்தி உண்டானால், உலகத்தில் உள்ள பொருள் எல்லாவற்றோடும் அவனைத் தொடர்பு படுத்திப் பார்ப்போம். இறைவனுடைய நினைப்பும், உலகப் பொருளைக் காணும் காட்சியும் சேர்ந்து சேர்ந்து வந்து பிறகு, காதல் முறுகிவிட்டால், அந்தக் காட்சி மறைந்து இறைவன் நினைவே காட்சியாக மாறிவிடும். அதுதான் "சிவயோகம்" என்று அனுபவத்தால் தெரிந்து கொண்டார் அருணகிரிநாதர்.

 

     உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் இறைவனாகவே பார்ப்பதற்கு வழி உண்டு. எளிதாகச் சொல்லவேண்டுமானால், இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும், நோய் உடையவனாக இருந்தாலும், நோய் அற்றவனாக இருந்தாலும்,தன்னிடத்து வருகிறவனுடைய பொருளிலேயே விலைமாதுக்குக் குறி இருப்பதுபோல, இந்த உலகத்தில் எவ்விதமான நிலையில் இருந்தாலும், எப்போதும் இறைவனைக் குறியாகக் கொண்டு நிற்கவேண்டும். அந்த நிலை எப்போது சித்திக்கிறதோ,அப்போது நமக்குச் சிவயோக சித்தி உண்டாகும். 

 

     அதற்கு வழி,  எல்லாமாகவும், எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான் என்று எண்ணி, அவன் இருப்பதைக் காணவேண்டும் என்ற பேராசையை உள்ளத்தில் வளர்த்துக் கொள்வதுதான். இதுவே மிக எளிய வழி என்று அடிகளர் கூறுகிறார். இதுவே கடினமாக இருக்குமானால், மூச்சைப் பிடித்து அடைத்து உடம்பை ஒறுத்து அடயோகம் செய்வதனால் இறைவனைக் காண்பது என்பது எத்தனை கடினமானதாக இருக்கும் என்பது தெரியும். 

 

     ஆறுமுகப் பெருமான் குருநாதனாக எழுந்தருளி அளித்த உபதேசப்படி, அவனுடைய திருவடிகளில் அன்பு செய்து, அவனே எங்கும் எல்லாப் பொருளுமாக இருக்கிறான் என்ற அறிவு பெற்று, பின்பு உணர்ச்சி பெற்று, அதன் பின்பு அனுபவம் பெறுகின்ற சிவயோகமாகிய நிலை மிக எளிது. இதை நீங்களும் மனத்தில் இருத்தி, அந்த நெறியில் ஒழுகுவீர்களானால் முத்தி கைகண்ட பொருளாகும்என்று அருணகிரிநாதர் நமக்கு உபதேசம் செய்கிறார். 

 

"துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்து 

அருத்தி உடம்பை ஒறுக்கில்என் ஆம்?சிவயோகம் என்னும் 

குருத்தை அறிந்து, முகம்ஆறு உடைக் குருநாதன் சொன்ன 

கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர்! முத்தி கைகண்டதே".

 

இதன் பொருள் ---

 

     அடயோகிகளே! தோலினால் செய்யப்பட்ட துருத்தி என்று சொல்லும்படியாக பிராணவாயுவைக் கும்பகம் செய்து, சுழற்றி முறியச் செய்து, வாயுவையே உணவாகக் கொண்டு இந்த உடம்பைத் துன்புறுத்துவதால் ஆகிய பயன் என்ன?சிவயோகம் என்று கூறுகின்ற முளையை அறிந்து, ஆறுதிருமுகங்களை உடைய நல்ல குருநாதனாகிய முருகப் பெருமான் உபதேசித்து அருளிய திருக் கருத்தை உங்கள் மனத்தில் நிலைபெறச் செய்தால், முத்தி இன்பமானது கைக்கு எட்டினது ஆகும்.

     

    அடயோகத்தால் வாயுவை அடக்கி, உடம்பை ஒறுப்பதால் பயன் இல்லை. குருநாதன் உபதேசித்த நெறியில் நின்று, சும்மா இருக்கின்ற சிவயோக நிலையை அடைந்து சுகம் பெறுதல் வேண்டும். 

 

     சிவத்தோடு கூடி இருப்பது சிவயோகம். மற்ற எல்லாம் அவயோகம். அடயோகம் என்பது துறவு வாழ்க்கை. சிவயோகம் என்பது தூய இல்லற வாழ்க்கை. 


 

 

064. அமைச்சு - 08. அறிகொன்று அறியான்

திருக்குறள் பொருட்பால் ஆ. அமைச்சியல் அதிகாரம் 64 -- அமைச்சு இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "அறிந்து சொல்லினவரது அறிவை...