21. அறிவீனரைத் திருத்துதல் ஆகாது

“அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்

செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? - திவ்வியநல்

கந்தம் பலவும் கலந்தாலும், உள்ளியது

கந்தம் கெடுமோ கரை.”


மேலான நல்ல மணப்பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும் வெள்ளைப் பூண்டின் நாற்றம் மாறுமோ? மாறாது. அதுபோல, பொறாமை நெஞ்சம் கொண்ட அறிவற்ற தீயோரை நல்லவர் ஆக்கும் செயல் ஏதும் உண்டா? இல்லை.


(அவ்வியம் - பொறாமை.  திவ்விய – மேலான. கந்தம் - மணப்பண்டங்கள்.  உள்ளி - வெள்ளைப் பூண்டு. கந்தம் - தீநாற்றம்.  கரை - சொல்லு.)


81. பொல்லாத கள்ளர்

“செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்

     நெறியாரே! திருடிக் கொண்டே

எழுங்கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத

     கள்ளர்இனி யாரோ என்றால்,

கொழுங்கள்ளர் தம்முடன்கும் பிடுங்கள்ளர்

     திருநீறு குழைக்குங் கள்ளர்

அழுங்கள்ளர் தொழுங்கள்ளர் ஆசாரக்

     கள்ளர்இவர் ஐவர் தாமே.”


இதன் பொருள் ---

        செழுங்கள்ளி நிறை சோலைத் தண்டலை நிள்நெறியாரே - வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! 

        திருடிக் கொண்டு எழும் கள்ளர் நல்ல கள்ளர் – பொருட்களைத் திருடிக்கொண்டு செல்லும் கள்ளர் எல்லாரும் நல்ல கள்ளர்களே. இனி பொல்லாத கள்ளர் யாரோ என்றால் - எனின், தீய கள்ளர் யார் என வினவினால், கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடுங் கள்ளர் - செல்வமுடைய கள்ளருடன் கூடிக் கும்பிடும் கள்ளரும், திருநீறு குழைக்கும் கள்ளர் - திருநீறு குழைத்திடும் கள்ளரும், அழும் கள்ளர் - அழுகின்ற கள்ளரும், தொழும் கள்ளர் - தொழுகின்ற கள்ளரும் (என), ஆசாரக் கள்ளர் - ஒழுக்கத்திலே மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளர்கள் ஆகிய, இவர் ஐவர் தாமே - இந்த ஐவருமே ஆவர்.

      ‘ஆசாரக் கள்ளர்’  ஒழுக்கம் உடையார்போல நடித்து மக்களை நம்பச் செய்து ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவோர். இவர்களைக்  கண்டு  பிடித்தல் அரிது. இவர்களால் ஒழுக்கம் உடையோரையும் மக்கள் நம்பமாட்டார். ஆகையால் வெளிப்படையாகத் திருடரெனப் பெயர் பெற்றோர் நல்லவராகவும், இவர் தீயராகவும் கொள்ளப்பட்டனர். கொழுங்கள்ளர் என்போர், தம்மிடத்துச் செல்வம் இருந்தும் இல்லாதவர் ஓபல நடித்துப் பொருள் குவிப்போர். இவர்கள் தோற்றத்தில் நல்லவராக நடித்து மக்களை ஏமாற்றுவோர் ஆவர். 

    அன்று பாடிக் காட்டிய இந்த நிலை, இக்காலத்தில் கண்ணால் காணக் கூடியதாக உள்ளது. 


        இவ்வாறு கள்ளத்தனமாக நடந்துகொள்பவரைக் குறித்துத் திருமூல நாயனார் பின்வருமாறு பாடினார்.


“கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்;

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்;

கண்காணி யாகக் கலந்து எங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.”        -- திருமந்திரம்.

        மேற்பார்வையிட்டு ஏற்பன செய்விப்போன் கண்காணி எனப்படுவான். உயிர்களுக்குக் கண்காணியாக உள்ளவன் இறைவன். இந்த  உண்மையினை அறியாது பலர் தவறான செய்கைகள் பலவற்றையும் செய்கின்றனர். அவர்கள் எண்ணத்தில் கண்காணி இல்லை. இன்னும் சிலர் இதை நன்கு அறிந்து வைத்து இருந்தும், சுகபோக வாழ்க்கையை வாழ்வதற்காக அடியார் வேடம் பூண்டு பிறரை மருட்டிப் பொருள் குவிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இவர்களுக்கு ஏதும் பொருள் ஈயாவிட்டால், இவர்களால் நமக்குத் துன்பம் ஏதும் உண்டாகுமோ என்னும் அச்சம் காரணமாக இவர்களுக்குப் பொருள் மிக வழங்குவோர் உண்டு. இவர்களுக்குப் பொருளை நிறையத் தந்தால் தாம் செய்த பாவம் தொலைந்து விடும் என்னும் அஞ்ஞானிகளும் இல்லாமல் இல்லை. மேற்பார்வையாளனாகக் கலந்து எங்கும் நலம்பெற, நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்று அருள்பவன் இறைவன். அங்ஙனம் நின்று அருள்பவனை ஆசாரத்தில் நின்று நற்பண்புகளை வளர்த்துக் கொண்ட உண்மை அடியவர்கள் கள்ளத்தனம் ஒழிந்தவர் ஆவர். 

பத்தி நெறியில் நில்லாமல், வேட மாத்திரத்தால் அடியார் போன்று காட்சி அளித்து, பொருளைக் கருதி, நன்னெறியைப் பிறருக்கு எடுத்து உரைப்பவர்களைப் பித்தர் என்கிறார் திருமூல நாயனார். இப் பித்தர்கள் பெருநோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றவர்கள்.


“பத்திவிற்று உண்டு பகலைக் கழிவிடும்

மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது

வித்துக் குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும்

பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே."        -- திருமந்திரம்.

        வேட மாத்திரையால் பத்தி உடையார் போன்று ஏனையார்க்கு நெறிமுறைகளைப் போதித்து, விலைபெற்று வாழும் வஞ்சகர் வீண்பொழுது கழிக்கும் பொருட்பித்தர் ஆவர். அவருக்கே மறுபிறப்பும் உண்டு. பிறப்புக்கு அடிப்படையான வினையை நெல்லைக் குற்றி அரிசியாக்கி உண்பது போல், சிவகுருவின் திருக்கடைக்கண் நோக்கால் எரிசேர் வித்து எனச் செய்தவர், பிறப்பு என்னும் விளைநிலத்தைப் பாழ் செய்தவர் ஆவர். திருவடியுணர்வு கைவந்த இவர் சிவப்பித்தர் ஆவார். அவர்களுக்கு எக்காலத்தும் பிறப்பு இல்லை. 


20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம்,

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி.”


கொம்பு உள்ள விலங்குகளுக்கு ஐந்து முழம் தொலைவிலும், குதிரைக்குப் பத்து முழம் தொலைவிலும், சினம் உள்ள யானைக்கு ஆயிரம் முழம் தொலைவிலும் விலகி இருக்கவேண்டும்.  ஆனால், கொடுமைகள் மிகுந்துள்ள தீயவர்களின் கண்களுக்குக் காணமுடியாத தொலைவில் விலகி இருப்பதே நல்லது.  (தீயோரைக் காண்பதுவும் தீதே என்பதை எண்ணுக.)


(கொம்பு உளது - ஆடு மாடு முதலியன.  வெம்புதல் - சினம் கொள்ளுதல்.  கரி - யானை.  வம்பு - தீமை.)


80. தேவதேவன் ஆடும் இடத்திலே பேய்களும் ஆடும்


பேரான கவிராச ருடன்சிறிய

     கவிகளும்ஒர் ப்ரபந்தம் செய்வார்!

வீராதி வீரருடன் கோழைகளும்

     வாள்பிடித்து விருது சொல்வார்;

பாராளும் தண்டலைநீள் நெறியாரே!

     இருவரையும் பகுத்துக் காணில்,

ஆராயும் மகாதேவர் ஆடிடத்துப்

     பேய்களும் நின் றாடுமாறே.


இதன் பொருள் ---

    பார் ஆளும் தண்டலைநீள் நெறியாரே - உலகைக் காத்து அருளும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!

    பேரான கவிராசருடன் சிறிய கவிகளும் ஓர் பிரபந்தம் செய்வார் - புகழ்பெற்ற கவியரசருடன் சிறு கவிஞரும் ஒரு நூல் எழுதுவர்; வீராதி வீரருடன் கோழைகளும் வாள்பிடித்து விருது சொல்வார் - பெருவீரர்களுடன் வீரமற்றவர்களும் வாளேந்தி வெற்றி வெற்றி என்று கூறுவார்கள். இருவரையும் பகுத்துக் காணில் - இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஆராயும் மகாதேவர் ஆடு இடத்துப் பேய்களும் நின்று ஆடும் ஆறே - (பெரியோர்) ஆராய்ச்சி செய்யும் சிவபெருமான் ஆடும் இடத்திலே பேய்களும் நின்று ஆடுவது போலாம்.

      எல்லோரும் பெருவீரராக இருப்பது இல்லை. எல்லோரும் பெருங்கவிஞராகவும் இருப்பதும் இல்லை. பெருவீரர் இருப்பதனாலேயே மற்றவரும் போர்செய்யப் போகாமல் இருக்க முடியாது. பெரும் புலவரைக் கண்டு சிறுபுலவர் கவிசெய்யாமல் இருத்தலும் இயலாது. இருதிறத்தாரும் கலந்திருப்பதே உலகியல். சிவபரம்பொருள் திருநடனம் புரியும் இடத்தில்தான் பேய்களும் கூத்தாடுகின்றன.


பொது --- 1116. கட்டம்உறு நோய்

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கட்டம்உறு நோய் (பொது)


முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே 

தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய்.


தத்ததன தானான தத்ததன தானான

     தத்ததன தானான ...... தனதான


கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய

     கட்டுவிடு மோர்கால ...... மளவாவே


கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு

     கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன்


இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி

     யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன்


எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத

     இட்டமினி தோடார ...... நினைவாயே


துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்

     தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத்


தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால

     சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே


மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ

     மத்தமயில் மீதேறி ...... வருநாளை


வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ

     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில், மாமாய

     கட்டுவிடும் ஓர் காலம் ...... அளவாவே,


கத்த உறவோர், பாலர், தத்தை, செறிவார், வாழ்வு

     கற்புநெறி தான்மாய, ...... உயர்காலன்


இட்ட ஒரு தூதாளும் முட்ட, வினையால் மூடி,

     இட்ட விதியே ஆவி ...... இழவாமுன்,


எத்தி, உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத,

     இட்டம் இனிதோடு ஆர ...... நினைவாயே.


துட்டர் என ஏழ்பாரும் முட்டவினையாள் சூரர்

     தொக்கில் நெடு மாமார்பு ...... தொளையாகத்


தொட்ட, வடிவேல் வீர! நட்டம் இடுவார் பால!

     சுத்த தமிழ் ஆர் ஞான ...... முருகோனே!


மட்டு மரை நால்வேதன் இட்டமலர் போல் மேவ,

     மத்தமயில் மீது ஏறி ...... வரு நாளை,


வைத்த நிதி போல் நாடி, நித்தம் அடியார் வாழ,

     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.


பதவுரை

துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினை ஆள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாகத் தொட்ட வடிவேல் வீர --- தீயவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்திக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்களின் அகன்ற மார்பினைத் தொளைத்துச் செல்லும்படியாக கூர்மையான வேலை விடுத்து அருளிய வீரரே!

        நட்டம் இடுவார் பால --- அம்பலக் கூத்தர் அருட்புதல்வரே!

        சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே --- தூய தமிழை நன்கறிந்து ஞான வடிவாக உள்ள முருகப் பெருமானே!

மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ --- நறுமணம் மிக்க தாமரைமலரில் வீற்றிருக்கும், நான்கு வேதங்களை ஓதும் பிரமதேவனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் இருந்து,

மத்த மயில் மீது ஏறி வரு நாளை --- அதிக உற்சாகமான மயிலின் மேல் தேவரீர் ஏறி வரும் நாளில், 

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!

கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் --- துன்பத்தைத் தருகின்ற நோய்களும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல்

        மாமாய கட்டுவிடும் ஓர் காலம் அளவாவே --- உலகமாயையால் உண்டாகும் பந்தத்தில் இருந்து விடுபட்டு, (வினைப் போகம் தீர்ந்த காலத்தில்) உயிர் போகும் சமயத்தை உணர்ந்து கொண்டு, 

கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்புநெறி தான் மாய --- சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்புநெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக 

உயர் காலன் இட்ட ஒரு தூதாளும் முட்ட --- பெரிய எமன் அனுப்பிவிட்ட ஒப்பற்ற தூதுவர்களும் வந்து தாக்க, 

வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் --- வினைகளால் மூடப்பட்ட விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக,

எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே --- நாள்தோறும் தேவரீரைப் போற்றி, முத்தமிழால் ஓதி வழிபட, விருப்பத்தை மகிழ்வோடு வைத்து அடியேனை நினைந்து அருளுவீராக.

பொழிப்புரை

        தீயவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்திக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்களின் அகன்ற மார்பினைத் தொளைத்துச் செல்லும்படியாக கூர்மையான வேலை விடுத்து அருளிய வீரரே!

        அம்பலக் கூத்தர் அருட்புதல்வரே!

         தூய தமிழை நன்கறிந்து ஞான வடிவாக உள்ள முருகப் பெருமானே!

          நறுமணம் மிக்க தாமரைமலரில் வீற்றிருக்கும், நான்கு வேதங்களை ஓதும் பிரமதேவனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் இருந்து, அதிக உற்சாகமான மயிலின் மேல் தேவரீர் ஏறி வரும் நாளில்,  சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!

துன்பத்தைத் தருகின்ற நோய்களும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடலானது, உலகமாயையால் உண்டாகும் பந்தத்தில் இருந்து விடுபட்டு, (வினைப் போகம் தீர்ந்த காலத்தில்) உயிர் போகும் சமயத்தை உணர்ந்து கொண்டு,  சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்புநெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக பெரிய எமன் அனுப்பிவிட்ட ஒப்பற்ற தூதுவர்களும் வந்து தாக்க,  வினைகளால் மூடப்பட்ட விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக, நாள்தோறும் தேவரீரைப் போற்றி, முத்தமிழால் ஓதி வழிபட, விருப்பத்தை மகிழ்வோடு வைத்து அடியேனை நினைந்து அருளுவீராக.

விரிவுரை


மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ --- 

மட்டு – நறுமணம். மரை – தாமரை. நால்வேதன் – பிரமதேவன். இட்டமலர் – விருப்பமான மலர். 

பிரமதேவன் விரும்பி வீற்றிருப்பது தாமரை மலர்.


மத்த மயில் மீது ஏறி வரு நாளை --- 

மத்தம் - அதிக உற்சாகம்.


வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- 

        வைத்த நிதி – பிற்காலத்தில் உதவும்படியாக வைக்கப்பட்ட நிதி. தளர்வு உண்டாகும்போது அல்லது முதுமையில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக சேர்த்து வைக்கும் பொருள். இளைத்தபோது உதவும் சேமநிதி. இறைவன் உயிர்களுக்குச் சேமநிதியாக உள்ளான். இறைவனைச் சேமநிதயாக எண்ணி அடியார்கள் வழிபடுகின்றார்கள். இறைவனை அடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்தவர்கள், உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.

“மாறாத" என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது. இறைவன் கருணையானது என்றும் மாறாத இயல்பு உடையது. “மாறு இல்லாத மாக் கருணை வெள்ளமே” என்பார் மணிவாசகப் பெருமான். “மாறாக் கருணை தரும் பாத வனசத் துணை” என்பார் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். மனிதன் வைத்த அன்பு மாறும். இறைவன் திருக்கருணையானது என்றும் மாறாத இயல்பை உடையது என்பதா “மாறாத" என்றார் அடிகளார்.

        “அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே” என்பது வள்ளற்பெருமான் வாக்கு. “வச்ச பொருள் நமக்கு ஆகும் என்று” என்பது அப்பர் தேவாரம். “வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனா?” என்று பழநித் திருப்புகழில் அடிகாளர் பாடி உள்ளதும் அறிக.


"வைத்த நிதியே" மணியே என்று வருந்தி, தம்

சித்தம் நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,

கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து

முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.”     --- திருஞானசம்பந்தர்.


"வைத்த பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,

சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,

மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்

அத்தன் அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே. --- அப்பர்.


பல் அடியார் பணிக்குப் பரிவானை,

         பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,

செல் அடியே நெருங்கித் திறம்பாது

         சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,

"நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"

         நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.

வல் அடியார் மனத்து இச்சை உளானை,

         வலிவலம் தனில் வந்துகண் டேனே.          --- சுந்தரர்.


"காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"....    --- திருவாசகம்.


"தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித் தலையால் நடந்த

வினைத்துணை யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய

மனத்துணை யே,என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"

தினைத்துணை யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே."  --- திருவாசகம்.


"உற்ற இடத்தில் உதவநமக்கு

     உடையோர் வைத்த வைப்பு" அதனை,

கற்ற மனத்தில் புகும் கருணைக்

     கனியை விடைமேல் காட்டுவிக்கும்,

அற்றம் அடைந்த நெஞ்சே! நீ

     அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,

செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்,

     சிவாயநம என்று இடு நீறே.                 --- திருவருட்பா.


உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்

     ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,

கலக மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்

     கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்

"இலகும் அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"

     இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,

திலகமே, திரு ஒற்றி எம் உறவே,

     செல்வமே, பரசிவ பரம்பொருளே.         --- திருவருட்பா.


கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் --- 

கட்டம் – துன்பம்.

குடில் – குடிசை. உடம்பைக் குறித்தது. 

குடில் - குடிசை. உடம்பைக் குரம்பை என்றும் சொல்வார்கள். எப்போது விழும் என்று தெரியாது. ஆனால், விழுந்தே தீரும் என்பதால் குடில் என்றார்.  இந்த உடம்பு, எலும்பு சதை, உதிரம், மலம் சலம், கோழை, பித்தம் முதலிய பல அசுத்தப் பொருள்களால் ஆனது. அந்த அசுத்தங்கள் வெளியே தெரியாதபடி தோலினால் போர்த்தப்பட்டுள்ளது.  இந்த உடம்பு தனியே துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவிக்காது. இனிப்பு நிறைந்த பொருளைச் சிறிதுதான் உண்ணலாம். விரும்பினாலும், ஒரு பூசணிக்காய் அளவு உண்ண இயலாது.  மனைவியுடன் சிறிது நேரம்தான் இன்புறலாம். தூங்கினால் சுகம்தான். ஓயாது தூங்கிக் கொண்டிருக்க முடியாது.  இப்படி எதை எதை இன்பமாகக் கருதி அனுபவிக்கின்றோமோ, அந்த இன்பங்களை இந்த உடம்பால் தொடர்ந்து அனுபிவிக்க இயலாது. வெயிலும் மழையும் போல் சுகதுக்கங்களை மாறிமாறி நுகர்வது இந்த உடம்பு.  


கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்புநெறி தான் மாய..... வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் --- 


சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க, நமன்

         ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,

    பெற்றோர்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ,

         ஊருக்கு அடங்கல் இலர், காலற்கு அடங்க உயிர்

     தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்

         ஓலைப் பழம்படியினால் இற்று இறந்தது என”  ---  பழநித் திருப்புகழ்.

        வினை – பிராரத்த வினை. பிராரத்த வினையினை அனுபவித்துக் கழிக்கவே இந்த உடல் இறைவனால் அருளப்பட்டது. வினையை அனுபவிக்க வேண்டி காலம் வரை உடம்பில் உயிர் இருக்கும். வினைப் போகம் தீர்ந்துவிட்டால், உடம்பில் உயிரானது ஒருகணமும் இருக்காது.


“வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய் வினை தான் ஒழிந்தால் 

தினைப் போது அளவும் நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை

நினைப்போரை மேவும் நினையாரை நீங்கி இந் நெறியில் நின்றால்

உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே எனக்கு உற்றவரே”  --பட்டினத்து அடிகளார்.


எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே --- 

ஏத்தி என்னும் சொல் எத்தி என வந்தது. 

ஏத்துதல் – புகழ்தல், உயர்த்தல், வாழ்த்திக் கூறுதல். துதித்தல்.

    இறைவனை நாள்தோறும் வழபாடு செய்ய வேண்டும். காலம் கருதிச் செய்தல் கூடாது. “நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது அறிக.

     இறைவனை முத்தமிழால் ஓத வேண்டும் என்றார். முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கின்ற பெருமான் ஓதுவாரை நிச்சயம் வாழவைப்பான் என்பது வெளிப்படை. உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழி. இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழை ஆராய்ந்தான். “நன்பாட்டுப் புலவனாய் சங்கம் ஐறி” என்பார் அப்பர் பெருமான். பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே. சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.  கற்புணையை நற்புணை ஆக்கியது தமிழ்; எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கல்தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்; இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 


கருத்துரை


முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய்.


19. கயவரைத் திருத்துதல் இயலாது


“துர்ச்சனரும் பாம்பும் துலை ஒக்கினும், பாம்பு

துர்ச்சனரை ஒக்குமோ? தோகையே! - துர்ச்சனர்தாம்

எந்தவிதத்தாலும் இணங்காரே, பாம்பு மணி

மந்திரத்தால் ஆமே வசம்.” — நீதிவெண்பா.

பெண்ணே! கெட்ட குணம் உடையோரும் பாம்பும் ஓரு நிலையில் ஒத்து இருந்தாலும், பாம்பு கெட்டவருக்கு ஒப்பு ஆகுமா?  ஆகாது.  எவ்வாறு எனில், பாம்பு மணிமந்திரங்களுக்கு அடங்கிக் கொடுமை செய்யாது இருக்கும்.  ஆனால், கயவர்கள் எவ்வழியிலும் அடங்கி, திருந்தி,  நல்வழிப்பட மாட்டார்கள்.

        (பாம்புக்குப் பால் வார்த்தாலும், விடத்தையே உமிழும் என்பார்கள். துர்ச்சனர் - கெட்டவர்.  துலை - ஒப்பு.  இணங்கார் - திருந்தார்.)

    எவ்விதமான சாதனைகளையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.


"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,


உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்


பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,


மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்

     மட்டும் திருப்ப வசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".

இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் - நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம். கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் - நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை  நீக்கிவிடலாம். உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் - தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம். உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் - பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். அக்கினி சுடாமல் பெரும்புனல் எனச் செய்யலாம் - அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். பிணியையும் அகற்றலாம் - நோயையும் அகற்றலாம். கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் - காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். மணலையும் கயிறாத் திரிக்கலாம் - மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ - கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.

எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். 

மனிதர்களை முதல் இடை கடை என்று மூன்றுவகைப் படுத்தலாம். முதல் வகையினர் பக்குவர்கள். இவர்கள் உள்ளும் புறமும் தூய்மையானவர். உள்ளேயும் வெளுப்பு, புறத்தேயும் வெளுப்பு. "பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். பக்குவர்களைத் திருத்த வேண்டிய அவசியம் எழாது. இடைப்பட்டவர்கள் பக்குவாபக்குவர்கள். அதாவது, பக்குவப்பட்டவர்களும் அல்லர், பக்குவப்படாதவர்களும் அல்லர். இவர்கள் அகத்தே கறுத்து, புறத்தே வெளுத்து இருப்பவர்கள். 

கடைப்பட்டவர்களாகிய கயவர்களிடத்து அஞ்ஞானம் நிறைந்து இருக்கும். இவர்கள் உள்ளும் புறமும் கறுத்தவர்கள். கடவுள் உண்டு என்பதையும், பாவபுண்ணியங்கள் உண்டு என்பதையும், வினையின் பயன் உண்டு என்பதையும் நம்பாதவர்கள். இவர்களைப் பீடித்து உள்ள இந்தத் தீராத நோயானது, தீராத பிணியாகிய பிறவிப்பிணிக்குக் காரணமாக அமைகின்றது. உடல்நோய், உள்ளநோய், உயிர்நோய் ஆகியவற்றைத் தீர்த்து அருள் புரிகின்ற மருத்துவராக இறைவன் உள்ளான். வள்ளற்பெருமான் பாடியருளிய பாடலைக் காணலாம்.


"கல்லையும் உருக்கலாம்; நார் உரித்திடலாம்;

கனிந்த கனியாச் செய்யலாம்;

கடுவிடமும் உண்ணலாம்; அமுது ஆக்கலாம்; கொடும்

     கரடிபுலி சிங்கம் முதலா

வெல்லும் மிருகங்களையும் வசம் ஆக்கலாம்;அன்றி

     வித்தையும் கற்பிக்கலாம்;

மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம்; மணலை

     மேவுதேர் வடம் ஆக்கலாம்;

இல்லை ஒரு தெய்வம், வேறு இல்லை, எம் பால்இன்பம்

      ஈகின்ற பெண்கள் குறியே

எங்கள்குல தெய்வம் எனும் மூடரைத் தேற்ற எனில்

      எத்துணையும் அரிது அரிதுகாண்;

வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க, தவசிகா

      மணி உலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற

       வளர் வயித்தியநாதனே."

இதன் பொருள் ---

     மாதவச் சிகாமணி உலகநாதத் தம்பிரான் ஆகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி நீங்கவும், திருப் புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) கோயில் கொண்டு அருளும் வைத்தியநாதப் பெருமானே!  கருங்கல்லையும் நீராய் உருக்கி விடலாம்; அக் கல்லில் நாரும் உரித்து எடுக்கலாம்; அக் கல்லைப் பழுத்த பழமாகவும் செய்யலாம்; கொடிய விடத்தை உண்ணலாம்; அதனையே யாவரும் உண்ணும் அமுதமாகவும் செய்யலாம்; கொடிய புலி கரடி சிங்கம் முதலாகவுள்ள பிற விலங்குகளை எளிதில் வெல்லும் விலங்குகளை நம் வயமாக்கி விடலாம்; அன்றியும் அவற்றைக் குரங்குகளைப் போல வித்தை காட்டவும் செய்யலாம்; தண்மை மிக்க வாழைத் தண்டையும் விறகாய் எரிக்கலாம்; நுண்ணிய மணலையும் பெருமை பொருந்திய தேர்க்கு வடமாகத் திரிக்கலாம்; ஆனால், ஒரு தெய்வமும் கிடையாது; வேறு யாதும் இல்லை; எங்களுக்கு இன்பம் தருகின்ற பெண்களின் அல்குலே குலதெய்வமாகும் என்று கருதிப் பேசுகின்ற மூட மக்களைத் தெய்வசிந்தனை உடையவர்களாக்குவது பெரிதும் அரிதாகும். அவர்களின் மூடக் கொள்கையாகிய நோய் விரைவில் நீங்க ஞானமாகிய நன்மருந்தினை அருள்வீராக.

     எரிமலைகளில் கற்கள் உருகி நெருப்புக் குழம்பாய் வெளிவருவதைப் பார்க்கின்றோம். எனவே,  “கல்லையும் உருக்கலாம்” என்றார்.  சிற்பத்தொழில் வல்லவர், கல்லில் சங்கிலித் தொடர்களைச் செய்திருப்பதைக் காண,  "கல் நார் உரிக்கலாம்” எனவும் கூறுகின்றார். மாணிக்கவாசகப் பெருமான் “கல் நார் உரித்து என்னை ஆண்டு கொண்டான்" எனவும், “கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்” என்று பாடி உள்ளதால், கல்லைக் “கனிந்த கனியாகச் செய்யலாம்” என வள்ளல்பெருமான் பாடுகின்றார். கடல் விடத்தைச் சிவபெருமானே உண்டதனால்,  அவனுக்கு அடியவராகிய அப்பர்பெருமான், சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பால்சோற்றை உண்டு, சாவாது இருந்தார். “வஞ்சனை பால்சோறு ஆக்கி, வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே” அப்பர்பெருமானே பாடி உள்ளார். இதனை, "நஞ்சு அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு" என்றே சேக்கிழாரும் பாடி உள்ளார். எனவே, “கடல் விடமும் உண்ணலாம், அமுது ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான்.  "கரடி வெம்புலி வாயையும் கட்டலாம், ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்" என்று தாயுமான அடிகளார் பாடி உள்ளார்.  அதனை ஒட்டியே, "கொடுங் கரடி புலி முதலா வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம்" என்றார் வள்ளல்பெருமான். வாழைத் தண்டை விறகு ஆக்கினார் பட்டினத்தார். உலகவர், வாழைத் தண்டை விறகாக்கினர், மணலைக் கயிறாகத் திரித்தனர் என்றெல்லாம் பேசுவர். எனவே, “மிக்க வாழைத் தண்டை விறகாக்கலாம், மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான். கயவர்கள் காம இன்பத்தையே பெரிதும் விரும்பி இருப்பர். காம இன்பம் தரும் பெண் அல்லது தெய்வம் வேறில்லை என்னும் பேதைகள் இன்னும் இருப்பதால், அவர்களை “இல்லையொரு தெய்வம், வேறிலை எம்பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம் எனும் மூடர்” என இழித்துரைக்கின்றார். திருவருளால் அன்றி இத்தகு கயவர்க்கு அறிவு விளக்கம் பெறாது என்பது பற்றி, அவர் கொண்டு உள்ள “உணர்வு அற மருந்து அருள்க” என வேண்டுகிறார்.


79. நீ நீயாகவே இரு


"பன்னகவே ணிப்பரமர் தண்டலையார்

     நாட்டிலுள பலருங் கேளீர்!

தன்னறிவு தன்னினைவு தன்மகிமைக்

     கேற்றநடை தகுமே அல்லால்,

சின்னவரும் பெரியவர்போ லேநடந்தால்

     உள்ளதுபோம்! சிறிய காகம்

அன்னநடை நடக்கப்போய்த் தன்னடையும்

     கெட்டவகை ஆகும் தானே.”


இதன் பொருள் ---

    பன்னக வேணிப் பரமர் தண்டலையார் நாட்டில் உள பலரும் கேளீர் – பாம்புகளை அணிந்த திருச்சடையை உடைய பரம்பொருளாகிய திருத்தண்டலை இறைவரின் நாட்டில் வாழ்வோரே கேளுங்கள்.

    தன் அறிவு தன் நினைவு தன் மகிமைக்கு  ஏற்ற  நடை  தகுமே – தனது அறிவுக்கும், தனது சிந்தனைக்கும், தனது தகுதிக்கும் தக்க ஒழுக்கம் தகும். அல்லால் – அதை விடுத்து, சின்னவரும் பெரியவர் போலே நடந்தால் உள்ளது போம் – அறிவு ஒழுக்கங்களால் சிறியவரும், அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த சான்றோர் போல நடந்துகொள்ளத் தலைப்பட்டால், உள்ளதும் போய்விடும், (அது மேலும்), சிறிய காகம் அன்னநடை நடக்கப்போய்த் தன்நடையும் கெட்டவகை ஆகும் - இழிந்த காகமானது உயர்ந்த அன்னத்தைப்போல நடக்கத்  தொடங்கித் தன் நடையையும் இழந்தவாறு முடியும்.

    ‘விரலுக்குத் தக்க வீக்கம்' எனவும் ‘அன்னநடை நடக்கப்போய்த் தன்நடையும் கெட்டது' எனவும் பழமொழிகள் வழங்குகின்றன.

    கோழியாக இருந்தால் முட்டை இட்டுத்தான் ஆகவேண்டும். சேவலாக இருந்தால் கூவ வேண்டும். ஒன்றின் வேலையை இன்னொன்று செய்யமுடியாது. செய்ய முயல்வதும் பயனற்றதாக முடியும்.

      பெரியவர் ஒருவரைப் பார்த்து, சிறியவரும் அவர்போல ஆகவேண்டும் என்றால் அவருக்கு உரிய நிலையில் நிற்கவேண்டும். பெரியவரைப் போல வேடமிட்டால் போதாது. கல்வி அறிவில்லாத ஒருவன், கவி பாட முற்பட்டால், அது கவியாக இருக்காது. உண்மை வேறு, போலி வேறு. பண்புகளால்தான் ஒருவருக்கு உயர்வு உண்டாகும். உருவத்தால் உயர்வு உண்டாகாது. காக்கை கருநிறமாக இருந்தாலும், வானத்தில் பறந்தாலும், அது கருடன் ஆகாது. உயரத்தில் பறக்கின்றது என்பதற்காக ஊர்க்குருவி பருந்தாக மாட்டாது.

      காகம் ஒன்று, அன்னப் பறவையைப் பார்த்து, தானும் அதுபோல ஒயிலாக நடக்கப் பழகி, அது வராமல், தனக்கு இயல்பாக இருந்து நடையையும் இழந்துவிட்டது. அதுபோல, அவரவர் அவரவரது அறிவு, நினைவு, பெருமைக்கு ஏற்றபடி ஒழுகுதல் வேண்டும். சிறியவர் பெரியவரைப் போல நடந்தால், உள்ளதையும் இழக்க நேரிடும் 


"கான மயில் ஆடக்கண்டு இருந்த வான் கோழி,

தானும் அதுவாகப் பாவித்து, ---தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே,

கல்லாதான் கற்ற கவி".

 

என்பது ஔவையார் பாடி அருளிய "மூதுரை"யில் வரும் பாடல்.

 

இதன் பொருள்---

 

      ஆழ்ந்து முறைப்படிக் கற்கவேண்டிய நூல்களைக் கற்று உணராமல், கற்றோர் சொல்லும் சொற்களைக் கேட்டு, கல்லாத ஒருவன் சொல்லும் கவியானது, காட்டிலுள்ள மயில் தன் தோகையை விரித்து ஆடுவதைப் பார்த்த வான்கோழி,  தன்னையும் மயிலாகவே நினைத்துக்கொண்டு தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடியதைப் போன்றதாகும்.

      மயிலும் வான்கோழியும் உருவத்தால் ஒரோவழி ஒத்து இருப்பதுபோல் தோன்றும். மயிலுக்கு அழகான வண்ணங்கள் பொருந்திய தோகை உண்டு. அது தனது கலாபம் எனப்படும் தோகையை விரித்து ஆடினால் மிக அழகாக இருக்கும். காண்போர்க்கு இன்பம் உண்டாகும். வான்கோழிக்கு அழகான தோகை இல்லை. அழகற்ற சிறகு மட்டுமே உண்டு. நாமும் ஆடிப் பார்க்கலாமே என்று, தன்னையும் ஒரு மயிலாக எண்ணி, வான்கோழி தனது அழகற்ற சிறகை விரித்து ஆடினால் அழகாக இருக்காது. யாரும் அதை ரசிக்க மாட்டார்கள். 

      கற்றவர் சொல்லும் சொல், நூற்பொருள் விளங்குமாறு இருக்கும். கேட்போர்க்கு இன்பம் தரும். அல்லாதார் சொல்வது அவ்வாறு இருக்காது. 

 

காளமேகப் புலவர் பாடல்,

"வாழ்த்து திருநாகை வாகுஆன தேவடியாள், 

பாழ்த்த குரல் எடுத்துப் பாடினாள்--நேற்றுக்

கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேன் என்று, 

பழுதை எடுத்து ஓடிவந்தான் பார்"

 என்பதாகும். 

 இதன் பொருள்---

       எல்லாராலும் வாழ்த்தப் பெறுகின்ற, திரு நாகைக்காரோணம் என்னும் நாகப்பட்டினத்தில் இருந்த அழகு மிக்க தேவதாசி ஒருத்தி, தனது பாழான குரலை எடுத்துப் பாடினாள். அந்தக் குரலைக் கேட்டதுமே, நேற்று தனது கழுதையை இழந்து தேடிக் கொண்டிருந்த வண்ணான் ஒருவன், அவள் குரல் கழுதையின் குரலைப் போல் இருக்கவே, கழுதையைக் கண்டுபிடித்து விட்டேன், கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டே , அதைக் கட்டுவதற்கு ஒரு கயிற்றை கையில் எடுத்துக் கொண்டு ஓடிவந்தான் பார். 

      பாடுவதற்கு உடல் அழகு போதாது. குரல் அழகு வேண்டும். பாடத் தகுந்தவர் பாடவேண்டும். ஆடத் தகுந்தவர் ஆடவேண்டும். நீ நீயாக இரு. BE YOURSELF.


மேன்மையையே விரும்புக

மேன்மையையே விரும்புக

-----


    உலகில் எத்தனையோ வகையான மக்களைக் காண்கின்றோம். பலர் பலவகையில் வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் வாழ்வில் உயர்கின்றனர்.  சிலர் வழுக்கி வீழ்கின்றனர். மக்கள் வாழ்க்கை அமைவின் போக்கிலே எத்தனை எத்தனையோ மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் காண முடியும். நேற்று, செல்வராக வாழ்ந்தவர் இன்று வறுமையில் உழலுகின்றார். நேற்றுவரை உயர் பதவியில் செருக்கோடு இருந்தவர், இன்று சாதாரண மனிதராக இருக்கின்றார். நேற்றுவரை எல்லா வகையாலும் தாழ்த்தப் பெற்று இருந்தவர் இன்று எதிர்பாராத வகையில் உயர்த்தப் பெறுகின்றார். இதுதான் உலக இயற்கை. "பெருமையும் சிறுமையும் தான்தர வருமே" என்கிறது "வெற்றிவேற்கை" என்னும் நூல். ஒருவனுக்கு மேன்மையும் கீழ்மையும் தான் செய்யும் செய்கையாலேயே உண்டாகும், பிறரால் உண்டாவதில்லை. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூறு. செல்வமும் வறுமையும், வாழ்வும் தாழ்வும் நிலையானவை அல்ல. வண்டிக் கால்கள் போல் மாறி மாறி வரலாம் என்பதை, வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகையில் தெளிவாக்கி உள்ளது.

“உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா” 

“குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந்து ஒர் ஊர் நண்ணினும் நண்ணுவர்”

(யானையின் பிடர்மேல் வெண்கொற்றக் குடை நிழல் செய்ய வீற்றிருந்து, அதனைச் செலுத்திச் சென்ற அரசரும் வறுமை எய்திக் காலால் நடந்து மற்றோர் ஊருக்குச் செல்லினும் செல்வர்.)


“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்

அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்” 

(பிறரை ஏவிக்கொள்ளும் முதன்மையும் செல்வமும் மேன்மையும் உடையவரும், வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலும் அடைவர்)


“அறத்து இடு பிச்சை கூவி இரப்போர்

அரசரோடு இருந்து அரசாளினும் ஆள்வர்” 

(வீடுகள்தோறும் கடைத்தலையில் நின்று கூவியழைத்துப் பிச்சை ஏற்போரும், செல்வராகி அரசு அங்கங்களுடன் கூடி அரசாண்டாலும் ஆளுவர்.)


“குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர்

அன்றைப் பகலே அழியினும் அழிவர்” 

(மலையளவு பெரும்பொருள் பெற்றவரும், பெற்ற அப்பொழுதே அதனை இழப்பினும் இழப்பர்.)



“எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்

கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும்” 

(ஏழு நிலைகளுடைய மாளிகையும் அடியுடன் சாய்ந்து அழிந்து, கழுதைகள் மேய்கின்ற பாழ்நிலம் ஆனாலும் ஆகும்.)


“பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி

நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்” 

(எருதுகளும், கழுதைகளும் மேய்ந்த பாழ்நிலமானது,  பொன்னால் ஆகிய வளையலை அணிந்த  மாதர்களையும், ஆடவர்களையும் பொருந்தி, நெற்குவியல்களைய உடைய பெரிய நகரம் ஆனாலும் ஆகும்.)


    “இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா, வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா” என்று மணிமேகலைக் காப்பியம் கூறும்.

    இக்கருத்துகளின் உண்மையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம்; தனி மனிதரின் வாழ்க்கையிலும் காணலாம். இந்தக் கருத்துகள் நாலடியாரில் செல்வம் நிலையாமை என்னும் பகுதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை:


“அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட,

மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச்

சென்று இரப்பர் ஓரிடத்துக் கூழ் எனில், செல்வம் ஒன்று

உண்டாக வைக்கற்பாற்று அன்று” -- நாலடியார்.

    அறுசுவை உள்ள உணவினை, அன்புள்ள மனைவி ;இன்னும் உண்ணுக, இன்னும் உண்ணுக' என்று ஊட்டி உபசரிக்க உண்டு மகிழ்ந்தவர்களின் வாழ்க்கை அப்படியே நிலைத்து இருக்காது. ஒரு நாள் எல்லாம் மாறி வறுமை நிலையை அடைந்து, ஒருவாய்க் கூழுக்காகப் பிறர் வீடு தேடிச் சென்று பிச்சை எடுக்கவும் நேரிடலாம். நிலையற்ற செல்வம் சீமானை ஏழை ஆக்கும். சீமானும் ஏழை ஆவான். செல்வம் நிலையானது என்று கருதக் கூடியது அல்ல.


“யானை எருத்தம் பொலியக் குடை நிழற்கீழ்ச்

சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை

வினையுலப்ப வேறாகி வீழ்வர் தாம்கொண்ட

மனையாளை மாற்றார் கொள”  -- நாலடியார்.

    யானையின் கழுத்து பொலிவு பெறும்படி, குடை நிழலில் பல சேனைகட்குத் தலைவராக ஆரவாரமாய் உலாச்சென்ற மற்றத் தீவினையானது கெடுக்க, அதனால், தாம் திருமணம் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலைகுலைவர்.

    “சொல் தெரியப் பொருள் மறையக் குறையாத தமிழ்நூல்கள்” பலவற்றையும் ஆராய்ந்தால், இத்தகைய எண்ணற்ற சான்றுகளைக் காணலாம். “அவிழ்ச் சுவையே அறிந்து, தமிழ்ச் சுவை அறியாத தம்பங்கள்” இதனைக் கற்றோர்பால் அறிந்து உணரவேண்டும்.  நிலையாமை குறித்து தமது முன்னோர் பாடிவைத்த பாடல்களின் உண்மை நிலையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம். தனி மாந்தரின் வாழ்க்கையிலும் காணலாம்.

    தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொருகால் உயர்ந்த நிலை எய்தலாம் என்றும், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொரு நேரம் தாழ்ந்த நிலை எய்தக் கூடும் என்றும், அறத்தின் இயல்பை, அற நூல்கலைக் கொண்டும் உலகியல் நடைமுறையைக் கொண்டும் ஆராய்ந்தறிந்த அறிஞர்கள் கூறியது மிகவும் உண்மை. 

    தாழ்மையாக – அமைதியாக, அடக்கமாக - பணிவாக வாழ்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மதிக்கப் பெறுவார்கள். அவ்வாறு இன்றி, தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொண்டு ஆரவாரமாகச் செருக்குடன் வாழ்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படுவர். பெருந்தன்மை உடையவர்கள் என்றைக்கும் பணிவாக நடப்பார்கள். அப்படிப்பட்டவர்களே பெருந்தன்மை உடையவர்களாக மதிக்கப் பெறுவர். மாறாக, கீழ்மையாளர்கள் தங்களை மேலாகப் பாராட்டி ஆரவாரப் படுத்திக்கொள்வர். அப்படி வாழ்பவர்கள் கீழோராகக் கணிக்கப்படுவர். தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொள்ளாதவர்கள் பெருமை உடையவர்கள் எனவும், தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொண்டு திரிபவர்கள் சிறுமை உடையவர்கள் என்றும் மக்களால் எண்ணப்படுவர் என்னும் உண்மையைத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்துகிறார்.


“பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.” 


“பெருமை பெருமிதம் இன்மை, சிறுமை

பெருமிதம் ஊர்த்து விடல்” 


என்னும் திருக்குறட்பாக்களின் கருத்தை உணர்தல் வேண்டும்.


    உயர்ந்தோர் தாழ்ந்தால்,உலகுக்குக் கெடுதலே இல்லை. ஆனால் தாழ்ந்தோர் உயர்ந்தோராகி, அதிகாரமும் செல்வமும் கிடைக்கப் பெற்றால், அவருக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் கேடு அமைவது இயற்கை. அறிவற்றவனிடத்தில் பெருஞ்செல்வமானது, அவனது முயற்சி எதுவும் இன்றித் தானே வந்து அமைந்த காலத்தில், தொடர்பு ஏதும் இல்லாத அயலார் அதனை நிறைய அனுபவிக்க, தான் மேற்கொள்ளும் செயலில் எல்லா வகையிலும் ஊடுபாடு உள்ள உறவினர் பசித்து இருப்பர் என்ற இன்னொரு கொடுமையையும் திருவள்ளுவ நாயனார் காட்டுகின்றார்.


“ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர், பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை”      -- திருக்குறள்.


    எனவே, நல்லோர்க்கு உயர்வு வந்தால், நாட்டிற்கும் உலகுக்கும் நன்மை. அல்லவர்க்கு உயர்வு வந்தால், அவருக்கு மட்டுமன்றி, சமுதாயத்துக்கே தீங்கு விளைவிக்கும். இது நடைமுறையில் காண்கின்ற, யாவரும் அறிந்த உண்மை.  ஒருசிலர் தங்கள் பதவியோ செல்வநிலையோ எவ்வளவு உயர்ந்தாலும் அதனால் இறுமாப்போ கொள்ளாமல், தமது முன்னைய நிலையினையும், தாம் சார்ந்து உள்ள சமூகத்தின் நிலையினையும் எண்ணி, தமது பதவி உயர்வாலும், செல்வ வளத்தாலும் பிறருக்குத் தம்மால் இயன்ற வரையில் நன்மைகளை ஆராய்ந்து ஆய்ந்து செயல்படுவர். ஒரு சிலர் அத்தகைய ஆக்கப்பணி செய்யாவிட்டாலும், தமது உயர்வின் செருக்கால் மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள். பிறரைச் சிறுமைப் படுத்திச் சிறுசொல் சொல்லமாட்டார்கள். ஆனால் அற்ப அறிவினர்களுக்கு வாழ்வு வந்தால், அந்த வாழ்வின் செருக்கால் அவர்கள் கெடுவதோடு, சமுதாயத்தையும் கெடுத்து, பல கொடுமைகளைச் செய்வார்கள். 

   இந்திரன் தன் நிலையில்லாத பதவியின் செருக்கால், நெறி பிறழ்ந்து, மாற்றான் மனைவியை அடையும் கொடும் செயலைச் செய்து தாழ்வினை அடைந்தான் என்ற புராண வரலாறு எல்லோரும் அறிந்ததே. திருமயிலையில், திருஞானசம்பந்தர்க்கு அன்பராய் வாழ்ந்திருந்த சிவநேசர் என்னும் அடியாருக்கு,  குபேரனுக்கு ஒத்த செல்வம் இருந்தும், செருக்குக் கொள்ளாமல், சிவனடியார்க்கு அடியவராய் வாழ்ந்து இருந்தார். உலகம் முழுதையும் ஆளும்படியான செல்வத்தைப் படைத்து இருந்தாலும், மேலோர் அமைதியாய் இருப்பர். ஆனால், சிறிது பொருள் கிடைத்தாலும்,  கீழ்மக்கள் களிப்படைந்து செருக்குக் கொண்டு திரிவர். 

 

“சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்.”           --- நாலடியார்.

 இதன் பொருள் ---

      ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும், மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.  ஆனால், முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.   (முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள். முந்திரி என்பது 320-ல் ஒரு பங்கு. காணி என்பது, 80-ல் ஒரு பங்கு.)


“செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்.”

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல். 

இதன் பொருள் ---

       இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்தியபோது, தமது அறியாமை காரணமாக,  தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள். சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள். உறவினர்களையும்,  உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள். எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர, எதிரிகள் வலிமை உடையவர்களாக இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள். தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையராவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர் என்பதை,

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே." 

என்கின்றது "குசேலோபாக்கியானம்" என்னும் நூல்.

      வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும், தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர். 

“தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே.”  --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

      தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவில்லாதார்,  தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர், காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனமாக, உடன் பிறந்த உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய்,  இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?) பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை - நிழல். மாடு - செல்வம்)

    எனவே, சமுதாயம் செம்மை பெற வேண்டுமானால், எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுமானால், நல்லவர் உயர்வு பெற வேண்டும். நல்லவர்கள் எக்காலத்திலும், பிற உயிர்க்கு நன்மையையே விரும்புவார்கள். மேன்மை ஒன்றையே விரும்பி, மேன்மை தரும் செயல்களையே செய்வார்கள். எல்லா உயிரும் விரும்புவது மேன்மையே. எனவே, மேன்மையையே விழைதல் வேண்டும்.

“தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ

மன்உயிர்க்கு இன்னா செயல்” -- திருக்குறள்.

தனக்குத் துன்பம் தருபவை என்று உணர்ந்து இருக்கும் ஒருவன், பிற உயிர்க்கும் துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் எனத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியதை, நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.


18. புல்லோர்க்கு உடம்பு முழுதும் விடம்

“ஈக்கு விடம்தலையில் எய்தும், இரும்தேளுக்கு

வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே, - நோக்கரிய

பைங்கண் அரவுக்கு விடம் பல்அளவே, துர்ச்சனருக்கு

அங்கம் முழுதும் விடமே ஆம்.” — நீதிவெண்பா


ஈக்கு விடமானது தலையிலே பொருந்தியிருக்கும். கருந் தேளுக்கு விடம் அதன் கொடுக்கில். பார்க்க அரிதான பாம்புக்கு விடம் அதன் பல்லில் மட்டுமே பொருந்தியிருக்கும். ஆனால், கெடுமதி படைத்தவர்க்கோ, அவர்கள் உடம்பு முழுதும் விடம் பொருந்தியிருக்கும். (இருந்தேள் - கருந்தேள்.  துர்ச்சனர் - கெடுமதி உடையோர்.)


78. பித்தருக்குத் தமது குணமே மேலிடும்


“எத்தருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும்

     மூடருக்கும் இரக்கம் பாரா

மத்தருக்கும் கொடிதாம்அவ் வக்குணமே

     நற்குணமா வாழ்ந்து போவார்!

பத்தருக்கு நலங் காட்டும் தண்டலையா

     ரேஅறிவார்! பழிப்பா ரேனும்

பித்தருக்குத் தங்குணமே நூலினும்செம்

     மையதான பெற்றி ஆமே.”


இதன் பொருள் ---

    எத்தருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும் மூடருக்கும் இரக்கம் பாரா மத்தருக்கும் - ஏமாற்றுவோரும் உலோபரும்  இழிஞரும் பேதையரும் அருட்பண்பு இல்லாத அறிவு மயக்கரும் ஆகிய இவர்களுக்கு, கொடிது ஆம் அவ் வக்குணமே நற்குணம்ஆ(க) வாழ்ந்துபோவார் - கொடியதான அந்த அந்தக்  குணமே  நற்குணமாகக்  கொண்டு  உலகிலே வாழ்ந்து ஒழிவார்கள்; பத்தருக்கு நலம் காட்டும் தண்டலையாரே இவர் நிலையை அறிவார் - அன்பருக்கு நன்மை பயக்கும் திருத்தண்டலை இறைவரே இவர் நிலையை அறிவார். பழிப்பாரேனும் பித்தருக்குத் தம் குணமே நூலினும் செம்மையது ஆன பெற்றி ஆமே - [இவர்களின் நிலைமையைப் (பிறர்)] பழித்தாலும் வெறியருக்குத் தங்கள் குணமே நூலினும் செவ்வியதாக இருப்பதைப்போல ஆகும்.

விளக்கம் ---

     ‘கொடிறும் பேதையும் கொண்டது விடா' என்பது பழமொழி. இப்பழமொழி திருவசகத்திலும் கையாளப்பட்டு உள்ளது.  "காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு' என்னும் திருவள்ளுவர் வாய்மொழியும் இங்கு நினைக்கத் தக்கது. "தன்னை எல்லாம் அறிந்தவனாக மதித்துக் கொண்டு, பிறரால் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை அறிவிக்கப் புகுபவன், பழிக்கு ஆளாகித் தான் அறியாதவனாகவே முடிவான். அறியும் தன்மை இல்லாத அவன், தான் அறிந்த வரையிலே அறிவு உள்ளவனாகத் தோற்றுவான்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

அற்ப அறிவினை உடையோர் தாம் உண்மையாகவே ஒன்றும் அறியாதவர்களாக இருந்தும், தமக்கு உள்ள கர்வத்தினால், எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை எண்ணிக் கொள்ளுகின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவனுக்கு நல்லறிவைப் புகட்ட, ஒருவர் சென்று உண்மையை உபதேசித்தாலும், அது அவனுக்குப் பயனைத் தராததோடு, சொன்னவர்க்கும் இழுக்கு உண்டாகும். அந்த அற்ப அறிவாளன் தான் உணர்ந்ததையே உண்மை என்று தீர்மானித்து, அதன் வழியே ஒழுகுவான். எனவே, புல்லறிவாளனுக்கு நல்லறிவை எவ்வழியாலும் புகட்ட முடியாது என்று அறியப்படும்.

    பின்வரும் பாடல்களின் கருத்தை இங்கு வைத்து எண்ணுதல் நலம். 

“பூத்தாலும் காயா மரமும் உள, மூத்தாலும்

நன்கு அறியார் தாமும் நனியுளர், - பாத்தி

விதைத்தாலும் நாறாத வித்து உள, பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு. --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

பூத்தாலும் காய்க்கப் பெறாத பாதிரி முதலாகிய மரங்கள் உள்ளன.  அதுபோலவே, வயது முதிர்ந்தாலும் நல்ல நூல்களை அறியாதவர்கள் மிகுதியும் உள்ளனர். எரு இட்டு வரம்பு கட்டப்பட்ட பாத்தியில் விதையினை விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உள. (அவை போல) அறிவில்லாதவனுக்கு அறிவுரைகளை உரைப்பினும் உண்மை உணர்வு அவனுக்குத் தோன்றாது.  (தான் கொண்டதே கருத்து என்பான்).


"கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்

சிலை வரையாகச் செற்றனர் ஏனும் சிராப்பள்ளித்

தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்

நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம்ஆமே."  --- திருஞானசம்பந்தர்.

இதன் பொருள் ---

கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கையினராகிய அவுணர்களின் மும்மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும், திருச்சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவர் அல்லர் என்று நாள்தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?


“ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத

மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க, - மூர்க்கன்தான்

கொண்டதே கொண்டு விடான் ஆகும், ஆகாதே

உண்டது நீலம் பிறிது.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

ஆராய்ந்து வைத்த கருத்தும், உண்மையை அறியும் அறிவும் அறியாத மூர்க்கர்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாது ஒழிக. நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல), மூர்க்கனும் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு விடான்.

மூர்க்கர்கள் பிறர் கூறுவனவற்றைக் கேட்டுத் திருந்தார். ஆராய்ந்த கருத்தும், ஆராயும் அறிவும் உடையார் அறிவுடையோர் ஆவர். பிறர் ஒன்று சொன்னால், அவர் கருத்தின் உண்மையையும் தம் கருத்தின் உண்மையையும் ஆராய்ந்து செம்மை உடையதனை மேற்கொள்ள வேண்டும். எனவே, உண்மையை ஆராயும் உணர்வு, அறிவுடையோர்க்கு இன்றியமையாதது ஆகிறது. நீலம் உண்ட பொருள் தன்னை அடுத்த பொருளையும் நீலமாக்குதல் போல, மூர்க்கன் தான்கொண்ட தவறுடைய அப்பொருளையே பிறருக்கும் போதிக்க முற்படுவான்.


“கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை

நாவாய் அடக்கல் அரிதாகும், - நாவாய்

களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி

வளிதோட்கு இடுவாரோ இல்.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

கள்ளுண்டு தள்ளாடி வருகின்ற குடியர்போல, மரக்கலங்கள் ஆடி அசைந்து கொண்டு இருக்கும் கடல் நாட்டவனே! காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி,  தோள்மேலே போட்டுக் கொள்ளக் கூடியவர்கள் யாருமே இல்லை. அதுபோலவே, பொருத்தம் இல்லாதவைகளைக் கூறுகின்ற, நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கு ஒப்பாரை,  அவரது நாவினை அடக்கிப் பேச வைப்பது மிகவும் அருமையாகும்.

கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது. காற்றைச் சேர்த்து வாங்கித் தோளிலிட வல்லார் இல்லையாதல் போல, நற்குண மில்லாதவர்களின் நாவினை அடக்குதலும் இல்லையாயிற்று.


“பூவாதே காய்க்கும் மரமும் உள, மக்கள் உ(ள்)ளும்

ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே---தூவா

விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே, பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு. “ --- நல்வழி.

இதன் பொருள் ---

பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு. அதுபோல, மனிதர்களுள்ளும், ஏவாமலே இருந்து தாமாகவே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு. ஆனால், தூவி விதைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, விளக்கமாக எடுத்து விளங்கச் சொன்னாலும்,  மூடனுக்கு அதனை அறியும் அறிவு உண்டாகாது. (குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையோர். அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர். )


“பூத்தாலும் காயா மரமும்உள, நன்றுஅறியார்

மூத்தாலும் மூவார்,  நூல்தேற்றாதார் - பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துஉள, பேதைக்கு

உரைத்தாலும் செல்லாது உணர்வு.” --- சிறுபஞ்சமூலம்

இதன் பொருள் ---

பூத்து இருந்தாலும் காய்க்காத மரங்களும் உண்டு. அதுபோல, நன்மையறியாதவர் ஆண்டுகளால் முதிர்ந்தாலும், அறிவினால் முதிர்ந்து இருக்கமாட்டார். அவர்கள் அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர்கள். பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத வித்தும் உண்டு. அது போல, அறிவில்லாதவனுக்கு நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது.


“கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்  

குற்றம் தமதே, பிறிதுஅன்று, முற்று உணர்ந்தும்  

தாம்அவர் தன்மை உணராதார் தம்உணரா  

ஏதிலரை நோவது எவன்.”    --- நீதிநெறி விளக்கம். 

இதன் பொருள் ---

தாம் படித்த நூற்பொருள்களை, படிக்காத மூடர்களுடைய காதில் நுழைப்பதனால், அவமானம் உண்டாகும். அந்தக் குற்றம் கற்றவர்களையே சாரும். பிறரைச் சாராது. எல்லாம் தெரிந்திருந்தும், அம் மூடர்களுடைய மூடத் தன்மையை உணராதவர்கள், தம்மைக் கற்றவர்கள் என்று உணர்ந்து கொள்ளாத அம்மூடர்களை நொந்து கொள்வது ஏன்?

நன்றாய்ப் படித்து எல்லாம் தெரிந்திருந்தும் கூடத் தம் அறிவுரைகளை அம்மூடர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்று அறிந்து கொள்ளாமல் போனால், அம்மூடர்கள் எவ்வாறு, ‘இவர்கள் படித்தவர்கள்: ஆதலால், இவர்களுக்கு மதிப்புக் கொடுத்து இவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வார்கள் என்பது இதன் கருத்து.


“அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருள்அல்லா

ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும், பால்கூழை

மூழை சுவை உணரா தாங்கு.” --- நாலடியார்.

இதன் பொருள் ---

பால் சோற்றின் அருமையை அதை உண்பவர்களே அறிவர். அல்லாது, அதைச் செய்யும் அகப்பைக்குத் தெரியாத்து போல, கருணை மனமும், கல்வி ஞானமும், அன்பு உள்ளமும் கொண்ட பெரியோர் கூறம் சொற்களின் பெருமையைக் கற்று அறிந்த மக்களே உணர்வர். அறிவில்லாதவர்கள் அதனை வெறும் சொல்லாகவே எண்ணி இகழ்வர். 


“கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்

குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க

கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்

மனம்புரிந்த வாறே மிகும்.” --- நாலடியார்.

இதன் பொருள் ---

நொய்யரிசியைத் தவிடுபோகத் தெள்ளிக் கொழித்து, வேளை தவறாமல் கொடுத்து வந்தாலும், குப்பையைக் கிளறித் தின்னவே கோழியானது போகும். அதுபோல, என்னதான் பெரிய, உயர்ந்த அறிவு நூல் கருத்துக்களை எடுத்துக் கூறினாலும், கீழ்மக்கள் காதில் அது ஏறாது. அவர்கள் தங்களுக்கே இயல்பான இழிதொழில்களைச் செய்துகொண்டுதான் இருப்பர்.


“உறுதியை உரைத்தனன், உணர்வு இலாதவன்

வறிது எனை இகழ்ந்தனன், வருவது ஓர்கிலன்,

இறும் வகை நாடினன், யாது ஒர் புந்தியை

அறிவு இலர்க்கு உரைப்பவர் அவரில் பேதையோர்.” --- கந்தபுராணம், சூரன் அமைச்சியல் படலம்.

இதன் பொருள் ---

    (சூரபதுமன் தன்னை இகழ்ந்து பேசியது குறித்து, சிங்கமுகன் தனக்குள் எண்ணியது) நன்மை தருவதை நான் சொன்னேன். நல்லுணர்வு இல்லாத இவன் என்னை வீணாக இகழ்ந்தான். பின்னால் வரப்போவதை இவன் ஆராயவில்லை. அழிந்து போகும் வகையையே இவன் நாடுகின்றான். அறிவில்லாதவர்க்கு நல்ல புத்தியைப் புகட்டுகின்றவர்கள், அவரை விடவும் அறிவில்லாதவரே ஆவர்.


“உய்த்தனர் தேன் மழை உதவிப் போற்றினும்

கைத்திடல் தவிருமோ காஞ்சிரங் கனி,

அத்தகவு அல்லவோ அறிவு இலாதவன்

சித்தம் அது உணர் வகை தெருட்டுகின்றதே.” --- கந்தபுராணம். சூரன் அமைச்சியல் படலம்.

இதன் பொருள் ---

எட்டிப் பழத்தை, தேனில் தோய்த்துப் பாதுகாத்தாலும் அதன் கசப்புத் தன்மையில் மாறாது. அதைப் போன்றதுதான், அறிவில்லாத இவனுக்கு அறிவைத் தெளிவிக்க முயல்வதும். (என்று சிங்கமுகன் எண்ணினான்)


“கல்வி, தூய நெஞ்சு இலாத அச் சுயோதனன் 

கழறிய மொழி கேட்டு,

வில் விதூரன், 'இவ் வேதியன் மொழிப்படி

    மேதினி வழங்காமல்,

புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் 

புகலும் வாசகம் கேட்கின்,

செல்வி தூரியள் ஆய்விடும்; சுற்றமும், 

சேனையும், கெடும்' என்றான்.” --- வில்லிபாரதம், உலூகன் தூதுச் சருக்கம்.

இதன் பொருள் ---

    கல்வி அறிவினாலே, குற்றமற்றுச் சுத்தமான மனம் இல்லாத, அந்தத் துரியோதனன் உறுதியாகச் சொன்ன, அவ் வார்த்தையை, வில்வித்தையில் வல்ல விதுரன் கேட்டு, துரியோதனனை நோக்கி, "இந்த அந்தணனது வார்த்தையின்படி, பாண்டவருக்குப் பூமியைக் கொடாமல்,  இழிவான விதூஷகர்களைக் காட்டிலும் அறிவில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பாயானால், உனக்குத் திருமகள் தூரத்தில் உள்ளவளாய் விடுவள். உனது சுற்றமும் சேனைகளும் போரில் அழியும்" என்று சொன்னான்.


நீதியால் தொழுதல்

நீதியால் தொழுதல்

----


மனிதன் தனது தேவைக்கேற்ப வருவாய் வந்து கொண்டிருக்கும் வரையில் நேர்மை உடையவனாக, ஒழுக்க நெறியில், அறத்தின் வழிச் செல்பவனாக வாழ்கிறான். தேவைகள் மிகுதிப்படுகின்ற சூழல் நேர்ந்து, தனது வருவாயைக் கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது, அதுவரையில் அவன் வாழ்ந்து வந்த திசைமாறுகிறது. அவனது சிந்தனை முழுதும் தேவைகளை நிறைவு செய்து கொள்வதைப் பற்றியே இருக்கிறது. அக்கம்பக்கத்தில் உள்ளோரைச் சற்றே எண்ணிப் பார்க்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாழ்க்கை தடுமாற்றம் அடைந்து தடம் மாறத் தொடங்குகிறது. முன்னாலே அவனுக்குத் தோன்றிய நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கத் தொடங்குகிறான். 


"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,

பசுஏது, பாசம்ஏது,

பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,

பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,

மனம்விரும்பு உணவு உண்டு, நல்

வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு

மலர்சூடி, விளையாடி,மேல்

கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு

கலந்து மகிழ்கின்ற சுகமே

கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்

கயவரைக் கூடாது அருள்,

தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே"

என்று வள்ளல்பெருமான் பாடியபடி பலர் இக்காலத்திலும், ‘தேகமே ஆத்மா, போகமே மோட்சம்’ என்று உலகாயதம் மேலிட்டு வாழ்ந்துகொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குப் பெயர் ‘பகுத்தறிவு’ என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

    கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள் உலகாயதர்கள் எனப்படுவர். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்பதில்லை. நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் தொடர்பினால் ஆகியதே உடம்பு என்பர்.  அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்பதுன்பங்கள் என்பதும் பொய்.  இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால்,  இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.

    இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடு விடம்" என்றார் மணிவாசகப் பெருமான். ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர். 

இந்தத் தடுமாற்றத்தைத் தடுக்கவே சமயநெறி மனிதனுக்குத் தேவைப்படுகிறது. "ஒழுக்கம் விழுப்பம் தரலால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். வாழ்க்கையில் சின்னச் சின்னத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது ஒழுக்கநெறி சிதைகின்றது. இப்படி மனிதனது மனத்திலே தோன்றும் தீய எண்ணங்களுக்கும், தடுமாற்றமான, தெளிவில்லாத சிந்தனைகளுக்கும் சமயநெறியிலே இடம் இல்லை. சமயச் சார்பு இல்லாத ஒழுக்கநெறி, காது இல்லாத ஊசியைப் போன்றது. மணல்பரப்பின் மீது கட்டப்பட்ட கட்டிடம் போன்றது.

மனிதனை மனிதன் வஞ்சித்து ஏமாற்றி வாழ்கின்ற சிந்தனை முதலில் தோன்றுகிறது. சிந்தனை செயலாக வந்த பின்னர், செயலைத் திருத்த முற்படுகிறது சட்டம். குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது சட்டம். குற்றத்திற்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை முதலிலேயே மாற்றி, நல்வழிப் படுத்த உதவுகிறது சமயம். மனித வாழ்க்கை எப்பொழுதுமே குறைவு உடையதுதான்.  எல்லாருக்கும், எவ்வகையிலாவது குறைவு இருந்துகொண்டேதான் இருக்கும். குறைவிலா நிறைவாக உள்ளவன் யார் என்பதைக் துருவித் துருவி ஆராய்கின்ற பொழுது, ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் ஒருவன்தான் என்ற முடிவு ஏற்படும். எனவேதான், “குறைவு இலா நிறைவே, குணக்குன்றே” என்றும், குறைவிலா நிறைவே, கோதிலா அமுதே” என்றும் இறைவனைப் பாடினார்கள். இறைவன் குறைவு அற்றவனாக, அன்பே உருவாக, இன்பமே வடிவினனாக இருக்கின்றான். இத்தகு பொருளை மனிதன் சார்ந்திருந்தால், அவனும் குறைவு இல்லா நிறைவு உடையவனாக ஆகிவிடுகின்றான். இறைவனைச் சார்வதற்குச் சமயநெறியும், வழிபாடும் உறுதுணை ஆக நிற்கின்றன.

    இருட்டு அறையில் உள்ள குருட்டுக் குழந்தையைப் போல் உயிரானது அறியாமை என்னும் அஞ்ஞான இருளில் அவதிப்படுகின்றது. “காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டிருந்த எமை” என்பார் தாயுமான அடிகளார். ஊனத் திரளில் நாம் ஒன்றுபட்டு இருக்கின்றோம். ஞானத்திரளாக நிற்கும் இறைவனைத் தொழுவதன் மூலம், அறியாமையாகிய ஊனத்திரள் நீங்கப் பெறும். “ஞானத் திரளாய் நின்ற பெருமான், நல்ல அடியார்மேல் ஊனத் திரளை நீக்கும், அதுவும் உண்மைப் பொருள் போலும்” என்று பாடுகிறார் திருஞானசம்பந்தப் பெருமான். துன்பத் தொடக்கில் தொல்லையுறும் உயிர், அதிலிருந்து விடுதலை பெற்று, இன்பத்தில் திளைத்து மகிழ்கிறது. அது சாதாரண இன்பம் அல்ல. சிறிது நேரமே நிலைத்து இருக்கக் கூடிய இன்பம் அல்ல. மறவா, நினையா, அளவு இல்லா, மாளா இன்பம் அது. 

    இறைவனைத் தொழுதல் இறைவனுக்காக அல்ல. அவன் பெறக்கூடியது ஒன்றுமில்லை. இறைவனைத் தொழுதல் உயிரின் நன்மைக்கும் வளர்ச்சிக்குமே ஆகும். இறைவனைத் தொழுதல் என்றால் உடனடியாகச் சடங்குகளே நினைவுக்கு வரும். சடங்குகள் சமயம் ஆகமாட்டா. அவையே இறைவனைத் தொழுதலும் ஆகா. ஆனால் அவையின்றியும் சமய வாழ்வு அமையாது. கடவுளைத் தொழுதலும் ஆகாது. சடங்குகள் சமயவாழ்க்கைப் பயிற்சிக்குத் தொடக்க நிலையில் துணை செய்வன. வழிபாட்டுணர்வில் நிலைத்து நிற்கக் காப்பாக அமைவன. இறைவனைச் சடங்குகளால் தொழும் அளவிலேயே தொழுகை முற்றுப்பெறாது. சடங்குகள் தொடக்க நிலையின. சமய வாழ்க்கையானது சீலத்தால், நோன்பால், செறிவால், அறிவால் என்று முழுமை பெறுகிறதோ அன்றே இறைவனைத் தொழுதல் முழுமை எய்துகிறது.

    இறைவனைச் சடங்குகளால்தான் தொழுதல் வேண்டும் என்பது நாடகத்தால் அடியார்போல் நடிப்பதாகவே முடியும். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் அழுக்காறு அடங்கவில்லை.  ஆசைகளால் அலைப்புண்டு வாழ்கின்றனர். வெகுளியால் வெந்து அழிகின்றனர். கடுமொழி பேசுகின்றனர். ஆங்காரம் மேலிட்டு, பகைமை உணர்வால் பலருக்கும் துன்பம் செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மனிதரில் “பொக்கு” போன்றவர். “பொக்கு” என்றால் உள்ளீடில்லாத பதர், “பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன்” என்பது அப்பர் பெருமான் வாக்கு. இத்தகையோர் சமய வேடங்கள் பூணலாம். ஆரவாரமான சமய சடங்குகளைச் செய்யலாம். அது இறைவனைத் தொழுதலாகாது. “சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி, தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று, விழுந்து கிடப்பேனை” என்று மணிவாசகப் பெருமான் அருளியது காண்க.

    திருஞானசம்பந்தர் இறைவனைத் தொழும் நெறி இன்னது என்று காட்டுகிறார். நூறாயிரம் சடங்கை விட, புலன்களால் நின்றொழுகும் பண்பு இருந்தால் மட்டுமே  பயன் உண்டு. இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலாதவன், நீதியின் வடிவம் ஆனவன். அவனை கல்விச் செருக்காலும், செல்வச் செருக்காலும் அடைய முடியாது உண்மை அன்பு ஒன்றினால் மட்டுமே அடைதல் கூடும். “பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே” என்று மணிவாசகப் பெருமான் அருளியது காண்க. “நீதியும் நீயே” நக்கீரதேவர் அருளிய பெருந்தேவபாணி.

    உயிர்க்குலம் அனைத்துக்கும் ஊறு செய்யாத தத்துவமே நீதி. “தயா மூல தன்மம் எனும் தத்துவத்தின் வழி நின்று, சார்ந்தோர்க்கு எல்லாம் நலம் கொடுக்கும் நம்பி” என்று இறைவனைப் போற்றுவார் அப்பர் பெருமான். அந்த வழியையே இறைவன் தனக்கு நல்கியதாகவும், “தயாமூல தன்மவழி எனக்கு நல்கி மனம் திருத்தும் மழபாடி வயிரத் தூணே” என்றும் இறைவனைப் பாடி உள்ளார். பிறரை வாழ்விப்பதில் வாழ்வதுதான் நீதி. இத்தகைய நிறைந்த நீதியாய் வாழ்கின்ற வாழ்க்கை முறையால் இறைவனைத் தொழுதால், வினைச் சார்பு வராது என்கிறார் திருஞானசம்பந்தர். வினையே ஆடவர்க்கு உயிரே” என்றாற்போல, செயல் புரிவது உயிரின் இயற்கை. செயல் மாண்டு அடங்குதல் மனித வாழ்வின் மேம்பட்ட நிலை. செயல்வழித் தவம் செய்தல் வேண்டும். அதாவது வினை செய்தலில், தவம் செய்தலே சிறந்தது. வினை செய்தால் அவ்வழி பற்றும் பாசமும், இன்பமும் துன்பமும் வரும். அதனால் உயிரரானது மன அலைவுகளுக்கு ஆளாகும். ஆனால், நீதியால் நின்று வினை செய்யும்பொழுது, அந்த வினை செயலைப் பெருக்குவதைவிட செயல் மாண்டு அடங்கத் துணை செய்கிறது. 

அதுவே, இறைவனைத் தொழும் முறை என்பது திருஞானசம்பந்தர் காட்டுகிறார்.


“போதியார் பிண்டியார் என்று இவர் பொய்ந்நூலை

வாதியா வம்மின், அம் மாஎனும் கச்சியுள்

ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்

நீதியால் தொழுமின், நும் மேல்வினை நில்லாவே.”

    போதிமர நிழலில் அமர்ந்த புத்தனை வணங்குவோரும், அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தசமண மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய மாமர நீழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள் விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். உங்கள் மேல் வரும் வினைகள் நில்லா.

    உமது வினைகள் முற்றிலும் அழிந்து ஒழியவேண்டுமானால், நாளும் வழிபடவேண்டிய முறையால் வழிபடவேண்டும் என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.


“நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்,

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்

தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்

காள கண்டன் உறையும் தண்கழுக் குன்றமே.”

     நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து, முழுதும் ஒழிதற்பொருட்டு, தோள்கள் எட்டினையும் உடைய, சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை உடையவனாகிய, நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை, நாள்தோறும், முறைப்படி, நெடிது நின்று வழிபடுமின்கள்.


    நீதியால் தொழுதல் குறித்துத் திருஞானசம்பந்தப் பெருமான் மேலும் தெளிவாக ஒரு பாடலில் காட்டுகின்றார்.


“ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய 

சொல்லை ஆறி, தூய்மை செய்து, காமவினை அகற்றி, 

நல்ல ஆறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த, 

வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!” 


    திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! உள்ளத்தில் பரபரப்பு (வேகம்) அடங்கப் பெற்று, மனதை ஒருமுகப்படுத்தி, கள்ளத்தனம், கபடம், வஞ்சகம் நீங்கி, கடுமையான சொற்களைத் தவிர்த்து, மனதைத் தூய்மைப்படுத்தி, காம உணர்வுகளை நீக்கி, நல்லமுறையில் உமது திருநாமம் ஆகிய திருவைந்தெழுத்தை நாவாரச் சொல்லி வழிபடுகிறேன். அடியேனுக்குத் தகுதிக்கு ஏற்ப வந்து அருள் புரியவேண்டும்.

    வேகம் அடங்கினால் விவேகம் பிறக்கும் என்பதால், “ஒல்லை ஆறி” என்றார். “வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்” என்றார் மணிவாசகப் பெருமான். பரபரப்பு கூடாது. பரபரத்தல் என்னும் சொல்லுக்கு, தீவிரப்படல், மிகவிரைதல், தன்வசம் அழிதல் என்று பொருள். வாழ்க்கையில் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி பெற்று அமைதியும் இன்பமும் சூழ வாழ விரும்பினால் பரபரப்பு உணர்ச்சி கூடாது. 

    முதலில் பரபரப்பு அடங்கவேண்டும், இரண்டாவதாக உள்ளம் ஒருமைப்பட வேண்டும். மூன்றாவதாக, கள்ளத்தனம் கூடாது. நான்காவதாக, வெய்ய சொல் கூடாது, ஐந்தாவதாக மனம் தூய்மை ஆக வேண்டும். ஆறாவதாக காம உணர்வுகள் கூடாது. இந்த நிலையில் இறைவனைத் தொழுவதே “நீதியால் தொழுதல்” ஆகும்.


17. நயமான சொல்லால் நன்மையே

“நாவின் நுனியில் நயம்இருக்கின், பூமாதும்

நாவினிய நல்லோரும் நுண்ணுவார்; - நாவின்நுனி

ஆங்கடினம் ஆகில், அத்திருவும் சேராள்,முன்

ஆங்கே வரும்மரணம் ஆம்.” — நீதிவெண்பா


நாக்கின் நுனியில் இனியசொல் இருக்குமானால் மலர்மகளும், இனிய சொல்லை உடைய நல்லோரும் நெருங்கி இருப்பர்.  அல்லாமல், நாக்கு நுனியானது வன்சொற்கள் பேசி வலிதாகுமானால், மலர்மகளும் சேரமாட்டாள்.  அதனால் இறப்பும் வரும். (நயம் - இனிய சொல்.  பூமாது - மலர்மகள், இலக்குமி.)


77. சோறு என்ன செய்யும்?


“சோறென்ன செய்யும்? எல்லாம் படைத்திடவே

     செய்யும்! அருள் சுரந்து காக்கும்!

சோறென்ன செய்யும்? எல்லாம் அழித்திடவே

     செய்யும்! அதன் சொரூபம் ஆக்கும்?

சோறென்ன, எளிதேயோ? தண்டலையார்

     தம்பூசை துலங்கச் செய்யும்

சோறென்ன செய்யுமெனில், சொன்னவண்ணம்

     செயும்! பழமை தோற்றுந் தானே.”


இதன் பொருள் ---


        சோறு  என்ன செய்யும் - உணவு  என்னத்தைச் செய்யும்?, எல்லாம் படைத்திடவே செய்யும் - எப்பொருளையும் ஆக்குமாறு புரியும், அருள் சுரந்து காக்கும் - அருள் மிகுந்து காப்பாற்றும், சோறு என்ன செய்யும் - உணவு  என்னத்தைச் செய்யும்?  எல்லாம் அழித்திடவே செய்யும் - எப்பொருளையும் அழிக்குமாறு புரியும், அதன் சொரூபம் ஆக்கும் - உணவின் வடிவம் ஆக்கும், சோறு என்ன எளிதேயோ - உணவு அவ்வளவு அற்பமா? தண்டலையார் தம் பூசை துலங்கச் செய்யும் - தண்டலையாரின் வழிபாடு விளக்கமுறப் புரியும், சோறு என்ன செயும் எனில் - உணவு  என்னத்தைச் செய்யும்? என்றால், சொன்னவண்ணம் செயும் - நாம்  கூறியவாறு முடித்துத் தரும், பழமை தோற்றும் - பழமையை உண்டாக்கும்.


      ‘சோற்றுக்கு இல்லாச் சுப்பன் சொன்ன எல்லாம் கேட்பான்' என்பது பழமொழி. ‘உணவின் பிண்டம்' ஆகையால், அதன் சொரூபம் ஆக்கும் என்றார். தாம் அளிக்கும் உணவுக்காகத் தம்மைப் பழைமையான உறவினர் என்று கூறி வருவோரை நோக்கிப் ‘பழமை தோற்றும்' என்றார். சோறு என்னும் சொல்லுக்கு மெய்யுணர்வு அல்லது ஞானம் என்று ஒரு பொருள் உண்டு. “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்பது அப்பர் தேவாரம். தில்லையைத் தரிசிக்க முத்தி என்பர். தில்லையம்பலத்தைத் தரிசித்தோர்க்கு முத்தி கிடைக்கும் என்பதே இதன் பொருள். 


“தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்

சாதியும் வேதியன் தாதைதனை தாளிரண்டுஞ்

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்

பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.” -- திருவாசகம்.


16. எதனையும் ஆராய்ந்து செய்க


“செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச்

செய்யின், மனத்தாபம் சேருமே; - செய்யஒரு

நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்

பொற்கொடியைச் சேர்துயரம் போல்.” — நீதிவெண்பா


செய்கின்ற செயலை நன்றாக ஆராய்ந்து செம்மையாகச் செய்தல் வேண்டும். வேறு விதமாகச் செய்தால் வருத்தம்தான் சேரும். முன் ஒரு காலத்து நல்ல குழந்தை ஒன்றைச் செம்மையாகப் பாதுகாத்துக் கொண்டு இருந்த கீரிப்பிள்ளையை ஆராயமல் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்குச் சேர்ந்த துன்பம் போன்றதாகும் அது. (மனத் தாபம் - வருத்தம், துன்பம். நற்குடி - நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை. நகுலன் - கீரிப்பிள்ளை.)


பொற்கொடி நகுலனை ஆராயாமல் கொன்ற கதை.


முன்ஒரு காலத்தில் ஒரு பார்ப்பனப் பெண் தனக்குக் குழந்தை இல்லாமையால், ஒரு கீரிப் பிள்ளையைக் குழந்தைபோல் பாவித்து அன்போடு வளர்த்து வந்தாள். சில ஆண்டுகள் கழித்து அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது.  குழந்தை பிறந்தாலும் கீரிப்பிள்ளையிடம் அன்பு குறையாமல் அதையும் வளர்த்து வந்தாள். ஒரு நாள் தன் குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தூங்கவைத்து, அதற்குக் காவலாகக் கீரிப்பிள்ளையைப் பக்கத்தில் விட்டுவிட்டு, நீர் கொண்டு வரக் குடத்தை எடுத்துக் கொண்டு குளத்திற்குச் சென்றாள்.  அச்சமயத்தில் குழந்து உறங்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து வந்தது. அதனைக் கண்ட கீரிப்பிள்ளை அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் கொன்றது.  கீரிப்பிள்ளையின் வாயில் இரத்தம் ஒழுகியது. அந்த நிலையில் தன் எசமானியிடம் தன் மகிழ்ச்சியைக் காட்ட எண்ணி வெளியில் வந்தது. நீர்க்குடத்தோடு வந்த பார்ப்பனி, கீரிப்பிள்ளையின் வாயில் இரத்தம் ஒழுகுவதைக் கண்டு, குழந்தையைத் தான் கீரிப்பிள்ளை கொன்று விட்டது என்று எண்ணி, நீர்க்குடத்தை அதன்மேல் போட்டு உடைத்தாள்.  கீரிப்பிள்ளை இறந்து விட்டது. உள்ளே சென்று பார்த்தாள்.  குழந்தை உயிரோடு இருந்ததையும், பாம்பு இறந்து கிடந்ததையும் பார்த்தாள்.  தன் குழந்தையைக் காப்பாற்றவே, கீரிப்பிள்ளை பாம்பைக் கடித்துக் கொன்றது என உணர்ந்து, ஆராயாமல் கீரிப்பிள்ளையைக் கொன்றதை நினைந்து வருந்தி உயிர் துறந்தாள்.


76. சுகம் படுக்கை அறியாது

தானவனா கியஞானச் செயலுடையார்

     மாதர்முலை தழுவி னாலும்

ஆனதொழில் வகைவகையாச் செய்தாலும்

     அனுபோகம் அவர்பால் உண்டோ?

கானுறையுந் தண்டலையார் அடிபோற்றும்

     சுந்தரனார் காமி போலாய்

மேனவிலும் சுகம்படுக்கை மெத்தையறி

     யாதெனவே விளம்பி னாரே.


இதன் பொருள் ---

    கான் உறையும் தண்டலையார் அடிபோற்றும் சுந்தரனார் - மணம் தங்கிய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் திருவடியை வணங்கும் சுந்தரமூர்த்தி நாயனார், காமி போலாய் - காமுகனைப் போல் நடந்துகொண்டு, மேல் நவிலும் படுக்கைச் சுகம் மெத்தை அறியாது எனவே விளம்பினார் - உயர்த்திக் கூறப்படும் படுக்கை இன்பத்தைப் பஞ்சணை அறியாது (மெத்தை போலவே தாம் இருப்பதாக) என்று கூறினார்; (ஆகையால்) தான் அவன் ஆகிய ஞானச் செயல் உடையார் - தாமும் இறைவனும் ஒன்றெனும் உணர்வு வந்த அறிவுச் செயல் உடையோர், மாதர்முலை தழுவினாலும் - பெண்களைக் கூடினாலும், ஆனதொழில் வகை வகையாச் செய்தாலும் - கலவிக்குரிய தொழில்களை வகைவகையாகப் புரிந்தாலும், அவர்பால் அனுபோகம் உண்டோ - அவர்களிடம் அந்த இன்பப் பற்று இராது.

      துறவிகள் உலகத்தோடு கலந்திருந்தாலும் பற்று அற்றவராகவே இருப்பார்கள் என்பது கருத்து. கான் என்னும் சொல்லுக்கு மணம் என்று பொருள் உண்டு.

        தவவேடம் பூண்டு, தவநெறியில் நின்று ஒழுகி, எப்போதும் இறைவனையே தியானம் செய்து வாழ்கின்ற துறவிகளுக்குப் பல படைக்கலங்கள் துணையாக இருக்கின்றன. அவர்களுக்குத் தாடி ஒரு படை. உடம்பில் பூசியிருக்கும் திருநீறு ஒரு படை, கழுத்தில் அணிந்துள்ள உருத்திராட்சம் ஒரு படை. பகைவர்கள் இவற்றைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.  புறத்திலே துறவுக்கு உரிய கோலத்தைப் புனைந்து கொள்வது அகத்திலே கொண்ட திண்மைக்கு அடையாளம். மனத்திற்குள் துறவுத் தன்மை இன்றி, வெறும் புறக்கோலம் மாத்திரம் இருந்தால் அவர்கள் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள். வெற்று வேடத்தால் பயன் இல்லை. "வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என்ன பயன்?"என்கின்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.

 "மனத்தகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகள்,

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார்,

மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுனயோக ஞானிகள் 

முலைத்தடத்து இருப்பினும் பிறப்பு அறுத்து இருப்பரே”  

என்று பேசுகிறார் சிவவாக்கியர். 

      மனசிலே மாசு இல்லாத உண்மை ஞானிகள் மகளிருக்கு அருகில் இருந்தாலும், அவர்களுடைய மார்பிலே பழகினாலும் மனத்திலே அழுக்கு உறாமல் இருப்பார்கள். 'அது எப்படி?' என்று கேட்கலாம். குழந்தைகள் இருப்பது இல்லையா? பெண்களின் மார்பிலே தவழ்ந்து கிடக்கிற குழந்தைகளுக்குக் காம உணர்ச்சி உண்டாவதில்லை. அந்த நிலையில் இருப்பவர்கள் உண்மை ஞானிகள். அவர்கள் எல்லாவற்றையும் துறந்தவர்கள்,  புலன்களை எல்லாம் வென்றவர்கள். முனிவர்கள் பொறிகளை அடக்கியவர்கள். புலன் இன்பங்களை வேண்டாம் என்று உதறியவர்கள். அவர்கள் உள்ளத்தில் வீரம் மிக்கவர்கள். 


15. கற்றோர் பெருமை

“கற்றோர் கனம்அறிவர் கற்றோரே, கற்றறியா

மற்றோர் அறியார், வருத்தமுறப் - பெற்றறியா

வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்

நொந்துஅறிகு வாளோ நுவல்.” — நீதிவெண்பா


துன்பப்பட்டுப் பிள்ளையைப் பெறும் துயரத்தை, பிள்ளை பெறாத மலடி பரிவோடு தெரிந்து கொள்வாளோ? அவள் பிள்ளை பெறும் துன்பத்தை அறிய மாட்டாள். அதுபோல, கற்றறிந்த பெரியவர்களின் பெருமையை, கற்றறிந்த பெரியோரே அறிவர். கற்றறியாத மற்றவரால் அறிந்து கொள்ள முடியாது.

(கனம் - பெருமை.  வந்தி - மலடி.   பரிவு - இரக்கம்.)


75. ஊரில் ஒருவன் தோழன்

“சீரிலகும் தண்டலையார் வளநாட்டில்

     ஒருதோழன் தீமை தீர

வாரமிகும் பிள்ளைதனை அரிந்துண்டான்

     ஒருவேந்தன் மணந்து கொண்ட

ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி

     வடிவுகொண்டாள்! ஆகை யாலே

ஊரிலொரு வன்தோழன்! ஆரும்அற்ற

     தேதாரம்! உண்மை தானே?”


இதன் பொருள் ---


        சீர் இலகும் தண்டலையார் வளநாட்டில் - அழகுமிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் வளமிக்க நாட்டிலே, ஒரு தோழன் தீமை தீர வாரம் மிகும் பிள்ளைதனை அரிந்து உண்டான் - ஒரு நண்பனுடைய பொல்லாங்கு நீங்க அன்பு மிகும் குழந்தையை அரிந்து உண்டான், ஒரு வேந்தன் மணந்துகொண்ட ஆர்வமிகும் மனைக்கிழத்தி ஆண்டிச்சி வடிவு கொண்டாள் – ஓர் அரசன் மணம் புரிந்துகொண்ட அன்பு மிக்க இல்லக்கிழத்தி ஆண்டிச்சியின் கோலங் கொண்டாள். ஆகையாலே, ஊரில் ஒருவன் தோழன் - ஆகையால் ஊரில் ஒருவனே நண்பனாகத் தக்கவன், (பலர் இருக்க இயலாது), ஆரும் அற்றதே தாரம் - எவரும் ஆதரவாக இல்லாதவளே மனைவியாகத் தக்கவள்; உண்மைதானே - இது வாய்மையானதே ஆகும்.


      ‘ஊரில் ஒருவனே தோழன்; ஆரும் அற்றதே தாரம்' என்பது பழமொழி. இப்பாடலில் குறித்த இரு கதைகளும் இன்னது என்று அறியக் கூடவில்லை. அறிந்தார்பால் கேட்டு அறியவும். 


சிறுகாலையே அறம் செய்க

சிறுகாலையே செய்க

---


    'அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. அறிவு ஒன்றே மனிதனை மனிதனாக வாழவைப்பது. அறிவு ஒன்றே நல்ல சமுதாய வாழ்வை அளிப்பது. நாயனார் இத்தகைய மேலான அறிவுடைமையைக் கல்வி, கேள்விகளுக்கு அடுத்து அரசியலில் அமைத்துள்ளார். அற்ப அறிவு உடையவர்கள் உலகத்தில் அரசியலில் வாழ்கின்றார்கள். அவர்களை எங்கே சேர்ப்பது என்ற வினா தொடர்ந்து எழுவதும் நியாயமானதுதான்.  பின்னால் நட்பியலில் இதற்கு விடை பகருகிறார் நாயனார். புல்லறிவாளன் அவன் வாழும் வரையில் அவனுக்கும் அவன் சார்ந்து உள்ள சமுதாயத்துக்கும் ஒரு நோயாக இருப்பதோடு,  பேயாக எண்ணி ஒதுக்கவும் செய்யப்படுவான் என்கிறார். 


“ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர்

போஒம் அளவும் ஓர் நோய்.” -- திருக்குறள்.


(பெரியோர் சொல்லி இயக்கினாலும் செய்யமாட்டாதவனாய், தானாகவும் தெளிந்து செய்யாதவனாய் மதிக்கத் தக்கதாகிய, ஓர் உயிர் என்று மட்டுமே கொள்ளுதற்கு உரிய அப் பேதையின் மூச்சு, உடலில் இருந்து நீங்கும் வரையிலும் பொறுக்க முடியாத பெரும் துன்பம்)


“உலகத்தார் உண்டு என்பது, இல் என்பான், வையத்து

அலகையா வைக்கப் படும்.” -- திருக்குறள்.


(உயர்ந்தோர் உண்டு எனச் சொல்வதை, இல்லை என்று கூறுகின்ற அறிவிலியானவன், உலகத்தில் ஒரு பேயாக எண்ணி விலக்கப்படுவான்.)


    அறிவே இல்லாதவன் எத்தனையோ வகையில் மேம்பட்டவன். ஆனால் இந்தப் புல்லறிவாளனோ தானும் வாழ்வில் ஏமாந்து உலகையும் ஏமாற்றுவான். அதனால்தான், திருவள்ளுவ நாயனாரோடு,  நாலடியாரும் புல்லறிவாண்மையைச் சுட்டிக் காட்டி உலகைத் திருத்த நினைக்கின்றனர்.  வருமுன் காக்கும் திறமே சிறந்தது. எல்லோராலும் போற்றப் பெறுவதும் அதுவே. பெறுதற்கரிய மக்கட்பிறவியைப் பெற்று, உயிர் வளர்ச்சியில் உச்சத்தில் நிற்கும் மனிதன், சமுதாயத்துக்கும் தனக்கும் ஆற்ற வேண்டியவற்றை எண்ண வேண்டும். உலகவாழ்வு செம்மையாக வழிகாட்டுவது அறிவுடையோர் செயல் ஆகும். அதற்குத் தனி மனிதவாழ்வு செம்மையுற வேண்டும். அந்தச் செம்மை நலம் நாடி, வாய்ப்பு உள்ளபோதே நல்ல செயல்களைச் செய்தல் அறிவுடைமை ஆகும். 

    உயிரின் பயணம் நீண்ட நெடிய ஒன்று. அப்பயண வழியில் உணவு விடுதிகள் இல்லை. தொலையா வழிக்குப் போகின்றவன், முன் எச்சரிக்கையாக, அந்த நீண்ட நெடும் பயணத்துக்குத் தேவையான உணவைச் சேகரித்துத் தோளில் சுமந்து செல்ல வேண்டும். இதைப் பொதி சோறு என்பர். வருங்காலத்துக்குப் பொதிந்து வைப்பது இந்த ஏற்பாடு. உரிய காலத்தில், இளமையிலேயே வருங்கால வாழ்வுக்குரிய பொதியினைக் கட்டிவைக்கும் நன்முயற்சியை ஒருவன் மேற்கொள்ளாவிட்டால், அதன் விளைவு பெருத்த வேதனையில் முடியும். மறுமையில் நம்பிக்கை உடையவர்க்கே இது பொருந்தும்.

    இந்த உண்மைகளை உணராத புல்லறிவினார் வாடிவருந்தி நிற்கும் நிலையினை நாலடியார் கூறுகிறது. புல்லறிவினார் வாழ்வின் கடைசி காலத்தில் தமது செயலுக்கு வருந்தி,  சோறு பொதிய நினைத்தாலும் அது நிறைவேறாத நிலையினையும் அது சுட்டிக் காட்டுகிறது. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த அந்தக் கேடுகெட்ட மதியினர், தம் இறுதி நாளில் அதை அனுபவிக்க நினைத்தாலும் முடியாது அலறுவர். அந்தப் பணமும் அவருக்குப் பயனற்றுப் போகிறது. 

    எவ்வுயிரையும் தம் உயிராய் ஒத்து நோக்கி அறம் ஆற்றாத புல்லறிவாளன் இறக்கும் காலத்தில், புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்துவிட்ட காலத்தில், தான் செய்யாது. விட்டவற்றை எண்ணித் திருத்தவோ அல்லது மூடிவைத்த பொன்னைக் குறிக்கவோ கையைக் குவித்துச் சைகை செய்கிறான்- வாய்பேச முடியாத் நிலை, பாவம். ஆனால், பக்கத்தில் உள்ளவர் அவன் புளிவிளங்காய் கேட்கிறான் என்று கருதி,  போகும் உயிருக்குரது விரும்பிக் கேட்டதைக் கொடுக்க நினைப்பர். ஆனாலும், புளித்த விளாம்பழத்துக்கு அதுகாலம் இல்லையே எனக் கையை விரிப்பர். 

    “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றபடி, புல்லறிவாளர் பொருட்செல்வத்தை நிரம்பப் பெற்று வாழ்ந்த காலத்தில், அறச் செயல்களைச் செய்து வாழாது, சாகும் காலத்தில், கழிந்த நாளுக்கு இரங்கிச் செயலாற்ற நினைத்தாலும், அது முடியாத அவல நிலையை நாலடியார் பின்வருமாறு உணர்த்துகிறது.


சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி

இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்

பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்

பொன்னும் புளிவிளங்காய் ஆம்.”


உடம்பு நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்பவற்றை உணர்ந்து, நீண்ட நெடும் பயணத்தை உயிரானது மேற்கொள்ள உள்ளது என்பதையும் உணர்ந்து, அந்தத் தொலையா வழிக்கு உதவக் கூடிய உணவாகிய தானதருமங்கள் என்னும் கட்டுச் சோற்றை உழிருள்ள போதே கட்டி வைத்துக் கொள்ள எண்ணாமல், தருமம் செய்வதைப் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று, பொன்னையும் பொருளையும் புல்லறிவாளர்கள் பூட்டி வைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மரணப் படுக்கையில் வாய் பேச முடியாமல் இருந்துகொண்டு, கையால் சைகை செய்து தமது உறவினர்களிடம் தான துரமங்களைச் செய்யுமாறு காட்டுவார்கள். அவர்களோ இவரது சைகையைப் புரிந்து கொள்ளாமல், கடைசி காலத்தில் விளங்காய் தின்ன ஆசைப்படுக்றார் என்று நினைத்துக் கொள்வர். அந்த நிலையிலும் புல்லறிவாளருடைய பொருள் தானத்துக்கு உதவுவது இல்லை.


    புல்லறிவாளர்கள் எதனையும் காலத்தில் செய்து கொள்ளாது ஏமாந்து, பின் வருந்துவார்கள். நற்செயல்களைப் பிறர் சொன்னாலும் செய்யமாட்டார்கள். தாமாகவும் உணர்ந்து செய்யமாட்டார்கள்.நற்செயல்களைச் செயல்களில் காலத் தாழ்வு கூடாது. இப்போது நாம் இளைஞராய்த் தானே இருக்கிறோம். பிறகு பொறுமையாக அறச் செயல்கள் புரியலாம் எனச் சோம்பியிருத்தலும் கூடாது, “அன்றறிவாம் என்னாது அறம் செய்க” என்கிறார் திருவள்ளுவ நாயனார். கையில் பொருள் உள்ள போதே மறைக்காமல் அறம் செய்யவேண்டும். இளமையை நம்பக் கூடாது. சூறைக் காற்று வீசும்போது, முற்றி முதிர்ந்த கனி வீழாமல் மரத்திலேயே இருக்க, பச்சிளங்காய் விழுந்து விடுவதும் உண்டு என்று நாலடியார் நவில்கிறது.


“மற்று அறிவாம் நல்வினை, யாம் இளையம் என்னாது,

கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்;

முற்றி இருந்த கனி ஒழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு” 


    இதையே, முன்றுறை அரையனார் இயற்றிய "பழமொழி நானுாறு" என்னும் நூலில் ஒரு பாடல் வேறொரு வகையால் விளக்குகின்றது. ஓடத்தில் ஏறும் முன்பே ஏறுபவரிடம் ஓடக்காரர் கட்டணம் வாங்கி விடவேண்டும். அவரை அக்கரை சேர்ந்தபின் அவருக்குக் கட்டணம் கொடுப்பதில் அக்கறை இல்லாமலும் போகக்கூடும். அதாவது, அவரிடம் கட்டணம் வாங்குவது அரிதாகவும் போய் விடலாம். சுங்கப் பணம் வாங்குவதும் இது போன்றதே. எனவே, எதையும் இளமை உள்ள போதே கல்வி கற்கவேண்டும். முதுமையில் கற்க முடியாமல் போகலாம் என்று இந்நூல் அறிவுறுத்துகிறது.


“ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்

போற்றும் எனவும் புணருமோ-ஆற்றச்

சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை

மரம்போக்கிக் கூலிகொண்டார்” 


  "சிறுகாலை" என்பதற்கு, "இளவயது" என்பதே சிறப்பான பொருள்.

 

"ஊன்அமர் ஆக்கை உடம்புதன்னை

     உணரில் பொருள்அன்று,

தேன்அமர் கொன்றையினான் அடிக்கே

     சிறுகாலை ஏத்துமினோ"

 

என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடி உள்ளார்.







14. தாழ்வினை அடைபவர்கள்

 


“பெற்றுஅமையும் என்னாப் பெரியோரும், பெற்றபொருள்

மற்றுஅமையும் என்றே மகிழ்வேந்தும், - முற்றியநன்

மானம்இலா இல்லாளும், மானம்உறு வேசியரும்

ஈனம் உறுவார் இவர்.”


பெற்றிருக்கும் பொருளே போதும் என்று மனம் அமையாத பெரியவர்களும், பெற்றுள்ள பொருளே போதும் என்று அமைந்து மனம் மகிழ்கின்ற வேந்தனும், மிகுந்த நாணம் இல்லாத மனைவியும், நாணம் கொண்ட வேசியும் ஆகிய நால்வரும் தாழ்வினை அடைவார்கள்.


(வேந்து - அரசன். மானம் - நாணம்.  ஈனம் - தாழ்வு.)


74. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது

புனங்காட்டும் மண்ணும்விண்ணும் அஞ்சவரும்

     காலனையும் போடா என்றே

இனங்காட்டும் மார்க்கண்டன் கடிந்துபதி

     னாறுவய தென்றும் பெற்றான்

அனங்காட்டும் தண்டலையார் அடியாரெல்

     லாம்ஒருவர்க் கஞ்சு வாரோ!

பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்

     கொருநாளும் பயப்ப டாதே.


இதன் பொருள் ---


    பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்கு ஒருநாளும் பயப்படாது - பனங்காட்டு நரி எப்போதும் சலசல என்ற ஒலிக்கு அஞ்சிடாது; (அதுபோல), அனம் காட்டும் தண்டலையார் அடியாரெல்லாம் ஒருவருக்கு அஞ்சுவாரோ - அன்னங்களைக் காண்பிக்கும் (பொய்கைகளையுடைய) திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் அடியவர் எல்லாரும் ஒருவருக்கும் அஞ்சமாட்டார்; புனம் காட்டும் மண்ணும் விண்ணும் அஞ்சவரும் காலனையும் - காடுகளைக் காட்டும் மண்ணுலகும் வானுலகும் அஞ்சுமாறு வந்த எமனையும், இனம் காட்டும் மார்க்கண்டன் போடா என்று கடிந்து - அடியார்களின் உறவைக் காட்டும் மார்க்கண்டன் போடா என்று விலக்கி, என்றும் பதினாறு வயது பெற்றான் - எப்போதும் பதினாறு வயதினைச் (சிவபெருமானிடம்) பெற்றான்.

  ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது' என்பது பழமொழி.


மார்க்கண்டேயர் வரலாறு


    அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து, தவத்தையே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்து வாழ்ந்து வந்தார். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசித் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தார். வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி ஆகிய சிவபரம்பொருள் விண்ணிடைத் தோன்றி, “மாதவரே! நீர் வேண்டும் வரம் யாது?” என்றார். முனிவர் பெருமான் புரமூன்று எரித்த பூதநாயகனைப் போற்றி செய்து புத்திர வரம் வேண்டினார்.

    அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து, “தீய குணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும், கோல மெய்வனப்பு உடையவனும், குறைவிலா வடிவு உடையவனும், நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும், பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய சற்புத்திரன் வேண்டுமா? சொல்வாயாக" என்றார்.

"தீங்கு உறு குணமே மிக்கு,  சிறிது மெய் உணர்வு இலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி,  முடமும் ஆய், விழியும் இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும்   உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",    

    

"கோலமெய் வனப்பு மிக்கு,  குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி,  எமக்கும் அன்பு உடையோன் ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று,  கலைபல பயின்று வல்ல

பாலனைத் தருதுமோ? நின்  எண்ணம் என் பகர்தி" என்றான். --- கந்த புரைணம்.


    முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றார். அரவாபரணர் அவ்வரத்தை அருளினார்.


மாண் தகு தவத்தின் மேலாம்  மறைமுனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும்  அறிவுளன் ஆகி, யாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி,  எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே  வேண்டினன், புரிக" என்றான்.     --- கந்த புராணம். 

        

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தருமபத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றார். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன; விண்ணவர் மலர்மழைச் சிந்தினர்; முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினார்.  ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது உனக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேரும் என எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.

    மார்க்கண்டேயர், தாய்தந்தையரை நோக்கி, “நீங்கள் வருந்த வேண்டாம்; உமக்கு வரம் அளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று கூறி விடைபெற்று, காசித் திருத்தலத்தில் மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து வந்தார். அன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, உனக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,


“ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய

மெய்யனே! பரமனே! விமலனே! அழல்

கையனே! கையனேன் காலன் கைஉறாது

உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’      --- கந்தபுராணம்.


“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

    மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி, அவரை நெருங்கவும் கூடாதவனாய் திரும்பி, தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, அவன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராகி சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் “ ஐயனே! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால், அவர் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை; திருக் கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தமது மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்று கட்டளை இட்டான். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும், இடையறா அன்பின் தகைமையையும் கண்ணுற்று, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியோரே! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துள்ளான், உமக்கு இந்திர பதவியைத் தருவான், வருவீர்” என்றான். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார். நீ போ” என்றார்.


“நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,

 ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,

 வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்

 போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.” --- கந்தபுராணம்.

                                    

    அது கேட்ட காலன் தனது தலைவனிடத்து அணுகி நிகழ்ந்தவை கூறினான். அது கேட்ட  இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி, ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினான். அவனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். இயமன் “மைந்தா! நீ என்ன நினைத்தாய்? என்ன செய்கிறாய்? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யார்? ஈசனார் உமது தந்தைக்கு அளித்த வரத்தை மறந்தாயோ? நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, நான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும், வானத்து மீன்களை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு, கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும்,  மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டு போகேன். விரைவில் வருவாய்” என்றான். மார்க்கண்டேயர் “அந்தகா! சிவன் அடியார் பெருமையை நீ அறியாய். அவர்களுக்கு முடிவில்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி எமபுரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.”


“தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க

ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,

பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,

போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான்.    --- கந்தபுராணம்    

 

    “இவ்விடம் விட்டு விரைவில் போ, போ” என்ற வார்த்தைகளைக் கேட்ட இயமன் மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றாய்.  என் வலிமையைக் காண்பாய்” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசினான், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் இருந்தார். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் உனது உயிரை வாங்க எண்ணினான்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தார். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவற்றைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். 


மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்

பதைத்தான் என்னா உன்னி, வெகுண்டான், பதி மூன்றும்

சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி

உதைத்தான், கூற்றன் விண் முகில் போல் மண் உறவீழ்ந்தான்.    --- கந்தபுராணம்


பின்வரும் தேவாரப் பாடல்கள் மார்க்கண்டேயர் வரலாற்றை எடுத்துக் கூறும்.


“நலமலி தருமறை மொழியொடு

         நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,

மலர்அவை கொடுவழி படுதிறல்

         மறையவன் உயிர் அது கொளவரு

சலமலி தரு மறலி தன்உயிர்

         கெட உதை செய்தவன் உறைபதி

திலகம் இது என உலகுகள் புகழ்

         தருபொழில் அணிதிரு மிழலையே.”  ---  திருஞானசம்பந்தர்.


“நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு

ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்

கன்றிவரு காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்

கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம் பெருமானே.” ---  திருஞானசம்பந்தர்.


“நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,

சாற்றுநாள் அற்றது என்று, தருமராசற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.”   --- அப்பர்.


“மருள்துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்

இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து, உங்ஙனே

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.”         --- அப்பர்.

  

“அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத

         அவனைக் காப்பது காரணமாக

வந்தகாலன் தன்ஆருயிர் அதனை

         வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்

எந்தை!நீ எனை நமன் தமர் நலியில்

         இவன்  மற்றுஎன் அடியான் என விலக்கும்

சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்

         செழும்பொழில் திருப்புன் கூர்உளானே.” --- சுந்தரர்.


இறையடியார்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதை அறிவுறுத்தி,


“சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,

வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,

அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,

திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.”


எனவும்,


“நாமார்க்குங் குடியல்லோம், நமனை அஞ்சோம்,

நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,

ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம்,

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை,

தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழைஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.”


எனவும்,


“கற்றுக் கொள்வன வாயுள நாவுள;

இட்டுக் கொள்வன பூவுள நீருள;

கற்றைச் செஞ்சடையான் உளன் நாமுளோம்;

எற்றுக்கோ நமனால்முனிவு உண்பதே.” 


எனவும் வரும் அப்பர் தேவாரப் பாடல்களை இங்கு வைத்துச் சிந்திக்கவும்.


21. அறிவீனரைத் திருத்துதல் ஆகாது

“அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச் செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? - திவ்வியநல் கந்தம் பலவும் கலந்தாலும், உள்ளியது கந்தம் கெடுமோ கரை....