இறைவனை எப்படி வழிபட வேண்டும்.

 


இறைவனைவழிபடுவதுஎப்படி?

-----

 

"கடிகமழ் மாமலர் இட்டுக் கறைமிடற்றான் அடி காண்போம்.

விரைகமழ் மாமலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம்.

தாள்நெடு மாமலர் இட்டுத் தலைவன தாள்நிழல் சார்வோம்.

கார்இடு மாமலர் தூவிக் கறைமிடற்றான் அடி காண்போம்.

இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம்.

தளைஅவிழ் மாமலர் தூவித் தலைவன தாள்இணை சார்வோம்.

தடமலர் ஆயின தூவித் தலைவன தாள்நிழல் சார்வோம்.

சயவிரி மாமலர் தூவித் தாழ்சடையான் அடி சார்வோம்.

விரிமலர் ஆயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்'.

 

எனவரும் திருஞானசம்பந்தப்பெருமான் அருள்வாக்குகள், இறைவன் திருவடியை மலர் இட்டு வழிபட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. "புண்ணியம் செய்வார்க்குப் பூஉண்டு, நீர்உண்டு; அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்" என்றார் நமது கருமூலம் நீக்க வந்த திருமூல நாயனார். "பூவொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார், அவர் பின் புகுவேன்" என்று பாடினார் அப்பர்பெருமான். அப்படி வழிபடுகின்ற அடியவர்க்கு இறைவன் அருள் புரிவான் என்பதைக் காட்ட, "தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடி சேர்வோம்" என்று பாடினார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

            எனவே, மலர்வழிபாடு அவசியமானது என்று அறியலாம். பொதுவாகவே, இறைவனுக்கு எட்டு வகையான மலர்கள் உகந்தவை என்று நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. "புட்பவிதி" என்று ஒருநூல் உள்ளது. அதில், காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் எந்தெந்த விதமான எட்டு மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டு உள்ளது. அந்த மலர்களை எல்லாம் அவை மலரும் பக்குவத்தில் பறித்துச் சாத்த வேண்டும் என்பதுதான் விதி. அன்று அலர்ந்த மலர்கள் என்று சொல்லப்படும். வழிபாட்டிற்கு முந்திய நாளில் மலர்ந்த மலர்கள் உகந்தவை அல்ல.அப்போது அலர்ந்த மலர்களும், பூச்சிக்கடி, வண்டுக்கடி, மயிர்ச்சுற்று இல்லாமல் இருக்கவேண்டும். மலர்களை எப்போது, எப்படிக் கொய்ய வேண்டும் என்பது குறித்து, பெரியபுராணத்தில் ஒரு பாடல்...

 

"வைகறை உணர்ந்து போந்து

            புனல்மூழ்கி வாயும் கட்டி

மொய்ம்மலர்நெருங்குவாச

            நந்தன வனத்து  முன்னிக்

கையினில் தெரிந்து நல்ல

            கமழ்முகை அலரும் வேலைத்

தெய்வ நாயகர்க்குச் சாத்தும்

            திருப்பள்ளித் தாமம் கொய்து".

 

இதன்பொருள்---

 

            விடியற்காலையில் துயில் எழுந்து, திருக்குளத்திற்குச் சென்று நீராடி, வாயையும் கட்டிக்கொண்டு, திரளான மலர்கள் நெருங்கிய நறுமணம் கமழும் திருநந்தனவனத்தை அடைந்து, கையினால் ஆராய்ந்து, நல்ல மணம் உடையனவும், அன்று அலரும் பருவம் உடையனவும் ஆகிய அரும்புகளை, அவை மலர்தற்கு உரிய சமயத்தில் தெய்வங்களுக்கு எல்லாம் தலைமையானவராகிய சிவபெருமானுக்கு அணிவித்தற்குரிய திருமாலைக்கு ஆகின்ற மலர்களைக் கொய்து.

 

            இன்றைய சூழலில், ஊர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு அன்று அலர்ந்த மலர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு இது சாத்தியம் இல்லை. கடைகளில் விற்கும் மலர்களைக் கொண்டுதான் செய்யவேண்டி இருக்கும். இவைகள் அன்று அலர்ந்த மலர்கள் அல்ல. வாடியும் வதங்கியும் இருக்கும். வேறு வழியில்லாமல், ஒன்றுக்குப் பத்தாக விலைகொடுத்து வாங்கி வருவோம். 

 

            மலர் இல்லையானால், இறைவனுக்கு அபசாரம் செய்த்தாக ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் உண்டு. என்ன செய்யலாம்? குழப்பமாகஉள்ளதுஅல்லவா? குழப்பமே வேண்டாம். சிரமம் ஏதும் இல்லாமல் இறைவனை வழிபட வழி உண்டு. எளிமையான வழியை நமது முன்னோர் நமக்கு வகுத்துக் காட்டி உள்ளார்கள். விதி என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா?

 

            மலர்கள் இல்லை என்றால் கலவைப்பட வேண்டாம். ஒரு செடியில் சில மலர்கள் என்றால், பல இலைகள்இருக்கும். இலைகளும் இறையருளால் வந்தவையே. இலைகள் இல்லாமல் மலர்கள் இல்லை. இலைகளை இட்டே வழிபடலாம் என்பதற்குப் பிரமாணமாகப் பின்வரும் பாடல்களைக் காட்டுகின்றேன்.

 

            "பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் பத்திரம் அணிந்த கழல் வீரா". இது அருணகிரிநாதர் பாடி அருளிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் வருவது. பத்திரம் என்றால் இலை என்றும் ஒரு பொருள் உண்டு. அன்பு நெறியில் உறுதியுடன் நிற்கின்ற அடியார்கள். அன்புடன் முருகன் திருவடியில் பச்சிலைகளை அருச்சித்தால், அப் பச்சிலைக்கு மெச்சி அருள் புரியும் கருணைத்தெய்வம் முருகன் என்பது இதன் பொருள்.

 

            அடுத்து, எல்லார்க்கும் இயல்கின்ற எளிமையான வழி முறையைத் திருமூலர் அறிவுறுத்துகின்றார்.

 

"யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய்உறை;

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒருகை ப்பிடி;

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே".            ---திருமந்திரம்.

 

இதன்பொருள்---

 

    இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்கவேண்டும் என்பதில்லை. எளிமையாகப் பச்சிலை இட்டு வணங்கினாலே போதும். பசுப் பூசை செய்யவேண்டும் என்பதில்லை. பசுவுக்கு ஒரு கைப்பிடி புல்லைக் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்கவேண்டும் என்பதில்லை. நாம் உண்கிற உணவில்,  ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்து யாரையும் வாயாரப் புகழ்ந்துதான் பேசவேண்டும் என்பதில்லை. யாரிடத்திலும் இனிய சொல்லைச் சொன்னாலே போதும்.

 

            மலர் இல்லையானால், இலை உண்டு. அதுவும் இல்லையானால், நமது உள்ளத் தாமரை உள்ளது. இறைவனை எப்படியும் வழிபடலாம் என்கிறார் பட்டினத்து அடிகளார்.

 

"போதும் பெறாவிடில் பச்சிலைஉண்டு,

            புனல்உண்டு, எங்கும்

ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே,

            இணையாகச் செப்பும்

சூதும் பெறா முலை பங்கர், தென்

            தோணி புரேசர், வண்டின்

தாதும் பெறாத அடித் தாமரை

            சென்று சார்வதற்கே".                                ---  பட்டினத்தார்.

 

இதன்பொருள்---

 

            கிண்ணமும், சொக்கட்டான் காயும் கூட ஒப்பு ஆகாதவாறு அழகாக அமையப் பெற்ற முலைகளை உடைய உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்டவரும், சீகாழி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்று அடைவதற்கு, இப்போது, நல்ல மலர்களைப் பெற முடியாவிட்டால், பச்சிலை உண்டு. அந்தப் பச்சிலையும் இல்லையானால், எல்லா இடங்களிலும் நீர் உண்டு. இவை ஏதும் கிடைக்கப் பெறாதபோது, மனம் உள்ளதே, அதைக் கொண்டு வழிபட்டால் போதும்.

 

"பத்தி அடியவர் பச்சிலை இடினும்

முத்தி கொடுத்து முன்நின்று அருளித்

திகழ்ந்து உளது ஒருபால் திருவடி..."

 

என்று, பதினோராம் திருமுறையில் வரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை"யில் பட்டினத்து அடிகளார் பாடி உள்ளார்.

 

இதன் பொருள்--- 

 

            அன்பு உள்ள அடியவர்கள் ,மலர் கிடைக்காத போது, பச்சிலையை இட்டு வணங்கினாலும், அவர்களுக்குத் தரிசனம் தந்து, இந்தப் பிறவியில் அவர்களுடைய இஷ்ட காமியங்களை அருளிச் செய்வதோடு, மோட்சத்தையும் அருள் புரிகின்ற சிவபெருமானது திருவடி ஒருபுறம் திகழ்ந்து உள்ளது.

 

            எந்த எந்த இலையைப் பறித்து வழிபடலாம் என்னும் ஐயம் தோன்றும். அதற்கும் விடை பகருகிறார் பட்டினத்து அடிகளார்.

 

"பத்தி ஆகிப் பணைத்த மெய் அன்பொடு 

நொச்சி ஆயினும், கரந்தை ஆயினும்

பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 

கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்

திருவிடை மருத, திரிபுராந்தக",..      

 

இதன்பொருள்---

 

            பத்தியால் கிளைத்த உண்மையான அன்போடு, நொச்சி இலையையாவது ,கரந்தை என்னும் திருநீற்றுப் பச்சை இலையையாவது கொண்டு பச்சிலையால் அருச்சனை புரிந்து வணங்குகின்ற தொண்டர்கள்,கருவில் சேராதபடி (மறுபிறவி இல்லாதபடி) காத்து அருள் புரிகின்ற திருவிடைமருதூரில் எழுந்தருளிய இறைவா, முப்புரங்களை எரித்தவனே!.

 

மேலும், பாடுகிறார்.....

 

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,

மெச்சி, சிவபதவீடு அருள்பவனை,

முத்தி நாதனை, மூவா முதல்வனை,

அண்டர் அண்டமும் அனைத்துஉள புவனமும்

கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,

ஏகநாதனை இணைஅடி இறைஞ்சுமின்.  --- கச்சித்திருஅகவல்.

 

இதன்பொருள்---

 

            பச்சிலையைக் கிள்ளி அருச்சித்தாலும், அடியார்கள் மீது இரக்கம்கொண்டு, அவர்களுடைய பத்திக்கு மெச்சி, சிவபதம் ஆகிய மோட்சத்தை அருள் புரிகின்றவனை, முத்திக்குத் தலைவனை, நித்தியமாய் உள்ள முதற்பொருளை, வானுலகும் மண்ணுலகும் எல்லாமும் படைத்த பெரியவனை, திருக்கச்சி என்னும் காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஏகாம்பர நாதனை ,தனி முதலாக உள்ள இறைவனை வணங்கிப் பணியுங்கள்.

 

            பச்சிலை இட்டு வழிபட்டாலும் உள்ளன்போடுதான் வழிபட வேண்டும். அந்த அன்பும் இல்லாத நான் என்ன செய்வேன் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார் தாயுமான அடிகளார்.

 

"கல்லால் எறிந்தும், கைவில்லால் அடித்தும், கனிமதுரச்

சொல்லால் துதித்தும், நல்பச்சிலை தூவியும்,தொண்டர் இனம்

எல்லாம் பிழைத்தனர், அன்பு அற்ற நா ன்இனி ஏது செய்வேன்?

கொல்லா விரதியர் நேர்நி ன்ற முக்கண் குருமணியே".          ---தாயுமானார்.

                                                                                                        

 

இதன்பொருள்---

 

            உயிர்களைக்  கொல்லாமையை விரதமாகக் கொண்டுள்ள அடியவர்கள் காணுமாறு அருட்காட்சி கொடுத்து  அருள் புரிகின்ற, முக்கண்களை உடைய குருநாதனே! உன்னைக் கல்லால்  எறிந்து வழிபட்டார் சாக்கியநாயனார். கையில் இருந்த வில்லால் அடித்தான் அருச்சுனன். இனிமையான கனிரசம் துதும்பும் பாடல்களால் துதித்தார்கள் பலர். நல்ல பச்சிலைகளைத்  தூவி வழிபட்டனர் சிலர்.  இவ்வாறு உனது தொண்டர்கள் எல்லாம் ஈடேறினார்கள்.  (அவர்களிடத்தே உண்மை அன்பு இருந்தது) உன்னிடத்தில் அன்பு இல்லாதவனாகிய  நான் இனி  என்ன செய்வேன்?

 

"எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,

புல் ஆயினும், ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி

நில்லேன்,  நல்யோக நெறியும் செயேன், அருள்நீதி ஒன்றும்

கல்லேன், எவ்வாறு, பரமே! பரகதி காண்பதுவே".                     ---  தாயுமானார்.                                                                                                                       

 

இதன்பொருள்---

 

            பரம்பொருளே!  உயிர்களுக்கு  எல்லாவற்றையும் உதவி அருள்புரிகின்ற உன்னை,  நான் ஒன்றிலாவது பாவனையாவது செய்து, புல்லையாவது, பச்சிலையையாவது உனது திருவடியில் போட்டு, வணங்கி நிற்கவில்லை. யோகநெறியில் பயிலவில்லை.  அருள்நூல்களையும், நீதிநூல்களையும் கற்கவும் இல்லை.  நான் எப்படிபரகதியைக் காணமுடியும்?

 

            "எவன் பத்தியோடு, பயனை எதிர்பார்க்காமல், எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோ, அன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலை, மலர் முதலியவற்றை நான் சகுணசொருபமாக வெளிப்பட்டு அன்புடன் அருந்துகின்றேன்" என்று பகவத்கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது சுலோகத்தில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.

 

            இறைவனை நிறைய மலர்களை இட்டுத்தான் வழிபட வேண்டும் என்பதாக எங்கும் சொல்லப்படவில்லை. இறைவனும் அவ்வாறு விரும்பியதாகவும் எங்கும் சொல்லப்படவில்லை. நிறைய மலர்களைக் கொண்டு வழிபடுவது அவரவருடைய செல்வ நிலையைப்   பொறுத்தது.

 

            வசதி இல்லாதவர் என்ன செய்வார்?அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாதவர் இறைவனை வழிபட முடியாதா ?எண்ணிப் பாருங்கள்.

 

            நிரம்ப மலர்களை கொண்டு வழிபட்டாலும், ஒரே ஒரு மலரை இட்டு வழிபட்டாலும், உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும். உள்ளத்தில் அன்பு இல்லாதபோது, நான் நிறைய மலர்களைக் கொண்டு வழிபட்டேன் என்னும் செருக்கு இருக்கும். "நான்" என்பது இருந்தால், அது பயன் தராது. 

 

            இந்தக் கருத்தை மிக அழகா கவைத்து, அருணகிரிநாதர் திருப்புகழில் பாடி உள்ளதைக் காண்போம்....

 

"வெகுமல ர்அதுகொடு வேண்டி ஆகிலும்,

     ஒருமலர் இலை கொடும் ஓர்ந்து, யான்உனை

     விதம் உறு பரிவொடு வீழ்ந்து, தாள்தொழ...அருள்வாயே!"

 

இது, அருணகிரிநாதர் பாடி அருளிய "தரையினில் வெகுவழி" என்று தொடங்கு ம்திருப்புகழ்ப் பாடல் வரிகள்.

 

இதன்பதவுரை---

 

            வெகுமலர்அதுகொடுவேண்டிஆகிலும் - அநேக விதமான மலர்களைக் கொண்டு உனது அருளை விரும்பியாகிலும், ஒருமலர் இலை கொடும் - ஒரு பூவோ ஒரு பச்சிலையோ கொண்டாகிலும், ஓர்ந்து யான் உனை - நான் தேவரீரை உளமா ரநினைத்து,  விதம் உறு பரிவொடு வீழ்ந்து--- நல்ல வகையில் அன்போடு விழுந்து, தாள் தொ ழஅருள்வாயே--- தேவரீரது திருவடிகளைத் தொழுமாறு அருள் புரிவீர். (விதம்--- வகை. பரிவு--- அன்பு.)

 

     அன்பு, பத்தி என்ற சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பன. அன்பு என்பது உள்ளத்தில் நிகழும் நெகிழ்ச்சி ஆகும். அன்பு ஒருவர் வெளிப்படையாகக் காணக்கூடியது அல்ல. குடத்துள் விளக்கும்,உறையுள் வாளும் போல் கிடப்பது. அன்பு மேலிடும் போது தன்வசம்அழிதலும், மயிர்க்கால்கள் தோறும் திவலை உண்டாகப் புளகம் எய்துதலும், கண்ணீர் மல்குதலும், விம்மலும், நாக்கு தழுதழுத்தலும், உரை தடுமாறலும் பிறவும் நிகழும். இந்த அன்பினால் அன்றி, வேறு எந்த வகையாலும் அன்பு வடிவாகிய இறைவனைஅடைய முடியாது. திருமூல நாயனார் கூறுவதை அறிதல் வேண்டும்.

 

 

"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டு,

பொ ன்போல் கனலில் பொரிய வறுப்பினும்,

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி

என்போன் மணியினை எய்த ஒண்ணாதே".     ---  திருமந்திரம்.

 

இதன்பொருள்---

 

     தனது உடம்பின் எலும்பையே விறகாக இட்டு, தசையினை அறுத்துப் போட்டு, பொன் வடிவமான வேள்வித் தீயில் பொரியும்படி வறுத்தாலும், இறைவனை அடைய முடியாது. ஆனால், அன்புடன் உள்ளம் உருகுபவர்கள் என்னைலப் போல  மனமணியாகிய இறைவனை அடையலாம்.

 

     தவம் செய்பவர், உடல் தசைகளை அறுத்துத் தவம் செய்வர். சூரபதுமன் இவ்வாறு தவம் செய்தான். பசுவை வேட்டு யாகம் செய்வதும் உண்டு. எனவே, இறைச்சி அறுத்திட்டுப் பொரிய வறுப்பினும் என்றார் என்றும் கொள்ளலாம். யாகமும் தவமும் செய்தாலும், இறைவனை அடைய முடியாது. இறைவனிடத்தில் உள்ளம் உருகி அன்புடன் இருந்தால் போதும். அவனை அடைந்து விடலாம் என்பது இதனால் தெளிவாகும்.

 

     அன்பு மூன்று வகைப்படும்.  இறைவனது நாமத்தைக் கேட்டவுடன் வசம்  அழியும்அன்பர்கட்கு, கண்டவுடனும், கூடியவுடனும் எய்தும் அன்பின்  பெருக்கை அளவிடமுடியாது. தலைஅன்பு,  தைலதாரை போல்  எப்போதும் இடையறாது  உள்ளம் உருகி  நெகிழ்ந்துகொண்டு  இருக்கும்.  இடை அன்பு,  அனல் இடைப்பட்ட  மெழுகுபோல்  சிறிது  தாமதமாக உருகுவது. கடை அன்பு,  வெயிலில் அரக்கு  உருகுவதுபோல  நெடுநேரம் இறைவன் சிந்தனையாலும், இறைவன்  திருவுலாக்  காட்சியாலும்  மிகவும்  தாமதமாக  உருகுவது.

 

     இந்த தலையாய அன்பு ஒன்றைத் தான் இறைவனிடம் வேண்டினார் மணிவாசகப் பெருமான். "இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள்" என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

     இத்தகைய அன்பையே வீரவாகுதேவர் முருகப்பெருமானிடம் வேண்டினார்  என்று  கந்தபுராணம் கூறும்.

 

"கோலம் நீடிய நிதிபதி வாழ்க்கையும் கருதேன்,

மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன்,

மால்அயன் பெறும் பதத்தையும் பொரு ள்என மதியேன்,

சால நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியேன்".

 

இதன்பொருள்---

 

           முருகப்  பெருமானே! அடியவன் ஆகியதான்,செல்வத்தால் மிகுந்துள்ள குபேரனின் வாழ்க்கையை விரும்பவில்லை. தேவேந்திர போகத்தையும் நான் விரும்பவில்லை. திருமால், பிரமன் ஆகிய பதவிகளையும் நான் விரும்பவில்லை. உன்னுடைய திருவடிகளில் வைக்கும் அன்பையே நான் மிகவும் விரும்புகின்றேன்.

 

            மலர்களை பலவிதமான மாலைகளாகத் தொடுத்து இறைவனுக்குச் சாத்துவது வழக்கம். மலர்மாலை விரைவில் வாடி வதங்கிப் போகும். வாடாத மலர் ஒன்று உண்டு. அது சொல்மலர் ஆகும். சொற்களால் ஆனது சொல்மாலை. மலர்களைக் கொண்டு வழிபட்டாலும், உள்ளன்போடு இறைவனை சொல்மலர்களால் துதித்து வழிபடவேண்டும். 

 

     வெறும் சொற்களால், வாயளவில் துதித்துப் பயன் இல்லை. அதி அற்புதமான சொல்மாலை எப்படி அமைந்திருக்க வேண்டும்?அருணகிரிநாதப் பெருமான் அருளிச் செய்கிறார் பாருங்கள்.

 

"ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்

     ஆன பூ வைத்து,...... நடுவே அன்பு

ஆன நூல் இட்டு,நாவிலே சித்ரம்

     ஆகவே கட்டி,...... ஒரு ஞான

வாசம் வீசி, ப்ரகாசியா நிற்ப,

     மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-

     வாள பாதத்தில் ...... அணிவேனோ?"  --- திருப்புகழ்.

 

இதன் பதவுரை ---

 

     ஆசை கூர் பத்தனேன்--- ஆசை மிகுந்த அடியேனுடைய மனோ பத்மம் ஆன பூ நடுவே வைத்து--- மனமாகிய தாமரை மலரை மாலையின் நடுவே குஞ்சம் போல் வைத்து,

அன்பான நூல் இட்டு--- அன்பு என்னும் நூலைக் கொண்டு, நாவிலே சித்ரமாகவே கட்டி--- நாக்கைக் கொண்டு அழகாகத் தொடுத்து, ஒரு ஞான வாசம்வீசி  ப்ரகாசியா நிற்ப---  ஒப்பற்ற ஞானமாகிய வாசனை வீசி ஒளிசெய்ய, மாசுஇல் ஓர் புத்தி அளிபாட--- அதைச் சுற்றி குற்றம் இல்லாத ஒருமைப்பட்ட அறிவு என்ற வண்டு மொய்த்து ஒலி செய்ய, மாத்ருகா புஷ்ப மாலை--- மாத்ருகா மந்திரமாகிய மலர் மாலையை, கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ--- அழகிய பவளம் போன்று திருவடிகளில் அடியேன் சூட்டி வழிபடுவேனோ?

 

     அருணகிரிநாதப் பெருமான், திருஞானசம்பந்தப் பெருமான் முதலானோர்கள் அருளிச் செய்தபடி, முருகப் பரமனுடைய திருவடி மலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். பூ மாலை வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய மந்திர மலர்மாலை சூட்டத் துணிந்தனர். மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்கவேண்டும்.  அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும்.அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே மனம் என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்க விடுகின்றனர். மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரை மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்துவிடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும்.  அதுவே எளிய வழியுமாகும்.காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதுவே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் எய்துகின்றன. ஆதலின், அம் மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் பயக்கும்.

 

     மந்திர மலர்களைத் தொடுப்பதற்கு நூல் வேண்டும்.  அன்பு என்ற நூலினால் அழகுற மந்திர மலர்களைத் தொடுக்க வேண்டும். அன்பு ஒன்றுடன் ஒன்றை இணைத்துவைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான் என்ற வரலாற்றையும் சிந்திக்க.

 

     அத் திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது? அதற்குரிய சிறந்த இடம் நாவே ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது.  நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அனுபூதியில் அருணகிரிநாதரும் கூறுமாறு காண்க.

 

     நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர்.

 

"பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே".  --- அப்பர் பெருமான்.

 

     நாவுக்கு முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகப் பெருமான் கூறுமாறும் காண்க.

 

     இம் மந்திரப் பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மலர்களின் மணம் சிலநேரமே கமழும்.  ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம். ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.

 

     ஞானமணம் கமழும் இந்த ஒப்பு உயர்வு அற்ற மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, புத்தி என்ற வண்டு வந்து மொய்த்து, இனிய நாதத்துடன் ஒலிக்கின்றது.  மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டின் உதவியால்தான் மக்களுக்கு இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமையாகச் சொல்லப்பட்டது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான்" என்ற பழமொழியும் கருதத்தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புதன். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதையும் எண்ணிப் பார்க்க.

 

     இறைவனும் அடியவர்களின் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரிநாதர் முதல் பாடலில் கூறுகின்றனர். "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்பது அவரது அருள்வாக்கு.இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல.

 

     ஆறு ஆதாரங்களிலும் அகாராதி க்ஷகாராந்தமாக ஐம்பத்தொரு அட்சரங்கள் (எழுத்துக்கள்) அடங்கி இருக்கின்றன. "அகரமுதல் என உரைசெய் ஐம்பத்தொரு அட்சரம்" என்பது அடிகளார் அருளிய திருப்புகழ். இந்த அட்சரங்களை மாத்ருகா மந்திரம் என்றும், மாலா மந்திரம் என்றும் கூறுவர். இந்த மாத்ருகா மந்திரங்களை மலர்களாகத் தொடுத்து மாலை புனையவேண்டும் என்கின்றார் அடிகளார்.இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அனுபூதி" ஆகும். ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு சிந்திக்கவேண்டும். "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

 

     உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள்ளும் அகரம் முதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் (எழுத்துக்கள்) அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களை மாத்ருகா மந்திரம் என்றும், மாலாமந்திரம் என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

 

     எனவே, அளப்பரிய ஆற்றல் மிகுந்ததும், இறைவன் திருக்கருணையை எளிதில் பெற வழி வகுப்பதும் ஆகிய, வாடாமலர்கள் ஆகிய சொல்மலர்களால் இறைவனை வழிபட்டு நற்கதியைப் பெறுவோமாக.

 


திருவள்ளுவர் காட்டும் சமயநெறி

 


 

திருவள்ளுவர்காட்டும் சமயநெறி

-----

 

            திருக்குறள் ஓர் அறிவு நூல்; திருக்குறள் ஓர் அற நூல்; அறத்திலும் சிறந்து விளங்கும் ஞானத்தை வழங்கும் மெய்ஞ்ஞான நூல் ஆகும். திருக்குறளை வடமொழி வேதத்தோடு ஒப்பிட்டுக் கூறுவார் உண்டு. சிந்தித்துப் ஆர்த்தால் ஓர் உண்மை விளங்கும். சிறு தெய்வங்களையும், இயற்கை ஐம்பூதங்களையும் அஞ்சித் தொழும் நெறிகளைக் கூறுவன் வடமொழி வேதங்கள்.  ஆனால், அச்சமின்றிப் பரம்பொருளைத் தொழும் ஞானநெறியைக்  காட்டுவது திருக்குறள். திருக்குறளை, சமயச் சான்றோர்களும், ஞானிகளும் போற்றி உள்ளனர். உமாபதி சிவம், திருக்குறளை உளங்குளிரப் பாராட்டுகின்றார். "நிலைத் தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்தமெய் வைத்த சொல்” என்று "நெஞ்சு விடு தூது" என்னும் மெய்கண்ட சாத்திர நூலில் சொல்லி இருப்பதில் இருந்து இது விளங்கும். 

 

     மனித வாழ்க்கை அருமையானது. சாவதற்காக மனிதன் படைக்கப்படவில்லை. சாதாரண மனித நிலையில் இருந்து,  மாமனித நிலைக்கு உயிர்ந்து,அதனினும் மேலான தெய்வ நிலையை அடைந்து, பிறவி நோயானது நீங்கப் பெற்றுப் பேரானந்தப் பெருவாழ்வில் திளைப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த மனிதப் பிறவி. இது மதிக்கத்தக்க பிறவி என்பதால், "வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி, மதித்திடுமின்" என்றும்,"மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்றும் பாடினார் அப்பர் பெருமான். மனிதப் பிறவி எப்போது இனிமை உடையதாக இருக்கும்? என்றால்,"தெள்நிலா மலர்ந்த வேணியாய்! உன்தன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளியதை எண்ணுதல் வேண்டும்.

 

     அப்படி ஆயின், உடம்பைப் பழித்து அருளாளர்கள் பாடி உள்ளார்களே என்று தோன்றலாம். "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு, துயரம் மனை வாழ்க்கை" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும்,"காயமே இது பொய்யடா! வெறும் காற்று அடைத்த பையடா!" என்று சித்தர்களும் பாடுவதும்  உடம்பின் நிலையாமையை அறிவுறுத்த வந்தவை. மானுட வாழ்க்கையைக் குறித்தவை அல்ல. நிலையாமையை உணர்ந்து ஒழுக வேண்டும் என்பது கருத்து. 

 

     அச்சம் இன்மைக்கும், வீரத்திற்கும் ஊற்றுக் கண்ணாக விளங்க வேண்டியது சமயம்."ஈர அன்பினர் யாதும் குறைவிலார், வீரம் என்னால் விளம்பும் தகையதோ?"என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் போற்றுகிறார். எனவே, அச்சத்தோடு வாழ்வதற்கு உரியது இல்லை சமயநிலை.  அச்சத்தில் தோன்றிய சமயம் மானுட வாழ்க்கைக்குப் பயன் தாராது. அச்சம்  கீழ்மையானதுஎன்பதைக் காட்ட,  "அச்சமே கீழ்களது ஆசாரம்"என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     சமய வாழ்க்கையில் மேம்பட்டு விளங்கிய அப்பர் பெருமான், "அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை" என்று கூறிய உயர்ஞான மொழியையும், தேசியக் கவிஞராகவும் சமய வாழ்க்கை உடையவராகவும் விளங்கிய பாரதியார் "அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே" என்று பாடியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அச்சம் என்பது அன்பு நெறிக்குப் பொருந்தாதது. ஆக்கத்திற்கு மாறுபாடாக இருப்பது.

அச்சத்தின் வழிப்பட்ட சமய வாழ்க்கை, மானிடச் சாதியை அடிமை ஆக்கும்; குற்றவாளிகள் ஆக்கும்; பிச்சைக்காரர்கள் ஆக்கும்.

 

     அப்படியானால் அப்பர் பெருமான், "அஞ்சி ஆயினும் அன்புபட்டு ஆயினும், நெஞ்சம் வாழி, நினை நின்றியூரை நீ" பாடி உள்ளாரே என்று கருதக் கூடும். அச்சம் என்று அப்பர் பெருமான் குறிப்பிட்டது மரணத்தால் உண்டாகும் அச்சம். கடவுள் இல்லை என்று வீரத்தோடு முழங்குபவர் கூட, மரணம் என்றால் அச்சும் கொள்வது கண்கூடு. "பெருநோய்கள் மிக நலிய, பெயர்த்து செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே" என்று அப்பர் பெருமான் இரங்கிய இழிநிலைக்கு மனிதன் ஆளாவது அஞ்ச வேண்டியது. பிறவியின் குறிக்கோள், பிறவி அற்ற நிலையை அடைவதே. 

 

     கல்விச் சாலையை ஒருவன் அடைவதன் குறிக்கோள், அறியமையினின்றும் நீங்கி, நல்லறிவு பெற்று வாழ்வாங்கு வாய்வதற்கே. மருத்துவமனையில் ஒருவன் நாடுவதன் நோக்கம், நோய் நீங்கி நலமாக வாழவேண்டியே. எனவே, வாழ்க்கையில் யாராலும் அச்சம் கொள்ளவேண்டிய மரணம் என்னும் பெருந்துன்பத்திற்கு அச்சம் கொண்டாவது, இறைவன் மீது உண்மையான அன்பு கொண்டாவது வழிபாடு இயற்றுவாயாக என்றுதான் அப்பர் பெருமான் அறிவுறுத்தினார். அஞ்சுதல், அன்பு என்னும் இரண்டு நிலையும் வேறு இயல்பினை உடையன என்பதை அப்பர் பெருமான் பாடிய பாடல் உணர்த்துகிறது.

 

     மதம் - சமயம் ஆகிய சொற்கள் ஒரு பொருள் உடையன போலத் தோன்றலாம். மதத்திற்கும் சமயத்திற்கும் வேறுபாடு உண்டு. 'மதம்'என்ற சொல்லுக்குக் 'கொள்கை'என்பதே பொருள். 

ஒரு கொள்கை உடையார்,பிறிதொரு கொள்கை உடையார் மீது தமது கொள்கையைத் திணிக்க முற்படுவது உலக இயல்பு. அதற்குக் கடவுள் கொள்கையையும் சேர்த்துப் பயன்படுத்துதல் கூடாது. தமது கொள்கையை அடுத்தவர் மீது திணித்து விடவேண்டும் என்று வெறிபிடித்து அலையும் பெரியர்(வெறியர்)களைப் பார்த்து, "மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்" என்று தன்மீது வைத்து வள்ளல் பெருமான் பாடுகிறார். சமயம் என்பது வாழ்வியல் நெறியையும், இறையியல் நெறியையும்காட்டுவது. சமயநெறிகளில் கொள்கை வேறுபாடுகள் உண்டு. மனித இனத்திற்குத் தேவையானது சமயம்தான். மதவெறி அல்ல.

 

     சமயம் என்பது ஒருவனை வாழ்வாங்கு வாழ்த் துணை செய்வது. புலன்களைத் திருத்தத் துணைசெய்வது. உள்ளத் தூய்மைக்கு உதவுவது. சமய ஒழுக்கங்கள் பொறிகளோடு தொடர்புடையன அல்ல. பொறிகள் தூய்மைக் கேடு அடைந்தால், புலனும் தூய்மைக் கேட்டினை அடையும். புலன்கள் அழுக்கு அறுவதற்குப் பொறிகள் வாயிலாக அமைந்தவை. புலன்கள் தூய்மையானால் பொறிகள் துய்மை நெறியில் இயல்பாக இயங்கும். புலன்களை வெற்றி கொள்ளத் துணை புரிவதே சமயநெறி ஆகும். மனத்தில் உள்ள மாசு நீங்கி ஆன்மை தூய்மை நிலையை அடைவதற்கு சமயநெறி துணைபுரிய வேண்டும். வெற்று ஆரவாரத்துக்கு இடம் துருதல் கூடாது. "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்று  திருவள்ளுவ நாயனார் கூறுகிறார்.

 

"பொறிப் புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை

நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள்

அறிப்பு உறும் அமுது ஆயவன் ஏகம்பம்

குறிப்பினால் சென்று கூடித் தொழுதுமே".

 

என்று உலகவரை நெறிப்படுத்துகிறார் அப்பர் பெருமான்.

 

            மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்பொறிகளைப் புலன்களின் வழிப் போகாமல் தவிர்த்து,  ஒருநெறிய மனம் வைத்து இறைவனை நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறியப்படுகின்ற அமுதாக உள்ளவன் சிவபெருமான்.  இறைவனும் அவர்க்கு அங்கே வெளிப்பட்டுத் தேனுய் இன்னமுதாய்த் தெரிவரிய சிவானந்தத்தை நல்குவான். 

 

     சமய வாழ்க்கையின் அடிப்படையில் துய்த்தல் நெறிக்கு மாறான - துய்த்தல் நெறியை அடக்குகின்ற பொறிகளை, புலன்களை அழிக்கின்ற - வறட்சித் தன்மையுடைய துறவை உயர்ந்த சமயம் ஏற்பதில்லை. அதனால், சமய நெறியில் துறவே இல்லை என்று பொருள் கொள்ளுதல் கூடாது. வாழ்க்கையிலும் துறவு இருத்தல் வேண்டும். வாழ்க்கையானது துறவுடன் தொடர்பு கொண்டிருந்தால்தான் இன்பம் கிடைக்கும். துறவு என்பது பற்று அற்று இருத்தலே ஆகும். 

 

     இயற்கையோடு இசைந்த வாழ்க்கையே இறைநெறி சார்ந்த வாழ்க்கை. தமிழர்கள் தம் வாழ்க்கையில் மேற்கொண்டு ஒழுகிய சமயநெறியில் பெண்ணை வெறுத்தலும், மனையறத்தை வெறுத்தலும் இல்லை. மற்ற புறச்சமயங்கள் இந்த நெறிக்கு மாறுபட்டு நின்று,கேடு தந்து வந்ததை மாற்றவேண்டிய அவசியம் நமது முன்னோர்க்கு ஏற்பட்டது. "அசைவு இல் செழ்ந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவேண்டும்" என்பதற்காகவே அவதரித்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

     இல்லறத்தை அறத்துப்பாலின் முதல் நிலையில் வைத்து அருளினார் திருவள்ளுவ நாயனார்."அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை"என்று அழுத்தமாகக் கூறுகிறார்."இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை"என்று இல்லறத்தைப் பாராட்டுகின்றார். 

 

     மனையற வாழ்க்கையில் நின்று "வாழ்வாங்கு வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான்" என்று  திருவள்ளுவ நாயனார் உறுதி கூறுகிறார். "அன்பின் வழியது உயிர் நிலை"என்றார் திருவள்ளுவ நாயனார். உயிர்அன்பில் வளர மனையறம் துணை செய்கிறது. திருவள்ளுவர் கூறும் துறவறம் பெண்ணை வெறுப்பது அல்ல. பற்றை அறுப்பது. நாயன்மார் யாரும் பெண்ணைத் துறந்ததாக வரலாறு இல்லை. "காவி உடுத்தும், தாழ்சடை வைத்தும், காடுகள் புக்கும் தடுமாறி, காய்கனி துய்த்தும், காயம் ஒறுத்தும், காசினி முற்றும் திரியாதே" என்றுதான் அருணகிரிநாதரும் நம்மை நெறிப்படுத்தினார். ஆனால், பின்னே தோன்றிய துறவு நெறிகள் நடைமுறைக்கு வந்தன. 

 

     சமயம் சார்ந்து வாழும் சமுதாயம் அன்பினால் தழைத்து வளரும். ஒழுக்கக் கேடுகள் தலைகாட்ட மாட்டா.  சிறைச்சாலைகள் இருக்கமாட்டா. எங்கும் அறச்சாலைகளே நிறைந்து இருக்கும். மனித குலத்தை வேறுபடுத்துகிற புன்மை இருக்காது. அதுவே சமயநெறி சார்ந்த சமுதாயமாக இருக்கும்.வாழ்வியலோடு ஒன்றிய சமயம், காலப் போக்கில் மெய்ஞ்ஞானத்தை வளர்க்கும். 

 

     உலகில் படைக்கப் பெறாமல், என்றும் உள்ளனவாக, இயல்பாகவே அமைந்த பொருள்கள் இரண்டு.  பொருளின் தன்மை இரண்டு. ஒன்று கடவுள்.  மற்றொன்று உயிர்.  பிறிதொன்று உயிரை இயல்பாகவே பற்றி உள்ள அறியாமை. இவை மூன்றும் படைக்கப் பட்டனவும் அல்ல- தோன்றியனவும் அல்ல- அழியக் கூடியனவும் அல்ல. அனாதியானவை. "பதிபசு, பாசம் எனப் பகர் மூன்றில்  பதியினைப் போல, பசு பாசம் அனாதி" என்னும் திருமூலர் திருவாக்கினை ஒட்டி, மெய்கண்ட சாத்திர நூல்களால் அறிந்து கொள்ளலாம்.

 

     இம் மூன்றனுள், கடவுள் பிறப்பு இறப்பு இல்லாதவன். உயிர்களுக்குப் பிறவிக்கடலை நீந்துவதற்குத் துணையானவன் என்று திருவள்ளுவ நாயனார் நாட்டுகிறார். மேலும் தனக்கு உவமை இல்லாத அவன் ஒருவனே தன்னைச் சார்ந்தாரின் மனக் கவலையை மாற்றும் வல்லமை படைத்தவன் என்கிறார்.திருவள்ளுவ நாயனார் காட்டிய கடவுளுக்கு உருவமில்லை. ஒரு நாமம்,ஓர் உருவம் ஒன்றும் இல்லாத அந்தப் பரம்பொருளை"வாலறிவன்" என்றார்.

 

     உயிரும் அறிவுப் பொருள்தான். அது அறிவு பெறுதற்கு உரியது. ஆனாலும், அது இயல்பில் அறியாமையைத் தழுவிக் கிடக்கிறது. தழுவிக் கிடக்கும் அறியாமையில் இருந்து நீங்கி,  அறிவினைப் பெறும் முயற்சியே மனித வாழ்க்கை. பிறப்பு என்பது பேதைமையை உடையது. அது நீங்க, சிறப்பு என்னும் செம்பொருளைக் காணும் அறிவை அது பெறவேண்டும். இந்த உண்மையைத் திருவள்ளுவ நாயனார்,  "பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்செம்பொருள் காண்பது அறிவு" என்னும் திருக்குறளால் நிறுவினார்.

 

            உயிரைப் பிணித்து உள்ள இந்த அறியாமையை விளக்குவதற்குத்தான் கல்வி,கேள்வி, அறிவுடைமை மெய்யுணர்தல் போன்ற பல்வேறு அரிய முயற்சிகளையும், பிற வாழ்க்கை முயற்சிகளையும் அமைத்துக்காட்டுகிறது திருக்குறள். அறியாமை உடைய உயிர்,  அறிவுத் திருவுருவான கடவுளின் துணையை நாடி,  அறிவினைப் பெற்று வளர்தற்குத் துணை செய்தலே வழிபாடு. 

 

     உயிர்கள் தொழிற்படுதல் இயற்கை. மனிதன் அவ்வாறு தொழிற்படுதலை வினைசெய்தல் என்னும் சொல்லால் குறித்தனர்.  உயிர், உயிர்ப்போடு உள்ளமைக்கு அதன் தொழிற்பாடே அடையாளம். வினை செய்தல் நன்மையும் வரும், தீமையும் வரும். நன்மையும் தீமையும்,வினை செய்யும் நோக்கங்களினால் உண்டாவன. வினைகளைச் செய்யும் நோக்கம், வினைகளைச் செய்யும் பொழுது உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் இவைகளுக்குத்தான் பயன். செயலால் நல்வினை போலத் தோன்றும். ஆனால் வழிபாடு செய்யப்புகும் ஒருவன்,அன்பு நிலையைத் தவிரப் பிறிது ஒன்றைப் பெற விரும்பிச் செய்தால்,அவன் எல்லையற்ற இன்பநிலை அடையமாட்டான். அவன் எதை நினைத்துச் செய்தானோ,அதன் பயனே அவனுக்கு வரும். 

 

     நோயின் கொடுமையால் ஒருவன் துன்புறுகிறான். மருத்துவர், அறுவை முதலியன செய்யும்போது நோயாளி இறந்து விடலாம். காட்சியளவில் இது கொலை போலத் தோன்றும். ஆனால், மருத்துவரின் நோக்கம் நோய் நீக்கமாக இருந்தது. எனவே, அதுகொலை ஆகாது.  இது தீவினை ஆகாது. ஆனாலும், பொருள் ஒன்றையே கருதி, கவனக் குறைவாக மருத்துவம் செய்ததால் நோயாளார் இறந்துபட நேர்ந்தால், அதுதான் தீவினையாகும். அதன் பயனை மருத்துவன் அனுபவித்தே தீரவேண்டும். அவ்வாறு அனுபவத்திற்கு வரும் வினையின் பயனே "ஊழ்" என்பது.

 

     ஊழின் வலிமை பெரிது. என்பர். ஊழின் பயனை யாரும் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால் ஊழின் தடத்தை அழித்து எழுத முடியாது என்பது பொருள் அல்ல. நல்வினைகளை அயர்வு இல்லாமல் செய்து வந்தால், ஊழையும் உப்பக்கம் காணலாம். அனுபவத்திற்கு வந்த ஊழை அனுபவித்து நீக்காலம்.

 

     வினைகளின் பயன் மீண்டும் சுழற்சியாக வாராமல் தடுத்து நிறுத்தி உயிரை,இனிய அன்பில் நிறுத்துவதற்குரிய ஒரே வழி வினைகள் செய்யாது இருப்பது அல்ல. ஓயாது வினைகள் இயற்றி உயிர்ப்பாக வாழ்தலே வாழ்க்கை. சமய வாழ்க்கையில், இறைநெறியில் நின்று மனித உலகத்தை நேசித்துத் தூய்மையான நோக்கத்துடன், 'இறைவனின் கருவியாக நாம் தொழிற்படுகிறோம்'  என்ற உணர்வுடன் வினைகளைச் செய்தும்,அவைகளின் பயனை இறைவனுக்கும் மக்களுக்கும் என்று அர்ப்பணித்தால் அவ்வினைகள் அருள்சேர் வினைகளாகும். இத்தகு வினைகளுக்கு உயிரைக் கறைப்படுத்தும் குணம் இல்லை. அல்லாதவை எல்லாம் இருள்சேர் இருவினைகள். இதுதான், திருவள்ளுவர் காட்டும் ஊழியல். 

 

     ஊழ் அனுபவத்திற்கு வருவதற்கும்,உயிர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் தொடர்பில்லை. ஊழிற்குக் காரணமான பழைய பழக்கம். அதாவது உழுத கால்வழி உழுதல் போன்ற பழக்க வாசனை. கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல் முதலிய முயற்சிகள் மூலமும், பகுத்தறிவைப் பெற்றுப் புதிய பழக்கங்களை ஏற்றுக் கொள்வதன் மூலமும், பழைய பழக்கத்தை மாற்ற முடியும்.ஆனால், அது எளிதானது அல்ல. அதற்கு விலை கொடுக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகாத உணவைச் சுவை காரணமாக உண்டுவிட்டால் கொஞ்சம் வயிற்று வலியைத் தாங்கித்தான் ஆகவேண்டும். ஒரு வேளைக்கு உணவை மறந்து வாயைக் கட்டிப்போடத்தான் வேண்டும். இது நடைமுறைப் பழக்கம்தான். 

 

     நேற்றைய பழக்கத்தின் வழித் தவறுகளை இன்றைக்குத் திருத்தம் உறச் செய்ய வேண்டுமானால், கடுமையான விலை கொடுத்தே ஆக வேண்டும். அது "உலைவு இன்றித் தாழாது உஞற்றுதல்" ஆகும். ஊழை மாற்றும் ஆற்றல் தளர்ச்சி இல்லாத உழைப்புக்கே உண்டு. அதனால் "மெய் வருத்தக் கூலி தரும்"என்றார். 


     உயிர்கள், பல்வேறு பிறப்புக்களை உடையன என்பது வழிவழி வரும் ஒரு கொள்கை. உயிருக்குத் தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை. அப்படியானால் பிறப்பு என்பது உயிர் தன்னுடைய நிகழ்கால நோக்காகிய இன்ப அமைதியைப் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபடப் போர்த்திக் கொள்வதுதான் உடல். உயிர் உடம்பினை உடுத்தி கொள்ளும், உடம்பினைப் பொருந்துகின்ற நிகழ்வுதான் பிறப்பு. உயிர் எடுத்துக்கொண்ட உடம்பு, பல்வேறு காரணங்களால் பயன்படாது ஒழியும்போது அதை நீக்குதல் இறப்பு. இது தொடர்ச்சியாக வரும்.

 

     மெய், வாய், கண், மூக்கு,செவி என்னும் பொறிகள் ஐந்தும் உடம்பினைச் சார்ந்தவை. புலன்கள் உயிரினைச் சார்ந்தவை. இவை ஞானேந்திரியங்கள் எனப்படும். தொழிற்கருவிகள் எனப்படும் கர்மேந்திரியங்கள் உடலினைச் சார்ந்தவை. இக்கருவிகளை இயக்கிச் செய்விக்கும் அறிவுக் கருவிகள் உயிரைச் சார்ந்தவை. 

 

     "எழுபிறப்பு"திருக்குறளில் சொல்லப்பட்டு உள்ளது. ஓர் உயிர், தன் குறைகளில் இருந்து நீங்கி,நிறைபெற்று வளர்ந்து,இன்ப அன்பை அடைய,ஏழு தடவை பொதுவாக முயற்சி செய்கிறது என்பது பொதுவிதி. உயிரின் படிமுறை வளர்ச்சியில் ஆறுவகைப் பிறப்புகளைப் பொதுவாகத் தொல்காப்பியம் கூறும்.

 

"ஒன்று அறிவு அதுவே,உற்று அறிவதுவே;

இரண்டு அறிவு அதுவே,அதனொடு நாவே;

மூன்று அறிவு அதுவே,அவற்றொடு மூத்கே;

நான்கு அறிவு அதுவே,அவற்றொடு கண்ணே;

ஐந்து அறிவு அதுவே,அவற்றொடு செவியே;

ஆறு அறிவு அதுவே,அவற்றொடு மனனே;

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே".

 

என்னும் தொல்காப்பியத்தின்படி, படிமுறை வளர்ச்சியில் உயிர் ஓரறிவில் தொடங்கி, ஆறறிவு வரை வளர்ந்து, அதனைக் கடந்த பெருநிலை எய்துதல் ஏழாவது நிலை. இந்தப் படிமுறைகளை நினைவில் கொண்டு "எழுபிறப்பு" என்று சொன்னதாகவும் கொள்ளலாம். இடையீடு இல்லாமல், புதிதாகத் தோன்றி வரும் பிறப்பு என்றும் பொருள் கொண்டால், எழுகின்ற பிறப்பு என்னும் பொருள்பட "எழுபிறப்பு" என்றும் கொள்ளலாம்.

 

      "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" ⁠என்று நாயனார் அருளியதை வைத்து, உயிர்க்கு இறப்பு என்பது களைப்பாறும் நிலையே தவிர,அதுவே முடிவு அல்ல என்பது விளங்கும். களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சியோடு எழுந்து நடமாடுதலே புதிய பிறப்பு. பல்வேறு பிறப்புகளில் உயிர் வளர்ந்து வளர்ந்து முதிர்ச்சி அடைந்து வரும். சிலரிடத்தில் இயல்புக்கு மாறான நுண்ணறிவு உள்ளது. சிலரிடத்தில் இயல்பாகவே சான்றாண்மை குடிகொண்டு இருக்கிறது. இவையிரண்டும் எடுத்த பிறப்புக்களில் எல்லாம் உயிரால் ஈட்டப் பட்டவை. எடுத்த அந்த ஒரு பிறப்பிலேயே ஈட்டப் பெற்றவை அல்ல.

 

     பல்கலைக் கழகங்களின் வாயிற்படிக்கே போகாதவர்கள் கூட சீரிய சிந்தனைத் திறனுடனும் செயல் திறனுடனும் விளங்குவதை வைத்தே, அவர்கள் முற்பிறவியிலேயே கற்றுத் தேடி வைத்து இருக்கிறார்கள் என்பதை, "ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி, ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று நாட்டினார் நாயனார்.

 

     இன்றைய உலகியலில் பெரிய விவாதத்திற்கு உரியது கடவுள் ஆகும். 'கடவுள் இல்லை; இல்லை! இல்லவே இல்லை' என்று கூறி வருபவர் ஒரு புறம். திருக்கோயில்களின் பெருக்கமும், அவற்றில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களின் பெருக்கமும் இதற்கு மாறாக இருக்கின்றன. கடவுள் உண்டா? இல்லையா? என்று தெளிவாக, அறிவுப் பூர்வமாக உறுதிப்படுத்தக் கூடிய விடையை யாராலும் கூற முடியாது. அனுமானப் பிரமாணங்களால் உண்டு என்று சொன்னவர்களும் கூட, கண்டு காட்டவில்லை. "கேட்டு அறியோம் உன்னைக் கண்டு அறிவாரை" என்றார் மணிவாசகப் பெருமான். அவ்வாறு காட்ட முடியாமையை வைத்தே கடவுள் இல்லை என்று நிறுவுகின்றவர்களும் உண்டு. கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லும் இலக்கணத்தைப் பார்த்தால், அதனை ஆராய்ந்து அறிந்து 'உண்டு' அல்லது 'இல்லை'என்று எளிதில் கூற இயலாது. "வேதங்கள் ஐயா!  என,ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்" என்பது மணிவாசகம். இங்கு ஒருவரும்,அங்கு ஒருவருமாக, தாம் அறியாததனாலோ,வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு உணர்வுகளாலோ, கடவுள்இல்லை என்று கூறுவோர் உண்டு. கடவுள் இல்லை என்று கூறுவோர் உலகியலில், பொருளியலில் உயிர் இயலில் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் காட்டி, இவைகளுக்குக் காரணமாக உள்ள பொருள் கடவுளாக இருக்க முடியாது என்கின்றனர். 

 

     திருவள்ளுவர் காட்டும் கடவுள், தூய்மையான அறிவு, தனக்கு உவமை இல்லாத தன்மை, மற்றும் எண் குணங்களின் உருவமே ஆகும். அது,வேண்டுதல் வேண்டாமை இல்லாதது. பொறிவாயில் ஐந்தையும் அவித்தது.பொறிவாயில் ஐந்தவித்தல் என்பது, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகள் ஐந்தின் உணர்வுகளை அழித்தல். இயற்கைக்கு முரணான செயல்முறையாலும், முறையற்ற வழியிலும் அடக்குதல் இயலாது. முறையற்ற வழியில் அடக்க முயன்றால் புறத்தோற்றத்தால் அடங்கியது போலத் தோற்றம் அளித்து,  அவ்வப்போது முறைபிறழ்ந்த வழிகளில் செல்லும்.  அழித்தல் என்பது இயற்கைக்கும் அறநெறிக்கும் உகந்தது அல்ல. "அவித்தல்" என்ற சொல் பக்குவப்படுத்துதல் என்று பொருள் தரும். நெல், கிழங்கு முதலியனவற்றைப் பக்குவப்படுத்தும் முறைக்கு "அவித்தல்" என்பது வழக்கு. சுவைத்துப் பயன்படுத்துவதற்குத் தக்கவையாக இல்லாத பொருள்களைச் சுவைத்துப் பயன் கொள்ளத்தக்கவாறு பக்குவப்படுத்துதலை 'அவித்தல்' என்று கூறுவது வழக்கம். அதுபோல உயிர், பயன்கொள்ளத் தக்கபடியும்,அவ்வுயிரைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் சுவைக்கும்படியும், பயன்படுத்துமாறும் இல்லாமல், கரடு முரடாக இருக்கும் புலங்களையும் பொறிகளையும் பக்குவப்படுத்தி நிறைநலம் பொருந்தியதாக மாற்றி அமைப்பதே "அவித்தல்"ஆகும்.  அவித்தல் என்னும் சொல்லைச் சுந்தரமூர்த்தி நாயானாரும் கையாண்டு உள்ளார். "பொறிவாயில் இவ் ஐந்தினையும் அவியப் பொருது, உன் அடியே புகும் சூழல் சொல்லே" என்னும் ஏழாம் திருமுறைப் பாடல் வரிகள் காண்க.  

 

     இறைவன் அல்லது கடவுளின் இலக்கணத்தைக் கூறிய திருவள்ளுவ நாயனார், வேறு உறுப்புக்களைக் கூறாமல்,"நற்றாள்", "மாணடி", "அடி", "தாள்" என்றெல்லாம் திருவடிகளை மட்டுமே குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் பொய்ம்மை நிறைந்ததாகவும், மனித குலத்துக்குத் தீமை செய்வதாகவும் புகுந்த நால்வருணக் கொள்கையின்படி பார்த்தால், இறைவன் திருவடியானது, 'சூத்திரர்கள்' எனப்படும் இழிந்த மக்களையே தந்தன என்று கொள்ள வேண்டி உள்ளது.

 

     குண பேதத்தால் படைப்பு உண்டாகிறது. சத்துவ குணம் நிறைந்து இருக்கும் சீவன் பிராமணன். சத்துவ குணத்தோடு சிறிது ரசோகுணம் கூடி இருப்பவன் சத்திரியன். ரசோகுணம் பெரும்பகுதியும், சிறிது சத்துவம், தமோ குணம் கூடி இருப்பவன் வைசியன். தமோகுணம் பெரிதும், சிறிது ரசோகுணமும் கூடி இருப்பவன் சூத்திரன். சத்துவத்தின் நிறம் வெண்மை. ரசோகுணத்தின் நிறம் சிவப்பு. தமோகுணத்தின் நிறம் கறுப்பு. இந்த நிறங்கள் தூல உடலில் தோன்றுபவைகள் அல்ல. தூல உடலில் மேனாட்டார் பலரும் வெள்ளை நிறத்தினர் ஆகவே உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் பிராமண இயல்பினை உடையவர் அல்ல. அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம். ஆனாலும், அவர்கள் எல்லோரிடத்திலும் சத்திரிய இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம், இராமன், கிருஷ்ணன் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். இந்த தூல சரீரத்தின் நிறம், மனிதனது இயல்பை நிர்ணயிப்பது இல்லை. 

 

     நான்கு வருணங்கள் என்பவை, உயிரின் மனப் பக்குவத்தை, அறிவை ஒட்டிச் சொல்லப்பட்டவை. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த நான்கு சகோதரர்களுக்கு இடையில், மனப் பக்குவத்துக்கு ஏற்ப ஒருவன், பிராமண இயல்பினை உடையவனாகவும், இன்னொருவன் சத்திரிய இயல்பினை உடையவன் ஆகவும், மற்றொருவன் வைசிய இயல்பை உடையவன் ஆகவும், வேறு ஒருவன் சூத்திர இயல்பினை உடையவன் ஆகவும் இருப்பதை இன்றும் காணலாம்.

 

     வருணத்தில் மேல்நோக்கிப் போகப் போக, பரவித்தையில் ஈடுபாடு அதிகரிக்கிறது. வருணத்தில் கீழ்நோக்கிப் போகப் போக, கர்மபலனில் பற்று அதிகரிக்கிறது. சமுதாயத்தார் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் வருண தருமம் என்பது பரம்பொருளைக் குறித்ததாக இருக்குமானால், அந்தச் சமூகம் முன்னேற்றம் காணும். அல்லாத நிலையில் சீர்கேடு அடையும். 

 

     இறைவன் திருவருளைப் பெற்ற எந்த ஞானியும், அருளாளரும், இறைவனின் தலையை நினைந்து உருகிப் பாடியதாக இல்லை. ஆனால், சூத்திரன் பிறந்ததாகக் கூறப்படும் திருவடிகளையே அவர்கள் போற்றிப் புகழ்ந்து உள்ளனர். திருவள்ளுவர் கடவுளை நம்புகிறார். ஆனால் அது ஆணும் அல்ல- பெண்ணும் அல்ல. திருவள்ளுவர் திருக்கோயில்களையும், கோபுரங்களைக் காட்டவில்லை. வழிபாட்டு நிலைகளையும் காட்டவில்லை. சமயக் கொள்கை எவற்றையும் காட்டாது, "சமயம் கடந்த மோன சமரசம்" ஒன்றையே காட்டுவது திருவள்ளுவர் நெறி.

     "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இ(ல்)லி நாயேன்" என்று அன்றே மணிவாசகப் பெருமான் காட்டி விட்டார். வடநூல்களில் கூறப்படும் நால்வகை வருணங்களும், நால்வகை ஆசிரமப் பகுப்புக்களும், இவற்றுக்கு உரியவாக நியமித்துச் சொல்லப்படுகின்ற உலகியல் நடைமுறைகளும் முதலானவைகள் யாவும், அறிவாற்றல்களில் குறைந்த சிறுபிள்ளைகள் தம் விளையாட்டுக்களில் வரையறை செய்து கொள்ளும் விளையாட்டு விதிகளைப் போன்றவையே. அல்லாமல், மெய்ந் நெறிக்கு உரிய நடைமுறைகள் ஆகமாட்டா. மக்கள் உடம்பின் மேல் போர்த்தப் பெற்றுள்ள தோலின் நிறங்களைக் கொண்டு அவர்களது கல்வி நலம், பண்புநலம் முதலியவற்றைக் கண்டறிவார் ஒருவரும் இல்லை.வருணம், ஆசிரமம் ஆசாரம் முதலிய இவற்றின் பொய்ம்மையினை நீ அறிவுக் கண்ணைத்திறந்து கண்டு தெளிவாயாக என உயிர்க்கு உயிராகிய இறைவனே உள்நின்று உணர்த்தஉணர்ந்த அருளாளர் வற்றல் பெருமான் ஆவார். இவ்வுண்மையை, 

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
     
நவின்ற கலைச் சரிதம் எ(ல்)லாம் பிள்ளை விளையாட்டே;
மேல்வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இ(ல்)லை, நீ
     
விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே" 

எனவரும் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

     "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என அன்பினால் ஒன்றி, ஒரு குடும்பத்தவராக வாழ்வதற்கு உரியது மக்கள் குலம். விலங்குகள் கூட, தத்தமது இனத்தோடு கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. மக்கள் இனம் மட்டும் ஏன் இந்த நிலையில் உள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இவர் இன்ன மதத்தினர், இன்ன சாதியினர்எனப் பல்வேறு வகையினராகப் பிரித்து வேறுபடுத்துதற்குக் காரணமாய் உள்ள சாதிமதங்கள் யாவும் ஆதியில் இல்லவே இல்லை. பின்னர் வந்தோரால் கற்பனை செய்து சொல்லப்பட்டனவே. இவ்வுண்மையை இறைவன் அருளால் இளம்பருவத்திலேயே உணரப் பெற்றவர் அருட்பிரகாச வள்ளலார். "சாதியும் மதமும் சமயமும் பொய் என, ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி"என்னும் அவரது அருள்வாக்கால் இந்த உண்மை புலன் ஆகும்.

     இன்று, உலகெங்கும் வேறுபாடுகள் மலிந்து, சமயங்களுக்கு இடையில், கொள்கை வேறுபாடுகளைக் கொண்ட மதங்கள் உருவாகி, அன்பு நெறியினை வளர்க்காமல், காழ்ப்புணர்ச்சியை வளர்த்து வருகின்றன. சென்றகால வரலாற்றினைக் கூர்ந்து கவனித்தால், மனித உலகத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் சமயநெறிகள் செய்த நன்மைகள்  போற்றுதலுக்கு உரியன என்பது தெரியவரும். ஆனாலும், இடையிடையே சமய அமைப்புகள் மக்களிடையே பரப்பிய மூட நம்பிக்கைகளும். சமய நிறுவனங்களுக்கு இடையே நிகழ்ந்த போர்களும் அந்த நற்பணிகளை மறைத்து விட்டன. மூடநம்பிக்கை என்பது எல்லா மதங்களிலும் உண்டு. அறிவின்மை இருக்கின்ற இடங்களில் எல்லாம் மூடநம்பிகை இருக்கும். தமிழர்களிடையில் தான் மூட நம்பிக்கை இருப்பதாகக் கூறுவது அப்பட்டமான அறியாமை. 

 

     உண்மையாக சமயநெறியில் நிற்போர் இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பவேண்டி உள்ளது. தூய சமயநெறியில் நின்று மனிதகுலத்தை மேம்படுத்த விரும்பினால், சமய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாத திருவள்ளுவர் காட்டும் சமயநெறி உலகம் முழுமையும் பரவுதல் வேண்டும்.  மனித குலத்தின் உரிமைகள் இயற்கையில் அமைந்தவை. அந்த உரிமைகளை நாடுகளின் அமைப்பின் மூலமோ,அரசியல்களின் மூலமோ, சமய அமைப்புகளின் மூலமோ, சாதி குல அமைப்புகளின் மூலமோ பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. உயிர்கள் பிறப்பிலேயே ஒத்த உரிமையை உடையன. "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்"என்னும் திருக்குறளை ஆழ்ந்து சிந்தித்தால் இதன் உண்மை விளங்கும்.

 

     கறுப்பர், தீண்டத் தகாதவர் என்று மனித குலத்தினைப் பிரித்து ஆட்டிப் படைக்கும் தீமைகள் மறைய வேண்டும். கடவுள் அருச்சனைகளால், ஆராதனைகளால், படையல்களால் திருப்தி செய்யத்தக்க பொருள் அல்ல என்பதை மனித சமுதாயம் கருத்தில் கொள்ளவேண்டும். திருவள்ளுவர் காட்டும் சமயநெறி நன்றாக வேர் ஊன்றுமானால்,  தொண்டு நிறுவனங்கள் எங்கும் தோன்றும். தொண்டர்களே நிறைந்து இருப்பர். அதனால் மனிதகுலம் தழைக்கும். தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் இருக்கமாட்டார்கள். பெரியபுராணத்தில் அடியார்களைத் திருத்தொண்டர் என்றே கூறப்பட்டு உள்ளது. உயிர்க் குலத்திற்குத் தொண்டு செய்தவர்களே இறை அடியார்கள். 

 

     திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூல் அல்ல. அது சமயச் சார்பு அற்ற நூல்.  அது வாழ்வியல் நெறிகளைக் காட்டும் நூல். திருவள்ளுவர் காட்டும் சமயவியல், மானிடத்தை மேன்மை உறச் செய்வது. அங்கே சமயப் பூசல் இல்லை. நேசம் நிறைந்து இருக்கும். அன்பு நெறி உலகெலாம் தழைக்கும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையில் உலகம் ஓங்கும். "இயல்பினால் ஒன்று காதலித்து, உள்ளமும் ஓங்கிட, என்றும் இன்பம் பெருகும்".

 

     திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்படுகின்ற இந்த நாளில் திருவள்ளுவர் மனித குலத்துக்கு அறிவுறுத்திய அன்புநெறியை நினைவில் கொண்டு,புதியதோர் உலகம் செய்யவேண்டும். அங்கே சாதி, குலம், பிறப்பு, சமயம், மதம் என்னும் வேற்றுமைகளைக் கொண்டு கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்த்து, மனித குலம் தழைக்கவேண்டும்.


 

 

064. அமைச்சு - 08. அறிகொன்று அறியான்

திருக்குறள் பொருட்பால் ஆ. அமைச்சியல் அதிகாரம் 64 -- அமைச்சு இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "அறிந்து சொல்லினவரது அறிவை...