இடும்பு அழிவைத் தரும்

                                                              இடும்பு அழிவைத் தரும்

-----

 

     "இடும்பு" என்னும் சொல்லுக்கு, அகந்தை, கொடும் செயல், குறும்பு, ஆணவம் என்னும் பொருள்கள் உண்டு. இடும்பை என்னும் சொல்லுக்கு, துன்பம் என்று பொருள். இந்த இடும்பு என்பது உயிரினிடத்தில் இயல்பாகவே பொருந்தி உள்ள ஆணவத்தின் விளைவு ஆகும். ஆணவம், அஞ்ஞானம், அகந்தை, அவிச்சை, அறியாமை எல்லாம் ஒரு பொருளையே தருவன.

 

     சைவ சித்தாந்தம் என்றும் அழிவில்லாத, நித்தியப் பொருள்களாக,மூன்று பொருள்களைக் குறிக்கும்.உண்மைப் பொருள்களாகிய அவற்றை மேற்பொருள், இடைப்பொருள், கீழ்ப்பொருள் என்றும் சொல்லப்படும். மேற்பொருளாய் உள்ளது இறைவன். இடைப்பொருளாய் உள்ளவை உயிர்கள். கீழ்ப்பொருளாய் உள்ளவை உயிர்களைப் பற்றியுள்ள மலங்கள். மலம் என்றால் அழுக்கு என்று பொருள்.

 

      இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கின்ற பெரும்பொருளாக உள்ளான். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. வானம்தான் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம், நீர், தீ, காற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும், விண்மீன்களையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைத்தைப்போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுநிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால், இறைவனே "மேற்பொருள்" ஆவான்.

 

     உயிரை, ஆன்மா என்றும், சீவன் என்றும்சொல்லுவர். உயிர்கள் எண்ணற்றவை. அவை இறைவனிடத்தில் அடங்கிஇருப்பவை. இறைவனது பெருநிறைவு, "வியாபகம்"எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை "வியாப்பியம்"எனப்படும். இறைவன் வியாபகம். உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம். உயிரானதுதனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினை இயல்பாகவே பெற்று இருப்பதால்,அறிவு விளக்கம் பெறாமல், அறிவு மயக்கதோடு துன்புறும்.  பிறவிகள் தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அறிவு விளக்கம் உண்டாக உண்டாக, கீழ்ப்பொருளான மலங்களில் இருந்து  விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்பத்தை அனுபவிக்கும். இவ்வாறு மேற்பொருள்,  கீழ்ப்பொருள் ஆகிய இரண்டின் வசப்படுவதாய், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் நிற்பதால் உயிர் "இடைப்பொருள்" எனப்பட்டது.

 

      மேற்பொருளாகிய இறைவனும், இடைப்பொருளாகிய உயிரும் அறிவு உடைய பொருள்கள். அவை "சித்து"எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை "சடம்"எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நின்று,பின்னர் அகற்றப்படுவதால்மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.

 

      அவற்றில் ஆணவம் என்பது உயிரினடத்தில் இயல்பாகவே பொருந்தி உள்ளதால், அது "மூலமலம்" எனப்பட்டது. இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப் பொருள் அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அந்த எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்யமாட்டோம்.

 

     "கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்" என்கின்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். உள்ளத்தில் வஞ்சகம் இருந்தால், அது துன்பத்தையே தரும் என்னும் எண்ணம் இருக்க வேண்டும். ஆனால், உயிருக்கு இயல்பாகவே உள்ள அறியாமையானது, "யாரும் காணவில்லையே" என்று எண்ண வைக்கும். யாரும் காணாமல் வஞ்சகச் செயல்களைச் செய்வது அறிவு அல்ல. நாம் செய்யும் வஞ்சகச் செயல்களை "எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்று அங்கு குலைவது அறிவு" என்கின்றார் குமரகுபர அடிகளார்.  எங்கும் உள்ள பொருள் நம்மைக் கண்காணிக்கின்றது என்னும் எண்ணம் எழவொட்டாதபாடி உயிரினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள்தான் "ஆணவமலம்" எனப்படுகிறது. எல்லா உயிர்களிடத்திலும் ஆணவமலம் இயல்பாகவே பொருந்தி உள்ளது. நீரை மூடும் பாசி போலவும், கண்ணை மறைக்கும் இருள் போலவும், உயிர்களின் அறிவை மறைத்து நிற்பதுஆணவம். அறிவு மயக்கம் உள்ள உயிர்களைத் தனது ஆற்றலால் சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவமலமே ஆகும். உயிர் அடையும் எல்லாப் பெருங்கேட்டிற்கும் இது மூலமாக இருப்பதால், இது "மூலமலம்" எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்பதால், ஆணவம்,"சகசமலம்"என்றும் சொல்லப்படும். கண்ணை மறைப்பதுபுற இருள்.அறிவை மறைக்கும்ஆணவம்அகவிருள் ஆகும். எனவே,ஆணவம், "இருள்மலம்" என்றும் சொல்லப்படும்.

 

     ஆணவமலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவு ம்உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து, ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை விளக்குகிறது. மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் வலிமை சிறிது மடங்கிய போது, ஆன்மா சிறிது அறிவைப் பெறுகிறது. அகநோக்கில் தன்னையும் தன்னுள்ளே இருக்கும் இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப்பொருள்களையே நோக்கி நிற்கிறது.

 

     இந்நிலையில் ஆணவமலம் திரிபு உணர்வைத் தருகிறது. திரிபுணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்கவுணர்வு எனினும் ஒன்றே. இத் திரிபு உணர்வால் ஆன்மா தன்னையே எல்லாவற்றிற்கும் முதலாகக் கருதி "நான்நான்" என்று முனைத்து எழுகிறது. அம் முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.

 

      மாயை உடம்பாயும் உலகப்பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம் அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத்துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம் 'நான்', 'எனது' என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது. நான் என்பது அகப்பற்று, எனது என்பது புறப்பற்று. இந்த இரண்டு பற்றுக்களும் அற்றால்தான், ஆன்மா உயர்நிலையை அடைய முடியும்.

 

     இந்த நான் என்னும் அகங்காரம் ஆகிய புறப்பற்றும், எனது என்னும் மமகாரம் ஆகிய அகப்பற்றும் உள்ளவரையில் ஆன்மா பிறருக்குத் துன்பத்தை உண்டாக்குவதோடு, தான் இன்புற்று இருப்பதுபோல் இருந்து, முடிவில் தீராத துன்பத்தில் ஆழ்ந்து அழிந்து போகும். இதைப் புராண வராலாறுகளைக் காட்டி உணர்த்த, "குமரேச சதகம்" என்னும் நூலில் பின்வருமாறு ஒரு பாடல் அமைந்து உள்ளத.

 

"சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,

     துடுக்கான கஞ்சன் வலியும்,

துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,

     தொலையாத வாலி திடமும்,

 

பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது

     பராக்ரமும், மதுகைடவர்

பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்

     பங்கில்உறு வல்லமைகளும்,

 

ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்

     எண்ணமும், தக்கன் எழிலும்,

இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்

     இடும்பால் அழிந்த அன்றோ?

 

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த

     வரபுத்ர! வடிவேலவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".     --- குமரேச சதகம்.

 

இதன் பொருள் ---

 

     மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன் தந்த வர புத்திர - மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணைக் கொண்டு எரித்து,பின்னர் அவனுக்குஅருள் புரிந்த சிவபெருமான் அருளால் வந்து அவதரித்தவரரே! வடிவேலவா - கூர்மையான வேலை உடையவரே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் நெடிய மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

      சூரபத்மன் பலமும் - சூரபதுமனுடைய வலிமையும்,  இராவணன்  தீரமும் - இராவணனுடைய நெஞ்சுறுதியும்,  துடுக்கான கஞ்சன் வலியும் - துடுக்குத்தனம் மிகுந்த கஞ்சனுடைய  ஆற்றலும்,  துடியான இரணியன் வரப் பிரசாதங்களும் - துடிப்புடைய இரணியன் தனது வரத்தினால் பெற்ற ஆற்றலும்,  தொலையாத வாலி திடமும் - வாலியின் அழிவற்ற வல்லமையும்,  பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்கிரமமும் - கூட்டமாக இருந்த துரியோதனன் முதலான கவுரவர் நூற்றுவரின் ஆற்றலும்,  மதுகைடவர் பாரிப்பும் - மது கைடவர் என்னும் அசுரர்களுடைய பெருமையும், மாவலி தன் ஆண்மையும் - மாபலிச் சக்கரவர்த்தியின் வீரமும்,  சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் - சோமுக அசுரனிடத்தில் இருந்த வலிமையும்,  ஏர் அணவு கீசகன் கனதையும் - வளர்ச்சி பொருந்திய கீசகனின் பெருமையும்,  திரிபுரர் எண்ணமும் - முப்புராதிகளின் நினைவும்,  தக்கன் எழிலும் - தக்கனுடைய உயர்வும்,  இவர்களது சம்பத்தும் நின்றவோ - இவர்கள் படைத்து இருந்த செல்வங்களும் நிலைபெற்று இருந்தனவோ?

அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ? - அவரவர்கள் கொண்டு இருந்த அகந்தையால் அழிந்தன அல்லவா?

 

     இப்பாடலின் பொருளைச் சற்று விரிவாகப் பார்ப்போம். காசிப முனிவருக்கு மாயாதேவியிடம் தோன்றிய சூரபதுமன், தனது தம்பியர் ஆன சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியவர்களுடனே வளர்ந்து, சிவபரம்பொருளைக் குறித்துத் தவம் செய்து பெற்ற வரத்தினால் செருக்குக் கொண்டு, தேவர்களை எல்லாம் சிறைப்படுத்தி, தென்கடலில் மகேந்திரபுரி என்னும் இடத்தில் இருந்துகொண்டு ஆயிரத்து எட்டு அண்டங்களையும் ஆட்சி புரிந்து, தேவர்க்கும் முனிவர்க்கும் பல வகையான தீங்குகளைச் செய்து வருகையில், தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய ஐம்முகச் சிவத்தின் நெற்றிக்கண்ணில் உதித்த ஆறுமுகச் சிவம், அரக்கர்களோடு போர் புரிந்து, சூரபதுமனாதியர்களை அழித்து, தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து அருள் புரிந்தார். சூரபதுமன் ஆணவமலம். தாராகாசுரன் மாயா மலம். சிங்கமுகன் கன்ம மலம் என்று ஆன்றோர் சொல்லுவர். இந்த மும்மங்களையும், முருகப் பெருமான் திருக்கரத்தில் விளங்கிய ஞானசத்தி ஆகிய வேல் அழித்து ஒழித்தது.

 

     பலவகை வலிமைகளையும் மிகுதியாகப் பெற்று இருந்த இராவணன், இராமபிரானால் அழிந்தான். காலநேமி என்னும் அசுரனது அம்சமாகப் பிறந்த கம்சன், பல அரக்கர்களுடன் கூடி உலகத்தில் பல தீங்குகளைச் செய்து வந்தான். அவனுக்கு மருமகனாய் அவதரித்த கண்ணபிரான் அவனைக் கூட்டத்தோடு அழித்தார். இரணியன் பெற்ற வரபலம் முழுவதும், நரசிங்கமூர்த்தியினால் நிலைகுலைந்து போனது. தன்னுடன் எதிர்த்தவர்க்கு உள்ள பலத்தில் பாதி தன்னிடத்தில் வந்து பொருந்துமாறு வரம் பெற்று இருந்து வாலி, இராமபிரான் விடுத்த அம்பினால் மாய்ந்தான். துரியோதனாதியர் நூற்றுவரையும், கண்ணன் திருவருள் துணையினால் பாண்டவர்கள் வீழ்த்தினர். ஆதிகாலத்தில் தோன்றிய மது, கைடபர் என்னும் இருவரும் திருமாலை எதிர்த்துப் பலகாலம் போர் புரிந்தனர். திருமால் அவர்களைத் தனது தொடையால் இடுக்கி, கீழே தள்ளி, கால்களால் மிதித்துத் தவைத்து வதைத்தார்.

 

     மாபலி என்னும் அசுர குலவேந்தன் தனது வல்லமையால் இந்திரனையும் வென்று மூவுகையும் அரசாண்டு கொண்டு இருந்தபோது, தேவர்களின் வேண்டுகோளின்படிக்கு, அவனை அழித்து அருள, குள்ள வடிவமான வாமன அவதாரத்தை மேற்கொண்டு, மாபலியிடம் சென்று, மூன்று அடி மண்ணைக் கேட்க, அவன் அதற்கு இசைந்த உடனே, திரிவிக்கிரமனாக மேலுலகத்தைத் தனது ஒரு திருவடியாலும், பூலோகத்தைத் தனது மற்றொரு திருவடியாலும் அளந்து, மூன்றாவது அடிக்காக, அவன் தலைமேல் திருவடி வைத்து, அவனைப் பாதாளத்தில் அழுத்தினார். முன்னொரு காலத்தில் பிரமன் உறக்கத்தில் இருந்தபொழுது, சோமுகன் என்னும் அசுரன் வேதங்களை எல்லாம் கவர்ந்துகொண்டு, கடலினுள் சென்று மறைய, பிரமன் முதலான தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, திருமால் ஒரு பெரிய மீனாக அவதரித்து, அந்த அசுரனை அழித்து, வேதங்களை மீட்டுத் தந்து, பிரமனுக்கு உபதேசம் புரிந்து அருளினார். 

 

     விராட மன்னனது மைத்துனனும், சேனைத் தலைவனும், மகாபலம் பொருந்தியவனும் ஆன கீசகன், பாண்டவர்களின் அஞ்ஞாதவாச காலத்தில், விராடமன்னனின் தேவிக்கு வண்ணமகளாய் மாறுவேடத்தில் இருந்த பாஞ்சாலியைப் பார்த்து, அவள் அழகில் மயங்கி, மோகம் கொண்டான். அவளைப் பலாத்காரம் செய்த கீசகனையும் அவனது தம்பிமார் நூறு பேரையும் ஓர் இரவில் பீமன் வதைத்தான். 

 

     தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்னும் அரக்கர்கள் மூவரும் தவம் செய்து பிரமனிடம் இருந்து பெற்ற வரத்தின் பலத்தினால், வானத்தில் பறந்து செல்லும் மூன்று நகரங்களை அமைத்து, தாம் நினைத்த இடங்களில் பறந்து சென்று பலரையும் துன்புறுத்தி வருகையில், அவனது கொடும் செயலுக்கு ஆற்றாத தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, சிவபரம்பொருள் முப்புரங்கையும் சிரித்தே எரித்து அருள் புரிந்தார். பிரமனது மகனான தக்கன் தனது மகளைச் சிவபிரானுக்குத் திருமணம் செய்து கொடுத்து, பின்னர் சிவத்தோடு மாறுப்பட்டு, அவரை அவமதித்துச் செய்த வேள்வியினை வீரபத்திரரை அதிட்டித்து அழித்து அருளினார்.

 

     முன்னொரு காலத்தில் சனகாதி முனிவர்களுக்கு மெய்ப்பொருளை உணர்த்தும் முகத்தான் சின்முத்திரை காட்டி யோகநிலையில் இருந்தார் சிவபரம்பொருள். பிரமனது ஏவலால், அவரது தவநிலையைக் குலைக்க, மன்மதன் மலர் அம்புகளை எய்தான். சிவபரம்பொருள் சினந்து, அவனைத் தனது நெற்றிக்கண்ணை விழித்து எரித்துச் சாம்பல் ஆக்கினார்.

 

     இப்படி, பல அசுரர்களும் அழியக் காரணமாக இருந்தது, அவர்களிடத்தில் பொருந்தி இருந்து ஆணவத்தால் உண்டான, "நான்" என்னும் அகந்தையே என்பது மேற்குறித்த பாடலால் சொல்லப்பட்டது. நம்மிலும் அரக்க குணம் பொருந்தி உள்ளது. அதற்கு "இடும்பு" என்று பெயர். இடும்புதான், இடும்பைக்குக் காரணமாக உள்ளது. இடும்பை என்பதற்குத் "துன்பம்" என்று பொருள். இடும்பையைத் தருகின்ற இடும்பினை, அருள்நூல்களை ஓதி உணர்ந்து, இறையருளால் நல்லறிவு பெற்று, நற்கதியை அடையவேண்டும்.

 

     ஆணவமலத்தைப் பற்றி ஒரு விளக்கம். இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று விளக்குகள் அணைகின்றன. எங்கும் ஒரே இருள். பக்கத்தில் உள்ள பொருள்கூடத் தெரியவில்லை. மெழுகுவர்த்தியைத் தேடலாம் என்று எழுகிறோம். சில அடி தூரம் நடந்து, அங்குள்ள சுவரில் தெரியாமல் முட்டிக்கொள்கிறோம். வழியில் ஒரு நாற்காலி கிடக்கிறது. அது நமக்குத் தெரியவில்லை. அது நம் காலை இடறிக் காயப்படுத்துகிறது. அதையும் தாண்டிச் செல்லும்போது கீழே கிடந்த கயிற்றின் மீது காலை வைக்கிறோம். பாம்புதானோ, என்னவோ என்ற பதைப்புடன் தாவிக் குதிக்கிறோம். நல்ல வேளையாக அப்பொழுது விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. அந்த விளக்கொளியில் கீழே கிடந்தது கயிறுதான் என்பதைத் தெரிந்து கொண்டு ஆறுதல் அடைகிறோம். இருளில், சுவர் சுவராகத் தோன்றவில்லை. நாற்காலி நாற்காலியாகத் தோன்றவில்லை. கயிறு கயிறாகத் தோன்றவில்லை. எல்லாம் இருளாகத் தோன்றுகின்றன. இருளானது அவற்றின் தன்மையை மறைத்து, எவையும் தானேயாய்த் தோன்றும்படி நிற்கிறது. இது  புற இருளின் தன்மை. இறைவன், உயிர், உலகம் ஆகியவற்றின் தன்மையைத் தெரிய வொட்டாதபடி உயரினது அறிவை மறைத்து நிற்கின்ற அக இருள் ஆணவம் எனப்படுகிறது. அது பிறவித் துன்பத்தை மறைத்து, உடம்பை நிலை என்று கருதி, அதனால் அனுபவிக்கின்ற இன்பத்தை நிலையானது என்று காட்டி அதன் மீது ஆசை கொள்ளும்படி செய்து, அழியாத வீட்டின்பத்தை மறைத்து, அதைப் பெறுதற்குரிய வழியில் செல்ல ஒட்டாதபடித் தடுக்கும். இறைவனைப் பற்றிய எண்ணம் எழாதபடி அறிவை மறைத்து அகந்தையை உண்டாக்கி மயக்கும்.

 

      இந்த ஆணவத்தின் செயற்பாட்டினைச் சூரபதுமனின் நடத்தையில் நன்கு காணலாம். போர்க்களத்தில் சூரபதுமன் முருகப்பெருமானது பேருருவக் காட்சியினைக் கண்டு நல்லுணர்வு பெற்றான். இவர்தான் யாவர்க்கும் தலைவர் என்று தெளிந்தான். இவரை வலம் வரவேண்டும்; கை குவித்து வணங்க வேண்டும்; இவருக்கு அடிமையாய் வாழவேண்டும் என்றெல்லாம் எண்ணினான். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மாண்பு இறந்த மானம் அவனைத் தடுத்து விட்டது. அது ஆணவத்தின் வெளிப்பாடுதான். அகந்தை பழையபடி தலையெடுத்தது. என்னைப் போன்ற வீரன் யார் இருக்கமுடியும்? முருகப்பெருமானுக்கு நேர் நின்று போர் செய்தேன் என்ற புகழ் ஒன்றே எனக்கு எப்போதும் இருக்கும். இந்த உடம்பு நில்லாது. இது போனால் போகட்டும் என்று சொல்லிப் போர் செய்யப் புறப்பட்டான். நன்மை தராது எனத் தெரிந்த பின்பும், முன் தொடங்கிய செயலை விடாமல் செய்து முடிக்கப் புறப்பட்ட சூரபதுமன் ஆணவத்திற்கு எடுத்துக்காட்டு. 

 

     இடும்பு ஒருவனிடத்தில் இருக்குமானால், அது தொடக்கத்தில் பிறருக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும். முடிவில் இடும்பு உள்ளவன் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவான். இதைத்தான், மேலே குறிப்பிட்ட பாடல் விளக்குகின்றது.

இறையருளை எளிதில் பெறுதற்கு வழி

 


இறையருளை எளிதாகப் பெறலாம்

----

 

     பெறுவதற்கு அரிய பேறு இறைவன் திருவடி நிலை. அதை எளிமையாகப் பெறுவதற்கு வழி உண்டு. அடியார் போல நடித்துக் கொண்டு இருந்தாலே போதும். வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

 

     அடியவர் போல நடித்துக் கொண்டு இருந்தால், அந்த நடிப்புத் திறமைக்கு ஏற்ற பயனை எதிர்பார்த்து இருக்கவேண்டும். அல்லாமல், உண்மை அடியார்கள் பெறுகின்ற அரிய பேற்றினை விரைந்து பெறுவதற்கு விருப்பம் கொள்ளக் கூடாது. நாடகத்தை நடிப்பவன் அதற்குரிய பயனை விரும்புவது முறையானதுதான். நடிப்பு முற்றுப் பெறாமல் நடித்துக் கொண்டு இருக்கும்போதே, இடையிலேயே பயனைப் பெறுவதற்கு விரைதல் கூடாது. உண்மை அடியவர்க்கு, உரிய பலன் எப்படியும் கிடைக்கும். உண்மை அடியவர் போல நடிப்பவர்க்கு, தாம் விரும்பிய பலன் கிடைக்காமல் போகுமோ என்னும் அச்சம் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கும்.

 

     நாடகத்தில் இந்திரனைப் போல நடிப்பவன் ஒருவன், தனது நடிப்புக்கு உரிய பயனை விரும்புவான். அல்லாமல் இந்திரனுக்கு உரிய போகங்களை விரும்பமாட்டான். விரும்பினாலும் அவனால் பெற முடியாது. அதுபோலவே, அடியவராக நடிப்பவன் அதற்கு உரிய பயனை மட்டுமே பெறமுடியும். உண்மை அடியவர்கள் பெறுகின்ற வீடுபேற்றை அவனால் பெறமுடியாது.

      

    இறையருளைப் பெறுவதற்கு அன்புநெறியைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும். அதுவே அழியாத பேரின்பத்திற்கு வாயிலாக அமையும். உள்ளத்தில் அன்பு உள்ளவர்கள் உண்மை அடியவர்களாக இருப்பார்கள். அன்பு இல்லாதவர்கள் நாடகம் நடிப்பதால் பயனைப் பெறாமல் போவார்கள். எனவே, தமக்கு இறைவனிடத்தில் இடையறாது நிகழும் மெய்யன்பினைத் தந்து அருளுமாறு வேண்டுகின்றார் மணிவாசக் பெருமான்.

 

"நாடகத்தால் உன்அடியார் போல் நடித்து, நான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்விரைகின்றேன்;

ஆடகச்சீர் மணிக்குன்றே! இடையறாஅன்பு உனக்கு என்

ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள்எம்உடையானே".   --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     பொன்னில் பொருந்தி உள்ள மாணிக்க மணியைப் போன்றவரே! என்னை அடிமையாக உடைய பெருமானே! நான் உனது உண்மை அடியவர் போல வேடமிட்டுக் கொண்டு இந்த உலகத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றேன். உண்மை அடியவர்கள் பெறும் வீடுபேற்றைப் பெறுவதற்கு பெரிதும் விரைந்து முந்துகின்றேன். (அது கிடைக்காது என்பதை நான் அறிவேன். என்னிடத்து உண்மை அன்பு இல்லை, ஆதலால்) உன்னிடத்தில் இடையறாது நிகழும் மெய்யன்பு என் உள்ளத்தின் உள்ளே நிலைபெற்று இருந்து, அதனால் உள்ளம் உருகும்படியான நிலையை அடியேனுக்கு உதவி அருள வேண்டும்.

 

     அடியவர் போல நடித்துக் கொண்டே பயன் ஏதும் விரும்பாமல் இருந்தால், நாளடைவில் உண்மை அடியவர்கள் பெறுகின்ற பயனை எளிதில் பெறலாம் என்று வழி காட்டுகின்றார் குமரகுருபர அடிகளார்.

 

     இறை அடியார்கள் வேற்றுமை பாராட்டாதவர்கள். விருப்பு வெறுப்பு என்னும் இருமையும் கடந்தவர்கள். வேடத்தால் அடியவனாக ஒருவன் அவர்களிடத்தில் சென்றாலுமே, அந்த வேடத்தைக் கண்ட உடனே மெய்யுருகி நிற்பார்கள்."மால் அற நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயம்தானும் அரன்" எனத் தொழுவார்கள். அடியவர் திருக்கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின், அவன் நாளடையவில் மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர் திருக்கூட்டத்தில் இருத்தல் இத்தகு சிறந்த பயனை இயல்பாகவே தரும் என்பதை, "சிதம்பர மும்மணிக் கோவை"யில், குமரகுருபர அடிகளார் கூறுமாறு காண்க.

 

"செய்தவ வேடம் மெய்யில் தாங்கி,

கைதவ ஒழுக்கம் உள்வைத்துப் பொதிந்தும்,

வடதிசைக் குன்றம் வாய்பிளந்து அன்ன

கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு

உய்வது கிடைத்தனன் யானே. உய்தற்கு

ஒருபெருந் தவமும் உஞற்றிலன், உஞற்றாது

எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பில்,

கூடா ஒழுக்கம் பூண்டும், வேடம்

கொண்டதற்கு ஏற்ப, நின் தொண்டரொடு பயிறலில்

பூண்ட அவ் வேடம் காண்தொறுங் காண்தொறும்

நின் நிலை என் இடத்து உன்னி உன்னி,

பல்நாள் நோக்கினர், ஆகலின், அன்னவர்

பாவனை முற்றி, அப் பாவகப் பயனின் யான்

மேவரப் பெற்றனன் போலும், ஆகலின்

எவ்விடத்து அவர் உனை எண்ணினர், நீயும் மற்று

அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றே, அதனால்

இருபெரும் சுடரும் ஒருபெரும் புருடனும்

ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்

மாபெரும் காயம் தாங்கி, ஓய்வு இன்று

அருள் முந்து உறுத்த, ஐந்தொழில் நடிக்கும்

பரமானந்தக் கூத்த! கருணையொடு

நிலைஇல் பொருளும், நிலைஇயல் பொருளும்

உலையா மரபின் உளம் கொளப் படுத்தி,

புல்லறிவு அகற்றி, நல்லறிவு கொளீஇ,

எம்மனோரையும் இடித்து வரை நிறுத்திச்

செம்மை செய்து அருளத் திருவுருக் கொண்ட

நல் தவத் தொண்டர் கூட்டம்

பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே". 

 

இதன் பொருள் ---

 

     தவத்தைப் புரிவதற்கு உரிய வேடத்தை மட்டும் உடம்பில் புனைந்துகொண்டு,பொய்யான ஒழுக்கத்தை எனது உள்ளத்தில் வைத்து,வடதிசையில் உள்ள பொன்மயமான மேருமலை வாய் பிளந்ததைப் போன்று ஒளி விளங்குகின்ற பொன்னம்பலத்தில் பெருமான் புரிகின்ற ஆனந்தத் திருநடனத்தைக் கும்பிட்டதன் பயனாக,நான் ஈடேற்றத்தைப் பெற்றேன். ஆனால்,ஒரு பெரிய தவமும் செய்ய அடியேன் முயலவில்லை. அப்படி முயலாத நிலையிலேயே, பெறுதற்கு அரிய பேற்றினை எளிதாக எப்படிப் பெற்றாய் என்று கேட்டால், உள்ளத்தில் உண்மையோடு கூடாத இழிந்த ஒழுக்கத்தை நான் பூண்டு இருந்தும், நான் பூண்டிருந்த அடியார் வேடத்திற்குப் பொருந்த, உனது அடியாரோடு நாளும் கூடி இருந்ததன் காரணமாக, எனது பொய் வேடத்தையே மெய்வேடமாகக்  கருதி, என்னைக் காணும்போது எல்லாம், உனது நிலை என்னிடத்தில் இருப்பதாக அவர்கள் உள்ளத்தில் எண்ணி எண்ணி,அந்தப் பாவனையில் பலநாளும் என்னைப் பார்த்தனர். ஆதலால், அவர்களுடைய பாவகமானது முற்றுப் பெற்று, அந்தப் பாவனையின் பயனை நான் பெற்றேன், (நான் உண்மை அடியவனாகவே மாறிவிட்டேன்) ஆதலால்,அவர்கள் எவ்விடத்தில் நீ இருப்பதாக எண்ணினார்களோ, அந்த இடத்தில் நீ இருப்பாய் என்று சொல்லுதற்கு, வேறாக ஐயம் இல்லை. அதன் பயனாக, சூரிய சந்திரர் ஆகிய இரு பெரும் சுடர்களும், புருடன் என்னும் ஆன்மாவும்,ஐந்து வகையாகின்ற பூதங்களும் கூடிய, எட்டு வகையான உறுப்புக்களுடன் (அட்ட மூர்த்தமாக) அருள் திருமேனியைத் தாங்கி, எப்போதும் ஒயாமல், அருள் காரணமாக, திருச்சிற்றம்பலத்தில் ஐந்தொழில் கூத்து இயற்றும் பேரானந்தக் கூத்தனே! உனது அருள் துணையுடன், நிலையில்லாத பொய்ப் பொருள்களையும், நிலையான உண்மைப் பொருளையும், அழியாத நிலையில் எனது உள்ளத்தில் கொண்டு, எனது இயல்பான புல்லறிவை அகற்றி, நல்லறிவு விளங்கப் பெற்று,என் போன்றவர்களையும் நன்னெறியில் நிறுத்தி, செம்மை மனத்தைப் பெற்றவர்களாகப் பண்ணுவதற்காக திருவேடத்தைக் தாங்கி நிற்கின்ற, நல்ல தவத்தைப் புரிகின்ற திருத்தொண்டர் திருக்கூட்டத்தைச் சார்ந்து இருக்கும் பேற்றினைப் பெற்றவர்க்கு, பெறத் தகாதன என்பவை யாதும் இல்லை. (அடியவர் திருக்கூட்டத்தைச் சார்ந்து இருந்தால் அனைத்து நலங்களையும் பெறலாம்)

 

        நான் ஒரு சிவனடியாரைப் போல, எனது உடம்பில் வேடத்தைப் போட்டுக்கொண்டேன். ஆனால், எனது உள்ளத்தில் நிறைந்து இருந்தது என்னவோ பொய்யும், புரட்டும், வஞ்கமுமே. ஒளி பொருந்திய பொன்னம்பலவாணா! நீ நிகழ்த்தும் அனவரத ஆனந்தத் திருநடனத்தைத் தரிசிக்கப் பெற்றேன். இந்தப் பெறுதற்கு அரிய பெருமையை அடைவதற்கு நான் ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இருந்தும், இந்தப் பெரும்பேறு கிடைக்கப் பெற்றது எப்படி என்றால், நான் அடியவன் போல வேடமிட்ட காரணத்தால், உனது மெய்யடியார்களோடு கூடி இருந்தேன். அவர்களும் என்னை ஒரு மெய்யடியானாகவே கண்டனர். "அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" என்று அப்பர் பெருமான் அருளியதற்கு ஒப்பவும், "மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே" என்னும் சிவஞானபோத சூத்திரப்படியும், என்னிடத்தில் உன்னைப் பாவக நிலையில் நாளும் பார்த்தார்கள். அந்தப் பாவனையே உண்மையாகி விட்டது போலும்.

 

     இந்தக் கருத்தில் ஒரு கதை வழங்கப்பட்டு வருகின்றது. திருடன் ஒருவன் காவலர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, அடியார் வேடத்தைப் போட்டுக் கொண்டான். அந்த வேடத்தைக் கண்டு எல்லாரும் அவனை வணங்கத் தொடங்கினார்கள். "வெறும் பொய் வேடத்திற்கே இத்தனை மரியாதை என்றால், உண்மையான அடியவனாக நான் ஆகிவிட்டால் என்ன?"என்று நினைத்தான். அன்றுமுதல், வேடத்திற்குப் பொருந்த உண்மை அடியாவனாகவே மாறிவிட்டான்.

 

     "பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று அபிராமி பட்டரும், "யாதேனும் அறியா வெறும் துரும்பனேன் என்னிலும் கைவிடுதல் நீதியோ? தொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று தாயுமான அடிகளாரும் வேண்டியது அறிக.

 

     இதன் உண்மையாவது, சிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோ, அவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால், பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால், பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

 

     குருட்டு மாட்டை,மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால்,அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

 

     முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும்,அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தியை அடைய எளியவழி. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

 

"நீதியாவன யாவையும் நினைக்கிலேன்,

     நினைப்பவ ரொடும் கூடேன்,

ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை,

     என் அடியான் என்று,

பாதி மாதொடும் கூடிய பரம்பரன் 

     நிரந்தரம் ஆய் நின்ற

ஆதி ஆண்டு,தன் அடியரில் கூட்டிய 

     அதிசயம் கண்டாமே".       --- திருவாசகம்.

 

 

"திரைவார் கடல்சூழ், புவி தனிலே, உலகோரொடு

     திரிவேன், உனை ஓதுதல் ...... திகழாமே,

தின நாளும் உனே துதி மனது ஆர பினே சிவ

     சுதனே! திரி தேவர்கள் ...... தலைவா! மால்

 

வரை மாது உமையாள் தரு மணியே! குகனே! என

     அறையா, அடியேனும் ...... உன் அடியாராய்

வழிபாடு உறுவாரொடு, அருள் ஆதரம் ஆயிடும்

     மக நாள் உளதோ? சொல ...... அருள்வாயே". 

 

என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ்.

 

இதன் பொருள் ---

 

      நாள்தோறும், எழுந்தவுடன் மனதார உம்மைத் துதித்து, அதன் பின்னரும்(எத் தொழிலைச் செய்தாலும்) சிவக் குமாரரே! மும்மூர்த்திகளின் தலைவரே! பெரியமலையின் மகளாகிய உமாதேவியார் பெற்றருளிய மணியே! அடியார்களின் இதயமாகிய குகையில் விளங்குபவரே! என்று உம்மை வாயாரப் போற்றாத அடியவனாகிய நானும், உமக்கு அடியவர்கள் ஆகி, உம்மைவழிபடுபவர்களோடு கூடி, அருள் பெறுகின்ற சிறப்புப் பொருந்திய நாள் ஒன்றும் உண்டாகுமோ? அடியேனுக்குச் சொல்லி அருள் புரிவீராக.

 

     அருட்செல்வத்தைப் பெறுதற்கு வழி உண்மை அடியவரோடு கூடி இருத்தல் வேண்டும். அதுபோலவே கல்விச் செல்வத்தைப் பெறுவதற்கு, நூல்களைக் கற்று உணரும் திறம் இல்லாதார், கற்ற மேலவரோடு கூடி இருந்தாலே போதும் என்கின்றது "நாலடியார்".

 

"கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர்,- தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.       

 

இதன் பொருள் ---

 

     ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனே ஆனாலும், கல்வி அறிவில் சிறந்தாரோடு பழகி வந்தால், அப் பெரியோரது சேர்க்கையால் நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நல்லறிவு வாய்க்கப் பெறும். எப்படி என்றால், சிறந்த அழகும் மணமும் உள்ள பாதிரிப் பூவைப் போட்டு வைத்து இருந்த மண் பாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் அதன் மணம் கிடைப்பது போல.

 

     கல்வி பயிலும் பேறு இல்லாதார், கற்றாரோடு சேர்ந்து பழகுதலையாவது மேற்கொண்டு ஒழுகி வந்தால், நாளடைவில் நல்லறிவு விளங்கப் பெறுவர் என்பது கருத்து.

 

     மணவாள மாமுனிகள் அருளிய "உபதேச இரத்தின மாலை" என்னும் நூலிலும், நல்ல குணம் உடையாரோடு கூடி இருப்பார்க்கு நல்ல குணம் உண்டாகும் என்றும், தீய குணம் உள்ளரோடு கூடி இருப்பார்க்குத் தீய குணமே மேலிட்டு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

"நல்லமணம் உள்ளது ஒன்றை நண்ணி இருப்பதற்கு

நல்லமணம் உண்டாம் நலம் அதுபோல் - நல்ல

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்கு

குணம் அதுவே ஆம் சேர்த்தி கொண்டு."


"தீயகந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்கு

தீயகந்தம் ஏறும் திறம் அதுபோல் - தீய

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்கு

குணம் அதுவே ஆம்செறிவு கொண்டு".

 

     இராமபிரான் வில்லை வளைத்து, சீதையை மணம் முடிக்க இருக்கும் செய்து கேட்டு மகிழ்ந்த தசரதன் தனது பரிவாரங்களோடு மிதிலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றான். பொன்னால ஆன சக்கரங்களைக் கொண்ட தேர் உருண்டு ஓட, சாலையில் இருந்த இருண்ட கருங்கற்களும் பொன்னிறத்தை அடைந்தன என்பதை, கம்பர் கூறும் நயம் அறிந்து இன்புறத் தக்கது.

 

"தெருண்ட மேலவர் சிறியவர்ச்

   சேரினும்,அவர்தம்

மருண்ட புன்மையை மாற்றுவர்

   எனும் இது வழக்கே;

உருண்ட வாய்தொறும். பொன் உருள்

   உரைத்து உரைத்து ஓடி.

இருண்ட கல்லையும் தன் நிறம்

   ஆக்கிய இரதம்".          --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---       

 

     தெளிந்த அறிவுடைய பெரியோர் சிறியவர்களைத் தாம் போய்ச் சேர்ந்திருந்தாலும், அறிவுத்  தெளிவு இல்லாமல் மயங்கிய சிறியவர்களுடைய இழி குணத்தைப் போக்குவர் என்று சொல்லுகின்ற இந்த வார்த்தை உலக இயல்புதான். அது போலவே, தேர்களில் பொருந்தி உள்ள பொன்னால் ஆன சக்கரங்கள் உருண்டு சென்ற இடங்கள்தோறும் தம் பொன்னை  உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால், கருமையான பாறாங்கற்களையும் தமக்கு உள்ள பொன்னிறமாகவே செய்யலாயின.

 

     "நல்லவரோடு கூடி இருப்போம். நலம் பல பெறுவோம்". "நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்" என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல், நல்லவர்களோடு கூடி இருக்கும் காலத்தில், இடையில் அவர்களைப் போல நாமும் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு, தகுதிய வளர்த்துக் கொள்ளமால், அர்த்தமற்ற செயல்களைச் செய்து அருநரகில் விழாமல் காத்துக் கொள்வோம்.

064. அமைச்சு - 08. அறிகொன்று அறியான்

திருக்குறள் பொருட்பால் ஆ. அமைச்சியல் அதிகாரம் 64 -- அமைச்சு இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "அறிந்து சொல்லினவரது அறிவை...