எலி அழுதாலும் பூனை விடாது

 

 

எலி அழுதாலும் பூனை விடாது

---

 

     நமது உடம்பில் வல்லமை இருக்கின்ற போது, நம்மால் முடிந்ததை எல்லாம் செய்கின்றோம். முடியாதவற்றையும் முயன்று பார்க்கின்றோம்.

 

     நாம் சொல்வதுதான் சரி, செய்வதுதான் சரி என்று வாதம் புரிகின்றோம். சண்டை பிடிக்கின்றோம். எடுத்து எறிந்து பேசுகின்றோம். எரிந்தும் பேசுகின்றோம். அடுத்தவரின் உணர்ச்சிக்கு மதிப்பளிப்பது கிடையாது. நினைப்பது நல்லதா, கெட்டதா என்று பார்க்காமல் உணர்ச்சி வசப்பட்டு எதையும் செய்துவிட்டுச் சாதிக்கின்றோம். அறத்தைப் பற்றிச் சொன்னால், அப்புறம் பார்க்கலாம் என்கின்றோம். நல்லதைச்செய்ய நாள் பார்க்கின்றோம். அல்லதைச் செய்ய அவசரப்படுகின்றோம்.

 

     உடம்பில் வலிமை குன்றி, முதுமை வந்தபோது, படுக்கையில் இருந்தபடியே, நாம் எண்ணியதை, சொல்லியதை, நடந்துகொண்டதை எல்லாம் எண்ணிப் பார்க்கின்றோம். இப்போது நிகழ்பவை எல்லாம், இளமையில் செய்த செயல்களின் விளைவுதானா என்றும் சிந்திக்கின்றோம். இப்போது ஏதாவது, பரிகாரம் செய்யலாமா, எந்தக் கோயிலுக்குப் போகலாம், எந்தத் தீர்த்தத்தில் முழுகலாம், என்ன செய்யலாம்? என்று சிந்திக்கின்றோம். அப்போது, முதுமை இடம் தருவது இல்லை. நமது சிந்தனையும் செயலாவது இல்லை. அமைதியாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர வழி ஏதும் தோன்றுவதில்லை.

 

     நம்மைச் சார்ந்து இருந்தவர்களை, இப்போது நாம் சார்ந்து இருக்கும் நிலை வந்துவிடும்.    

 

     ஐந்தில் வளையவில்லை. ஐம்பதில் எப்படி வளையும்?

 

     ஒருநாள், நாம் சற்றும் எதிர்பாராத நிலையில் மரணபயம் நம்மை வந்துத் தொற்றிக் கொண்டு ஆட்டிப்படைக்கும். அப்போது நாம் அழுது புரண்டாலும் ஆகாது. நம்மைச் சார்ந்தோர் அழுது புரண்டாலும் ஆகாது.

 

     எலியைக் கண்ட பூனையானது தாவி வந்து பற்றுவது போ, உயிரை இயமன் சற்றும் இரக்கமில்லாமல் கொண்டு போவான். எலி என்னதான் அழுது புரண்டாலும், பூனை விடாது. அதுபோல, நாம் அழுது புரண்டாலும், நம்மைச் சூழ்ந்து உள்ளோர் அழுது புரண்டாலும், நம்மை அவன் விடமாட்டான். அப்போது, சங்கரா, சங்கரா என்று கூவத் தோன்றும். கூவவும் வாய் வராது, முடியாது.

 

     எலி அழுதாலும் பூனை விடாது என்னும் பழமொழிக்கு விளக்கமா, "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம்....

 

 

"பொலியவளம் பலதழைத்த தண்டலைநீள்

     நெறிபாதம் போற்றி, நாளும்

வலிய வலம் செய்து அறியீர்? மறம்செய்வீர்!

     நமன்தூதர் வந்து கூடி

மெலியவரைந் திடுபொழுது கலக்கண்ணீர்`

     உகுத்தாலும் விடுவது உண்டோ?

எலிஅழுது புலம்பிடினும் பூனைபிடித்

     ததுவிடுமோ? என்செய் வீரே?"

 

இதன் பொருள் ---

 

     பலவளம் பொலியத் தழைத்த தண்டலை நீள்நெறி பாதம் நாளும் போற்றி --- பலவகை வளங்களும் அழகுற மிகுந்த திருத்தண்டலை (என்னும் திருல்லத்திலே)) நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளி உள்ள சிவபெருமானது  திருவடிகளை எப்போதும் வாழ்த்தி, வலிய வலம் செய்து அறியீர் --- உடல் வலிமை உள்ளபோதே வலம்வந்து வணங்க அறியமாட்டீர்கள்! (மறந்து போனது என்பீர்கள், ஆனால்), மறம் செய்வீர் --- தீவினைகளை (மட்டும் மறவாமல்) செய்வீர்கள்!, நமன் தூதர் வந்து கூடி மெலிய வரைந்திடு பொழுது --- எமனுடைய தூதர் வந்து சேர்ந்து (நீங்கள்) சோர்வு அடையும்படி (வாழ்நாளை) எல்லையிட்டு (அழைக்கும்) பொழுது, கலக் கண்ணீர் உகுத்தாலும் விடுவது உண்டோ --- கலம் கலமாக மிகுதியான கண்ணீர் விட்டு அழுதாலும், எமதூதர்கள் உங்களை விட்டுச் செல்வது நேருமோ?, எலி அழுது புலம்பிடினும் பூனை பிடித்தது விடுமோ --- எலி கதறி அழுதாலும் (அதனைப் பிடித்த) பூனை தனது பிடியை விடுமோ?, என் செய்வீர் --- (எமன் தூதர் அழைக்கும் போது) என்ன செய்வீர்?

 

     என்ன செய்யலாம். இப்போதாவது இயன்ற வரையில் நல்லதையே நினைப்போம். நல்லதையை பேசுவோம், நல்லதையே செய்ய முயல்வோம். நல்லதே நடக்கும்.

 

     எனது சிறுவயதில், எனது ஊரில் ஒரு பெரியவர் பஜனைப் பாட்டுப் பாடுவார்...அது அப்போது இருந்து என்னுடைய நினைவில் அவ்வப்போது நிழலாடும்...

 

எமனவன் பொல்லாதவன் விடமாட்டான் --- அந்த

எம்பெருமான் பேரைச் சொன்னால் தொடமாட்டான்.

 

நமனவன் பொல்லாதவன் விடமாட்டான் --- அந்த

நடராஜன் பேரைச் சொன்னால் தொடமாட்டான்.

 

காலனவன் பொல்லாதவன் விடமாட்டான் --- அந்த

கண்ணபிரான் பேரைச் சொன்னால் தொடமாட்டான்.

 

     சொல்லலாம் என்று தோன்றும்நாள் தொடங்கி வாழ்நாள் இறுதிவரையில் இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பது நல்லது. சொல்லாது கழிந்த நாளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்.

 


நல்ல பிள்ளை ஒன்று இருந்தால் போதும்

 

 

நல்ல பிள்ளை ஒன்று இருந்தாலும் போதும்

----

 

"மங்கலம் என்ப மனைமாட்சி, மற்று அதன்

நன்கலம் நன்மக்கள் பேறு"

 

என்பது திருக்குறள்.

 

மனைவியின் சிறப்பானது மங்காத நலம் விளங்குவது. அந்த மாறாத சிறப்புக்குப் பெருமை சேர்க்கும் நல்ல அணிகலமானது, நன்மக்கள் பேறு ஆகும்.

 

நன்மக்கள் இருந்தால், அவர் பிறந்த வீடு மட்டுமல்லாது, நாடும் நலம் பெறும். எனவே,

 

"எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப்

பண்பு உடை மக்கள் பெறின்"

 

என்றார் திருவள்ளுவ நாயனார். குற்றம் இல்லாத நற்பண்புகளை உடைய மக்களைப் பெற்றால், எழுகின்ற பிறவிகள் தோறும், தீயவை வந்து தாக்க மாட்டா.

 

நன்மக்கள் இல்லாத குடியானது, சந்ததி இல்லாமல் அழிவதே மேல் என்று கூறுகின்றது, வெற்றிவேற்கை (எ) நறுந்தொகை என்னும் நூல்.

 

அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி

எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று.

 

இதன் பொருள் ---

 

அச்சத்தை மனத்தில் வைத்துக் கொண்டு, உள்ளத்தில் அறிவு இல்லாத, இழிந்த குணம் உடைய, ஒன்றுக்கும் உதவாத பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும், அக் குடியில் உள்ளோர் சந்ததி இல்லாமல் இன்பத்துடன் வாழ்தல் நல்லது.

 

அச்சம் என்பது குறித்து, "அறம் பாவம் என்ற இரண்டு அச்சம்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

அறச் செயல்களைப் புரியாமையால் உண்டாகும் அச்சம்; பாவச் செயல்களைப் பயின்று வருவதால் உண்டாகும் அச்சம் என்று, அச்சம் இருவகைப்படும். இந்த இருவகை அச்சமும் மனத்தில் எப்போதும் இருந்துகொண்டு இருந்தால்தான், பாவச் செயல்களைச் செய்வதில் இருந்து விடுபடவேண்டும் என்றும், அறச்செயல்களைப் புரிந்து நற்கதி அடையவேண்டும் என்றும் தோன்றும்.

 

அறிவு எனப்படுவது, தீயதன் தீமையும், நல்லதன் நன்மையும் உள்ளவாறு அறிந்து தெளிந்து ஒழுகுதல் ஆகும். இதுவே உண்மையான அறிவு. மற்ற அறிவு எல்லாம் உலகியல் அறிவு. வயிறு வளர்ப்பதற்கும், உடலைப் பாதுகாத்தற்கும் பெறுகின்ற அறிவு உலகியல் அறிவு. அது உயிருக்கு ஆக்கமாக அமையாது.

 

கொச்சை --- இழிவு. எச்சம் --- பிள்ளைகள், வாரிசுகள்.

ஏமாந்து இருத்தல் --- இன்பத்துடன் இருத்தல். (ஏமாப்பு --- இன்பம்)

 

நல்ல பிள்ளைகளைப் பெறுவதே, மக்கள் பெறவேண்டிய பேறுகளில் சிறந்தது; ஒருவன் சிறந்து குடியில் பிறந்தவன் என்பதை அவனது உள்ளத்தில் உள்ள அன்பினால் அறியலாம் என்கின்றது முதுமொழிக் காஞ்சி.

                    

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

மக்கட் பேற்றில் பெரும்பேறு இல்லை.            

 

கடல் சூழ்ந்த உலகத்தில் மனிதர் எல்லாருக்கும், புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும் பெறத்தக்க பெரும் பாக்கியம் வேறில்லை.

 

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப.

 

கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப் பிறந்தமையை அவனுக்கு உயிர்களிடத்தில் உள்ள அன்பினால் அறியலாம்.

 

அறிய வேண்டுவனவற்றை அறியாத பிள்ளகளைப் பெறுவது துன்பத்தைத் தரும் என்கின்றது "இன்னா நாற்பது" என்னும் நூல்....

 

"அறிவறியா மக்கள் பெறல் இன்னா"

 

ஸ்ரீசூக்தம் என்னும் தோத்திரத்தில், பின்வருமாறு கூறப்பட்டு இருக்கும். இதில், "புத்ர லாபம்" என்று வெறுமனே இல்லாமல், "பஹு புத்ர லாபம்" என்று வருவதைக் கவனிக்கவேண்டும்.

 

"ஸ்ரீவர்ச்சஸ்யமாயுஷ்ய மாரோக்யமாவிதாத்

பவமானம் மஹீயதே,

தனம் தான்யம் பசும் பசு புத்ரலாபம்

சதஸம்வத்ஸரம் தீர்கமாயு:

 

ரிண ரோகாதி தாரித்ர்ய

பாபக்ஷுதபம்ருத்யவ: பய சோக

மனஸ்தாபா நச்யந்து மம ஸர்வதா                                                                                         

 

இதன் பொருள் ---

 

மகாலட்சுமியே!  செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், நல்ல பிள்ளைப் பாக்கியம், நூறாண்டுகள் ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும். கடன், நோய், வறுமை, பசி, அகால மரணம், பயம், கவலை, மனத்தின் துன்பங்கள் எல்லாம் ஒழியட்டும்.

 

     பிள்ளை என்னும் சொல் சிறப்பாகப் பயன்படுத்துப்படுவது ஒன்று. விநாயாகப் பெருமானை, "மூத்த பிள்ளையார்" என்றும், முருகப் பெருமானை, "இளைய பிள்ளையார்" என்றும் வழங்கப்படுவது சைவ மரபு. திருஞானசம்பந்தரை, "ஆளுடைய பிள்ளையார்" என்று சைவர் வழங்குவர். வள்ளல்பெருமானும் தம்மை "ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே" என்று காட்டிக் கொண்டார்.

 

     இறைவனை அடையக் காட்டி உள்ள நால்வகை மார்க்கங்கள், நெறிகள், அல்லது வழிகளில், "சற்புத்திர மார்க்கம்", "மகன்மை நெறி" என்பதும் ஒன்று. கடவுளர் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் "பிள்ளைத் தமிழ்" ஒன்று.

 

     வைணவர்களிலும் "பிள்ளை" என்னும் திருநாமத்தோடு வழங்கும் பெயர்கள் உண்டு.

 

     குழந்தைப் பேறு இல்லாதவர்கள், "சற்புத்திரன்" வேண்டியே இறைவனை நோக்கி வரம் கிடந்த வரலாறுகளும் நிறைய உண்டு. "நல்ல பிள்ளை" வேண்டும் என்றுதான் வேண்டினார்கள்.

 

     அறிவு பொதுவாக நன்மைக்கும் தீமைக்கும் வழியைக் காட்டும். எனவே, சான்றோர்கள் "நல்லறிவு" என்று ஒரு சொல்லைப் பாடல்களில் தந்தார்கள். அறிவு என்றால், பொதுவாக, நல்லறிவைத் தான் குறிக்கும்.

 

     இற்றைக் காலத்தில் குழந்தைகள் எல்லோரும் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவதைக் காணலாம். அதனால் அவர்கள் உலகியலில் சிறந்து விளங்குகின்றார்கள். ஆனாலும், நல்லறிவு இல்லாததால், நற்பண்புகள் விளங்குவதில்லை. இதன் காரணமாக, "முதியோர் இல்லங்கள்" பல்கிப் பெருகி வருகின்றன. அவர்களது அறிவு, தம்மை ஈன்றவருக்கே நலம் புரிவதில்லை.

 

     எனவே, நல்லறிவில்லாத, துட்டத்தனம் வாய்ந்த பிள்ளைகள் நூறு பேர் இருந்தாலும் வீட்டுக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் நலம் இல்லை.

 

     பன்றியானது பல குட்டிகளைப் போடும். அவற்றால் பயனில்லை. ஆனால், யானையானது ஒரு குட்டியைத் தான் ஈனும். அதனால் பெருமையும் பயனும் உண்டு.

 

     இக் கருத்தை விளக்கும் பாடல்களைக் காண்போம்...

 

"பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரைப் பெறலின்,ஓர்

நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே, --- பொற்கோடியே!

பன்றிபல குட்டி பயந்ததனால் ஏது பயன்?

ஒன்று அமையாதோ கரிக்கன்று, து"

 

"நீதிவெண்பா" என்னும் நூலில் வரும் இப் பாடலின் பொருள் வருமாறு....

 

     பொன்னால் ஆன கொடியைப் போன்றவளே! பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்? ஒன்றும் இல்லை. யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதோ? நீ சொல்லுவாயாக. எனவே, நல்லறிவு இல்லாத பல பிள்ளைகளைப் பெறுதலைக் காட்டிலும், நல்ல அறிவு உள்ள புதல்வன் ஒருவனைப் பெறுதல் (பெற்றோருக்கும், பிறந்த அவனுக்கும், மற்றோருக்கும்) நன்மையைத் தரும்.

 

     "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் இதே கருத்து அமைந்த பாடல் ஒன்று....

 

நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்றாலும்

     குலமுழுதும் நன்மை உண்டாம்;

அன்றி, அறிவில்லாத பிள்ளை ஒரு

     நூறுபெற்றும் ஆவது உண்டோ?

மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வருடந் தோறும்

பன்றிபல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று

     ஈன்றதனால் பயன் உண்டாமே."

 

இதன் பொருள் ---

 

     மன்றில் நடம் புரிவாரே --- திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து இயற்றுகின்ற பெருமானே!, தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் கோழில் கொண்டு எழுந்தருளியவரே! பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன --- பன்றி ஆண்டுதோறும் பல குட்டிகளை ஈன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாம் --- யானை ஒரு கன்றை ஈன்றாலும் மிக்க பயன் உண்டாகும்.  (அதுபோல),  நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை உண்டாம் --- நலம் தரும் ஒரு பிள்ளையைப் பெற்றாலும் அவன் பிறந்த குலம் முழுமைக்கும் நன்மை உண்டாகும்.  அன்றி --- அல்லாமல், அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ --- நல்லறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை உண்டோ? (இல்லை).

 

     திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகள் தான் இருந்தார்கள். அவர்களில் விகர்ணன் தவிர, மற்றவர் யாருக்கும் நல்லறிவு இல்லை. நல்லறிவு உள்ளவரோடும் அவர்கள் பழகவில்லை. நல்லறிவு சொன்னவர்களையும் அவர்கள் பழிக்கத்தான் செய்தார்கள். முடிவில், அந்தக் குலமே அழிந்து போனது.

 

     இரணியனுக்கு ஒரு நல்ல பிள்ளை வாய்த்தது. இராக்கதர் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், பிரகலாதரை, "பிரகலாத ஆழ்வார்" என்று வழங்குவது காண்கின்றோம். பிரகலாத ஆழ்வாரால், அரக்கனான இரணியனும் நற்கதியைப் பெற்றான். இன்னும் சொல்லப் போனால், திருமால் எடுத்த அவதாரங்களிலேயே, நரசிம்ம அவதாரம்தான் ஒரு சில நாழிகைகளிலேயே முடிவு பெற்றது. நல்லபிள்ளைக்கு நரசிம்மம் துணை நின்றது.

 

     மிருகண்டு முனிவர் பிள்ளைப் பேறு வேண்டி, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். பெருமான் அவரது தவத்திற்கு இரங்கி, அவர் முன் தோன்றி, பின்வருமாறு கேட்கின்றார்...

 

1. தீய குணங்களே நிறைந்து, கொஞ்சமும் மெய்யறிவு இல்லாமல், ஊமையும், செவிடும், முடமும், குருடும் ஆகிய தன்மைகளோடு, நோயில் உழல்பவனாக, நூறு ஆண்டுகள் வாழுகின்ற பிள்ள வேண்டுமா?

 

"தீங்கு உறு குணமே மிக்கு,

     சிறிது மெய் உணர்வு இலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி,

     முடமும் ஆய், விழியும் இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும்

     உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை

     ஈதுமோ மாதவத்தோய்"     ---  கந்தபுராணம்.

(மூங்கை --- ஊமை. வெதிர் --- செவிடு)

 

2. அழகான உடம்போடு, சிறிதும் உறுப்புக் குறைவு இல்லாமல், நோய் நொடிகளில் வாடாமல், எனக்கும் பத்தி உடையவன் ஆகி, சாத்திரங்கள் பலவற்றையும் பயின்று, பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய பிள்ளை வேண்டுமா?

 

"கோலமெய் வனப்பு மிக்கு,

     குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி,

     எமக்கும் அன்பு உடையோன் ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று,

     கலைபல பயின்று வல்ல

பாலனைத் தருதுமோ? நின்

     எண்ணம் என் பகர்தி" என்றான்.  --- கந்தபுராணம்.   

 

     சிவபெருமான் இவ்வாறு இரண்டு OPTION-களை மிருகண்டு முனிவர் முன் வைத்தார். மிருகண்டு முனிவர், இறைவர் கூறியதை ஆராய்ந்து, பார்த்தார்.

தீய குணங்களோடு, ஊமையும், செவிடும், முடமுமாக, அறிவில்லாமல், நூறு ஆண்டுகள் வாழுகின்ற பிள்ளையைப் பெறுவதால் பலனில்லை என்பதை உணர்ந்து, "ஆயுள் குறைந்து இருந்தாலும், அறிவு உடையவன் ஆகவும், உடம்பில் ஒரு குறைவும் இல்லாதவனாகவும், பெருமானே! உன்னிடத்தில் அன்பு பூண்ட புதல்வனை எனக்கு அருள் புரியவும்" என்று OPTION-2-ஐயே வேண்டினார்.

 

 

மாண்தகு தவத்தின் மேலாம்

     மறை முனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும்

     அறிவுளன் ஆகி, யாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி,

     எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே

     வேண்டினன், புரிக" என்றான்.  --- கந்த புராணம்.

 

அவ்வரத்தின் படி அவதரித்தவர் தான் மார்க்கண்டேயர். சற்புத்திரனாக விளங்கினபடியால், சிவன் அருளால், "என்றும் பதினாறு" என்று சிரஞ்சீவியாக விளங்கினார்.

                                        


மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...