“ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்
அமுதபா னம்கொடுக்கும்
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்
அப்போதும் உதவிசெய்வன்
கூறுமதி தேய்பிறைய தாகவே குறையினும்
குவலயத் திருள்சிதைக்கும்
கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு
குருவிக்கு மேய்ச்சலுண்டு
வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும்
மிகநாடி வருபவர்க்கு
வேறுவகை இல்லையென் றுரையா தியன்றன
வியந்துளம் மகிழ்ந்துதவுவான்
மாறுபடு சூரசங் காரகம் பீரனே!
வடிவேல் அணிந்தமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!"
இதன் பொருள் ---
மாறுபடு சூரசங்கார கம்பீரனே - பகைத்த சூரனைக் கொன்ற வீரனே!
வடிவேல் அணிந்த முருகா - கூரிய வேலை ஏந்திய முருகனே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தண்ணீர் வற்றிவிட்டாலும் ஆறு, ஊற்று நீர் அமுதபானம் கொடுக்கும் - தண்ணீர் வறண்டு போயினும் ஆறு தன் ஊற்றினாலே இனிய குடிநீரைத் தரும்;
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும், அப்போதும் உதவி செய்வன் - கதிரவனுடைய அரைப் பகுதியைப் பாம்பு மறைத்தாலும் அந்நிலையிலும் கதிரவன் ஒளி தருவான்;
கூறும் மதி தேய்பிறையதாகவே குறையினும், குவலயத்து இருள் சிதைக்கும் - சொல்லப்பட்ட திங்கள் தேய்பிறையாகக் குறைந்தாலும் உலகிலுள்ள இருளை ஓட்டும்;
கொல்லைதான் சாவி போய்விட்டாலும், அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு - புன்செய் நிலம் விளைவின்றிப் பட்டுப்போனாலும் அந்நிலத்திற்கு வரும் குருவிகளுக்குத் தீனி கிடைக்கும்;
(அது போலவே)
வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் - சிறப்புடன் கொடுப்போன் வறுமையுற்றாலும், மிகநாடி வருபவர்க்கு - சாலவுந் தேடிவருவோர்களுக்கு, இல்லையென்று உரையாது வேறுவகை இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் - இல்லை என்று கூறாமல் வேறு வகையிலே முடிந்த பொருள்களை வியப்புறும்படி மனம் மகிழ்ந்து கொடுப்பான்.
கதிவரனை இராகு எனும் பாம்பு மறைப்பதாகக் கூறுவது புராணக்கதை. கட்செவி - பாம்பு (கண்ணே செவியாகவும் உடையது). கொல்லை என்பது முல்லை நிலம்: இக்காலத்திற் புன்செய் எனப்படும். காடும் காடுசார்ந்த இடமும் முல்லை. உதாரி (வட) - கொடையாளி. உதாரம் - கொடை. மிடி - வறுமை. ‘வியந்து' என்பதற்கு ‘வியக்க' எனப் பொருள் கூறல் வேண்டும். கம்பீரம் (வட). வீரத் தோற்றம்.
“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல், குலன் உடையான் கண்ணே உள' என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய பொய்யாமொழி. “ஈதல், இசைபட வா.்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்னும் திருக்குறளின் வாய்மையை உணர்ந்த, கொடைப் பண்பு உடையோர் தம் உயிரையும் விடுவரே ஒழிய இல்லை என்று இயம்பார். “இன்மையால் சென்று இரந்தோர்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் தன்மையார்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.