அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இடமருவுஞ் சீற்ற (பொது)
முருகா!
பொதுமாதர் மயக்கில் ஆழாது அருள்.
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான
இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து
விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து
இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே
இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து
முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்
இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி
மடலவிழும் பூக்க ளால்நி றைத்த
சுருளளகந் தூற்றி யேமு டித்து
மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக
வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்
அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க
மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ
படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி
முதுமறையின் பேச்சி நூலி டைச்சி
பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி
படிகொடறங் காத்த மாப ரைச்சி
மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி
பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி
அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி
சமரமுகங் காட்டு மால்வி டைச்சி
அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி ......பெருவாழ்வே
அரியயனின் றேத்த வேமி குத்த
விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த
அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இட மருவும் சீற்ற வேல் எடுத்து,
விடமுழுதும் தேக்கியே நிறைத்து,
இருகுழையும் தாக்கி மீள் கயற்கண் ......வலையாலே,
இனிமையுடன் பார்த்து உளே அழைத்து,
முகபடமும் சேர்த்து வார் அழுத்தும்,
இரு வரையும் காட்டி மால் எழுப்பி, ...... விலைபேசி,
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த
சுருள் அளகம் தூற்றியே முடித்து,
மறுகு இடை நின்று ஆர்க்கவே நகைத்து, ....நிலையாக
வருபொருள் கண்டு ஏற்கவே பறிக்கும்
அரிவையர் தம் பேச்சிலே முழுக்க
மனம் உருகும் தூர்த்தனாய் இளைத்து ...விடல்ஆமோ?
படிமுழுதும் கூர்த்த மா குலத்தி,
முதுமறையின் பேச்சி, நூல் இடைச்சி,
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி, ...... இருநாழி
படிகொடு அறம் காத்த மா பரைச்சி,
மணிவயிரம் கோத்த தோள் வளைச்சி,
பலதிசையும் போய்க் குலா விருப்பி, ......நெடுநீலி,
அடுபுலியின் தோல் படாம் உடைச்சி,
சமரமுகம் காட்டு மால் விடைச்சி,
அகிலமும் உண்டார்க்கு நேர் இளைச்சி ......பெருவாழ்வே!
அரி அயன் நின்று ஏத்தவே, மிகுத்த
விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த,
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த ...... பெருமாளே.
பதவுரை
படி முழுதும் கூர்த்த மா குலத்தி --- உலகம் முழுதும் நிறைந்து நிற்கும் சிறந்த அழகி,
முது மறையின் பேச்சி --- பழமையான வேதங்களால் பேசப்படுபவள்,
நூல் இடைச்சி --- நுண்ணிய இடையினை உடையவள்,
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி – பிறைச்சந்திரன் விளங்கும் தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவள்,
இரு நாழி படி கொடு அறம் காத்த மா பரைச்சி --- இரண்டு நாழி எனப்படும் படி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் நடத்திய சிறந்த பரதேவதையாள்,
மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி --- மாணிக்கங்களும் வயிரங்களும் கோர்த்த வளையலைக் கொண்ட திருத்தோள்களை உடையவள்,
பல திசையும் போய்க் குலா விருப்பி – பலதிசைகளிலும் சென்று எழுந்தருளி இருந்து அடியவர்களுக்கு அருள் விளக்கத்தைத் தரும் விருப்பம் உடையவள்,
நெடு நீலி – பெருமை பொருந்திய நீல நிறம் உடையவள்,
அடு புலியின் தோல் படாம் உடைச்சி --- கொல்ல வரும் புலியின் தோலை ஆடையாக உடையவள்,
சமர முகம் காட்டு(ம்) மால் விடைச்சி --- போர் புரியும் முகத்தைக் காட்டும் பெரிய விடையை வாகனமாக உடையவள்,
அகிலமும் உண்டார்க்கு நேர் இளைச்சி பெருவாழ்வே ---
உலகம் முழுதையும் உண்ட திருமாலுக்கு நேர் தங்கையாகிய உமையம்மையின் பெருஞ்செல்வமே!
அரி அயன் நின்று ஏத்தவே --- திருமாலும் பிரமனும் நின்று வழிபாடு செய்ய,
மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த --- தேவர் கூட்டத்தைச் சிறையனின்று மீளுமாறு வாளாயுதத்தையும்,
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே --- அசுரர் குலம் பாழ்படுமாறு வேலாயுதத்தையும் எடுத்தருளிய பெருமையில் மிக்கவரே!
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து --- தேவரீரது திருக்கரத்தில் பொருந்தி உள்ள சினம் கொண்ட வேலையே தமது கண்களாக எடுத்து,
விடம் முழுதும் தேக்கியே நிறைத்து --- அவற்றில் கொல்லும் தன்மை உள்ள விடத்தையே முழுவதும் நிரப்பி வைத்து,
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே இனிமை உடன் பார்த்து உ(ள்)ளே அழைத்து --- இரு காதுகளையும் மோதி மீள்கின்றதும் கயல்மீன் போன்றதுமான தமது கண்கள் என்னும் வலையை வீசி காமுகரை இனிமையோடு பார்த்து, தமது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று,
முக படமும் சேர்த்து --- முகத்தைத் துணியால் மூடி,
வார் அழுத்தும் இரு வரையும் காட்டி --- கச்சுக்களால் அழுத்தமாக மூடப்பட்டு உள்ள மலை போன்ற பருத்த முலைகளைக் காட்டி,
மால் எழுப்பி --- காம இச்சையை எழுப்பி,
விலை பேசி --- தாம் அளிக்கும் காம சுகத்திற்கான விலையைப் பேசி,
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே முடித்து --- இதழ்கள் விரிந்த மலர்களால் நிறைக்கப்பட்ட சுருண்ட கூந்தலை விரித்து உதறி முடித்து,
மருகிடை நின்று ஆர்க்கவே நகைத்து --- தெருவினில் நின்று பொய்யாக நிரம்பவும் நகைத்து,
நிலையாக வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் --- விலை பேசியதற்கு மாறுதல் இல்லாமல் வருகின்ற பொருள் உள்ளவர்களைக் கண்டதும் முன்னதாகவே பறித்துக் கொள்ளுகின்ற,
அரிவையர் தம் பேச்சிலே முழுக்க மனம் உருகும் தூர்த்தனாய் இளைத்து விடலாமோ --- விலைமாதர்களின் பேச்சிலே முற்றிலும் மனம் உருகுகின்ற காமுகனாக அடியேன் சோர்வு அடையலாமோ?
பொழிப்புரை
உலகம் முழுதும் நிறைந்து நிற்கும் சிறந்த அழகியும், பழமையான வேதங்களால் பேசப்படுபவளும், நுண்ணிய இடையினை உடையவளும், பிறைச்சந்திரன் விளங்கும் தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவளும், சிவபரம்பொருள் தனக்கு அளித்த இரண்டு நாழி எனப்படும் படி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் நடத்திய சிறந்த பரதேவதை ஆனவளும்,மாணிக்கங்களும் வயிரங்களும் கோர்த்த வளையலைக் கொண்ட திருத்தோள்களை உடையவளும், பலதிசைகளிலும் சென்று மகிழ்வோடு எழுந்தருளி இருந்து அடியவர்களுக்கு அருள் விளக்கத்தைத் தரும் விருப்பம் உடையவளும், பெருமை பொருந்திய நீல நிறம் உடையவளும், கொல்ல வரும் புலியின் தோலை ஆடையாக உடையவளும், போர் புரியும் முகத்தைக் காட்டும் பெரிய விடையை வாகனமாக உடையவளும், உலகம் முழுதையும் உண்ட திருமாலுக்கு நேர் தங்கையும் ஆகிய உமையம்மையின் பெருஞ்செல்வமே!
திருமாலும் பிரமனும் நின்று வழிபாடு செய்ய, தேவர் கூட்டத்தைச் சிறையனின்று மீளுமாறு வாளாயுதத்தையும், அசுரர் குலம் பாழ்படுமாறு வேலாயுதத்தையும் எடுத்தருளிய பெருமையில் மிக்கவரே!
தேவரீரது திருக்கரத்தில் பொருந்தி உள்ள சினம் கொண்ட வேலையே தமது கண்களாக எடுத்து, அவற்றில் கொல்லும் தன்மை உள்ள விடத்தையே முழுவதும் நிரப்பி வைத்து, இரு காதுகளையும் மோதி மீள்கின்றதும் கயல்மீன் போன்றதுமான தமது கண்கள் என்னும் வலையை வீசி காமுகரை இனிமையோடு பார்த்து, இதழ்கள் விரிந்த மலர்களால் நிறைக்கப்பட்ட சுருண்ட கூந்தலை விரித்து உதறி முடித்து, தெருவினில் நின்று பொய்யாக நிரம்பவும் நகைத்து, தமது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று, முகத்தைத் துணியால் மூடி, கச்சுக்களால் அழுத்தமாக மூடப்பட்டு உள்ள மலை போன்ற பருத்த முலைகளைக் காட்டி, காம இச்சையை எழுப்பி, தாம் அளிக்கும் காம சுகத்திற்கான விலையைப் பேசி, விலை பேசியதற்கு மாறுதல் இல்லாமல் வருகின்ற பொருள் உள்ளவர்களைக் கண்டதும் முன்னதாகவே பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதர்களின் பேச்சிலே முற்றிலும் மனம் உருகுகின்ற காமுகனாக அடியேன் சோர்வு அடையலாமோ?
விரிவுரை
இப்பாடலின் முற்பகுதியில் செல்வம் நிறைந்த சுகவாழ்வை விரும்பி, அதற்காகத் தமது உடம்பை விலைபேசி, காமுகரைத் தமது வலையில் விழுத்திப் பொருள் பறிக்கும் விலைமாதரின் சாகசங்களை எடுத்துக் காட்டி, அவ்வாறு வீணில் அலையாமல் இருக்க அறிவுறுத்தினார். பல திருப்புகழ்ப் பாடல்களிலும் இதைக் காணலாம்.
படி முழுதும் கூர்த்த மா குலத்தி ---
“உலகம் ஒர் ஏழும், அண்டர் உலகமும், ஈசர் தங்கும் உயர் கயிலாயமும், பொன்வரை தானும், உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதல் ஆகி நின்ற உமை” எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகபளார் உமையம்மையின் வியாபக நிலையைக் குறித்து அருளி உள்ளது அறிக.
இரு நாழி படி கொடு அறம் காத்த மா பரைச்சி ---
சிவபரம்பொருள் அளித்த இருநாழி நெல்லைக் கொண்டு அம்பிகை காஞ்சீபுரத்தில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்தாள்.
“இச்சைப்படி தன் பேரறம் எண்ணான்கும் வளர்க்கும் பச்சைக்கொடி” --- வில்லிபாரதம்.
எக்குலம் குடிலோடு உலகு யாவையும்
இல் பதிந்து, இரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள் குமரா என ...... உருகேனோ? --- பச்சைஒண் (திருப்புகழ்)
மாறுஇ லாத இப் பூசனை என்றும்
மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண்டு அருளி
ஈறு இலாத இப் பதியினுள் எல்லா
அறமும் யான்செய அருள்செய வேண்டும்
வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்குஉளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன்கொடுத்து அருளப்
பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள். --- பெரியபுராணம்.
அன்னையாரும், ஐயனை நோக்கி, `மாறு ஏதும் இல்லாத இப்பூசனை என்றும் இங்கு விளங்கிட எம்பிரான் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டருளி, முடிவிலாத இப்பதியினுள் இருந்து எல்லா அறங்களையும் யான் செய்திட, திருவருள் செய்திடல் வேண்டும்; இத்திருப்பதியிலுள்ளார் திருவடிக்குப் பிழைசெயும் ஒன்றினை ஒழிய, வேறு பிற தீங்குகள் செய்யினும், அச் செயல்கட்குரிய பேறாக மாபெருந் தவத்தின் பயனைக் கொடுத்தருளவும் வேண்டும்` எனப் பிறப்பறுக்கும் பெருஞ் செல்வியராகிய பெருமாட்டியார் கேட்டருளினார்.
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடைய றாஅறம் வளர்க்கும் வித்து ஆக
இகபரத்து இரு நாழிநெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆயும்
காஞ்சி வாழ்பவர் தாம்செய்தீ வினையும்
தடைப டாதுமெய்ந் நெறி அடைவதற்கு ஆம்
தவங்கள் ஆகவும் உவந்துஅருள் செய்தார். ---- பெரியபுராணம்.
ஆனேற்றின் மீது எழுந்தருளி வரும் மேலாய பெருமானை மலைமகளார் இவ்வாறு வேண்டுதலும், அப்பெருமாட்டியார் விரும்பியவாறு பூசனையை ஏற்றிடப் பொருந்தி அவ்விடத்தில் வீற்றிருந்தருளி, அம்மையாருக்கு இடையறாது அறத்தை வளர்த்திடும் வித்தாக, இம்மை மறுமை ஆகிய இரண்டிற்கும் ஏதுவாக இருநாழி நெல்லைக் கொடுத்தருளி, கடையவராயினும் உயர்ந்தவராயினும் காஞ்சியில் வாழ்பவர்கள் தாங்கள் செய்கின்ற தீயவினைகளும், தடையின்றி மெய்ந்நெறியை அடைதற்காய தவங்களாகப் பயன் கொள்ளுமாறும் உவந்து அருள் புரிந்தார்.
எண் அரும்பெரு வரங்கள்முன் பெற்றுஅங்கு
எம்பிராட்டி தம் பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல் வழி பாடுசெய்து அருளி
மனை அறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணியத் திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோடு இரண்டுஅறம் புரக்கும். --- பெரியபுராணம்.
இவ்வாறு எண்ணற்ற பெரு வரங்களைப் பெற்று, அங்கு எம்பெருமாட்டியார் தம் பெருமான் மகிழ்ந்து அருளிட, இம்மண்ணின் மேல் அவரை அங்கு வழிபாடு செய்தருளி, இல்லறம் இனிது பெருக, கருணையினால் உலகில் தோற்றும் உயிர்கள் யாவும் பெருக உற்ற காதலினால், நீடி நிலைத்திருக்கும் தம் வாழ்க்கையைப் புண்ணியம் நிறைந்த திருக்காமக்கோட்டம் என்னும் கோயிலில் மேற்கொண்டருளிப் பொலிந்திட, அங்கிருந்து தம் முப்பத்திரண்டு அறங்களையும் நிகழ்த்தி ஆண்டருளுவாளாயினள்.
காஞ்சி காமாட்சி அம்மையார் இறைவர் வழங்கிய இருநாழி நெல் கொண்டு வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள்:
1. துன்புற்றோர்க்கு உணவும் உறையுளும் வழங்கும் சாலை.
2. கற்பவர்க்குணவு
3. அறுசமயத்தார்க்கு உண்டி
4. பசுவிற்கு வாயுறை
5. சிறைச் சோறு
6. ஐயம்
7. தின் பண்டம் நல்கல்
8. பற்றுக்கோடற்றவருக்குச் சோறு
9. மகப்பேறு அற்றோர் சிவபுண்ணியப் பேற்றிற்கு ஆளாதல்
10. மகவு வளர்த்தல்
11. மகவுக்குப் பால் வார்த்தல்
12. பற்றுக்கோடற்றார்க்கு இறுதிக் கடன் செய்தல்
13. பற்றுக்கோடற்றார்க்கு ஆடை வழங்குதல்
14. சுண்ணம் வழங்குதல்
15. நோய்க்கு மருந்து.
16. வண்ணார்க்கு உதவல்
17. நாவிதர் உதவி
18. கண்ணாடி வழங்கல்
19. காதோலை நல்கல்
20. கண்மருந்து கொடுத்தல்
21. தலைக்கெண்ணெய் வழங்கல்
22. பெண் போகம் நுகர்தற்காம் சூழலை வழங்கல்
23. பிறர்துயர் காத்தல்
24. தண்ணீர்ப்பந்தல் அமைத்தல்
25. மடம் அமைத்தல்
26. குளம் தோண்டல்
27. சோலைகளை உண்டாக்கல்
28. ஆவுராய்ஞ்சு தறி அமைத்தல்
29. விலங்கிற் குணவு தருதல்
30. ஏறு விடுத்தல்.
31. விலை கொடுத்து உயிர் காத்தல்
32. மகட் கொடை.
மால் விடைச்சி ---
மால் - பெரிய. பெரிய விடையை உடையவள் என்று ஒரு பொருள்.
இனி, சிவபெருமான் திரிபுரம் எரித்த காலத்தில், இடபமாக அவரைத் தாங்கியவர் திருமால் என்பதால், மால் விடை என்பதை, திருமால் ஆகிய விடை என்றும் கொள்ளலாம்.
“தடமதில்கள் அவைமூன்றுந் தழல் எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.” --- திருவாசகம்.
கருத்துரை
முருகா! பொதுமாதர் மயக்கில் ஆழாது அருள்.
No comments:
Post a Comment