கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு


“அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.”    --நீதிநெறி விளக்கம்.


 இதன் பொருள் – 


அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் - அறமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றோடு வீடுபேற்றையும் கொடுக்கும், புறங்கடை நல்இசையும் நாட்டும் - உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும், உறும் கவல் ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் - நேரக் கூடிய வருத்தமொன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும், சிறு உயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்கு இல்லை - ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்க துணை கல்வியை விட வேறு இல்லை.


வீடுபேறு என்பது, முதல் மூன்றாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பயனாக மறுமையில் அடைதற்கு உரியது. புறங்கடை -  புறத்தில்.  என்பது கற்றறிந்தோர் வாழும் ஊருக்குப் புறமாக மற்ற இடங்கள் ஆகும். முன்னை வினைப் பயனாக கட்டாயம் கவலை ஏதாவது ஒரு வடிவத்தில் வந்து சேரும். “வெள்ளத்து அனைய இடும்பை, அறிவு உடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்” என்று திருவள்ளுவ நாயனார் அருளியது போல, அறிவுடையவனுக்கு வந்த துன்பமானது இல்லாமல் போகும். “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்; பிறவார் உறுவது பெரும் பேரின்பம்;  பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது” என்று மணிமேகலை அறிவுறுத்துவதை, கற்று உணர்ந்த நல்லோர்  நன்கு அறிந்து, இன்பத்தை விரும்பாமல், அது இயல்பானது என்று தெளிந்து,  “இன்பம் விழையான், இடும்பை இயல்பு என்பான், துன்பம் உறுதல் இலன்.” என்று திருவள்ளுவ நாயனார் காட்டிய நெறியில் ஒழுக, வருகின்ற துன்பமும் இல்லை என்று ஆகும். துன்பம் வந்தபோது ஒருவனுக்குக் கை கொடுத்த உதவுவது கல்வியே ஆகும்.

"ஒருமைக் கண்தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து”

  

"யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்,

சாந்துணையும் கல்லாதவாறு


"கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடு, அல்ல மற்றை யவை"


என்று திருவள்ளுவ நாயனார் அருளியுள்ளதை கூர்ந்து நோக்குக.


எனவே, மக்களாய்ப் பிறந்தார் கல்வியே தக்க துணை என்று நம்பிக் கற்கவேண்டிய அறிவு நூல்களைக் கற்றுத் தெளிய வேண்டும்.


No comments:

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு “அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்க...