குமரகுருபர அடிகள்
அருளிய
நீதிநெறி விளக்கம்
காப்பு
நீரில் குமிழி இளமை, நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள், - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை, நமரங்காள்! என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று?
இப்பாடலில் இளமை, செல்வம், யாக்கை என்பவற்றின் நிலையாமை கூறி, அவற்றைப் பொருள் என்று கருதாமல், பரம்பொருளாகிய இறைவனை வணங்கி ஈடேற அறிவுறுத்தப்பட்டது.
இதன் பொருள் ---
இளமை நீரில் குமிழி - நீரில் தோன்றி அழியும் கொப்புளம் போன்று இளமைப் பருவம் நிலையில்லாது அழிவது ஆகும். நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடும் திரைகள் - தேடிச் சேர்த்து வைத்துள்ள குறைவில்லாத பெரும் செல்வமானது, நீரிலே காற்றினால் சுருட்டப்படும் நெடிய அலைகள் (போன்று நிலையில்லாது அழிவது ஆகும்) யாக்கை நீரில் எழுத்து ஆகும் - உடம்பானது நீரின் மேல் எழுதிய எழுத்தைப் போன்று நிலை இல்லாது அழியும் இயல்பை உடையது ஆகும். (இவ்வாறு இளமையும், செல்வமும், உடம்பும் நிலையில்லாது அழியும் இயல்பினை உடையவையாய் இருக்க) நமரங்காள் - நம்மவர்களே! எம்பிரான் மன்று வழுத்தாதது என்னே - எமது பெருமான் ஆகிய அம்பலவாணப் பெருமான் எழுந்தருளி ஆனந்தத் திருநடனம் புரியும் பொன்னம்பலத்தை வாழ்த்தி வணங்காமல் காலம் போக்கி இருப்பது ஏனோ?
"இளமை நீரில் குமிழி. நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடும் திரைகள். யாக்கை நீரில் எழுத்து ஆகும். நமரங்காள்! எம்பிரான் மன்று வழுத்தாதது என்னே" என்கின்றார் குமரகுருபர அடிகள்.
விளக்கம் --- ஆன்மாக்கள் இப்பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதற்கு இளமைப் பருவம் வாய்த்தது. அதற்குச் சாதனமாக அமைந்தவை செல்வமும், உடம்பும். இளமைப் பருவத்தை அடைந்து, பொருளைத் தேடிப் பாடுபட்டு, தொகுத்த பொருளை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே, உடம்பை விடுகின்றோம். இளமை தோன்றி அழிவதால், நீரில் தோன்றும் குமிழியை இளமை என்றார். நீரில் அலைகள் தோன்றும் போது சிறிது சிறிதாக உருவாகி, பெரிதாகத் தோன்றி, வரவரச் சுருங்குவது போல, செல்வமும் சிறிது சிறிதாக ஈட்டப்பட்டு, பின் பெருகி வளர்ந்து, இறுதியில் அழிந்து போவதால், அதை நீரில் தோன்றும் அலைகளைப் போன்றது என்றார். நீரில் எழுதிய எழுத்து, அப்போதே அழிவதால், உடம்பை நீரில் எழுதிய எழுத்து என்றார். புல்லறிவு படைத்தவர்கள் கண்டவுடனே மயங்குவது இளமையே என்பதால், அதனை முன்னே வைத்து, நீரில் உடனே தோன்றி மறையும் குமிழியைக் காட்டினார். குமிழியானது பளபள என மின்னிக் காணப்பட்டு, சிறிது நேரத்தில் பொட்டென அழிவது போல், இளமையும் தொடக்கத்தில் மிகவும் அழகு உடையதாய் இருந்து, சிறிது காலத்தில் அழிந்து ஒழிவதால், இளமையை நீர்க்குமிழி என்றார்.
இளமைப் பருவத்தில் இன்பத்தை அனுபவிப்பதற்குத் துணையாக அமைவது செல்வமே. ஆதலால், அதனை இளமையின் பின் வைத்து, காற்றின் வேகத்தால் சிறிதாக உருவாகி, பெரிதாகத் தோன்றி, இறுதியில் ஒன்றும் இல்லாது அழிவதைப் போன்ற அலைகளைக் காட்டினார்.
நீரில் அலைகள் பலமுறையும் தோன்றி அழிவதும் அல்லாமல், ஓரிடத்தில் நில்லாது, பல இடத்திலும் சென்று, மறிந்து மறிந்து விழுந்து அழிவதைச் செல்வத்துக்குக் காட்டினார்.
இளமை, செல்வம் இரண்டும் போன பின்பு உடம்பும் விழுவதால், அதனை நீர்மேல் எழுத்து என்றார். நீரில் எழுதிய எழுத்தானது எழுதிய போதே அழிந்து போகும். எழுதிய இடமும் தெரியாது. மக்கள் உடம்பும், விரைந்து அழியும் தன்மையை உடையது. அழிவதோடு அல்லாமல் இருந்த இடமும் தெரியாது ஒழியும். எனவே, இளமையில் கற்கவேண்டிய நூல்களைக் கற்று, நல்லறிவு பெற்று, முயன்று தேடிய செல்வத்தைத் தாமும் துய்த்துப் பிறர்க்கும் உதவி, அழிந்து போகக் கூடிய உடம்பால் ஆன பயனைப் பெற, இறைவனைத் தொழுது உய்யவேண்டும். நிலையில்லாத இளமை, செல்வம், உடம்பு ஆகியவற்றைப் பெற்று, நிலையான இன்பத்தைத் தரக்கூடிய இறைவனைத் தொழுது உய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நீரில் குமிழி இளமை என்பதை, நாலடியார் பின்வரும் செய்யுளால் வலியுறுத்தும்.
"படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி, - தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பார் யார்? நீள் நிலத்தின் மேல்".
பெய்கின்ற பெருமழை நீரில் பலகாலும் தோன்றி மறைகின்ற நீர்க்குமிழிகளைப் போல், மனித உடலானது பலமுறையும் பிறந்து பிறந்து இறக்கும் தன்மை உடையது. இதை உணர்ந்து, இந்த உலகில் பிறந்து பிறந்து தடுமாற்றத்தை அடைகின்ற நிலையை ஒழிக்கவேண்டும் என்னும் உறுதியான அறிவு உள்ள பெரியோருக்கு நிகரானவர்கள் இந்த உலகில் யார் இருக்கின்றார்கள். யாரும் இல்லை என்பது கருத்து.
நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும்,எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது. எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச்ரசெய்வத்மாகவே இருக்கின்றோம்.
"நீரில் குமிழி, நீர் மேல் எழுத்து" என்பார் பட்டினத்தடிகள். "நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை, நில்லாது செல்வம்" என்பார் அருணகிரிநாதர்.
“நீர்க்குமிழி பூண்அமைத்து நின்றாலும் நில்லா, மெய்
பார்க்கும் இடத்து இதன்மேல் பற்று அறுவது எந்நாளோ?” --- தாயுமானார்.
“ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை,
நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது”. --- தாயுமானார்.
“விண்ணு நீர் மொக்குகளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்” --- கம்பராமாயணம்.
செல்வம் நிலையற்றது என்பதை, நாலடியார் பின்வருமாறு கூறும்.
"துகள்தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால், தொட்டுப்
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க,
அகடு உற யார் மாட்டும் நில்லாது, செல்வம்
சகடக் கால் போல வரும்".
சிறுகச் சிறுகச் சேர்த்த பெரும்பொருளானாலும், அது உள்ளபோதே நட்போடும் சுற்றத்தோடும் பகிர்ந்து உண்டு வாழுங்கள். இல்லையேல், அச்செல்வம் ஒருநாள் உங்களை விட்டு ஓடிவிடும். வண்டிச் சக்கரம் போல் சுழலும் செல்வத்தின் நிலையாமையை உணர்ந்து, அது இருக்கும்போதே, அதன் பயனை அனுபவித்து மகிழவேண்டும்.
இது அறிவுரையோடு கூடிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஆகும். இவ்வாறு கொள்ளும் முறையைத் திருக்குறள் கடவுள்வாழ்த்து அதிகாரத்தான் அறிக.
(கருத்து.) இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையாமையால், அவை உள்ள பொழுதே இறைவனை வழிபட்டுக் கொள்கவென்பது.
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையாமையால், அவை உள்ள பொழுதே இறைவனை வழிபட்டுக் கொள்க என்பது இப்பபாடலின் வழி குமரகுருபர அடிகளார் காட்டும் வழி இது ஆகும்.