அவையை அழகுபடுத்தும் கல்வி
கல்வியே கற்புடைப் பெண்டிர், அப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா, - சொல்வளம்
மல்லல் வெறுக்கையா, மாணவை மண்உறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு. -- நீதிநெறி விளக்கம். 3
கல்வி, கவித்துவம், பாடங்கூறும் வன்மை, சொல்வன்மை என்பன ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிறப்புடையன என்று அடிகளார் அறிவுத்துகின்றார்.
இதன் பொருள் ---
கல்வியே கற்பு உடைப் பெண்டிர் ஆ - கற்கின்றவர்க்குத் தாம் கற்ற கல்வியே கற்புடைய மனைவியராகவும், அப்பெண்டிர்க்கு தீங்கவியே செல்வப் புதல்வன் ஆ - அம் மனைவியர்க்கு இனிய பாடலே அருமையான புதல்வனாகவும், சொல் வளம் மல்லல் வெறுக்கை ஆ - அப்பாடலின் மொழி வளப்பமே நிறைந்த செல்வமாகவும் இருக்க, மாண் அவை மண்ணுறுத்தும் செல்வமும் சிலர்க்கு உண்டு - மாட்சிமைப்பட்ட அறிஞர் அவையினை அழகுபடுத்தும் செல்வாக்கும் சிலரிடத்தில் உள்ளதாம்.
கல்வியோடு கூடிய ஒருவன் வாழ்க்கை, சிறந்த மனைவியோடு கூடி இல்லறம் நிகழ்த்தும் ஒருவனது வாழ்க்கையை ஒக்கும் என்கிறார் அடிகளார். பெண்டிர், புதல்வன், செல்வம் என்பன ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு நிற்பவை ஆகும். "மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு" என்னுந் திருக்குறளை ஓதி உணர்க. கல்வி கற்ற ஒருவன் இனிய கருத்துடைய நூல்களை இயற்றுதல் கூடும். மக்களைப் பெற முடியாத மனைவியோடு கூடுதல் பயனில்லை என்பது போல, நூல்களை இயற்றாத கல்விப் புலமையும் பயனில்லை ஆகும். செல்வத்தால் குழந்தைகளின் உடல் வளமும் மனவளமும் சிறப்பதுபோல, இனிமையான கவிக்குச் சொல்வளமாகிய வளப்பமதாகிய செல்வம் வேண்டும் என்றார். செல்வம் உடையவர் பலர் இருந்தாலும், ஒப்புரவு ஆகிய செல்வம் சிலரிடத்திலேயே காணப்படும். அதுபோல, கற்றவர் பலர் இருந்தாலும், அவையை அணிசெய்யும் ஆற்றல் சிலரிடத்தில் மட்டுமே உள்ளது.
கல்வியைத் திறம்படக் கற்று, செய்யுள் இயற்றும் ஆற்றலைப் பெற்று, அதனுள் பொதிந்து கிடக்கும் அரிய கருத்துக்களை எடுத்துப் பலரிடமும் கூறும் சொல்வளமும் பெற்று, இவற்றின் பயனாகக் கற்றோர் பலரும் நிறைந்துள்ள நல்ல சபையில் இடம் பெற்று, சபைக்கு அஞ்சாது, “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப" தமது கருத்தைத் தெள்ளத் தெளிவாக நயம்பட மொழிவதே உண்மைக் கல்வியின் சிறப்பு ஆகும். இத்தக் திறத்தில் அனைவரும் முயலவேண்டும் என்பது அடிகளாரின் அவா.
No comments:
Post a Comment