பொது --- 1138. இடர்மொய்த்து

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

இடர்மொய்த்து (பொது)


முருகா!

நாள்தோறும் தேவரீரது திருத்தோள்களைப் புகழ்ந்து பாடி வழிபட்டு, 

பிறவா நிலை அடைந்து, 

இறவாத பேரின்பத்தில் திளைத்திருக்க அருள்.


தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்

     தனதத்தத் தனதத்தத் ...... தனதான


இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்

     டினிமைச்சுற் றமுமற்றைப் ...... புதல்வோரும்


இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற்

     கிடையத்துக் கமும்விட்டிட் ...... டவரேக


விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட்

     டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன்


வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்

     புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ


அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்

     கறிவொக்கப் பொருள்கற்பித் ...... திடுவோனே


அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்

     டலறக்குத் துறமுட்டிப் ...... பொரும்வேலா


கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்

     கிரிகைக்குட் டிகிரிக்கொற் ...... றவன்மாயன்


கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக்

     கடவுட்சக் கிரவர்த்திப் ...... பெருமாளே.



                                          பதம் பிரித்தல்



இடர் மொய்த்து, தொடர் இல் பொய்க் குடில் அக்கிக்கு இடை இட்டிட்டு,

     இனிமைச் சுற்றமும், மற்றைப் ...... புதல்வோரும்,


இனம் ஒப்பித்து இசையச் சொல் பல கத்திட்டு இழிய,பிற்கு

     இடை அத் துக்கமும் விட்டிட்டு, ...... அவர் ஏக,


விடம் மெத்தச் சொரி செக்கண் சமன் வெட்டத் தனம்உற்றிட்டு,

     உயிர் வித்துத் தனை எற்றிக் ...... கொடுபோமுன்,


வினை பற்றுஅற்று அற நித்தப் புதுமைச்சொல் கொடு, வெட்சிப்

     புய! வெற்றிப் புகழ் செப்பப் ...... பெறுவேனோ?


அடர் செக்கர்ச் சடையில் பொன் பிறை, அப்புப் புனை அப்பர்க்கு

     அறிவு ஒக்கப் பொருள் கற்பித் ...... திடுவோனே!


அலகைக்குள் பசி தித்தப் பலகைக் கொத்து அது பட்டிட்டு

     அலறக் குத்துற முட்டிப் ...... பொரும்வேலா!


கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்சத் துயில் பச்சை

     கிரி, கைக்குள் திகிரிக் கொற் ...... றவன், மாயன்,


கமலத்திற் பயில் நெட்டைக் குயவற்கு எண் திசையர்க்குக்

     கடவுள் சக் கிரவர்த்திப் ...... பெருமாளே.


பதவுரை


அடர் செக்கர்ச் சடையில் பொன் பிறை அப்புப் புனை அப்பர்க்கு --- அடர்த்தியாக உள்ள சிவந்த சடையில் அழகிய பிறைச்சந்திரனையும் கங்கையையும் தரித்துள்ள உமது தந்தையாகிய சிவபரம்பொருளுக்கு 


அறிவு ஒக்கப் பொருள் கற்பித்திடுவோனே --- மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்தருளியவரே!


அலகைக்குள் பசி தித்தப் பல கைக் கொத்தது பட்டிட்டு அலறக் குத்து உற முட்டிப் பொரும் வேலா --- பேய்க் கூட்டங்களின் பசி அடங்கும்படி பல பேய்களின் கைகளும் ஒன்றோடொன்று உனக்கு எனக்கு என்று பிணங்களைக் கொத்தும் போது ஒன்றின் கை ஒன்றின் மேல் கொத்துப்பட, அந்த வலியால் பேய்கள் கூச்சலிட்டு ஒன்றை ஒன்று குத்திடும்படியாகவும், அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த வேலாயுதரே!


கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்சத் துயில் பச்சைக் கிரி --- திருப்பாற்கடலில் அமைந்துள்ள பாம்பு அணையில் அடியார்கள் போற்றித் துதிக்க அறிதுயில் கொண்டுள்ள பச்சைமலை போன்ற வடிவை உள்ளவனும், 


கைக்குள் திகிரிக் கொற்றவன் --- திருக்கரத்தில் திருவாழிப் படையைக் கொண்டுள்ள வெற்றி உடையோனும், 


மாயன் --- மாயவனும் ஆகிய திருமாலுக்கும், 


கமலத்தில் பயில் நெட்டைக் குயவற்கு --- தாமரையில் வீற்றிருக்கும் படைப்புக் கடவுளாகிய பிரமதேவருக்கும்,


எண் திசையர்க்குக் கடவுள் சக்கிரவர்த்திப் பெருமாளே ---  எட்டு திக்குகளிலும் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் சக்கரவர்த்தியாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!


இடர் மொய்த்துத் தொடர் இல் பொய்க் குடில் --- துன்பங்கள் நெருங்கித் தொடர்தற்கு இடமாக உள்ள இந்த நிலையில்லாத உடலானது, 


அக்கிக்கு இடை இட்டு --- சுடுகாட்டில் நெருப்புக்கு இடையில் வைக்கப்பட்டு, 


இனிமைச் சுற்றமும் --- இனிமையான சுற்றத்தினரும்,


மற்றைப் புதல்வோரும் --- மற்ற புதல்வர்களும்,


இனம் ஒப்பித்து இசையச் சொல் பல கத்திட்டு இழிய --- தங்கள் தங்கள் உறவுமுறையைக் கூறி, அதற்கு ஏற்ற சொற்கள் பலவற்றைச் சொல்லி அழுது தீர்க்க, 


பிற்கு இடையத் துக்கமும் விட்டிட்டு அவர் ஏக --- பின்பு மனம் தளர்ந்து தமக்கு இருந்த துக்கத்தையும் விட்டுவிட்டு அவர் யாவரும் போகும்படியாக,


விடம் மெத்தச் சொரி செக்கண் சமன் --- விடத்தைச் சொரிகின்றது போன்ற சிவந்த கண்களை உடைய இயமன்,


வெட்டத் தனம் உற்றிட்டு --- அழிக்க வேண்டும் என்ற தன்மையை அடைந்து


உயிர் வித்துத் தனை எற்றிக் கொடு போ முன் --- உடலானது இயங்குவதற்கு வித்தாக இருந்த உயிரை உடம்பினின்றும் நீக்கிக் கொண்டு போகும் முன்பாக,


வினை பற்று அற்று அற --- அடியேனது இருவினைகளும், அவற்றிற்கு காரணமாய் அமைந்த நான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் நீங்குமாறு,


நித்தப் புதுமைச் சொல்கொடு வெட்சிப் புய வெற்றிப் புகழ் செப்பப் பெறுவேனோ --- நாள்தோறும் புதுப்புதுச் சொற்களைக் கொண்டு, வெட்சி மாலை அணிந்த தேவரீரது திருத்தோள்களின் வெற்றிப் புகழை பாடி வழிபடும் பேற்றை அடியேன் பெறுவேனோ?


பொழிப்புரை


அடர்த்தியாக உள்ள சிவந்த திருச் சடையில் அழகிய பிறைச்சந்திரனையும் கங்கையையும் தரித்துள்ள உமது தந்தையாகிய சிவபரம்பொருளுக்கு மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்தருளியவரே!


பேய்க் கூட்டங்களின் பசி அடங்கும்படி பல பேய்களின் கைகளும் ஒன்றோடொன்று உனக்கு எனக்கு என்று பிணங்களைக் கொத்தும் போது ஒன்றின் கை ஒன்றின் மேல் கொத்துப்பட, அந்த வலியால் பேய்கள் கூச்சலிட்டு ஒன்றை ஒன்று குத்திடும்படியாகவும், அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த வேலாயுதரே!


திருப்பாற்கடலில் அமைந்துள்ள பாம்பு அணையில் அடியார்கள் போற்றித் துதிக்க அறிதுயில் கொண்டுள்ள பச்சைமலை போன்ற வடிவை உள்ளவனும், திருக்கரத்தில் திருவாழிப் படையைக் கொண்டுள்ள வெற்றி உடையோனும், மாயவனும் ஆகிய திருமாலுக்கும், தாமரையில் வீற்றிருக்கும் படைப்புக் கடவுளாகிய பிரமதேவருக்கும், எட்டு திக்குகளிலும் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் சக்கரவர்த்தியாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!


துன்பங்கள் நெருங்கித் தொடர்தற்கு இடமாக உள்ள இந்த நிலையில்லாத உடலானது சுடுகாட்டில் நெருப்புக்கு இடையில் வைக்கப்பட்டு, இனிமையான சுற்றத்தினரும், மற்ற புதல்வர்களும், தங்கள் தங்கள் உறவுமுறையைக் கூறி, அதற்கு ஏற்ற சொற்கள் பலவற்றைச் சொல்லி அழுது தீர்த்து, பின்பு மனம் தளர்ந்து தமக்கு இருந்த துக்கத்தையும் விட்டுவிட்டு அவர் யாவரும் போகும்படியாக, விடத்தைச் சொரிகின்றது போன்ற சிவந்த கண்களை உடைய இயமன் அழிக்க வேண்டும் என்ற தன்மையை அடைந்து உடலானது இயங்குவதற்கு வித்தாக இருந்த உயிரை உடம்பினின்றும் நீக்கிக் கொண்டு போகும் முன்பாக, அடியேனது இருவினைகளும், அவற்றிற்கு காரணமாய் அமைந்த நான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் நீங்குமாறு, நாள்தோறும் புதுப்புதுச் சொற்களைக் கொண்டு, வெட்சி மாலை அணிந்த தேவரீரது திருத்தோள்களின் வெற்றிப் புகழை பாடி வழிபடும் பேற்றை அடியேன் பெறுவேனோ?


விரிவுரை


அடர் செக்கர்ச் சடையில் பொன் பிறை அப்புப் புனை அப்பர்க்கு அறிவு ஒக்கப் பொருள் கற்பித்திடுவோனே --- 


அடர்ந்தும் சிவந்தும் உள்ள திருச்சடையில் பிறைச்சந்திரனையும், கங்கையையும் தரித்துள்ளவர் சிவபரம்பொருள். அவருக்கு மெய்ஞ்ஞாப் பொருளை உபதேசித்து அருளியவர் அவரது திருப்புதல்வராகிய முருகப் பெருமான். அந்த வரலாறு வருமாறு...


திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப்பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே, இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.


இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு, "தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.


முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால், எந்தையாகிய சிவபிரானை நாள்தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால், இப்போது என் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய். எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில், உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும், நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகு, படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம்மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.


சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கி, நான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறி, விடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இல்லாமையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு செய்தல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.


முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினீர்?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப்பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குருநாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.


தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகைக்கு "பிரணவ அருத்த நகர்” "என்னும் பெயரும் வழங்குகின்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.


அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து, அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து, அவனைப் பற்றித்

திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.


காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால் தழுவியே, "அயனும் தேற்றா

ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில், அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.


"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள், உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ, மறையினால் இசைப்பது அல்லால்".


என்றலும், நகைத்து, "மைந்த எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க, சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன், உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.


எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.


"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.      --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


“மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....” --- (விறல்மாரன்) திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு, வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.


“அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.” --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.


"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள், மாணவ பாவத்தை உணர்த்தி, உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத் தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்டது ஓர் அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.


“தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.” ---  தணிகைப் புராணம்.


மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!


என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.


அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.


 மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரிலும்,


“தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.”


என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.


“வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.” --- திருமந்திரம்.


“கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு, எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....” --- குமரகுருபரர்.


“பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.” --- அபிராமி அந்தாதி.


“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.” --- அபிராமி அந்தாதி.


“சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.” --- சிவஞான சித்தியார்.



இடர் மொய்த்துத் தொடர் இல் பொய்க் குடில் --- 


நல்வினை தீவினை என்ற இருவினைகளின் பயனை அனுபவித்துக் கழிப்பதற்கு வாய்ப்பாக அந்த உடல் இறைவனால் படைத்து அளிக்கப்பட்டது. “இருவினை ஊண் பசும்பை” என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் அருளி உள்ளார்.


உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்ப துன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன.  சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில்தானே பிறக்கும்? இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட் குணத்திற்கு முரணும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என அறிக. நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் என்க.


வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு?  எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க. இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? ஆதலின் வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.


அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே எனின், எய்தாது என்க.  குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா


வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு.  ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.   ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.


“நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,

சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி

மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்

அலர்சோகம் செய்கமலத்து ஆம்.”           --- சிவஞானபோதம்.



“இருவினை இன்பத் துன்பத்து இவ்வுயிர் பிறந்துஇறந்து

வருவது போவது ஆகும், மன்னிய வினைப் பலன்கள்

தரும் அரன் தரணியோடு தராபதி போலத் தாமே

மருவிடா வடிவும் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே.   ---  சிவஞான சித்தியார்.


இன்பதுன்பம் இரண்டிற்கும் இடமாக இருப்பது இந்த உடல்தான். ஆனாலும், துன்பத்தையே பெரிதாக எண்ணுவது இயல்பு. எந்தச் செயலையும் முயலும்போது, துன்பம் இல்லாமல் இருக்காது. ஆனாலும், துன்பத்தை விடுத்து இன்பத்தே மட்டுமே விழைவது மனித இயல்பு. எனவே, துன்பத்திற்கே இருப்பிடமாக உள்ளது இந்த உடல் என்கிறோம். துன்பத்தையும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.


“இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ, குடும்பத்தைக்

குற்றம் மறைப்பான் உடம்பு.”


என்கிறார் திருவள்ளுவ நாயனார்.



“நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும்,

துடும்பல் வேலை துளங்கியது இல்லையால்-

இடும்பை எத்தனையும் படுத்து எய்தினும்,

குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரினே.” --- கம்பராமாயணம், சேதுபந்தனப் பலடம்.

 

இதன் பொருள் ---

துன்பங்கள் எத்தனையும் வந்து தடுத்து எய்தினாலும்; (அதனால்) மனம் தளர்ந்து போகாமல் தமது  குடும்பத்தை ஆதரித்துக் காப்பாற்றும் உயர் குடியில்  பிறந்தவர்களைப் போல நீண்ட  பெரிய  பல மலைகள் தூர்த்து  நெருக்கிய  போதும் அலைகள் பேரொலி எழுப்பும் பெரிய கடலானது சிறிதும் கலங்கவில்லை.

 

அக்கிக்கு இடை இட்டு --- 


அக்கி – நெருப்பு, தேர். 


நெருப்பு என்று கொண்டால், சுடுகாட்டில் நெருப்பிலே பிணம் கிடத்தப்படுவதைக் குறிக்கும். இனி, அக்கி என்னும் சொல்லுக்கு, தேர் என்றும் பொருள் உண்டு. தேர் என்பதை இங்கே பாடை என்று கொண்டால், பாடையிலே கிடத்தப்பட்ட பிணம் என்று ஆகும்.


வினை பற்று அற்று அற --- 


வினை என்றது, நல்வினை தீவினை ஆகிய இருவினைகளைக் குறிக்கும். வினைக்கு விளைவாய் இருப்பது நான் என்னும் அகங்காரமும், எனது என்னும் மமகாரமும் ஆகும். நான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. இவைகள் அற்றுப் போனால்தான் இறைவன் திருவடிப் பேறு என்னும் இடையறா ஆனந்தம் வாய்க்கும். எனவே, “இருவினை மும்மலமும் அற இறவியொடு பிறவி அற, ஏகபோகமாய் நீயும் நானுமாய் இறுகும் வகை பரமசுகம் அதனை அருள்” என்று வேண்டினார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.


இருவினை ஒத்திட இன்னருள் சத்தி

மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக்

குருவினைக் கொண்டுஅருள் சத்திமுன் கூட்டிப்

பெருமல நீக்கிப் பிறவாமை சுத்தமே.          ---  திருமூலர்.


நல்வினை தீவினை என்ற இருவினைகளும் ஒப்பு வந்தபோது, ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் விலகும்.  அப்போது சத்திநிபாதம் எய்தும்.   அங்ஙனம் அருள் பதிந்த பின் ஆன்மா பதியுடன் ஒன்றுபடும்.


ஆன்மா இறையுடன் இரண்டறக் கலத்தலே அத்துவித முத்தி ஆகும். கட்டையில் தீயும், தீயில் நீரும், தேனில் சுவையும், மலரில் மணமும், வானில் வளியும், கண்ணில் ஒளியும் போல் ஆன்மா பதியுடன் அத்துவிதம் ஆகும்.


இந்தனத்தில் அங்கி, எரிஉறுநீர் தேன்இரதம்

கந்தமலர்ப் போது, வான்கால், ஒளிகண் --- சந்ததமும்

அத்துவிதம் ஆவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்

முத்தியிலே நிற்கும் முறை.         ---  சிவபோகசாரம்.


ஆன்மா தனது சத்திநிரோதானமான ஆணவமலம் முதலானவற்றை நீங்கி, ஒரு காலத்தும் குறைவில்லாத சிவானந்தப் பெருங்கடலில் திளைத்து, அச் சிவமும் ஆன்மாவும் ஒன்று என்றும், இரண்டு என்றும் பிரித்து அறியமாட்டாத அத்துவித நிலையைப் பெறுதலே, தேன் ஒழுகும் ஆத்திப்பூ மாலையை அணிந்த விரிசடை விமலன் திருவாய் மலர்ந்து அருளிய சிவாகமத்தில் கூறும் சித்தாந்த முத்தி எனத் தெளிவாயாக. இதனைப் பட்டினத்தடிகளும் கூறுமாறு காண்க.


“பூதமும் கரணமும் பொறிகள்ஐம் பூலனும்

         பொருந்திய குணங்களோர் மூன்றும்

நாதமும் கடந்த வெளியிலே நீயும்

         நானுமாய் நிற்குநாள் உளதோ

வாதமும் சமய போதமும் கடந்த

         மனோலய இன்ப சாகரமே

ஏதும்ஒன்று அறியேன் யாதும்நின் செயலே

         இறைவனே ஏக நாயகனே.”


ஆன்மா பதியுடன் பொருந்தும் போது உண்டாகும் இன்பத்திற்கு இணை வேறு எதுவும் இல்லை. ஆதலினால், அதுவே பரம சுகமாம். ஏனைய சுகங்கள் எல்லாம் சிறிது போது மின்னலைப் போல மறைந்து ஒழிபவைகளாகும்.


“தண்அமுத மதிகுளிர்ந்த கிரணம் வீச,

     தடம்பொழில்பூ மணம்வீச, தென்றல் வீச,

எண்அமுதப் பளிங்குநிலா முற்றத் தேஇன்

     இசைவீச, தண்பனிநீர் எடுத்து வீச,

பெண்அமுதம் அனையவர்விண் அமுதம் ஊட்டப்

     பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட்டு ஓட,

கண்அமுதத்து உடம்புஉயிர்மற்று அனைத்தும் இன்பம்

     கலந்துகொளத் தரும்,கருணைக் கடவுள் தேவே.”  ---  திருவருட்பா.


நித்தப் புதுமைச் சொல்கொடு வெட்சிப் புய வெற்றிப் புகழ் செப்பப் பெறுவேனோ --- 


முத்தி என்பதற்குப் பாசநீக்கம் என்று பொருள். இயல்பாகவே பாசங்களில் பொருந்தி இன்பதுன்பங்களை அனுபவித்து வருகிற ஆன்மா, பாசநீக்கம் பெறுதலே முத்தி. ஆகும். அந்த முத்தி நிலையில் அனுபவிப்பதே முத்தி இன்பம் என்னும் முழு இன்பம் ஆகும். பாசநீக்கம் பெறுவதற்கு ஆன்மாவிற்குச் சாதனமாக அமைந்துள்ளது இறை வழிபாடு ஆகும். இதைப் பல இடங்களிலும் பல்வேறு விதமாக வலியுறுத்தி வருகிறார் அடிகளார். இங்கே இறைவன் திருத்தோள்களைப் போற்றி வழிபடவேண்டும் என்கிறார். முருகப் பெருமானுடைய திருத்தோள்களைப் புகழ்ந்து, “திருப் பய வகுப்பு” என்னும் ஓர் அற்புதப் படாலை அடிகளார் பாடி உள்ளது நோக்குக.


கருத்துரை

முருகா! நாள்தோறும் தேவரீரது திருத்தோள்களைப் புகழ்ந்து பாடி வழிபட்டு, பிறவா நிலை அடைந்து, இறவாத பேரின்பத்தில் திளைத்திருக்க அருள்.






No comments:

பொது --- 1138. இடர்மொய்த்து

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இடர்மொய்த்து (பொது) முருகா! நாள்தோறும் தேவரீரது திருத்தோள்களைப் புகழ்ந்து பாடி வழிபட்டு,  பிறவா நிலை அட...