“சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்
பொன்னிவளம் செழித்த நாட்டில்,
குறையகலும் பெருவாழ்வும் மனைவியும்மக்
களும்பொருளாக் குறித்தி டாமல்,
மறைபயில்பத் திரகிரியும் பட்டினத்துப்
பிள்ளையும்சேர் மகிமை யாலே,
துறவறமே பெரிதாகும்! துறவிக்கு
வேந்தன் ஒரு துரும்பு தானே.”
இதன் பொருள் —
சிறுபிறை துன்னிய சடையார் தண்டலை சூழ் பொன்னி வளம் செழித்த நாட்டில் - சிறுபிறைச் சந்திரன் பொருந்திய திருச்சடையினை உடைய சிவபரம்பொருள் எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைச் சூழ்ந்த காவிரி வளம் கொழிக்கும் நாட்டினில், குறை அகலும் பெருவாழ்வும் மனைவியும் மக்களும் பொருளாக் குறித்திடாமல் - குறைவற்ற பெரிய வாழ்வும் மனைவியும் மக்களும் பொருளாக நினையாமல், மறைபயில் பத்திரகிரியும் பட்டினத்துப் பிள்ளையும் சேர் மகிமையாலே - வேதங்களைப் பயின் பத்திரகிரியாரும் பட்டினத்து அடிகளாரும் சேர்ந்த பெருமையினால், துறவறமே பெரிது ஆகும் - துறவறமே சிறப்புடையதாகும்! துறவிக்கு வேந்தன் ஒரு துரும்புதானே - துறவிக்கு மன்னன் ஒரு துரும்பைப் போன்றவனே.
‘துறவிக்கு வேந்தன் துரும்பு' என்பது பழமொழி.
கொடைப்பண்பு பொருந்தி உள்ள ஒருவன் பொன்னைத் துரும்பாகவே மதிப்பான். இல்லை வந்தோர்க்கும், பிறர்க்கும் அதனை வரையாது வழங்குவதில் மகிழ்வான். தனக்கெனக் குவித்து வைக்க விரும்பமாட்டான். உயிர் பலருக்கும் பெரிதாகத் தோன்றும். வீரன் ஒருவனுக்கோ, தன் நாட்டுக்காகப் போர்க்களத்தில் மடிவது எளிதானதாகத் தோன்றும். அறநெறியில் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சேரக் கருதுபவர்கள், இறைவழிபாட்டிலேயே இன்பத்தை அடைவார்கள். அவர்களுக்கு உலக இன்பம் ஒரு பொருட்டல்ல. அழகிய பெண்களைக் கண்டால் அவர்கள் மதி மயக்கம் கொள்வதில்லை. புலன்களை ஒடுக்கித் தவநெறி பூண்ட துறவியர் வேந்தனையும் ஒரு துரும்பாகவே கருதுவர். அதிகார வர்க்கத்திடம் அவர்கட்கு அச்சம் இல்லை. காரணம் அவர்க்கு விருப்பும் வெறுப்பும் இல்லை. எதனையும் எதிர்பார்ப்பதும் இல்லை. முற்றத் துறந்த துறவோர்கள் வேந்தனையும் துரும்பாகக் கருதுகிற மனபரிபக்குவ நிலையினை உடையவர்களாக இருக்கிறார்கள். இக் கருத்தில் அமைந்த ஔவையார் பாடல் ஒன்று உண்டு.
“போந்த உதாரனுக்குப் பொன்துரும்பு, சூரனுக்குச்
சேர்ந்த மரணம் சிறுதுரும்பு, - ஆய்ந்த
அறவோர்க்கு நாரியரும் துரும்பாம், இல்லத்
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.”
"ஈகைக் குணத்தோடு பிறந்தவனுக்குப் பொன்னும், மரணத்தைப் பொருட்படுத்தாத வீரனுக்கு மரணமும், ஆய்ந்து தெளிந்த அறவோர்களுக்குப் பெண் மயக்கமும், பற்றற்ற துறவியர்க்கு வேந்தனின் செல்வமும் செல்வாக்கும் துரும்பாகவே தோன்றும்" என்பது பொருள்.
“கேடும் ஆக்கமுங் கெட்ட திருவினார்;
ஒடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்;
கூடும் அன்பினிற் கும்பிடலே அன்றி,
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.”
பெரியபுராணத்தில் அடியார்களின் பெருமை குறித்துத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடி இருத்தலைக் காண்க. அப்பர் பெருமான் திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் உழவாரத் தொருத்தொண்டு செய்துகொண்டு இருந்த நாளில், உழவாரப் படை பட்ட இடத்தில் பொன்னும் மணியும் கிடைப்பதைக் கண்டார். அவற்ற் எல்லாம் உரள் பருக்கு எனக் கொண்டு வாரி வீசி எறிந்தார். “புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறுபாடு இல்லா நிலைமை துணிந்திருந்த நல்லோர்” எனப் பெரியபுராணம் போற்றும்.
“பணத்திலே சிறிதும் ஆசைஒன்று இல்லை,நான் படைத்தஅப் பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன், குளத்திலும் எறிந்தேன், கேணியில் எறிந்தனன், எந்தாய்!
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன், கொடுக்கின்றேன் பிறர்க்கே,
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன், இனிச்சொல்வ தென்னே.”
என்று வள்ளல்பெருமானார் பாடிய திருவருட்பாவையும் காண்க.