அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காதல்மோகம் தரும் (பொது)
முருகா,
பொதுமாதர்மேல் செல்லும் புலனை மாற்றி,
தேவரீரது திருவடியில் வைக்க அருள் புரியவேண்டும்.
தானனா தந்தனந் தானனா தந்தனந்
தானனா தந்தனந் ...... தனதான
காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண்
காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங்
காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும்
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்
தோநமோ கந்தஎன் ...... றுரையாதே
ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்
றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ
தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்
தாரம்வா சந்திசந் ...... தனநீடு
சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்
தானமா தெங்கள்பைம் ...... புனமேவும்
தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்
சேகரா தண்டையங் ...... கழல்பேணித்
தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்
தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை, சிங்-
கார நாகம், செழும் ...... கனிவாய், கண்
காள கூடம், கொடும் கால ரூபம், பொரும்
காம பாணம், சுரும்பு ...... இனம்வாழும்
ஓதி கார், செஞ்சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து,
ஓம் நமோ கந்த என்று ...... உரையாதே,
ஊசல் ஆடும் புலன் தாரியே சென்று நின்று,
ஓயுமாறு ஒன்றையும் ...... கருதாதோ?
தாதகீ, சண்பகம், பூகம், ஆர் கந்த மந்-
தாரம், வாசந்தி, சந் ...... தனம், நீடு
சாம வேதண்ட வெம் கோப கோதண்ட சந்-
தான மாது, எங்கள் பைம் ...... புனமேவும்
தீது இலா வஞ்சி, அம் சீத பாதம் படும்
சேகரா! தண்டைஅம் ...... கழல்பேணி,
தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும்
தேசிகா! உம்பர்தம் ...... பெருமாளே.
பதவுரை
தாதகீ --- ஆத்தி மரங்கள்,
சண்பகம் --- சண்பக மரங்கள்,
பூகம் --- பாக்கு மரங்கள்,
ஆர் கந்த மந்தாரம் – மணம் நிறைந்த மந்தார மரங்கள்,
வாசந்தி --- குருக்கத்தி, ஆடாதோடை, திப்பிலி முதலிய மரவகைகள்,
சந்தன(ம்) --- சந்தன மரங்கள், (ஆகியவை)
நீடு --- நிறைந்து விளங்கும்,
சாம வேதண்டம் --- கரிய நிறத்தை உடைய வள்ளிமலையில்,
வெம்கோப கோதண்டம் சந்தான மாது --- கொடிய கோபத்தை உடையவர்களும், வில்லினை ஏந்தியவர்களும் ஆகிய வேடர்கள் குலத்தில் வளர்ந்த மாதும்,
எங்கள் --- அடியேங்களுக்கு உகந்தவளும்,
பைம்புனம் மேவும் --- பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்துகொண்டு இருந்தவளும்,
தீதிலா வஞ்சி அம் சீதபாதம் படும் சேகரா --- குற்றம் அற்ற வஞ்சிக்கொடி போல்பவளும் ஆகிய வள்ளிநாயகியின் அழகிய குளிர்ந்த திருவடிகள் பொருந்துகின்ற திருத்தலையை உடையவரே!
தண்டை அம் கழல் பேணி --- தண்டை, அழகிய கழலை அணிந்து திருவடிகளை வழிப்பட்ட
தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா --- உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் பொருந்த வைத்துள்ள ஆதிமுதற் பரம்பொருளாகிய சிவபெருமான் தொழுகின்ற குருநாதரே!
உம்பர் தம் பெருமாளே --- தேவர்கள் தலைவர் என்னும் பெருமையில் மிக்கவரே!
காதல் மோகம் தரும் கோதைமார் --- காம உணர்வை மிகுதிப்படுத்துகின்ற பொதுமாதரின்,
கொங்கை சிங்கார நாகம் –-- முலைகள் அழகிய மலையைப் போன்றவை,
செழும் கனி வாய் --- வாயானது செவ்வியகோவைக் கனி போன்றது,
கண் காளகூடம், கொடும் கால ரூபம், பொரும் காம பாணம் --- கண்கள் கருமையான கொடிய விடம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும் மன்மதனுடைய அம்பு போன்றவை என்றும்,
சுரும்பினம் வாழும் ஓதி கார் --- வண்டுகள் குடி புகுந்து உள்ள கூந்தல் கருமேகம் போன்றது,
செம் சொல் மென் பாகு தேன் --- (அவர்களின்) செவ்விய சொற்கள் இனிமையைத் தருகின்ற வெல்லப் பாகு மற்றும் தேன்,
என்று அயர்ந்து --- என்று (அவர் தரும் இன்பத்தையே பெரிதாக எண்ணி, இவ்வாறு உவமைகள் சொல்லி அவர்களைப் புகழ்ந்து கூறிச்) சோர்வினை அடைந்து,
ஓம் நமோ கந்தா என்று உரையாதே --- ஓம் நமோ கந்தா என்று தேவரீரது திருநாமத்தை வாயாரச் சொல்லாமல்,
ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று --- எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்களின் வழியே சென்று, அதன்படியே வாழ்கின்ற அலைச்சலானது,
ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ --- ஓய்வுறும்படியாக நல்ல நெறியினை அடியேன் பின்பற்றுமாறு திருவுள்ளம் பற்றோதோ?
பொழிப்புரை
ஆத்தி மரங்கள், சண்பக மரங்கள், பாக்கு மரங்கள், மணம் நிறைந்த மந்தார மரங்கள், குருக்கத்தி, ஆடாதோடை, திப்பிலி முதலிய மரவகைகள், சந்தன மரங்கள், ஆகியவை நிறைந்து விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளிமலையில், கொடிய கோபத்தை உடையவர்களும், வில்லினை ஏந்தியவர்களும் ஆகிய வேடர்கள் குலத்தில் வளர்ந்த மாதும், அடியேங்களுக்கு உகந்தவளும், பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்துகொண்டு இருந்தவளும், குற்றம் அற்ற வஞ்சிக்கொடி போல்பவளும் ஆகிய வள்ளிநாயகியின் அழகிய குளிர்ந்த திருவடிகள் பொருந்துகின்ற திருத்தலையை உடையவரே!
தண்டை கழல் ஆகியவற்றை அணிந்து திருவடிகளை வழிப்பட்ட உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் பொருந்த வைத்துள்ள ஆதிமுதற் பரம்பொருளாகிய சிவபெருமான் தொழுகின்ற குருநாதரே!
தேவர்கள் தலைவர் என்னும் பெருமையில் மிக்கவரே!
காம உணர்வை மிகுதிப்படுத்துகின்ற பொதுமாதரின் முலைகள் அழகிய மலையைப் போன்றவை, வாயானது செவ்விய கோவைக் கனி போன்றது, கண்கள் கருமையான கொடிய விடம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும் மன்மதனுடைய அம்பு போன்றவை என்றும், வண்டுகள் குடி புகுந்து உள்ள கூந்தல் கருமேகம் போன்றது, அவர்களின் செவ்விய சொற்கள் இனிமையைத் தருகின்ற வெல்லப் பாகு மற்றும் தேன் என்று அவர் தரும் இன்பத்தையே பெரிதாக எண்ணி, இவ்வாறு உவமைகள் சொல்லி அவர்களைப் புகழ்ந்து கூறிச் சோர்வினை அடைந்து, ஓம் நமோ கந்தா என்று தேவரீரது திருநாமத்தை வாயாரச் சொல்லாமல், எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்களின் வழியே சென்று, அதன்படியே வாழ்கின்ற அலைச்சலானது, ஓய்வுறும்படியாக நல்ல நெறியினை அடியேன் பின்பற்றுமாறு திருவுள்ளம் பற்றோதோ?
விரிவுரை
சாம வேதண்டம் ---
சாமை – கருநிறம்.
வேதண்டம் – மலை.
கோதண்டம் ---
வில். இங்கே வில்லினை ஏந்திய வேடர்களைக் குறித்தது.
சந்தான மாது ---
சந்தானம் – மரபு, சந்ததி, தொடர்பு.
வேடர்கள் மரபில் வளர்ந்தமையால் இவ்வாறு கூறப்பட்டது.
தீதிலா வஞ்சி அம் சீதபாதம் படும் சேகரா ---
வள்ளிநாயகியின் திருப்பாதசேகரர் முருகப் பெருமான். “பணி யா என வள்ளி பதம் பணியும், தணியா அதிமோக தயாபரனே” என்பது கந்தர் அனுபூதி.
“மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
கலகலன் கலின் கலின் என, இருசரண்
மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும் ..மிகவேறாய்,
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ......உளம் நாடி,
அருகு சென்று அடைந்து, அவள் சிறு பதயுக
சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்
அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன்.....அணைவோனே!”
--திருவண்ணாமலைத் திருப்புகழ்.
“பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா!” --சுவாமிமலைத் திருப்புகழ்.
கொங்கை சிங்கார நாகம் –--
சிங்கார நாகம் – அழகிய மலை.
ஓம் நமோ கந்தா என்று உரையாதே ---
கந்தன் என்பது முருகப் பெருமானுடைய திருநாமங்களில் ஒன்று. அது உமாதேவியாரால் வழங்கப்பட்டது என்னும் சிறப்பினை உடையது.
“அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி,
நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்
கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,
அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு
கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து,
மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, - செய்ய
முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே!”
என்பது திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா.
இதன் பொருள் ---
கார்த்திகைப் பெண்கள் அறுவர் முலைப்பாலை அக்குழந்தைகள் பருகி, அழுது விளையாடி இருக்க, மணமிக்க கங்கை நீரைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான், புன்சிரிப்பை உடைய உமாதேவியாரொடு சரவணப் பொய்கையினை அடைந்து, தனது திருமகனுடைய திருவுருவங்களை அத்தேவிக்குக் காண்பித்தலும், உமாதேவியார் கண்டு, அந்த ஆறு திருவுருவங்களையும், தன்னுடைய இரண்டு திருக்கரங்களாலும் ஒருசேர எடுத்து, ஆறு திருவுருவங்களையும் ஒரு திருவுரு ஆக்கிச் சேர்த்துத் தழுவி, “கந்தன்” என்று திருநாமம் சூட்டி, தனது செவ்விய திருமுகத்தில் சேர்த்து அணைத்து, உச்சியை முகந்து, திருவுளத்தில் மகிழ்ச்சி உற்று, தனது திருமுலைப் பாலை அளித்து, உலகத்தைத் தனது ஈரடியால் அளந்த திருமாலாகிய வெள்ளை இடபத்தின் மீது எழுந்தருளி இருக்கும் சிவபெருமானது திருக்கரத்தில் கொடுத்து இருக்க, அவ் அம்மையப்பர் திருவுளம் மகிழ்ச்சி கூர உயர்வு உற்று இருந்த பெருமானே!
அருணகிரிநாதர் அருளிய நூல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி எனக் கந்தன் என்னும் திருநாமத்தையே கொண்டு இருப்பதன் மூலம் “கந்தன்” என்னும் திருநாமத்தின் சிறப்பினை உணர்ந்து கொள்ளலாம்.
“கந்தநம! ஐந்து முகர் தந்த முருகேசநம! கங்கை உமை தன்
மைந்த நம! பன்னிரு புயத்த நம! நீப மலர் மாலை புனையும்
தந்தை நம! ஆறுமுக ஆதி நம! சோதி நம! தற்பரமதாம்
எந்தை நம! என்றும் இளையோய் நம! குமார நம! என்றுதொழுதார்.”
--- கந்தபுராணம், திருவிளையாட்டுப் படலம்.
“சென்றே இடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்” --- திருச்செங்கோட்டுத் திருப்புகழ்.
“துன்பநோய் சிந்த, நல் கந்த வேள் என்று, உனைத்
தொண்டினால் ஒன்று உரைக்க ...... அருள்வாயே.” --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.
வால! குமர! குக! கந்த! குன்று எறி
வேல! மயில! எனவந்து கும்பிடு
வான விபுதர் பதி இந்த்ரன் வெந்துயர்.....களைவோனே! --- திருவானைக்காத் திருப்புகழ்.
“மைவருங் கண்டத்தர் மைந்த! கந்தா! என்று வாழ்த்தும் இந்தக்
கைவருந் தொண்டு அன்றி மற்று அறியேன்” --- கந்தர் அலங்காரம்.
ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று ---
தாரி – வழி. ஊசல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டே இருப்பதுபோல, உயிரானது ஐம்புலன்களின் வழியே எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும். இந்த ஊசலாட்டம் தீரவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.
“சாந்து உடனே புழுகு தோய்ந்த அழகார் குழலை
மோந்து, பயோதரம் ...... அது அணையாகச்
சாய்ந்து, ப்ரதாபமுடன் வாழ்ந்து, அநுராக சுக
காந்தமொடு ஊசி என, ...... மடவார்பால்
கூர்ந்த க்ருபா மனது போந்து, உன தாள் குறுகி,
ஓர்ந்து, உணரா உணர்வுஇல் ...... அடிநாயேன்,
கூம்பு அவிழ் கோகநக பூம்பத கோதில் இணை
பூண்டு, உறவாடு தினம் ...... உளதோதான்?” --- சிதம்பரத் திருப்புகழ்.
"நெறிதரு குழலை அறல் என்பர்கள்,
நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,
நிலவினும் வெளிது நகை என்பர்கள்,
நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,
அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,
அடிஇணை கமல மலர் என்பர்கள்,
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர், அமையும், அவர் என் செய?
மறிமழு உடைய கரன் என்கிலர்,
மறலியை முனியும் அரன் என்கிலர்,
மதிபொதி சடில தரன் என்கிலர்,
மலைமகள் மருவு புயன் என்கிலர்,
செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,
திருநடம் நவிலும் இறை என்கிலர்,
சிவகதி அருளும் அரசு என்கிலர்,
சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே." --- கோயில் நான்மணி மாலை.
கருத்துரை
முருகா! பொதுமாதர்மேல் செல்லும் புலனை மாற்றி, தேவரீரது திருவடியில் வைக்க அருள் புரியவேண்டும்.