58. பசுவதை செய்து, செருப்பினைத் தானமாக அளித்தல்.

“விசையம்மிகும் தண்டலையார் வளநாட்டில்

     ஒருத்தர் சொல்லை மெய்யாய் எண்ணி

வசைபெருக அநியாயம் செய்து, பிறர்

     பொருளையெலாம் வலிய வாங்கித்

திசைபெருகும் கீர்த்தியென்றும் தன்மம் என்றும்

     தானம்என்றும் செய்வ தெல்லாம்

பசுவினையே வதைசெய்து செருப்பினைத்தா

     னங்கொடுக்கும் பண்பு தானே!"


இதன் பொருள் ---


விசையம் மிகும் தண்டலையார் வளநாட்டில் – வெற்றியில் மேம்பட்டு விளங்கும் திருத்தண்டலை இறைவர் திருநாட்டில்,


 ஒருத்தர் சொல்லை மெய்யாய்  எண்ணி - ஒருவர்  கூறுவதையே உண்மை என்று கருதி, வசைபெருகப் பிறர் பொருளை அநியாயம் செய்து வலிய வாங்கி - பழி வளரும்படியாகப் பிறருடைய செல்வத்தை, நியாயம் அல்லாத செயல்களின் மூலம் வலியக் கவர்ந்து, திசைபெருகும் கீர்த்தி என்றும் தன்மம் என்றும் தானம் என்றும் செய்வது எல்லாம் – எட்டுத் திக்கினும் வளரும் புகழுக்கு உரிய செயல் எனவும், தருமம் எனவும், தானம் எனவும் புரிந்து வாழும் இச் செயல்கள் யாவும், பசுவினையே வதைசெய்து செருப்பினைத் தானம் கொடுக்கும் பண்புதானே - பசுவினைக் கொன்று (அதன் தோலால் தைக்கப்பட்ட) செருப்பைத் தானம் கொடுத்த தன்மையே ஆகும்.


    ‘பசுவைக் கொன்று செருப்பைத் தானம் கொடுத்தல்' என்பது பழமொழி. பசுவை உதைப்பது பெரும்பாவம். அந்தப் பெரும்பாவத்தைச் செய்துவிட்டு, பசுவின் தோலால் ஆன செருப்பைப் பிறருக்குத் தானமாக அறித்துப் புண்ணியம் சேர்க்க எண்ணுவது நகைப்புக்கு உரியது. அதுபோலத்தான், பிறருடையசெல்வத்தை முறையற்ற வழிகளில் அநியாயமாக, வலிதில் கவர்ந்து, பிறர் மெச்ச வேண்டி, தான தருமங்கள் செய்வதும்.


58. பசுவதை செய்து, செருப்பினைத் தானமாக அளித்தல்.

“விசையம்மிகும் தண்டலையார் வளநாட்டில்      ஒருத்தர் சொல்லை மெய்யாய் எண்ணி வசைபெருக அநியாயம் செய்து, பிறர்      பொருளையெலாம் வலிய வாங்கித் திச...