63. முழுப் பூசணிக்காயை மறைத்தல்

 

“தத்தைமொழி உமைசேரும் தண்டலையார்

     பொன்னிவளம் தழைத்த நாட்டில்

வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே

     நீதியில்லை! வேந்தர்க் கெல்லாம்

புத்திநெறி நீதிசொல்லு மந்திரியல்

     லாதொருவர் போதிப் பாரோ!

நித்தலுமுண் சோற்றில்முழுப் பூசணிக்காய்

     மறைத்ததுவும் நிசம தாமே!”


இதன் பொருள் –


தத்தை மொழி உமைசேரும் தண்டலையார் பொன்னிவளம் தழைத்த நாட்டில் -  கிளியெனப் பேசும் உமையம்மையாரைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டுள்ள திருத்தண்டலை இறைவரின் காவிரி வளங்கொழிக்கும் (சோழ) நாட்டில், வித்தக மந்திரி இல்லாச் சபைதனிலே மேன்மை இல்லை - அறிவுடைய அமைச்சன் இல்லாத அவையிலே உயர்வு உண்டாகாது, வேந்தர்க்கு எல்லாம் புத்தி நெறி நீதி சொல்லும் மந்திரி அல்லாது ஒருவர் போதிப்பாரோ - அரசர்க்கெல்லாம் அறிவுரையும், அரசியல் நெறியும்,  அரசு முறைமையையும் கற்பிக்கும் அமைச்சரை அன்றி வேறு ஒருவர் கற்பிப்பாரோ?, நித்தலும் உண் சோற்றில் முழுப் பூசணிக்காய் மறைத்ததுவும் நிசமது ஆம் - நாள்தோறும் உண்ணும் உணவிலே முழுப் பூசணிக்காயை மறைத்ததுவும் (அமைச்சர் இல்லாத அரசவையிலே) உண்மையாக முடியும்.


“முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமோ?” என்பது பழமொழி. அறிந்தோ அறியாமலோ மறைவாக நிகழ்ந்துவிட்ட தவறை அல்லது வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்றைத் தனது அறிவீனத்தால் மறைக்க முற்படுவதை இது குறிக்கும். மந்திரியைச் ‘சுமதி’ என்று திருவிளையாடல் புராணம் கூறும். ‘சுமதி’ என்றால் நல்லறிவு உடையவன் என்று பொருள். (சு=நல்ல. மதி=அறிவு) மதிமந்திரி என்று அமைச்சனைக் கூறுதல் உண்டு. “மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்” என்று நறுந்தொகை கூறும். அமைச்சனுக்கு அழகாவது மேல் வரும் காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல் ஆகும். 


அல்லது செய்தல் ஓம்புமின்

அல்லது செய்தல் ஓம்புமின் ----- புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படும் அருமையான வாசகம், “அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதாகும். வயதால் முதிய...