66. தாயைப் பழித்து மகள்

முன்பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி

     தனைப்பழித்து, முரணே பேசிப்

பின்பலரை உடன்கூட்டி நூதனமா

     நடத்துவது பிழைபாடு எய்தில்

துன்பறியாக் கதியருளும் தண்டலைநீள்

     நெறியாரே! தூயள் ஆகி

அன்புளதா யைப்பழித்து மகள்ஏதோ

     செயத்தொடங்கும் அறிவு தானே.


இதன் பொருள் ---


    துன்பு அறியாக் கதி அருளும் தண்டலை நீள் நெறியாரே - துன்பம் காணாத நற்கதியைக் கொடுக்கும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே! 

    முன் பெரியோர் தொண்டு பட்டு நடந்த வழிதனைப் பின் பழித்து முரணே பேசி - முற்காலத்தில் பெரியோர்கள் பழைமையாக ஒழுகிய நெறியைப் பிற்காலத்தே இகழ்ந்து மாறு கூறி, பலரை உடன் கூட்டி நூதனம் ஆ(க) நடத்துவது பிழைபாடு எய்தில் - பலரை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு புதுமையாக ஒன்றைச் செய்வது கைகூடாவிட்டால் (அது), தூயள் ஆகி அன்பு உள தாயைப் பழித்து - நன்னெறி உடையவளும் அன்புடையவளும் ஆன அன்னையை இகழ்ந்து கூறி, மகள் ஏதோ செயத் தொடங்கும் அறிவு தானே - (அவள்) மகள் தவறான நெறியிலே செல்லத் துவக்கும் அறிவு போலவே ஆகும்.


     ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்று நன்னூல் கூறும். ஆயினும் முன்பு தூயதாக இருந்த பெரியோர் நெறி எப்போதும் தாயதாகத்தானே இருக்கும். அருமையான இந்த நெறியில் பழக விரும்பாத அறிவற்ற சிலர், பழைமையை விரும்பாது, அதை இகழ்ந்து கூறுவதும், புதுநெறி புதுப்பிப்பதும் தகாது என்பது கருத்து. (தொண்டு - பழைமை.) ‘தாயைப் பழித்து மகள் அவிசாரி ஆனாளாம்' என்பது பழமொழி.


 மாணிக்கக் கற்கள் அவற்றின் குற்றம் குறைவு அற்ற தன்மையை வைத்தே மதிப்பிடப் பெறுதல் வேண்டும். அவற்றை இழைத்துச் செய்த நகைகள் பழமையானதாக இருக்கலாம். அல்லது புதுமையானதாகவும் இருக்கலாம். உயர்ந்தோர்கள் மாணிக்கத்தின் குற்றமற்ற தன்மை கருதியே அதனை விரும்பி அணிவர். இடைப்பட்டவர்கள் மாணிக்கத்தின் தன்மையையும் அதனைப் பதித்துள்ள நகையையும் அவற்றின் பழமையையும் ஆராய்ந்து அணிந்து கொள்வர். கடைப்பட்டவர்கள், மணியையும் அணிகலனையும் பற்றித் தெளிந்த அறிவில்லாதவர்கள். ஆகையினால் பலர் கூடிப் புகழ்ந்தால் தாமும் புகழ்வர். பலர்கூடி இகழ்ந்தால் தாமும் இகழ்வர். இவர்கள் தமக்கென ஓர் அறிவு இல்லாதவர்.

 

      தொன்மையான நெறிகளை அறிவுறுத்தும் பழமையான நூல்கள் பல உள்ளன. நீதிநூல்கள் ஆகட்டும். அருள் நூல்கள் ஆகட்டும். அவற்றை அருளிச் செய்தவர்கள் அனைவரும், மெய்ப்பொருளை உணர்ந்து தெளிந்தவர்களே. அவர்கள் அருளிச் செய்த நூல்களை ஓதித் தெளிந்தால், மெய்ப்பொருளை உணரலாம். ஆயிரக் கணக்கான பாடல்கள் பழமையான நூல்களில் பல்லாண்டுகளாக அழியாமல் உள்ளன. அவற்றை ஓதித் தெளிதல் வேண்டும்.

 

      இந்த உண்மையைத் தெளியாது, இக்காலத்தார் பலரும் ஒருவகைச் சீர்திருத்தம் பற்றிப் பேசி வருகின்றனர். அது பகுத்தறிவு என்றும் சொல்கின்றனர். அதாவது, தெனாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதுபோல், தமிழுக்குப் பழைய தமிழ் எனப் பெயரிட்டு, அதில் சில மாற்றங்கள் செய்து புதிய தமிழ் உருவாக்கவேண்டும் என்பது அவரது கருத்து.  இதற்கு, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" என்னும் நன்னூல் சூத்திரத்தைத் துணையாகக் கொள்கின்றனர். இது நன்னூலில் வரும் சூத்திரம்தானா என்று அறியாதவர்களும் உண்டு. அவர்களும் இது குறித்துப் பேசுகின்றனர். "பழைய காலைத் தூர்க்காதே, புதிய காலை விடாதே" என்னும் பழமொழியும் உண்டு என்பதை  அவர்கள் நினைவில் கொள்வதில்லை. பழமையில் இருந்துதான் புதுமை தோன்றும் என்பதையும் அவர்கள் மறந்து விடுகின்றனர். 


No comments:

20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே ந...