“மண்ணுலகில் பிறர்குடியை வஞ்சனையில்
கெடுப்பதற்கு மனத்தி னாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன்தானே
கெடுவன்என்பது உண்மை அன்றோ?
தென்னவன்சோ ழன்பணியும் தண்டலைநீள்
நெறியாரே! தெரிந்து செய்யும்
தன்வினைதன் னைச்சுடவோட் டப்பம்வீட்
டைச் சுடவும் தான்கண் டோமே.”
இதன் பொருள் ---
தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீள் நெறியாரே - பாண்டியனும் சோழனும் வழிபடும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!
மண்ணுலகில் பிறர் குடியை வஞ்சனையில் கெடுப்பதற்கு - நிலவுலகிலே மற்றவர் குடும்பத்திற்கு வஞ்சனையாலே கெடுதி செய்வதற்கு, மனத்தினாலே உன்னிடினும் உரைத்திடினும் அவன்தானே கெடுவன் என்பது உண்மை அன்றோ - உள்ளத்திலே நினைத்தாலும், வாயினால் கூறினாலும் அவனே அழிவான் என்பது உண்மை ஆகும்.
தெரிந்து செய்யும் தன்வினை தன்னைச் சுட - (தீமை என) அறிந்தும் செய்கின்ற தன்வினை தன்னை எரிக்கவும், ஓட்டப்பம் வீட்டைச் சுடவும் தான் கண்டோம் - ஓட்டடை வீட்டை எரிக்கவும் கண்டிருக்கிறோம்.
ஓட்டப்பம் வீட்டைச் சுடல் : பட்டினத்தார் துறவு பூண்டபின், வெறியர்போல ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தாராம். அவருடைய உடன்பிறந்தாள் அவருடைய அந் நிலையின் உயர்வை உணராதவளாய், தங்களைப் பிறர் பழிப்பதாக நினைத்து, இவரைக் கொன்றுவிட நினைத்தாள். தன் வீட்டிற்கு வந்தபோது நஞ்சு கலந்து சுட்டு வைத்திருந்த ஓட்டடையை அவருக்குக் கொடுத்தாள். அவர் அந்த அடையை வீட்டின்மீது எறிந்து, ‘தன்வினை தன்னைச் சுடும் - ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என மொழிந்தார். உடனே வீடு எரிந்ததாம். அன்றுமுதல் இது பழமொழியாக வழங்குகிறது. ‘கெடுவான் கேடு நினைப்பான்' என்னும் பழமொழியும் இங்குப் பொருந்தும். “தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்னும் திருவள்ளுவர் வாக்கும் இங்கு வைத்து எண்ணத் தக்கது.