60. இவர்க்கு இது இல்லை

கற்றவர்க்குக் கோபமில்லை! கடந்தவர்க்குச்

     சாதியில்லை! கருணை கூர்ந்த

நற்றவர்க்கு விருப்பமில்லை! நல்லவருக்

     கொருகாலும் நரகம் இல்லை!

கொற்றவருக் கடிமையில்லை! தண்டலையார்

     மலர்ப்பாதம் கும்பிட் டேத்தப்,

பெற்றவர்க்குப் பிறப்பில்லை! பிச்சைச்சோற்

     றினுக்கில்லை பேச்சுத் தானே.


இதன் பொருள்  ---


கற்றவர்க்குக் கோபம் இல்லை – கற்று அறிந்தவருக்குச் சினம் இல்லை, 


கடந்தவர்க்குச் சாதி இல்லை – பற்றுக்களைக் கடந்தவர்க்குச் சாதி வேறுபாடு இல்லை, 


கருணை கூர்ந்த நற்றவர்க்கு விருப்பம் இல்லை - அருள் மிகுந்த நல்ல தவத்தினர்க்கு எதிலும் பற்று இல்லை, 


ஒருகாலும் நல்லவர்க்கு நரகம் இல்லை - எப்போதும் நல்லவர்களுக்கு நரகம் இல்லை, 


கொற்றவருக்கு அடிமையில்லை - அரசர்கள் (பிறர்க்கு) அடிமையாவது இல்லை, 


தண்டலையார் மலர்ப்பாதம் கும்பிட்டு ஏத்தப் பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளின் மலரடியை வணங்கி வாழ்த்தும் பேறு பெற்றவர்கட்குப் பிறவித் துன்பம் இல்லை, 


பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை - இரந்து உண்ணும் உணவுக்கு எந்தப் பேச்சும் இல்லை.


பிறரை வஞ்சித்தல், பிறர் பொருளைத் திருடுதல், பொய் சொல்லல் முதலான தொழில்களைச் செய்பவன் பிறருக்குக் கேடு விளைவிப்பதோடு, தானும் கெட்டுப் போவான். அவற்றினும் பிச்சை எடுத்தல் இழிவானது அல்ல. ‘பிச்சைச் சோற்றினுக்கு இல்லை பேச்சுத்தானே' என்றார். 


No comments:

20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே ந...