விற்பனர்க்கு வாழ்வுவந்தால் மிகவணங்கிக்
கண்ணோட்டம் மிகவும் செய்வார்!
சொற்பருக்கு வாழ்வுவந்தால் கண்தெரியா
திறுமாந்து துன்பம் செய்வார்!
பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையா
ரே! சொன்னேன்! பண்பில் லாத
அற்பருக்கு வாழ்வுவந்தால் அர்த்தராத்
திரி குடைமேல் ஆகும்தானே!
இதன் பொருள் ---
பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையாரே - பலதுறைப் பட்டவர்களுக்கும் நல்வாழ்வை அருளும் திருத்தண்டலை இறைவரே!
விற்பனர்க்கு வாழ்வு வந்தால் மிக வணங்கி மிகவும் கண்ணோட்டம் செய்வார் - அறிவாளிகளுக்கு வாழ்வு நேர்ந்தால் மிகவும் வணக்கமாக யாரிடத்திலும் நாகரிகமாக நடந்துகொள்வர்;
சொற்பருக்கு வாழ்வு வந்தால் கண் தெரியாது இறுமாந்து துன்பம் செய்வார் - அறிவில்லாதார்க்கு வாழ்வு வந்தால் எதனையும் நோக்காமல் செருக்குடன் யாவருக்கும் இடையூறு செய்வார்கள்;
பண்பு இல்லாத அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி குடைமேல் ஆகும் - நற்குணம் இல்லாத கீழ்மக்களுக்கு வாழ்வு கிடைத்தால் நள்ளிரவிலே தலைக்குமேல் குடை இருக்கும்.
கண்ணோட்டம் : கருணை உடைமை. அன்பு உடைமை. இரக்கம் உடைமை. தம்மிடம் பழகியவர் செய்யும் தவறுகளைப் பொறுத்தல். அதுவே நாகரிகம். ‘பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர், நயத்தக்க, நாகரிகம் வேண்டுபவர்' என்பார் திருவள்ளுவ நாயனார். ‘அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பர்' என்பது பழமொழி. குமரேச சதகம் - 41-ஆவது பாடல் காண்க.
No comments:
Post a Comment