அல்லது செய்தல் ஓம்புமின்
-----
புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படும் அருமையான வாசகம், “அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதாகும். வயதால் முதியோராக இருந்தும் தமது அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவ்வாறு கூறுகின்றார்.
“பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரை கவுள்
பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது, அன்றியும்
நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே."
இதற் பொருள் -–
பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும், பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கூர்மையான கோடரி என்னும் படைக்கலன் கொண்டு, மிகுதியான வலிமை கொண்ட காலன், கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள். அந்தக் காலத்தில் உங்களால் நல்ல செயல்களைச் செய்ய எண்ணினாலும், அது முடியாமல் வருந்துவீர்கள். வாழ்வில் நீங்கள் நல்ல செயல்களை செய்யவில்லையானாலும், தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது. அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.
மனிதன் உலகில் வாழப் பிறந்தவன். தான் வாழ்வதோடு மட்டுமன்றி மற்றவர்களையும் மற்றவற்றையும் வாழவைக்கவும் பிறந்தவன். இந்த அடிப்படை உண்மையினை உணராத காரணத்தினால்தான் மனிதன் ஒன்றை விட்டு ஒன்று பற்றி எங்கெங்கோ சுற்றி, ஏதேதோ செய்து, எப்படியோ காலத்தைக் கடத்துகின்றான். சிலர் தமது வாழ்வே பெரிதென எண்ணி, அவ்வாழ்வு வளம்பெற எத்தகைய கொடுமையினையும் செய்யத் துணிகின்றனர். “தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க” என்று நாலடியார் கூறுகின்ற முதுமொழியை ஏட்டளவில் விட்டு, நாட்டில் செய்யத் தகாத செயல்களை எல்லாம் செய்து, தன் வாழ்வைப் வளமாக்கிக் கொள்ளுபவர்களை கண்கூடாகவே காண்கிறோம். சிலர் அதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்கு ஒரு கண் கெட்டாலும் பரவாயில்லை, மற்றவனுடைய இரண்டு கண்களும் கெடவேண்டும் என்று பிறர்க்குத் தீங்கு இழைப்பதிலேயே இன்பம் காணுவதையும் காணுகின்றோம், பிறர் சொல்லவும் கேட்கின்றோம்.
இந்த அவலநிலை மனிதனிடத்தில், மனித உணர்வு அற்றதனாலே உண்டானது. “பெறுதற்கு அரிய மானிடப் பிறவி” என்றார் திருமூல நாயனார். “பெறுதற்கு அரிய பிறவி” என்று அருணகிரிநாதரும் கூறிப் போந்தார். “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். அப்படி, உயிரினங்களில் சிறந்த மானுடனாய்ப் பிறந்து வாழ்கின்ற மனிதன், ஒரு சமுதாய விலங்கு எனப்படுகிறான். அவன் வாழும் சமுதாயம் வாழ்ந்தால்தான், அவனது தனிவாழ்வும் சிறக்கும் என்ற உண்மையினை மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. தனிப்பட்டவர் தம் வாழ்வினை வளம்படுத்துவது எல்லாக் காலத்தும் நிலைத்து நீடிப்பது இல்லை. எவ்வளவு பொருளைக் குவித்தாலும், அவை அத்தனையையும் அனுபவிக்க முடியாமல், பாம்பின் வாய்த் தேரை போல என்றாவது ஒருநாள் காலனது வாயில் அகப்படத் தான் வேண்டும். குவித்து வைத்த பொருளை அப்படியே விட்டுத் தான் செல்லவேண்டும். கூட வருவது என்னவோ, அந்தப் பொருஏளைக் குவிக்க அவன் செய்த தீவினைகள் மட்டுமே.
வாழ்வில் சிலருக்கு, பிறருக்கு உதவத் தக்க வாய்ப்பும் வசதியும் இருக்கும். சிலருக்கு அது இராது. இல்லாதவர் தமக்கு அந்த வசதி இல்லையே என்பதற்காக, மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது. வசதியாக வாழ்வதை விட, அமைதியாக வாழ்வதே சாலச் சிறந்தது. சில வசதி படைத்தவர்கள் தம்மிடம் பணம், பதவி, பட்டம் இன்ன பிற இருக்கின்ற காரணத்துக்காக, மற்றவரைச் சாடுவதும் தாழ்த்துவதும் வதைப்பதும் செய்கின்றனர். இது மிகக் கொடுமை. இவர்கள் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நலம் காணமாட்டார்கள். தம்மிடத்துப் பொருந்தி உள்ள பணம், பட்டம், பதவி போன்றவைகளால் செருக்குக் கொண்டு, பிறரை வாட்டி வதைத்தவர்கள் முடிவில் என்ன ஆனார்கள் என்பதை வரலாறு நன்றாகவே காட்டுகிறது.
அவர்கள் கெடுவது மட்டுமன்றி, அவர்களால் சமுதாயமும் கெடுகிறது. இவற்றையெல்லாம் எண்ணித்தான், சங்க காலத்தில் வாழ்ந்த நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் மனிதனுக்கு உயர்ந்த ஒர் உபதேசத்தைச் செய்கிறார். அதைப் படித்தவர்கள் உண்டு. படிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், கேட்டவர்களும் உண்டு. ஆனாலும், நாம் இன்னமும் வேறுவழியிலேதான் சென்று கொண்டிருக்கிறோம். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தரர் தேவாரம். பிறந்தவர் யாராக இருந்தாலும், எந்நிலையினராக இருந்தாலும் ஒருநாள் மறைந்து போகத்தான் வேண்டும். சின்னாள், பல்பிணி, சிற்றறிவு உடைய வாழ்க்கை இது. அந்த சிலநாள் வாழ்க்கையில் முடிந்தவரையில் பிறருக்கு நன்மையாக வாழ்வதே அறிவுடைமை ஆகும். அதுதான் நரிவெரூஉத் தலையார் காட்டுவது. உலகில் பிறந்த நீ உன்னால் முடிந்தால் நல்லது செய். அதனால் நாடு நலம் பெறும் - சமுதாயம் தழைக்கும். “நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை” என்பது ஔவையார் வாக்கு.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. தீமை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்பட்டது. முற்பகலில் ஒருவனுக்குச் செய்த தீமையின் பலன், செய்தவனுக்குப் பிற்பகலில் விளையும் என்றால், முற்பகலில் செய்த நன்மையும் பிற்பகலில் விளையும் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகக் கொள்ளலாம்.
"மறந்தும் பிறன்கேடு சூழற்க,சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு" என்று "தீவினையச்சம்" என்னும் அதிகாரத்தில் (பொருள்: பிறருக்குத் தீமை பயக்கும் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும் வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்) என்றும், "தீயவை செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று" என்றும் (பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேட்டினை அடைவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது காலடிக் கீழ்த் தங்குவது போன்றது) என்றும், அறக் கடவுள் நிழல்போல் பின்தொடர்ந்து தீயவை செய்தார்க்கு உண்டான கேட்டைச் சிந்திக்கும் என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.
திருவள்ளுவ நாயனார், "இன்னா செய்யாமை" என்னும் அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால், தமக்குத் துன்பங்கள், பின்னதாக யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்று அறிவுறுத்தி விட்டார்.
"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்." --- திருக்குறள்.
எனவே, பிறருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலோ, செய்ய முடிந்த காலத்தும் மனம் இல்லாமல் போனாலோ, கொடுமைகளையாவது செய்யாது இருக்கக் கற்றுக் கொள்ளுதல் நல்லது. நல்லது செய்யாவிட்டால் இவன் இருந்தும் பயனில்லை என்பதோடு போய்விடும். அல்லது செய்தால், பாவம் வந்து சேர்வதோடு, என்றென்றும் பழியும் நிலைத்து இருக்கும். இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு சிறக்காது. நல்லது செய்ய முடியாதவர்கள் சும்மா இருந்தாலே போதும். இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் பெற வேண்டினால், மேலே குறித்த புறநானூற்றுப் பாடலின் கருத்தை உளவாங்கி வாழக் கற்றுக் கொள்ளுதல் நல்லது.