61. குரங்கின் கையில் பூமாலை


பரங்கருணை வடிவாகும் தண்டலையார்

     வளநாட்டில் பருவம் சேர்ந்த

சரங்குலவு காமகலை தனையறிந்த

     அதிரூபத் தைய லாரை

வரம்புறுதா ளாண்மையில்லா மட்டிகளுக்

     கேகொடுத்தால் வாய்க்கு மோதான்?

குரங்கினது கையில்நறும் பூமாலை

     தனைக்கொடுத்த கொள்கை தானே!


இதன் பொருள் ---


      பரங்கருணை வடிவு ஆகும் தண்டலையார் வளநாட்டில் - உயர்வான அருள் உருவாகிய திருத்தண்டலை இறைவரின் வளமிக்க நாட்டினில், பருவம் சேர்ந்த காமசரம் குலவு கலைதனை அறிந்த அதிரூபத் தையலாரை - (மங்கைப்) பருவம் அடைந்த இன்பக் கலையைத் தெரிந்த பேரழகுடைய பெண்களை, வரம்பு உறு தாளாண்மை இல்லா மட்டிகளுக்கே கொடுத்தால் வாய்க்குமோ - கட்டுப்பாட்டில் அடங்கிய, முயற்சியற்ற மூடர்களுக்குத் துணைவியர் ஆக்கினால் பொருத்தமாகுமோ?, குரங்கினது கையில் நறும் பூமாலை தனைக் கொடுத்த கொள்கைதானே - (அவ்வாறு ஆக்கினால்) குரங்கின் கையிலே மணமுள்ள மலர் மாலையை அளித்த கொள்கையைப் போலாகும்.


      ‘குரங்கின் கையில் கொடுத்த பூமாலை' என்பது பழமொழி. “தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு” என்பது குமரேச சதகம். தனக்கு நன்மையைச் சொன்ன தூக்கணங் குருவியின் கூட்டைப் பிய்த்து எறிந்த குரங்கின் கதை அறிந்ததே. “மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர், மட்டிக் குரங்கு அறியுமோ?” என்று குமரேச சதகம் கூறும்.


2. பெரியோர் தொடர்பு - சிறியோர் தொடர்பு

அரிமந் திரம்புகுந்தால் ஆனை மருப்பும் பெருகுஒளிசேர் முத்தும் பெறலாம், - நரிநுழையில் வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின் தோலும்அல்லால் வேற...