64. பூசை வேளையில் கரடி

“நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந்து

     இங்கிதமா நிருபர் முன்னே

பேசுவதே உசிதம்அல்லால், நடுவில்ஒரு

     வன்குழறிப் பேசல் எல்லாம்

வாசம்மிகுந் தண்டலைநீள் நெறியாரே!

    அபிடேக மலிநீ ராட்டிப்

பூசைபண்ணும் வேளையிலே கரடியைவிட்டு

    ஓட்டுவது போலுந் தானே.”


      வாசம் மிகும் தண்டலைநீள் நெறியாரே - மணம் சிறந்த சோலைகள் உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரே!, 


    சபையில் வந்தால் நிருபர் முன்னே நேசமுடன் வேளை அறிந்து இங்கிதம் ஆ - அரசவையிலே சென்றால் அரசருக்கு எதிரில் அன்பையும் காலத்தையும் அறிந்து குறிப்பாக, பேசுவதே உசிதம் - (தன் வேண்டுகோளை) விண்ணப்பித்துக் கொள்வதே நலம் தரும். 


    அல்லால் – அவ்வாறு அல்லாமல், 


    நடுவில் ஒருவன் குழறிப் பேசல் எல்லாம் - இடையிலே ஒருவன் தடுமாறிக் கூறுவன யாவும், அபிடேகம் மலி நீர் ஆட்டிப் பூசை பண்ணும் வேளையிலே - திருமஞ்சனமாக நிறைந்த நீரை ஆட்டி வழிபாடு செய்யும் நேரத்தில், கரடியை விட்டு ஓட்டுவது போலும் - கரடியை (அவிழ்த்து) விட்டு ஒட்டுவது போலாகும்.


    ‘சிவபூசை வேளையில் கரடி வந்தது போல' என்பது பழமொழி. கரடி என்பதற்கு வெவ்வேறு பொருள் உரைக்கப்படுகிறது. உசிதமானதைக் கொள்ளவும்.


5. அன்பினால் நன்மை

“பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே, நல்நா வகைசேர் சுவைஅருந்து மாபோல், - தொகைசேர் பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால் சுகம்உறுதல் நல்லோர் தொழில்....