பொது --- 1112. கோலகாலத்தை


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கோல காலத்தை (பொது)


முருகா! 

பொருள் வேண்டிக் கவி பாடி வீணாகாமல், 

அருள் வேண்டிக் கவி பாடும் திறம் அருள்வாய்.



தானனா தத்தனத் தானனா தத்தனத்

     தானனா தத்தனத் ...... தனதான


கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்

     கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற்


கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்

     கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான்


சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்

     த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ்


சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்

     கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ


ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்

     தாரவா ரக்கடற் ...... கிடைசாயும்


ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்

     டாதரூ பத்தினிற் ...... சுடராய


காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்

     காகவே ளைப்புகக் ...... கழுநீராற்


காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்

     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


கோல காலத்தை விட்டு, ஆசு பாட, கொடிக்

     கோவை பாட, கொடிக் ...... கொடி வாதில்


கோடி கூளக் கவிச் சேனை சாட, கெடிக்

     கூறு காளக்கவிப் ...... புலவோன் யான்,


சீல காலப் புயல், பாரிசாதத் தரு,

     த்யாக மேருப் பொருப்பு ...... என ஓதும்


சீதரா! சித்ர வித்தாரமே செப்பிடக்

     கேள் எனா நிற்பதைத் ...... தவிர்வேனோ?


ஆல காலப் பணிப் பாயல் நீளப் படுத்து,

     ஆரவாரக் கடற்கு ...... இடைசாயும்


ஆழி மாலுக்கும், நல் சாமவேதற்கும் எட்-

     டாத ரூபத்தினில் ...... சுடர் ஆய


காலகால ப்ரபு, சாலுமால் உற்று உமைக்

     காக வேளைப் புகக் ...... கழுநீரால்


காதும் வேழச் சிலைப் பார மீனக் கொடிக்

     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.


பதவுரை

ஆலகாலப் பணிப் பாயல் நீளப் படுத்து ஆரவாரக் கடற்கு இடை சாயும் ஆழி மாலுக்கும் --- ஆலகால விடத்தைக் கொண்டுள்ள பாம்பாகிய ஆதிசேடன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், ஆழிப்படையை ஏந்தியவனுமான திருமாலுக்கும்,


நல் சாமவேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய காலகால ப்ரபு ---  நல்ல சாமவேதன் ஆகிய பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவானவனும், காலகாலனும் ஆகிய  சிவபெருமான்


சாலும் மால் உற்று உமைக்காக வேளைப் புக --- உமாதேவியார் மீது மிக்க மையல் கொண்டு, அவரை மணம் புரியத் தக்க காலம் உண்டாக்குவதற்காக,


கழுநீரால் காதும் வேழச் சிலைப் பாரம் மீனக்கொடிக் காமவேள் மைத்துனப் பெருமாளே --- செங்கழு நீர் மலர் ஆகிய அம்பினைக் கொண்டு சிவபிரானைத் தாக்கிய கரும்பு வில்லை எந்தியவனும், மீனக் கொடியை உடையவனுமாகிய மன்மதனுடைய மைத்துனர் என்னும் பெருமையில் மிக்கவரே! 


கோலகாலத்தை விட்டு --- வீண் ஆடம்பரங்களை விடுத்து,


       ஆசு பாட --- ஆசு கவிகளைப் பாடவும்,


       கொடி கோவை பாட --- கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைகள் பாடவும்,  


கொடிக் கொடி வாதில் --- காக்கைகள் போலக் கூச்சலிடும் வாதத்தில்,


       கோடி கூளக் கவிச் சேனை சாடக் கெடிக் கூறு காளக் கவிப் புலவோன் யான் --- கோடிக் கணக்கான குப்பை போன்ற பயனற்ற கவிஞர்களின் கூட்டத்தை வெல்வேன் என்று தனது கீர்த்தியைக் கூறும் பாடல்களைப் பெருமழை போலப் பாட வல்ல புலவன் நான் (என்று என்னையே மதித்துக் கொண்டு)


சீல காலப் புயல் --- உரிய காலத்தில் பெய்யும் பருவமழை போன்றவன்,


       பாரிசாதத் தரு --- பாரிசாதம் என்னும் தெய்வ மரத்துக்கு ஒப்பானவன்,


        த்யாக மேருப் பொருப்பு என ஓதும் சீதரா --- கொடையில் மேருமலை என்றும் போற்றப் பெறுகின்ற திருமால் போன்றவன், (என்று இவ்வாறெல்லாம் பொருள் படைத்தவர்களைப் புகழ்ந்து, அவர்களிடம் சென்று)


சித்ர வித்தாரமே செப்பிடக் கேள் எனா நிற்பதைத் தவிர்வேனோ --- சித்திரக் கவி, வித்தாரக் கவி வகைகளை நான் பாட, நீ கேட்பாயாக என்று நிற்பதை ஒழிவேனோ? 


பொழிப்புரை


        ஆலகால விடத்தைக் கொண்டுள்ள பாம்பாகிய ஆதிசேடன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், ஆழிப்படையை ஏந்தியவனுமான திருமாலுக்கும், நல்ல சாமவேதன் ஆகிய பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவானவனும், காலகாலனும் ஆகிய  சிவபெருமான், உமாதேவியார் மீது மிக்க மையல் கொண்டு, அவரை மணம் புரியத் தக்க காலம் உண்டாக்குவதற்காக, செங்கழு நீர் மலர் ஆகிய அம்பினைக் கொண்டு சிவபிரானைத் தாக்கிய கரும்பு வில்லை எந்தியவனும், மீனக் கொடியை உடையவனுமாகிய மன்மதனுடைய மைத்துனர் என்னும் பெருமையில் மிக்கவரே! 


வீண் ஆடம்பரங்களை விடுத்து, ஆசு கவிகளைப் பாடவும், கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைகள் பாடவும்,  காக்கைகள் போலக் கூச்சலிடும் வாதத்தில், கோடிக் கணக்கான குப்பை போன்ற பயனற்ற கவிஞர்களின் கூட்டத்தை வெல்வேன் என்று தனது கீர்த்தியைக் கூறும் பாடல்களைப் பெருமழை போலப் பாட வல்ல புலவன் நான் என்று என்னையே மதித்துக் கொண்டு, உரிய காலத்தில் பெய்யும் பருவமழை போன்றவன், பாரிசாதம் என்னும் தெய்வ மரத்துக்கு ஒப்பானவன், கொடையில் மேருமலை என்றும் போற்றப் பெறுகின்ற திருமால் போன்றவன் என்று, இவ்வாறெல்லாம் பொருள் படைத்தவர்களைப் புகழ்ந்து, அவர்களிடம் சென்று, சித்திரக் கவி, வித்தாரக் கவி வகைகளை நான் பாட, நீ கேட்பாயாக என்று நிற்பதை ஒழிவேனோ? 


விரிவுரை


கோலகாலத்தை விட்டு --- 

கோலகாலம் – கோலாலம் என்றும் சொல்லப்படும். பெரோலி, கூக்குரல், பகட்டு என்று பொருள்.


ஆசு பாட --- 

ஆசு – நால்வகைக் கவிகளில் ஒன்று.

கவிகள் நான்கு; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி. விரைந்து பாடப்படுவது ஆசுகவி எனப்படும்.

“நாலுகவி த்யாகா”                      --- கந்தர் அநுபூதி.

“ஆசுகவி முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன

  முகுள பரிமள நிகில கவிமாலை”       --- சீர்பாதவகுப்பு


கொடி கோவை பாட --- 

கொடி - கொடிக்கவி, 

கோவை -அகத்தறையில் வைத்துப் பாடப்படுவது.   பிரபந்த வகைகளில் ஒன்று.


கொடிக் கொடி வாதில் --- 

கொடி – காக்கை.

கொடி – நீளம், பெருக்க என்னும் பொருளில் வந்தது.


கோடி கூளக் கவிச் சேனை சாடக் கெடிக் கூறு காளக் கவிப் புலவோன் யான் --- 

கோடி – அளவற்ற என்னும் பொருளில் வந்தது. 

கூளம் – குப்பை.

கூளக் கவிச் சேனை – பலவகைக் கவிஞர்கள் கூட்டம்.

கெடி – வல்லமை, புகழ்.


காளக் கவி –--

காளம் – கருமை.

    சூல் கொண்ட கருமேகமானது மழையைப் பொழிவது போலக் கவி பாடும் திறம். காளமேகப் புலவர் என ஒரு புலவர் அதிவேகமாகப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.

“இம் என்னு முன்னே எழுநூறும், எண்ணுாறும்,

அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ-சும்மா

இருந்தால் இருந்தேன், எழுந்தேனே ஆமாயின்

பெருங்காள மேகம் பிளாய்!”

என்பது தனிப்பாடல். ‘இம்’ என்று சொல்வதற்கு முன்னே எழுநூறு எண்ணுாறு பாடல்களும், 'அம்' என்று அடுத்துச் சொன்னால் அதற்குள் ஆயிரம் பாட்டுகளும் ஆகிவிடாதோ? சிறுவனே! சும்மா இருந்தாலும் இருப்பேன். பாடத் தொடங்கினேனானால் பெரிய கார்மேகமாகப் பொழிவேன் (என்று அறிவாயாக)


“மடல்,பரணி, கோவையார், கலம்பகம்

     முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்,

          வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி ..... சண்டவாயு

மதுரகவி ராஜன் நான் என், வெண்குடை,

     விருதுகொடி, தாள மேள தண்டிகை,

          வரிசையொடு உலாவும் மால் அகந்தை ......தவிர்ந்திடாதோ?” --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.


சீல காலப் புயல் –

புயல் – மழை பொழியும் மேகம்.

காலப் புயல் – பெய்ய வேண்டிய பருவ காலத்தில் பெய்யும் மழைமேகம்.


பாரிசாதத் தரு --- 

தரு – மரம். பாரிசாதம் என்னும் மரம் தேவலோகத்தில் உள்ளதாகச் சொல்லப்பெறும். 


த்யாக மேருப் பொருப்பு என ஓதும் சீதரா --- 

தியாகம் --- கொடை, பிறருக்காக ஒன்றை விட்டுக் கொடுத்தல்.

மேருப் பொருப்பு - மேருமலை 

சீதரன் – சீதேவியைத் திருமார்பில் தரித்தவன். திருமால். சீதரன் என்னும் சொல், வடமொழியில் ஸ்ரீதரன் என்று வழங்கப் பெறும்.


சித்ர வித்தாரமே செப்பிடக் கேள் எனா நிற்பதைத் தவிர்வேனோ --- 

சித்ரம் --- சித்திரக் கவி, 

வித்தாரம் – வித்தாரக் கவி.

நால்கவி - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி ஆகிய நான்கு வகைச் செய்யுட்கள்.

ஆசுகவி - ஒருவன் கருத்திற்கு ஏற்ப உடனே பாடுதல்.

மதுரகவி - இனிமையாக அழகாகப் பாடுதல்,

சித்ரகவி - சித்திரத்தில் அடைத்தற்கு உரிய செய்யுள்.

வித்தாரகவி - விரிந்த காவியங்கள் பாடுதல்.

        செல்வத்தை வறிதே வைத்து வாழும் பயனில்லாத பதடிகள் இருக்கைதொறும் போய், தூய செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப் புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் பொருளைப் பெற்று மகிழ்வர்.  சிறிது காலமே நின்று மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீண் போயினர். என்றும் அழியாத திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் இறைவனைப் பாடி உய்யும் திறன் அறியாது கெடுவர். இப்படி வீணாகாதபடிக்கு முரகப் பெருமான் திருவருளை வேண்டுகின்றார் அடிகளார்.


“குன்றும் வனமும் குறுகி வழிநடந்து

சென்று திரிவது என்றும் தீராதோ - என்றும்

கொடாதவரைச் சங்குஎன்றும், கோஎன்றும் சொன்னால்

இடாதோ அதுவே இது.”                                --- இரட்டையர்.


“வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி

மஞ்சரி கோவை தூது           பலபாவின்

வண்புகழ் பாரிகாரி என்றுஇசை வாதுகூறி

வந்தியர் போல வீணில்      அழியாதே”.             --- திருப்புகழ்.


“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,

     காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,

     போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,

மல்ஆரும் புயம்என்றேன் சூம்பல் தோளை,

     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,

இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்

     யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே.”     ---  இராமச்சந்திர கவிராயர்.


ஆலகாலப் பணிப் பாயல் நீளப் படுத்து ஆரவாரக் கடற்கு இடை சாயும் ஆழி மாலுக்கும், நல் சாமவேதற்கும் எட்டாத ரூபம் ---

பணி --- பாம்பு.

ஆலகாலப் பணி – கொடிய விடத்தை உடைய பாம்பு. இங்கே ஆதிசேடனைக் குறித்தது.

ஆரவாரக் கடல் – அலைகளை எறிந்துகொண்டே இருக்கும் கடல். இங்கே திருப்பாற்கடலைக் குறித்தது.

ஆழி – சக்கரம். சக்கரப் படையை ஏந்திய திருமால்.

சாமவேதன் --- பிரமன். சாமவேதம் பாடுகின்ற பிரமன்.

“சாமவெண் தாமரைமேல் அயனும்”. --- திருஞானசம்பந்தர்.

எட்டாத ரூபம் --- திருமாலும் பிரமனும் அறியமுடியாதபடி, சோதி வடிவாய் நின்ற சிவபிரானது வடிவம்.


காலகால ப்ரபு ---  

காலகாலன் – எமனுக்கும் எமன் ஆன சிவபெருமான்.

தனது அடியவரான மார்க்கண்டேயரது உயிரைக் கவர வந்த காலனை வதைத்தவர் சிவபெருமான்.


கழுநீரால் காதும் வேழச் சிலைப் பாரம் மீனக்கொடிக் காமவேள் மைத்துனப் பெருமாளே --- 

கழுநீர் --- செங்கழுநீர் மலர். காதுதல் - போர் புரிதல்.

வேழச் சிலை – கரும்பு வில்.

மீன் கொடிக் காமவேள் --- மீனைத் தனது கொடியில் உடைய மன்மதன்.

சிவபரம்பொருளின் தவநிலையைக் குலைக்க, மன்மதன், தேவர்களின் ஏவலுக்கு இணங்க அவர்மீது மலர் அம்புகளைத் தொடுத்தான் மன்மதன்.  மன்மதன் திருமாலின் மகன் என்ற முறையில் முருகப் பெருமானுக்கு மைத்துனன் ஆவான்.


கருத்துரை


முருகா! பொருள் வேண்டிக் கவி பாடி வீணாகாமல், 

அருள் வேண்டிக் கவி பாடும் திறம் அருள்வாய்.



பொது --- 1112. கோலகாலத்தை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கோல காலத்தை (பொது) முருகா!  பொருள் வேண்டிக் கவி பாடி வீணாகாமல்,  அருள் வேண்டிக் கவி பாடும் திறம் அருள்வாய...