உள்ளவரைக் கெடுத்தோரும், உதவியற்று
வாழ்ந்தோரும், உறைபெற் றோரும்,
தள்ளிவழக் குரைத்தோரும், சற்குருவைப்
பழித்தோரும் சாய்ந்தே போவார்.
பள்ளவயல் தண்டலையார் பத்தரடி
பணிந்தோரும், பாடி னோரும்,
பிள்ளைகளைப் பெற்றோரும், பிச்சையிட்ட
நல்லோரும் பெருகு வாரே.
இதன் பொருள் ---
பள்ளவயல் தண்டலையார் பத்தர் அடி பணிந்தோரும் பாடினோரும் - பள்ளமான வயல்களை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளின் அடியவர்களின் திருவடிகளை வணங்கினவரும், பாடினவரும், பிள்ளைகளைப் பெற்றோரும் - குழந்தைகளைப் பெற்றவர்களும், பிச்சை இட்ட நல்லோரும் - இரந்தவர்க்குக் கொடுத்தவர்களும், பெருகுவார் - (வாழ்வில்) மேம்படுவார்கள்.
உள்ளவரைக் கெடுத்தோரும் - (செல்வம்) உடையவர்களுக்குத் தீங்கு செய்தவர்களும், உதவி அற்று வாழ்ந்தோரும் - (பிறர்) துணையை நாடாமல் வாழ்கின்றவர்களும், உறை பெற்றோரும் - (பொய்வழக்குச் சொல்லி, அதன்வழி) செல்வத்தைப் பெற்றவரும், வழக்கு தள்ளி உரைத்தோரும் - வழக்கிலே நடுநிலை நீங்கிக் கூறியவர்களும், சற்குருவைப் பழித்தோரும் - நல்லாசிரியரை இகழ்ந்தவர்களும், சாய்ந்தே போவார் - கெட்டே போவார்கள்.
No comments:
Post a Comment