அருளுடைமை

அருளுடைமை

----

        உலகில் பிறந்து மனைவி மக்களொடு வாழ்ந்து, சுற்றத்தையும் தழுவி அவர்களிடத்தும் அன்பைப் பொழிந்து வாழும் மனிதன், பிற எல்லா உயிர்களையும் ஒத்து நோக்கி, அவர்களிடத்தும், அவற்றினிடத்தும் கருணை உள்ளம் படைத்தவனாய் வாழும் நிலையில் நிற்பதே அருளுடைமை ஆகும். அருளுடைமை என்பது எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துதல் என்று பொருள்படும். உயிர்கள் மீது செல்லுகின்ற ஆசையே ‘அன்புடைமை’ என்றும், ‘அருள் உடைமை’ என்றும் சொல்லப்படும். ஆயினும், அன்பு என்பது தனக்குத் தொடர்பு உடைய மனைவி மக்கள், சுற்றத்தார் மீது காட்டுவது. அருள் என்பது தனக்குத் தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மீதும் செலுத்தப்படுவது.

        திருக்குறளில் இல்லறம், துறவறம் என்ற இரு நிலையாக வாழ்க்கையினைப் பாகுபடுத்தி, முதலில் இல்லற நெறிக்கு உரிய அறங்களை வரிசைப்படுத்தி அருளிய திருவள்ளுவ நாயனார், துறவறநெறிக்கு முதலாவதாய் 'அருளுடைமை” என்பதை அருளுகின்றால். “அருளுடைமை” துறவறத்தின் முதல் அதிகாரமாக வைக்கப் பெற்றுள்ளது. இல்லறத்தின் முதிர்ச்சியே துறவறம் ஆகும்.

        இல்லறத்தில் பிறக்காத அருளுடைமை என்னும் பண்பு, துறவறத்தில் திடீர் என்று முளைக்கப் போவது இல்லை. அரும்புதான் மரலாகும். அரும்பு இல்லாமல் மலர் இல்லை. எனவே, அருளுடைமை என்பது மக்களாகப் பிறந்த அனைவருக்கும் அமைந்திருக்க வேண்டிய பண்பு என்பது அறியப்படும். அன்புடைமையின் எல்லை விரிந்தால் அது அருளுடைமையில் சென்று முடியும். இதைத்தான் திருவள்ளுவ நாயனார், “அருள் என்னும் அன்பு ஈன் குழவி”  என்று பின் பொருட்பாவில் விளக்கி அருளினார்.. எனவே இந்த அருளுடைமை என்பது உலக உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படை ஆகும்.

    திருவள்ளுவ நாயனார் கல்விச் செல்வம், பொருட் செல்வம், செவிச்செல்வம் போன்ற பிற செல்வங்களை எல்லாம் விளக்கிச் சொல்லி, இவற்றுக்கு எல்லாம் மேலானது அருட்செல்வம் என்று காட்டுகிறார். “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்று கூறி அருளுகிறார். அருட்பாலில் இவ்வாறு காட்டிய நாயனார், பொருட்பாலில், “கேள்வி” என்னும் அதிகாரத்தில் முதலாவதாக, “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்” என்றும் கூறி உள்ளாரே என்னும் ஐயம் உண்டாவது இயல்பே. கேள்விச் செல்வத்தின் சிறப்பினை உணர்த்த வந்த நாயனார், கேள்விச் செல்வத்தை உயர்ந்ததாகப் பொருட்பாலில் வைத்து அருளினார். ஆராய்ந்து அறியப் புகுந்தால், கேள்விச் செல்வம் என்பது, அருட்செல்வம் பெறுதற்கு வழியாக அமையும் என்பது விளங்கும். “கேட்டல்” என்பது ஞானத்திற்கு உரிய நான்கு பாதங்களில் ஒன்று. எனவே, அருட்செல்வமே எல்லாவற்றிலும் மேம்பட்டது என்பதும், உலக உயிர்கள் இன்ப நெறியில் வாழ அருட்செல்வமே வழிவகுக்கும் என்பதும் அறிதல் வேண்டும்.

        “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” என்று, அருளுடைமை அதிகாரத்தின் முதல் திருக்குறளின் பிற்பகுதியில் நாயனார் சொல்லியதன் அருமையை ஆழ்ந்து சிந்தித்தால், பொருளால் வரும் செல்வங்கள் மேலானவை அல்ல என்பது விளங்கும். உலகில் பிறந்த மனிதன் பலவகையிலும் ஓடி ஓடி, யார் யாருடைய துணையையும் கொண்டு, பொருளைக் குவித்து, எப்படி எப்படியோ கட்டி ஆளுகிறான். இறுதியில் எல்லாவற்றையும் வைத்து விட்டு, வெறும் கையோடு இறந்து போகிறான். குவித்து வைத்த செல்வத்தை அவன் ஆர அனுபவித்தானா என்றால், இல்லை. பொருளைத் தேடி ஒடி ஒடி உழைத்த மனிதன் அருளைத் தேடி அலையவில்லை. அதானல், அவன் கீழ்மகனாகவே வாழ்ந்தான் என்பதுதான் உண்மை. அதனால்தான், கீழ்மக்களிடத்தும் பொருள் உண்டு என்பதைக் காட்ட, “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார் நாயனார். தேடிய பொருளை அருளாக மாற்றிக் கொள்ள வழிவகை அறியாத மனிதர்களைப் பார்த்து “கேடுகெட்ட மானிடரே” என்றும், “பாவிகாள்” என்கிறார் ஔவைப் பிராட்டியார். “கேடுகெட்ட மானிடரை! கேளுங்கள், கூடு விட்டு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார், பாவிகாள், அந்தப் பணம்” என்று இரங்குகிறார். “உங்கள் வல்வினை நோய், ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது, உங்கள் அத்தம் எல்லாம்  ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே?" என்கிறார் அருணகிரிநாதர். வாழ்வதற்குப் பொருள் அவசியம் என்றுதான் நினைக்கிறோம். பொருள் படைத்தவனாக இருந்தால் இந்த உலகத்தில் நன்றாக வாழ்ந்து விடலாம் என்பது உலகவர் எண்ணம். ஆனால், திருவள்ளுவரும், அருணகிரிநாதரும் அருள் இன்றியமையாதது  என்கின்றனர்.  இறைவனைப் பணிவதால் வருவது அருள். வியாபாரம், தொழில் முதலியவற்றால் வருவது பொருள். பொருள் இருந்தால் போதாது. அருள் இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ முடியாது. 

"அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு 

இவ்வுலகம் இல்லாகி யாங்கு"

 என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். 

      இந்த உலகத்தில் பொருள் இருந்தால்தானே வாழமுடியும். வாழ்ந்து முடிந்த பின்னர் தானே இறைவன் திருவடியை அடைய முடியும். எனவே, முதலில் பொருளோடு இவ்வுலகில் வாழ்வோம். அதன் பின்னர் அருளோடு அவ்வுலகம் செல்வோம் என்று கூறுகின்றவர்களும் உள்ளனர். அவர்களுக்கு அறிவுறுத்தவே, 

"பொருள் அற்றார் பூப்பர் ஒருகால், அருள் அற்றார் 

அற்றார் மற்று ஆதல் அரிது" 

 என்று அருளின் சிறப்பை உணர்த்தினார் திருவள்ளுவ நாயனார். பொருளோடு அருளையும் தேடுவதே அறிவுடைமை.  இந்த உலகத்தில் பொருளோடு வாழும் காலத்திலேயே, பொருளைக் கொண்டு அறச் செயல்களைப் புரிந்து, அருளைப் பெறாதவர்களுக்கு அந்த உலகம் இல்லை. அருளும் பொருளும் ஒருங்கே உடையவன் தான், இம்மையும் மறுமையும் நல்வாழ்வு பெறுவான். இதுதான் நாயனார் அருளிய இரண்டு திருக்குறள்களையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணினால் கிடைக்கின்ற விடை. எனவே, பொருள் மட்டும் இருந்தால் வாழ்ந்துவிடலாம் என்பது மறுக்கப்படுகிறது. அருள் இருந்தால்தான் அந்தப் பொருளினால் நல்ல பயனை அடைந்து வாழ முடியும். 

        ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால் நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தான் என்பதுதான் பொருள். நல்ல நெறியில் இன்பமாகத் தானும் வாழ்ந்து, பிறரையும் மகிழ்வித்து வாழ்வதே வாழ்வு. நல்லது அல்லாத வழியில் வாழ்நாள் கழிந்த போவது தாழ்வு. ஒருவன் நன்றாக வாழ்ந்தவன் என்பதற்கு, நல்ல நெறியிலே சென்று, இன்ப வாழ்வு வாழ்ந்தவன் என்பதே பொருள். உயிரும்,  உடம்பும் ஒட்டிப் பல காலம் கிடப்பதை மட்டுமே வைத்துக் கொண்டு நல்ல வாழ்க்கை என்று சொல்ல இயலாது. பொருள் நிறைய இருப்பதனால் மட்டும் இன்பம் உண்டாகாது என்பதைப் பொருள் நிறையப் படைத்து உள்ளவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும். பொருளை மலைமலையாகக் குவித்து வைத்துள்ளோருக்கு, அந்தப் பொருள் ஒவ்வொரு கணமும் அச்சத்தைத் தந்துகொண்டு இருக்கிறது. நிச்சயமாக இன்பத்தைத் தரவில்லை.   

        உலகம் நல்ல வழியில் வாழ வகுக்கப் பெற்றுள்ள நெறிகளின்படி வாழ்ந்தால் நிச்சயம் மனிதன் அருளானவன் ஆவான். அருளானது தானாகவே வந்து அவனிடத்து வெளிப்படும் என்கிறார் அருணகிரிநாதர். 

“தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானம் என்றும்

இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழுபாரும் உய்யக்

கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்

விடும் கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே.”   --கந்தர் அலங்காரம்.

    அவன் அந்த அருளை ஆள்வான் என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். “நல்லாற்றான் நாடி அருள் ஆள்க, பல்லாற்றான் தேடினும் அஃதே துணை” என்பது திருக்குறள். பொருளை ஆள்வதை விட, அருளை ஆள்வதே சிறந்தது என்பது மட்டுமல்ல, அதுவே எளிமையில் கிட்டுவதும் கூட. எனவேதான், “அருள் ஆள்க” என்கின்றார் நாயனார். அந்த அருளை ஆளுகின்ற நிலையைப் பெற்றபின், அந்த அருளே அவனுக்குத் துணையாக நின்று அவனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் அல்லாத மற்றவருக்கும் நலம் பயக்கும்.

         எனவே, பிறரை ஆள நினைக்கின்றவர்கள், உலகை ஆள நினைக்கின்றவர்கள், அருளை ஆள முதலில் பயிலவேண்டும். பிற துணையை நாடாது, அருளையே துணையாக நாடவேண்டும் இந்த உண்மையினை வற்புறுத்தி, “அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை” என்று தெளிவாகவும், துணிந்தும் கூறுகின்றார். அருளாளனுடைய செயல் எப்படி அமையவேண்டும் என்பதையும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார். “மன்னுயிர் ஒம்பி, அருள் ஆள்வார்க்கு இல் என்ப, தன் உயிர் அஞ்சும் வினை” என்கிறார். பெற்றுள்ள செல்வத்தால், மன் உயிர் ஓம்பி அருளை ஆளவேண்டும் என்று எண்ணுகின்ற அருளாளனுக்கு புறத் தோற்றங்கள் எல்லாம் மறைந்து விடும். இன்னார் - இனியார், உற்றார் – மற்றவர், எமது நாட்டான் - பிறநாட்டான் என்ற மாறுபாடு தோன்றாது.  இதுவே அருளாளன் நிலை. 

  "எவ்வுயிரும் பராபரன் சந்நிதி” என்றனர் சமயச் சான்றோர். திருவள்ளுவர் “மன்னுயிர் ஒம்பி” என்கின்றார். புறத் தோற்றமாகிய உடலைச் சொல்லவில்லை. கண்ணால் காண முடியாத நிலையில் ஒவ்வொரு உடம்பிலும் குடிகொண்டு உள்ள உயிரைச் சொல்லுகின்றனர். அவ்வுயிர் என்றும் நிலைபெற்று உள்ளது என்பதால், “மன்னுயிர்” எனப்பட்டது. அந்த உயிரை ஓம்பவேண்டும். “ஒம்புதல்” என்ற சொல் மிக உயர்ந்தது. அவ்வாறு “மன்னுயிர் ஒம்பின், தன் உயிர்க்கும் ஏதம் இல்லை”  என்பது திருவள்ளுவ நாயனார் அருள்மொழி. முல்லைக்குத் தேர் ஈந்த பாரியும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனும், புறா ஒன்றிற்காகத் தனது உடம்பேயை அறுத்துத் தந்த சிபியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளற் பெருமானும் இவ்வாறு வாழ்ந்து காட்டியவர்களே.

        உலகில் வலியாரும், மெலியாரும் என்றுமே உள்ளனர். தன்னின் மெலியாரைச் சாடி, வருத்தித் தன் வாழ்வைப் பெருக்கிக் கொள்ள நினைப்பது மனிதநிலை. தனி மனிதனாயினும் சமூகமாயினும் நாடுகளாயினும் இந்த நியதிக்கு விலக்கு இல்லை. எனவேதான் இந்தக் கொடுமைக்கு மருந்தாக - மாற்றாக – அருளுடைமை. என்னும் அதிகாரத்தின் இறுதித் திருக்குறளில் நம்மைத் தெருட்டுகிறார் நாயனார். “நீ உன்னினும் வலி குன்றியவனைத் துன்புறுத்தி, உன் வாழ்வை வளமாக்க நினைக்கிறாயே, அதோ அந்தப் பக்கம் உன்னினும் வலியவன் ஒருவன் உன்னைத் தாக்கி, புடைத்து, அழித்துத் தன் வாழ்வை வளமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டு வருவது உனது கண்ணுக்குத் தெரியவில்லையா?”  என்று கேட்கிறார்.

“முடவனை மூர்க்கன் கொன்றால்,

     மூர்க்கனை முனிதான் கொல்லும்;

மடவனை வலியான் கொன்றால்,

     மறலிதான் அவனைக் கொல்லும்;

தடவரை முலைமாதே! இத்

     தரணியில் செருக்கினாலே,

மடவனை அடித்த கோலும்

     வலியனை அடிக்கும் கண்டாய்.”

என வரும் விவேக சிந்தாமணிப் பாடல் இத் திருக்குறளைப் பற்றி எழுந்ததே ஆகும்.

இதன் பொருள் –-

    விசாலமான மலை போன்ற முலைகளை உடைய அழகிய பெண்ணே!  இந்த உலகத்தில், கைகள் கால்கள் முதலியன முடங்கிச் செயல்பாடு இழந்த ஒருவனை முரடன் ஒருவன் கொன்றான் ஆனால், அந்த முரடனை அவனிலும் வலிமை பொருந்திய ஒருவன் (அல்லது பேய் அல்லது கடவுள்) பின் ஒரு காலத்தில் கொல்லுவான். அறிவு அற்ற ஓர் ஏழையை, வலிமை பொருந்திய ஒருவன் கொன்றான் ஆனால், அவனை எமன் ஒரு காலத்தில் கொல்லுவான். செல்வச் செருக்கு காரணமாக, ஏழை ஒருவனை வலியவன் ஒருவன் தனது கைக் கொண்டு அடித்த கோல் ஆனது, பின் ஒரு காலத்தில் அவனிலும் வலியவன் ஒருவன் கையில் வந்து பொருந்தி, (முன்னே ஏழையை அடித்த வலியவனை) அடிக்கும் என்று உலகின் நிகழ்வைக் கண்கூடாகக் கண்டு கொள்வாய்.

    இதை எண்ணிப் பார்க்கின்ற நல்ல மனம் இருந்தால், மற்றவருக்குக் கொடுமை இழைக்க யாருக்கும் மனம் வராது.  உலகம் அருளற்ற, அவல வாழ்வில் மனம் செல்லாது. பொருள் பொருள் என்று அலைந்து திரிந்து, பிறரை வறுத்தி வாழும் அவலநிலை நீங்க வேண்டும். எல்லோரும் அருளுடையராய் வாழ்தல் வேண்டும்.





அல்லது செய்தல் ஓம்புமின்

அல்லது செய்தல் ஓம்புமின் ----- புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படும் அருமையான வாசகம், “அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதாகும். வயதால் முதிய...