அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஞாலமோடு ஒப்ப (பொது)
முருகா!
தேவரீரது திருவடியை நாள்தோறும் வழிபட, உபதேசப் பொருளை அருள்வாய்.
தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் ...... தனதான
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்
தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம்
நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்
டோயுநா யொப்பவர்க் ...... கிளையாதே
நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்
டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா
நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்
றோதநீ திப்பொருட் ...... டரவேணும்
கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்
தானும்வே தக்குலத் ...... தயனாருங்
கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்
போதுறா நிற்பஅக் ...... கொடிதான
காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்
கோதைகா மக்கடற் ...... கிடைமூழ்கக்
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்
காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா, நற்சொலைத்
தீது எனா, நல் தவத்து ...... அணைவோர்தம்
நாதமோடு உள்கருத்து ஓடவே தர்க்கம் இட்டு,
ஓயும் நாய் ஒப்பவர்க்கு ...... இளையாதே,
நீலமேனிக் குலத் தோகை மேல் உற்று, நிட்-
டூர சூர் கெட்டு உகப் ...... பொரும்வேலா!
நேசமாய் நித்தம் நின் தாளை, நீள் அச்சம்அற்று
ஓத நீதிப் பொருள் ...... தரவேணும்.
கோல வாரிக்கு இடைக் கோப அராவில் படுத்-
தானும், வேதக் குலத்து ...... அயனாரும்,
கூறும் வான், அப்புவிக்கு ஊறு தீரக் குறிப்பு
ஓது உறா நிற்ப, அக் ...... கொடிது ஆன
காலன் மார்பு உற்று உதைத்தானும், ஓர் கற்பு உடைக்
கோதை காமக் கடற்கு ...... இடைமூழ்கக்
காவிசேர் கொத்து அலர்ப் பாணம் ஏய் வித்தகக்
காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.
பதவுரை
கோல வாரிக்கு இடைக் கோப அராவில் படுத்தானும் --- அழகிய திருப்பாற்கடலின் நடுவில், கோபம் நிறைந்த பாம்பாகிய ஆதிசேடன் மீது அறிதுயில் கொண்டுள்ள திருமாலும்,
வேதக் குலத்து அயனாரும் --- வேதம் ஓதும் குலத்துப் பிரமனும்,
கூறும் வானப் புவிக்கு ஊறு தீரக் குறிப்பு ஓதுறா நிற்ப அக் கொடிதான காலன் மார்பு உற்று உதைத்தானும் --- சொல்லப்படுகின்ற வானுலகத்திலும் நிலவுலகத்திலும் உள்ளோருக்கு நேரும் இடையூற்றினைத் தீர்க்கும் வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, (தன்னை வழிபட்ட மார்க்கண்டேயருக்காக) அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும்,
ஓர் கற்பு உடைக் கோதை காமக் கடற்கு இடை மூழ்க --- (முறையே திருமகள், கலைமகள், மலைமகள் ஆகிய) ஒப்பற்ற கற்பு வாய்ந்த பெண்ணுடன் கூடி காமக் கடலின் இடையே முழுகும்படிக்கு,
காவி சேர் கொத்து அலர் அப் பாணம் ஏய் வித்தகக் காமவேள் மைத்துனப் பெருமாளே --- நீலோற்பல மலர்களின் கொத்தால் ஆன கணையை அவர்கள் மீது எய்யும் வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனர் என்னும் பெருமையில் மிக்கவரே!
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல்சொலைத் தீது எனா --- மக்களே! உலகத்தோடு ஒட்ட ஒழுகல் நல்லது என்று சொல்லப்படும் நல்ல உபதேசத்தை தீது என்று கருதி,
நல் தவத்து அணைவோர் தம் நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கம் இட்டு ஓயு(ம்) நாய் ஒப்பவர்க்கு இளையாதே --- நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் அறிவுரையையும், அவர்கள் சொன்ன அறிவுரையின் உண்மைக் கருத்தும், தாங்கள் புரியும் தருக்க வாதத்தில் பின்னிட்டு ஓடும்படி அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் தோற்றுப் போகாமல்,
நீல மேனிக் குலத் தோகை மேல் உற்று --- நீலநிறமும் தோகையும் உடைய மயிலின் மீது இவர்ந்து,
நிட்டூர சூர் கெட்டு உகப் பொரும் வேலா --- கொடியவன் ஆகிய சூரபதுமன் அழிந்து போகுமாறு போர் புரிந்த வேலாயுதப் பெருமானே!
நேசமாய் நித்த(ம்) நின் தாளை --- நாள்தோறும் அன்புடன் தேவரீரது திருவடிகளை,
நீள் அச்சம் அற்று ஓத நீதிப் பொருள் தரவேணும் --- அச்சம் சிறிதும் இல்லாமல் ஓதி வழிபடுவதற்கு உரிய சாத்திரப் பொருளை உபதேசித்து அருள் வேண்டும்.
பொழிப்புரை
அழகிய திருப்பாற்கடலின் நடுவில், கோபம் நிறைந்த பாம்பாகிய ஆதிசேடன் மீது அறிதுயில் கொண்டுள்ள திருமாலும், வேதம் ஓதும் குலத்துப் பிரமனும், சொல்லப்படுகின்ற வானுலகத்திலும் நிலவுலகத்திலும் உள்ளோருக்கு நேரும் இடையூற்றினைத் தீர்க்கும் வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, (தன்னை வழிபட்ட மார்க்கண்டேயருக்காக) அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும், முறையே திருமகள், கலைமகள், மலைமகள் ஆகிய ஒப்பற்ற கற்பு வாய்ந்த பெண்ணுடன் கூடி காமக் கடலின் இடையே முழுகும்படிக்கு, நீலோற்பல மலர்களின் கொத்தால் ஆன கணையை அவர்கள் மீது எய்யும் வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனர் என்னும் பெருமையில் மிக்கவரே!
மக்களே! உலகத்தோடு ஒட்ட ஒழுகல் நல்லது என்று சொல்லப்படும் நல்ல உபதேசத்தை தீது என்று கருதி, நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் அறிவுரையையும், அவர்கள் சொன்ன அறிவுரையின் உண்மைக் கருத்தும், தாங்கள் புரியும் தருக்க வாதத்தில் பின்னிட்டு ஓடும்படி அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் தோற்றுப் போகாமல், நீலநிறமும் தோகையும் உடைய மயிலின் மீது இவர்ந்து, கொடியவன் ஆகிய சூரபதுமன் அழிந்து போகுமாறு போர் புரிந்த வேலாயுதப் பெருமானே! நாள்தோறும் அன்புடன் தேவரீரது திருவடிகளை, அச்சம் சிறிதும் இல்லாமல் ஓதி வழிபடுவதற்கு உரிய சாத்திரப் பொருளை உபதேசித்து அருள் வேண்டும்.
விரிவுரை
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல்சொலைத் தீது எனா ---
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய பொய்யாமொழி.
கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகும். எனவே, அந்த ஒழுக்கத்தைக் கல்லாதார், பல நூல்களைக் கற்றிருந்தும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார். உயர்ந்தாரொடு பொருந்த நடத்தலாவது, உயர்ந்தார் பலரும் நடந்து காட்டிய வழியில் நடத்தல். அறிவில்லாதார், அவரைப்போன்ற அறிவிலாதார் ஒழுக்கத்தையும், அவர்கள் செய்யும் செயலையும் நியாப்படுத்தி, அறிவுடையோர் கூறும் நற்சொற்களை ஏளனம் செய்து ஒழுகுவர். உலகம் என்னும் சொல் உலகத்தில் வாழும் உயர்ந்தோரையே குறிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே --- பிங்கலந்தை.
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்னே. --- நன்னூல்.
நூல் நடையோடு உலக நடையும் அறிதல் வேண்டும். நூல்களுள் சொல்லியவற்றுள், இக் காலத்திற்குப் பொருந்தாதவற்றை ஒழித்து, நூல்களுள் சொல்லாதனவற்றுள், இக் கால நடைக்குப் பொருந்துவனவற்றை அறிந்து நடத்தல் வேண்டும்.
“தேரோடு மணிவீதித் தண்டலையார்
வளங்காணும் தேச மெல்லாம்
போரோடும் வில்படைத்து வீராதி
வீரரென்னும் பகழே பெற்றார்,
நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு
நடப்பதுவே நீதி யாகும்,
ஊரோட உடனோட நாடோட
நடுவோடல் உணர்வு தானே.” --- தண்டலையார் சதகம்.
இதன் பொருள் ---
தேர் ஓடும் மணி வீதி தண்டலையார் வளம் காணும் தேசம் எல்லாம் - தேர் ஓடுகின்ற அழகிய தெருக்களையுடைய தண்டலையாரின் வளம் மிக்க நாடுகள் யாவும், போர் ஓடும் விறல் படைத்து வீராதி வீரர் எனும் புகழே பெற்றார் - போர்க்களத்திலே வெற்றி அடைந்து மேம்பட்ட வீரர்களுக்குள் சிறந்த வீரர் எனும் புகழை அடைந்தவரும், நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும் - ஒழுங்காகச் செல்கின்ற உலகத்திலே தாமும் ஒன்றாகி வாழ்வை நடத்துவதே அறம் ஆகும், ஊர் ஓட உடன் ஓட நாடோட நடுவோடல் உணர்வுதானே - எல்லோரும் செல்லும் நெறியிலே தாமும் நடத்தல் அறிவுடைமை ஆகும்.
“குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் --- நலம்சான்ற
மைஅறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் போல்சோற்றின் நேர்.” --- நாலடியார்.
இதன் பதவுரை ---
குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும் - நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம் ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐந்தும் தடையின்றிப் பெற்றவிடத்தும்; நலம் சான்ற மைஅறு தொல்சீர் உலகம் அறியாமை நெய் இலாப்பால் சோற்றின் நேர் - இன்பம் நிரம்பிய தீதற்ற தொன்மையாகிய இயல்பினையுடைய வீட்டுலக ஒழுக்கம் அறியானாய் இருத்தல் நெய் இல்லாத பால் சோற்றினுக்கு ஒப்பாகும்.
நல் தவத்து அணைவோர் தம் நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கம் இட்டு ஓயு(ம்) நாய் ஒப்பவர்க்கு இளையாதே ---
நல் தவத்து அணைவோர் தம் நாதம் --- நல்ல தவத்தைப் பயிலுகின்றவர்களின் திருவாயில் இருந்து பிறக்கும் சொல். அவர்கள் கூறும் அறிவுரையை மறுத்துப் பேசும் இயல்பு உடையவர்கள் நாய்க்கு ஒப்பாவார்கள்.
"அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு" -- நாலடியார்.
இதன் பொருள் ---
இறைச்சியை எடுத்துக் கொண்டு, வீசி எறியப்பட்ட வெறும் தோலைக் கவ்விக் கடித்துத் தின்னும் நாய்க்கு, பால் சோற்றினைக் கொடுத்தால் அதன் அருமையை அது உணராது. அதுபோல, அழுக்காறு முதலிய மனமாசுகள் இல்லாத பெரியோர் அறநெறிகளை அறிவுறுத்தும் போது, நல்லறிவு இல்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்தும் கேட்கமாட்டார்.
"குக்கலைப் பிடித்து நாவிக்
கூண்டினில் அடைத்து வைத்து,
மிக்கவே மஞ்சள் பூசி,
மிகுமணம் செய்தாலும் தான்,
அக்குலம் வேறதாமோ?
அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லால்,
குலம் தனில் சிறந்ததாமோ?" -- விவேக சிந்தாமணி.
தெருநாயைப் பிடித்து, புனுகு பூனையை அடைக்க வேண்டிய கூண்டினில் அடைத்து வைத்து, அதற்குத் தினந்தோறும் மேன்மையான மஞ்சளைப் பூசி, மிக்க நறுமணமுடையதாக ஆக்க முயற்சித்தாலும், அந் நாயானது தனது நிலையில் இருந்து மாறி, புனுகுப் பூனையாக ஆகிவிடுமோ? அதனிடத்தில் மணம் மிகுந்த வாசனைப் பொருளான புனுகுதான் உண்டாகுமா? நாய் என்றுமே நாய்தான். அது என்றும் உயர்ந்த புனுகுப் பூனை ஆகாது.
நாயினது வால் இயல்பகாவே கோணலாக இருக்கும். அதை நேராக்க யாராலும் முடியாது. அதுபோல, கீழ்மக்கள் மனக்கோட்டம் உள்ளவராக இருப்பதால், அவர் எவர் சொல்லையும் கேட்டுத் திருந்தமாட்டார். எனவே, அவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்ற குற்றத்தைச் செய்து அவமானப் படவேண்டாம் என்பது கருத்து.
நாயினது இயல்பு எப்படி, நல்லவற்றை ஒதுக்கி விட்டு, அல்லாதவற்றைக் கொள்ளுமோ, அதுபோலவே மனித மனமும். நல்வழிப்படுத்துகின்றவர் பார்வையில் இருக்கும்வரை நல்லவனாக இருக்கும். கொஞ்சம் காவல் குறைவு பட்டால் அது தனது இயல்பான வேலையில் இறங்கும். ஆசிரியர் இருக்கும் வரை மாணவர்கள் அடங்கி இருப்பார்கள். ஆசிரியர் இல்லாத போது வாலை அவிழ்த்துவிட்டுக் கொள்வார்கள்.
எவ்வளவுதான் கற்றவர்களாக இருந்தாலும், நல்ல பதவியில் இருந்தாலும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், சமயத்தில் தங்களின் இயல்பான குணத்தைக் காட்டி விடுவார்கள். நல்லவர்கள் இனத்தில் இருக்கும்வரை தான் எல்லாம். எனவேதான், "மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது" என்றார் திருவள்ளுவ நாயனார்.
"நாயைக் குளிப்பாட்டி நட்டுள்ளே வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும்".
"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில்தான் படுக்கும்".
"நாயைக் குளிப்பாட்டிப் பல்லக்கில் ஏற்றினாலும் எலும்பைக் கண்டால் வள்ளென்று தாவும்".
என்பன நாயைப் பற்றி வழங்கும் பழமொழிகள்.
எனவே, நாய்க்குணம் படைத்தோரது வாதத் தொடக்கினில் அகப்பட்டு இளைத்துப் போகாமல் அருள் புரிய வேண்டும் என்னும் குறிப்பை அடிகளார் வைத்து உள்ளார்.
கோல வாரிக்கு...... காலன் மார்பு உற்று உதைத்தானும் ..... இடைக் கோப அராவில் படுத்தானும் --- ஓர் கற்பு உடைக் கோதை காமக் கடற்கு இடை மூழ்க..... காவி சேர் கொத்து அலர் அப் பாணம் ஏய் வித்தகக் காமவேள் ---
“வேள்” என்னும் சொல்லுக்கு விருப்பதை உண்டாக்குபவன் என்று பொருள். கரிய நிறம் உடைய திருமாலின் மகனாகிய மன்மதன், கருநிறத்தோன் ஆதலின் “கருவேள்” எனப்படுவான். அவன் உயிர்களுக்குக் காமத்தில் விருப்பத்தை ஊட்டுபவன். செம்மேனி எம்மான் ஆகிய சிவபரம்பொருளின் புதல்வர் ஆகிய முருகப் பெருமான், “சேவ்வேள்” எனப்படுவார். செவ்வேட்பரமன் உயிர்களுக்கு, காமத்தை அகற்றி, அருள் வேட்கையை உண்டு பண்ணுபவர். “காமம் அகற்றிய தூயனடி” என்பது திருவருட்பா.
மன்மதனுக்கு ஐம்பெருங் கணைகள். தாமரைப்பூ, மாம்பூ, முல்லைப்பூ, அசோகம்பூ, நீலோற்பலப்பூ என்ற மலர்கள்.
தாமரைப்பூ --- நினைப்பூட்டும்;
மாம்பூ --- பசலை நிறந்தரும்;
அசோகம்பூ --- உணர்வை நீக்கும்;
முல்லைப்பூ --- படுக்கச் செய்யும்;
நீலோற்பலப்பூ --- கொல்லும்.
தலைவனை நாடிய தலைவிக்கு அந் நினைவை அதிகப்படுத்துவது மன்மதன் விடுகின்ற தாமரைப் பூங்கணை.
“நினைக்கும் அரவிந்தம், நீள்பசலை மாம்பூ,
அனைத்துணர்வு நீக்கும் அசோகம்,-வனத்திலுறு
முல்லை இடைகாட்டும், மாதே முழுநீலம்
கொல்லுமதன் அம்பின் குணம் .” --- இரத்தினச் சுருக்கம்.
மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.
“வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
மலர்நீலம் இவைஐந் துமே
மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
மனதில் ஆசையை எழுப்பும்;
வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
மிகஅசோ கம்து யர்செயும்;
வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
மேவும்இவை செயும்அ வத்தை;
நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!”
தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,
இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,
இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.
மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......
“வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
மேல்விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
வேழம்கெ டாதஇருள் ஆம்;
வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
மனதேபெ ரும்போர்க் களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
சார்இரதி யேம னைவிஆம்;
தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
தவறாதி ருக்கும் இடம்ஆம்;
அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!”
ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......
--- கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
--- அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
--- உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
--- தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
--- குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
--- யானை அழியாத இருளாகும்.
--- மிகுபடை பெண்கள் ஆவர்.
--- உடைவாள் தாழை மடல் ஆகும்.
--- போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்,
--- கொடி மகர மீன் ஆகும்.
--- சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
--- பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
--- பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
--- குடை சந்திரன் ஆவான்.
--- காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
--- அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.
--- எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.
மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.
வானப் புவிக்கு ஊறு தீரக் குறிப்பு ஓதுறா நிற்ப, அக் கொடிதான காலன் மார்பு உற்று உதைத்தானும் ---
வானுலகத்திலும் நிலவுலகத்திலும் வாழும் யாருக்கும் மரணம் என்னும் ஊறு உண்டாவது நிச்சயம். வானலகத்தில் உள்ளவர்களேயானாலும், அவர்கள் அனுபவித்து வருகின்ற புண்ணியத்தின் பயன் தீர்ந்த பிறகு, மண்ணுலகில் பிறந்துதான் ஆகவேண்டும். பிறப்பு இறப்பு என்னும் இரண்டையும் நீக்கி, மரணம் இல்லைப் பெரு வாழ்வு வாழவெண்டுமானால், இறைவன் திருவடியை அடைய வேண்டும். இறைவன் திருவடியை வழிபடுவோருக்கு, எமபயம் இல்லை. இதை உணர்த்தவே, தனது திருவடியை வழிபட்டுக் கொண்டு இருந்த மார்க்கண்டேய முனிவரது உயிரைக் கவர வந்த எமனைத் தனது திருவடியால் உதைத்து, மரணமில்லாப் பெருவாழ்வில் மார்க்கண்டேயரை வைத்து அருளினார் என்னும் புராண வரலாற்றை இங்கே அடிகளார் நமக்கு நினைவுபடுத்தினார்.
காமவேள் மைத்துனப் பெருமாளே –-
திருமாலின் மகன் மன்மதன். திருமாலின் தங்கை உமாதேவியார். திருமாலின் மகள்களான வள்ளிநாயகியையும், தேவயானையையும் மணம் புரிந்தவர் முருகப் பெருமான். இந்த உறவுமுறையில் மன்மதனுக்கு மைத்துனர் ஆகிறார் எந்தை கந்தவேள்.
கருத்துரை
முருகா! தேவரீரது திருவடியை நாள்தோறும் வழிபட, உபதேசப் பொருளை அருள்வாய்.