“அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்,
சிறுவன் பகையாம், செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான், முன்
கொன்றதுஒரு வேந்தைக் குரங்கு.” — நீதிவெண்பா
முன் ஒரு காலத்தில் அறிவும் வெற்றியும் உடைய வேடன் ஒருவன், ஒரு அந்தணன் உயிரைக் காத்தான். ஒரு குரங்கு ஓர் அரசனை அறிவில்லாமையால் கொன்றுவிட்டது. அதுபோல, அறிவு உடையவன் பகைவன் ஆனாலும் அன்புள்ள நண்பனாக விளங்குவான். அவனால் யாதொரு தீங்கும் நேராது. ஆனால், அறிவு இல்லாதவன் நண்பனாக இருந்தாலும், அவனால் நன்மை இல்லை. அவன் பகைவனாக மாறவும் கூடும்.
(அறிவன் - அறிவுடையவன். சிறுவன் - அறிவில்லாதவன். செறிந்த - நிறைந்த. வென்றி - வெற்றி. வனசரன் - காட்டில் திரிபவன், வேடன். வேதியன் - பார்ப்பனன்.)
வனசரன் கதை.
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒர் அந்தணனுக்கு ஒரு மாணிக்க மணியை வழங்கினான். மணியை வாங்கிய அந்தணன் அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லுகையில், வழியில் யாரேனும் கள்வர் கவர்ந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, வீட்டிற்குச் சென்றதும் மணியைக் கக்கி எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அம் மணியை வாயில் போட்டுக் கொண்டான். இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தணனைத் தொடர்ந்து போய் வழிமறித்து, "உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான். அந்தணன் அதனைக் கேட்டு அஞ்சி, "மாணிக்கம் உன் வயிற்றில் தானே உள்ளது" என்று சொன்னான். இருவரும் இவ்வாறு வாதிட்டுக் கொண்டு இருக்கும்போது, திருடர்கள் வந்து அந்தணனைப் பிடித்துக் கொண்டு மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள். அந்தணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அவன் அறிவு உள்ளவன். ஆதலால், அவன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு, அவனைக் காக்க எண்ணி, திருடர்களைப் பார்த்து, "ஐயா நாங்கள் விளையாட்டாகப் பேசிக் கொண்டு இருந்தோம். மாணிக்கம் வயிற்றில் எப்படி இருக்கும். வேண்டுமானால் என் வயிற்றை அறுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான். வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்த திருடர்கள் மாணிக்கம் இல்லாதது கண்டு, வேடனை வீணாகக் கொன்றுவிட்டோமே என்று எண்ணி, அந்தணனை விட்டுவிட்டார்கள். அந்தணன் உயிர் பிழைத்தான் மாணிக்கத்தோடு. வேடன் அந்தணனுக்குப் பகைவனாக இருந்தாலும் அவன் அறிவு உள்ளவனாக இருந்ததால், அந்தணன் மீது அன்பு கொண்டு அவனைக் காக்கத் தனது உயிரை விட்டான்.
குரங்கின் கதை
ஓர் அரசன், ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான். ஒரு நாள் அரசன் அக் குரங்கிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, "இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே" என்று ஆணையிட்டு உறங்கச் சென்றான். அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது ஓர் ஈ வந்து அமர்ந்தது. குரங்கு அதனைப் பார்த்து, அந்த ஈயைக் கொல்லத்தான் அரசன் தன்னிடம் கத்தியைக் கொடுத்துள்ளான் என எண்ணியது. அதன் அறிவின்மைதான் காரணம். அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஓங்கிக் குத்தியது. ஈ பறந்து விட்டது. ஆனால் அரசன் மாண்டான். அரசனிடம் குரங்கு அன்புடனிருந்தாலும், அறிவின்மையால் இத் தீங்கு அரசனுக்கு நேர்ந்தது.
அறிவு உடைய ஒருவன் பகைவனாக இருந்தாலும், அந்தப் பகைமை காரணமாகத் தீங்கு செய்யமாட்டான். அறிவில்லாதவனோடு நட்புக் கொண்டால், அவனது அறியாமையால் அவன் செய்கின்ற தீய செயலினால் துன்பம் வரும். எனவே, அறிவில்லாதவனது நட்பை விட, அறிவுடையவனது பகைமையே நல்லது.
“பேதை பெரும் கெழீஇ நட்பின், அறிவு உடையார்
ஏதுஇன்மை கோடி உறும்.”
என்னும் திருக்குறளுக்கு விளக்கமாக இந்தப் பாடல் பின்னாளில் எழுந்தது எனக் கருதலாம்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
"மாயமா ரீசன் மடிந்தான், கவுசிகன்தான்
ஏயதவம் உற்றான், இரங்கேசா! - ஆயதனால்
பேதை பெருங்கெழீ நட்பின் அறிவுடையார்
எதின்மை கோடி யுறும்."
இதன் பொருள் ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! மாய மாரீசன் - மாயமானாகி வந்த மாரீசன் என்பான், மடிந்தான் - (இராவணனோடு நெடுநாள் நட்புக் கொண்டிருந்தும், அவன் பேச்சைக் கேட்டு, அதன்படி செய்ததால், இராமன் கை அம்பால்) இறந்தான், கவுசிகன் தான் - விசுவாமித்திரன், ஏய தவம் பெற்றான் - வசிட்டரோடு பகை கொண்டிருந்தும் இசைந்து செய்து தவ மகிமையைப் பெற்றான், ஆயதனால் - ஆகையால், இது, பேதை பெரும் கழீஇ நட்பின் - அறிவில்லாதவனது மிகவும் நெருங்கிய நட்பைக் காட்டிலும், அறிவு உடையார் ஏதின்மை - நல்லறிவு உடையவரது பகைமை, கோடி உறும் - கோடி பங்கு நன்மை பெறும் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- பேதை நட்பின், மேதை பகையே மேலானது.
விளக்கவுரை --- மூடனாகிய இராவணனுக்கும் மாரீசனுக்கும் பல்லாண்டு நேசம் பெருகி மருகன் மாமன் முறை ஏற்பட்டு இருந்தது. இருந்தும் பேதையாகிய இராவணன் பேச்சைக் கேட்டு, அதன்படி மாயமானாகி சீதாபிராட்டிக்கு எதிரில் சென்ற மாரீசன், இராமன் அம்பால் உயிர் துறந்து மாண்டான்.
"பிரம்மரிஷி" (பெருமுனி) என்பது முனிவர்களின் தவ வலிமைக்கு ஏற்றவாறு வழங்கப்படும் பட்டங்களில் மிக உயர்ந்தது. இத்தகைய பட்டம் பெற்றவர் மற்ற முனிவர்களில் உயர்ந்தவராக மதிக்கப்படுவார். ரிஷிகளுக்கேல்லாம் ரிஷி என்பவரை "மகரிஷி" என்றழைப்பர். மகரிஷிகளுக்கெல்லாம் ரிஷி என்பவரை "பிரம்மரிஷி" என்பர். எவர் ஒருவர் பிரமஞானம் பெற்றவராக கருதப்படுகின்றாரோ, அவரே பிரம்மரிஷி என்று அழைக்கப்படுவார். பிருகு, அத்திரி, அங்கிரசர், காசிபர், விசுவாமித்திரர், வசிட்டர், சாண்டில்யர் ஆகிய எழு ரிஷிகள் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் சப்தரிஷிகள் எனப்படுவர்.
ஒரு நாட்டின் மன்னனாக இருந்த கௌசிகன் என்பவன், வேட்டையாடுவதற்காகத் தனது படைகளுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிட்டரின் ஆசிரமம் பக்கமாக வந்தான்.. தன் ஆசிரமம் பக்கமாக வந்த கௌசிக மன்னனையும் படைபரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிட்டர், கௌசிகனிடம், ‘‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன், நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்றார்.
அதற்கு கெளசிகன், "எனக்கும், எனது படையினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது, காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் நீங்கள் எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்துப் பரிமாற முடியும்?’’ என்று கேட்டான்.
வசிட்டர், "முடியும், மன்னா! நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்று நேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகி விடும்" என்றார்.
பிறகு வசிட்டர், தனது ஆசிரமத்துக்குப் பின்புறம் இருந்த கோமாதாவிடம் சென்று, "வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்" என்றார். அப்படியே சற்று நேரத்தில் அறுசுவை விருந்து தயாரானது. பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.
வசிட்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்விகப் பசு இருப்பதைக் கண்ட கௌசிகன், "கேட்டதைத் தரும் அட்சய பத்திரமான கோமாதா, சாதாரண முனிவரான உன்னிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம்தான் இருக்க வேண்டும்" என்று சொல்லி, அந்த தெய்விகப் பசுவைத் தனக்குத் தருமாறு கேட்டான். வசிட்டர் மறுத்தார்.
வசிட்டரின் பெருமை அறியாத கௌசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் கோமாதாவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கும்படி சாபம் கொடுக்கிறார் வசிட்டர். அப்படியே படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர்.
வசிட்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கௌசிகன், "தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். "கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’" என்று வசிட்டர் சொல்ல, "படை பரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்" என்று சபதம் செய்வதுபோல் கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றுவிட்டான்.
தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றான். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு, இலிங்கத் திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூசை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர், இராமலட்சுமணர்களை அழைத்து வந்தார். இராமபிரான் தாடகையை அழிக்க அத்திரம் தொடுத்தார். இராமரின் அத்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிந்தாள்.
யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திரருக்குக் காட்சி கொடுத்து "இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய், காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிட்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிட்டரே உனக்கு குரு ஆவார்" என்று அருள் செய்தனர்.
வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் பெரும் பகை நேரிட்டு இருந்தது. இருந்தும் வசிட்டர் மேதாவி. ஆகையால், அவரோடு பகை கொண்ட விசுவாமித்திரருக்கு நன்மையே உண்டாயிற்று. அந்தப் பகைமை காரணத்தால், அவர் கடும் தவம் புரிந்தார். ஆகையால், அருந் தவமுனிவராய், வசிட்டர் மெச்சும் வேதிய முனிவராய் விளங்கினார். பகைமை உணர்வு கொண்டு இருந்த வசிட்டரால் விசுவாமித்தரருக்கு யாதொரு நீங்கும் நேரவில்லை.
இதனால் இராவணனைப் போன்ற பேதையின் பெருங்கழீஇ நட்பைப் பார்க்கிலும், வசிட்டரைப் போன்ற அறிவுடையாரது ஏதின்மை கோடி உறும் என்பது விளங்குகின்றமை காண்க.
"இசைந்த சிறுமை இயல்பு இலா தார்கண்
பசைந்த துணையும் பரிவாம், - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்." --- நாலடியார்.
இதன் பொருள் ---
இசைந்த சிறுமை இயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் - தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களை உடைய பண்பிலாதாரிடத்தில் நேயங் கொண்ட அளவும் துன்பமேஆம்; அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவினார்கண் - மாறிய செயல்களை விளையாட்டாகவும் விரும்பாத சிறந்த அறிஞர்களிடத்தில், பகையேயும் பாடு பெறும் - பகை கொள்ளுதலும் கூட மாட்சிமைப் படும்.
பெரியோரிடத்துப் பகைசெய்தலினும், சிறியோரிடத்து நட்புச் செய்தல் பெருந்தீங்கு பயக்கும்.
"நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவில் என்னும்
சொல்வழி கண்டனம் யாம்,தொகு சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர் எரித்தோன், வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின்று அளித்தனன் காண்க சிவகதியே."
--- கோயில் திருப்பண்ணியர் விருத்தம். 11-ஆம் திருமுறை.
"நொய்யார் உறவில் நல்வழி நின்றார் பகை நன்று" என்னும் சொல்லாவது -- சாக்கிய நாயனார் சிவலிங்கத்தைக் கல்லால் எறிதலை நியமமாகக் கொண்டு செய்து முத்தி பெற்றார். கல்லால் எறிதல் பகைமைச் செயலாயினும் அன்பு காரணமாகச் செய்யப்பட்டது. இங்ஙனமே கண்ணப்ப நாயனார் தமது செருப்புக் காலைச் சிவலிங்கத்தின் மேல் வைத்ததும். இதனால், `நல்வழியில் நிற்கும் நல்லோர் பிறர்க்குத் தீங்குபோல எவற்றையேனும் செய்வாராயினும் அச் செயற்குக் காரணம் பகைமையாகாது, அன்பேயாய் இருக்கும்.