"தாமரை,பொன், முத்து, சவரம்,கோ ரோசனை,பால்
பூமருதேன், பட்டு, புனுகு,சவ்வாது, - ஆம்அழல்மற்று
எங்கே பிறந்தாலும் எள்ளாரே, நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என்?"
தாமரை மலரும், பொன்னும், முத்தும், சாமரையும், கோரோசனையும், பாலும், மணமிக்க பூவில் கிடைத்த தேனும், பட்டும், புனுகும், சவ்வாதும். நெருப்பும் ஆகிய இவை பதினொன்றும் கீழான இடத்தில் இருந்து கிடைத்தாலும் அவற்றை யாரும் இகழ்ந்து கூறமாட்டார்கள். அதுபோல, நற்குணம் உடையவர்கள் எந்த இனத்தில் பிறந்து இருந்தாலும் இகழப்பட மாட்டார்கள்.
தாமரை சேற்றில் விளைவது. தாமரையை விரும்புபவர்கள் சேற்றை விரும்பமாட்டார்கள். பொன் மண்ணிலிருந்து கிடைப்பது. மண்ணை விரும்பாமல் பொன்னையே விரும்புவர். முத்து சிப்பியில் இருந்து பெறப்படுவது. சிப்பியை விரும்பாமல் முத்தையே விரும்புவர். சாமரை கவரிமானின் மயிர்த்தொகுதி. கோரோசனை பசுவின் வயிற்றிலும், பால் பசுவின் மடியிலும் கிடைப்பது. தேன் அடையில் கிடைப்பது. பட்டு, பூச்சியின் எச்சில். புனுகு, சவ்வாது ஒருவகைப் பூனையின் உடலில் இருந்து பெறப்படும் அழுக்கு. நெருப்பு இழிந்த கட்டையிலும் விளங்கும்.
(சவரம் - கவரி. பூ - அழகு. மரு - மணம். அழல் - நெருப்பு. எள்ளார் - இகழார்.)
No comments:
Post a Comment