53. நல்ல மாட்டுக்கு ஓர் அடி

“துன்மார்க்கர்க் காயிரந்தான் சொன்னாலும்

     மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார்!

சன்மார்க்கர்க் கொருவார்த்தை சொலும்அளவே

     மெய்யதனில் தழும்பாக் கொள்வார்

பன்மார்க்க மறைபுகழும் தண்டலையா

     ரே! சொன்னேன்! பதமே யான

நன்மாட்டுக் கோரடியாம்! நற்பெண்டிர்க்

     கொருவார்த்தை நடத்தை ஆமே.”


இதன் பொருள் ---

    பல்மார்க்க மறைபுகழும் தண்டலையாரே - பல நெறிகளையும் வகுத்த வேதங்கள் போற்றுகின்ற, இருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவரே!

    பதம் ஆன நல் மாட்டுக்கு ஓர் அடி ஆம் - பக்குவமான நல்ல மாட்டைத் திருத்துவதற்கு ஓர் அடி போதும், நல் பெண்டிர்க்கு ஒரு  வார்த்தை  நடத்தை ஆம் - நல்ல மாதர்க்கு ஒரு மொழி சொன்னாலேயே நன்னடை உண்டாகும். (அவ்வாறே), சன்மார்க்கர்க்கு ஒரு வார்த்தை சொல்லும் அளவே மெய்யதனில் தழும்பாக் கொள்ளார் – நன்னெறியில் ஒழுகுபவர்க்கு ஒரு சொல் சொன்னாலே அதனை அளவிலே வடுவாக நினைப்பார்கள், துன்மார்க்கர்க்கு ஆயிரம் தான் சொன்னாலும் மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார் – தீய நெறியிலே ஒழுகுபவர்களுக்கு ஆயிரம்தான் அறிவு புகட்டினாலும், அத்தனையும் மனதில் கொள்ளாது தீவினையே புரிவார்கள்.


     ‘‘நல்ல மாட்டுக்கு ஓர் அடி, நல்ல மனிதருக்கு ஒரு சொல்!' என்பது பழமொழி.


53. நல்ல மாட்டுக்கு ஓர் அடி

“துன்மார்க்கர்க் காயிரந்தான் சொன்னாலும்      மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார்! சன்மார்க்கர்க் கொருவார்த்தை சொலும்அளவே      மெய்யதனில் தழும்ப...