நிலையான பெருந்தவம்

 


நிலையான பெருந்தவம்

-----

 

     அறம் எல்லோரும் செய்வதற்கு உரியது. அறத்தைச் செய்வதற்குப் பொருள் கருவியாக இருக்கிறது. அறத்தின் வழியாக வந்த பொருளே,மீட்டும் அறத்தைச் செய்வதற்குரிய கருவியாகும். அறவழியில் சேராத பொருள் பொருளாகாது. இன்பமும் அறத்தோடு பொருந்தியதாக இருக்கவேண்டும். அறத்தைச் செய்வதற்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியோடு பெறும் இன்பமே இன்பம். அறத்தின் வழுவிய இன்பம் இன்பமாகாது. ஆகவே,அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும் அறம் உயிர்நாடியாக இருப்பது. அறம் என்பது, நாம் செய்ய வேண்டியவை இன்ன, செய்யக் கூடாதவை இன்ன என்று தெரிவிப்பது. செய்யக் கூடியவை விதி. செய்யக் கூடாதவை  விலக்கு என்று சொல்வார்கள். கடமை, கடன், ஒழுக்கம், ஆசாரம் என்று சொல்லப்படுவன எல்லாமே அறம். 

 

     அறு என்னும் சொல்லை அடியாக உண்டானது அறம். இன்ன இன்னது செய்ய வேண்டுமென்று வரையறுப்பது அறம். இது செய்யக் கூடாதென்று வரையறுப்பதும் அதுவே.அப்படி வரையறுத்த நெறியே,அறநெறி என்று சொல்லப்பெறும். ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்று அந்த அறம் மூன்று வகைப்படும் என்ற சொல்வார்கள். இந்த மூன்றிலும் மிகவும் முக்கியமானது ஒழுக்கம். செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதனவுமாகிய அறத்தின் பகுதிகளைத் திருவள்ளுவர் "அறத்துப்பால்" என்ற தலைப்பில் முப்பத்தேழு அதிகாரங்களில் முறையாகச் சொல்கிறார்.  எல்லாவற்றுக்கும் ஜீவனைப் போல இருப்பது ஈகை, எல்லா அறங்களிலும் தலையாயது ஈகை. "பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்றார் திருவள்ளுவ நாயனார். 

 

     நூல்கள் யாவும் தர்மம் (அறம்) அர்த்தம் (பொருள்) காமம் (இன்பம்) மோட்சம் (வீடு) என்ற நான்கைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அந்த நூல்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாழ்நாள் போதாது. ஔவைப் பாட்டி சுருக்கமாக எதையும் சொல்வதில் வல்லவர். பெருக்கமாகவும் சொல்வார். பெருக்கமாகச் சொல்வதற்கு அறிவு நுட்பமாக இருக்கவேண்டும் என்பது இல்லை. சுருக்கிச் சொல்வத்தான் நுட்பம் வேண்டும். பெரிய அம்மிக் கல்லைப் பொளிபவனைக் காட்டிலும் வைரக்கல்லில் வேலை செய்பவனுக்கு நல்ல திறமை வேண்டும்.  

 

     சுருக்கமாகப் பாடுகிற ஆற்றலலைத் திருவருளால் பெற்ற ஔவைப் பாட்டி மனிதனுக்கு உரிய உறுதிப் பொருள்கள் நான்கையும் சுருக்கமாக ஒரு பாட்டில் காட்டினார். "ஈதல் அறம்" என்றார். அறம் செய்ய வேண்டுமானால் பொருள் வேண்டும். பொருளை எவ்வாறு ஈட்டுவது?  "தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்றார். பணம் ஈட்டுவதற்கு இக் காலத்தில் எத்தனையோ தந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாளுகின்றார்கள். எப்படியாவது பொருள் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்தோடு இப்போது பொருளை ஈட்டுகிறார்கள். ஆனால், நமது முன்னோர்இப்படி ஈட்டுவதைப் பொருளாகக் கொள்ளவில்லை. நல்ல வழியில் ஈட்டிய பொருளையே பொருள் என்று சொன்னார்கள். நல்ல வழியாவது அறநெறி. அறநெறியில் ஈட்டிய பொருளே பின்னும் அறம் செய்வதற்குத் தகுதியானது. இந்தப் பண்பை நினைவு கொண்டு ஒளவை பொருளைப் பற்றிச் சொன்ன பிறகு காதலைப் பற்றிச் "காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்" என்றார்.

 

     கணவனும் மனைவியும் வாழ்கின்ற இன்ப வாழ்க்கைக்கு மிக அருமையான இலக்கணத்தைச் சொன்னார். எல்லாப் புலவர்களுமே காதல் இன்பத்தைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒருவனும் ஒருத்தியும் ஒன்றுபட்டுப் பழகுவதே இன்பம் என்று யாவரும் அறிவார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையில் உடம்பு இணைவது மட்டுமே அல்ல.  உள்ளமும் இணைய வேண்டும். கருத்து ஒருமித்து ஆதரவுபடும் இன்பத்தை எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். 

 

     காதலைப் பற்றிச் சொல்கிற நுட்பம் ஒன்று உண்டு. உடல் இணைவது, உள்ளம் இணைவது போலவே உயிரோடு ஒன்றுபட்டு அமைவது காதல் என்பது கருத்து. பிறவிதோறும் காதல் தொடர்ந்து வரும்.ஒளவைப் பாட்டி, "காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்"  என்று சொன்னார்.பல பிறவிகளிலே ஒன்றுபட்டுக் காதல் உடையவர்கள், இந்தப் பிறவியிலும் காதல் கொண்டு கருத்து ஒருமித்து அன்பு செய்வதே இன்பம் என்று பொருள் கொள்ளவேண்டும். 

 

     இந்த மூன்றிலும் பற்றற்று இறைவனுடைய திருவருளைப் பெறுவது வீடு என்று முடித்தாள். "பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு."

 

     இந்தப் பாட்டில் அறத்தின் இலக்கணத்தை,மிகச் சுருக்கமாக "ஈதல் அறம்" பாட்டிஎன்று சொல்லிவிட்டார். ஈதல் - கொடுப்பது. ஆடை கொடுத்தாலும், ஆபரணம் கொடுத்தாலும் உண்டி கொடுத்தாலும், உறங்கும் இடம் கொடுத்தாலும், யார் யாருக்கு எது எது வேண்டுமோ அதைக் கொடுத்தாலும் எல்லாம் ஈகைதான். 

 

     அறச்செயல்கள் பலவகையானாலும் அவற்றுள் ஈகை சிறந்தது. அதுபோலவே பலவகையான ஈகைகளிலும் சிறந்ததாக ஓர் ஈகை இருக்கிறது. அறங்கள் முப்பத்திரண்டு வகை என்று சொல்வார்கள். அவை எல்லாவற்றுள்ளும் சிறந்தது அன்னதானம். அறத்தின் பகுதிகளில் சிறந்தது ஈகை என்றால், ஈகைப் பகுதிகளில் சிறந்தது பிறருடைய பசியைப் போக்க உண்டி அளிக்கும் ஈகையாகும்.

 

     காஞ்சீபுரத்தில் சிவபெருமான் கொடுத்த இரு நாழி நெல் கொண்டு அம்பிகை முப்பத்திரண்டு அறங்கள் நடத்தியதாகச் சொல்வார்கள். அந்த முப்பத்திரண்டு அறங்களிலும் அன்னதானம் மிகச் சிறப்பாக நடந்தது. 

 

     எல்லா வகையான ஒழுக்கங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது உயிரும் உடம்பும் சேர்ந்த இந்த வாழ்க்கை. உயிரும் உடம்பும் சேர்ந்து அமைந்து இருப்பதனால்தான் உலகமே வாழ் கிறது. உயிர் தனித்து நில்லாது; உடம்போடு சேர்ந்தே நிற்கும். "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பார் திருமூல நாயனார். இந்த உடம்பு சோற்றுப் பிண்டம். சோறு இல்லாவிட்டால் சோர்ந்துவிடும். 

 

     உயிர் வாழ, உடம்பு வேண்டும். உடம்பை உணவால் ஓம்புதல் வேண்டும். சோறு இல்லா விட்டால் பசிநோய் உண்டாகும். எல்லா நோய்களையும் விடக் கொடியது பசிநோய். அது வந்துவிட்டால் எல்லா வகையான அறங்களும், ஆசாரங்களும் அழிந்து போகின்றன. துறவிகளையும் பசித் துன்பம் விடுவது இல்லை. பசி வந்துவிட்டால் அவர்களுக்கும் அறிவு மங்கிவிடும். எத்தனையோ மக்கள் பசியினால் பிள்ளையை விற்றும் பிழைக்கிறார்கள். 

 

     சாமானிய மக்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று எண்ணக் கூடாது, பெரும் தவம் புரிந்த விசுவாமித்திரர் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பசி வந்துவிட்டது. அவருக்குப் பிச்சை இடுவார் யாரும் இல்லை. நாயின் ஊனைத் தின்றாராம். பசிநோய் முற்றிய போது,அதனை மாற்றுவதற்கு வழி இல்லாமையினால் அவ்வாறு செய்தார். 

 

     தானம், தவம் ஆகிய இரண்டும் உலகத்தில் நிற்க வேண்டும். இல்லறத்தார் தானத்தினால் சிறப்பு அடைகிறார்கள். துறவறத்தார் தவத்தினால் சிறப்பு அடைகிறார்கள். இந்த இரண்டும் நிற்க வேண்டுமானால் பசிப்பிணி போகவேண்டும். பசிப்பிணியைப் போக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை. அதனால், "தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்' என்று பாடினார் திருவள்ளுவ நாயனார். மணிமேகலைக் காப்பியம், பசியை, "பசிப்பிணி என்னும் பாவி"என்று பசியின் கொடுமையைச் சொல்வது மட்டும் அல்லாமல்,"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் அன்னதானத்தின் சிறப்பையும் சொல்கிறது.

 

     மணிமேகலை என்னும் துறவிக்கு, பிறருக்கு உபதேசம் செய்வதை மேற்கொள்ளவில்லை. எல்லோருக்கும் பயன்படுகிற ஒரு காரியத்தை அவள் மேற்கொண்டாள். அவளுக்கு "அமுதசுரபி" ஒன்று கிடைத்தது. பசித்தோர் எல்லோருக்கும் சோறு கொடுத்தார். அமுதசுரபியில் சோறு அளித்த, ஆதிரை என்பாளும், "பாரகம் முழுவதும் பசிப்பிணி அறுக" என்று சொல்லி இட்டாள் என்கின்றது காப்பியம். ஆதிரைக்கு எவ்வளவு பேராசை பாருங்கள். உலகம் முழுவதும் பசி இல்லாமல் வாழவேண்டுமாம்.

 

     தமது நாட்டில் எந்த நிகழ்வாக இருந்தாலும், அன்னதானம் இல்லாமல் இருக்காது.பசித்து வந்தவர்க்கு அன்னம் அளிப்பது சிறந்த அன்னதானம். ஒருவன் ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கின்ற இடமே பசித்தவர் வயிறுதான் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். "அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி" என்றார்.

 

     இந்த அன்னதானமே தவம் என்கின்றார் அருணகிரிநாதர். திருவள்ளுவர் சொல்கிறார். "தவம் செய்கிறவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. ஆனால் அன்னதானம் செய்கிறவர்களுடைய ஆற்றலுக்கும் பின்தான் அதை நிறுத்த வேண்டும்" என்று அவர் சொல்கிறார். “ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்"  என்பது திருக்குறள். தவம் செய்கிறவனுடைய ஆற்றல் பெரிதுதான். அவன் தன்னுடைய ஊனை உருக்கி உண்ணாவிரதம் இருக்கிறான். உடம்பை வருத்தித் தவம் செய்கிறான். இந்திரிய நிக்கிரகம் செய்கிறான். அந்த உண்ணாவிரதத்திற்கும் ஓர் எல்லை உண்டு. பசி மிகுந்துவிட்டால் தவம் செய்வாருடைய தவம் அழிந்துவிடும். இவர்கள் தாம் பட்டினி கிடப்பார்கள். பிறர் பட்டினியைப் போக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். அன்னதானம் செய்கிறவனோ தன்னுடைய பசியைப் போக்கிக் கொள்வதோடு, பசித்து வருகிற மற்றவர்களுடைய பசியையும் போக்கி விடுகிறான். 

 

     'இடம்பட வீடு எடேல்' என்று ஔவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். வீட்டை இடம் அழியும்படி பெரியதாகக் கட்டாதே என்று பொருள். ஒரு பக்கத்தில் விளைச்சலை அதிகப்படுத்துங்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றொரு பக்கத்தில் நெல் விளைகிற வயல்களை அழித்துக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். விளைநிலம் அழிந்து போகிறது. அழிந்துபோகிறது.உடம்பை வளர்த்தற்கு உரியஅன்னத்திற்கு உரிய நெல் விளையாமல் போகின்றது. இது கூடாது. சிறுகக் கட்டிப் பெருக வாழவேண்டும் என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் நினைத்தார்கள்.

 

     நிறைய நெல் விளைந்தால் தான் அறம் செய்ய முடியும். பழைய காலத்தில் எல்லா மக்களும் சோம்பல் இல்லாமல் வேளாண்மை செய்தார்கள். பிச்சை கேட்கிறவன் ஒரே ஒருவன்தான். அவன் துறவி.இரவலர் என்ற பெயர் கலைஞர்களுக்கு உரியதாக இருந்தது. பாணர். புலவர், கூத்தர் ஆகிய இவர்கள் அங்கங்கே சென்று தமது கலைத் திறத்தைக் காட்டி வள்ளல்களிடம் பரிசு பெற்றார்கள். அவர்களை அன்றிப் பிறரிடம் பிச்சை என்று இரப்பவர்கள் மிக அரிது. நாளடைவில் அந்த நிலை மாறிப் பலர் பிச்சையெடுக்கும் நிலை வந்துவிட்டது. அருணகிரிநாதர் காலத்தில் பலர் பிச்சை எடுத்தார்கள் என்று தெரிகிறது. 

 

     உயிர் வாழ்வதற்கு உடம்பு வாழவேண்டும். உடம்பு அன்னத்தால் ஆனது என்ற உண்மை யாவருக்கும் தெரிந்தது. இந்த நாட்டில் தொழில் துறையில் மிகுதியான கவனம் செலுத்தவில்லை என்று குறை கூறுகிறோம். எத்தனை தொழில்கள் வளர்ந்தாலும் மனிதனுடைய மூலத் தேவையாகிய சோறு கிடைக்கவில்லை என்றால் மற்றத் தொழில்களினால் பலன் இல்லை. "உழந்தும் உழவே தலை" என்றார் நாயனார்.

 

     இராமாயணம் என்ற பெரும் காப்பியத்தைச் செய்த கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாருக்குச் சோறு அளித்து அவரைக் காப்பாற்றினார் சடையப்ப வள்ளல். இந்தப் புலவருக்கு அளித்ததைப் போல இன்னும் பலருக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்திருக்கிறார் அவர். ஒருநாள் அவரிடம் பரிசு பெற்றுப் போக ஒரு புலவர் வந்தார். அப்போது சடையப்ப வள்ளல் நெல் மூட்டைகளைத் தம் முடைய வீட்டுக்குள் கொண்டுபோய் அடுக்கிக் கொண்டிருந்தார். வரும் வழியில் வண்டியில் இருந்து நெல்மணிகள் சிந்தி இருந்தது. வள்ளல் அந்த நெல்லைப் பொறுக்கித் தம் மேல்துண்டில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த புலவர், "வீதியில் சிந்திக் கிடக்கிற நெல்லைப் பொறுக்கும் கருமியாக இருக்கிறாரே! இவர் நமக்கு எங்கே பரிசு கொடுக்கப் போகிறார்?" என்று எண்ணினார். புலவருடைய முகத்தைப் பார்த்தபோது சடையப்ப வள்ளலுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. சடையப்பர் அந்தப் புலவரைத் தம் வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிமையாகப் பேசிச் சாப்பிட்டுப் போக வேண்டுமென்று சொல்லி இலையைப் போட்டு உட்கார வைத்தார். ஆனால் இலையில் சோற்றை வைப்பதற்குப் பதிலாகக் கைநிறையப் பொன்னைக் கொண்டு வந்து வைத்தார். 

 

     அதைப் பார்த்த புலவர் முகத்தைச் சுளித்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவிதமாகப் பார்த்தார். நெல்லை விடப் பொன் உயர்ந்தது அல்ல என்று காட்டவே,  பொன்னைக் கொண்டுவந்து இலையில் இட்டார். புலவருக்கு உண்மை விளங்கியது."பொன்னால் உடம்பு வளராது. அரிசி உடம்பை வளர்க்கும் என்பதை உணர்ந்தேன்” என்றார் புலவர்.

 

     தமக்குச் சோறு அளித்த சடையப்பரைக் கம்பர் இராமாயணத்தில் பல இடங்களில் பாடியிருக்கிறார். மிகவும் முக்கியமான இடத்தில் அந்த வள்ளலைப் பற்றிய புகழை அமைத்திருக்கிறார். இராமாயணத்தை இந்த நாட்டில் சொற்பொழிவு செய்கிறவர்கள் இராம பட்டாபிஷேகத்தைச் சொல்லாமல் விடமாட்டார்கள். 

 

     யார் இராமாயணம் சொன்னாலும் இராமனுடைய புகழோடு சடையப்பர் புகழும் வரவேண்டும் என்று கம்பர் கருதினார். இராம பட்டாபிஷேகத்தைச் சொல்லும் பாட்டில் சடையப்பர் புகழைப் புதைத்து வைத்தார். இராம பட்டாபிஷேகத்தன்று விசுவாமித்திரர், வசிஷ்டர், அநுமன், சீதா பிராட்டி முதலிய எல்லோரும் சபையில் இருந்ததாகச் சொல்லலாம். அவற்றை கதைப் போக்கில் சொல்வது இயற்கை. சடையப்ப வள்ளலுக்கு அங்கே இடமே இல்லை. ஆனால், இடத்தை உண்டாக்கி விட்டார் கம்பர்.சடையப்பர் புகழை அந்தப் பாட்டில் மிகவும் நயமாகப் புகுத்தி விட்டார். 

 

"அரியணை அனுமன் தாங்க,

    அங்கதன் உடைவாள் ஏந்த,

பரதன் வெண்குடை கவிக்க,

    இருவரும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க,

    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுஉ(ள்)ளார் கொடுக்க வாங்கி,

    வசிட்டனே புனைந்தான் மௌலி".     --- கம்பராமாயணம்.

 

     சிங்காதனத்தை அநுமன் தாங்கினான். அங்கதன் உடைவாளை ஏந்திக் கொண்டிருந்தான். பரதன் வெண்கொற்றக் குடை பிடித்தான். இலக்குவனும் சத்துருக்கனனும் கவரி வீசினார்கள். சீதாபிராட்டி மிக்க பொலிவோடு இராமபிரான் அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது வசிட்டன் மகுடத்தைச் சூட்டினான் - இப்படிச் சொன்னாலே போதும். ஆனால் அங்கே சடையப்பர் புகழைக் கொண்டு வந்து இணைக்கிறார் கம்பர். "வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபு உள்ளோர் கொடுக்க வாங்கி." இராமபிரானுக்கு வசிட்டர் திருமுடியைச் சூட்டினார் என்கிறார். இராமபிரானுக்குச் சூட்டியமகுடத்தை சடையப்பருக்கு முன்னோர்கள் ஆகிய வேளாளர் மரபில் வந்தவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள் என்று பாடியிருக்கிறார்.  கம்பருடைய அன்புக்கு மூலகாரணம் சடையப்ப வள்ளலின் சோறே ஆகும். அன்னதானம் சடையப்பரை இராமனுக்குச் சமமாக நிமர்த்தி விட்டது. 

 

      என்னிடம் பொருள் சேர்ந்தால் நானும் அன்னதானம் செய்யலாம். அதற்கு வழி இல்லை. எப்படி அன்னதானம் செய்ய முடியும்?' என்று சிலர் நினைக்கலாம். அத்தகைய எண்ணம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவ பூர்வமான முறையில் ஒரு தந்திரத்தைச் சொல்லி அருள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

 

      நீங்கள் கொஞ்சம் சோறு கொடுத்தாலும் அது பெரிய சோறு ஆகிவிடும். ஒரு பிடி சோறு கொடுத்தால் மலையளவு சோறாகி விடும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் போக வேண்டிய தொலையா வழி ஒன்று இருக்கிறது.அந்த வழியில் இப்போது நீங்கள் கொடுக்கும் பிடி சோறு, கட்டுச் சோறாகி, வந்து சேரும்என்று அவர் சொல்கிறார். அரிசியில் பிளவு பட்டால் உண்டாவது நொய் அரிசி. அந்த நொய் அரிசியில் ஒரு பாதியையாவது பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள் என்று சொன்னார்.

 

     பலவித பண்டங்களோடுதான் விருந்து படைக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. வறுமை நிலையில் இருந்தவர்கள் கீரையைக் கறி ஆக்கி உண்டார்கள். தம்மிடம் இருந்த பொருள் அனைத்தும் வற்றய நிலையில், தன்னை நாடி வந்த அடியவர்க்கு அமுது படைக்க, இளையான்குடி மாற நாயானார் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரையைத் தான் தேர்ந்து எடுத்தார். வறியவர்கள் உப்பும் இல்லாமல் கீரையைச் சுண்டிச் சாப்பிட்டார்கள் என்று புலவர்கள் பாடி இருக்கின்றார்கள். மக்கள் எதையாவது வேகவைத்துச் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். அப்படி வெந்தது எதுவோ அதைக் கொடுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.பசி என்று வந்து கேட்கிற வறியவர்களுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள் என்று சொல்கிறார். பகிர்தலாவது தனக்கு உரியதில் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தல். பசி என்று தெருவில் வந்து நிற்பவனைப் பார்த்து,  நாளைக்கு வா. பாயசத்தோடு அமுது படைக்கிறேன்என்று சொல்வதைக் காட்டிலும் நொய்யாக இருந்தாலும்,வெறும் கீரையாக இருந்தாலும் இருக்கிறதை இருக்கிறபோதே முதலில் அவனுக்கு ஒரு பிடி கொடுத்துவிட்டு உண்ணுவதே உயர்வு.

 

     பணக்காரர்களுக்குத்தான் அறம் உண்டு. மற்றவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது. பசி எனக் கேட்பானுக்கு ஒரு பிடி அன்னமிட்டாலும் போதும். ஒரு பிடிதான் கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள மனிதனுக்கு அதுவே பெரும் பயனைத் தரும். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். அருணகிரியார் 

வெந்தது எல்லாவற்றையும் தானம் செய்து விடு என்று சொல்லவில்லை. உனக்கு வைத்துக் கொண்டு அவனுக்குக் கொடு. உனக்கு இல்லாமல் அவனுக்குக் கொடுக்க வேண்டாம். இரண்டு பேரும் கலந்து பகிர்ந்து உண்ணுங்கள் என்றே சொல்கிறார். 

 

     இப்படிச் செய்கிற தானமே தவமாகும் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார். அதை "அன்பின் நிலையான மாதவம்" என்கின்றார். புலன்களை அடக்கிச் செய்வதுதான் தவம் என்று எண்ணவேண்டாம். தவம் செய்கிறவனுடைய ஆற்றலைவிடப் பிறருடைய பசியைப் போக்குகிறவன் ஆற்றல் பெரிது என்னும் திருவள்ளுவர் கருத்தை மேலே கண்டோம். ஆகவே பசியைப் போக்கும் தவத்தை அன்போடு செய்து வந்தால், அதுவே "நிலையான மாதவம்" என்கின்றார் அருணை வள்ளலார்.

 

     பசித்து வந்தவருக்கு இலையாவது, வெந்தது ஏதாவது அன்போடு கொடுத்தால், அது பின்னால் பின்பு பொதி சோறாக விளையும்என்கின்றார். மரணம் வந்தபோது, உயிரானது தான் இருக்கும் உடலை விட்டுப் போகின்றது. இனிக் கவலை இல்லைஎன்று நினைக்க முடியாது. மற்றோர் உடம்புக்குப் போகிற பிறவி என்னும் வாசல் அடுத்து நிற்கிறது. மரணத்திற்குப் பின் உண்டாகிற நெடிய பயணத்திற்கு முடிவே இல்லை. இப்போது செய்கிற "நிலையான மாதவம்" அந்தப் பயணத்தில் பொதி சோறாகவும், உற்ற துணையாகவும் வந்து சேரும்.

 

     அறிவை மழுங்க அடிக்கிற, இந்திரியங்களைச் செயலற்றுப் போகும்படியாகச் செய்கிற பசியைப் போக்குவது சிறந்த தானம். இறைவனை எண்ணி அதைச் செய்தால் அதுவே தவமாகிவிடும். 

பலர் அன்னதானம் செய்கிறார்கள். அவர்களுடைய செயல் எல்லாம் தவம் ஆகிவிடும் என்று சொல்வதற்கில்லை. அவர்களுடைய மனத்தில் அவ்வாறு தானம் செய்வதற்குக் காரணமான உணர்ச்சி வேறாக இருக்கிறது. சிலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அன்னதானம் செய்கிறார்கள். அவன் செய்கிறானே நாம் ஏன் செய்யக்கூடாது? என்ற பொறாமையினால் சிலர் செய்யக்கூடும். சிலரோ, அப்படிச் செய்யாவிட்டால் ஊரிலுள்ளவர்கள் ஏசுவார்களே என்று எண்ணிச் செய்வார்கள்.இவை எல்லாம் தானம் ஆவதில்லை; தவமும் ஆவதில்லை. "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்"என்றும், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     அறத்தின்வழி ஈட்டிய பொருள் இறைவன் தந்தது என்று, மறவாமல் கருத்தில் இருத்தி, அப்பொருளை அடியார்கட்கும் வறியார்கட்கும் இறை திருப்பணிகட்கும் வழங்குதல் வேண்டும். 

வழங்காத வன்னெஞ்சர்கள்ப் பூமி தாங்குதற்குக் கூசும். அவர்களை ஏன் படைத்தாய் என்று கூறி இறைவனை நோக்கி வினவுகின்றார் பட்டினத்தடிகள்.

 

"நாயாய்ப் பிறக்கினும் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து,பின் சம்பன்னராய்,

காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சிஏகம்பனே".  --- பட்டினத்தார்.

 

    இறைவனுடைய நினைவோடு செய்கிற அறந்தான் "நிலையான மாதவம்" ஆகிறது. தர்மங்கள் செய்கிறபோது நம்மை நினைத்தால் ஆசை வளரும். அதுவே வெறும் கர்மம் ஆகிறது. இறைவனை நினைந்து செய்தால் அதுவே "கர்மயோகம்" ஆகிறது. கர்மயோகமும் ஒருவகைத் தவந்தான். 

 

     ஆகவே, நாம் பிறருடைய பசியைத் தீர்க்கும்போது இறைவனை நினைத்துக்கொண்டு அந்தச் செயலைச் செய்தால் வேறு எந்தவிதமான உணர்ச்சியும் வந்து தடைப்படுத்தாது. அதுவே தவமாக முடியும்.அன்பு இருந்தால் ஏழையைக் கண்டு ஏளனம் செய்யத் தோன்றாது. இறைவன் நினைவு உண்டாகும். மரணம் அடைந்த பிறகு செல்லும் வழிக்குத் துணையாக இருப்பது இந்தத் தவம் என்றார் அருணகிரிநாதர். மற்ற ஒன்றும் பற்றித் தொடராது. "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று பட்டினத்தார் சொன்னார். 

 

     நமக்கு வழித் துணையாகிய அறங்களில் சிறந்த அறம் ஈகை. ஈகையில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை இறைவன் நினைவோடு செய்யவேண்டும். செய்வது ஒரு பிடியாக இருந்தாலும் அதனால் உண்டாகிற புண்ணியம் மலையாக இருக்கும். இப்போது செய்கிற அறம் சிறிதாகத் தோற்றினாலும் அது பயனாக விளையும்போது பெரிதாக இருக்கும். மூடி வைத்திருக்கும் குடை சிறிதாகத் தோன்றலாம். வெயிலில் விரிக்கும் போது பெரிதாகத் தோன்றுகிறது. 

 

"மலைஆறு கூறுஎழ வேல் வாங்கினானை வணங்கி, அன்பின்

 நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும்

தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்; 

இலை.ஆயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்நு ஏற்றவர்க்கே".

 

என்று அருணகிரிநாதப் பெருமான் நமக்கு அருள் உபதேசம் புரிந்து நல்வழியைக் காட்டுகின்றார்.

 

இதன் பொருள் --- 

 

     (உலகத்தவர்களே! பசியோடு வந்தவர்க்கு நீங்கள் வழங்கியது) நீங்கள் இறுதியில் தொலையாத வழியில் செல்லும் நெடும்பயணத்துக்கு, எங்களைத் தேடிக்கொண்டு வருகின்ற கட்டமுதும், பொருந்திய உதவியும் ஆகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலால், உம்மிடத்தில் வந்து யாசித்தவர்க்கு இலைக்கறியையாவது, வெந்தது வேறு எதையாவது பங்கிட்டுக் கொடுத்து, கிரவுஞ்ச மலையானது வழிகாணப் பிளக்குமாறு வேலை விட்டு அருளிய முருகப்பெருமானை அன்புடன் பணிந்து, நிலைபெற்ற பெருந்தவத்தைச் செய்து வருவீர்களாக.

 

 

 

 

 

 

 

 

 

பொது --- 1038. காதில் ஓலைகிழிக்கும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

காதில் ஓலை (பொது)

 

முருகா!

அடியேன் மெய்ப்பொருளை அறிய அருள் புரிவாய்.

 

தான தான தனத்தம் தான தான தனத்தம்

     தான தான தனத்தம் ...... தனதான

 

 

காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்

     கான யாழின் மொழிக்கும் ......     பொதுமாதர்

 

காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்

     காதில் நீடு குழைக்கும் ......        புதிதாய

 

கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்

     கோவை வாய முதுக்குந் ...... தணியாமல்

 

கூரு வேனொ ருவர்க்குந் தேடொ ணாத தொரர்த்தங்

     கூடு மாறொ ருசற்றுங் ......        கருதாயோ

 

பூதி பூஷ ணர்கற்பின் பேதை பாகர் துதிக்கும்

     போத தேசி கசக்ரந் ......           தவறாதே

 

போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்

     போத ஆத ரவைக்கும் ......        புயவீரா

 

சோதி வேலை யெடுத்தன் றோத வேலை யில்நிற்குஞ்

     சூத தாரு வும்வெற்பும் ......        பொருகோவே

 

சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந்

     தோகை வாசி நடத்தும் ......        பெருமாளே.

 

பதம் பிரித்தல்

  

காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும்,

     கான யாழின் மொழிக்கும், ......     பொதுமாதர்

 

காணெ ஒணாத இடைக்கும், பூண் உலாவு முலைக்கும்,

     காதில் நீடு குழைக்கும், ......       புதிது ஆய

 

கோது இலாத கருப்பஞ் சாறு போல ருசிக்கும்

     கோவை வாய் அமுதுக்கும், ......   தணியாமல்

 

கூருவேன், ஒருவர்க்குந் தேட ஒணாத்து ஒர் அர்த்தம்

     கூடுமாறு ஒரு சற்றும் ......        கருதாயோ?

 

பூதி பூஷணர், கற்பின் பேதை பாகர், துதிக்கும்

     போத தேசிக! சக்ரம் ......          தவறாதே

 

போக பூமி புரக்கும் த்யாக! மோக குறப்பெண்

     போத ஆதர வைக்கும் ......        புயவீரா!

 

சோதி வேலை எடுத்து, அன்று ஓத வேலையில் நிற்கும்

     சூத தாருவும் வெற்பும் ......    பொருகோவே!

 

சூரர் சேனை அனைத்தும் தூளி ஆக நடிக்கும்

     தோகை வாசி நடத்தும் ......        பெருமாளே.

 

பதவுரை

  

     பூதி பூஷணர் --- திருநீற்றைத் திருமேனியில் அணிந்து உள்ளவரும்,

 

     கற்பின் பேதை பாகர் --- கற்பில் சிறந்தவர் ஆகிய உமாதேவியைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய சிவபரம்பொருள்,

 

     துதிக்கும் போத தேசிக --- போற்றுகின்ற ஞானாசாரியாரே!

 

     சக்ரம் தவறாதே போகபூமி புரக்கும் த்யாக --- நீதியில் தவறமல் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாகசீலரே!

 

     மோக குறப்பெண் போத ஆதர(ம்) வைக்கும் புயவீரா --- தேவரீர் மீது விருப்பம் நிறைந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தாங்கும் திருத்தோள் வீரரே! 

 

     சோதி வேலை எடுத்து அன்று ஓதவேலையில் நிற்கும் சூததாருவும் வெற்பும் பொருகோவே --- பேரொளி வீசும் வேலாயுதத்தை விடுத்துஅன்று அலைகடலில் நிற்கும் மாமரமாகிய சூரபதுனுடனும், (அவனுக்கு அரணாய் இருந்த) மலையுடனும் போர் புரிந்த தலைவரே!

 

     சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே --- சூரர்களுடைய படைகள் யாவும் பொடியாகும்படித் திருநடனம் புரியும் மயிலாகிய குதிரையை நடத்துகின்ற பெருமையில் மிக்கவரே!

 

      பொதுமாதர் காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் --- விலைமகளிர் தமது காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்துசென்று அவற்றைக் கிழிக்கின்றமன்மதனின் அம்பை ஒத்த கண்களுக்கும், 

 

      கான யாழின் மொழிக்கு ம்--- இனிய இசையை எழுப்பும் யாழினைப் போன்ற சொல்லுக்கும்,

 

     காண ஒணாத இடைக்கும் ---காண அரிதாக உள்ள நுண்ணிய இடைக்கும்,

 

     பூண் உலாவு முலைக்கும் --- அணிகலன்கள் அசைந்து ஆடுகின்ற முலைக்கும்,

 

     காதில் நீடு குழைக்கும் --- காதுகளில் நீண்டு தொங்குகின்ற குண்டலங்களுக்கும்,

 

     புதிது ஆய கோது இலாத கருப்பஞ் சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் --- புதிது போல விளங்குகின்ற, கோதுகள் இல்லாத கரும்புச் சாறு போல இனிக்கின்ற, கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயினிடத்து ஊறும் எச்சிலுக்கும்  

 

     தணியாமல் கூருவேன் --- தணியாத ஆசையை மிகுதியாகக் கொண்டு உள்ளேன். (அப்படிப்பட்ட அடியேன்)

 

      ஒருவர்க்கும் தேட ஒணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ --- யாராலும் தேடிக் காண முடியாத ஒப்பற்ற பொருளைக் கூடி இன்புறுமாறு, ஒரு சிறிதேனும் திருவுள்ளத்தில் கருத மாட்டாயோ?

 

பொழிப்புரை

 

     திருநீற்றைத் திருமேனியில் அணிந்து உள்ளவரும், கற்பில் சிறந்தவர் ஆகிய உமாதேவியைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய சிவபரம்பொருள், போற்றுகின்ற ஞானாசாரியாரே!

 

     நீதி தவறமல் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாகசீலரே!

 

     தேவரீர் மீது விருப்பம் நிறைந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தாங்கும் திருத்தோள் வீரரே! 

 

     பேரொளி வீசும் வேலாயுதத்தை விடுத்துஅன்று அலைகடலில் நிற்கும் மாமரமாகிய சூரபதுனுடனும், (அவனுக்கு அரணாய் இருந்த) மலையுடனும் போர் புரிந்த தலைவரே!

 

     சூரர்களுடைய படைகள் யாவும் பொடியாகும்படித் திருநடனம் புரியும் மயிலாகிய குதிரையை நடத்துகின்ற பெருமையில் மிக்கவரே!

 

     விலைமகளிர் தமது காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்துசென்று அவற்றைக் கிழிக்கின்றமன்மதனின் அம்பை ஒத்த கண்களுக்கும், இனிய இசையை எழுப்பும் யாழினைப் போன்ற சொல்லுக்கும்,காண அரிதாக உள்ள நுண்ணிய இடைக்கும், அணிகலன்கள் அசைந்து ஆடுகின்ற முலைக்கும், காதுகளில் நீண்டு தொங்குகின்ற குண்டலங்களுக்கும், புதிது போல விளங்குகின்ற, கோதுகள் இல்லாத கரும்புச் சாறு போல இனிக்கின்ற,கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயினிடத்து ஊறும் எச்சிலுக்கும்  தணியாத ஆசையை மிகுதியாகக் கொண்டு உள்ளவன் ஆகிய அடியேனும் யாராலும் தேடிக் காண முடியாத ஒப்பற்ற பொருளைக் கூடி இன்புறுமாறு, ஒரு சிறிதேனும் திருவுள்ளத்தில் கருத மாட்டாயோ?

 

 

விரிவுரை

 

பொதுமாதர் காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும்--- 

 

பொருளிலேயே நாட்டம் கொண்டு இருந்து, காமுகர்களைக் கவர்ந்து, தாம் தருகின்ற இன்பத்திற்கு விலையாகப் பெரும்பொருளைப் பெறுவதிலேயே நாட்டம் கொண்டு இருப்பவர்கள் விலைமகளிர் எனப்படுவர். பொருளிலேயே நாட்டம் இருக்கும். அன்பையும் அருளையும் ஒரு சிறிதும் கருதமாட்டார்கள். பொருளைக் கொடுத்துத் தம்மை மருவ வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கூடுவர். எனவே, பொதுமகளிர் எனப்படுவர்.

 

     பொதுவாகவே, பெண்களின் கண்களைக் காது அளவு ஓடிய கண்கள் என்று புலவர்கள் கூறுவார்கள். குலமகளிரின் கண் பார்வை அன்பு கலந்ததாக இருக்கும். "ஒன்று நோய் நோக்கு, ஒன்று அதற்கு மருந்து" என்றார் திருவள்ளுவ நாயனார். குலமகளிரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்ற பார்வை அதுவாக இருக்கும். ஆனால், விலைமகளிரின் பார்வை துறந்தோர் உள்ளத்தையும் தொளைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிலே அன்பு இருக்காது. காம உணர்வே மிகுந்து இருக்கும். எனவே, "காமபாண விழி" என்றார் அடிகளார்.

 

கான யாழின் மொழிக்கும்--- 

 

கானம் --- இசை. யாழிலிருந்து வெளிப்படுகின்ற இனிய ஓசையாது இனிமை தருவதாக இருக்கும். எனவே, "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ, இன்பம் சேர்க்கமாட்டாயா" என்று பாவேந்தர் அருமையாகப் பாடினார். உள்ளத்தில் கள்ளம் சிறிதும் இல்லாமல் பேசுகின்ற மொழி இனிக்கும். குழந்தைகள் அப்படி இருப்பார்கள். எனவே, தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர், குழல் இனிது, யாழ் இனிது என்பர் என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

காண ஒணாத இடைக்கும்---

 

உள்ளதோ இல்லையோ என்று தெளிந்து அறிய முடியாதபடி நுண்ணியதாக இருக்கும் இடை. அது ஒரு அழகு.

 

பூண் உலாவு முலைக்கும்--- 

 

பூண் --- அணி, கவசம்.

 

மார்பகத்தின் மீது கவசம் போல அணிகலன்களை அணிந்து இருப்பார்கள். 

 

காதில் நீடு குழைக்கும்--- 

 

குழை --- குண்டலம்.

 

புதிது ஆய கோது இலாத கருப்பஞ் சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும்---

 

பெண்களின் வாயிதழ் கோவைக் கனியைப் போன்று சிவந்து இருக்கும். விலைமாதர்கள், தாம்பூலம் தரித்துக் கொள்வதன் மூலம் தமது வாயிதழைச் சிவக்க வைத்துக் கொள்வார்கள். அந்த அழகில் காமுகர் மயங்குவர். அவர்களைக் கூடி இருந்து, அவர்கள் வாயில் ஊறுகின்ற எச்சிலைக் கருப்பஞ்சாறு போலக் கருதி உண்டு மகிழ்வார்கள் காமுகர்கள். "பாலொடு தேன் கலந்து அற்றே, பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்" என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பினால் ஊறுகின்ற எச்சில் இனிக்கலாம். விலைமாதரின் வாயில் ஊறுகின்ற எச்சில், அறிவு மயக்கத்தைத் தந்து, பின்னர் துன்பத்தை விளைவிக்கும். எச்சிலை அமுது எனக் கொள்வார்கள் காமுகர்கள். அது என்றைக்கும் புதிதாகத் தோன்றும் காம வயப்பட்டவர்க்கு.

 

தணியாமல் கூருவேன்--- 

 

தணியாத -- குறையாத, ஆறாத.

 

கூர்தல் -- உள்ளது மிகுதல்.

 

ஒருவர்க்கும் தேட ஒணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ --- 

 

அர்த்தம் --- பொருள். இங்கே பரம்பொருளாகிய இறையைக் குறிக்கும். பரம்பொருளின் தன்மை இன்னதுதான் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. ஊனக் கண்களால் தேடிக் காணவும் முடியாது. அதன் பெருமையை அடிகளார் பல இடங்களில் பாடி உள்ளார்.

 

"வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது

     வாய்விட்டுப் பேச ஒணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது

     மாயைக்குச் சூழ ஒணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூரம் ஆனது மாகத்துக்கு ஈறுஅது ஆனது

     லோகத்துக்கு ஆதி ஆனது..."             ---  திருப்புகழ்.

 

"காண ஒணாதது உருவோடு அருஅது

     பேச ஒணாதது உரையே தருவது

     காணு நான்மறை முடிவாய் நிறைவது ......பஞ்சபூதக்

காய பாசம் அதனிலே உறைவது

     மாய மாயுடல் அறியா வகையது

     காய மானவர் எதிரே அவரென ...... வந்துபேசிப்

பேண ஒணாதது வெளியே ஒளியது

     மாய னார்அயன் அறியா வகையது

     பேத பேதமொடு உலகாய் வளர்வது ...... விந்துநாதப்

பேரு மாய்கலை அறிவாய் துரியஅ

     தீத மானது வினையேன் முடிதவ

     பேறு மாய்அருள் நிறைவாய் விளைவது..."    --- திருப்புகழ்.

 

"மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

    மயானத்தான், வார்சடையான், என்னின் அல்லால்,

ஒப்பு உடையன் அல்லன், ஒருவன் அல்லன்,

    ஓர் ஊரன் அல்லன், ஓர் உவமன் இல்லி,

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

    அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்,

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

    இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே"

 

என்று அருமையாகப் பாடிக் காட்டினார் அப்பர் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

     இறைவன் மைபூசிய கண்களை உடைய உமாதேவியும் தானுமாக,கச்சி மயானத்தில் எழுந்தருளி இருப்பவனும்,  நீண்ட சடையினை உடையவனும் ஆவான்என்று கூறலாம். இந்த சொற்களில் அடக்கிவிடக் கூடிய தன்மைய்யை உடையவன் இறைவன் அல்ல. அவனுக்கு ஒப்பாக எந்தப் பொருளையும் காட்ட முடியாது. உலகப் பொருள்களில் ஒருவனாகவும் அவன் இல்லை. ஏகன் அநேகன் என்றார் மணிவாசகப் பெருமான். அவன் ஓர் ஊருக்கு உரியவனும் இல்லை. அவன் இன்ன தன்மையை உடையவன் என்றும், இன்ன நிறத்தை உடையவன் என்றும் நமது ஊனக் கண்களைக் கொண்டும், மனக் கண்ணைக் கொண்டும் காண முடியாது. அவனது திருவருளையே கண்ணாகக் கொண்டு மட்டுமே காண முடியும். அவனது திருவருளைப் பெறுவதற்கு முயல்வதை விடுத்து, அவன் இப்படிப்பட்டவன், இன்ன நிறத்தை உடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்ட இயலாது.

 

"ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே,

    அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே,

ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே,

    உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே,

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே,

    பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே,

காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே,

    காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே."

 

என்று அழகாக அருளிச் செய்தார் அப்பர் பெருமான்.

 

     நெற்றியில் கண்ணுடைய பெருமானே! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவரும் இல்லை.அடக்குவித்தால் அடங்கிப் போகாதவரும் ஒருவர் இல்லை. நீ  ஓட்டுவித்தால் ஓடாதவர் ஒருவரும் இல்லை. நீ உருகுவித்தால் உருகாதார் யாரும் இல்லை. நீபாட்டுவித்தால் பாடாதார் ஒருவரும் இல்லை. பணியச் செய்தால் பணியாதார் ஒருவரு இல்லை. நீ  காட்டுவித்தால் காணாதார் ஒருவரும் இல்லை. நீ காட்டவிட்டால் காணக் கூடியவர் யாரும் இல்லை.

 

     எனவே, அவனைக் காணவும், அடைந்து இன்புறவும் அவனது திருக்கருணையை வேண்டுகின்றார் அடிகளார்.

 

பூதி பூஷணர்--- 

 

பூதி - திருநீறு. பூடணம் என்னும் தமிழ் சொல், வடமொழியில் பூஷணம் என வழங்கப்படுகின்றது. பூண்டம் - அணிகலன். 

 

"மெய்யெலாம் திருநீறு சண்ணித்த மேனியன்" என்பார் அப்பர் பெருமான்.

 

கற்பின் பேதை பாகர்--- 

 

உமாதேவியைரக் குறிக்கும்.

 

துதிக்கும் போத தேசிக--- 

 

போதம் -- மெய்யறிவு, ஞானம்.

 

தேசிகன் --- குரு, ஆசான்.

 

"நாதா! குமரா! நம" என்று சிவபரம்பொருள் போற்றித் துதித்து, "சுசி மாணவ பாவம்" என்று பாம்பன் அடிகளார் கூறுகின்ற வகையில் மாணவ பாவத்தோடு இருந்து, "ஓதாய்" என்று சிவபரம்பொருள் கேட்டார். குருநாதனாக இருந்து, "சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும்" பகர்ந்த குருநாதன் முருகப் பெருமான். 

 

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.    --- தணிகைப் புராணம்.

 

"நாத போற்றி என, முது தாதை கேட்க,அநுபவ

ஞான வார்த்தை அருளிய பெருமாளே"  --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

                                                                                

"தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே!"     ---(கொடியனைய) திருப்புகழ்.


 "மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா...."                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

"சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா..."        --- திருப்புகழ்.

 

 பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்து அருளினார்.

 

"அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர, ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே."  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

"தேவார்ந்த தேவன்" என்று சிவபரம்பொருளைக் குறிப்பார் அப்பர் பெருமான். தேவதேவன் அத்தகைய பெருமான். மாணவ பாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

"தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்.                                                                                                                 

 

 "மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

     எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!"

 

 என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

"தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே".

 

 என வருவதும் அறிக. சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின், அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

"வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே."            --- திருமந்திரம்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.   --- அபிராமி அந்தாதி.

 

"தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே."  --- அபிராமி அந்தாதி.

 

"சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே."   --- சிவஞான சித்தியார்.

 

சக்ரம் தவறாதே போகபூமி புரக்கும் த்யாக--- 

 

சக்கரம் என்பது திருவாணாச் சக்கரத்தைக் குறிக்கும். அரச ஆணையை ஒருசக்கரமாகக் கூறுதல் மரபு. செலுத்தியவாறு எல்லாம் ஓடிச் சுற்றிச்செல்வதனால் சக்கரம் போன்றது அரசனது ஆணை.   போகபூமி என்பது சுவர்க்கத்தைக் குறிக்கும். சுவர்க்கத்தில் உள்ள தேவர்களைது நெறிமுறைப்படி காத்து அருள் புரிபவர் முருகப் பெருமான்.

 

தியாகம் --- கொடை.

 

சோதி வேலை எடுத்து அன்று ஓதவேலையில் நிற்கும் சூததாருவும் வெற்பும் பொரு கோவே--- 

 

சோதி வேல் --- ஒளி பொருந்திய வேல். ஒளி என்பது அருளைக் குறிக்கும். இருள் என்பது துன்பத்தைக் குறிக்கும்.

 

சூத தாரு --- மாமரம். மாமரமாகக் கடலில் நின்றவன் சூரபதுமன். தரு என்றால் மரம். தாரு என நீண்டது.

 

கரிய நிறத்தை உடைய அசுரனாகிய சூரபதுமன் தேவர்களை சிறைவிடுத்து வணங்காது இருந்தமையால்,கொடுமை நிறைந்த அசுரர்களுடைய தேர், யானை, குதிரை, காலாள் என்ற நால் வகைப் படைகளையும் அடியோடு அழித்து, பானுகோபன் முதலான அக்கினி முகன், இரணியன், வச்சிரவாகு, மூவாயிரவர் என்னும் சூரபதுமனுடைய மக்களோடு, சிங்கமுகா சூரனையும் வென்று வெற்றி மாலை சூடி, பூவுலத்திற்கு ஆடைபோல் சூழ்ந்து உள்ள கடலில் புதிய மாமரமாக நின்ற நெடிய சூரபதுமனுடைய உடலை, ஒளி மிக்க வேலை விடுத்து அருளிஇரு கூறு ஆக்கினார் முருகப் பெருமான்.  சூரபதுமனுடைய உடல் பிளந்ததனால் இரு பகுதியாய், அவற்றுள் ஒரு பகுதி வலிமை மிக்க மயிலும், மற்றொரு பகுதி சேவலும் ஆகி, சிறப்புடன் ஆரவாரித்து எழுந்து விளங்குதலும், அவ்விடத்து விளங்கிய அந்த இரண்டு பகுதியுள், சீறுகின்ற பாம்பை மோதி அழிக்கும் அழகுடைய மயிலை வாகனமாகக் கொண்டு அதன் மீது ஏறி செலுத்தினார். உடல் மாறி வந்த சேவலாகிய பகைவனை,  வெற்றி பொருந்திய பெரும் கொடியாக ஆக்கி, அதனைப் பிற கொடிகளுக்கு எல்லாம் மேலாக உயர்த்தினார்.

 

சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே --- 

 

தோகை என்பது முருகப் பெருமான் அமர்ந்து அருளும் வாகனம் ஆகிய மயிலைக் குறித்தது. வாசி என்பது குதிரையை. வேகமாகச் செல்லுகின்ற மயிலை, "தோகைவாசி" என்றார் அருணை வள்ளலார்.

 

மயிலின் பெருமையைக் குறித்து, "முது திகிரிகிரி நெரிய வளைகடல் கதற, எழுபுவியை ஒருநொடியில் வலமாக ஓடுவது" என்று அருளினார் சீர்பாத வகுப்பில் அடிகளார்.

 

"சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி

   பட்டு க்ரவுஞ்ச சயிலம்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு

   தனி வெற்பும் அம்புவியும் எண்

 

திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு

   சித்ரப் பதம் பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெம்சூரர்

   திடுக்கிட நடிக்கும் மயிலாம்.."

 

என்றும்,

 

"உக கோடி முடிவில் மண்டிய சண்டமாருதம்

   உதித்தது என்று அயன் அஞ்சவே

ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள

   லோகமும் பொன் குவடு உறும்

 

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து இரு

   விசும்பில் பறக்க விரிநீர்

வேலை சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை

   வீசிப் பறக்கும் மயிலாம்"

 

என்றும் மயில் விருத்தத்தில் அடிகளார் முருகப் பெருமானின் வாகனம் ஆகிய மயிலின் சிறப்பைக் கூறுமாறு காண்க.

 

கருத்துரை

 

முருகா! அடியேன் மெய்ப்பொருளை அறிய அருள் புரிவாய்.

மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...