எட்டி பழுத்து என்ன? - ஈயாதார் வாழ்ந்து என்ன?

 


எட்டி பழுத்து என்ன?- ஈயாதார் வாழ்ந்து என்ன?

---

 

     மனிதன் தனியாக வாழ்வது இல்லை. அவன் சமுதாயத்தில் ஒருவனாகவே வாழ முடியும். சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டம். தனி மனிதன் நல்ல வழியில் ஒழுகி வந்தால், அவன் சார்ந்து உள்ள சமுதாயம் சிறப்பான வழியில் வாழும். முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக ஒவ்வொரு மனிதனும் தனித்தனி மன இயல்பு உடையவனாக இருக்கிறான். சமுதாயம் என்பது தொகுதியாகப் பார்க்கும் போது, ஒன்றாகத் தோன்றினாலும், ஒவ்வொரு மனிதனும் தனித் தனி நிலையில் இருக்கிறான். ஒருவன் கல்வி கற்றிருக்கிறான். மற்றொருவன் செல்வம் பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு மக்கட்செல்வம் இருக்கிறது. வேறு ஒருவனுக்கு அது இல்லை. ஒருவன் குடும்பம் ஒற்றுமையாக வாழ்கிறது. வேறு வீட்டில் அப்படி இல்லை. மனைவியிடம் அன்பு உள்ளவனும், அன்பு இல்லாதவனும் அருகருகில் மட்டுமல்ல, ஒரே வீட்டிலும் கூட வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் இப்படி வேறுபாடான நிலையும்,இயல்பும் கொண்டுள்ளது. 

 

     ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குறை இருக்கும். அந்தக் குறையை அவரால் நீக்கிக் கொள்ள முடியாதபோது, அதனை நீக்குகின்ற ஆற்றல் உடையவர் அவருக்கு உதவி செய்ய வேண்டும். பள்ளமும் மேடும் இருக்கிற இடத்தில், மேட்டிலுள்ள அதிக மண்ணைப் பள்ளத்தில் போட்டு நிரவினால் நிலம் சமம் ஆகிவிடும். அதுபோல, யார் யார் எந்தப் பொருளை நிரம்ப பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் அதைப் பெறாதவர்களுக்கு உதவி செய்யவேண்டும். இப்படி உதவி செய்வதுதான் அறம் என்று சொல்வார்கள். கையிலுள்ள பணத்தைக் கொடுப்பது மாத்திரம் ஈகை அல்ல. தான் கற்ற கல்வியைப் பிறர் அறியக் கொடுப்பதும் ஈகைதான். தம்முடைய ஆற்றலைப் பிறருக்குப் பயன்படுத்துவதும் ஈகைதான். தொண்டு செய்வதும் ஒரு வகையில் ஈகையே ஆகும். இப்படித் தம்மிடம் இருக்கிற ஆற்றலையும், பொருளையும், கல்வியையும் பிறருக்குக் கொடுக்காமல் இருப்பது பாவம் என்று நம்முடைய பெரியவர்கள் கருதினார்கள். ஒளவைப் பாட்டி, "இயல்வது கரவேல்"என்று பாடி, 'உன்னால் இயன்றதை ஒளிக்காதே'என்று அறிவுறுத்தினார். "கெடுவாய் மனனே! கதிகேள். கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்" என்று அறிவுறுத்தி, அதன் பலனாக, "சுடுவாய் நெடு வேதனை தூள் படவே" என்று காட்டினார் அடிகளார் கந்தர் அனுபூதியில்.

 

     உலகில் பொருள் உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடத்திலிருந்து பொருளைப் பெற்று நன்கு வாழ்வதற்கு உரிய நிலையில் உள்ளவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், பொருள் உடையவன் பொருள் இல்லாதவனுக்கு ஈவது இல்லை. அதற்குக் காரணம், அவன் தனது முயற்சியினால் ஈட்டப் பெற்றது தன்னிடத்தில் உள்ள பொருள் என்ற எண்ணத்துடன் இருக்கிறான். தான் ஈட்டியதைத் தானே உரிமையுடன் அனுபவிக்க வேண்டுமென்று நினைக்கிறான். 

 

     தன்னுடன் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் அதைக் கொடுக்கிறான். மனைவி மக்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுக்கிறான். சில மக்கள் தாம் உண்ணாவிட்டாலும் தம்முடைய மனைவி மக்களுக்கு நிரம்ப அளிக்கிறார்கள். மனைவியும் மக்களும் அந்தப் பொருளை ஈட்டவில்லை. ஈட்டியவன் அவன்தான். தான் ஈட்டியதைத் தானே அனுபவிக்க வேண்டுமென்று நினைக்கிற அவன், அந்தப் பொருளை ஈட்டுவதில் சிறிதும் பங்கு பெறாத மனைவி மக்களும் அனுபவிக்கும்படி பயன்படுத்துகிறான். இதற்குக் காரணம், அவர்கள் மீது கொண்ட அன்பு என்று கூறலாம்.  உண்மையில்,  மனைவி மக்களால் தான் இன்பம் அடையலாம் என்ற நினைவு; அவர்களுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு, அவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்ற நினைவை உண்டாக்குகிறது. 

 

     தனக்குத் தானே இன்பம் பெறுகிற நிலை மனிதனுக்கு இல்லை. பிறரால்தான் இன்பம் வருகிறது. தனக்கு இன்பம் தருகிறவர்கள் தன் மனைவி மக்கள் என்று நினைந்து, தான் ஈட்டிய பொருளை அவர்களுக்குக் கொடுக்கிறான். உலகத்திலுள்ள சமுதாயம் அத்தனையும் நமக்கு இன்பம் தரும் என்ற நினைவு வந்தால், எல்லோருக்குமே தான் ஈட்டிய பொருளை வழங்குவான். 

 

     தன்னுடைய மனைவி மக்கள் துன்பப்படும்போது பார்த்துக் கொண்டிருக்க எவனுக்கும் மனம் வருவது இல்லை. அவர்களுடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக எண்ணுகிற இயல்பு இயற்கையாக அமைகிறது. அப்போது உள்ளம் கசிகிறது. அந்தக் கசிவு காரணமாக கஞ்சத்தனத்தை விட்டு, தன்னிடத்திலுள்ள பொருளை அவர்களுக்குப் பயன்படுத்தும் எண்ணமும் தோன்றுகிறது. 

 

     தான் ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக் கொள்வது பற்று. தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க மூலமாக இருப்பது அன்பு. பற்று என்பது ஒருவகையான திண்மை. அன்பு என்பது ஒருவகையான நெகிழ்ச்சி. நெகிழ்ச்சி இன்மையினால் மனம் பொருள்களைப் பற்றிக் கொள்கிறது. அதில் நெகிழ்ச்சி உண்டாகி விட்டால், பொருள்கைளப் பிறருக்கும் பயன்படுத்தும் நிலை வருகிறது. 

 

     குழந்தை மிகவும் பிடிவாதம் செய்து ஒரு பொம்மையைப் பெற்றுக் கையில் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. வேறு ஒரு குழந்தைக்கு அதைக் கொடுத்துவிடு என்று சொன்னால், கொடுக்காமல் வன்மையாகப் பற்றிக் கொள்கிறது. ஆனால், அந்தக் குழந்தை தூங்கத் தொடங்கினால், எவ்வளவு இறுகப் பற்றிக்கொண்டிருந்தாலும் அந்தப் பொருளை நெகிழவிட்டு விடுகிறது. அதுபோல், மனிதன் தன்னுடைய மனத்தில் நெகிழ்ச்சி இல்லாமல், கல்லைப் போன்ற வன்மையைப் பெற்றிருந்தால், நல்ல பொருள்களை எல்லாம் இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மை உடையவனாக இருக்கிறான். அப்படியின்றி மனம் கசிவு பெற்றால், பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நினைவு உண்டாகிறது. பெரும்பாலான மக்களுக்குத் தம்முடைய மனைவி மக்கள் என்று கசிவு ஓரளிற்கு இருக்கிறது. இந்தக் கசிவு விரிவு பெற்றால், மனைவி மக்கள்  அல்லாத பிறருக்கும் தம்முடைய பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நினைவு ஏற்பட்டுவிடும். 

 

     ஆகவே, மனிதன் பொருளை ஈட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஈட்டிய பொருளைப் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நினைவு வேண்டும். அந்த நினைவுக்குக் காரணமாக இருப்பது உள்ளக் கசிவு. மனிதனுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு அதைக் கொடுக்கலாம் என்ற வகையில் அந்தக் கசிவு அவன் உள்ளத்தில் நிலவுகிறது. அது பின்னும் விரிய வேண்டும்.  பலருக்கும் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாக வேண்டும். உள்ளம் கசிந்து தான் ஈட்டிய பொருளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நிலை வருவதற்கு மிகவும் அருமையான வழியை அருணகிரிநாதப் பெருமான் சொல்கிறார். 

 

     உலகத்தில் எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாவருமே ஒரே வகையில் சிரமப்பட்டுப் பொருளை ஈட்டுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவர்களைக் காட்டிலும் மிக்க உழைப்பை மேற்கொள்கிற மக்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். கல்வி ஆற்றல் உடையவர்கள் பொருள் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஒரே வகையில் திட்டமிட்டு ஒரே முறையில் இரண்டு பேர்கள் உழைத்து வருகிறார்கள். ஆனால், இருவருக்கும் ஒரே வகையில் பொருள் கிடைப்பதில்லை.  ஒருவன் சிறந்த செல்வனாக இருக்க, மற்றொருவன் கையில் உள்ளதையும் இழந்து வறியவனாகப் போகிறான். நினைத்ததை நினைத்தபடியே திட்டமாக ஈட்டுகிற வாய்ப்பு, பொருள் முயற்சியில் கிடைப்பது இல்லை. கணக்கும் முறையும் தெரிந்தால் பொருளை அடையலாம் என்றால், எல்லோருமே பொருளை ஈட்டிவிடுவார்கள். நம்முடைய அறிவுக்கு எட்டாத ஒன்று இந்தப் பொருளை ஈட்டுவதற்குத் துணையாக இருக்கிறது. பொருள் குவிவதும், அழிவதும் அவரவருடைய முன்னை வினைப் பயனால் நிகழ்கின்றது  என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த முன்னை வினைப்பயனை நமக்கு ஊட்டுவது இறைவன். எனவே, ஒருவன் பெற்ற செல்வம் இறையருளால் வந்தது. 

 

"பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை, பிறந்து மண் மேல் 

இறக்கும் போது கொண்டு போவது இல்லை, இடை நடுவில் 

குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று, கொடுக்க அறியாது 

இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே"

 

என்கின்றார் பட்டினத்து அடிகளார்.

 

     ஆகவே, நாம் ஈட்டிய பொருள் நம்முடைய முயற்சியால் வந்தது என்று நினைப்பதே தவறு. நம்முடைய ஆற்றல் நமக்கு உதவுகிறது என்று எண்ணுவதும் தவறு. நம்மையெல்லாம் கருவியாக்கி ஏதோ ஒர் ஆற்றல் இயக்குகிறது என்ற நினைவு வந்தால், இந்தப் பொருள் நாம் ஈட்டியது அல்ல என்ற நினைவு உண்டாகும். எல்லாம் இறைவன் திருவருளால் வந்தது என்ற நினைவு வரவேண்டும். உலகிலுள்ள எல்லாப் பொருளையும் ஆட்டி வைத்து, அவரவர்களுடய புண்ணிய பாவப் பயன்களுக்கு ஏற்ற அனுபவத்தைக் கூட்டி வைத்து, அருள் செய்கிற பரம்பொருள் ஒன்று உண்டு என்ற நினைவு வந்தால்,  நம்முடைய நெஞ்சம் கசியும். பரம்பொருளின் நினைவை உடையவர்கள் அதற்கு முன்பு எவ்வளவு கடுமையான உள்ளம் உடையவர்களாக இருந்தாலும், இறை அன்பு முதிர முதிர அவர்கள் உள்ளம் நெகிழும்.

 

     மரத்தில் மாங்காய் இருக்கிறது. அது பார்க்கப் பச்சையாக இருக்கிறது. அதன் சுவையோ புளிப்பு. மரத்திலிருந்து அதைப் பறித்தால், மரத்தினின்றும் பிரிவதற்கு மனம் இல்லாமல் காய் கண்ணீர் வடிப்பதுபோலப் பால் வடிகிறது. அந்தக் காய் முதிர்ந்து பழுக்கும்போது, அதனிடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. பசுமை நிறம் மாறி, பால் வற்றி, மஞ்சள் நிறம் உண்டாகிறது. கடுமை மாறி நெகிழ்ச்சி ஏற்படுகிறது. புளிப்பு மாறி இனிப்பு உண்டாகிறது. வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் மரத்திலுள்ள பிடிப்பு மாறி, அது தானே உதிர்ந்து விடுகிறது. 

 

     தன்னிடத்து உள்ள பொருள்களை எல்லாம் தன்னுடைவை என்று பற்றிக் கொண்டு, தன்னுடைய முயற்சியால் எல்லாவற்றையும் ஈட்டியதாக எண்ணி இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இறைவனிடத்தில் அன்பு உண்டானால், இத்தகைய மாற்றம் நிகழும். அவனுடைய உள்ளம் ஆருயிர் எல்லாவற்றிலும் அன்பு உடையது ஆகும். அதன் பயனாக உலகியல் பொருள்களிலுள்ள பற்று மெல்ல மெல்ல நழுவும். தனது பொருளால் எல்லோருக்கும் பயன் உண்டாக வேண்டுமென்ற நயம் ஏற்படும். "பயன் மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால், செல்வம் நயன் உடையான்கண் படின்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     உண்மையான பத்திக்கு உயிர்க் கருணை சிறந்த அடையாளம். ஜீவதயை இல்லாவதர்கள் இறைவனிடம் பத்தி உள்ளவர்களாக இருக்க முடியாது. விடியற்காலையில் எழுந்து நீராடித் திருநீறு அணிந்து கொண்டு, உருத்திராட்சம் தரித்து, சிவபூசையை விரிவாகச் செய்து, தேவார திருவாசகங்களை ஒதிக் கண்ணிர் விடுகிறவன், தன் வீட்டுக்கு வெளியில் வந்து நின்ற ஏழைகளைக் கோபிப்பானானால் அவன் விட்ட கண்ணிர் பொய் என்று வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை நினைந்தே,

 

செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்

     நெறியாரே! திருடிக் கொண்டே

எழும் கள்ளர் நல்ல கள்ளர்! பொல்லாத

     கள்ளர் இனி யாரோ என்றால்,

கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடும் கள்ளர்,

     திருநீறு குழைக்கும் கள்ளர்,

அழும் கள்ளர்,தொழும் கள்ளர்,ஆசாரக்

     கள்ளர் இவர் ஐவர் தாமே.    

 

என்கிறது "தண்டலையார் சதகம்" என்னும் நூல்.

 

இதன் பொருள் ---

 

     வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில், நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே! திருடிக்கொண்டு செல்லும் கள்ளர் எல்லாரும் நல்ல கள்ளர்களே.  எனில், தீய கள்ளர் யார்?என வினவினால், செல்வமுடைய கள்ளருடன் சேர்ந்து கும்பிடும் கள்ளரும், திருநீறு குழைத்து இட்டுக் கொள்கின்ற கள்ளரும், அழுகின்ற கள்ளரும், தொழுகின்ற கள்ளரும் (என), ஒழுக்கத்திலே மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளராகிய, இந்த ஐவருமே தீய கள்ளர் ஆவர்.

 

     ஆசாரக் கள்ளர், ஒழுக்கம் உடையார்போல நடித்து மக்களை நம்பச் செய்து ஏமாற்றுவதால் இவர்களைக் கண்டு பிடித்தல் அரிது. இவர்களால் ஒழுக்கம் உடையோரையும் மக்கள் நம்பமாட்டார்கள். ஆகையால் வெளிப்படையாகத் திருடர் எனப் பெயர் பெற்றோர் நல்லவராகவும், இவர் தீயராகவும் கொள்ளப்பட்டனர். கொழுங்கள்ளர் என்போர், செல்வம் இருந்தும் இல்லார்போல நடித்திடுவோர். நல்ல தோற்றம் உடையராகக் காணப்பட்டு மக்களை ஏமாற்றுவோர். நன்னெறியில் வெறுப்பு உடையவராய் இருந்தும், அதனை வெளியில் காட்டாது மறைத்து ஓழுகுகின்ற வஞ்சகர். உண்மையாக இறைவன் அன்பு நெஞ்சில் இருக்குமானால் அந்த நெஞ்சு உருகும். உருகுவதற்கு முன் நெகிழ வேண்டும். அது முதல் நிலை. 

 

     தன்னுடைய குற்றங்களையும், அவை காரணமாக இறைவனுடைய திருவருளைப் பெறாமல் இருக்கும் இழிந்த நிலையையும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ வேண்டும். பின்பு இறைவனது பெருமையையும் கருணையையும் எண்ணி உருகவேண்டும். நெகிழ்வது, உருகுவது இரண்டும் இருவேறு நிலை. "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக"என்றார் அருணகிரிநாதப் பெருமான். நெய் உருகி ஓடினால் எந்தப் பொருளும் அதில் சிக்காது. உருகிய நீர் பனிக்கட்டி ஆகும் போது அந்த நீரிலுள்ள பொருள்கள் பனிக்கட்டிக்குள் சிக்கிவிடும். மறுபடியும் உருகும்போது சிக்கிய பொருள்கள் எல்லாம் விடுதலை பெறும். 

 

     தேக அபிமானத்தால் இறுகிப் போன நெஞ்சில் உலகப் பொருள்கள் எல்லாம் சிக்கிக் கிடக்கின்றன. இறைவனுடைய திருவருட் பிரகாசத்தினால் நெஞ்சம் உருகும் போது, அதில் சிக்கிக் கொண்டிருக்கிற பொருள்கள் எல்லாம் விடுபடுகின்றன. இவை என்னுடைய பொருள் என்ற "மமகாரம்" என்னும் "புறப்பற்று" மாறிவிடுகிறது. பொருள்களிடத்தில் ஆசையும், அவற்றை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற பற்றும், பிறருக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமும் உண்டாவதற்கு மூலகாரணம் நெஞ்சில் உள்ள இறுக்கந்தான்.

 

     இறுக்கம் மாறி, இரக்கம் வந்தாலே, கசிவு ஏற்பட்டாலே, பொருளைப் பிறருக்கு உதவும் இயல்பு உண்டாகிறது. அந்தக் கசிவு உண்டாவதற்கான வழியை அருணகிரிநாதர் சொல்லித் தருகிறார். முருகப்பெருமானைப் பாடி உள்ளம் கசிய வேண்டும். இறைவன் பெரிய செல்வன். அருள் என்னும் பெரும்செல்வத்தை உடையவன் அவன். மனிதன் பிற உயிரைக் கண்டு இரங்கும் இரக்கம் ஆகிய அருள்,அவன் படைத்திருக்கும் பெரிய பொருளைவிடச் சிறந்தது.

 

"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் 

பூரியார் கண்ணும் உள"

 

என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. 

 

     பொருள் உள்ளவன் அதைப் பிறருக்கு ஈவதில் பலவகை உண்டு. அடுத்து அடுத்துக் கேட்கும் ஒருவனுக்கு ஈவது ஒரு வகை. ஒரு முறை கொடுத்தால் இன்னொரு முறை கொடுக்காது இருப்பது மற்றொரு வகை. யார் குறை உடையவனோ அவன் நேரே சொல்லாமல்,அவனுக்கு வேண்டியவர்கள் சொல்லப் பொருளைத் தருவது ஒரு வகை. அவனுக்கு இது வேண்டும் என்று தானாகவே உணர்ந்து கொண்டு வலிந்து கொடுப்பது ஒருவகை. 

 

     மிகச் சிறந்த ஈகை என்பது, பிறருடைய துன்பத்தைக் குறிப்பால் அறிந்து, தானே வலியச் சென்று ஈவதுதான். பலமுறை கேட்டுக் கொடுத்தால்,அது அவன் பலமுறை வருவதற்குக் கூலி கொடுப்பது போல ஆகும் ஒருவனுடைய வறுமையைக் குறிப்பினால் அறிந்து, 'இறைவன் திருவருள் நம்மிடத்தில் பொருளை வைத்திருக்கிறது. வேண்டியவர்களுக்கு வழங்குவதற்காகவே அது இருக்கிறது' என்று உணர்ந்து கொடுக்க முன்வருகிறவன் சிறந்த வள்ளல். 

 

     இறைவன் எல்லோரினும் சிறந்த வள்ளலாக இருக்கிறான். அவனிடத்தில் உள்ள அருட்செல்வம் பிறருக்குப் பயன்படுவதற்காகவே அமைந்தது. அருட்செல்வம் எப்படி வரும் என்பதை, "பாடுவார் பசி தீர்ப்பாய், பரவுவார் பிணி களைவாய்" என்னும் சுந்தரர் தேவாரத்தால் அறியலாம். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்கின்றார் அப்பர் பெருமான். "யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாங்க சீலம் போற்றி" என்று முருகப் பெருமானைப் போற்றினார் அடிகளார் திருப்புகழ்ப் பாடல் ஒன்றில்.

 

     முருகன் தன் அருட்செல்வத்தை வேடிச்சியாக வளர்ந்த வள்ளிநாயகியை நாடிச் சென்று வழங்கினான். அவன் ஈகையில் சிறந்தவன். அவன் கொடுத்த செல்வம் எல்லாவற்றிலும் சிறந்தது. மிகப் பெரிய செல்வத்தை, மிகப் பெரிய அருளோடு, மிகப் பெரிய ஈகையாக, மிகப் பெரியவன் ஆகிய இறைவன் வழங்கினான். அவனது பெருங்கருணையை நினைத்தால் நம்முடைய உள்ளம் கசியும். 

 

     உள்ளத்தில் அவன் நினைப்பு அழுந்துவதற்குப் பலவகையான சாதனங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று அவன் புகழைப் பாடுதல். பாடினால் உள்ளம் கசியும். அப்படிக் கசிந்தால் தன்னிடம் உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். முதலில் பொருளில் உள்ள பற்று அறவேண்டும். பின்பு பொருளைப் பிறருக்கு ஈயும் செயல் நிகழவேண்டும். 

 

     இறைவனைப் பாடுவதில் இரண்டு வகை உண்டு. பிறருடைய காது கேட்கப் பாடுவதும்,பிறர் மெச்சப் பாடுவதும் ஒரு வகை. பொருள் கருதிப் பாடுவது ஒரு தனிவகை. பாடினவுடன் நெஞ்சம் கசிய வேண்டுமானால் உள்ளன்போடு பாடவேண்டும். நெஞ்சம் எங்கும் ஓடாமல் பாடினால் அந்தப் பாட்டு நெஞ்சிலே பதிந்து நிற்கும். நெடுநாள் பிரிந்திருந்த தாயைக் கண்டு குழந்தை அம்மா என்று ஒடுகிறது. அந்த 'அம்மா' என்ற சொல், பலகாலம் பிரிந்திருந்த உணர்ச்சியை எல்லாம் சேர்த்து வெளிப்படுத்தும் சொல்.  அப்படி இறைவனிடத்தில் முறுகிய அன்பு உடையவர்கள் இறைவனைப் பாடினால், அந்தப் பாட்டு வெறும் சொல்லாக மாத்திரம் இராது. இறைவனுடைய புகழாக மாத்திரம் இராது. உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிப் பொங்கலே, உருக்கத்தோடு வெளிவரும். அதனால், "மெய்யன்பினால் பாடிக் கசிந்து" என்று சொன்னார். 

 

     "உள்ளபோதே கொடாதவர்" என்று சொல்கிறார். கொடுக்க வேண்டும் என்ற மனம் பலருக்கு இருப்பது உண்டு.  "என்னிடம் பணம் இருந்தால் நானும் கொடுப்பேன்" என்று சிலர் சொல்வது உண்டு.  ஆனால், அவர்களிடம் பணம் வரும்போது கொடுக்க மனம் வராது. இது ஒருவகை மாயை. கொடுக்க வேண்டும் என்ற மனம் உடையவனுக்கு அந்த எண்ணம் அழுத்தமாக இருக்கவேண்டும். அதனால்தான் ஒளவைப்பாட்டி, "அறம் செய விரும்பு"என்று சொன்னார். கொடுப்பதற்கு விருப்பம் அதிகமானால் எப்போது கொடுப்பதற்குரிய பொருள் வரும் என்று எதிர்பார்த்திருப்பான்.  வேளைக்குச் சோறு சாப்பிடுவது என்பது பசி இல்லாதவர்கள் செயல். பசி உடையவனுக்கு நேரம் காலம் இல்லை. எப்போதுஉணவு கிடைக்கின்றதோ, அந்தக் கணமே அவன் உண்பான். மிகவும் அலுத்துப் போனவனுக்கு இரவு வந்தால்தான் தூக்கம் வரும் என்பது இல்லை. அலுப்பு முற்றிய போது தூக்கம் வந்துவிடும். அப்படியே உள்ளத்தில் அறம் செய்யவேண்டுமென்ற நினைப்பு உள்ளவன் எப்போது எந்தப் பொருள் கையில் கிடைத்தாலும்,அதனைப் பிறருக்கு வழங்க முற்படுவான். 

 

     சிலருக்குச் சில சமயங்களில் கொடுக்க வேண்டும் என்ற நினைவு உண்டாகிறது. கொடுப்பதற்குரிய பொருள் வந்தாலோ அந்த நினைவு போய், பொருளின்மீது பற்று உண்டாகிறது. பத்து ரூபாய் கொடுக்க வேண்டுமென்ற நினைவு தோன்றும் போது கொடுத்துவிட வேண்டும். யோசித்தால், அடுத்த கணமே பத்து ரூபாய், ஐந்து ரூபாயாக ஆகிவிடும். பின்பு மெல்ல மெல்ல, இப்போது அவசியம் இல்லைஎன்ற நினைவு தோன்றும். இது மனித மனத்தின் இயற்கை. "உள்ளபோதே கொடாதவர்" என்று அருணகிரிநாதர் சொன்னார். உள்ளபோதே கொடுக்கதாவன், பின்பு கொடுக்கமாட்டான். அப்படி ஈயாதவர்கள் இன்ன இன்ன துன்பத்தை அடைவார்கள் என்று சொல்கிறார். 

 

     பணத்தில் பற்று உள்ளவர்கள் யாரும் அதை முழுமையாக அனுபவிப்பதில்லை. பழங்காலத்தில் பணத்தைப் பாதுகாப்பதற்கு வங்கிகள் இல்லை. பிறரிடம் கொடுத்து வைப்பதற்கோ நம்பிக்கை இராது. அதனால், பணத்தைப் பூமியில் புதைத்து வைப்பார்கள். தன்னிடம் பொருள் உள்ளபோதே கொடுக்காமல், பிறருக்குத் தெரியாமல் புதைத்து வைத்த மனிதன், அதைத் தான் பயன்படுத்திக் கெள்ளாமல் போய்விடுகிறான். பின்னாளில் வேறு எவனோ ஒருவனுக்கு அது கிடைக்கிறது. 

 

     ஈட்டிய பொருளைத் திருட்டில் கொடுத்து விடுகிறார்கள் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். பிறன் ஒருவன் ஈட்டிய பொருளை அவன் அறியாமல் கொள்வது திருட்டு. தன் தேவைக்கு மிகுதியான பொருளைப் பயன்படுத்துவது மற்றொரு வகைத் திருட்டு. 

 

     இறைவனை நினைந்து கசிந்து பிறருக்கு ஈயும் இயல்பு இல்லாதவர்கள் மேலும் மேலும் பணத்தை ஈட்டுகிறார்கள்.  அவர்கள் முன்செய்த பாதகத்தினால் இப்போது பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் குவிக்கிறார்கள். எப்படி எல்லாமோ குவித்த பொருளை, யாரிடத்தும் நம்பிக்கை இல்லாமையால் புதைக்கிறார்கள். அந்தப் புதையலைத் தம்முடைய காலத்திலேயே பிறர் திருட்டுத் தனமாக எடுத்துக் கொண்டு செல்ல, அதனால் ஏமாந்து போகிறவர்கள் உண்டு. அவர்கள் தம்முடைய வாழ்நாளில் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இறந்து போன பிறகு யாரோ ஒருவர் அதை எடுத்துக் கொள்வதும் உண்டு. இப்படித் திருட்டில் கொடுத்தவர்களுக்கு உண்டாகிற திகைப்புக்கு அளவே இல்லை. மனத்தில் கவலை மிகுதியாகிறது. அதனால் அவர்கள் உடம்பு இளைத்துப் போகிறது. 

 

     "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது "கொன்றை வேந்தன்" கூறுவது. தம்மிடத்தில் பொருள் இருக்கும் போது அதை வறியவர்களுக்கு ஈயாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தால், அவர்கள் தேடிய அந்தப் பொருளைத் தீயவர்கள் வலிந்து கைப்பற்றிக் கொள்வார்கள் என்பது இதன் பொருள். இதற்கு இப்படியும் பொருள் காணலாம். ஈயார் என்பது, ஈக்களைக் குறிக்கும். ஈக்கள் பல இடங்களுக்குப் பறந்து சென்று மலர்களை நாடி அவற்றிலுள்ள தேனைத் தேடிக் கொணர்ந்து தேன் அடை வைக்கின்றன. அவற்றின் தேட்டம்தான் தேன். (தேட்டு - தேடி வைத்தது). மலைப் பக்கங்களில் பாறைகளில் உள்ள பெரிய பெரிய தேனடைக்குக் கீழே பெருந்தீயை மூட்டி எரிய விடுவார்கள். தீப்பந்தங்களைத் தேனடையின் அருகில் கொண்டு செல்வார்கள். அதனால் ஈக்கள் தேனடைய விட்டு ஒடிவிடும்,பல ஈக்கள் இறந்து போகும். பிறகு தேனடையை எடுத்துக் கொள்வார்கள். ஈக்கள் தேடித் தொகுத்த தேனாகிய தேட்டை, தீயை உடையவர்களாகிய மக்கள் கொள்கிறார்கள். 'ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம்.

 

     தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு சிலர் நல்ல உடையை அணிவதில்லை. வயிறார உண்ணுவது இல்லை. பொருள் குறைந்துவிடும் என்ற எண்ணத்தால், போதிய அளவுக்கு உணவு கொள்ளாமையால் அவர்கள் உடல் நலியும். அவர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித் தம்மைத் தாமே வருத்திக் கொள்வார்கள். நிலையில்லாத பொருளைக் கொண்டு நிலையான பயனைத் தருகின்ற அறத்தைச் செய்தல் வேண்டும். இதனை அறிந்து,பொருளைக் கொண்டு நல்ல அறங்களையும் செய்யமாட்டார்கள். யாருக்கும் கொடுக்காமல், ஈட்டிய பொருளை எல்லாம் தாமே வைத்துக் கொண்டு பணம் காத்த பூதமாக இருப்பவர்கள் கடைசியில் அந்தப் பொருளை இழந்துவிடுவார்கள். இது உலக இயல்பு. இதை எதை வைத்து அறிந்து கொள்வது? நாம் அறிந்ததைக் கொண்டே தெளிந்து கொள்ளலாம் என்கின்றது "நாலடியார்".

 

"உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் 

கெடாஅத நல்அறமும் செய்யார் - கொடா அது 

வைத்தீட்டி னார்இழப்பர்; வான்தோய் மலைநாட! 

உய்த்தீட்டும் தேனீக் கரி."             --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     வானை முட்டும் அளவுக்கு மலைவளம் மிக்க நாட்டுக்குத் தலைவனே! அடுத்தவரை நெருங்க விடாதும், தானும் உண்டு மகிழாதும், பாடுபட்டுத் திரட்டிய தேனைப் பிறர் எடுத்துச் செல்வார்கள். தேனீக்கள் அழிந்து சாகும். அதுபோல,பாடுபட்டுத் தேடிய செல்வத்தைப் பிறர்க்கும் பகிர்ந்து உண்டு வாழாதார் வாழ்க்கையும், செல்வமும் அவர்களுக்கும் உதவாது. அடுத்தவர்களுக்கும் பயன்படாது பறிபோகும்.

 

     ” பெற்ற பொருளைக் கொடாமல் ஈட்டி வைத்து இழந்து ஏமாந்து வாடுபவர்கள் நிலை எவ்வளவு இரங்கத் தக்கது?. இப்படி வாழ்நாளை வீணாகச் செலவழித்துக் கடைசியில் மரணம் அடைகிறவர்களைப் பார்த்து, "தாம் பெற்ற பொருளை உள்ளபோதே கொடுக்காதவர்கள் இப்படி வீணாக இறந்து போகிறார்களே?' என்று அருணகிரிநாதர் இரக்கத்தால் பாடுகின்றார்.

 

"வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை, மெய்அன்பினால் 

பாடிக் கசிந்து, உள்ள போதே கொடாதவர், பாதகத்தால் 

தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து 

வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே." 

 

இதன் பொருள் ---

 

     குறவர் குலத்தில் அவதரித்த வள்ளிநாயகியின் கொங்கைகளை விரும்புகின்ற முருகப் பெருமானை, உண்மையான அன்பினால் உள்ளம் உருகிப் பாடித் துதித்து, கையில் பொருள் இருக்கும் காலத்திலேயே ஏழைகளுக்கும், இல்லாதவர்க்கும் கொடுத்து உதவாதவர்கள், பாதகமான பலவழிகளில் பொருளை ஈட்டி, தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்க விடாமல், மண்ணில் புதைத்து வைத்து, திருடர்களுக்குக் கொடுத்து, அதனால் உள்ளம் திகைப்பை அடைந்து, உடல் மெலிந்து, மனம் வாடி, தமது வாழ்நாளைப் பயனின்றி வீணாகக் கழிக்கின்றவர்களே ஆவார்.

 

 

 

 

 

ஆவிக்கு மோசம் வருமே

 


ஆவிக்கு மோசம் வருமே

-----

     

     பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால், அதன் சரியான பொருள் இன்னது என்று பலருக்குத் தெரிவது இல்லை. யாரிடத்தில் பயம் உண்டாகிறதோ அவரிடத்தில் பக்தியும் உண்டாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர்,  கடவுளிடம் பத்தி கொண்டு வழிபடுவதற்கு மூலகாரணம் பயம் என்று சொல்கிறார்கள். ஆதி மனிதன் இடியைக் கண்டு பயந்து, அதையே கடவுள் என்று போற்றினான் என்பார்கள். இவ்வாறு பயமும் பத்தியும் ஒரே பொருளிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பயபத்தி என்று சொல்வார்கள். 

 

     பயமுள்ள இடத்தில் போலிப் பத்தியே தோன்றும். உண்மையான பத்தி தோன்றாது. முரடன் ஒருவன் நம்மை அடிக்க வருகிறான். அப்போது அவனிடத்தில் நாம் பயந்து நயமாகப் பேசுகிறோம். பயத்தால் நயம் உண்டானதே ஒழிய, உண்மையில் நயம் என்பது இல்லை.அந்த ஆள் எதிரில் இருக்கிற வரைக்கும் பயத்துடன் இருந்து நயந்து போவது போல் காட்டிக் கொள்வதும் அவன் போன பிறகு ஏளனமாகச் சிரிப்பதும் கண்கூடு. 

 

     பூச்சாண்டியிடம் பயப்படுகின்ற குழந்தைக்கு அம்மாவிடம் அன்பு உண்டாகிறது. நோயிடம் பயம் உண்டாகும்போது,அதைத் தீர்க்கும் மருத்துவனிடம் அன்பு உண்டாகிறது. ஆகவே, பயம் ஒரிடத்திலும் பத்தி அதைத் தீர்க்கின்ற இடத்திலும் இருப்பது முறை. இப்படிப் பார்த்தால் இறைவனிடம் பத்தி வரும் போது அது பயபத்தியாக இருக்க வேண்டும். அதற்கு முன்பு பயம் உண்டாக வேண்டும்.அந்தப் பயம் வேறு ஒரிடத்தில் இருக்க வேண்டும். 

 

     மனிதனுக்குப் பலவகையான நிலைகளில் பயம் உண்டாகிறது. வயிற்றுப் பசிக்குப் பயந்து சாகிறான். மானத்திற்குப் பயப்படுகிறான். வறுமைக்குப் பயப்படுகிறான். இந்தப் பயங்களை எல்லாம் பெரிய வள்ளல்களால் தீர்த்துக் கொள்ளலாம். யாரிடமேனும் உணவு பெற்று உண்டு, பசியினால் உண்டாகும் பயத்தைப் போக்கலாம். உழைத்து வேலை செய்து பணம் சம்பாதித்து வறுமையினால் வரும் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். நல்ல மருத்துவரை அண்டி நோயினால் வரும் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். திருடர்களால் வரும் அச்சத்தைக் காவலர்களாலும், விலங்குகளால் வரும் அச்சத்தை ஆயுதங்களாலும் போக்கிக் கொள்ளலாம். இப்படி உலகத்தில் மனிதனுக்கு உண்டாகும் அச்சங்கள் பலவாக இருப்பதுபோல அவற்றைப் போக்கிப் பாதுகாத்துக் கொள்ளும் உதவிகளும் பலவாக இருக்கின்றன. 

 

     இப்படி வரும் பயங்களுக்கு எல்லாம் மேலான பயமாக, யாராலும் மாற்ற முடியாத அச்சமாக இருப்பது மரணபயம். இயமனால் உண்டாகும் துன்பத்தை உலகிலுள்ள யாராலும் நீக்க முடியாது. இன்ன காலத்தில் இன்னவனுடைய உயிரை அவன் உடம்பினின்றும் பிரிக்க வேண்டும் முன்னமே உண்டாக்கப்பட்ட என்ற வரையறையைக்கு ஏற்ப, அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிப்பதனால் கூற்றுவனுக்குக் "காலன்" என்று பெயர். அந்தக் காலத்திற்கு அணுவளவு முன்போ, பின்போ இல்லாமல் உயிரைப் பிரித்துக் கொண்டு போகிறவன் அவன். அவனால் உண்டாகும் பயத்தை உலகத்திலுள்ள யாராலும் தீர்க்க முடியாது. காலனுக்குக் காலனாக இருக்கும் ஒருவன்தான் தீர்க்க முடியும். ஆகையால்,காலனிடத்தில் பயமும், அது காரணமாகக் காலகாலனிடத்தில்பத்தியும் உண்டாக வேண்டும். அப்படி உண்டான பக்திதான் பயபக்தி என்று சொல்லப் பெறுவது. 

 

     அருணகிரிநாதப் பெருமான்,  திருவேளைக்காரன் வகுப்பு" என்னும் பாடலில்,"ஆன பயபத்தி வழிபாடு பெறும் முத்தி அதுவாக நிகழ் பக்த சன வாரக்காரனும்"என்று அடியார்களைப் பற்றிச் சொல்லும்போது "பயபத்தி" என்ற தொடரை வைக்கிறார்.

 

     மரணம் வந்துவிடுமே என்று பயந்து பக்தி செய்யும் நிலை மிகச் சிறந்தது. அப்போதுதான் அந்தப் பக்தி ஆழ்ந்து முறுகியதாக இருக்கும். நாம் இறைவனிடத்தில் ஓரளவு பக்தி பண்ணுகிறோம். ஆனால் பயபக்தி செய்வதில்லை. மரணத்தில் நாம் உண்மையான பயத்தைக் கொள்ளவில்லை. "மரணம் என்னும் பெரும்பாவி வந்திடுமே,அந்தோ!சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே" என்பார் வள்ளல்பெருமான்.

 

     மரண பயம் குறித்து நம்மால் தெளிவாக உணரும் தருணம் ஒன்று வரும். சில வீடுகள் எரிந்து விட்டன என்று செய்தித்தாள் வழியாகவோ, தொலைக்காட்சி வழியாகவோ அறிகின்றோம். அதனால் நமக்கு பயம் உண்டாவது இல்லை. ஆனால் அடுத்த வீட்டில் தீப் பிடித்துக் கொண்டுவிட்டது என்று ஒருவன் சொன்னால், நாம் அதைச் செய்தியாகக் கேட்டு நின்றுவிடுவது இல்லை. உடனே பயத்தால் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. நமது வீட்டுக்கும் அது வந்துவிடுமே என்று பயந்து,நெருப்பை அணைப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்ய ஒடுவோம். அதுதான் உண்மையான பயம், மரணத்தைப் பற்றிய செய்தி நமக்குத் தெரியும். ஆனால் அது நம்முடைய உடம்பில் ஊடுருவி பயத்தை உண்டாக்கவில்லை. 

 

     ஒருவன்தன்னுடைய மாடுகளை வாரத்திற்கு ஒருமுறை குளிப்பாட்டுவது வழக்கம். ஒரு நாள் மாடுகளை ஒட்டிக் கொண்டு தண்ணீர்த் துறைக்குப் பொகும் வழியில் பலநாள் பாராமல் இருந்த உறவினர் ஒருவர் வருகின்றார். அவரைப் பார்த்தவுடன், மாடுகளை அடுத்த நாள் குளிப்பாட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, அவரோடு வீடு திரும்புகிறான்.

 

     நாள்தோறும் நீராடும் பழக்கம் உடையவன் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளும் போது, வழியில் நீராட வசதி இல்லை. என்றால், ஏதோ கிடைப்பதை மட்டும் உண்டு, தண்ணீர் குடித்து, போக வேண்டிய இடத்தை அடைகின்றான்.

 

     இப்படி அத்தனை பேர்களுக்கும் தண்ணீர் அவசியம். "நீர் இன்றி அமையாது உலகு" என்றார் திருவள்ளுவ நாயனார். ஆனால், தண்ணீருக்காககாளைமாட்டுக்காரன் ஒருவாரம் காத்திருக்கலாம். நீண்ட பயணம் செல்கிறவன் மூன்று நாள் காத்திருக்கலாம். கை கழுவுகிறவன் சில நிமிடம் காத்திருக்கலாம். தண்ணீர் தாகம் உள்ளவன் அதைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்ளும் வரை பொறுத்து இருக்கலாம்.

 

     ஒருவனுக்கு உடம்பில் நெருப்புப் பற்றிக் கொள்கிறது. அவன் தண்ணீர், தண்ணீர் என்று ஒடுகிறான். அப்போது தண்ணீருக்குப் பதிலாக, அவனுக்குப் பிடித்தமான உணவுப் பண்டத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டான். தண்ணீர் தண்ணீர் என்றுதான் ஓடுவான்.

 

      மரணபயம் வந்துவிட்டால், தீப் பிடித்தவனுக்கு உண்டான உணர்ச்சி வந்துவிடும். உடனே அதற்கு மாற்றுத் தேடவேண்டும் என்னும் ஆர்வமும் வேகமும் உண்டாகும். ஆனால், நம்மில் பலரும் மரண பயத்தைப் போக்கும் வழியை நாடுவதில்லை.  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடுகின்றோம். மரணம் என்பது எந்த நேரத்தில் நமக்கு வருமோ தெரியாது. எமனுடைய வாய் திறந்து கொண்டிருக்கிறது. அந்த வாய் எப்போது மூடிக்கொள்ளும் என்பது நமக்குத் தெரியாது. 

 

"இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி

ஒருவுமின் தீயவை,ஒல்லும் வகையால்

மருவுமின் மாண்டார் அறம்".           --- நாலடியார்.

 

     இன்று வருவானோ? இல்லை, இன்னொரு நாள் வருவானோ? அல்லது என்றைக்கு வருவானோ?எமன் என்று எண்ணிக் கவலைப் படாதீர்கள். எமன் உங்கள் பின்னாலேயே நின்றுகொண்டு இருக்கின்றான், உங்கள் உயிரைக் கவர்ந்து போக அவன் எப்போதுமே தயாராக இருக்கின்றான் என்று எண்ணி, தீய செயல்களைச் செய்வதை விட்டு ஒழித்து, பெருமை தரும் அறச் செயல்களையே செய்து வாருங்கள் என்பது நாலடியார் கூறும் அறிவுரை.

 

     எவ்வளவு காலம் வாழ்ந்து இருப்போம், எப்போது, எப்படிச் சாவோம் என்பது யாருக்கும் தெரியாது. எனவேதான்,"யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்"என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். எந்தக் கணமும் மரணம் சம்பவிக்கும். ஆகையால்,ஒவ்வொரு கணமும் மரணத்தின் வாயிலில் இருப்பதாக எண்ணி உணர்ந்து,  அந்தஅச்சத்தைப் போக்கவல்ல பரம்பொருளின் திருவருளை நாடவேண்டும். முருகப் பெருமானுடைய திருவருளினால் மரணபயம் போகும் என்பதைத் தெளிந்து அவனை நம்பி அவன்பால் அன்பு செய்ய வேண்டும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     எத்தனையோ பேர் கோயிலுக்குச் செல்கிறார்கள். அவர்களில் பல வகையினர் இருக்கிறார்கள். பரம்பரையாக வந்த பழக்கம் காரணமாகக் கோயிலுக்குப் போய்த் தொழுவார் சிலர். கோயிலில் கிடைக்கும் பிரசாதம் முதலியவற்றில் ஆசைவைத்துச் செல்வார் சிலர். வீட்டில் உள்ளவர்களோ, பிறரோ செய்யும் வற்புறுத்தல் காரணமாகச் செல்பவர்கள் சிலர். ஏதாவது வேண்டுதல் காரணமாகச் செல்பவர் சிலர். இவர்கள் எல்லாம் உண்மையாக இறைவனைத் தொழுபவர்கள் ஆகமாட்டார்கள். இந்த உயிருக்கு ஒரு காலத்தில் மோசம் வந்துவிடும், நிச்சயமாக மரணம் என்று ஒன்று நம்மை அறியாமலே வந்து சேரும் என்ற பயத்தை உண்மையாக உணர்ந்து,  வாழ்க்கையை நன்னெறியில் செலுத்தி, இறைவனுடைய திருவடிகளைத் தொழுபவர்களே உண்மையான பத்திமான்கள்.

 

     பொருளுக்கு மோசம் வரும் என்று, வீட்டைப் பூட்டித்  தாழ்ப்பாளும் போடுகிறோம். பெட்டியை நன்றாகப் பூட்டியும் வைக்கின்றோம். போதாக் குறைக்கு வீட்டில் நாயை வளர்க்கின்றோம். காவல்காரனையும் வைக்கிறோம்.  நாம் சேமித்த பொருளுக்கு, நிலையற்ற பொன்னுக்கும் பொருளுக்கும் மோசம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவும் செய்கின்றோம்.

 

     நாம் பெற்ற பொருள்களுக்குள்ளேயே மிக அரியதான இந்த உயிரை அநியாயமாக இழந்துவிடக் கூடாது. உடம்பில் உயிர் இருப்பதால் பெறுகின்ற நன்மைகள் யாவும், உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய்விட்டால் அவ்வளவுதான். இந்த உடம்பின் உள்ளே குடி கொண்டு இருக்கும் உயிரினால் வருகின்ற நன்மைகளை எல்லாம் பெறாமல் உடம்பை விட்டுப் பிரிந்து போனால், உடம்பை எடுத்ததன் உண்மையான பயன் உண்டாகாது. உடம்பு இருக்கும்போதே மரண பயத்தைப் போக்குவதற்குரிய நெறியில் ஒழுக வேண்டும். அப்போதுதான் மரணபயம் நம்மிடம் இருக்காது.

 

     ஆவிக்கு மோசம் வரும் என்ற உணர்ச்சி வரவேண்டும். என்றால், பெரிய சாத்திரங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகத்தில் பிறந்த யாருக்கும், உடம்பில் உயிர் நில்லாது என்ற உண்மை நன்றாகத் தெரியும். கடவுள் இல்லை என்று சொல்லலாம். சொர்க்க நரகங்கள் இல்லை என்று சொல்லலாம். மோட்சம் இல்லையென்றும் சாதிக்கலாம். 

 

"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,

                        பசுஏது, பாசம்ஏது,

            பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,

                        பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும் இ(ல்)லை,

                        மனம்விரும்பு உணவு உண்டு, நல்

            வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி, நறு

                        மலர்சூடி, விளையாடி, மேல்

கரம் மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு

                        கலந்து மகிழ்கின்ற சுகமே

            கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்

                        கயவரைக் கூடாது அருள்"

 

என்று வள்ளல்பெருமான் காட்டிய கயவராகவும் கூட இருக்கலாம்.

 

     ஆனால்,உடம்பை விட்டு உயிர் போகாது என்று சொல்கிறவர் யாரும் இல்லை. உயிர் போய்விடப் போகிறது என்று நினைத்தாலே வருத்தம். உயிர் போகும்போது நமக்கு உண்டாவது பெருத்த வருத்தம். அத்தகைய வருத்தம் வரக்கூடாது என்று கருதி அதற்கு முன்பே இறைவன் திருவருளைப் பெற வேண்டும் என்ற உறுதியோடு அன்பு வழிபாடு செய்வதே உண்மையான பத்தி ஆகும். அந்தப் பத்திக்குக் காரணமாய் இருப்பது, எமன் வந்து உயிரைக் கொள்ளை கொள்ளுவானேஎன்ற பயம். உயிருக்கு மோசம் வருமே என்ற பயம்.

 

     நல்லதை நினைப்பதற்கும் தவம் புரிந்து இருக்கவேண்டும். முன்னை நல்வினைப் பயன் இருந்தால், அதன் பலனாக நல்ல எண்ணங்கள் நமக்கு உண்டாகும். "தவமும் தவம் உடையார்க்கு ஆகும்" என்பார் திருவள்ளுவ நாயனார். இறைவனிடத்தில் அன்பு செய்வதற்குக் காரணமாக இருக்கும் பயம் நமக்கு உண்டாக வேண்டுமானால்,அது பலகாலப் பழக்கத்தினால் வரவேண்டும். முன்பு செய்த பாவம் அத்தகைய பழக்கம் உண்டாகாமல் தடுக்கும். 

 

     எனவே,  இறைவனிடத்தில் பத்தி செய்து நலம் பெறுவதற்குத் தடையாக இருக்கின்ற தீவினையானது, ஆவிக்கு மோசம் வரும் என்பதை நாம் அறியாமல் இருக்கும்படி செய்கிறது. அந்த வினையைத் தீர்த்து அருள வேண்டும்என்று முருகப் பெருமானை வேண்டுகிறார் அருணகிரிநாதப் பெருமான்.  உயிருக்கு மோசம் என்பது எமனால் வரும் மரணம். அதனைத் தீர்ப்பது இறைவனுடைய திருவடி. அது அருள் வடிவமாக இருக்கின்றது. இறைவனுடைய அருள் மருளைப் போக்கும். ஆவிக்கு வருகின்ற துன்பத்தைப் போக்கும். ஆகையால் மரண பயத்திற்குப் பாதுகாப்பான ஆண்டவனுடைய பாதங்களை "அருட்பதங்கள்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"சாகாது எனையே சரணங்களிலே 

கா கா நமனார் கலகம் செ(ய்)யும் நாள்'"

 

என்று கந்தர் அனுபூதியில் பாடுகிறார். நான் சாகாமல் இருக்கும்பொருட்டு இயமன் எனது உடலில் இருந்து உயிரைப் பிரிக்கும்போது, எனக்கு உனது திருவடிகளில் இடம் தந்து காப்பாயாக என்று வேண்டுகின்றார். நமது வேண்டுதலும் இதுவாகவே இருக்கவேண்டும்.

 

     திருத்தணிகை மலை மீது எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைப் பார்த்து அருணகிரியார் இந்த வேண்டுகோளை வைக்கின்றார். அந்தத் திருத்தணிகை மாமலையில் நீர் நிலைகள் பல உண்டு. பல வாவிகள் அங்கே உள்ளன. அங்குள்ள வாவியில் காவிமலர் தினந்தோறும் பூக்கும். காவிமலருக்குக் 'கல்லாரம்'என்று ஒரு பெயர். காவிமலர் பூப்பதனால் 'கல்லார மலை' என்றும்,  'கல்லார கிரி' என்றும் அந்த மலைக்குப் பெயர் உண்டு. அதனால் அங்கே இருக்கிற பெருமானுக்குச் 'செங்கல்வராயன்'என்றும் பெயர். செங்கல்வம் என்பது செங்கழுநீர் மலருக்கு ஒரு பெயர். அத்தோடு நில வளமும் பொருந்திய திருத்தணிகை. ஆதலால்,வாவிக்கு அருகில் பரந்த வயல்கள் சுற்றி இருக்கின்றன. 

 

     முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருமலை என்பதால் பல அடியார்கள் வந்து அங்கே தங்குவார்கள். நல்ல எண்ணங்கள் அலை அலையாக எங்கும் சூழும். அந்த எண்ண அலைகள் மனம் குளிரும் சூழ்நிலையை உண்டாக்கும். கோபம் உள்ளவன் இருந்த இடத்தை,அவன் எழுந்தவுடன் தொட்டுப் பார்த்தால் சுடும். அன்பு உடையவர்களுடைய உடம்பு குளிர்ந்து இருக்கும். சிறந்த பெரியவர்கள் அன்பு உடையவர்களாக ஓரிடத்தில் தங்கியிருந்தால் அவர்கள் தங்கும் இடம் குளிர்ச்சி உடையதாக இருக்கும். அவர்களுடைய குளிர்ந்த எண்ண அலைகள் நம்மைச் சூழ்ந்தால்,தண்மை உண்டாகும்.  சான்றோர்கள் வாழுகின்ற இடம் எப்போதும் குளிர்ச்சியும் வளமையும் பொதிந்து இருக்கும். பிசிராந்தையார் தம்முடைய ஊரைப் பற்றிச் சொல்லும்போது, "ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே!" என்று சொல்லுவார்.

 

     இவ்வாறு உடல் குழைய, உள்ளம் குளிர்ந்து, அன்பால் முதிர்ந்த அடியவர்கள் முருகப் பெருமானை வழிபட்டு வாழும் சிறந்த இடமாகத் திருத்தணிகை விளங்குகிறது. அத்தகைய திருத்தணி மாமலையில் எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமான் தன்னை வழிபடும் அடியவர்கள் நினைத்ததை நினைத்தபடி முடிக்கிறவன். "நினைத்தவை முடித்து அருள் கிருபைக் கடல்" என்றும், "நினைத்த காரியம் அனுகூலமே புரி பெருமாளே" என்றும், "அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்து அருள் பெருமாளே" என்றும், "வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அதை, வேண்டும் அளவில் உதவும் பெருமாளே" என்றும் திருப்புகழில் போற்றுவார். அடியவர்களைக் காப்பதற்கு முருகன் கொடி கட்டிக் கொண்டு இருக்கின்றான். அது சேவல் கொடி.

 

     "தேவர்களுக்கு எல்லாம் சிகாமணியாக இருக்கிற பெருமானே! திருத்தணி மாமலையில் வாழும் சேவற்கொடி உடையவனே!  இந்த உயிருக்கு மோசம் வருமேஎன்று பயந்து,  அதைப் போக்கிக் கொள்ள உனது திருவடிகளைச் சேவிக்கின்ற நினைப்பு இல்லாமல் இருக்கின்றேன். முன்னைப் பிறவியில் நான் செய்த பாவமே அதற்குக் காரணம். அது உன்னை நினைக்கவொட்டாமல் செய்கின்றது. அந்தப் பாவத்தைத் தீர்த்து அருள வேண்டும்"என்று நமக்காக அருணகிரிநாதப் பெருமான் வேண்டிக் கொள்கிறார். நாமும் அவ்வாறே வேண்டி வழிபட்டு ஈடேறுவோம்.

 

"ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து, உன் அருட்பதங்கள் 

சேவிக்க என்று நினைக்கின்றிலேன், வினை தீர்த்துஅருளாய்; 

வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ் 

சேவல் கொடி உடையானே, அமர சிகாமணியே!"   ---கந்தர் அலங்காரம்.

 

என்பது கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநார் அருளிய பாடல்களில் ஒன்று.

 

இதன் பொருள் ---

 

     குளங்களுடன் கூடிய, பரந்த வயல்கள் சூழ்ந்துள்ள, பெருமை தங்கிய திருத்தணிகை மலைமீது எழுந்தருளி உள்ள, கோழிக் கொடியை உடையவரே! தேவர்களுக்கு மணிமுடியாக விளங்குபவரே! உயிருக்குக் கேடு செய்வதாகிய பிறவி நோய்க்குக் காரணமாக,ஆகாமிய வினை வந்து சேரும் வகையை அறிந்து, தேவரீருடைய அருள் திருவடிகளை வழிபாடு செய்வதை எக்காலமும் அடியேன் சிந்திக்கின்றது இல்லை. இதற்குக் காரணமாக உள்ள பாவ வினையைப் போக்கி அருள்புரிவீராக.

 

     தவிர்க்க இயலாத மரணத்திலே பயமும், அது காரணமாக அதைப் போக்கிக் கொள்ள முருகனிடத்தில் ஆழ்ந்த பத்தியும் உண்டாக வேண்டும் என்பது கருத்து.

மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...