இருதலைக் கொள்ளியினுள் எறும்பு

                                                    இருதலைக் கொள்ளியினுள் எறும்பு

-----

 

     சுற்றிச் சுற்றி வருகின்ற சில கோடுகளைப் போட்டு, உள்ளே இருக்கும் ஒன்றை அடைவதற்கு வழியைக் கண்டு பிடிக்குமாறு போடுவார்கள். ஐந்தாறு வழிகள் வெளியே வருவதற்கு இருப்பது போலத் தோன்றும். ஆனால் ஒரு வழியைத் தவிர மற்றவையெல்லாம் எங்கோயாவது ஒரிடத்தில் போய் நின்றுவிடும்படி அமைந்திருக்கும். சரியான வழி, பலவிடங்களில் சுற்றிச் சுற்றிப் போய்க் கடைசியில் வெளியில் வரும்படி அமைந்திருக்கும்.

 

     மனிதன் வாழ்நாள் ஒரு வகையில் அந்தச் சித்திரத்தைப் போன்றதுதான். அந்தச் சித்திரத்திலே வெளியில் வருவதற்கு ஒரு வழியாவது இருக்கும். ஆனால் நம் வாழ்க்கைச் சித்திரத்தில், வெளியில் வர வழியே இல்லை. வெளியில் வர வேண்டுமென்ற ஆசை உடையவனுக்குக் கூட  வழி தெரியாமல் சுழன்று சுழன்று வரும்படியாக அமைந்திருக்கிறது இந்தச் சித்திரம். அதற்குக் காரணம் நம் மனந்தான். போன போன இடங்களில் எல்லாம் பதிந்து கொண்டு எந்த இடத்தில் இருந்தும் மீள ஒட்டாமல் மனம் பற்றை வளர்த்துக் கொள்கிறது. 

 

     நாம் வாழ்கின்ற காலம் மிகக் குறைவு. அந்தக் காலத்திற்குள் நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் பல. எதனைத் தெரிந்து கொண்டாலும் தெரிந்து கொள்ளாவிட்டாலும் நம்முடைய முடிந்த முடியாகிய இலட்சியத்திற்கு அனுகூலமான வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். ரெயில் வண்டியில் ஏற வந்தவன் ரெயில் நிலையத்தில் கண்ட நண்பனோடு பேசிக் கொண்டே இருந்தால், வண்டி வந்து நிற்பது கூட மறந்துவிடும். வண்டி நிற்கிற வரைக்கும் அவனோடு பேசலாமே என்று ஆரம்பித்தவன் வண்டி புறப்பட்ட பிறகும் பேச்சுச் சுவாரசியத்தில் அதை மறந்து நிற்பான். இப்படித்தான் இந்த உலகத்தில் தோன்றிய மனிதன் இருக்கிறான். தன்னுடைய சரீரத்தைக் காப்பாற்றுவதற்குப் பல பேருடைய துணையை நாடுகிறான். இதனை வளர்ப்பதற்கும் சுகம் பெறுவதற்கும் பல செயல்களைச் செய்கிறான். நாளுக்கு நாள் பல பேருடைய தொடர்பும் ஏற்படுகின்றது. இந்தத் தொடர்பினால் நட்பும் பகையும் விளைகின்றன. நட்புக் காரணமாக மகிழ்ச்சியும், பகை காரணமாக அச்சமும் துன்பமும் அடைகிறான். உலகத்தில் இருக்கும்போது ஏதாவது செயல் செய்யத்தானே வேண்டும்? மற்றவர்களோடு பழகத்தானே வேண்டும்? என்ற கேள்விகள் எழலாம். பழகுவது வேறு, பதிவது வேறு. பிள்ளைப் பூச்சி சேற்றிலே பல காலம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் சேறு ஒட்டாமலே வளைய வருகிறது. அதுபோல் நாம் எல்லாவற்றோடும் பழகிக் கொண்டிருந்தாலும் அவற்றோடு ஒட்டாமல் வாழப் பழக வேண்டும். நம்முடைய இலட்சியம் இன்னதென்று தெரிந்து வாழ வேண்டும். 

 

     சமுதாயத்திற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டு, அவ்வப்போது நமக்குத் துணையாகின்றவர்களோடு அன்பு செய்து வாழ்வது தவறு அல்ல. ஆனால்,அப்படி வாழ்கின்ற இடத்திலும், பழகுகின்ற மனிதர்களிடமும் பற்று வைத்து, எந்தக் காலத்திலும் பிரியாமல் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சியைக் கொள்வது ஆபத்தை உண்டாக்கும். நம்மோடு பிறப்பிலே தொடர்ந்து வந்து, இறக்கும் வரைக்கும் இருக்கும் இந்த உடம்பே வாழ்நாள் முடிந்தவுடன் நம்மைப் பிரிந்து விடுகிறது. அல்லது நாம் இதைப் பிரிந்து விடுகிறோம். அப்படி இருக்க, பிறந்த பிறகு தொடர்ந்த தொடர்புகள் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்குமா?  ஒட்டிக் கொண்டு இராதவற்றை மனத்திலே பற்றிக் கொள்வதுதான் பற்று. அப்படிப் பற்று வளர்வதனால் மனத்திலே துயரம் மிகுகிறதே அல்லாமல், அமைதி உண்டாவதில்லை.

 

     "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்பது திருக்குறள். பல வகையான பற்றுக்களை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டு எந்தப் பக்கம் திரும்பினாலும் சேற்றிலே அமிழ்வது போலப் பாசத்திலே அமிழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றைக்காவது சிறிது உணர்வு வந்து அவற்றிலிருந்து விடுபட வேண்டுமென்றால் முடிவதில்லை. எந்தப் பக்கத்திலும் நம்மை அழுத்துகின்ற பாசம் இருப்பதைப் பார்க்கிறோம். பாசத்தைவிட்டு நீங்குவதற்கு ஒரு சிறிய வழிகூடக் காணாமல் திண்டாடுகிறோம்.  

 

     கல்யாணம் பண்ணிக்கொண்டு மனைவியோடு வாழ்கிறவன் சிறிது நேரம் கடவுளை எண்ணலாம் என்றால், மனைவியோடு பேசிவிட்டு அவள் தூங்கும்போது எண்ணலாம் என்ற நினைவு வருகிறது. மனைவியோடு பேசி அவள் தூங்கின பிறகோ,  நாமும் தூங்கிவிடலாம்; நாளைக்குத் தியானம் பண்ணிக் கொண்டால் போகிறது என்ற நினைவு வருகிறது. மறுநாள் எழுந்தாலோ கடைகண்ணிக்குப் போகிற வேலை முன்னாலே வந்து நிற்கிறது. இன்று இரவு அவசியம் நாம் தனித்திருந்து தியானம் பண்ணவேண்டும் என்று நினைக்கிறோம். அந்த இரவு நமக்கு வேண்டிய நண்பர் ஒருவர் வந்துவிடுகிறார். அவர் தினந்தோறுமா வருகிறார்? இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வருகிறவரோடு பேசாமல் என்ன செய்வது? தியானம் எங்கே போகிறது? நாளைக்குப் பண்ணிக் கொள்ளலாம் என்று மறுநாளைக்கு ஒத்திப் போடுகிறோம். அடுத்த நாள் நமக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. சிறிது காய்ச்சல் வருகிறது. அன்றைக்கும் தியானம் செய்ய முடிவதில்லை. இப்படியாக ஒவ்வொரு நாளும் நாம் அமைத்துக் கொண்ட பற்றுகள் காரணமாகச் சிறிது நேரம் ஒய்வாகவும், அமைதியாகவும் இருக்க வழி பிறப்பது இல்லை. மற்றவற்றைத் தள்ளிப் போடுவதில்லை. இறைவனை நினைப்பதை மாத்திரம் எளிதிலே தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். 

 

     இப்படியின்றி எந்தக் காரியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவனைத் தியானம் பண்ணுவது அவசியம் என்ற உணர்ச்சி இருந்தால், எப்படியாவது அந்த நேரத்தில் தனிமையை நாடுவோம். வீட்டிலே தக்க இடத்தில் அமர்ந்து சுவையான உணவை உண்ணும் ஒருவன், கடுமையான வேலையில் ஈடுபட்டு வீட்டுக்குப் போக முடிவதில்லையானால், தான் பணிபுரியும் அந்த இடத்திற்குச் சோற்றை வருவித்து உண்ணுகிறான். வண்டியில் பயணம் செய்கிறவன் வண்டி ஒடும்போதே ஏதாவது வாங்கி உண்ணுகிறான். ஓட்டத்தில் இருக்கிறவன் ஒடும்போதே எதையாவது கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புகிறான். மற்றக் காரியங்களில் ஈடுபடுகிறபோது உண்ண வேண்டிய அவசியம் இல்லையென்று அதை ஒதுக்க முடியாது. எப்படியாவது உண்ணுவதற்கும், உறங்குவதற்கும் நேரத்தைக் கண்டுபிடித்துக் கொள்கிறான். உண்ணுவது முயற்சியினாலே வருவது. உறங்குவது தானே வந்துவிடுகிறது. இறைவனைத் துதிப்பதற்கும், தியானம் செய்வதற்கும் ஒருவனுக்கு உண்மையான சிரத்தை இருந்தால் எந்த நிலையிலும், போகிற இடத்தில் உணவைப் பெற்று உண்ணுவது போல அவற்றைச் செய்துவிடுவான். அப்படிச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் மற்றப் பொருள்களில் வைத்த பற்றுத்தான். பற்று வைத்தவன் சிறிதே உணர்வு வந்தபோது, எந்தப் பக்கம் வந்தாலும் அவன் வெளியே வர முடியாதபடி அந்தப் பற்று அவனுக்குத் தடையாக இருப்பதைக் காண்கிறான். இடப்பக்கம் போனால் மனைவி வந்து நிற்கிறாள். வலப் பக்கம் போனால் மக்கள் வந்து நிற்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதையே கடமையாகத் தீரமானித்துக் கொண்டிருக்கிறான். அதனால் இறைவனைத் தியானிக்கும் கடமையைச் சற்றே தள்ளி வைக்கப் பார்க்கிறான். இப்படியேதான் பொழுது போய்க் கொண்டிருக்கிறது. துணிவு இல்லாமல், பற்றின பற்றை நழுவ விடுவதற்குரிய தைரியம் இல்லாமல், எந்த நேரத்திலும் தனியாக வந்து அமர்ந்து கொள்வதற்குரிய பழக்கம் இல்லாமல் திண்டாடுகிறான்.

 

     இதற்கு ஒரு உவமை சொல்லலாம். இருதலைக் கொள்ளிக்கு இடையில் அகப்பட்ட எறும்பு திண்டாடுவது போல நாம் திண்டாடுகிறோம். "இருதலைக் கொள்ளி எறும்பு போல" என்பது ஒரு பழமொழி. இரண்டு பக்கமும் தீ எரிந்துகொண்டிருக்கும் கொள்ளியினிடையே அகப்பட்ட எறும்பு எந்தப் பக்கமும் போக முடியாது. வெளியில் குதிக்கவும் முடியாது. சுற்றிலும் மூங்கில் குழாய் இருக்கிறது. அந்த எறும்பு உய்வதற்கு வழியே இல்லை. அப்படித் தான் நம்முடைய பற்றுக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். 

 

     இந்த உவமையையே மணிவாசகப் பெருமான் எடுத்து ஆளுகிறார். இறைவனைப் பிரிந்து, இந்தப் பிரபஞ்சம் என்னும் சேற்றுக்குள் சுழன்று, எந்தப் பக்கமும் போய் விடுதலையைப் பெற முடியாமல் நிற்கிறோம். அதற்கு, இருதலைக் கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பை உவமிக்கிறார்.  "பெருமானே! இரண்டு பக்கமும் எரிகின்ற கொள்ளியின் உள்ளே இருக்கும் எறும்பு போல, உன்னைப் பிரிந்து எந்தப் பக்கமும் செல்ல முடியாதபடி நான் துன்புறுகின்றேன். என்னைக் கைவிட்டு விடாதே" என்று அலறுகிறார். 

 

"இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு ஒத்து,நினைப்பிரிந்த 

விரிதலை யேனை விடுதிகண்டாய்; வியன் மூவுலகுக்கு 

ஒருதலைவா! மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே!

பொருதுஅலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே!."  --- திருவாசகம்.

 

     இதை மனத்தில் பதித்துக் கொண்டால் அருணகிரிநாதப் பெருமான் கருத்துத் தெளிவாகும். அவரும் இருதலைக் கொள்ளி எறும்பைச் சொல்கிறார். இருதலைக் கொள்ளியின் நடுவிலுள்ள எறும்பு போல நான் குலைந்து கொண்டிருக் கிறேன். அதனால் எனக்கு உண்டான துயரம் மிகுகிறது. அதனை ஒழிக்க வேண்டும் என்று முருகப் பெருமானிடத்தில் வேண்டுகிறார். 

 

"கொள்ளித் தலையில் எறும்பு அது போலக் குலையும் என்றன் 

உள்ளத் துயரை ஒழித்து அருளாய், ஒருகோடி முத்தம் 

தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!

வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே"

 

என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல். இரண்டு பக்கமும் கொள்ளி உள்ள ஓரிடத்தில் எறும்பு நிற்பது போல நான் நிற்கிறேன் என்று புலம்புகிறார்.

 

     இறப்பு பிறப்பு என்ற இரண்டும் நம்முடைய வாழ்க்கையின் இரண்டு தலைப்பிலும் உள்ளவை. கொள்ளியின் ஒரு தலைப்பாகிய பிறப்புத் துன்பத்திலிருந்து வெளிப்பட்டு வந்திருக்கிறோம். மறுபக்கத்தில் இறப்பு என்னும் துன்பம் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள வாழ்க்கையில் நின்று குலைகிறோம்.

 

     முற்பிறவிகளில் நாம் செய்திருக்கும் புண்ணிய பாவங்கள் இந்தப் பிறவியில் வந்து பயனைத் தருகின்றன. இவற்றை "ஊழ்" என்றும் "பிராரத்தம்" என்றும் சொல்வார்கள். அதன்படி நம்முடைய அனுபவங்கள் அமைகின்றன. இந்த வாழ்க்கையில் நமக்கு உரிய கருவி கரணங்களைக் கொண்டு பல செயல்களைச் செய்கிறோம். முன்னைப் பிறவியில் நாம் செய்த செயல்களின் விளைவாகப் புண்ணிய பாவங்கள் நமக்குக் கிடைத்தன. புண்ணியத்தின் பயனாக முயற்சியும், தீவினையின் பயனாகச் சோம்பலும் தோன்றும். புண்ணியம் அறிவை வளர்க்கும். பாவம் அறிவைச் சுருக்கும். அவற்றின் பயனைச் சுகமாகவும் துக்கமாகவும் இந்தப் பிறவியில் அடைகிறோம். இந்த அனுபவங்களுக்கு இடையில் புதிய செயல்களைச் செய்கிறோம். அந்தச் செயல்களின் பயன் அடுத்த பிறவியில் கிடைக்கும். எனவே இந்தப் பிறவியில் முன்னை வினைப் பயனால் வரும் அனுபவமும், புதுச் செயல்களினால் வரும் புண்ணிய பாவங்களும் இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவில் நாம் குலைந்து நிற்கிறோம். 

 

     அப்படிக் குலைந்து நிற்பதற்கு மூலகாரணம் முன்னை வினை என்று தெரிகிறது. முன்னை வினையின் பயனை மாத்திரம் அனுபவித்து, வேறுசெயல் இல்லாமல் இருக்க முடியாது. வினை அனுபவத்தைத் தருகிறது. நம்முடைய மனநிலை அதற்கு ஏற்றதாக இல்லை. ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோம். இப்படி முன்னை வினையின் விளைவுக்கும், இப்போது செய்யும் செயலுக்கும் இடையில் நின்று திண்டாடுகிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். 

 

     நம்முடைய வாழ்க்கையில் நமக்கே சில சமயங்களில் சில எண்ணங்கள் தோன்றுவது உண்டு. வேறு சிலருடைய அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்கிறோம். திண்மையான மனம், தன்னுடைய எண்ணத்தில் சிறந்தன இருந்தாலும், பிறர் உபதேசங்களில் சிறந்தன. இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனத் திண்மை இல்லாதவனுக்குப் பிறர் உபதேசம் செய்கிறபோது நல்லதாகத் தோற்றும். அதற்கு மாறாகத் தன் எண்ணமே சிறந்ததாகவும் தோற்றும். இப்படி நம்முடைய அறிவுக்கும், பிறர் அறிவுறுத்தலுக்கும் இடையே நின்று தெளிவில்லாமல் திண்டாடுகிறோம். இருதலைக் கொள்ளியின் இடையில் அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல, இன்னதுதான் செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறோம். எண்ணத்தில் திண்மை இல்லாமையினால் வந்த விளைவு இது. இப்படியும் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை ஒன்று உண்டு. 

 

     இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்று முயலும் போது கூட, பல சமயங்களில் இப்படி இருவேறு எண்ணங்கள் வந்து மோதுகின்றன. இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லித் திருவுருவத்தைக் கண்டு பத்தி செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் அதை நம்பி வருகிறோம். ஒரு சாரார், இறைவன் குணம் குறி கடந்தவன், அவனுக்கு விக்கிரகம் கூடாது என்று சொல்லுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சென்ற நெறியும், புதிய அறிவாளிகள் சொல்லும் நெறியும் ஒன்றுக்கொன்று மாறுபாடாகத் தோற்றுகின்றன. பள்ளிக்குச் சென்று படித்துத் தேருவது ஒன்று. காப்பி அடித்துத் தேருவது ஒன்று.  படித்துத் தேருவதை விட, காப்பி அடித்துத் தேருவதில் உத்திகள் அதிகம் கண்டு பிடிக்கப்படுகின்றன. எந்த உத்தி உசிதமானது என்பதை தேருவதிலும் கூடத் திண்டாட்டம் உண்டாகிறது. இப்படிப்பட்ட மாறுபாடுகளின் நடுவில் நின்று இன்னது செய்வது என்று தெரியாமல் நாம் திகைக்கிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை. 

 

     உலக வாழ்க்கையில் எத்தனையோ தரும சங்கடங்கள் உண்டாகின்றன. இரண்டு வகையான தருமம் ஒன்றுக் கொன்று எதிராக நிற்கும்போது தரும சங்கடம் எழுகிறது. ஒரு பாம்பு இரையை உண்ண வருகிறது. அப்போது பாம்பை அடித்தால் அதைக் கொன்றவர் ஆகிறோம். அடிக்காமல் இருந்தால், அதற்கு இரையாகிற பிராணியைக் கொலை செய்தது போன்ற துயரம் வருகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் நின்று திகைக்கிறோம். 

 

     இப்போது எங்கே பார்த்தாலும் விஞ்ஞானத்தைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. மனிதன் வாழ வேண்டுமானால் விஞ்ஞானத்தின் முயற்சியும், தொழில் முயற்சியும் சிறந்து நிற்க வேண்டுமென்று தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை நன்றாக முன்னேறினால்தான் சமுதாயம் முன்னேற முடியும் என்பதை அவர்கள் வற்புறுத்துகிறார்கள். அதே சமயத்தில் நம்முடைய ஞான நூல்கள், ஒவ்வொருவனுக்கும் தன்னுடைய ஆன்மா கடைத்தேறும் வழியைப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றன. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாக நிற்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவில் இன்னது செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை. இப்படிவாழ்நாள் முழுவதும் சில இரட்டைகளுக்கு நடுவில் நின்று திண்டாடுகிறோம். இப்படியே நமக்கு இந்தத் திண்டாட்டம் விடுவதே இல்லை. பிராரத்த வினையின் அனுபங்களால் உண்டாகும் விருப்பு வெறுப்புக்களால் நன்மையும் தீமையும் உண்டாகின்றன. நன்மை என்று நாம் நினைப்பது தீமையாகவும் முடிகின்றது. இவற்றைத் "துவந்துவங்கள்" என்கின்றார் மணிவாசகப் பெருமான். இது போக வேண்டுமானால் ஒரு வழி உண்டு என்றும் அவர் காட்டியருளுகின்றார்.

 

"என்பு உள் உருக்கி,இருவினையை ஈடு அழித்து,

துன்பம் களைந்து,துவந்துவங்கள் தூய்மைசெய்து,

முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள்புகுந்த

அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே".

 

என்று "திருவாசகம்" பாடுகின்றார். "எலும்பையும் உள்ளே உருகச்செய்து, இருவினைகளாகிய சஞ்சிதம், பிராரத்தத்தின் வலியினை ஒழித்து, அவற்றால் உண்டாகின்ற துன்பத்தைப் போக்கி, தொடர்புகளையும் அறுத்துத் தூய்மை ஆக்கி, முன்னே உள்ள சஞ்சித வினையானது முற்றிலும் தொலையும் வண்ணம்,என் உள்ளத்தின் உள்ளே எழுந்தருளிய,  அன்பினை உடைய, விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக்கொண்டேனே" என்று தனது அருள் அனுபவத்தைப் பாடுகின்றார்.

 

     எந்த வேலையைச் செய்தாலும் திருடனுக்குத் திருட்டிலே கண் இருப்பது போலவும், யாரிடம் காதல் செய்தாலும் பரத்தையர்களுக்குப் பொருளில் ஆசை இருப்பது போலவும், எத்தனைதான் பேசிக் கொண்டு வந்தாலும் வண்டி ஒட்டுகிறவனுக்குத் தனது கைச் சக்கரத்தில் நோக்கம் இருப்பது போலவும், உலகில் எப்படி வளைய வந்தாலும்,எத்தனை பேர்களிடம் பழகினாலும், எத்தனை முயற்சியில் ஈடுபட்டாலும், ஆன்ம விடுதலை என்ற குறிக்கோளை மறந்துவிடாமல் இருக்க வேண்டும். அதற்கு இறைவன் திருவடிப் பற்று உண்டாகவேண்டும். ஒருமையுடன் அவனது திருமலரடிகளை வழிபடுகின்ற உத்தமர்களின் உறவை வளர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையானால் பற்றுக்களில் ஆழ்ந்து துன்புற நேரும். அப்போது கொள்ளித் தலையில் எறும்பு போன்ற நிலை நமக்கு வரும். 

 

     நாம் இறைவனை அடைய வேண்டும். பற்றுக்கள் எல்லாம் அற்றால் இறைவனை அடைய முடியும். "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என்று ஆழ்வார் அருள்வாக்கு. "பற்றுக பற்று அற்றான் பற்றினை" என்றார் திருவள்ளுவ நாயனார். ஏன் என்றால், இப்போது நமக்கு உள்ள பற்றினை அறுத்துக் கொள்வதற்கு உபாயம் அது ஒன்றே. எனவே, "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்று மேலும் சொன்னார்.

 

     உலக மாயையால் உள்ளத்திலு உண்டான பற்றுக்கள் என்னும் அழுக்குப்  போவதற்கு, இறையருள் என்னும் நன்னீரில் குளிக்க வேண்டும். தண்ணிர் குடிக்க எண்ணும் ஒருவன் சோற்றுக் கையோடு போய், கையினாலே தண்ணீரைக் குடிக்க முடியாது. ஆகையால்,முதலில் அந்தத் தண்ணீரில் கையைக் கழுவிக் கொள்கிறான். பின்பு அந்தத் தண்ணிரை அருந்துகிறான். அதுபோல் இறைவனைப் பற்றிக் கொள்வதனால், சேறு போல் இருக்கிற பற்று முதலில் போகும். பின்பு அவனோடு ஒன்றுபடலாம்.

 

     நாள்தோறும் பற்றுக்களைப் பெருக்கிக் கொண்டு, தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் மனத்தைப் பதித்து ஒன்றிலிருந்தும் பிரிய முடியாது வாழ்கின்ற நமக்கு அந்த நிலையினின்றும் மீள்வதற்கு வழி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. பற்று உள்ளவனைப் பற்றிக் கொண்டால், பற்றுப் போகாது. பற்று அற்றவனைப் பற்றிக் கொண்டால் அவனுக்கு உள்ள குணம் நம்மிடத்தில் மேலிடும். பற்ற அற்றவன் இறைவன் ஒருவனே. எனவேதான்,  இருதலைக் கொள்ளியின் இடையில் உள்ள எறும்பு போலத் தவிக்கும் என்னை விட்டுவிடாதே என்று இறைவனைப் பற்றிக் கொண்டார் மணிவாசகப் பெருமான். அருணகிரிநாதப் பெருமான், "இருதலைக் கொள்ளி எறும்பு போல இருக்கும் என்னை நீ வந்து காப்பாற்ற வேண்டும்; என் உள்ளத் துயரத்தை நீக்க வேண்டும்" என்று முருகப் பெருமானைப் பற்றிக் கொண்டு வேண்டுகிறார். 

 

     இந்த விண்ணப்பத்தை அவர் திருச்செந்தூரில் உள்ள பெருமானிடத்தில் வைக்கிறார். எப்போதும் அலை மோதுகின்ற கடற்கரையில் செந்தில் ஆண்டவன் எழுந்தருளியிருக்கிறான். அந்த ஊருக்கே "அலைவாய்" என்று பெயர். அங்குள்ள கடற்கரை அழகியது. முத்துக்களை அலைகள் கொண்டு வந்து கொழிக்கின்றன. கோடிக்கணக்கான முத்தங்களை அங்கே கொண்டு வந்து சேர்க்கின்றன. "வினை ஓடவிடும் கதிர்வேல்" பெருமான் திருக்கையில் விளங்குகிறது. அங்கே படைவீடு கொண்டான். அங்கே இருந்து சூரபதுமனுடன் போர் புரிந்து பெற்றஜயத்தைக் கொண்டாடியமையால் "ஜயந்திநாதன்" என்ற திருப்பெயர் உண்டாயிற்று. 

 

     அந்தக் கடல் அலைகளால் நலம் விளைகிறது, அலைகள் கோடிக்கணக்கான முத்தங்களை கொண்டு வந்து சேர்க்கின்றன என்கிறார். நம்முடைய உள்ளத்தில் துயர அலைகள் மோதும்போது நாம் கவலை அடைகிறோம். மணல் கரையாக நமது உள்ளம் இருக்கிறது. நமது உள்ளம் என்னும் மணல் கரையே இறைவனுடைய திருக்கோயிலாக மாறினால், உலக வாழ்க்கையில் வந்துவந்து மோதுகின்ற இன்பதுன்ப அலைகளிலிருந்து கிடைக்கின்ற அரிய முத்துக்கள் என்னும் உண்மைகளைத் தெரிந்து,மெய்யறிவைப் பெறலாம். 

 

     சூரபனதுமனை அழித்த வீரராகிய எம்பெருமான் வள்ளிக்கு வாய்த்தவன் ஆகிறான். வள்ளிநாயகி என்பது சீவான்மாவைக் குறிக்கும். சீவான்மா ஆகிய நமக்கும் வாய்த்தவன் அவன்தான். வாய்த்தவன் என்றால், வள்ளிநாயகிக்கு அவளது தவப் பயனாக வந்தவன் என்று பொருள். இது,  மற்றவர்க்குக் கிடைத்தற்கு அரியவன் என்பதை உணர்த்தும். எல்லா நலங்களும் ஒருங்கே பொருந்திய திருச்செந்தில் ஆண்டவனை மணவாளனாக அடைய வேண்டுமென்றால் எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். வள்ளிநாயகி பெருந்தவம் உடையவள். அவளுக்கு அவன் வாய்த்தான்.  அவனை அடைய நாமும் தவம் புரியவேண்டும். மாணிக்கம் நவமணிகளில் சிறந்தது. இயல்பான ஒளியை உடையது. திண்மையானது. சிவப்பானது. பல அணிகளினிடையே கலந்து நின்றாலும் தனிச் சிறப்புடன் விளங்குவது. எப்போதும் விலை மதிப்புக் குறையாமல் இருப்பது. மன்னர்களின் முடிமேல் சிறந்து நிற்பது. குப்பையில் கிடந்தாலும் மதிப்புக் குன்றாதது. முருகன் மயிலேறிய மாணிக்கமாக விளங்குகிறான். எனவேதான்,  வள்ளிநாயகியையும், மயிலையும் எண்ணி, "நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்"என்றார் பிறிதொரு கந்தர் அலங்காரப் பாடலில். வள்ளிநாயகியுடன் மயில் ஏறிய மாணிக்கம் ஆகிய முருகன் நம்மையும் வந்து ஆட்கொள்ளுவான். எப்போது வருவான் என்றால், எந்த நேரத்திலும் வருவான் என்கிறார் அருணகிரிநாதர். நாம் தவம் செய்து பக்குவப்பட்டு இருக்கவேண்டும். 

 

     வள்ளிக்கு வாய்த்தவனும், மயில் ஏறிய மாணிக்கமும் ஆக விளங்கும் திருச்செந்தில் ஆண்டவனைத் தரிசித்த அருணகிரிநாதப் பெருமான், தனது உள்ளத் துயரை ஒழித்து அருள் புரியவேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றார். அவன்தானே, தேவர்களின் துயரை ஒழிப்பதற்காக, சூரபதுமனை அழித்து அருள் புரிந்தவன். அவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் ஆயிரம் ஆயிரம் துயர அலைகள் வந்து நமது மனத்தில் மோதினாலும், கொள்ளித் தலையில் அகப்பட்டுக் கொண்ட எறும்பைப் போலச்சற்றும் தளர்ச்சி அடையாமல் இருக்கலாம்.

 

     அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரப் பாடலை இப்போது மீண்டும் பார்ப்போம்... 

 

"கொள்ளித் தலையில் எறும்பு அது போலக் குலையும்என்றன் 

உள்ளத் துயரை ஒழித்து அருளாய், ஒரு கோடிமுத்தம்

தெள்ளிக் கொழிக்கும் கடல்செந்தில் மேவிய சேவகனே! 

வள்ளிக்கு வாய்த்தவ னே!மயில் ஏறிய மாணிக்கமே! 

 

இதன் பொருள் ---

 

     ஒருகோடி முத்துக்களைத் தெள்ளிக் கொழிக்கின்ற கடற்கரையில் விளங்கும் திருச்செந்தூரில் எழுந்தருளிய வீரரே!  வள்ளிநாயகிக்கு வாய்த்த மணவாளரே! மயில்வாகனத்தின் மீது ஏறி அருளும் மாணிக்கம் போன்றவரே! இருதலையும் எரிகின்ற கொள்ளியின் இடையே அகப்பட்டுக் கொண்ட எறும்பினைப் போலத் துன்புறுகின்ற அடியேனுடைய மனத் துயரை ஒழித்து அருள் புரிவீராக.

 

     பின் வரும் அருட்பாடல்களிலும், மேற்குறித்த "கொள்ளித் தலையில் எறும்பு" என்பது காட்டப்பட்டு உள்ளதை அறிந்து, தெளியலாம்.

 

"உள்குவார் உள்ளத்தானை,உணர்வுஎனும் பெருமையானை

உள்கினேன் நானும் காண்பான்,உருகினேன் ஊறி ஊறி

எள்கினேன்,எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற

கொள்ளிமேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடுமாறே".

 

என்பது அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பாடல்.

 

இதன் பொருள் ---

 

     நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள சிவபரம்பொருளை நானும் காண்பதற்கு நினைத்து, உருகி அன்பு ஊறி, உள்ளம் உருகினேன். எமது தந்தையாகிய பெருமானே! உன்னை,இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும்?

 

"உருவார் பிறவிக்கண் இன்னம் புகச் செய்து

திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி,

இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பேபோல்

உருகா நிற்கும் என்உள்ளம் ஊழி முதல்வா".

 

என்று திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி கூறும்.

 

இதன் பொருள் --- 

 

     பிரளய காலத்து உலகம் முழுவதையும் வயிற்றில் வைத்துப் பாதுகாக்கின்ற தலைவனே! பல பிறப்புகளில் இன்னமும் என்னைப் பிறக்கச் செய்து கருமவசத்தால் திரிவாயாக என்று என்னைக் குறித்து நீ திருவுள்ளம் கொள்கின்றாயோ? என்று, அப் பிறவிகளில் திரிவதற்கு அஞ்சி, இரண்டு பக்கத்திலும் நெருப்புப் பற்றி எரிய, அவற்றின் நடுவிலே அகப்பட்டு வருந்தும் எறும்பு போல என் மனம் உருகி நெகிழ்ந்து கொண்டே இருக்கும்.

 

"உள்ளமோ ஒன்றில் நில்லாது,

     ஓசையில் எரி நின்று உண்ணும்

கொள்ளி மேல் எறும்பு போலக் 

     குழையுமால் என் தன் உள்ளம்,

தெள்ளியீர்! தேவர்க்கு எல்லாம் 

     தேவராய் உலகம் கொண்ட

ஒள்ளயீர்! உம்மை அல்லால் 

     எழுமையும் துணை இலோமே"

 

என்பது திருமங்கை ஆழ்வார் அருளிய திருக்குறுந்தாண்டகம்.

 

இதன் பொருள் ---

 

     என் மனமோ எதிலும் நிலைபெறாமல் இருக்கும். நெருப்பானது ஓசையுடன் பொருந்தி நின்று எரிகின்ற கொள்ளிக் கட்டையின் மேல் உள்ள எறும்பு போல என் மனம் பிறப்பு இறப்புகளை நினைத்து வருந்துகின்றது. அந்தோ! தெளிவு உடைய தேவரே! தேவர்க்கு எல்லாம் தேவர் ஆகி உலகை மாவலியிடம் இருந்து பெற்ற ஒளியுடையவரே! உம்மைத் தவிர எந்த நிலையிலும் நாங்கள் துணை இல்லாமல் இருக்கின்றோம்.

 

 

இரவு பகல் அற்ற இடம்

 


இரவுபகல் அற்ற இடம்

-----

 

     இறைவனுடைய திருவருள் இன்பத்தை, இந்த உடம்புடன் இருக்கும்போதே பெறலாம். அதனை அடைவதற்குச் சில படிகள் உண்டு. அந்தப் படிகளை வெவ்வேறு பெயரிட்டுச் சொல்வது வழக்கம். அருணகிரிநாதப் பெருமான் இந்த உடம்பில் இருக்கும்போதே முத்தி இன்பத்தை அடைவதற்கு நான்கு வகையான படிகளைச் சொல்கிறார். சாத்திரங்களில் சொல்வது போல, அழகான தோத்திரமாக அமைந்து இருக்கிறது இந்தப் பாடல். 

 

"அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும்;அவிழ்ந்த அன்பால் 

குராப்புனை தண்டை அம் தாள்தொழல் வேண்டும்; கொடிய ஐவர் 

பராக்கு அறல் வேண்டும்; மனமும் பதைப்பு அறல் வேண்டும்; என்றால் 

இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே!"     --- கந்தர் அலங்காரம்.

 

முதல் படி --- அராப்புனை வேணியன் சேய் அருள் வேண்டும், 

இரண்டாம் படி ---  அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டை அம் தாள் தொழல் வேண்டும்' 

மூன்றாவது படி---  கொடிய ஐவர் பராக்கு அறல் வேண்டும்,

நான்காவதுபடி ---  மனமும் பதைப்பு அறல் வேண்டும்,

 

     இந்த நான்கு படிகளைக் கடந்து சென்றால், இராப்பகல் அற்ற இடத்தை அடையலாம். அங்கே நிரதிசய ஆனந்தம் என்னும் பேரின்பம் உண்டாகும். அதுதான் மோட்சம் அல்லது வீடுபேறு அடைந்த நிலை. மேலே குறித்த படிகளைக் கடந்தவர்க்கு இது எளிது. அல்லாதவர்க்கு அவ்வளவு எளிது அல்ல. 

 

     உலகம் கடந்த எல்லையில் மோட்சம் இல்லை. இந்த உடம்பை விட்டுச் சென்ற பிறகு ஏதோ குறிப்பிட்ட ஓர் இடத்தில் மோட்சம் இருக்கிறதது என்று சொல்வதும் தவறு. நம்முடைய சமயத்தில் அப்படிச் சொல்லப்படவும் இல்லை. இந்த உடம்பில் இருக்கும்போதே இறைவனுடைய திருவருள் இன்பத்தை முற்றும் பெறலாம் என்றுதான் சொல்லப்பட்டு உள்ளது. உடம்பை விட்டுப் போன பிறகு அடைகின்ற முத்தி இன்பத்தை, இந்த உடம்பில் இருக்கும்போதே பெறலாம். 

 

     புளியம்பழம் நன்றாகக் கனிந்து ஒட்டோடு ஒட்டாமல் இருப்பது போல, உயிர் உடம்பில் இருந்தும் கருவி கரணங்களால் உண்டாகும் உணர்ச்சியோடு தொடர்பு பெறாமல் இருக்கும். "அடியேனுடை யாக்கை புளியம்பழம் ஒத்து இருந்தேன்" என்றார் மணிவாசகப் பெருமான். இந்த உடம்பைவிட்டுப் போனால், மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராத, மீட்டும் உடம்பு எடுக்காத நெறியில் சென்று இன்புறும். உடம்பில் இருக்கும்போதே இந்திரியங்களின் தொடர்பை விட்டு, மனத்தை அறுத்து, இன்பத்தைப் பெறுவது சீவன்முத்தி நிலை. இந்த உடம்பில் இருக்கும்போதே அத்தகைய இன்பம் வருவது சாத்தியம் என்பதுதான் அருளாளர்கள் கருத்து.

 

     சீவன்முத்தர்கள் மக்கள் உருவில்தான் இருப்பார்கள்.  ஆனாலும் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு உண்டு. நெல்லை வாணலியில் இட்டு, மணலைப் போட்டு வறுத்தால் நன்றாக வறுபடும். பொரியாக ஆவதற்கு முன்னாலே ஓரளவு நன்றாகச் சூடு ஏறும்படி வறுத்து எடுத்தால், வறுத்த நெல்லுக்கும், வறுக்காத நெல்லுக்கும் வேறுபாடு கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக வேறுபாடு உண்டு. வறுத்த நெல் முளைக்காது. அதுபோல், சீவன்முத்த நிலையில் இந்த உடம்பில் வாழ்கிறவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வேறுபாடு உண்டு. ஞானாக்கினியினால் நன்றாக வறுக்கப்பட்டவர்கள், இருவினையில் இருந்து நீங்கி, சீவன்முத்தி நிலையை அடைவார்கள். அவர்கள் வேறு உடம்பை எடுக்கமாட்டார்கள் அவர்கள் மற்ற மக்களைப் போலவே வாழ்வார்கள். உணவு உண்பார்கள். உடை உடுப்பார்கள். இந்த உடம்பை விட்டுச் சென்றால் மீண்டும் பிறவி எடுக்கின்ற நிலை அவர்களுக்கு இல்லை. பிறவித் துன்பத்தினின்றும் நீங்கினவர்கள் அவர்கள். மற்றவர்கள் இந்த உடம்பினின்றும் நீங்குவது, மறுபடியும் வேறு உடம்பை எடுத்து இன்ப துன்பங்களை அடைவதற்குத்தான். 

 

     உடம்பை விட்டுச் சென்று அடைகிற முத்திக்கு விதேகமுத்தி என்று பெயர். சீவன்முத்தி நிலையை இராப்பகல் அற்ற இடம் என்று சொல்வார்கள். அருணகிரிநாதர் இங்கே "இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை" பற்றித்தான் சொல்கிறார். அப்படி ஒரு நிலை கிடைப்பது மிகவும் அரிய செயல். அதற்கு முன் பல முயற்சிகள் செய்து இறைவன் திருவருளால் அந்த நிலையை அடையவேண்டும். எனவே, சீவன்முத்தி நிலையை ஒருவன் பெறுவது எளிய காரியம் அல்ல என்று சொல்கிறார். 

 

     அதற்கு வழியை இந்தப் பாட்டில் சொல்கிறார். அதற்கு முதல்படி, இறைவன் திருவருள். இரண்டாவது படி, அந்த அருளினால் உண்டாகிற இன்ப அன்பு. மூன்றாவது படி, ஐம்புலச் சேட்டைகளை அறுத்தல். நான்காவது படி, மனத்தின் பதைப்பு அறுதல். அப்போது மனம் சலனம் இன்றி, அலையற்ற கடல்போல இருக்கும். அதுதான் சிவனந்தக் கடல். "அலை இல்லாச் சிவஞான வாரிதி" என்று வள்ளல்பெருமானும், "ஆனந்த வாரிதி" என்று மெய்கண்ட சாத்திரமும் சொன்னது இதைத்தான்.

 

     உலகத்தில் இரவும் பகலும் உள்ளபோது, இந்த உடம்போடு இருந்தால் இரவு பகல் இல்லாத ஒரு நிலை எப்படி வரும்? என்ற ஐயம் தோன்றும். சூரியன் உதயம் ஆகும்போது பகல் உண்டாகிறது. அது மறைந்தால் இரவு வருகிறது. இவை எல்லாம் புற உலகத்தில் தோன்றும் ஒளியும், இருளும் ஆகும். அக உலகத்திலும் இரவு உண்டு. பகல் உண்டு. மனிதனின் உள்ளத்தில் அஞ்ஞானம் இருக்கிறது. அஞ்ஞானத்தை இருட்டு என்று சொல்வார்கள். அங்கே உண்டாகிற தெளிவுதான் ஒளி. 

 

     அடுப்பில் நெருப்பை மூட்டினால் புகை கிளம்புகிறது. அது வரும்போது கண்ணை அவிக்கிறது. இருமல் வருகிறது. கண் எரிகிறது. நெருப்புக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டால் உடனே எல்லாம் தீப்பற்றிக் கொண்டு எரிகின்றன. சிறுபுகை தோன்றிப் பின்பு பெரும் புகையாவது போல், சிறுகொழுந்து தோன்றி, அதுவே பெருநெருப்பாகி விடுகிறது. முதலில் ஒரே புகை. கொழுந்து தோன்றியவுடன் நெருப்பு உண்டானால்புகை அடங்குகிறது. வெளிச்சம் வந்து விடுகிறது. இருட்டில் இருக்கும் வரைக்கும் ஒரே புகை, மயக்கம். கொஞ்சம் ஊதித் தெளிவாக்கியவுடன் வெளிச்சமாகி விடுகிறது. புகை அறியாமை. முதல் நிலை, அறியாமையாகிய இருட்டில் நிற்கின்ற நிலை. பின், நினைவு என்னும் ஒளியினால் தெளிவு உண்டான ஒளிநிலை. இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடைவை.  

 

     ஓர் இடத்தில் ஒரே இருட்டாக இருக்கிறது. விளக்கு வைத்தவுடன் வெளிச்சம் ஆகிறது. விளக்கு அணைந்தவுடன் மீண்டும் இருள் சூழுகிறது. அதுபோலத்தான், நம்முடைய நினைவும், மறதியும் மாறி மாறி வருகின்றன. மறப்பு, நினைப்பு ஆகிய இரண்டும் நம் மனத்திற்கு இயல்பு. மறப்பை மயக்கம் என்றும், நினைப்பைத் தெளிவு என்றும் சொல்லலாம். மயக்கமே இருள். தெளிவே ஒளி. இருள் ஒளி ஆகிய இரண்டும், அதாவது மயக்கம், தெளிவு ஆகிய இரண்டும், நம் மனத்திற்குள் இருக்கின்றன. இந்த மனம் இப்போது காண்கின்ற பொருளைத் தெரிந்து கொள்வதும், முன்பு தெரிந்து கொண்டதை மீட்டும் நினைப்பதும் ஆகிய இயல்புகளைக் கொண்டிருக்கிறது. 

 

     இன்னும் சில இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்ள எவ்வளவு முயன்றாலும் முடிவது இல்லை. ஒரு நூலைப் படித்தால் சிலருக்கு எளிதில் தெளிவு வந்துவிடுகிறது. சிலருக்கு எத்தனை முறை படித்தாலும் வருவது இல்லை. எழுத்துப் பிழையோடு படிப்பவர்களிலும், சிலர் அறிவித்தால், திருத்திக் கொள்வார்கள். சிலர், அறிவித்தாலும் அறிந்துகொள்ள மாட்டார்கள். ஆனாலும், அறிவு அந்த அந்தப் பிறவியோடு போய்விடுவது அல்ல. உடம்பு பிறவிதோறும் மாறுகிறது. அறிவோ பல பிறவிகளிலும் தொடர்ந்து வருகிறது. அதனால் சிலருக்கு முன்னைக் கூர்மை இருக்கும். "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி,ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று திருவள்ளுவ நாயனார் இதைத்தான் காட்டினார். ஒரு பிறவியில் ஒருவன் கற்கும் கல்வி, எழுகின்ற பிறவிகளிலும் அவனுக்குத் தொடர்ந்து வரும் என்பது கருத்து. 

 

     ஆகையால், பிறவிதோறும் தொடர்ந்து வருவது கல்வி அறிவு. எடுத்தவுடன் ஒரு நூலை ஒருவன் அறிந்துகொண்டு விடுகிறானே, தெளிவு பெற்று விடுகின்றானே என்றால், அவனுக்கு முன்னைத் தொடர்பு இருக்கிறது. அதற்கு வேண்டிய அறிவை முன் பிறவியில் தீட்டிக் கொண்டிருக்கிறான். 

 

     முன்பு கண்டு உறவாடிய ஒருவனைத் தெரிந்து கொள்ள முடியாமைக்குக் காரணம், மனத்திற்கு இயற்கையாகவே மறதி இருப்பதே. அப்படியே பிறவி மயக்கத்தினால் போன பிறவியில் நாம் எப்படி இருந்தோம் என்பது தெரிவதில்லை. நமக்குத் துணையாக இருக்கிற கடவுளை நாம் மறந்து விடுகிறோம்.  இருள்,  அஞ்ஞானம், அவிச்சை என்று பலப்பல பெயர்களால் சொல்லப்படும் அறியாமையினால் உண்மைப் பொருள் இன்னது என்று தெரிந்து கொள்ள வகையில்லாமல் வாழ்கிறோம். கலக்கம் நீங்கி, இருள் நீங்கி,கொஞ்சம் தெளிவு உண்டானால் ஞானஒளி நமக்குக் கிடைக்கும். மயக்கம் இருக்கும்போது தெளிவு இல்லை; ஒளி இல்லை. தெளிவு இருக்கும்போது மயக்கம் இல்லை, இருள் இல்லை. 

 

     ஒளி இருக்கும்போதே நிழலும் உண்டு. ஒளியைத் தருகிற பொருள் வேறு. நிழலைத் தருகிற பொருள் வேறு. ஒளியைத் தருகின்ற பொருளுக்கு முன்னால் நிழலைத் தருகின்ற பொருள் இருந்தால் நிழல் விழும். விளக்குக்கு முன்னால் நாம் இருந்தால் விளக்கின் ஒளியிலே எதிர்ப்புறத்தில் நமது நிழல் தெரியும். கிழக்கே உதிக்கும் சூரியன் முன் நாம் நின்றால்,நமது நிழல் மேற்கே விழும். சூரியன் மாலையில் மேற்கே வரும்போது நமது நிழல் கிழக்கே வரும். ஒளிக்கும் நிழலுக்கும் நேர் விரோதம்.நிழல் இல்லாமல் போகவேண்டும் என்றால் சூரியனுக்கு முன் நிற்கும் எதுவும் இல்லாமல் போக வேண்டும். சூரியன் முன் இருப்பதும் அதற்கு நிகரான ஒளி உடையதாக இருந்தால் நிழல் இல்லை. சூரியனுக்கு முன்னால் நிற்கிறவன் கீழே படுத்துக் கொண்டால், அவன் நிழல் எங்கும் படிவது இல்லை. அப்போது அவன் செயல் இழந்தவனாக இருக்கிறான்.

 

"சீவன் என்ன சிவன் என்ன வேறு இல்லை,

சீவனார் சிவனாரை அறிகிலர்,

சீவனார் சிவனாரை அறிந்தபின்

சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பரே"

 

என்பது நமது கருமூலம் அறுக்க வந்தருளிய திருமூல நாயனார் திருமந்திரம்.

     

     சீவன் வேறு சிவன் வேறு என்கின்ற வேறுபாடு இருக்கும் வரை அறியாமை உண்டு. இரண்டறக் கலக்கும்போது வேறுபாடு இல்லை. அறியாமை என்கின்ற இருள் இல்லை. இதையே அருணகிரிநாதர், "இராப்பகல் அற்ற இடம்" என்கிறார். ஆன்மாவும் இறைவனும் இரண்டறக் கலந்துவிடுகிற நிலையில்,நினைப்பு மறப்பு இல்லை. "அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே" என்று அடிகளார் திருப்புகழில் வேண்டினார். "சகல கேவலம் இல்லாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய்" என்று வேண்டினார் வள்ளல்பெருமான்.

 

     நாம் இப்போது இருக்கும் இடம் தாழ்ந்த இடம். மிக உயர்ந்த இடத்திற்குப் போகவேண்டும். இடம் என்று சொன்னால், நாம் கண்ணால் காணுகின்ற இடம் என்பது பொருள் அல்ல. அது ஒரு நிலை. உயிர் இன்பத்தில் நிற்கின்ற நிலை எதுவோ, அதை முத்திநிலை என்று சொல்வார்கள். இப்போது நம் உயிர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற இடம் தாழ்வான நிலை. இதை விட மிகச் சிறந்த இன்பநிலை ஒன்று உண்டு. அது மேலானநிலை. தாழ்ந்த நிலையில் இருக்கிறவன் மேலான நிலைக்குப் போகவேண்டுமானால் மெல்ல மெல்லப் படியேறிச் செல்ல வேண்டும். 

 

     இந்தப் படிகளை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று சொல்வார்கள். சரியை என்பது இறைவனுடைய திருநாமத்தைச் சொல்வது, அடியார்களோடு சேர்ந்து திருத்தொண்டுகளைப் புரிவது முதலியன. கிரியை என்பது இறைவனுக்குப் பூசை முதலியன செய்தல், யோகம் என்பது உள்ளத்தை இறைவனுக்குப் பீடமாக அமைத்து மனத்தில் பூசை முதலிய செய்தல். ஞானம் என்பது அறிவுச் சிறப்பினாலே உலக நிலை, உயிர்நிலை என்பனவற்றை ஆராய்ந்து இந்திரிய நிக்கிரகம் செய்தல். இந்த நான்கும் ஒன்றுக்கு மேல் ஒன்று உள்ளவை. சரியை நிலையைத் தாண்டிக் கிரியை நிலைக்கு வந்து,கிரியை நிலையைத் தாண்டி யோக நிலைக்கு வந்து, யோக நிலையைத் தாண்டி ஞான நிலையை அடைய வேண்டும். இவை நான்கும் சாதனம். ஞானத்திற்கு அப்பால் இறைவனுடைய அருள் இன்பமாகிய சாத்திய நிலை இருக்கிறது. அதுதான் முத்தி. அந்த நிலையை அடைய சாத்திரங்கள் சொல்லுகின்ற படிநிலையை வேறுவிதமாக அருணகிரிநாதர் சொல்லுகிறார்.

 

     முதலில் முருகப் பெருமானுடைய திருவருள் வேண்டும் என்கிறார். அந்த அருள் கிடைத்தால், நமக்கு அன்பு உண்டாகும். முருகப்பெருமானைத் தொழும் இயல்பு வரும். இறைவனுடைய அன்புகொண்டு தொழுவதற்கு முன்னால் அருள் எப்படிக் கிடைக்கும்? என்ற ஐயம் தோன்றும். நம்மால் எந்தக் காரியத்தையும் தொடங்கி நிலை நிறுத்துவது முடியாது. இறைவன் திருவருள் துணைக் கொண்டேதான் நாம் இயங்கவேண்டும். இறைவன்பால் அன்பு உண்டாவதற்குக் கூட அவன் அருள் வேண்டும். நமக்கு அவன்பால் அன்பை உண்டாக்குகின்ற அருள் வேறு.  முடிந்த முடிபாகிய இன்பத்தைத் தருகின்ற அருள் வேறு. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மணிவாசகர் காட்டினார். "பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே" என்றார் அப்பர் பெருமான். "பணிவித்தால் பணிகின்றேன்" என்றார் வள்ளல்பெருமான்.

 

     இறைவன் பேரருள் கிடைத்தால் இன்பம் உண்டாகும். ஆனால், அந்த அருள் கிடைப்பதற்கு முன்னால் பல முயற்சிகள் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலாக ஆரம்பத்தில் அவன் திருவருள் கிடைத்தால்தான் அந்த முயற்சிகளைச் செய்ய முடியும். அந்த அருள், சாதனத்தைப் பெறுவதற்குரிய அருள், பின்னாலே பெறும் அருள் சாத்தியத்தைப் பெறும் அருள். இராப்பகல் அற்ற இடத்தை அடைவதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் தொடங்கும்போதே அவனுடைய திருவருள் நமக்குத் துணையாக இருக்க வேண்டும். அதை,  முதற்படியாக "அராப் புனை வேணியன் சேய்அருள் வேண்டும்" என்கிறார் அடிகளார். "அராப் புனை வேணியன்" என்பது ,பாம்புகளை அணிந்துள்ள சிவபெருமானைக் குறிக்கும். அவனது குழந்தையாகிய முருகனுடைய அருள் வேண்டும்.  

 

     நமது மனம் புற்றுக்குள் இருக்கும் பாம்பைப் போன்றது. நஞ்சு கக்குகிற பாம்பு.  நான்குபேர் அறியப் புறப்படாத பாம்பு. கருடனுக்கு அஞ்சுகிற பாம்பு. புற்றில் வாழும் பாம்பு, இறைவன் திருச்சடையைச் சார்ந்து இருக்குமானால், அதன் தன்மையே மாறிவிடும். அந்தப் பாம்பைப் போன்று வாழ்க்கை மாறி,  நமது மனத்தின் தீய தன்மைகளும் மாறும். மாறாத இன்பம் விளங்கும். இந்தக் குறிப்பை இப்பாடலில் பொதிய வைத்துள்ளார் அருணகிரிநாதர்.

 

     இறைவனுடைய திருவருளைப் பெற்ற பெரியவர்கள், உடம்பில் வாழும் காலத்தில், கருவிகரணங்களோடு பல தொழில்களைச் செய்தாலும், அவர்கள் சிவபிரானிடம் உள்ள பாம்பு போல உயர்ந்த நிலையில் எல்லோரும் போற்றும் பொருளாக இருப்பார்கள். அப்படி இல்லாதவர்கள் தாழ்ந்த நிலையில் எல்லோரும் அஞ்சும் பொருளாக இருப்பார்கள். 

 

     இரண்டாவது படியாக, "அவிழ்ந்த அன்பால் குராப் புனை தண்டை அம் தாள் தொழல் வேண்டும்" என்றார். மனத்தில் உள்ள நல்ல குணங்கள் மலர்ந்து, அதனால் உயிர்கள் நல்ல நெறியை அடையவேண்டும் என்பதே இறைவன் திருவுள்ளம். மனம் என்னும் தாமரை, மலராமல் மொட்டாகப் பக்குவம் இன்றி இருந்தால், அதில் ஞானமணம் வீசாது. மனம் பக்குவம் அடையாமல், மலராமல் மொட்டாக இருக்கும்போது 'நான்' என்ற தன்முனைப்போடு நிற்கும். அதில் அன்பு என்ற மணம் மலரும் போது அந்த முனைப்பு விரிந்து, இல்லாமல் போய்விடும். 

 

     நமக்கு அன்பு உண்டு. ஆனால் அது மலர்ந்த அன்பு அல்ல.  மனைவி,  மக்கள், சுற்றம், உற்றார் உறவினர் என்ற நிலையில் குறுகி உள்ள அன்பு. அது அன்பு அல்ல, பற்று. அன்பு வடிவாக அனைத்து உயிர்க்கும் தலைவனாக இருப்பவன் இறைவன், உயிர்கள் யாவும் அவனது குழந்தைகள்என்னும் உணர்வு வந்தால், உள்ளம் மலரும். இதுதான், "அவிழ்ந்த அன்பு" என்பதாகும். அவிழ்ந்த அன்பின் பயனாக, ஆன்மநேயமும், சீவகாருண்ணியமும் நிறைந்து இருக்கும்.

 

     முருகப் பெருமானுக்கு உகந்தது குரா மலர். திருவிடைக்கழி என்னும் தலத்தில் குரா மரத்தின் அடியில் முருகன் எழுந்தருளியிருக்கிறான். திருவிசைப்பாவில் சேந்தனார், அப்பெருமானைப் பாடியிருக்கிறார்.  "கொந்து வார் குரவு அடியினும், அடியவர் சிந்தை வாரிச நடுவினும், நெறிபல கொண்ட வேதநல் முடியினும் மருவிய குருநாத" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி உள்ளார். 

 

     இறைவனுடைய திருவருள் துணையினால் அன்பு விரிந்து அந்தப் பெருமானுடைய திருவடியைப் பற்றிக் கொள்ளும் நிலை வந்தால், நாமும் அடியவர்களாகி, ஐம்பொறிகளை வென்று இறைவனைச் சாரும் நிலை பெறலாம். அப்போது கருவி கரணங்கள் யாவும் இயற்கையாகத் தமக்குள்ள தொழில்களையே செய்து கொண்டிருந்தாலும், அந்தத் தொழில்கள் யாவும் இறைவனைச் சார்ந்தவை ஆகிவிடும்.

 

     மூன்றாவது படியாக, "கொடிய ஐவர் பராக்கு அறல் வேண்டும்" என்றார். நம்முடைய ஐந்து இந்திரியங்களின் வழியே நாம் போவதால், அவைநமக்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவை கொடிய ஐவர் ஆயின. அந்த ஐந்தும் நமது வழியில் நின்றால், அவற்றால் நாம் அன்பு பெறுவதற்குரிய நெகிழ்ச்சி நிகழும். இதனை, நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் பின்வருமாறு பாடுகிறார்.

 

"பார்ப்பான் அகத்திலே பால்பசு ஐந்து உண்டு;

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன;

மேய்ப்பாரும் உண்டாய்,வெறியும் அடங்கினால்,

பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே.” 

 

     வெறியோடு கூடிய மாடுகள் தக்கபடி அடக்கப் பெற்றால் பாலைச் சொரியும். வெறித்த மாடுகளாக நமது ஐந்து இந்திரியங்களும், தமது போக்கில் போய்க் கொண்டிருந்தால் அவற்றைப் பெற்றவனுக்குத் துன்பந்தான் விளையும். அவை அடங்கித் தமது போக்கில் போகாமல் நின்றுவிட்டால், அப்போது இறைவனைத் தொழும் வகையில் அந்த ஐந்து இந்திரியங்களும் செயல்படும். அதனால் அவனுடைய அருள் அனுபவத்திற்கு உரிய வழியில் அவை நிற்கும். பகையாக நின்றவை உறவாக ஆகிவிடும். இதனையே திருமூலர் உருவகமாகச் சொல்லுகிறார். 

 

     அப்படி, கொடிய ஐவராக இருக்கிறவர்கள் நமக்கு ஏற்றவர்களாக ஆகவேண்டும் என்றால் இறைவன் திருவருளும், அவன் திருத்தாளிடத்தில் அன்பும் உண்டாக வேண்டும். அவன் திருவடியைத் தொழுதல் வேண்டும். இதுவரை அவனுடைய  திருவருள் இல்லாமையினால் அவை புறப்பொருள் பார்வை உடையனவாக இருந்தன. அந்தப் பார்வை இப்போது அறுந்து போகும். பராக்கு அற்றுப் போகும். "பராக்கு" என்பது, பார்க்க வேண்டியதைப் பார்க்காமல், மற்றவற்றைப் பார்ப்பது. இறைவனுடைய அருளால் அன்பு உண்டான பிறகு இவை யாவும் மாறிவிடும். அவன் அருள் கிடைக்காத வரைக்கும் இந்திரியங்கள் பல வகையில் அலைக் கழித்துத் துன்புறுத்தும். வெளிமுகமாக இருக்கும் நோக்கம் எல்லாம், இறைவன் அருளால் உள்முகமாக மாற வேண்டும். அப்போது, மனத்தில் உள்ள பதைபதைப்பு எல்லாம் அடங்கிப் போகும்.

 

     மனம் பதைப்பு அறுதல் நான்காவது படி. மனம் பதைப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அது விரிந்து விரிந்து செல்கிற பிரபஞ்சச் சுழலில் சிக்குண்டு கிடக்கிறது. விருப்பு வெறுப்புகளால் தாக்குண்டு நிற்கிறது.  இவை மாறவேண்டுமானால், இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டு அன்பு மலரவேண்டும். அன்பு விரிவடைந்து, இந்திரியங்கள் பராக்கு அற்றால், மனம் பதைப்பு அற்று,ஒருமை நிலைக்கு வரும். அப்போது இராப்பகல் அற்ற நிலை வந்துவிடும். 

 

     சுற்றிச் சுற்றி அலைந்த குழந்தை கண்ட கண்ட இடங்களில் விளையாடி அழுக்கைச் சேர்த்துக் கொண்டு தூய்மை கெட்டு, உடம்பில் புண் உண்டாகி வருந்துகிறபோது, தாய் அதனைத் வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வந்து தூய்மை செய்கிறாள். தொட்டிலில் போட்டுத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். தாயின் தாலாட்டுப் பாட்டில் மனம் செலுத்தி ஒன்றுபடும்போது குழந்தை அப்படியே கிடந்து தூங்கிவிடுகிறது. 

 

     அந்த வகையில் பிரபஞ்சம் முழுவதும் தன் ஆசைக் கரத்தை நீட்டி ஐந்து இந்திரியங்கள் என்னும் வாசல்களின் வழியே எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற மனம், வெளியே போவதை நீக்கி உள்ளே இருக்கும் எம்பெருமான் திருவடிக் கீழே தூங்கத் தொடங்கினால், இராப்பகல் அற்ற இன்பம் அதற்குக் கிடைத்துவிடும். இது படிப்படியாக வரவேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் மேற்குறித்த பாடலின் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறார்.  இந்தப் பாடலின் பொருள் வருமாறு:-

 

     பாம்பை அணிந்த திருச்சடையை உடைய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமானுடைய திருவருள் முதலில் வேண்டும். (திருவருள் பெற்றதன் பலனாக) உள்ளத்தில் மலர்ந்து நெகிழ்ந்த அன்பால், குராமலர் மாலையைப் பூண்டு உள்ளதும், தண்டையை அணிந்து உள்ளதும் ஆகிய முருகப் பெருமானது அழகிய திருவடிகளை வணங்கவேண்டும். (வணங்கியதன் பலனாக) கொடிய ஐம்புலன்களின் வேடிக்கைச் சேட்டை ஒழிய வேண்டும். அதனால் மனப் பதைப்பு நீங்கப் பெறல் வேண்டும். இந்த நிலைகளை எய்தப் பெறுவோமானால், சகலகேவலம் அற்ற, நினைப்பு மறப்பு அற்ற, இன்பதுன்பம் அற்ற (இரவு பகல் இல்லாத) இடத்தில் (இறைவன் திருவடி இன்பத்தை அனுபவித்துக் கொண்டு) அசைவற்று இருத்தல் எளிது ஆகும். அல்லாதவர்க்கு எளிது அல்ல.

 

     கேவலம், சகலம் என்கிற நினைப்பு மறப்பு, அற்று இருக்கும் நிலையே ஒப்பும் உயர்வும் இல்லாத நிலை. அந்த நிலையில் பேரின்பம் ஊற்றெடுக்கும். அதை அனுபவிப்பதற்கு உரிய படிநிலைகளைக் கடந்து மேலேறுதல் வேண்டும். அதற்கு இறைவன் திருவருள் துணை நிற்கவேண்டும்.

 

 

 

மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...