கதி ஏதும் காணவில்லை.

 


கதி ஏதும் காணவில்லை

-----

 

     தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், அடிக்கடி கையாளுகின்ற ஒரு வரி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப் பாடல் வரி ஆகும்.  அதைப் பாடியவர் கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர். பெரும்பாலும் அந்தப் பாட்டின் முதல் அடியை மாத்திரம் சொல்லி விட்டு விடுவார்கள்.ஆனால், அந்தப் பாட்டு உலகம் முழுவதும் ஒன்று என்ற நினைப்பை உண்டாக்குவதோடு, வேறு ஒரு கருத்தையும் வற்புறுத்துவதற்காகவும் எழுந்தது என்பது சிந்தனைக்கு உரியது.

 

     "கணி"என்னும் சொல்லுக்கு கணித்தல் என்பதோடு, "சோதிடன்" என்றும் பொருள் உண்டு.  கணியன் என்பது சோதிடனுக்கு உரிய பெயர். பூங்குன்றனார் என்ற அந்தப் புலவர் சோதிடம் நன்றாகத் தெரிந்தவர். முன்னை வினைப்பயனால் இந்தப் பிறவியில் வருகிற விளைவுகளை எல்லாம் ஒருவாறு தெரிந்து சொல்வது சோதிடம். ஆகவே, சோதிட நூலுக்கு அடிப்படையாக நிற்பது விதி. விதியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குச் சோதிடத்தில் நம்பிக்கை இராது. விதியின் வலிமையைத் தெள்ளத் தெளிவாக வற்புறுதிக் கூறியவர் திருவள்ளுவ நாயனார். திருக்குறளில் "ஊழ்" என்று தனியே ஒர் அதிகாரத்தையே வைத்து இருக்கிறார்.  விதிக்கப்பட்டது விதி ஆகும். விதி குறித்து, காப்பியிங்களும் கூறி உள்ளன. கணியன் பூங்குன்றனார் பாடிய பாட்டும் விதியை வற்புறுத்த வந்ததுதான். விதியை மதியால் வென்றால் பரகதி காணலாம்.

 

     கணியன் பூங்குன்றனார் சொல்லுகிறார், "எமக்கு இதுதான் ஊர், இவர்தான் உறவினர் என்ற வேறுபாடு இல்லை. எல்லாம் எமது ஊரே. எல்லாரும் எமக்கு உறவினர்களே. நாம் அடைகின்ற தீமையும், பெறுகின்ற நன்மையும் பிறர் காரணமாக உண்டாகாது. நாம் வருந்துவதும்,  அது தணிந்த பின்னர் மகிழ்வதும், இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளும் தாமை வருவன, பிறரால் வருவன அல்ல. அவற்றுக்குக் காரணம் வேறு ஒன்று. இறப்பு உலகுக்குப் புதிய செயல் அல்ல. அது இயற்கையாக அமைந்ததுதான். மனிதன் தோன்றிய நாள்தொட்டு இறப்பு நிகழ்ந்தே வருகிறது. வாழ்வது மிகவும் இனிமை என்று எண்ணி மகிழ்ச்சி பெறும் இயல்பு எம்மிடத்தில் இல்லை. ஏதாவது தீங்கு வந்துவிட்டால், வாழ்க்கையானது துன்பத்தை மிக உடையது என்று சொல்லித் துடிப்பதும் எம்மிடத்தில் இல்லை. பெரியவர்கள் தம்முடைய அனுபவத்தினாலும், அறிவினாலும் நமக்குப் பலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானது விதியின் விளைவு. அதுவே இன்பம் துன்பம், விருப்பு வெறுப்பு ஆகிய பல வகையான அனுபவங்களைப் பெறச் செய்கிறது. மின்னல் முழங்க இடி இடித்து வானம் துளித் துளியாகப் பெய்யும் குளிர்ந்த மழைநீர், மலைச் சரிவுகளில் அருவியாக வந்து கரையை மோதிக் கொண்டு சமவெளியில் வந்து பெரிய ஆறாக ஒடுகிறது. புது வெள்ளத்தின் ஒட்டம் வேகமாக இருக்கிறது. அந்த ஓட்டத்தில் வருகின்ற ஒரு தெப்பக் கட்டையானது, எந்தத் திசையில் ஆற்று வெள்ளம் போகிறதோ அந்தத் திசையில் போகும். அது எதிர் நீச்சுல் போடுவது இல்லை. அது கட்டை. அதற்கு எதிர்நீச்சல் தெரியவும் தெரியாது. அதுபோல,உயிரானது வாழ்க்கை என்னும் நதியில், விதி என்னும் ஒட்டத்திற்கு ஏற்பப் போய்க் கொண்டிருக்கிறது. அந்த விதிதான் எல்லாவற்றையும் செய்கிறது. இதனை அறிவில் சிறந்த பெரியவர்கள் உணர்த்த உணர்ந்தே இருக்கிறோம். ஆகவே, பெரியவர்களைப் பார்த்து, அவர்கள் மிகப் பெரியவர்கள்,  செயற்கரிய செய்தவர்கள் என்று நாம் வியப்பது இல்லை. அது நியதி. ஒருகால் அவர்களை வியந்தாலும் சிறியவர்களைப் பார்த்து, அவர்கள் செயற்கரிய செய்யாதவர்கள் என்று ஒருபோதும் இகழமாட்டோம். எல்லாவற்றுக்கும் காரணமான விதியின் வழியே உயிர் வாழ்க்கை இயங்குகிறது என்று அவர் பாடினார். 

 

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்; 

தீதும் நன்றும் பிறர்தர வாரா; 

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன; 

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் 

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;முனிவின் 

இன்னாது என்றலும் இலமே;மின்னொடு 

வானம் தண்துளி தலைஇ ஆனாது 

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று 

நீர்வழிப் படுஉம் புணைபோல்,ஆர்உயிர் 

முறைவழிப் படுஉம் என்பது திறவோர் 

காட்சியின் தெளிந்தனம். ஆகலின், மாட்சியின் 

பெரியோரை வியத்தலும் இலமே! 

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” 

 

எவ்வளவு அருமையான கருத்து வாய்ந்த பாடல் இது. இந்தப் பாடலின் உயிர்நாடியாக இருப்பது, "கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர்வழி படுஉம் புணைபோல், ஆர் உயிர் முறைவழிப் படுஉம்" என்பதுதான். 

 

     பெரிய ஆற்றினது நீரோட்டத்தின் வழியே மரக் கட்டை ஒன்று மிதந்து செல்வது போல, உயிரானது விதியின் வழியே தான் செல்லும் என்பது அதன் பொருள். உயிரைத் மரக் கட்டையாகச் சொன்னவர், விதியை ஆற்று நீரோட்டமாகச் சொன்னார். தண்ணீர் இல்லாமல் இருந்தால் அது ஆறு ஆகாது. நீரோட்டம் விதிக்கு ஒப்பானது. நீர் ஓட ஓட, அதன் வேகத்திற்கு ஏற்ப, அது, ஒர் வழியை வரையறுத்துக் கொள்கிறது. அதனால்தான் நதிக்கு ஆறு என்ற பெயர் வந்தது. ஆறு என்னும் சொல்லுக்கு,  நதி, வழி, பக்கம், அறம், சூழ்ச்சி, விதம், இயல்பு, தலைக்கடை என்று பல பொருள்கள் உள்ளன. விதி வாழ்க்கையை வரையறுக்கிறது. விதி வழியே வாழ்க்கை செல்லுகின்றது.

 

     மதி படைத்த மனிதன், விதி என்னும் வெள்ளத்தினால் ஊறு நேராவண்ணம், அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தனது அறிவைச் செலுத்துகிறான். தக்க இடங்களில் கால்வாயையும், குளங்களையும்,ஏரிகளையும் உண்டாக்கி, நற்பயனைப் பெறுகின்றான். அது அவன் அடையும் நல்ல கதி. நல்ல கதியை அடையும் அறிவு இல்லாதவன், ஆற்று வெள்ளத்தால் அதோகதியை அடைகிறான்.

 

     அருணகிரிநாத சுவாமிகள் இதுபோல் கந்தர்அலங்காரத்தில் விதியையும், நதியையும் ஒரு பாடலில் சொல்கிறார். 

 

     நதிக்குக் கரை நிச்சயமாக இருக்கும். ஆனால்,அது எங்கே இருக்கிறதென்று தெரிந்தால்தான் அதனைப் போய்ச் சேரலாம். தெரிந்தாலும் போதாது, முயற்சி பண்ணி அதை அடைய வேண்டும். இருட்டில் இருக்கிறவன் வெள்ளத்தில் மிதக்கிறான்.  முன் பின் போய்ப் பழகின ஆறாக இருந்தாலும், பழக்கத்தால் இன்ன இடத்தில் இருக்கிறோம் என்ற நினைவு இருக்கும். இதுவரைக்கும் போகாத இடம் அது. அது போல, கரை என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்றே தோன்றாது, ஆற்று வெள்ளத்தில் மிதப்பவன் புலம்புவது போல் அருணகிரிநாதப் பெருமான்பாடுகிறார். 

 

     நம்முடைய வாழ்வு பொய்யான வாழ்வு. பொய் என்பதற்கு இரண்டு பொருள உண்டு. உண்மை அல்லாதது, நிலையில்லாதது ஆகிய இரண்டையும் பொய் என்றே சொல்வார்கள். இந்த வாழ்வு நெடுங்காலம் நிலையாக நிற்பது அல்ல. கணத்திற்குக் கணம் மாறுகிறது. ஒரே வகையான அனுபவமும், ஒரே வகையான செயல்களும் நமக்கு இருப்பது இல்லை. காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம், சார்புக்குச் சார்பு இவை மாறுகின்றன. 

 

     ஆற்றில் தண்ணிர் போய்க்கொண்டிருக்கிறது. எப்போதும் ஒரே அளவாகத் தண்ணீர் இருப்பது இல்லை. ஒரு கணம் பார்த்த தண்ணீர், அடுத்த கணத்தில் இருப்பது இல்லை. அது நெடுந்துரம் போய்விடுகிறது. ஆனால், பொதுவாகப் பார்ப்பதற்கு நதியில் எப்போதும் ஒரே தண்ணீர் இருப்பது போலத் தோன்றுகிறது. ஏரியிலும், குளத்திலும் இருக்கும் தண்ணீர் அப்படி அப்படியே தேங்கி நிற்கிறது. ஆனால், ஆற்றில் இருக்கும் தண்ணீரோ அப்படியே இருப்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் தண்ணீர், அடுத்த கணத்தில் வேறு இடத்திற்குப் போய் விடுகிறது.

 

     அதுபோலவே, நமதுவாழ்வில் நாளுக்கு நாள் அனுபவமும்,  அனுபவப் பொருள்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நேற்று உண்டான அனுபவம் இன்று போய்விடுகிறது. புதியதாக ஓர் அனுபவம் வருகிறது.  ஒரு கணத்தில் தோன்றிய எண்ணம் அடுத்தகணம் நிலைத்து நிற்பது இல்லை. புதிய எண்ணம் வந்துவிடுகிறது. நமது சிந்தனையும் கற்பனையும், விருப்பும் வெறுப்பும், இன்ப துன்பங்களும், நட்பும் பகையும், உணவும்,உறக்கமும் கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டே போகின்றன. காலத்திற்குக் காலம் புதியனவாக வருகின்றன. கணந்தோறும் நம் வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. வாழ்வும் அப்படித்தான் மாறிக் கொண்டே இருக்கும்.

 

     ஆற்றிலுள்ள தண்ணீர் ஓடிக் கொண்டே இருப்பதுபோல நம் வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாழ்வு ஆற்றுப் படுகை. விதி என்னும் நீர் ஓடுகிறது. அந்த நீரோட்டத்தில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். ஒரு கரை நல்ல கரை.  மற்றொன்று தீய கரை. இரண்டு கரையும் நமக்குத் தெரியவில்லை. ஒருகால் கரை ஓரமாகப் போகிற வாய்ப்பு நமக்கு இருந்தாலும் அது தீய கரையோரமாகப் போகிறதாகவே முடிகிறது. ஒரு கரையில் பூம்பொழில்கள் இருக்கின்றன; மற்றொரு கரையில் முட்புதர்கள் இருக்கின்றன. அந்தப் பூம்பொழிலே சொர்க்கம். முள் புதர்களாக இருப்பது நரகம். 

 

     நாம் செய்கிற செயல்கள், மீண்டும் மீண்டும் இந்த வாழ்விலேயே நம்மை ஆழ்த்திவிடுகின்றன. ஒன்று நாம் கரையில் ஏற வேண்டும்; அல்லது ஆற்றுவெள்ளத்தோடு கடலில் போய்ச் சேர வேண்டும். நல்ல கரையில் சேர்ந்தால் நல்ல பிறப்புக் கிடைக்கும். தீய கரையில் சேர்ந்தால் தீய பிறப்புக் கிடைக்கும், இந்த இரண்டும் இல்லாமல், கரையைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்க வேண்டுமானால் கடலைச் சார வேண்டும். அந்தக் கடல்தான் இறைவன். கடலைப் போய்ச் சேர்ந்தபின் நதிக்கு ஒட்டம் இல்லை; கரையும் இல்லை.

 

     'ஆறு' என்னும் சொல்லுக்கு 'வழி' என்றும் பொருள் உண்டு. மழைநீர் வெள்ளமாகப் பெருகும்போது, ஓடுவதற்கு வழியாக அமைந்தது ஆறு.மழை நீர் திரண்டு, ஆற்றுப்படுகை முழுவதும் பரந்து வெள்ளம் ஒடுகிறது. ஆற்றில் மழைநீர் பெருகினால் வெள்ளம் பெருகும். குறைந்தால் குறையும். இந்த மனித வாழ்வு ஆற்றைப் போன்றது. நிலையற்றது. நிலையற்ற ஒன்றைப் பொய் என்பர். எனவே, அருணகிரிநார் "நதிதனை அன்ன பொய் வாழ்வு" என்றார். அந்த நதியில் ஒருவன் தான் கொண்டு வந்த மூட்டையோடு மாட்டிக் கொள்ளுகிறான். அந்த மூட்டைதான் இந்த உடம்பு. அது நரம்பால் பொதியப்பட்டு உள்ளது. வாழ்க்கை என்னும் நதியில் மாட்டிக் கொண்டவனை, அந்தப் பொதியானது ஆழ்த்துகிறது. இது பொய் வாழ்வு. நதியிலுள்ள நீர் ஓரிடத்தில் நில்லாமல் ஒடிக்கொண்டிருப்பது போல இந்த வாழ்வு ஒடுகின்றது. 

 

     நதியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவனுக்கு, அந்த ந்தியின் மீதே அன்பு இருந்தால் பயனில்லை.  கரையைச் சேரவேண்டும். அல்லது கடலைச் சேர வேண்டும். கரை என்பது முத்தி. "மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய்" என்பார் மணிவாசகப் பெருமான். கடல் என்பது இறைவன் திருவடி. ஆற்றில் அகப்பட்டுக் கொண்ட ஒருவனுக்கு, கடலைப் பற்றிய எண்ணமே வருவதில்லை. கரையைப் பற்றிய எண்ணமே இயல்பாக வரும். 

 

     வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதனோ,அடுத்த பிறவி நல்ல பிறவியாக வரவேண்டுமென்று எண்ணுவது இல்லை. பிறவியே இல்லாத கருணைக் கடலில் கலக்கவேண்டும் என்று எண்ணுவதும் இல்லை. இப்போதுள்ள வாழ்க்கையில் இன்னும் நெடுங்காலம் இருக்கவேண்டும் என்ற ஆசைதான் மேலிட்டு இருக்கிறது. இந்தப் பொய் வாழ்வில் அத்தனை அன்பு. 

 

     உடம்பு எத்தனையோ துன்பத்தைத் தருவது, நோயைப் பெறுவது, பசி முதலிய குறைபாடுகளை உடையது. இது தெரிந்தும் இதனைப் போற்றியே வாழ்கிறோம். உடம்பை விட்டு விடலாம் என்ற எண்ணம் வருவது இல்லை. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்ற அச்சம் பெரியவர்களுக்கு உண்டாகும். அதனால், அரிதில் பெற்ற இந்த மனிதப் பிறவியிலேயே நல்ல கதியைப் பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் முனைவார்கள்.  சாதாரண மனிதர்களுக்கு பழகின இந்த உடம்பிலுள்ள பற்று விடுவதில்லை. இதையே "நான்" என்று நினைத்து வளர்த்து வருகிறோம். இதுவோ நரம்பால் பொதிந்த பொதி. கழுதை பொதி சுமந்தால்,அதற்கு எந்தவிதமான இலாபமும் இல்லை. பொதியினுடைய பாரம் கழுத்தை அமிழ்த்தும். அப்படித்தான் உயிருக்கு உடம்பு பெரும் துன்பத்தைத் தருகிறது. ஆனால்,உடம்பைப் பாரம் என்றே நாம் எண்ணுவது இல்லை. 

 

     ஞானிகளுக்கு இந்த உடம்பே பெரிய பாரமாகத் தோற்றும். "உடல்பொறை" என்று சொல்லுவார்கள். 

 

"ஊற்றைச் சரீரத்தை,ஆபாசக் கொட்டிலை,ஊன்பொதிந்த 

பீற்றல் துருத்தியை,சோறு இடும் தோற்பையை,பேச அரிய 

காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே 

ஏற்றுத் திரிந்து விட்டேன், இறைவா கச்சி ஏகம்பனே"  --- பட்டினத்து அடிகளார்.

 

     உயிருக்கு பாரமாக உடம்பு இருக்கிறது. வாழ்க்கையில் இந்தச் சுமையைச் சுமந்து கொண்டுள்ள மனிதன் மீட்டும் மீட்டும் அந்த வாழ்க்கையில் அன்புடன் இருக்கிறான். உடம்பின் மீது வைத்த பற்று அகல்வது இல்லை. காரணம் அஞ்ஞானம். உண்மை ஞானம் அல்லது மெய்ஞ்ஞானம் யாருக்குத் தலைப்படுகிறதோ, அவர்களுக்கு முதலில் இந்த உடம்பிலே அருவருப்பு உண்டாகும். 

 

"மானார் விழியைக் கடந்து ஏறி வந்தனன்; வாழ்குருவும்

கோன்ஆகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன்;  குற்றம் இல்லை;

போனாலும் பேறு, இருந்தாலும் நற்பேறு, இது பொய்  அன்றுகாண்;

ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே!"

 

     பெரும்பேற்றினைப் பெற்ற பிளகும் கூட இந்த உடம்போடு இருப்பது அருவருப்புதான் என்கிறார் பட்டினத்து அடிகளார்.

 

     இந்த உடம்புப் பொதியைச் சுமந்துகொண்டு பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த உடம்பைப் பெருக்க வேண்டும் என்றும், இதன் கனம் மேலும் மேலும் ஏற வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார்கள். அதிகமாகச் சுமையை ஏற்றிக் கொள்வதில் அப்படி ஒரு கொண்டாட்டம். மாடு கூடப் பொதி அதிகமானால் திண்டாடும். ஆனால், கனம் ஏற ஏற மனிதனுக்குக் கொண்டாட்டம் மிகுதியாகிறது. இந்த உடம்பைக் கண்டு, பெரியவர்களுக்கோ, திண்டாட்டம் கூடுகிறது. நரம்பால் பொதிந்த இந்த ஊற்றைச் சரீரம் அவர்களுக்கு அருவருப்பை உண்டு பண்ணுகிறது.

 

     பிறர் உடம்பில் நோய் வந்தால் அதைக் கண்டு அருவருக்கிறோம். மற்றவர்களுடைய உடம்பு அசுத்தமாக இருந்தால் அதைக் கண்டு அருவருக்கிறோம். ஆனால், அதே நோயும், அசுத்தமும் நம்மிடத்தில் இருக்கின்றன என்பதை மறந்துவிடுகிறோம். தோல் பளபளவென்று இருப்பதை மாத்திரம் கண்டு ஏமாந்து போகிறோம். கோணிப் பையைத் திருப்பிப் போட்ட மாதிரி உடம்பின் உள்ளே இருப்பதை,அறிவினால் திருப்பிப் போட்டு எண்ணிப் பார்த்தால் நம்மால் சகிக்க முடியாது. "பை மறித்து அனைய போர்வை" இந்த உடம்பு என்கிறார் அப்பர் பெருமான். அந்த எண்ணம் யாருக்கு வருகிறதோ அவர்களுக்கு இந்த உடம்பினால் கொண்டாட்டம் இல்லை. திண்டாட்டமே உண்டு. 

 

     இப்படி நம்மைத் திண்டாடுமாறு விட்டது விதி. நாம் முன் செய்த நல்வினை, தீவினை ஆகியவற்றின் பலன்களை இப் பிறவியில் அனுபவிக்கிறோம். இந்த வாழ்க்கை ஒட்டத்தில் நம்மைப் புகுத்திவிட்டது விதி, அல்லது ஊழ். ஏதேனும் துன்பம் அடைந்தால் அப்போதுதான், விதியைப் பற்றிய நினைவு வருகிறது. விதி என்று நொந்து கொள்கிறோம். துன்பம், இன்பம் என்ற இரண்டுமே இந்த உடம்பில் உள்ள ஐந்து இந்திரியங்களின் அனுபவங்கள். அந்த இரண்டையும் அடைகின்ற இந்திரியங்களும், அவற்றுக்கு இடமாகப் பெரிய சுமையாக இருக்கும் உடம்புமே விதியினால் வந்த விளைவு. 

 

     இவ்வுடம்பு முன் செய்த வினையால் வந்தது.  நல்வினை தீவினைகளைச் செய்வதற்குக் காரணமாக இருப்பது. புனுகு முதலான பூசுபொருள்கள் இவல்லையானால், புலால் நாற்றம் வீசுவது. எப்போதும் இளமையுடன் இருக்கும் என்று சொல். முடியாதது; மூப்பும் சாக்காடும் முன்தோன்ற நிற்பது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக விளங்குவது. ஆசைகள் அலைகள் நிறைந்து இருக்கும் கடல். குற்றங்களை நிறைத்து வைத்து இருக்கும் ஒரு பாண்டம். புற்றிலே பாம்பு தங்கி இருப்பது போலக் கோபம் இருக்கின்ற ஓர் இடம்.  துன்பம், திகைப்பு, மூர்ச்சை அடைதல், வாய்விட்டு அழுதல் முதலான பல தன்மைகளை எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ள உள்ளத்தை உடையது.மக்கள் உடம்பின் இயற்கை இத்தகையது என்று "மணிமேகலை" என்னும் காப்பியம் தெளிவாக எடுத்து இயம்புகின்றது. 

 

"வினையின் வந்தது; வினைக்கு விளைவு ஆயது; 

புனைவன நீங்கின் புலால்புறத்து இடுவது; 

மூப்பு விளிவு உடையது; தீப்பிணி இருக்கை; 

பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம்; 

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை; 

அவலம் கவலை கையாறு அழுங்கல் 

தவலா உள்ளம் தன்பால் உடையது; 

மக்கள் யாக்கை இது"       --- பளிக்கறை புக்க காதை.

 

     இந்த உடம்பே இல்லாவிட்டால் துன்பமே இல்லை, இன்பமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மூலமாக, இடமாக இருக்கிற இந்த உடம்பைத் தந்தது விதி. அந்த விதியைத்தான் நொந்து கொள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

 

     இறைவன் திருவருளால் நமக்கு அறிவு என்ற ஒன்று கிடைத்திருக்கிறது. முன்னாலே பட்ட துன்பத்தையும், அதைக் கொண்டு இனி வருகின்ற விளைவுகளையும் எண்ணிப் பார்க்க நமக்கு அறிவு இருக்கிறது. அந்த அறிவினால் எண்ணிப் பார்ப்பதை விடுத்து, நம்முடைய துன்பங்களுக்கு யார் யாரோ காரணம் என்று எண்ணித் தடுமாறுகிறோம்.அது தவறு. யாரையும் நொந்து கொண்டு பயன் இல்லை. நம்முடைய விதியைத் தான் நொந்துகொள்ள வேண்டும்.

 

"அழுதால் பயன் என்ன? நொந்தால் பயன் என்ன?  ஆவதுஇல்லை

தொழுதால் பயன் என்ன? நின்னை ஒருவர் சுட உரைத்த

பழுதால் பயன் என்ன? நன்மையும் தீமையும் பங்கயத்தோன்

எழுதாப் படி வருமோ? சலியாது இரு ஏழைநெஞ்சே!"

 

என்கிறார் பட்டினத்து அடிகளார்.

 

"ஆவாரை யாரே அழிப்பர்? அது அன்றிச்

சாவாரை யாரே தவிர்ப்பவர்; -ஓவாமல்

ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்;

மெய் அம்புவி அதன் மேல்"       --- ஔவையார்.

 

     நல்வினையின் காரணமாக நெடுங்காலம் வாழக் கூடிய ஒருவரை, நடுவில் கெடுக்கக் கூடியவர் யார்? யாரும் இல்லை. அதுவும் அல்லாமல், இறப்பதற்கு உரியவரை இறவாமல் தடுத்து நிறுத்தக் கூடியவர் யார்? யாரும் இல்லை. எப்பொழுதும் பிச்சை எடுத்து உழல்பவரை யார் தடுத்து நிறுத்த முடியும்? இவை யாவும் உலக இயற்கை.

 

     எனவே, "விதியின் காரணமாக,நதியைப் போன்ற வாழ்வில், நரம்புப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திண்டாடுகிற நான்  எந்தக் கதியினையும் காணவில்லையே!" என்று நொந்து கொள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

 

     கதி என்பது புகலிடம். நதியில் போகிற பொருளுக்கு மூன்று கதி உண்டு.இரண்டு கரைகள், முடிவிடம் ஆகியவை. நாம் பிறக்கும் பிறப்பு வகையைக் கதி என்று சொல்வார்கள். நல்ல கதி, கெட்ட கதி ஆகிய இரண்டும் கரைகள். நல்ல பிறப்பு ஒரு கரை, கெட்ட பிறப்பு ஒரு கரை. இந்த வாழ்வுக்குப் பிறகு ஏதேனும் பிறப்பு எடுத்தால் இதிலும் உயர்ந்ததாக இருக்கலாம்; அல்லது இதிலும் தாழ்ந்ததாக இருக்கலாம். இந்த இரண்டு கரைகளையும் சாராமல்,நேரே கடலில் போய்க் கலப்பதும் உண்டு. கடலில் கலந்த நீர் மீட்டும் திரும்புவது இல்லை. அப்படி இறைவனோடு ஒன்று கலந்த ஆருயிர் மீட்டும் இந்தப் பிறவியில் புகாது. "மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராது".

 

     இருட்டு வழியில் நடக்கின்ற ஒருவனுக்கு, சூரிய ஓளி தோன்றினால்தான் இருக்கின்ற இடமும், போய்ச் சேரவேண்டிய இடமும் விளங்கும். இரவு என்பது அறியாமை. நம் உடம்பு நமக்குச் சுமை என்பதும்,  இந்த வாழ்வு  நம்முடைய புண்ணிய பாவ வினைகளின் விளைவாக உண்டாக்கியது என்பதும்,  இந்த வாழ்வுக்கு அப்பால் பிறப்பற்ற இன்பம் ஒன்று உள்ளது என்பதும் மெய்யறிவு உடையவருக்குத்தான் தோற்றும். இவற்றை எண்ணாமல் நாம் பெற்ற பொருளைப் பெரிதாக, நிலையுடையது போல, எண்ணச் செய்வது அறியாமை. அறியாமை நீங்கினால் துன்பப்படுகிறவனுக்கு, இன்பம் ஒன்று உண்டு என்ற எண்ணம் வேண்டும். பின்பு அதை அடைய முயலுதல் வேண்டும்.

 

     இதற்கு மூலமாக,  முதலில் தன்னை உணர்ந்து கொள்ளும் அறிவு வேண்டும். அந்த அறிவும் இறையருளால்தான் உண்டாகவேண்டும். "தன்னை அறிவது அறிவாம்; அஃது அன்றிப்பின்னை அறிவு அது பேய்அறிவு ஆகுமே" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். தன்னை அறியும் அறிவே அறிவு. பிற அறிவெல்லாம் பேய் அறிவு. ஆவதை விட்டு ஆகாதவற்றை அறிய அலையும் அறிவு. "தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை, தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்" என்றும் திருமூல நாயனார் காட்டினார்.

 

     அறியாமையாகிய இருளை நீக்குகின்ற ஞான ஒளியுடைய முருகன் "ஞானபண்டித சாமி" ஆவான். ஞானசத்தி ஆகிய வேலைத் தனது திருக்கரத்தில் தாங்கி உள்ளான். அது அடியார்களது உள்ளத்திலுள்ள அறியாமை இருளைப் போக்கி, நலம் செய்கிறது. வினையை ஓட விடுகிறது. "வினை ஓடவிடும் கதிர்வேல்" என்றார் கந்தர் அனுபூதியில். "வேலுண்டு வினை இல்லை" என்பது சொல் வழக்கு. ஆகவே,  அஞ்ஞானம் ஆகிய இருட்டில், வாழ்க்கை என்னும் ஆற்று வெள்ளத்தில், உடம்பு என்னும் சுமையோடு மிதக்கின்ற நாம், இறையருளால் முத்தி என்னும் கரையைச் சேரவேண்டும்.

 

     வினையால் அமைந்த வாழ்க்கையில் முடிவு இல்லாமல் பயணம் செய்யும் உயிர், அறிவு பெற்று, உடம்பு பெரும் சுமை என்பதை உணர்ந்து, தான் படுகின்ற துன்பங்களுக்குக் காரணம் அயலார் என்ற எண்ணம் மாறி, விதி என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறது. இதை மதியால் உணர்ந்த பின்னர், இறையருளால் நல்ல கதியை அடையவேண்டும் என்னும் எண்ணம் உண்டாகின்றது. அந்த எண்ணத்தின் உந்துதலால், இறைவனிடம் முறையீடு உண்டாகிறது.

 

     "கந்தக் கடவுளே! வேற்படையை உடைய முருகப் பெருமானே! அடியேன் முத்தி வீட்டை அடைவதற்கு உரிய வழி ஒன்றையும் காணாது இருக்கின்றேன். ஆற்று வெள்ளம் போல நிலையற்ற பொய்யான உலக வாழ்க்கையிலே பற்றுக் கொண்டு, நரம்புகளால் கட்டப்பட்ட உடம்பாகிய மூட்டையைச் சுமந்துகொண்டு துன்பத்தில் உழலுமாறு என்னைப் பிறப்பிக்கச் செய்த எனது விதியினை எண்ணி உள்ளம் நொந்து நொந்து, அடியேனுடைய மனம் வேதனைப்படுகின்றது" என்று முருகவேளிடத்தில் அருணகிரிநாதப் பெருமான் முறையிடுகின்றார். இதுவே நமக்கும் பொருத்தமான முறையீடு ஆகும்.

 

"கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன், கந்த!  வேல்முருகா! 

நதிதனை அன்னபொய் வாழ்வில் அன்பாய், நரம்பால் பொதிந்த 

பொதிதனையும் கொண்டு திண்டாடுமாறு எ(ன்)னைப் போதவிட்ட 

விதிதனை நொந்துநொந்து, இங்கே என்தன் மனம் வேகின்றதே". --- கந்தர் அலங்காரம்.

 

     "கதியாய் விதியாய்" என்று கந்தர் அனுபூதியில் பாடினார். உயிர்களுக்கு கதியாக அமைந்தவனும் இறைவனே. அந்த கதியை அடையவேண்டி,  முற்பிறவிகளில் நாம் ஈட்டிய வினைகளின் பயனாக, இந்த உடலைக் கொண்டு, பற்றுக்களை அறுத்து, நன்னெறியில் வாழ்ந்து, என்னோடு வந்து சேருவாயாக என்று விதித்தவனும் இறைவனே. விதியின் விளைவாகிய வாழ்க்கையினின்றும் கடைத்தேறி, இன்ப வாழ்வை அடைவதற்கு கதியாக அமைந்தவனும் இறைவனே.  பரகதிக்கு உரிய வழியை நாடாமல், பொய்வாழ்வை நம்பி உழலும் நம்மைக் காத்துக் கடைத்தேற்றி நல்ல கதியில் வைத்து அருளுமாறு இறைவனை வேண்டுவோம்.

எமன் வந்தால், என் முன்னே வருவாய்

 


எமன் வந்தால் என் முன்னே வருவாய்

-----

 

     நாம் இந்த உலக வாழ்வில் எத்தனை பாதுகாப்பை செய்து கொண்டாலும், இந்த வாழ்வு முடியும் நாளில் யமனுக்கு முன்னால் நாம் செய்துகொண்ட பாதுகாப்புகள் பயன்படா என்பதை அருளாளர்கள் பலபடப் பாடி உள்ளார்கள். அப்பர் பெருமான், "ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய், ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்"  என்று பாடினார். "யான் ஏதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என்கடவேன்" என்பது மணிவாசகர் வாக்கு. 

 

     அதனால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். "வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன், இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை" என்றும், "கோவாய் முடுகி அடி திறல் கூற்றம் குமைப்பதன் முன், பூவார் அடிச்சுவடு என் மேல் பொறித்து வை" என்றும் அப்பர் பெருமான் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.

 

     எவ்வளவுதான் மன திடம் உடையவனாக ஒருவன் இருந்தாலும், கடைசிக் காலத்தில் அந்தத் தைரியம் உதவுவது இல்லை. இறைவன் திருவருள் முன்நின்று காப்பாற்றினாலொழிய நமது பதவியோ, பலமோ பயன்படுவது இல்லை. ஆகையால், எமனைப் போக்குவதற்குரிய ஆற்றலுடைய இறைவனிடத்தில் இப் பொழுதே விண்ணப்பித்துக் கொண்டு, அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு இருப்பதுதான் எமபயத்தை நீக்குவதற்கு வழி.

 

     எமன் வந்தால் பாதுகாக்க வேண்டுமென்று இறைவனிடம் வேண்டுவது ஒருவகை. இறைவன் திருவருளால் எனக்கு எம பயமே இல்லை என்று சொல்வது ஒருவகை. எமனைப் பார்த்து,உன்னால் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்று அறை கூவுவது ஒருவகை. 

 

     எமனை நாம் நேரில் பார்ப்பது இல்லை. அவன் வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்து இருப்பான்.  கரிய உருவத்தோடு, கையில் பாசத்தைக் கொண்டு நிற்பான் என்றே பலரும் சொல்லி இருக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் அளவிடுகின்ற உருவம் நம் முன்னர்த் தோற்றினால் வேறு எதையும் எண்ணவோ, பார்க்கவோ இயலாது. அவன் மாகத்தை முட்டி வருபவன். "மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன்" என்கிறார் அருணகிரிநாதப் பெருமான்.. அவன் நிச்சயமாக நம்முடைய உயிரைக் கொள்வதற்கு வருவான். அதற்கு முன்னாலே பாதுகாப்புச் செய்யாவிட்டால், அவன் வந்தே திருவான். அந்தப் பாதுகாப்பு இறைவனுடைய திருவருளைத் துணையாகப் பெறுவதுதான். 

 

     அந்தத் துணை வேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் விண்ணப்பம் செய்து கொள்கிறார். "கூற்றுவன் வந்தால் என் முன்னே தோகைப் புரவியில், மயில் வாகனத்தில், நீ தோன்றி நிற்க வேண்டும்"  என்பது அவர் பிரார்த்தனை. எமன் வரும்போது நம்முடைய வாழ்நாளில் நாம் தேக்கி வைத்த, கற்ற அறிவெல்லாம் மறைந்துவிடும். கடவுள் நினைவு போய்விடும். எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு கூற்றுவன் வானத்தை முட்ட வந்து நிற்பான். அப்போது அவனை நாம் என்ன வைதாலும் போகமாட்டான்; அச்சுறுத்தினாலும் போகமாட்டான்; நம்மைக் கண்டு இரங்கியும் போகமாட்டான். "கால பாசம் பிடித்து எழு தூதுவர் பாலகர், விருத்தர், பழையார் எனார்" என்பது அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பாடல். மேலும்,

 

"எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,

அப்போது, அந்தக் கூற்றுவன் தன்னைப்

போற்றவும் போகான்; பொருள்தரப் போகான்;

சாற்றவும் போகான்; தமரொடும் போகான்;

நல்லார் என்னான்; நல்குரவு அறியான்;

தீயார் என்னான்; செல்வர் என்று உன்னான்;

 

தரியான் ஒருகணம் தறுகணாளன்;

உயிர்கொடு போவான்; உடல்கொடு போகான்;

ஏதுக்கு அழுவீர்? ஏழை மாந்தர்காள்!

உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?

உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்

உயிரினை அன்றும் காணீர் இன்றும் காணீர்

உடலினை அன்றும் கண்டீர் இன்றும் கண்டீர்!

 

உயிரினை இழந்த உடல் அதுதன்னைக்

களவு கொண்ட கள்வனைப் போலக்

காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்

கூறை களைந்து கோவணம் கொளுவி,

ஈமத் தீயை எரி எழமூட்டிப்

பொடிபடச் சுட்டுப் புனல் இடைமூழ்கிப்

போய், தமரோடும் புந்தி நைந்து அழுவது

சலம் எனப்படுமோ? சதுர் எனப்படுமோ?"

 

என்பது கபிலர் அகவல்.

 

இதன் பொருள் ---

 

     எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் வருவான். அந்த சமயத்தில், அந்தக் கூற்றுவன் ஆனவன்,தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான். "வேண்டிய பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு" என்று மிக்க பொருளைக் கொடுத்தாலும், அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை நாளடைவில் அவன் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டாகாது. ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான்.  தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான். தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான். 

 

     ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்கமாட்டான், அவன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன், இரக்கம் இல்லாதவன். உயிரைத் தன்னோடு கொண்டு போவான். உடம்பைக் கொண்டு போக மாட்டான். அது பயனற்றது என்று தள்ளி விடுவான். அறத்தைச் செய்யாது இருந்து வாழ்நாளை வீணாக்கி விட்டு, நீங்கள் நிலைத்திருக்கும் என்று கருதி இருந்த உடலை விட்டு விட்டு, உயிரைக் கொண்டு போன மாத்திரத்திலேயே நீங்கள் எதையோ இழந்து விட்டதாக எண்ணி, அறிவற்ற மனிதர்களே! நீங்கள் எதற்கு அழுவீர்கள்? உயிரை இழந்தது கருதி அழுவீர்களா?  உடம்பை இழந்தது கருதி அழுவீர்களா? உயிரை இழந்து விட்டது கருதி அழுகின்றோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உயிர் எப்படி இருக்கிறது என்பதை அன்றும் நீங்கள் கண்டீர்கள் இல்லை; இன்றும் நீங்கள் காணவில்லை. அழியாது எப்போதும் நிலைத்து இருக்கும் என்று கருதி, நீங்கள் போற்றிப் பாதுகாத்த உடம்பானது உயிர் நீங்கின உடனே அழிந்து போகின்றது. அந்த உடம்பை முன்னரும் பார்த்தீர்கள். இப்போதும் பார்க்கின்றீர்கள்.

 

     உயிர் நீங்கிய உடம்பினை, திருட்டுத் தொழிலை மேற்கொண்ட திருடனைக் கட்டுவது போல, இருகால்களையும் சேர்த்துக் கட்டி, இரு கைகளையும் சேர்த்துக் கட்டி,அவனது ஆடைகளைக் களைந்து, கோவணத்தையும் நீக்கி, சுடுகாட்டு நெருப்பை மூட்டி, உடம்பு சாம்பல் ஆகும்படி சுட்டுப் பொசுக்கி, நீரிலே முழுகி எழுந்து போய், சுற்றத்தார்களோடும் கூடி, அறிவு கலங்கி அழுவது, அறியாமை என்று சொல்லப்படுமோ?  அறிவுடைமை என்று சொல்லப்படுமோ?

 

     ஏனவே, உலகத்தில் நாம் வாழும்போது காலத்தை விணே கழித்தாலும், தீய செயல்களில் போக்கினாலும், நம்முடைய வாழ்வுக் காலம் முடியும்போது காலக் கணக்கன் ஆகிய காலன் வந்து நிற்பான். உலகில் பிறந்து இறந்துபடும் உயிர்கள் அத்தனையையும் எமனோ அவனுடைய தூதுவர்களோ கொண்டு போவார்கள். தீயவை செய்கிறவர்களுக்கு எமனுடைய ஆணைக்கு உட்படும் நிலை வரும். இறைவனுடைய திருவருளில் ஈடுபடுகிறவர்களுக்கு எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு போக மாட்டார்கள். சிவகணங்கள் வந்து அடியார்களுடைய உயிரையும், ஞானிகளுடைய உயிரையும் கொண்டு போவார்கள்.  கூற்றுவன் என்ற உருவமும், சிவகணம் என்ற உருவமும் கற்பனை என்று வைத்துக் கொள்ளலாம். உயிரை மேலான நிலைக்குக் கொண்டு செல்லும் சத்தியைச் சிவகணம் என்றும்,  கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் சத்தியைக் கால தூதன் என்று உருவகப்படுத்தினார்கள் என்று கொள்ளலாம். 

 

     நல்லதாக இருந்தாலும், பொல்லாததாக இருந்தாலும் நம் உள்ளத்தில் பதிந்திருக்க வேண்டுமானால், அதற்கு ஒர் உருவம் கொடுக்க வேண்டும். இல்லையானால் மறைந்துவிடும். குழந்தையை அச்சுறுத்துகின்ற தாய் பூச்சாண்டி என்று சொல்லி எதையோ காட்டுகிறாள். அது போல் நமக்கு அச்சம் ஊட்ட வந்த பெரியவர்கள் எமன் என்று காட்டிப் பயமுறுத்தினார்கள். நம்மைப் பயமுறுத்தியது, அந்தப் பயத்தினாலேயே சாவதற்காக அல்ல. கூற்றுவனைச் சொன்னவர்கள் கூற்றுவனுக்குக் கூற்றுவனாக இறைவன் இருக்கிறான் என்பதையும் நினைவூட்டினார்கள் என்பதை மறத்தல் ஆகாது. "அங்கே வெளிச்சம் இல்லை; ஒரே இருட்டாக இருக்கும். ஆகையால் இந்த விளக்கைக் கொண்டு போ"என்று சொல்வாரைப் போல, "நம்முடைய இறுதிக் காலத்தில் எமன் வருவான். ஆனால் இறைவனை நம்பி அவன் திருவருளைப் பெற்றவர்களுக்குக் காலபயம் இல்லாது போகும்"என்று சொல்லி நாம் வாழும்போதே இறைவன் திருவருளைப் பெற முயலவேண்டும் என்பதையே வற்புறுத்தினார்கள். 

 

     அருணகிரிநாதப் பெருமான், முருகப் பெருமானைப் பார்த்து இங்கே, "பெருமானே! கூற்றுவன் வந்தால், அவனை எதிர்த்து ஒட்டுவதற்கு எனக்குத் தைரியம் இல்லை; அந்தச் சமயம் பார்த்து நீ என் முன்னால் வந்து நிற்கவேண்டும்' என்று வேண்டி, "மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன் வந்தால், என்முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்" என்று பாடி உள்ளார்.

 

     எமன் வருவது எருமைக் கடாவின்மேல். முருகன் வருவது அழகான பச்சை மயிலின்மேல். கூற்றுவன் என்ற சொல் உடலினின்றும் உயிரைக் கூறு போடுவதனால் வந்த காரணப் பெயர்.  எல்லாம் இறைவன் படைப்பு, எல்லா உயிர்களும் இறைவனுடைய மக்கள் என்று ஒன்றுபடுத்திப் பார்த்தால், ஒன்று படுத்தும் பேரருளாளன் ஆகிய இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சியான தோகையை உடைய மயிலில் முருகப் பெருமான் வந்து தோன்றினால், அச்சத்தைத் தருகின்ற கூற்றுவன் முன்னே நிற்கமாட்டான். இருளுக்கு மாற்று ஒளி. கூற்றுவனுக்கு மாற்று முருகப் பெருமான். 

 

     "கூற்றுவன் வரும்போது, ஐயோ வந்துவிட்டானே! காப்பாய், பெருமானே!" என்று சொல்வதற்கு அப்போதைக்கு எனக்கு வாய் எழாது. ஆகையால் இப்பொழுதே விண்ணப்பித்துக் கொள்கிறேன். அவன் நிச்சயமாக வரமாட்டான். ஒருகால், வந்தான் என்றால், எனக்கு முன்னே வெகுவேகமாக மயிலின் மீதே எழுந்தருளிக் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 

 

     முருகப் பெருமான் சிவபெருமானுக்குத் திருமகன்; பராசக்தியின் குழந்தை என்று வேறுபடுத்திச் சொல்லாமல், இருவரையும் ஒன்றுபடுத்திச் சொல்கிறார் அருணகிரிநாதப் பெருமான். பரமசிவன் தனது திருமேனியின் இடப் பாகத்தில் அம்பிகையை வைத்திருக்கிறான். அதனால், "அர்த்த நாரீசுவரன்", "உமையொரு பாகன்" என்ற திருநாமம் விளங்குகிறது. 

     

     சிவபெருமான் பெரிய வள்ளல். அவனைத் "தியாகராஜன்" என்று சொல்வார்கள். திருவாரூரில் தியாகராஜன் எழுந்தருளி இருக்கிறான். எல்லா வகைச் செல்வங்களையும் தருபவன் சிவபெருமான். தனக்குள்ள பொருளையும் பிறருக்குக் கொடுக்கிறவன். தன்னை அண்டி எதைக் கேட்டாலும் வரமாகக் கொடுக்கும் பெரியவன் அவன். இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள் அவனைப் போற்றினால் சோறு கிடைக்கும்; கூறை கிடைக்கும்; மனைவி கிடைப்பாள்; மக்கள் கிடைப்பார்கள்; வீடு கிடைக்கும். "இம்மையே தரும் சோறும் கூறையும்; ஏத்தலாம்; இடர் கெடலும் ஆம்; அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே"என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுவார். "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்" என்பது திருஞானசம்பந்தப் பெருமானுடய திருவாக்கு.

 

     எல்லாவற்றையும் விடச் சிறந்த பொருளாக இருப்பது பேரின்பமாகிய முத்தி. அந்த முத்தி அழியாதது; நித்தியமானது. பதமுத்தி என்றும், பரமுத்தி என்றும் இருவேறு முத்தியைச் சாத்திரங்கள் சொல்கின்றன. இந்திரன் முதலியோர் பதங்களில் இருந்து இன்புறுவது பதமுத்தி. இறைவனோடு ஒன்றுபட்டுப் பரமானந்தப் பெருவாழ்வைப் பெறுவது "பரமுத்தி". இந்தப் பரமுத்தியைச் "சுத்தநித்தமுத்தி" என்று அருணகிரிநாதர் சொல்கிறார். அது நித்தியமான வாழ்வு ஆதலின், "சுத்த நித்த முத்தி" என்று சிறப்பிகின்றார். இந்த முத்தியாகிய பெரிய செல்வத்தைச் சிவபெருமான் கொடுக்கிறான்; தியாகம் பண்ணுகிறான். அவன் அசையாதவன். அசையாப் பொருளுக்கு மலையை உவமை சொல்வது ஒரு மரபு. இறைவன் மலையைப் போன்றவன். பரமுத்தி ஆகிய பேரானந்தப் பெருவாழ்வைத் தியாகம் பண்ணுகிற சிவபெருமான் மலையைப் போன்றவன். எனவே, "சுத்த நித்த முத்தித் த்யாகப் பொருப்பு" என்றார். பொருப்பு --- மலை.

 

     தன்னை அண்டி அருள்பெற்றவர்களுக்கு நித்தியமான முத்திச் செல்வத்தை வழங்கும் வள்ளலாகிய அந்தப் பெருமான், தவறு செய்தவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதிலும் சிறந்தவனாக விளங்குகிறான். மூன்று புரங்களைத் தம்முடைய கோட்டைகளாகக் கொண்டு எங்கும் திரிந்து உலகத்திற்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருந்தார்கள் மூன்று அசுரர்கள். அவர்களுடைய கோட்டைகளைத் "திரிபுரம்" என்றும் "முப்புரம்" என்றும் சொல்வார்கள். உயிருக்கு அமைந்துள்ள மூன்று மலங்களையே திரிபுரம் ஆக உருவகம் செய்தார்கள். "முப்புரம் ஆவது மும்மல காரியம்" என்பார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். மும்மலத்தின் உருவமாகிய அம்மூன்று புரங்களையும் இறைவன் சிரித்து எரித்து,  திரிபுரங்களுக்கு எமனாக நின்றான்..

 

     பொதுவாக மக்களுக்கு இரண்டு கண்களே உண்டு. தெய்வங்களுக்கும் இரண்டு கண்கள் உண்டு. நான்கு முகம் படைத்த பிரமனுக்கு எட்டுக் கண்கள். ஒவ்வொரு முகத்திலும் இரண்டு இரண்டு கண்களே இருக்கும். ஆனால், சிவபெருமானுக்கோ மூன்று கண்கள். இது ஒரு சிறப்பு. மூன்றில் ஒன்று சூரியன்; மற்றொன்று சந்திரன்; ஒன்று நெருப்பு. நெற்றியில் குறுக்காக இருக்கிற கண்தான் நெருப்புக் கண், அல்லது ஞானக்கண். அதனை ஆண்டவன் எப்போதும் திறப்பது இல்லை. அஞ்ஞானத்தைச் சுட்டு எரிக்கும் போது திறப்பான். காமன் வேவத் திறப்பான். அவன் ஞானமூர்த்தி. அந்த நெற்றிக்கண், மற்ற இரண்டு கண்களைப் போல நேரே இல்லாமல் குறுக்கே இருப்பதனால், சிவபெருமானை "விரூபாட்சன்" என்று சொல்வார்கள். "த்ரியம்பகன்" என்கிறார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     சிவபெருமான் தன்னுடைய வாமபாகத்தில் உமாதேவியை வைத்திருக்கிறான் என்பதே அடியார்கள் கூறுவது. சின்னஞ்சிறு குழந்தையாகிய முருகன் அம்பிகையின் பக்கத்தில் இருக்கிறான். எப்போதும் சிறு குழந்தைகள் தாயை விட்டு அகலுவது இல்லை. கொஞ்சம் நடக்கக் கற்றுக் கொண்ட பிறகே தந்தையோடு வெளியிலே உலாவும். இல்லாவிட்டால் எப்போதும் தன் தாயின் இடையிலேயே இருக்கும். முருகப் பெருமான் இளம் குழந்தை. அவன் தன்னுடைய தாயின் பக்கத்தில் எப்போதும் இருப்பவன். முருகனை அண்டுகின்ற குழந்தையாக அவனுடைய அடியார்கள் இருக்கிறார்கள். இறைவனைத் தன்னுடைய வலப்பக்கத்தில் வைத்திருக்கிற மேலான மங்கல வாழ்வைத் தருகிற பெருமாட்டி பராசக்தி. அவளை, "பரமகல்யாணி" என்கிறார் அருணகிரிநாதப் பெருமான். கல்யாணம் - மங்கலம். என்றைக்கும் மங்கலம் உடையவன் அவள். உலகில் உள்ள எல்லா மங்கலங்களுக்கும் மேலான மங்கலத்தைப் பெற்றவள் அந்த அம்மை.. "சுத்த நித்தமுத்தித் த்யாகப் பொருப்பை, திரிபுராந்தகனை, திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி".

 

     'தன்னை வழிபட்டு அருள் பெற்றவர்களுக்கு நித்திய வாழ்வாகிய பரமுத்தியைத் தரும் வள்ளலும், மூன்று மலங்களின் உருவாக இருந்த மூன்று புரங்களையும் எரித்த ஞான சொரூபியும், யாருக்கும் இல்லாத சிறப்பான மூன்று கண்களை உடையவனும் ஆகிய சிவபெருமானைத் தன்னுடைய வலப்பாகத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் மேலான மங்கலத்தை அருள்பவள் ஆகிய அம்பிகையின் குழந்தையே என்று முருகப் பெருமானைத் துதி செய்கிறார் அருணகிரிநாதர். 

 

     உயிர்களுக்கு முத்தியை அருள்பவர் சிவபரம்பொருள். ஐம்முகச் சிவம் தந்தாலும், அறுமுகச் சிவம் தந்தாலும் முத்தி ஒன்றுதான். கூற்றுவன் வரும்போது, தன் முன்னே தோன்றி சுத்த நித்த முத்தியை அருள்புரிய வேண்டும் என்று அருணகிரிதாப் பெருமான் பாடியருளிய பாடலைப் பார்ப்போம்.

 

"மாகத்தை முட்டி வரும்நெடுங் கூற்றன் வந்தால், என்முன்னே

தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்,சுத்த நித்தமுத்தித் 

த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந்தகனை த்ரியம்பகனைப் 

பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி தன் பாலகனே!" 

 

இதன் பொருள் ---

 

     தூய்மையும், என்றும் அழிவின்மையும் உடைய முத்தியை வழங்கும் கொடைத் தன்மையில் மலை போல விளங்குபவரும், முப்புரங்களை எரித்தவரும், மூன்று கண்களை உடையவரும் ஆகிய சிவபரம்பொருளைத் தனது திருமேனியின் வலப்புரத்தில் வைத்திருக்கும், மேலான கலியாண குணங்களை உடைய உமையம்மையாரின் திருமைந்தரே! வானத்தை முட்டி வருகின்ற நெடிய இயமன், எனது வாழ்நாளின் இறுதிக் காலத்தில் வருவானாயின், தோகையை உடைய மயில்வாகனம் ஆகிய குதிரையின் மீது எறிக் கொண்டு தோன்றி நின்று அடியேனுக்கு முன்பாக நின்று திருவருள் புரிவீர்.

 

     "வந்தால்" என்றதனால், இறையடியார்களைக் கண்டாலே எமன் அவர்களை நெருங்கமாட்டான் என்பதும், "ஒருவேளை வந்தான் என்றால்" என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

 

     அப்பர் பெருமான் அருளிய "காலபாசத் திருக்குறுந்தொகை" என்னும் திருப்பதிகத்தில் எமனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்த ஒரு பாடல் வருமாறு---

 

"படையும் பாசமும் பற்றிய கையினீர்!

அடையன்மின் நமது ஈசன் அடியரை,

விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்

புடை புகாது, நீர் போற்றியே போமினே".

 

"படைக்கலமும் பாசக்கயிறும் பற்றிய கையை உடைய கால தூதுவர்களே! நமது ஈசன் அடியரை அடையாதீர்; இடபத்தை ஊர்தியாகக் கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் பக்கத்தில் கூடப் போகாமல், நீங்கள் அவர்களை வழிபட்டுப் போவீராக".

 

     "சுத்த நித்த முத்தி" என்னும் சொற்றொடரை, சுத்தமுத்தி, நித்தமுத்தி என்று கூட்ட வேண்டும். முத்தி த்யாகம் என்று சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். 

 

     "முக்தி" என்பது வடசொல். "முத்தி" என்பது அருமையான,பொருள் பொதிந்த தமிழ்ச் சொல். "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். பாசங்களில் இருந்து விடுபடுகின்ற நிலைமுத்திஎனப்படும். எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும். "முத்து" என்னும் சொல்லுக்கு, அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.முத்தியை அருள்கின்ற முருகன், முத்துமாலைகளை அணிந்து இருப்பான். இதனை, "கழைமுத்து மாலை" எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலால் அறியலாம்.

 

     சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டைத் தணிப்பது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது.

 

     கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.

 

     பிற மணிகள் பட்டை தீட்டினால் அன்றி ஒளி விடா. முத்து இயல்பாகவே ஒளி விடும். பட்டை தீட்ட வேண்டுவது இல்லை. முத்து நவமணிகளுள் சிறந்தது. முத்தினை உடம்பில் அணிந்து கொள்வதால் நன்மைகள் பல உண்டு. 

 

     காலனுக்கும் காலன் ஆனவர் சிவபெருமான். அவருக்குக் "காலகாலன்" என்று திருப்பெயர் உண்டு. அவரது ஆற்றலாக வெளிப்பட்டு அருளிய முருகப் பெருமானும் அப்படிப்பட்டவரே. எனவே, அடியார்களுக்குக் காலபயம் இல்லை.

 

 

மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...