திருத் தவத்துறை --- 0926. காரணியும் குழல்

                                                              அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கார்அணியும் குழல் (திருத்தவத்துறை)

 

முருகா! 

விலைமாதர் உறவு அற அருள்வாய்

 

 

தானன தந்தன தத்த தத்தன

     தானன தந்தன தத்த தத்தன

          தானன தந்தன தத்த தத்தன ...... தனதான

 

 

காரணி யுங்குழ லைக்கு வித்திடு

     கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்

          காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே

 

காதள வுங்கய லைப்பு ரட்டிம

     னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி

          காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப்

 

பூரண கும்பமெ னப்பு டைத்தெழு

     சீதள குங்கும மொத்த சித்திர

          பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான

 

போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்

     யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு

          பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே

 

வீரபு யங்கிரி யுக்ர விக்ரம

     பூதக ணம்பல நிர்த்த மிட்டிட

          வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட

 

வீசிய பம்பர மொப்பெ னக்களி

     வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்

          வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா

 

சீரணி யுந்திரை தத்து முத்தெறி

     காவிரி யின்கரை மொத்து மெத்திய

          சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே

 

சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட

     மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய

          தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ......பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

கார்அணியும் குழலைக் குவித்துடு

     கோகனகம் கொடு மெத்து எனப் பிறர்

          காண வருந்தி முடித்திடகடு ...... விரகாலே

 

காது அளவும் கயலைப் புரட்டி

     மனாதிகள் வஞ்சம் மிகுத்திடப் படி

          காமுகர் அன்பு குவித்த கைப்பொருள்...... உறவாகிப்

 

பூரண கும்பம் எனப் புடைத்து எழு

     சீதள குங்குமம் ஒத்த சித்திர

          பூஷித கொங்கையில் உற்று,முத்துஅணி ......பிறையான

 

போருவை ஒன்று நெகிழ்த்து உருக்கி,மெய்

     யாரையும் நெஞ்சை விலைப் படுத்திடு

          பூவையர் தங்கள் மயக்கை விட்டிட ...... அருள்வாயே.

 

வீர புயங்கிரி உக்ர விக்ரம

     பூத கணம் பல நிர்த்தம் இட்டிட,

          வேகமுடன் பறை கொட்டிடகழுகு ...... இனம்ஆட,

 

வீசிய பம்பரம் ஒப்பு எனக் களி

     வீச நடம் செய் விடைத் தனித் துசர்,

          வேத பரம்பரை உள் களித்திட ...... வரும்வீரா!

 

சீர் அணியும் திரை தத்து முத்து எறி

     காவிரியின் கரை மொத்து மெத்திய

          சீர் புனைகின்ற திருத்தவத்துறை ...... வரும்வாழ்வே!

 

சீறி எதிர்ந்த அரக்கரைக் கெட

     மோதி,அடர்ந்து,அருள் பட்சம் முற்றிய,

          தேவர்கள் தம்சிறை வெட்டி விட்டருள் ......பெருமாளே.

 

 

பதவுரை

 

            வீர புயம் கிரி உக்ர விக்ரம--- வீரம் மிக்கமலைபோலும்திருத் தோள்களை உடைய வலிமை வாய்ந்தவரே!

 

            பூத கணம் பல நிர்த்தம் இட்டிட--- பூதகணங்கள் பல நடனம் புரிய,

 

            வேகமுடன் பறை கொட்டிட --- பறைவாத்தியங்கள் விரைந்து முழங்,

 

            கழுகு இனம் ஆட--- கழுகுக் கூட்டங்கள் ஆட,

 

            வீசிய பம்பரம் ஒப்பு எனக் களி வீச--- வீசி எறியப்பட்ட பம்பரம் போல களிப்புடன்,

 

            நடம் செய் விடை தனித் துசர்--- திருநடனம் புரிகின்றவரும்விடைக் கொடியை உயர்த்தியவரும் ஆன சிவபெருமானும்,

 

           வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா--- வேதங்கள் துதித்துப் போற்றுகின்ற பரம்பொருளான உமையம்மையும் உள்ளம் மகிழ வருகின்ற வீரரே! 


           சீர் அணியும் திரை தத்து--- ஒழுங்கான அலைகள் ததும்புகின்றதும்,

 

முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய சீர் புனைகின்ற--- முத்துக்களை கரையில் வீசி அழகு செய்கின்ற காவிரியின் கரையில் விளங்குகின்,

 

திருத்தவத்துறை வரும் வாழ்வே--- திருத்தவத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள செல்வமே!

 

சீறி எதிர்த்த அரக்கரைக் கெட மோதி அடர்ந்து--- சினத்துடன் சீறி வந்து எதிர்த்துப் போர் புரிந்த அரக்கர்களை மோதி அழித்து,

 

அருள் பட்ச(ம்) முற்றிய தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு--- அருளும் அன்பும் நிறைந்த தேவர்கள் இருந்த சிறையை வெட்டி விட்டு,

 

அருள் பெருமாளே--- அருள் புரிந்த பெருமையில் மிக்கவரே!

 

            கார் அணியும் குழலைக் குவித்து--- மேகத்தை ஒத்த கூந்தலை குவித்து வைத்து,

 

            இடு கோகனகம் கொடு மெத்தென--- அதில் செந்தாமரையினை ஒத்த பொன்னால் ஆன அணியை மென்மையாக,

 

            பிறர் காண வருந்தி முடித்திட--- பிறர் காணும்படியாக சிரமப்பட்டு முடித்து வைத்து

 

            கடு விரகாலே காது அளவும் கயலைப் புரட்டி--- கடிய தந்திரத்தால்,தமது கயல் மீன் போன்ற கண்களைக் காது வரையில் புரளச் செய்து

 

            மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இட--- மனம் முதலான கரணங்கள் எல்லாம் வஞ்சகமே மிகுந்து இருக்க,

 

            படி காமுகர் --- தங்களிடம் வந்து பொருந்துகின்ற காமுகர்கள்,

 

            அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி---அறிவு மயக்கத்தால் அன்பு பூண்டு கொண்டு வந்து குவிக்கின்ற கைப்பொருள் காரணமாக அவர்களுடன் உறவு கொண்டு,

 

            பூரண கும்பம் என--- பூரண கலசத்தைப் போன்று,

 

            புடைத்து எழு--- பக்கங்களில் புடைத்து எழுந்துள்ள,

 

            சீதள குங்குமம் ஒத்த சித்திர பூஷித கொங்கையில் உற்று--- குளிர்ந்த செஞ்சாந்து பூசப்பட்டுள்ளஅலங்கரிக்கப்பட்ட அழகுள்ள கொங்கைகளை மார்பில் பொருந்த வைத்து,

 

            முத்து அணி பிறையான போருவை ஒன்று நெகிழ்த்து உருக்கி மெய்--- முத்துக்களால் ஆனபிறை போன்ற ஆபரணம் ஒன்றைத் தளர்த்திதமதுஉடலை உருக்கி

 

            யாரையும் நெஞ்சை விலைப்படுத்திடு--- யாவராய் இருந்தாலும் அவர்களது உள்ளத்தை மயக்கித் தமக்கு விலையாகும்படி செய்கின்,

 

            பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே--- விலைமாதர் மீது உண்டான மயக்கத்தை விட்டு ஒழிக்கத் திருவருள் புரிவாயாக.

 

 

பொழிப்புரை

 

     வீரம் மிக்கமலைபோலும்திருத் தோள்களை உடைய வலிமை வாய்ந்தவரே!

 

            பூதகணங்கள் பல நடனம் புரியபறைவாத்தியங்கள் விரைந்து முழங்,கழுகுக் கூட்டங்கள் ஆடவீசி எறியப்பட்ட பம்பரம் போல களிப்புடன் திருநடனம் புரிகின்றவரும்விடைக் கொடியை உயர்த்தியவரும் ஆன சிவபெருமானும்,வேதங்கள் துதித்துப் போற்றுகின்ற பரம்பொருளான உமையம்மையும் உள்ளம் மகிழ வருகின்ற வீரரே! 

 

ஒழுங்கான அலைகள் ததும்புகின்றதும்முத்துக்களை கரையில் வீசி அழகு செய்கின்றதும் ஆன காவிரியின் கரையில் விளங்குகின்,திருத்தவத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள செல்வமே!

 

சினத்துடன் சீறி வந்து எதிர்த்துப் போர் புரிந்த அரக்கர்களை மோதி அழித்து,அருளும் அன்பும் நிறைந்த தேவர்கள் இருந்த சிறையை வெட்டி விட்டு அவர்களை வெளியில் விடுவித்துஅருள் புரிந்த பெருமையில் மிக்கவரே!

 

மேகத்தை ஒத்த கூந்தலை குவித்து வைத்துஅதில் செந்தாமரையினை ஒத்த பொன்னால் ஆன அணியை மென்மையாகப் பிறர் காணும்படியாக சிரமப்பட்டு முடித்து வைத்து,  கடிய தந்திரத்தால்,தமது கயல் மீன் போன்ற கண்களைக் காது வரையில் புரளச் செய்து

மனம் முதலான கரணங்கள் எல்லாம் வஞ்சகமே மிகுந்து இருக்கதங்களிடம் வந்து பொருந்துகின்ற காமுகர்கள்அறிவு மயக்கத்தால் அன்பு பூண்டுகொண்டு வந்து குவிக்கின்ற கைப்பொருள் காரணமாக அவர்களுடன் உறவு கொண்டு,பூரண கலசத்தைப் போன்று,பக்கங்களில் புடைத்து எழுந்துள்ள,குளிர்ந்த செஞ்சாந்து பூசப்பட்டுள்ளஅலங்கரிக்கப்பட்ட அழகுள்ள கொங்கைகளை மார்பில் பொருந்த வைத்துமுத்துக்களால் ஆனபிறை போன்ற ஆபரணம் ஒன்றைத் தளர்த்திதமதுஉடலை உருக்கியாவராய் இருந்தாலும் அவர்களது உள்ளத்தை மயக்கித் தமக்கு விலையாகும்படி செய்கின்ற விலைமாதர் மீது உண்டான மயக்கத்தை விட்டு ஒழிக்கத் திருவருள் புரிவாயாக.

 

 

விரிவுரை

 

 

கோகனகம் கொடு மெத்தென--- 

 

கோகனகம் --- செந்தாமரை.

 

 

மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இட--- 

 

மனாதிகள் --- மனம் முதலான கருவிகள்.

 

மனம்புத்திசித்தம்அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கு.

 

பிறையான போருவை ---

 

பிறை என்பது மகளிர் அணியும் அணிகலன்களில் வரு வகை. 

 

போருதல் --- போர்த்துதல்.

 

யாரையும் நெஞ்சை விலைப்படுத்திடு--- 

 

..........         ..........         .......எவரேனும்

நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள்,

     காசு இலாதவர் தங்களை அன்புஅற,

          நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள்,...... அவர்தாய்மார்

நீலி நாடகமும் பயில் மண்டைகள்,

     பாளை ஊறு கள்உண்டிடு தொண்டிகள்,

          நீசரோடும் இணங்கு கடம்பிகள் ...... உறவு ஆமோ?

 

எனத் திருச்செந்தூர்த் திருப்புகழில் அடிகளார் பாடியருளியதை அறிக.

 

குணத்தாலும் குலத்தாலும் ஒழுக்கத்தாலும் எத்துணை இழிந்தவர்களாய் இருப்பினும் அவர்களுடன் கலந்து மகிழ்வர் பொதுமகளிர். யாராக இருந்தாலும், (மிகக் கேவலமானவர் என்றாலும்) தம்மிடத்து வந்தவர்களை இருத்தி, "நீர் மன்மதன்இந்திரன்சந்திரன்" என்று பதங்களை இன்னிசையுடன் பாடி மயக்குவர்.பணம் இல்லாதவர்களைப் பார்த்து, “நீர் இங்கு வருவது முறையன்றுஉமது மனைவிக்குத் துரோகம் புரியக் கூடாது. என்ன இருந்தாலும் மனைவிதான் இம்மைக்கும் மறுமைக்கும் துணை. ஆகவே நீர் உமது மனைவியுடன் இருந்து குடித்தனம் புரிவதே நலம்” என்று நீதிநெறிகள் கூறுவதுபோல் கூறி அனுப்புவர். இந்த நீதியை முன்பே சொல்லியிருந்தால்உத்தமர்கள் ஆவர். 

 

கழுகு இனம் ஆட--- 

 

"கழுது இனம் ஆட" என்பது பாடமாக இருந்தால்பேய்கள் கூட்டமாக ஆட என்ற பொருள் கொள்ளலாம்.

 

வீசிய பம்பரம் ஒப்பு எனக் களி வீச,நடம் செய் விடை தனித் துசர்--- 

 

விசி எறியப்பட்ட பம்பரமானது வேகமாகச் சுழலுவது போகளிப்புடன் திருநடம் புரிபவர் சிவபெருமான். "பம்பரமே போல ஆடிய சங்கரி" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் கூறி உள்ளார். 

 

துசம் --- கொடி. துவசம் என்னும் சொல்,பாடலின் அமைதிக்கு,துசர் என வந்தது.

 

தனி -- சிறப்பாஒப்பற்ற.

 

திருத்தவத்துறை வரும் வாழ்வே--- 

 

லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஊருள் செல்லும் சாலையில் நேரே சென்று ரயில்வே லைனைக் கடந்து - சுமார் 2 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். திருச்சிக்கு அருகாமையில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.தற்போது மக்கள் வழக்கில் "லால்குடி" என்று வழங்குகிறது. இது ஒரு தேவார வைப்புத் தலம் ஆகும்.

 

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் உறவு அற அருள்வாய்

 

  

 

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...