நெரூர் --- 0938. குருவும் அடியவர்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

குருவும் அடியவர் (நெருவூர்)

 

முருகா! 

உனது திருவடிகளை ஒருபோதும் மறவேன்.

 

 

தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன

          தனன தனதன தனதன தனதன ...... தனதான

 

 

குருவு மடியவ ரடியவ ரடிமையு

     மருண மணியணி கணபண விதகர

          குடில செடிலினு நிகரென வழிபடு ......       குணசீலர்

 

குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்

     அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி

          குசல கலையிலி தலையிலி நிலையிலி ......விலைமாதர்

 

மருவு முலையெனு மலையினி லிடறியும்

     அளக மெனவள ரடவியில் மறுகியு

          மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே

 

வயலி நகரியி லருள்பெற மயில்மிசை

     யுதவு பரிமள மதுகர வெகுவித

          வனச மலரடி கனவிலு நனவிலு ......    மறவேனே

 

உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு

     மருது நெறிபட முறைபட வரைதனில்

          உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி

 

உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி

     கவிகை யிடவல மதுகையு நிலைகெட

          வுலவில் நிலவறை யுருவிய வருமையு .....மொருநூறு

 

நிருப ரணமுக வரசர்கள் வலிதப

     விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு

          நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே

 

நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய

     குடக தமனியு நளினமு மருவிய

          நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

குருவும்,அடியவர்,அடியவர் அடிமையும்,

     அருண மணிஅணி கணபண விதகர

          குடில செடிலினும் நிகர்என வழிபடு...... குணசீலர்

 

குழுவில் ஒழுகுதல், தொழுகுதல், விழுகுதல்,

     அழுகுதலும் இலி, நலம்இலி, பொறைஇலி,

          குசல கலைஇலி, தலைஇலி, நிலைஇலி, ......விலைமாதர்

 

மருவு முலைஎனும் மலையினில் இடறியும்,

     அளகம் என வளர் அடவியில் மறுகியும்,

          மகரம் எறிஇரு கடலினில் முழுகியும், ...... உழலாமே,

 

வயலி நகரியில் அருள்பெற, மயில்மிசை

     உதவு, பரிமள மதுகர வெகுவித

          வனச மலர் அடி கனவிலும் நனவிலும் ......மறவேனே.

 

உருவு பெருகு அயல் கரியதுஒர் முகில் எனும்

     மருது நெறிபட, முறைபட, அரைதனில்

          உரலினொடு தவழ் விரகு உள இளமையும்,.....மிக மாரி

 

உமிழ, நிரைகளின் இடர்கெட, அடர்கிரி

    கவிகை இடவல மதுகையும், நிலைகெட

          உலவில் நிலவறை உருவிய அருமையும், .....ஒருநூறு

 

நிருப ரணமுக அரசர்கள் வலி தப,

     விசயன் ரதம் முதல் நடவிய எளிமையும்,

          நிகில செகதலம் உரைசெயும் அரிதிரு ......மருகோனே!

 

நிலவு சொரி வளை வயல்களும், நெடுகிய

     குடக தமனியும், நளினமும் மருவிய,

          நெருவை நகர்உறை திருவுரு அழகிய ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

உருவு பெருகு அயல்--- உருவில் பெரியதாய் பக்கத்தில் இருந்,

 

கரியது ஒர் முகில் எனும் மருது நெறிபட---கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழ

 

முறைபட--- (அதனால்) நீதி வெளிப்பட,

 

            அரைதனில் உரலினொடு தவழ் விரகு உள இளமையும் ---. (இடுப்பில் கட்டிய) மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட இளமை அழகையும்

 

            மிக மாரி உமிழ--- வலுத்த மழை பொழி,

 

            நிரைகளின் இடர்கெட --- பசுக் கூட்டங்களின் துயரம் கெடுமாறு,

 

           அடர்கிரி கவிகை இடவல மதுகையும்--- நெருங்கிய (கோவர்த்தன) மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையின் வல்லமையையும்

 

            நிலைகெட--- நிலைதடுமாறும்படியா,

 

            உலவு இல்--- உலவுதற்கு இடம் இல்லா,

 

            நிலவறை உருவிய அருமையும்--- பாதாள அறையில் இருந்து வெளிப்பட்ட அருமையும்,

 

            ஒரு நூறு நிருப ரணமுக அரசர்கள் வலிதப--- ஒப்பற்ற நூறு (துரியோதனன் முதலிய) அரசர்களும்போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய

 

            விசயன் ரத முதல் நடவிய எளிமையும்--- அருச்சுனனுடைய தேரை முன்பு செலுத்திய (அடியார்க்கு உதவும்) எளிமையையும் பற்றி

 

            நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே--- எல்லா உலகங்களும் புகழ்ந்து உரைக்கும் (கண்ணனாம்) திருமாலின் திருமருகரே!

 

            நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய--- ஒளி வீசும் சங்குகளும் வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும்

 

            குடக தமனியு(ம்) நளினமும் மருவிய--- மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய

 

            நெருவை நகர் உறை திருஉரு அழகிய பெருமாளே--- நெருவை என்னும் நகரில் வீற்றிருக்கும்அழகிய திருவுருவம் கொண்ட பெருமையில் மிக்கவரே!

 

            குருவும் அடியவர் அடியவர் அடிமையும்--- குருவின் நிலையிலும்சீடனாக இருக்கும் போதும் சீடருக்கு அடிமையாக இருக்கும் நிலையிலும்

 

            அருண மணி அணி--- சிவந்த இரத்தினங்களைக் கொண்டுள்ள,

 

            கணபண--- படங்களை உடைய

 

           விதகர குடில செடிலினும்--- தன்மை அமைந்த வளைவுள்ள செடிலாட்டக் கருவியில் இருக்கும் நிலையிலும்  

 

            நிகர் என வழிபடு--- ஒரு தன்மையாக இருந்து வழிபடுகின்,

 

           குணசீலர் குழுவில் ஒழுகுதல்,தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி--- நற்குணங்களை உடைய சீலர்களின் திருக்கூட்டத்தைச் சேர்ந்து இருந்து,அவர்கள் வழி நடத்தல்அவர்களை வணங்குதல்அவர்கள் திருவடிகளில் விழுந்து வணங்குதல்பத்திப் பரவசத்தால் அழுதல் ஆகிய (நற்பண்புகள்) ஏதும் நான் இல்லாதவன்

 

            நலம் இலி--- நன்மை இல்லாதவன்,

 

           பொறை இலி--- பொறுமை இல்லாதவன்,

 

           குசல கலைஇலி --- நன்மை தரும் நூல்களைக் கல்லாதவன்,

 

           தலைஇலி--- சிந்திக்கத் தெரியாவதன்,

 

           நிலைஇலி--- நிலைத்த அறிவு இல்லாதவன்(ஆகிய அடியேன்)

 

            விலைமாதர் மருவு முலை எனும் மலையினில் இடறியும்--- விலைமாதர்களின் மலை போன்ற மார்பகங்களில் இடறி விழுந்தும், 

 

           அளகம் என வளர் அடவியில் மறுகியும்--- கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம் மயக்கமுற்றுத் திரிந்தும்

 

            மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே--- மகர மீன்களைப் போல் (காது வரை நீண்டு அங்குள்ள குண்டலங்களைத்) தாக்கும் இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலையாமல்

 

            வயலி நகரியில் அருள்பெற--- வயலூர் என்னும் திருத்தலத்தில் அடியேன் அருளைப் பெறுமாறு,

 

            மயில்மிசை உதவு--- மயில் மீது வந்து காட்சி தந்து உதவி,

 

            பரிமள--- நறுமணம் பொருந்தியதும்,

 

           வெகுவித மதுகர--- பலவிதமான வண்டுகள் மொய்த்துள்ளதும்ஆகிய,

 

            வனச மலர்அடி கனவிலும் மறவேனே --- தாமரை மலர் போன்ற திருவடிகளைக் கனவிலும் (நனவிலும்) அடியேன் மறக்க மாட்டேன்.

 

பொழிப்புரை

 

உருவில் பெரியதாய் பக்கத்தில் இருந்,கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழஅதனால் நீதி வெளிப்படஇடுப்பில் கட்டிய மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட இளமை அழகையும்,  வலுத்த மழை பொழி,பசுக் கூட்டங்களின் துயரம் கெடுமாறுநெருங்கிய கோவர்த்தன மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையின் வல்லமையையும்நிலைதடுமாறும்படியா,உலவுதற்கு இடம் இல்லா,பாதாள அறையில் இருந்து வெளிப்பட்ட அருமையும்துரியோதனன் முதலிய ஒப்பற்ற நூறு அரசர்களும்,போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழியஅருச்சுனனுடைய தேரை முன்பு செலுத்திஅடியார்க்கு உதவும் எளிமையையும் பற்றிஎல்லா உலகங்களும் புகழ்ந்து உரைக்கும் (கண்ணனாம்) திருமாலின் திருமருகரே!

 

            ஒளி வீசும் சங்குகளும் வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும்மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகியநெருவை என்னும் நகரில் வீற்றிருக்கும்அழகிய திருவுருவம் கொண்ட பெருமையில் மிக்கவரே!

 

            குருவின் நிலையிலும்சீடனாக இருக்கும் போதும் சீடருக்கு அடிமையாக இருக்கும் நிலையிலும்சிவந்த இரத்தினங்களைக் கொண்டுள்ள படங்களை உடையதன்மை அமைந்த வளைவுள்ள செடிலாட்டக் கருவியில் இருக்கும் நிலையிலும் ஒரு தன்மையாக இருந்து வழிபடுகின்ற நற்குணங்களை உடைய சீலர்களின் திருக்கூட்டத்தைச் சேர்ந்து இருந்து,அவர்கள் வழி நடத்தல்அவர்களை வணங்குதல்அவர்கள் திருவடிகளில் விழுந்து வணங்குதல்பத்திப் பரவசத்தால் அழுதல் ஆகிய (நற்பண்புகள்) ஏதும் நான் இல்லாதவன்நன்மை இல்லாதவன்பொறுமை இல்லாதவன்நன்மை தரும் நூல்களைக் கல்லாதவன்சிந்திக்கத் தெரியாவதன்நிலைத்த அறிவு இல்லாதவன்ஆகிய அடியேன்,விலைமாதர்களின் மலை போன்ற மார்பகங்களில் இடறி விழுந்தும்,கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம் மயக்கமுற்றுத் திரிந்தும்மகர மீன்களைப் போல் காது வரை நீண்டு அங்குள்ள குண்டலங்களைத் தாக்கும் இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலையாமல்வயலூர் என்னும் திருத்தலத்தில் அடியேன் அருளைப் பெறுமாறுமயில் மீது வந்து காட்சி தந்து உதவி,நறுமணம் பொருந்தியதும்பலவிதமான வண்டுகள் மொய்த்துள்ளதும்ஆகிய,

தாமரை மலர் போன்ற திருவடிகளைக் கனவிலும் நனவிலும் அடியேன் மறக்க மாட்டேன்.

 

 

விரிவுரை

 

குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கணபண விதகர குடில செடிலினும் நிகர் என வழிபடு குணசீலர் --- 

 

ஆசாரியர் நிலையில் இருந்தாலும்,  ஆசாரியனுக்கு அடியவர் நிலையில் இருந்தாலும்அடியவர்க்கு அடிமை பூண்டு ஒழுகும் நிலையில் இருந்தாலும்மற்ற நிலைகளில் இருந்தாலும்,இறைவழிபாட்டில் இருந்து மனம் மாறாத நல்ல ஒழுக்க குணத்தை உடையவர்கள்.

 

செடில் மரம் ஏறுவது என்பது இக் காலத்திலும் திருவிழாக்களில் நிகழ்கின்றதைக் காணலாம்.

 

குணசீலர் குழுவில் ஒழுகுதல்,தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி--- 

 

இறைவனுடைய திருப்புகழைக் கூறும் அருள் நூல்களை ஓதித் தெளிந்துமனதாரத் துதித்து வழிபாடு புரிதல் வேண்டும். அதுவே பிறப்பு எடுத்ததன் பயன்.

 

"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுதற்கு அரிய பிறவி இந்த மானிடப் பிறவி. இந்தப் பிறவி வாய்த்ததன் பயனாக இறைவனை மனதார எண்ணி நாளும் வழிபட வேண்டும். இறைவன் திருப்புகழைப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாள்களே ஆகும். இறைவன் திருப்புகழைப் பேசாத நாக்குநாக்கு அல்ல. நாக்குப் போலவே பிற உறுப்புக்களும் இறைவன் திருவடியில் பொருந்த வேண்டும்.

 

இதனைச் சுருக்கமாதிருவள்ளுவ நாயனார் பின்வரும் திருக்குறளில் காட்டினார்.

 

கோள்இல் பொறியில் குணம் இலவேஎண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

 

எண்ணத்தக்க குணநலங்கள் உடையவனாகிய இறைவனின் திருவடிகளைத் தொழாத தலைகள் தமக்கு உரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத ஐம்பொறிகளைப் போலப் பயன் அற்றவை என்பது இத் திருக்குறளின் பொருள். 

 

"காணாத கண் முதலியன போவணங்காத தலைகள் பயன் இல எனத் தலைமேல் வைத்துக் கூறினார். இனம் பற்றிவாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதும் கொள்க" என்றார் பரிமேலழகர்.

 

நல்ல கடவுள் காட்சியைக் காண்பதே கண்கள் என்கின்றது அறநெறிச்சாரம்..

 

பொருள்எனப் போழ்ந்து அகன்று பொன்மணிபோன்று எங்கும்

இருள் அறக் காண்பன கண் அல்ல--மருள் அறப்

பொய்க்காட்சி நீக்கி,பொருவறு முக்குடையான்

நற்காட்சி காண்பன கண்.

 

பொருள் என்று சொன்ன உடனேமிகுதியாக விழித்து,அழகிய நீலமணி போல எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்கள் ஆகமாட்டா. காமம்வெகுளிமயக்கங்கள் நீங்கும்படிபொய்யான காட்சிகளை முழுமையாக ஒழித்துஇறைவனது திருவுருவைக் காண்பனவே கண்கள் ஆகும்.

 

றைவன் திருவடி மலர்களை முகர்வதே மூக்கு ஆகும் என்கிறது அறநெறிச்சாரம்...

 

சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்

மோந்து இன்புறுவன மூக்கு அல்ல--வேந்தின்

அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடிக்கீழ்

இலங்கு இதழ் மோப்பதாம் மூக்கு.

 

சந்தனம்அகில் புகைகஸ்தூரிகுங்கும்பபூ முதலிய மணப் பொருள்களை மோந்து மகிழ்ச்சி அடைவது மூக்கு அல்ல. உழர்ந்து இனிது விளங்குகின்ற அரியணையில் எழுந்தருளி இருக்கும் கடவுளின் திருவடியில் இட்டு விளங்குகின்ற பூக்களை முகர்ந்து இன்பம் அடைவதே மூக்கு ஆகும்.

 

இறைவனைத் துதித்துப் பேசுவதே நாக்கு என்கிறது அறநெறிச்சாரம் என்னும் நூல்...

 

கைப்பன,கார்ப்பு,துவர்ப்பு,புளிமதுரம்,

உப்பு இரதம் கொள்வன நாவல்ல,- தப்பாமல்

வென்றவன் சேவடியை வேட்டு உவந்து எப்பொழுதும்

நின்று துதிப்பதாம் நா.

 

கசப்புஉறைப்புமுவர்ப்புபுளிப்புஇனிப்புஉவர்ப்பு என்னும் ஆறு சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவது நாக்கு அல்ல. தப்பாமல் புலனைந்தும் வென்றவனாகிய இறைவனது திருவடிகளை எப்போதும் விரும்பித் துதிப்பதே நாக்கு ஆகும்.

 

நல்ல ஞான முயற்சியில் நடப்பனவே கால்கள் என்கின்றது அறநெறிச்சாரம்....

 

கொல்வதூஉம்கள்வதூஉம் அன்றி,பிறர்மனையில்

செல்வதூஉம் செய்வன கால் அல்ல- தொல்லைப்

பிறவி தணிக்கும் பெருந்தவர் பால் சென்று

அறவுரை கேட்பிப்ப கால்.

 

பிற உயிரைக் கொல்லவும்பிறர் உடைமையைத் திருடவும்,பிறன் மனைவியிடத்தே விரும்பிக் கூடவும் செல்வதற்கு உதவுவன கால்கள் அல்ல. துன்பத்தை உண்டாக்கும் பிறவிப் பிணியைப் போக்கி அருளும் தவத்தினை உடைய அருளாளர் பால் சென்றுஅவர் கூறும் அறிவுரையைக் கேட்க நடப்பவையே கால்கள் ஆகும்.

 

இறைவன் திருவடிகளை வணங்கும் தலையே சிறப்புடைய தலை ஆகும் என்கின்றது அறநெறிச்சாரம்...

 

குற்றம் குறைத்து,குறைவு இன்றி,மூவுலகின்

அற்றம் மறைத்துங்கு அருள் பரப்பி - முற்ற

உணர்ந்தானைப் பாடாத நாஅல்ல,அல்ல

சிறந்தான் தாள் சேராத் தலை.

 

மனத்தில் உண்டாகும் குற்றங்களைக் கெடுத்து,மூவுலகில் உள்ளவர்களின் அச்சம் எல்லாவற்றையும் துடைத்துஅவர்களுக்கு அருள் புரிந்து,இயல்பாகவே எல்லாவற்றையும் உணர்ந்த இறைவனைப் பாடாத நாக்கு நாக்கு அல்ல. அவன் திருவடிகளை வணங்காதவை தலை அல்ல.

 

திருஞானசம்பந்தப் பெருமான் பாடியுள்ள பாடல்களில் பின்வருவனவற்றைச் சிந்திப்போமாக...

 

கோள் நாகப் பேர்அல்குல் கோல்வளைக்கை மாதராள்

பூண்ஆகம் பாகமாப் புல்கி,அவளோடும்

ஆண்ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்

காணாத கண் எல்லாம் காணாத கண்களே.

 

வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும்திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதிதேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்.

 

பாடல் நெறி நின்றான்,பைங்கொன்றைத் தண்தாரே

சூடல் நெறி நின்றான்,சூலம்சேர் கையினான்,

ஆடல் நெறி நின்றான்,ஆமாத்தூர் அம்மான் தன்

வேட நெறி நில்லா வேடமும் வேடமே.

 

பாடும் நெறி நிற்பவனும்பசிய தண்மையான கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும்சூலம் பொருந்திய கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.

 

மாறாத வெம்கூற்றை மாற்றி,மலைமகளை

வேறாக நில்லாத வேடமே காட்டினான்,

ஆறாத தீயாடி,ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே.

 

யாவராலும் ஒழிக்கப்படாத கூற்றுவனை ஒழித்து,மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொருபாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும்ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாக்கு இருந்தும் ஊமையர் எனக் கருதப்படுவர்.

 

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன் தன்

நாள் ஆதிரை என்றே,நம்பன்தன் நாமத்தால்

ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்

கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே.

 

தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்த நாள் திருவாதிரை ஆகும் எனக் கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகியஅடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச் செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்.

 

புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம்இருவர்

உள்ளும் அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே,

அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான்எம்

வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.

 

கருடப் பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோசேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கையாகுமோ?

 

பிச்சை பிறர் பெய்ய,பின்சார,கோசாரக்

கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்துஉகந்தான்,

அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்

நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.

 

மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வரதன் தலைமைத் தன்மை கெடாதபடிஉமையம்மை அஞ்ச இழிவான புலால் மணம் வீசும் யானைத்தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?.

 

உடம்பைப் படைத்து இறைவனை உடம்பால் வணங்கி,அவன் திருவடி இன்பத்தைப் பெறவேண்டும் என்ற கருத்தில் திரு அங்கமாலை என்னும் அற்புதமான திருப்பதிகத்தை அப்பர் பெருமான் பாடி அருளினார்.

 

வாழ்த்த வாயும்நினைக்க மடநெஞ்சும்,

தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை,

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே,

வீழ்த்தவா! வினையேன் நெடும் காலமே.         ---  அப்பர்.

 

வணங்கத் தலை வைத்து,வார்கழல் வாய் வாழ்த்த வைத்து,

இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து,ம்பெருமான்

அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற

குணம் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. --- மணிவாசகம்.

 

இறைவனை நாள்தோறும் மனதாரத் துதித்து வழிபடவேண்டும். எவ்வளவு நாள் நாம் வாழ்வோம் என்பதோஎப்போது சாவோம் என்பதோ நமக்குத் தெரியாது. இந்த நாள் நம்முடைய நாள். எனவேவிடிந்தவுடன் இறைவனைத் துதித்து வழிபடவேண்டும்.

 

காலையில் எழுந்துஉன்நாமமெ மொழிந்து,

     காதல் உமை மைந்த ...... என ஓதிக்

காலமும் உணர்ந்து ஞானவெளி கண்கள்

     காண அருள் என்று ...... பெறுவேனோ?

 

என்று, "மாலைதனில் வந்து" எனத் தொடங்கும் திருப்புகழில் அடிகளார் முருகப் பெருமானை வேண்டுகின்றார். 

 

மனக் கவலையை மாற்ற வேண்டுமானால்தனக்கு உவமை இல்லாத இறைவனின் திருவடியை வணங்கவேண்டும்.

 

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,

மனக் கவலை மாற்றல் அரிது.

 

"காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக் கண்டா" என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

 

நீ நாளும்,நன்னெஞ்சே! நினை கண்டாய்,ஆர் அறிவார்

சாநாளும் வாழ்நாளும்,சாய்க்காட்டுஎம் பெருமாற்கே

பூநாளும் தலை சுமப்ப,புகழ்நாமம் செவிகேட்ப,

நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே.

 

என்று பாடி அருளினார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

நல்ல நெஞ்சமே! நாள்தோறும் நினைந்து எம்பெருமான் ஈசனை வணங்குவாயாக. இறக்கின்ற நாளும்உலகினிலே வாழ்கின்ற நாளையும் யாராரும் கணக்கிட்டுக் கூற முடியாது. திருச் சாய்க்காட்டில் அமர்ந்திருக்கும் எம்பெருமானுக்கு நாள்தோறும் பூக்களைச் சுமந்து சென்றும்அப்பெருமானது திரு நாமங்களைக் காதுகள் நன்கு கேட்குமாறும் செய்வாயாக. நாவானது நாள்தோறும் அச்சிவனது திருநாமங்களை சொல்லி ஏத்தி வழிபட்டால்நல் வினையைப் பெறலாம்.

 

இத்தகு நற்கணங்கள் ஒருவனுக்கு வாய்க்கவேண்டும் என்றால்அடியவர் திருக்கூட்டத்தில் சார்ந்து இருக்கவேண்டும். அடியவர்களை இறைவனாகவே கருதி வணங்குதல் வேண்டும். உள்ளம் உருகி அவர்களோடு இருந்து வழிபடுதல் வேண்டும்.

 

நலம் இலி--- 

 

வாழ்க்கையில் பிற எல்லா நலங்கள் இருந்தாலும்,இறைவனையும்அவனது அடியார்களையும் வழிபடுவது ஒன்றே சிறந்த நலம் ஆகும்.

 

"விலங்கு மனத்தால்,விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி"

 

என மணிவாசகப் பெருமான் அருளியது காண்க.

 

வேதியர் தில்லை மூதூர்

    வேட்கோவர் குலத்து வந்தார்

மாதொரு பாகம் நோக்கி

   மன்னுசிற் றம்ப லத்தே

ஆதியும் முடிவும் இல்லா

   அற்புதத் தனிக்கூத் தாடும்

நாதனார் கழல்கள் வாழ்த்தி

   வழிபடும் நலத்தின் மிக்கார்.         --- பெரியபுராணம்.

 

திருநீலகண்ட நாயனார் இறைவனை வழிபடுகின்ற நலத்தில் மிகுந்தவராக விளங்கினார் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளுமாறு காண்க.

 

பொறை இலி--- 

 

பொறுமை என்பது மனிதனுக்கு அமைந்திருக்க வேண்டிய குணங்களில் தலை சிறந்தது ஆகும். பொறுமைஎன்பது,தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும்கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும்நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும்பிரச்சனைகள் ஏற்படும் போதும்தொடர் துன்பங்கள் வரும் போதும்சில அசாதரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும். இந்த குணம் மனிதனை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும்மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. மனநலத்தை மிகுக்கின்றது. "பொறையுடைமை" என்று ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவ நாயனார் வைத்து அருளினார்.

 

குசல கலை இலி ---

 

குசலம் --- நலம்நற்குணம்மாட்சிமைதிறமை.

 

கலை --- நூல்.

 

உயிருக்கு நலம் விளைக்கின்றதும்நற்குணங்களைச் சிறக்கச் செய்வதும் ஆகிய அறிவு நூல்களையும்அருள் நூல்களையும் ஒருவன் கற்றல் வேண்டும்.

 

தலைஇலி--- 

 

தலை இலி --- தலை என்பது சிந்திக்கத் தெரியா நிலை.

 

புந்திக் கிலேசம் என்னும் அறிவில் உண்டாகும் துன்பமும்,, காயக் கிலேசம் என்னும் உடல் துன்பமும் போக்க வேண்டுமானால்,இறைவன் திருவடியைச் சிந்தித்து இருக்கவேண்டும்.

 

சிந்திக்கிலேன்நின்று சேவிக்கிலேன்தண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேன்ஒன்றும் வாழ்த்துகிலேன்மயில்வாகனனைச்

சந்திக்கிலேன்பொய்யை நிந்திக்கிலேன்உண்மை சாதிக்கிலேன்,

புந்திக் கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே.

 

என்பது அடிகளார் பாடியருளிய கந்தர் அலங்காரம்.

 

"சிந்தனை நின் தனக்கு ஆக்கி" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

நிலை இலி--- 

 

நிலை --- நிலைத்த தன்மை.

 

விலைமாதர் மருவு முலை எனும் மலையினில் இடறியும்--- 

 

பெண்களின் புருத்த முலைகளை மலைக்கு ஒப்பாகக் கூறுவது கவி மரபு. 

 

தென்நாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்

மின்ஆருங் கொடிமருங்குல் பரவைஎனும் மெல்லியல்தன்

பொன்ஆரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வுஆகப்

பல்நாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்.  --- பெரியபுராணம்.

                                         

இதன் பொருள் ---

 

அழகிய திருநாவலூரின் மன்னராக விளங்கும் ஆரூரர்தியாகேசப் பெருமானின் திருவருளால் மின்னலையும் கொடியையும் ஒத்த இடையினையுடைய பரவையார் என்னும் மெல்லியலாரின்பொன் அணிகலன்களையுடைய தனங்களாகிய இருமலைகளின் நெருங்கிய சிகரங்களையே அரணாகக் கொண்டு பலநாள்களும் பழகும்யோகத்தைஅதற்கு உரித்தான வழிவழியாகச் சொல்லப் பெறும் அறத்தின் வழிநின்று துய்த்து மகிழ்வாராயினார்.

 

ஓங்கல் - மலை. குவடு - சிகரங்கள். இங்குப் பரவையாரின் தனங்களாகிய மலைகளின் நெருங்கிய சிகரங்களையே இடனாகக் கொண்டு ஆரூரர் யோகம் செய்தார் என்றார். 

 

அளகம் என வளர் அடவியில் மறுகியும்--- 

 

அளகம் --- கூந்தல்.

 

அடவி --- காடு. 

 

அடர்ந்து வளர்ந்துள்ள பெண்களின் கூந்தலைக் காடு என்பர். "குழல் அடவி" என்றார் அருணை அடிகள் பிறிதொரு திருப்புகழில்.

 

மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே--- 

 

மகர மீன்கள் உலாவுகின்ற கடலைப் பெண்களின் கண்களுக்கு ஒப்புக் கூறினார்.

 

"கடல் போல் கணைவிழி" என்றார் அடிகளார் வயலூர்த் திருப்புகழில். கடலின் ஆழத்தைக் கண்டு அறியமுடியாது என்கின்றபடி,மாதரின் உள்ளக் கிடக்கையையும் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. உள்ளத்தில் உள்ளதைக் காட்டுவது கண். "அடுத்தது காட்டு பளிங்கு போல்நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்"என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

அத்தியின் மலரும்,வெள்ளை 

     யாக்கைகொள் காக்கைதானும்,

பித்தர்தம் மனமும்,நீரில் 

     பிறந்த மீன் பாதம் தானும்,

அத்தன் மால் பிரம தேவ

     னால் அளவிடப் பட்டாலும்,

சித்திர விழியார் நெஞ்சம் 

     தெரிந்தவர் இல்லை கண்டீர்.

 

என்பது விவேக சிந்தாமணி.

 

அத்தி மரத்தினுடைய மலர்வெண்ணிறம் பொருந்திய காக்கைபித்துப் பிடித்தவனின் மனக் கருத்துநீரில் பிறந்த மீனின் பாதம் ஆகிய இவைகளை எமது அத்தனாகிய சிவபெருமான்திருமால்பிரமன் ஆகிய மும்மூர்த்திகளாலும் ஒருக்கால் அளவிடப்பட்டாலும்சித்திரப் பாவையைப் போலும் கண்களை உடைய பெண்களின் மனக்கருத்தை அறிந்து சொல்ல அந்த மும்மூர்த்திகளுள்ளும் யாரும் இல்லை. பெண்களின் நெஞ்ச ஆழத்தை யாராலும் அளவிட்டு அறிய முடியாது.

 

வயலி நகரியில் அருள்பெற மயில்மிசை உதவு பரிமள வெகுவித மதுகர வனச மலர்அடி கனவிலும் மறவேனே--- 

 

அருணகிரிநாதர் கனவில் முருகபிரான் ஏகமுகத்துடன் கழலும்கடம்ப மாலையும்வேலும் விளங்க மயில்மிசைத் தோன்றித் "திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள மேலை வயலூர் என வழங்கும் 'பதிக்கு வருக. நமது திருப்புகழை நித்தம் பாடும் அன்பை உனக்கு வயலூரில் அருள்வோம்" என்று அருளினார். அருணகிரிநாதர் விழித்தெழுந்து "கனவில் ஆள் சுவாமி! நின் மயில் வாழ்வும்கருணை வாரி கூர் ஏகமுகமும்வீரம் மாறாத கழலும்', நீப வேல்வாகும் மறவேனேமேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே!" எனப் போற்றி,வயலூருக்கு வந்து முருகன் திருவடி தரிசனம் கிடைக்கப் பெற்றார். எங்கு சென்றாலும்வயலூரை மறவாது போற்றுவார் சுவாமிகள். இந்தப் பாடலிலும் அந்த நினைவைப் போற்றிப் பாடுகின்றார்.

 

உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனும் மருது நெறிபட முறைபட அரைதனில் உரலினொடு தவழ் விரகு உள இளமையும்--- 

 

நளகூபரன் மணிக்ரீவன் என்பவர் குபேரனுடைய குமாரர்கள். இருவரும் மது அருந்தி ஆடையின்றி நீர் விளையாட்டுப் புரிந்து கொண்டிருந்தார்கள். நாரத முனிவர் அங்கே வந்தார். அவரைக் கண்டு நாணம் இன்றி கட்டைபோல் நின்றார்கள்.

 

நல்லோர் முன் ஆடையின்றி மரம்போல் நின்ற படியால் மரங்களாகப் பிறக்கக் கடவது” என்று நாரத முனிவர் சபித்தார். அவர்கள் அஞ்சி,அவரை அஞ்சலி செய்து மன்னிக்குமாறு வேண்டினார்கள். நாரதர் திருவுளம் இரங்கி, “நீங்கள் ஆயர்பாடியில் நந்தகோபாலன் திருமாளிகையில் மருத மரங்களாக முளைப்பீர்கள்கண்ணபிரானுடைய வண்ண மலரடி தீண்டப் பெறுதலால் சாபம் நீங்கும்” என்று அருள் புரிந்தார். கண்ணபிரான் உரலிலே கட்டப்பட்டு அம்மரங்களின் இடையே தவழ்ந்து சென்றுஉரல் அம்மரங்களின் இடையே தடைப்பட்டதனால் சேவடி தீண்டி மரங்களை உதைத்தருளினார். உடனே அம்மரங்கள் வேருடன் வீழ்ந்தன. அவர்களது சாபம் பாபம் இரண்டும் வேரற்று வீழ்ந்தன. இருவரும் பண்டை வடிவம் பெற்று கமலக்கண்ணனைக் கைதொழுது துதி செய்து தங்கள் உலகம் பெற்றார்கள்.

 

மருகன் எனாமல் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்,

     வரவிடும் மாயப் பேய்முலை ...... பருகா,மேல்

வருமத யானைக் கோடு அவை திருகிவிளாவில் காய்கனி

     மதுகையில் வீழச் சாடி,...... அச் சத மா புள்

 

பொருது இரு கோரப் பாரிய மருதிடை போய்,ப்போது ஒரு

     சகடு உதையாமல் போர்செய்து ...... விளையாடி,..   --- திருப்புகழ்.

                                    

மிக மாரி உமிழ நிரைகளின் இடர்கெட அடர்கிரி கவிகை இடவல மதுகையும்--- 

 

கவிகை --- குடை. 

 

மதுகை --- அறிவுவலிமை.

 

கோவர்த்தன கிரியைக் கண்ணன் குடையாகப் பிடித்த வரலாறு

 

ஒரு நாள் நந்தகோபர் உபநந்தர் முதலிய ஆயர் குலத்தலைவர்கள் ஆண்டுகள் தோறும் நடத்திக்கொண்டு வந்த மகேந்திர யாகத்தைச் செய்ய ஆலோசித்துத் தொடங்கினார்கள். அதனை அறிந்த கண்ணபிரான்அந்த யாகவரலாற்றை அறிந்திருந்தும் நந்தகோபரைப் பார்த்து, “எந்தையே! இந்த யாகம் யாரைக் குறித்துச் செய்கிறீர்கள்! இதனால் அடையப் போகும் பயன் யாது?” என்று வினவினார். நந்தகோபர் “குழந்தாய்! தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் மேகரூபமாயிருந்து உயிர்களுக்கு பிழைப்பையும் சுகத்தையும் தருகின்ற தண்ணீரைப் பொழிகின்றான்மூன்று உலகங்களுக்கும் தலைவனாகிய அந்த இந்திரனது ஆணையால் இந்த மேகங்கள் சகல ஜீவாதாரமாக உள்ள மழையை பெய்கின்றன.  ஆதலால்,மேகவாகனனாய் இருக்கும் இந்திரனைக் குறித்து ஆண்டுகள்தோறும் ஒரு நாளை ஏற்படுத்திக் கொண்டுபரிசுத்தர்களாயிருந்துசிறந்த பால் தயிர் அன்னம் முதலிய பொருட்களைக் கொண்டு இந்த இந்திர யாகத்தைச் செய்து இந்திரபகவானை ஆராதிக்கின்றோம். கமலக் கண்ணா! இவ்வாறு இந்திரனைப் பூசித்தவர்கள் இந்திரனுடைய அருளால் எல்லா நலன்களையும் பெற்று இன்புறுகின்றார்கள்மேலும் அந்தப் பர்ஜன்ய ரூபியாகிய இந்திரன்,அநேக நற்பலன்களை வழங்குகின்றான். இவ்வாறு ஆராதிக்காதவர்கள் நன்மையடைய மாட்டார்கள்” என்றார்.

 

மூன்று உலகங்களுக்கும் முதல்வன் என்று செருக்குற்ற இந்திரனுடைய அகங்காரத்தை நீக்கத் திருவுளங் கொண்ட கண்ணபிரான்தந்தையை நோக்கி “தந்தையே! உயிர்கள் வினைகளுக்கு ஈடாய்ப் பிறக்கின்றனமுற்பிறப்புக்களில் செய்த வினைகளின் வண்ணம் புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன. வினைகளால்தான் சுகதுக்கங்கள் வருகின்றன. இதனை அன்றி இந்திராதி உலக பாலர்கள் பலன்களைக் கொடுக்க வல்லவராக மாட்டார்கள். இந்திரனால் ஒரு பலனும் கொடுக்க முடியாது. இந்திரனுக்குக் கர்மத்தை ஒழிக்கும் ஆற்றலும் இல்லை. உயிர்கள் தாங்கள் செய்த வினைக்குத் தக்கவாறுபசுபட்சிபுழுவிலங்குதேவர்மனிதர்களாகப் பிறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. சுகத்துக்கத்திற்குக் கர்மமே முக்கிய காரணம். நம்முடைய புண்ணியமே மேகமாக இருந்து மழை பெய்கிறது. எந்தையே! நமக்கு ஊர்கள்தேசங்கள்வீடுகள் ஒன்றுமில்லை. காடு மலைகளில் வசித்துக் கொண்டு காட்டுப் பிராணிகள் போல் பிழைத்து வருகின்றோம். ஆதலால் இந்த மலையையும் மலைக்கு அதிதேவதையையும்பசுக்களையும் பூசியுங்கள். இப்போது இந்திர பூசைக்காகச் சேகரித்த பொருள்களை கொண்டு இந்த மலையை ஆராதியுங்கள்பற்பல பணியாரங்கள்பாயசம்பால்நெய்பருப்புஅப்பம் இவற்றை தயாரித்து அந்தணர் முதல் சண்டாளர்,நாய்வரை எல்லாப் பிராணிகளையும் திருப்தி செய்து வையுங்கள். பசுக்களுக்குப் புல்லைக் கொடுங்கள். பிறகு நீங்கள் அனைவரும் புசித்து சந்தனாதி வாசனைகளை யணிந்து ஆடையாபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு இந்த மலையை வலம் வந்து வணங்குங்கள்” என்றார்.

 

இதனைக் கேட்ட கோபாலர்கள் அனைவரும் நன்று என்று அதற்கு இசைந்துகோவர்த்தன மலைக்கு அருகில் இருந்து,அம்மலையை வழிபட முயன்றார்கள். அப்போது பகவானாகிய கண்ணபிரான் தமது யோக மகிமையால் தாமே ஒரு பெரிய மலையாக நின்றார். அவ்வாயர்களிலும் தாமொருவராக இருந்து, “ஆயர்களே! இதோ இந்த மலைக்கு அதிதேவதையே நம்மைக் காக்கும் பொருட்டு இங்கு எழுந்தருளியிருக்கிறார்இவரை நீங்கள் அன்புடன் ஆராதியுங்கள்?” என்றார். ஆயர்கள் அதனைக் கண்டு மிகுந்த ஆச்சரியமடைந்து பயபக்தி சிரத்தையுடன் அருக்கிய பாத்திய ஆசமனீயம் தந்துமனோபாவமாக அபிஷேகம் செய்துசந்தன புஷ்ப மாலைகளைச் சாத்தி தூபதீபங்களைக் காட்டிஅர்ச்சித்துபல வாத்தியங்களை முழக்கி,பால்நெய்பருப்புஅன்னம்பழம்தாம்பூலம் முதலியவற்றை நிவேதித்து வழிப்பட்டார்கள். மலை வடிவாயுள்ள பகவான் அவற்றை புசித்து அருள்புரிந்தார். கண்ணபிரானும் ஆயர்களுடன் அம்மலையை வணங்கி, "நம்மவர்களே! இதோ மலைவடிவாயுள்ள தேவதைநாம் நிவேதித்தவைகளை உண்டு நமது பூசையை ஏற்றுக்கொண்டார்இம்மலை நம்மைக் காத்தருள் புரியும்” என்று கூறினார். கோபாலர்கள் மகிழ்ந்து மலையை வலம் வந்து வணங்கித் துதித்து நின்றார்கள். பிறகு அம்மலைவடிவாக நின்ற பகவான் மறைந்தார். ஆயர்கள் கோவர்த்தனம் முதலிய மலைகட்கு தூபதீபங் காட்டி ஆராதித்து வணங்கிபசுக்களை யலங்கரித்து தாங்களும்  உணவு கொண்டுஅலங்கரித்துக் கொண்டு மலையை வலம் வந்து மகிழ்ந்தார்கள்.

 

ஆயர்கள் வழக்கமாய்ச் செய்துவந்த பூசையை மாற்றியதைக் கண்ட இந்திரன் மிகவும் கோபித்துஊழிக்கால மேகங்களை அழைத்து “மேகங்களே! இளம் பிள்ளையும் தன்னையே பெரிதாக மதித்திருக்கின்றவனுமாகிய இந்த கிருஷ்ணனுடைய வார்த்தையைக் கேட்டு மூவுலகங்கட்கும் முதல்வனாகிய என்னை இந்த ஆயர்கள் அவமதித்தார்கள்.  புத்தி கெட்டு கேவலம் இந்த மலையை ஆராதித்தார்கள்ஆதலால் நீங்கள் உடனே இந்த கிருஷ்ணனையும்ஆயர்களையும்பசுக்களையும் வெள்ளத்திலழித்து கடலில் சேர்த்து அழியுமாறு பெருமழையை இடைவிடாது பொழியுங்கள்” என்று ஆணை தந்தான். இவ்வாறு கட்டளையிட்ட இந்திரன் தானும் ஐராவதத்தின் மேலூர்ந்து,தேவர்கள் சூழ,ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சண்ட வாயுக்களை மேகங்களுக்குச் சகாயமாக ஏவினான். மேகங்கள் ஊழிக்காலமென உலகங்கள் வருந்த இடியுடன் ஆகாயத்தில் வியாபித்து,மின்னல் கல் மழையை ஆயர்பாடியின் மீது பெய்தன. அப்பெரு மழையால் எங்கும் தண்ணீர் மயமாகியதுபசுக்கூட்டங்கள் பதறியோடினகன்றுகள் பயந்து தாய்ப் பசுக்களைச் சரண் புகுந்தன. எருதுகளும் இரிந்தனஇடையர்கள் இந்தப் பெரிய ஆபத்தைக் கண்டு பிரமாண்டங் கிழிந்து போயிற்றோஊழிக்காலம் வந்துவிட்டதோ என்று நடு நடுங்கி கண்ணபிரானிடம் ஓடிவந்து,“கண்ணா மணிவண்ணா!” என்று முறையிட்டு சரணாகதி அடைந்தார்கள். கண்ணபிரான் "மக்களே! கல்மழைக்கு அஞ்ச வேண்டாம்குழந்தைகளுடனும் பசுக்களுடனும்பெண்மணிகளுடனும் வாருங்கள்பகவான் காப்பாற்றுவார்” என்று சொல்லி பெரிய மலையாகிய கோவர்த்தனத்தைத் தூக்கிஒரு சிறு பிள்ளை மழைக்காலத்தில் உண்டாகும் காளானைப் பிடுங்கிக் குடையாகப் பிடிப்பதுபோல் ஒரு கரத்தால் பிடித்தார். வராகமூர்த்தியாகிப் பூமண்டலத்தை ஒரு கோட்டால் தாங்கிய பெருமானுக்கு இது பெரிய காரியமோஒரு யானையின் தும்பிக்கையில் ஒரு தாமரைமொக்கு இருப்பதுபோல்பகவான் கரத்தில் அம்மலையானது விளங்கியது. கண்ணபிரான், "நம்மவர்களே! இம்மலையின்கீழ் யாதொரு குறைவுமின்றி நீங்கள் எல்லாரும் வந்து சுகித்திருங்கள்இந்த மலை விழுந்துவிடுமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம்பிரமாண்டங்கள் இடிந்து இம்மலைமேல் விழுந்தாலும் இது விழாது” என்று அருளிச் செய்தார். அதுகண்ட ஆயர்கள் அற்புதமடைந்து கோவினங்களுடனும் மனைவி மக்களுடனும் அம்மலையின் கீழ் சுகமாயிருந்து மழைத் துன்பமின்றி பாடி யாடிக்கொண்டிருந்தார்கள்.

 

இவ்வாறு அந்த ஊழிமேகங்கள் ஏழு நாள் இரவும் பகலும் பெரு மழையைப் பெய்தும் கோபாலர்கள் துன்பமின்றி இருக்கக் கண்ட இந்திரன்,கண்ணபிரானுடைய மகிமையை உணர்ந்து பயந்துமேகங்களை அனுப்பிவிட்டு,பெருமானைச் சரணமடைந்தான். மழை நின்ற பிறகு ஆயர்களைத் தத்தம் இருக்கைக்குச் செல்லுமாறு செய்து அம்மலையைப் பழையபடியே வைத்தனர்.

 

    அம்மைத் தடங்கண் மடவாய்ச்சியரு

         மானா யருமா நிரையு மலறி

    எம்மைச் சரணென்று கொள்ளென் றிரப்ப

         இலங்கா ழிக்கை எந்தை எடுத்தமலை

    தம்மைச் சரணென்ற தம்பாவை யரைப்புனம்

         மேய்கின்ற மானினங் காண்மி னென்று

    கொம்மைப் புயக்குன்றர் சிலை குனிக்கும்

         கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே.   ---பெரியாழ்வார்

                                                                                  

நிரைபரவி வரவரை உளோர் சீத மருதினொடு

     பொரு சகடு உதை அது செய்துஆ மாய மழைசொரிதல்

     நிலைகுலைய,மலை குடையதாவே கொள் கரகமலன் .....மருகோனே

                                                                                            --- திருப்புகழ்.

 

நிலைகெட உலவு இல் நிலவறை உருவிய அருமையும்--- 

 

பஞ்சபாண்டவர்களுக்காகண்ணன்துரியோதனனிடம் தூதாக வந்தார். துரியோதனன்நிலவறை ஒன்றை அமைத்துஅதில் அரக்கர்களையும் மல்லர்களையும் இருத்தி வைத்து,அந்த நிலவறையின் மேல் ஆசனம் வகுத்துகண்ணபிரானை இருக்கச் செய்தான். கண்ணபிரான் அமர்ந்ததும் ஆசனமானது முறிந்து நிலவறையில் விழுந்தது. துரியோதனன் செய்த இழிசெயலைக் கண்ட கண்ணன் கோபம் கொண்டு,விசுவரூபம் எடுத்தார். அங்கு இருந்த அரக்கர்களையும்மல்லர்களையும் அழித்து ஒழித்தார்.

 

பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்க.

 

இறைவன் எழில் கதிர் மணிகள் 

     அழுத்திய தவிசின் இருத்தலுமே,

நெறுநெறெனக் கொடு நிலவறையில் 

     புகநெடியவன் அப்பொழுதே,

மறலி எனத் தகு நிருபன் இயற்றிய 

     விரகை மனத்து உணரா,

முறுகு சினத்துடன்அடி அதலத்து உற

     முடி ககனத்து உறவே.

     

"அஞ்சினம்அஞ்சினம்!என்று விரைந்துஉயர்

     அண்டர் பணிந்திடவும்,

"துஞ்சினம்இன்று"என வன் பணியின் கிளை

     துன்பம் உழந்திடவும்,

"வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு 

     வஞ்சனைநன்று இது"எனா,

நெஞ்சில் வெகுண்டுஉலகு ஒன்றுபடும்படி

     நின்றுநிமிர்ந்தனனே.

 

மல்லர்அரக்கர் குலத்தொடு பப்பரர்

     வாளினர்வேலினர்போர்

வில்லினர்இப்படி துற்ற நிலத்து அறை 

     மேவியவீரர் எலாம்,

தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு 

     சுடிகைஅரா எனவே,

கல்லென உட்கினர்தத்தம் உடல்பல 

     கால்கொடுஉதைத்திடவே.

     

அற்புத பங்கய நற்பதம் உந்தலின்

     அக் குழியின்புடையே,

சற்ப தலந்தொறும் அற்று விழுந்தன

     தத்தம் நெடுந்தலை போய்;

முன் பவனன் பொரமுக் குவடும் 

     துணிபட்டுமுடங்கிய பொன்

வெற்பு என நின்றனர்வெற்று உடலம்கொடு,

     விற்படை கொண்டவரே.

     

அந்த இடத்துஎறி பம்பரம் ஒத்துஉடலம் சுழலச் சுழல,

குந்தி உறித் தயிர் உண்டவர்பொற் கழல் கொண்டுசுழற்றுதலால்,

முந்து அமரர்க்கு அமுதம் தர மைக் கடல் முன்சுழலச் சுழலும்

மந்தரம் ஒத்தனர்-குந்தம் எடுத்துஎதிர் வந்து மலைந்தவரே.

     

தேவர் முதலிய யாவரும் கண்ணனைத் துதித்து வேண்டஅவன் தன் பெரு வடிவைச் சுருக்கி க்கொள்ளுகின்றான். எல்லோரும் அவனைப் பணிந்து போற்றுகின்றனர்.

 

'ஆரணனேஅரனேபுவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்

காரணனேகருணாகரனேகமலாசனி காதலனே,

வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே,

நாரணனே! முனியேல்முனியேல்!எனநாகர் பணிந்தனரே.


'மாதவனேமுனியேல்! எமை ஆளுடை வானவனேமுனியேல்!

யாதவனேமுனியேல்! இதயத்தில் இருப்பவனேமுனியேல்!

ஆதவனேமுனியேல்! மதி வெங் கனல் ஆனவனேமுனியேல்!

நீதவனேமுனியேல்! முனியேல்!என நின்று பணிந்தனரே.

 

கங்கை மகன்கதிரோன் மகன்அம்பிகை 

     காதல்மகன்தனயர்,

அங்கு அவையின்கண் இருந்த நராதிபர்

     அடையஎழுந்துஅடைவே

செங்கை குவித்த சிரத்தினர் ஆய்உணர்வு 

     ஒன்றியசிந்தையர் ஆய்,

எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள்!'

     என்று பணிந்தனரே.

     

'கண்ணபொறுத்தருள்! வெண்ணெய் அருந்திய 

     கள்வபொறுத்தருள்! கார்

வண்ணபொறுத்தருள்! வாமபொறுத்தருள்! 

     வரதபொறுத்தருள்நீ!

திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் 

     செய்தபெரும் பிழைஎன்று,

அண்ணல் மலர்க்கழல் சென்னியில் வைத்துஎதிர்

     அன்று துதித்தனரே.

     

தேவரும்வாசவனும்தவரும்திசைமுகனும்நராதிபரும்,

யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணிஇறைஞ்சுதலால்,

மூவரும் ஒன்றுஎன நின்றருள் நாதனும்முனிவுதவிர்ந்தருளா,

மீவரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன்,மீளவுமே.

     

ஒரு நூறு நிருப ரணமுக அரசர்கள் வலிதப விசயன் ரத முதல் நடவிய எளிமையும்--- 

 

நிருபர் --- மன்னர்.

 

ரணமுகம் --- போர்க்களம்.

 

வலி தப --- வலி கெடுமாறுஇறக்குமாறு.

 

பாரதப் போருக்கு முன்னர் கண்ணனின் துணை வேண்டிஅருச்சுனனும்துரியோதனனும் கண்ணனைக் காணச் சென்றனர். "போரில் ஆயுதம் எடுக்க வேண்டாம்"என்னும் துரியோதனன்

வேண்டுதலுக்குக் கண்ணன் சம்மதித்தான்அருச்சுனனை நோக்கி,"நான் போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டைன். ஆதலால்ஆயுதம் இல்லாமல் நான் உனக்குச் செய்யக் கூடிய உதவியைக் கேள்" என்றான். அருச்சுனன்கண்ணனைப் பணிந்து, "கண்ணா! நீ எனது தேரை ஓட்டினால்,நான் எத்தகைய பகைவரையும் வெல்வேன்" என்றான். அவ்வாறேகண்ணன் அருச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்து பாரதப் போரை முற்றுவித்தான். எல்லாம் வல்ல கண்ணன்தனது அன்பனாகிய அருச்சுனனது வேண்டுகோளுக்கு இணங்கிதேரினைச் செலுத்திய எளிமையை அருணை வள்ளலார் இங்குக் கூறுகின்றார்.

 

முடை கமழ் முல்லை மாலை முடியவன்தன்னை, 'போரில்

படை எடாது ஒழிதி!என்று பன்னக துவசன் வேண்ட,

நெடிய மா முகிலும் நேர்ந்து, 'நினக்கு இனி விசய! போரில்

அடு படை இன்றிச் செய்யும் ஆண்மை என்?அறைதி!என்றான்.

 

'செரு மலி ஆழி அம் கைச் செழுஞ் சுடர் நின்றுஎன் தேரில்

பொரு பரி தூண்டின்இந்தப் பூதலத்து அரசர் ஒன்றோ?

வெருவரும் இயக்கர்விண்ணோர்விஞ்சையர் எனினும்என் கை

வரி சிலை குழைய வாங்கிமணித் தலை துமிப்பன்!என்றான்.  --- வில்லிபாரதம்.

                                     

நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு(ம்) நளினமும் மருவியநெருவை நகர் உறை திருஉரு அழகிய பெருமாளே--- 

 

நெருவூர் என்னும் திருத்தலத்தின் இயற்கை எழிலைப் பாடுகின்றார் அடிகளார்.

 

கரூர் மாவட்டத்தில்கரூர் – திருமுக்கூடலூர் சாலையில் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் நெரூர் என்னும் திருத்தலம் அமைந்து உள்ளது. சதாசிவ பிரமேந்திரர் ஜீவ சமாதியும்அதற்கு முன்புறம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது. 

 

கருத்துரை

 

முருகா! உனது திருவடிகளை ஒருபோதும் மறவேன்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...