கருவூர் --- 0932. இளநிர்க் குவட்டுமுலை

                                                            அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

இளநிர்க் குவட்டுமுலை (கருவூர்)

 

முருகா! 

விலைமாதர் வினை அஅடியேனை ஆண்டு அருள்வாய்

 

 

தனனத் தனத்ததன தனனத் தனத்ததன

     தனனத் தனத்ததன ...... தனதான

 

 

இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி

     யிரதக் குடத்தையெணு ...... மரபோடே

 

இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய

     இதழ்சர்க் கரைப்பழமொ ...... டுறழூறல்

 

முளரிப் புவொத்தமுக முகம்வைத் தருத்திநல

     முதிரத் துவற்பஅல்குல் ...... மிசைமூழ்கி

 

மொழிதத் தையொப்பகடை விழிகட் சிவப்பமளி

     முழுகிச் சுகிக்கும்வினை ...... யறஆளாய்

 

நளினப் பதக்கழலு மொளிர்செச் சைபொற்புயமெ

     னயனத் திலுற்றுநட ...... மிடும்வேலா

 

நரனுக் கமைத்தகொடி யிரதச் சுதக்களவ

     னறைபுட் பநற்றுளவன் ...... மருகோனே

 

களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக

     கமலப் புயத்துவளி ...... மணவாளா

 

கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்

     கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

இளநிர்க் குவட்டுமுலை, அமுதத் தடத்தை, கனி

     இரதக் குடத்தை எ(ண்)ணும் ...... மரபோடே

 

இருகைக்கு அடைத்து, இடை துவள, குழல்சரிய,

     இதழ் சர்க்கரைப் பழமொடு ...... உறழ்ஊறல்

 

முளரிப்பு ஒத்த முகம் முகம் வைத்து அருத்தி, நல

     முதிரத்து அற்ப அல்குல் ...... மிசைமூழ்கி,

 

மொழி தத்தை ஒப்ப, கடை விழிகள் சிவப்ப, அமளி

     முழுகிச் சுகிக்கும் வினை ...... அற ஆளாய்.

 

நளினப் பதக் கழலும் ஒளிர் செச்சை பொற்புயம்

     என் நயனத்தில் உற்று நடம் ...... இடும்வேலா!

 

நரனுக்கு அமைத்த கொடி இரதச் சுதக் களவன்,

     நறை புட்ப நல்துளவன் ...... மருகோனே!

 

களபத் தனத்தி, சுக சரசக் குறத்தி, முக

     கமலப் புயத்து வ(ள்)ளி ...... மணவாளா!

 

கடலைக் குவட்டு அவுணை இரணப் படுத்தி, உயர்

     கருவைப் பதிக்குள் உறை ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

      நளினப் பதக் கழலும்--- தாமரை போன்ற திருவடியில் அணிந்து உள்ள வீரக் கழலும்,

 

     ஒளிர் செச்சை பொன் புயம்--- விளங்குகின்ற வெட்சி மாலை அணிந்த அழகிய திருத்தோள்களும் 

 

     என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா --- என் கண்களில் அகலாது இடம் பெற்று விளங்கத் திருநடனம் செய்து அருள்கின்ற வேலவரே!

 

      நரனுக்கு அமைத்த கொடி --- அருச்சுனனுக்கு அமைக்கபட்டிருந்த அநுமக் கொடி பறக்கும் 

 

     இரத அச்சுதக் களவன்--- --- தேரை ஓட்டுபவனாகிய மாயவன்

 

     நறை புட்ப நல் துளவன் மருகோனே--- தேன் கொண்ட மலர்களையும் நல்ல துளசி மாலையையும் அணிந்த திருமாலின் திருமருகரே!

 

     களபத் தனத்தி--- சந்தனக் கலவையை அணிந்துள்ள திருமார்பினை உடையவள்,

 

     சுக சரசக் குறத்தி--- இன்பகரமான லீலைகள் செய்யும் குறமகள்,

 

     முகம் கமலப் புயத்து வ(ள்)ளி மணவாளா--- தாமரை போன்ற திருமுகத்தையும் திருத்தோள்களையும் உடைய வள்ளிப்பிராட்டியின் கணவரே!

 

       கடலைக் குவட்டு அவுணை இரணப் படுத்தி--- கடலையும்,கிரெளஞ்ச மலையையும் சூரனையும் புண்படுத்தி அழித்து,

 

     உயர் கருவைப் பதிக்குள் உறை பெருமாளே --- மேலான கருவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

 

      இள நீர்க் குவட்டு முலை அமுதத் தடத்தை--- இளநீர் போன்றதும், மலை போன்றதும் ஆகிய அமுதம் பெருகுவதும் ஆகிய முலைத் தடத்தை,,

 

     கனி இரதக் குடத்தை --- கனி ரசம் அடங்கியுள்ள அந்தக் குடத்தை,

 

     எ(ண்)ணும் மரபோடே இரு கைக்கு அடைத்து--- அநுபவிக்க எண்ணி, வழக்கமான முறையில் இரண்டு கைகளாலும் அடைத்து,

 

      இடை துவள--- இடையானது துவண்டு போகவும்,

 

     குழல் சரிய--- கூந்தல் சரிந்து கலையவும்,

 

     இதழ் சர்க்கரைப் பழமொடு உறழ ஊறல்--- வாயிதழினின்றும் சர்க்கரை போலவும்,பழம் போலவும் ஊறும் எச்சில் ஆகிய தேனை

 

     முளரிப் பு ஒத்த முக முகம் வைத்து அருத்தி--- தாமரை மலரை ஒத்த முகத்தோடு முகம் வைத்துப் பருகி,

 

      நலம் முதிரத்து அற்ப அல்குல் மிசை மூழ்கி--- இன்பம் முற்றுவதாகிய அனுபவத்துடன்இழிந்த பெண்குறியிடத்தே முழுகி,

 

     மொழி தத்தை ஒப்ப--- பேச்சு கிளிக்கு ஒப்பாக

 

     கடை விழிகள் சிவப்ப--- கடைக் கண்கள் செந்நிறம் கொள்ள 

 

     அமளி முழுகிச் சுகிக்கும் வினை அற ஆளாய்--- படுக்கையில் முழுகி இன்பம் அனுபவிக்கும் தொழில் தொலையும்படியாக தேவரீர் அடியேனை ஆண்டு அருளுவேண்டும்.

 

பொழிப்புரை

 

            தாமரை போன்ற திருவடியில் அணிந்து உள்ள வீரக் கழலும்விளங்குகின்ற வெட்சி மாலை அணிந்த அழகிய திருத்தோள்களும்  என் கண்களில் இடம் பெற்று விளங்கத் திருநடனம் செய்து அருள்கின்ற வேலவரே!

 

            அருச்சுனனுக்கு அமைக்கபட்டிருந்த அநுமக் கொடி பறக்கும் தேரை ஓட்டுபவனாகிய மாயவன்தேன் கொண்ட மலர்களையும் நல்ல துளசி மாலையையும் அணிந்த திருமாலின் திருமருகரே!

 

            சந்தனக் கலவையை அணிந்துள்ள திருமார்பினை உடையவள்இன்ப லீலைகள் செய்யும் குறமகள்,தாமரை போன்ற திருமுகத்தையும் திருத்தோள்களையும் உடைய வள்ளிப்பிராட்டியின் கணவரே!

 

            கடலையும்கிரெளஞ்ச மலையையும் சூரனையும் புண்படுத்தி அழித்து,

மேலான கருவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

 

            இளநீர் போன்றதும், மலை போன்றதும் ஆகிய அமுதம் பெருகும் தடமும் ஆகிய முலையை,கனி ரசம் அடங்கியுள்ள அந்தக் குடத்தை அநுபவிக்க எண்ணி, வழக்கமான முறையில் இரண்டு கைகளாலும் அடைத்து,இடையானது துவண்டு போகவும்,கூந்தல் சரிந்து கலையவும்வாயிதழினின்றும் சர்க்கரை போலவும்பழச்சாறு போலவும் ஊறும் எச்சில் ஆகிய தேனைதாமரை மலரை ஒத்த முகத்தோடு முகம் வைத்துப் பருகி,இன்பம் முற்றிய அனுபவத்துடன்இழிந்த பெண்குறியிடத்தே முழுகிபேச்சு கிளிக்கு ஒப்பாககடைக் கண்கள் செந்நிறம் கொள்ள, படுக்கையில் முழுகி இன்பம் அனுபவிக்கும் தொழில் தொலையும்படியாகஅடியேனை தேவரீர் ஆண்டு அருளவேண்டும்.

 

விரிவுரை

 

 

முளரிப் பு ஒத்த முக முகம் வைத்து அருத்தி--- 

 

முளரிப் பு --- முளரிப் பூ. தாமரை மலரை ஒத்த முகம்.

            

நளினப் பதக் கழலும்--- 

 

நளினம் --- தாமரை.

 

ஒளிர் செச்சை பொன் புயம்--- 

 

செச்சை -- வெட்சி. 

 

என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா ---

 

முருகப் பெருமானுடைய திருநடனக் காட்சி அருணகிரிநாதரின் கண்களை விட்டு அகலாமல் விளங்குகின்றது

 

உத்தம ஞானிகள் கண்ணைவிட்டு இறைவனுடைய அருட்காட்சி விலகாது. "எண் கண்ணில் ஆடு தழல்வேணி எந்தை" என்று போறிதொரு திருப்புகழ்ப் பாடலில் கூறியுள்ளது காண்க.

 

கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்,

 காளத்தியான்,அவன் என் கண்ணுளானே          --- அப்பர்.

 

ஆறு திருஎழுத்தும் கூறு நிலைகண்டு

 நின்தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய்    --- கல்லாடம்.

 

வரங்கொண்ட உமைமுலைப்பால் மணங்கொண்ட செவ்வாயும்,

பரங்கொண்ட களிமயிலும்பன்னிரண்டு கண்மலரும்,

சிரங்கொண்ட மறைஇறைஞ்சும் சேவடியும்செந்தூரன்

கரங்கொண்ட வேலும் என்தன் கண்ணைவிட்டு நீங்காவே.

 

என்பது திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்து சுவாமிநாத தேசிகமூர்த்திகளால் இயற்றப்பட்ட,"திருச்செந்தில் கலம்பக"த்தில் உள்ளது.

 

கற்புடைய மாதர்கட்கும் கணவனார் கண்ணிலே நின்று காட்சித் தருவர். ஒரு பெண்மணியைத் தோழி நோக்கி, "நீ ஏன் கண்ணுக்கு மை தீட்டுவதில்லை” என்று வினவினாள்."என் கணவனார் கண்களில் இருக்கின்றார். மை தீட்டினால் அவர் மறைவார் என்று மை தீட்டேன்” என்றாள்.

 

கண்உள்ளார் காதலவர் ஆககண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து.                --- திருக்குறள்.

 

அனுமான் சீதையை அசோக வனத்தில் பார்த்து விட்டுஇராமபிரானிடம் போய் எம்பெருமானே! அன்னை ஜானகியின் கண்ணிலும் நீ இருக்கின்றாய்அவருடைய கருத்திலும் நீ இருக்கின்றாய்அவர் வாக்கிலும் நீ இருக்கின்றாய்"என்று கூறுகின்றார்.

 

கண்ணினும் உளை நீதையல்

    கருத்தினும் உளை நீவாயின்

எண்ணினும் உளை நீகொங்கை

    இணைக்குவை தன்னின் ஓவாது

அண்ணல் வெம் காமன் எய்த

    அலர் அம்பு தொளைத்த ஆறாப்

புண்ணிலும் உளை நீநின்னைப்

    பிரிந்தமை பொருந்திற்று ஆமோ!    --- கம்பராமாயணம்.

 

நரனுக்கு அமைத்த கொடி ---

 

நரன் --- மனிதன். இங்கே அருச்சுனைக் குறிக்கும். அருச்சுனனுக்கு அமைக்கப்பட்டு இருந்தது அனுமக் கொடி.

 

இரத அச்சுதக் களவன்--- 

 

இரதம் -- தேர்.

 

அச்சுதன் --- திருமால்,  களவன் --- களா நிறம் உள்ளவன்.

 

நறை புட்ப நல் துளவன் மருகோனே--- 

 

நறை புட்பம் --- தேன் துளிர்க்கும் மலர்.

 

நல் துளவன் --- நல்ல துளசி மாலையை அணிந்தவன். திருமால்.

 

களபத் தனத்தி--- 

 

களபம் --- சாந்துக் கலவை. தனம் -- மார்பகம்.

 

முகம் கமலப் புயத்து வ(ள்)ளி மணவாளா--- 

 

வள்ளிநாயகியின் முகம் தாமரை. தோள்களும் தாமரை.

 

கமலம் --- இடைநிலைத் தீவகமாக வந்தது.

 

கடலைக் குவட்டு அவுணை இரணப் படுத்தி--- 

 

கடல் --- சூரபதுமன் ஒளிந்திருந்த கடல்.

 

குவடு --- கிரவுஞ்ச மலை.

 

அவணை --- அவணன் ஆகிய சூரபதுமனை.

 

இரணப் படுத்துதல் --- புணபடுத்தி அழித்தல்.

 

உயர் கருவைப் பதிக்குள் உறை பெருமாளே --- 

 

கருவை என்றதுகருவூர் என்னும் திருத்தலத்தை. இக் காலத்தில் கரூர் என்று வழங்கப்படுகின்றது

 

கரூர் நகரின் மத்தியில் திருக்கோயில் உள்ளது. கோயமுத்தூர்ஈரோடுதிருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் இரயில் நிலையம்,திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் இருக்கிறது. "ஆனிலை" என்பது திருக்கோயிலின் பெயர்.

 

இறைவர்.       : பசுபதீசுவரர்ஆனிலையப்பர்.

இறைவியார்  : கிருபாநாயகிசௌந்தர்யநாயகி

தல மரம்        : கொடி முல்லை

தீர்த்தம்          : ஆம்பிராவதி ஆறு

 

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மாகாமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர்ச் சித்தர் சந்நிதி உள்ளது.

 

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும்பன்னிருதிருக்கரங்களுடனும்தேவியர் இருவருடனும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கம் உள்ளது.

 

எறிபத்த நாயனார் அவதரித்த தலம்.

 

கருவூர் ஆனிலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைப்பவர்களை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி நின்றவர் ஒருவர் இருந்தார். அவர்எறிபத்த நாயனார் என்னும் திருப்பெயர் உடையவர். அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்.  ஆனிலையப்பருக்கு பூத் தொண்டு செய்பவர். ஒருநாள்அதாவது நவமி முன்னாளில்சிவகாமியாண்டார் வழக்கம்போல் பூக்களால் கூடையை நிரப்பிஅக் கூடையைத் தண்டில் தூங்கச் செய்து,திருக்கோயில் நோக்கிச் செல்லலானார். அவ் வேளையில் அவ் வழியே புகழ்ச்சோழ மன்னவரின் பட்டவர்த்தன யானை காவிரியில் மூழ்கிபாகர்கள் மேலேயிருப்பகுத்துக்கோல்காரர்கள் முன்னே ஓடவிரைந்து நடந்து வந்தது. அந்த யானை சிவாகமியாண்டாரை நெருங்கித் தண்டில் இருந்த பூங்கூடையைப் பற்றி மலர்களைச் சிந்தியது. அதைக் கண்ட பாகர்கள்,யானையை வாயு வேகமாக நடத்திச் சென்றார்கள். சிவகாமியாண்டார் சினந்து வேழத்தைத் தண்டினால் புடைக்க விரைந்து நடந்தார். யானையின் கதிநடை எங்கேசிவகாமியாண்டார் மூப்பு நடை எங்கேமூப்பால் சிவகாமியாண்டார் கால் தவறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையைக் கையால் மோதி எழுந்து நின்று, "ஆனிலையப்பாஉன் திருமுடி மீது ஏறும் மலரை ஒரு யானையா மண்ணில் சிந்துவதுசிவதா! சிவதா!" என்று ஓலமிடலானார். அவ் ஓலம் கேட்டுக் கொண்டுஅவ் வழியே வந்த எறிபத்த நாயனார்சிவகாமியாண்டாரை அடைந்து பணிந்து, "அக் கொடிய யானை எங்குற்றது?" என்று கேட்டார். சிவகாமியாண்டார், "அந்த யானை இவ் வீதி வழியே போயிருக்கிறது" என்றார். என்றதும்எறிபத்த நாயனார் காற்றெனப் பாய்ந்துயானையைக் கிட்டிஅதன் மீது பாயந்தார். யானையும் எறிபத்தர் மீது பாய்ந்தது. நாயனார் சிறிதும் அஞ்சாது யானையை எதிர்த்துத் தமது மழுவினால் அதன் துதிக்கையைத் துணித்தார். யானை கதறிக் கொண்டு கருமலைபோல் கீழே விழுந்தது. பின்னை குத்துக்கோல்காரர்கள் மூவரையும்,பாகர் இருவரையும் நாயனார் வெட்டி வீழ்த்தினார். மற்றவர்கள் விரைந்து ஓடி, "பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றனர்" என்று புகழ்ச்சோழ மன்னருக்கு அறிவித்தார்கள்.

 

சோழர் பெருமான்வடவை போல் சீறிஒரு குதிரை மீது ஏறிப் புறப்பட்டார்.  நால்வகைச் சேனைகளும்பிறவும் அவரைச் சூழ்ந்து சென்றன. மன்னர் பெருமான்யானை இறந்துபட்ட இடத்தைச் சேர்ந்தார். யானையைக் கொன்றவர் எறிபத்தர் என்று கொள்ளாதவராய், "மழுவைத் தாங்கி நிற்கும் இவரே நமது யானையைக் கொன்றவர்" என்றார்கள். புகழ்ச்சோழ நாயனார் திடுக்கிட்டு, "இவர் சிவனடியார். குணத்தில் சிறந்தவர். யானை பிழைசெய்து இருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதைக் கொன்று இருக்கமாட்டார்" என்று எண்ணிச் சேனைகளை எல்லாம் நிறுத்திகுதிரையில் இருந்து இறங்கி, "இப் பெரியவர் யானைக்கு எதிரே சென்றபோதுவேறு ஒன்றும் நிகழாது இருக்க,நான் முன்னே என்ன தவம் செய்தேனோஅடியவர் இவ்வளவு முனியக் கெட்டேன். நேர்ந்த பிழை என்னவோ?" என்று அஞ்சிநாயனார் முன்னே சென்று தொழுது, "யானையைக் கொன்றவர் அடியவர் என்று நான் அறியேன்.  நான் கேட்டது ஒன்று. இந்த யானை செய்த பிழைக்கு இதனைப் பாகரோடும் மாய்த்தது போதுமா?" என்று கேட்டார். நாயனார் நிகழ்ந்ததைக் கூறினார். சோழர் பெருமான் எறிபத்த நாயனாரை வணங்கிச் "சிவனடியாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும் பாகர்களையும் கொன்றது போதாது.  என்னையும் கொல்லுதல் வேண்டும். அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறைமை அல்ல" என்று சொல்லிதமது உடைவாளை எடுத்து, "இதனால் என்னைக் கொன்று அருள்க" என்று நீட்டினார். எறிபத்தர், "அந்தோ! இவர் அன்பர். இவர் தம் அன்பிற்கு ஓர் அளவு இல்லை.  வாளை வாங்கா விட்டால் தற்கொலை செய்துகொள்வார்" என்று கருதி வாளை வாங்கினார். புகழ்ச்சோழர், "ஆ! இப் பெரியவர் அடியேனைக் கொன்று என் பிழை தீர்க்கும் பேறு பெற்றேன்" என்று மனம் மகிழ்ந்தார். எறிபத்தர், "இத் தகைய அன்பருக்கோ தீங்கு நினைத்தேன்நான் பாவி! பாவி! முதலிலே என் உயிரை மாய்த்துக் கொள்வதே முறை" என்று உறுதிகொண்டுவாளைக் கழுத்தில் இட்டு அரியப் புகுந்தார். அக் காட்சி கண்ட சோழர் பெருமான், "கெட்டேன்கெட்டேன்" என்று வாளையும் கையையும் பிடித்தார். அரசர் கையைப் பற்றினாரே என்று எறிபத்தர் வருந்தி நின்றார்.

 

"இது அன்பின் பெருக்கால் நேர்ந்த இடுக்கண். இந்த இடுக்கணை மாற்றஉங்கள் தொண்டின் மாண்பை உலகத்தவர்க்குக் காட்டவேண்டிச் சிவபெருமான் திருவருளால் இவை யாவும் நிகழ்ந்தன" என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. எழுந்ததும்யானை பாகர்களோடு உயிர் பெற்று எழுந்தது. எறிபத்த நாயனார் வாளை விடுத்துபுகழ்ச்சோழ நாயனாரை வணங்கினார். புகழ்ச்சோழ நாயனார் வாளை எறிந்த சிவபத்தரைப் பணிந்தார். இருவரும் திருவருளை வழுத்தினர்.  திருவருளால் பூக்கூடை நிறைந்தது. சிவகாமியாண்டார் ஆனந்த வாரிதியில் திளைத்தார். பட்டவர்த்தனத்தை அழைத்துக் கொண்டு பாகர்கள் அரசர் முன்னே வந்தனர். எறிபத்த நாயனார் வேண்டுகோளுக்கு இணங்கிபுகழ்ச்சோழ நாயனார் யானைமீது எழுந்தருளிச் சேனைகள் புடைசூழ அரண்மனையை அடைந்தார்.  சிவகாமியாண்டார் பூக்கூடையைத் தண்டில் தாங்கித் தம் திருத்தொண்டின் மேல் சென்றார். எறிபத்த நாயனார் தாம் ஏற்ற திருத்தொண்டினைக் குறைவறச் செய்து வாழ்ந்துதிருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார்.

 

பொழில் கருவூர்த் துஞ்சிய

புகழ்ச் சோழ நாயனார்

வரலாறு

 

புகழ்ச்சோழ நாயனார் சேழநாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர். ஊறையூரிலே ஆட்சி புரிந்தவர். சைவம் தழைக்க முயன்றவர்.  திருக்கோயில்களில் பூசனைகளை வழாது நடத்துவித்தவர். திருத்தொண்டர்களின் குறிப்பறிந்து உதவுபவர்.

 

கொங்கு நாட்டு அரசர்களிடம் இருந்தும் குடகு நாட்டு அரசர்களிடம் இருந்தும் திறை வாங்குதல் பொருட்டுப் புகழ்ச்சோழ நாயனார் கருவூருக்குச் சென்றார்.  அத் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆனிலைப் பெருமானை வழிபட்டுத் திருமாளிகை சேர்ந்துஅரியாசனத்தில் வீற்றிருந்தார். கொங்கரும்குடகரும் திறை செலுத்தினர். புகழ்ச்சோழர் அவர்கட்கு ஆசி கூறிஅரசுரிமைத் தொழில் அருளினார்.மேலும் சோழர் பெருமான்அமைச்சர்களை நோக்கிநமது ஆணைக்குக் கீழ்ப்படாத அரசர் எவரேனும் உளரோ அறிந்து சொல்லுங்கள் என்று கட்டளை இட்டார்.

 

அந்நாளில்சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஆனிலைப் பெருமானுக்கு வழக்கம்போல் திருப்பள்ளித்தாமம் கொண்டு போனார்.  அதனைப் பட்டத்து யானைபற்றி ஈர்த்துச் சிதறச் செய்தது. எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டிக் கொன்றார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழ நாயனார்எறிபத்த நாயனார் எதிரே சென்றுநேர்ந்த அபராதத்திற்குபட்டத்து யானையையும்பாகரையும்பறிக்கோல் காரர்களையும் கொன்றது போதாது. தன்னையும் கொல்லுமாறுதனது உடைவாளை எறிபத்த நாயனாரிடம் கொடுத்தார்.  எறிபத்த நாயனார் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தபோதுஇறைவர் வானிலே காட்சி கொடுத்தருளினார். பட்டத்து யானையும்மாண்டோரும் எழுந்தனர். இவ்வாறு கருவூரில் இருந்த காலத்தில் புகழ்ச்சோழ நாயனார் திருத்தொண்டில் மேம்பட்டவராக விளங்கினார்.

 

அமைச்சர்கள் மன்னரிடம் வந்து நின்று, "உங்கள் ஆட்சிக்குக் கீழ்ப்படியாத அரசன் ஒருவனே உள்ளான். அவன் அதிகன் என்பவன்.  அவன் அருகே உள்ள மலை அரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள்.  உடனேபுகழ்ச்சோழ நாயனார் அமைச்சர்களைப் பார்த்து, "அவ் அரணை அதம் செய்து வாருங்கள்" என்றார். அமைச்சர்கள் அப்படியே செய்தார்கள். அதிகன் ஓடி ஒளித்துக் கொண்டான். புகழ்ச்சோழரின் சேனை வீரர்கள் அதிகனுடைய சேனை வீரர்களின் தலைகளையும்செல்வங்களையும்பிறவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

 

ஒரு வீரரின் சடைத்தலை புகழ்ச்சோழ நாயனாரின் கண்ணுக்குப் புலனாயிற்று. நாயனார் அலறுகிறார்கதறுகிறார். "சைவம் தழைக்க அரசு இயற்றுபவன் நானாநல்லது! நல்லது!" என்றார். "சோற்றுக் கடன் முடிக்கப் போர்புரிந்த அடியவரையோ என் சேனை கொன்றது?" என்றார். "இப் பழிக்கு என் செய்வேன் என் உயிர் நீங்கவில்லையே" என்றார்.

 

இவ்வாறு நாயனார் புலம்பிஅமைச்சர்களை நோக்கி, "இவ் உலகத்தை ஆளுமாறும்சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள்" என்று கட்டளை இட்டார்.  அமைச்சர்கள் மனம் கலங்கி நின்றார்கள்.  நாயனார் அவர்களைத் தேற்றினார். நெருப்பை வளர்ப்பித்தார். நீற்றுக் கோலப் பொலிவுடன்திருச்சடைத் தலையை ஒரு மாணிக்கத் தட்டிலே ஏந்தினார். அதைத் தமது திருமுடியிலே தாங்கினார். நெருப்பை வலம் வந்தார்.  திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டே நெருப்பில் இறங்கினார்.  ஆண்டவன் திருவடி நீழலை அடைந்தார்.

 

கருவூர்த் தேவர் வரலாறு

 

திருவிசைப்பா அருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மரில் ஒருவர் கருவூர்த்தேவர். இவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் அவதரித்தவர். அதனால் கருவூர்த்தேவர் எனப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் இன்னது என விளங்கவில்லை. இவர் அந்தணர் குலத்தினர். வேதங்களையும் கலைகளையும் நன்கு உணர்ந்து ஓதியவர். இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். சைவ சமயத்தின் வழி ஒழுகியவர். போகநாதரிடம் உபதேசம் பெற்றுஞான நூல்களை ஆராய்ந்து சிவயோகத்தில் நின்றவர்.  காயகற்பம் உண்டவர். தம்மை இகழ்ந்தவர்களுக்குப் பலப்பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். பித்தர் என்று தம்மை மதிக்கும்படியாகத் திரிந்தவர். பிச்சை ஏற்று உண்ணும் துறவு வாழ்க்கைய மேற்கொண்டவர். தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் பற்று அற்று இருந்தவர். மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவர்.

 

ஒரு சமயம் கருவூர்த் தேவர் வடநாடுகொங்கு நாடுதொண்டை நாடுநடுநாடு முதலிய இடங்களில் உள்ள திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு தென்பாண்டி நாட்டுத் திருப்புடைமருதூர் சென்று இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். திருவைகுண்டம் அடுத்த காந்தீசுவரம் என்னும் சிவத்தலத்தில் இறைவனின் பேரொளியைக் கண்டு தரிசித்தார். பின்னர்இவர் நெல்லைப் பதியை அடைந்துநெல்லையப்பர் சந்நிதியில் நின்று, "நெல்லையப்பா" என்று அழைக்கஅப்பொழுது நெல்லையப்பர் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டுசிறிது தாமதிக்க, "இங்குக் கடவுள் இல்லை போலும்" என்று அவர் சினத்துடன் நீங்கஆலயம் பாழாகியது. அதனை அறிந்த ஊரார் நெல்லையப்பரை வேண்டநெல்லையப்பர் கருவூர்த்தேவரை மானூரில் சந்தித்து,அருள் புரிந்து நெல்லைப் பதிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார். பின்பு ஆலயம் செழித்து ஓங்கியது என்பர்.

 

கருவூர்த்தேவர் நெல்லைப் பதியை விடுத்துதிருக்குற்றாலம் சென்றுஅங்குச் சிலநாள் தங்கியிருந்துபின்னர் பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து,அருள் பெற்றுபலநாள் அங்கே இருந்தார்.

 

அப்பொழுது தஞ்சாவூரில் இராசராச சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய தஞ்சை இராசராசேச்சரத்துப் பேராவுடையார்க்கு அட்டபந்தன மருந்து பலமுறை சாத்தியும் இறுகாமல் இளகி நின்றது.  அது கண்டு மன்னன் வருந்தினான். அதனை அறிந்த போகநாதர்,பொதியமலையில் இருந்து கருவூர்த்தேவரை அழைப்பித்தார். கருவூர்த் தேவர் விரைந்து தஞ்சைக்கு வந்துதம் குருவையும் அரசனையும் கண்டார். இறைவனை வழிபட்டுஅட்டபந்தன மருந்தை இறுகச் செய்து பேராவுடையாரை நிலை நிறுத்தினார்.

 

கருவூர்த் தேவர் தஞ்சாவூரில் இருந்து திருவரங்கம் சென்றுஅரங்கநாதர் அருள் பெற்றுச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்து பின் கருவூரை அடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப் பிராமணர்கள்கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கத்தை விட்டவர் என்றும்,வாமபூசைக்காரர் என்றும் பழிச்சொல் தூற்றி அவருக்கு அடிக்கடி பலப்பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர். ஒருநாள் கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல் நடித்துகருவூர்த் திருஆனிலை ஆலயத்தை அடைந்துபசுபதீசுவரரைத் தழுவிக் கொண்டார்.

 

கருவூர்த் தேவர் திருவுருவச்சிலை சிறு சந்நிதியாகக் கருவூர்ப் பசுபதீசுரர் ஆலயத்துள் வெளிப் பிராகாரத்திலே தென்மேற்குத் திக்கிலும்தஞ்சாவூர் பேராவுடையார் ஆலயத்தில்

வெளிப்பிரகாரத்தில் தென்மேற்குத் திக்கிலும் தெய்வீகச் சிறப்புடன் இள்ளது. அங்கு நாள்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன.

 

கருவூர்த் தேவர் திருத்தில்லைதிருக்களந்தை ஆதித்தேச்சரம்திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்திருமுகத்தலைதிரைலோக்கிய சுந்தரம்கங்கைகொண்ட சோளேச்சரம்திருப்பூவணம்திருச்சாட்டியக்குடிதஞ்சை இராசராசேச்சரம்திருவிடைமருதூர் ஆகிய பத்துச் சிவாலயங்களுக்கும்தலங்களுக்கு ஒவ்வொன்றாகத் திருவிசைப்பாப் பதிகங்கள் பத்துப் பாடியுள்ளார். திருவிசைப்பாப் பாடிய ஆசிரியர்களுள் இவர் பாடிய பதிகங்களே மிகுதியாக உள்ளன.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் வினை அஅடியேனை ஆண்டு அருள்வாய்

 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...