பூவாளூர் --- 0928. காலன் வேற்கணை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

காலன் வேல்கணை (பூவாளூர்)

 

முருகா! 

விலைமாதர் கூட்டுறவில் வாழ்நாளைக் கழிக்காமல்

அடியேனை அழைத்து அருள் உபதேசம் புரிவாய்.

 

 

தான தாத்தன தானா தானன

     தான தாத்தன தானா தானன

          தான தாத்தன தானா தானன ...... தனதான

 

 

காலன் வேற்கணை யீர்வா ளாலமு

     நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்

          காம சாத்திர வாய்பா டேணிக ...... ளெவரேனுங்

 

காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்

     போக பாத்திர மாமூ தேவிகள்

          காசு கேட்டிடு மாயா ரூபிக ...... ளதிமோக

 

மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்

     ஆனை போற்பொர நேரே போர்முலை

          மார்பு காட்டிகள் நானா பேதக ...... மெனமாயா

 

மாப ராக்கிக ளோடே சீரிய

     போது போக்குத லாமோ நீயினி

          வாவெ னாப்பரி வாலே யாள்வது ...... மொருநாளே

 

பால றாத்திரு வாயா லோதிய

     ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்

          பாடல் தோற்றிரு நாலா மாயிர ...... சமண்மூடர்

 

பாரின் மேற்கழு மீதே யேறிட

     நீறி டாத்தமிழ் நாடீ டேறிட

          பாது காத்தரு ளாலே கூனிமி ...... ரிறையோனும்

 

ஞால மேத்திய தோர்மா தேவியும்

     ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு

          ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா

 

ஞான தீக்ஷித சேயே காவிரி

     யாறு தேக்கிய கால்வாய் மாமழ

          நாடு போற்றிய பூவா ளுருறை ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

காலன் வேல்கணை,ஈர்வாளால்முன்

     நேர் கணால் கொலை சூழ் மாபாவிகள்,

          காம சாத்திர வாய்பாடு ஏணிகள்,......எவரேனும்

 

காதல் ஆர்க்கும் வினாவாய் கூறிகள்,

     போக பாத்திர மா மூதேவிகள்,

          காசு கேட்டிடு மாயா ரூபிகள்,...... அதிமோக

 

மாலை மூட்டிகள்,வான் ஊடே நிமிர்

     ஆனை போல் பொர நேரே போர்முலை

          மார்பு காட்டிகள்,நானா பேதகம் ...... என மாயா

 

மாபராக்கிகளோடே சீரிய

     போது போக்குதல் ஆமோ?நீ இனி

          வா எனாப் பரிவாலே ஆள்வதும் ...... ஒருநாளே?

 

பால் அறாத் திரு வாயால் ஓதிய

     ஏடு நீர்க்கு எதிர் போயே,வாதுசெய்,

          பாடல் தோற்றுரு நாலாம் ஆயிர ...... சமண்மூடர்

 

பாரின் மேல் கழு மீதே ஏறிட,

     நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட,

          பாது காத்து அருளாலே கூன்நிமிர் ......இறையோனும்

 

ஞாலம் ஏத்தியது ஓர் மா தேவியும்,

     ஆலவாய்ப் பதி வாழ்வு ஆமாறு எணும்

          ஞான பாக்கிய பாலா! வேலவ! ...... மயில்வீரா!

 

ஞான தீட்சித! சேயே! காவிரி

     ஆறு தேக்கிய கால்வாய் மா மழ

          நாடு போற்றிய பூவாளுர் உறை ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

      பால் அறாத் திருவாயால் ஓதிய ஏடு--- (உமையம்மையார் அளித்த) ஞானப்பாலின் மணம் மாறாத திருவாயால் (திருஞானசம்பந்தராக வந்து) பாடிய திருப்பதிகம் பொருந்திய ஏடானது,

 

     நீர்க்கு எதிர் போயே--- (வைகை ஆற்றின்) நீரை எதிர்த்துப் போகவும்,

 

      வாது செய் பாடல் தோற்ற---வாதுக்கு வந்து (திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய) பாடலுக்குத் தோற்ற

 

     இரு நாலாம் ஆயிர சமண் மூடர்--- எண்ணாயிரம் சமணர்கள் ஆகிய மூடர்கள்,

 

     பாரின்மேல் கழுமீதே ஏறிட--- இந்தப் பூமியின் மீது கழுவில் ஏறிடவும்,

 

      நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட பாதுகாத்து--- திருநீற்றை இடாதிருந்த தமிழ்நாடு ஈடேறும்படியாகத் திருவருள் புரிந்து (பாண்டிய மன்னன் முதலான அனைவர்க்கும் திருநீறு அளித்துப்) பாதுகாத்து

 

      அருளாலே--- அருட்கருணையால்,

 

     கூன் நிமிர் இறையோனும்--- தனது உடல் கூனும்உள்ளக் கூனும் நிமிரப் பெற்ற மன்னன் ஆகிய பாண்டியனும்,

 

     ஞாலம் ஏத்தியது ஓர் மாதேவியும்--- உலகமே போற்றிய ஒப்பற்ற பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும்,

 

     ஆலவாய்ப் பதி வாழ்வாமாறு எ(ண்)ணும்--- திருவாலவாய் என்று வழங்கப்பெறும் மதுரையம்பதியினரும் நல்வாழ்வு பெறுமாறு திருவுள்ளம் பற்றி அருளி,

 

      ஞான பாக்கிய பாலா--- ஞான பாக்கியக் குழந்தையே! 

 

     வேல--- வேலவரே!

 

     மயில் வீரா-- மயில் வீரரே!

 

     ஞான தீட்சித--- ஞானத்தைப் போதித்தவரே!

 

     சேயே--- குழந்தையே!

 

      காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மாமழ நாடு போற்றிய பூவாளூர் உறை பெருமாளே--- காவிரியாற்றின் நீர் நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழநாட்டில் உள்ளோர் வழிபடுகின்ற பூவாளூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

 

      காலன் வேல்--- இயமனின் வேல் போன்றதும்,

 

     கணை --- அம்பினைப் போன்றதும்,

 

     ஈர்வாள்--- அறுக்கும் வாளினைப் போன்றதும்,

 

     ஆலமு(ம்) நேர் க(ண்)ணால்--- விடத்தை ஒத்ததும் ஆன கண்களால்,

 

     கொலை சூழ் மாபாவிகள்--- காமுகரின் உள்ளத்தைக் கொல்லுகின்ற பெரும்பாவிகள்,

 

       காம சாத்திர வாய்பாடு ஏணிகள்--- காமசாத்திரத்தையே தமது வாய்ப்பாடாகக் கொண்டுஅதையே ஏணியாக வைத்து காமுகரைக் காமத்தில் ஏறவிடுபவர்கள்,

 

     எவரேனும் காதல் ஆர்க்கும் வினாவாய் கூறிகள்--- வருபவர் யாராக இருந்தாலும் காதல் ததும்பும் வார்த்தைகள் வாயாரப் பேசுபவர்கள்,

 

       போக பாத்திர மாமூதேவிகள்--- காம அனுபவத்துக்குப் பாத்திரமாக உள்ள பெரும் மூதேவிகள்,

 

     காசு கேட்டிடு(ம்) மாயா ரூபிகள்--- (தமது உடல் சுகத்துக்கு விலையாகப்) பொருளைக் கேட்கின்ற மாயையின் வடிவமாக உள்ளவர்கள்,

 

      அதிமோக மாலை மூட்டிகள்--- அதிக மோக மயக்கத்தை ஊட்டுபவர்கள்,

 

     வானூடே நிமிர் ஆனைபோல் பொர நேரே --- வானத்தை நோக்கி நிமிர்ந்து சண்டை செய்ய வந்த யானையைப் போல நிமிர்ந்து நோக்கிப்

 

     போர் முலைமார்பு காட்டிகள்--- பெருத்த முலைகள் எழுந்துள்ள மார்பகத்தைக் காட்டுபவர்கள்,

 

      நானா பேதகம் என--- வேறுபாடுகளை உடை,

 

     மாயா மா பராக்கிகளோடே --- மாயையகளைச் செய்து பராக்குக் காட்டுவதில் வல்லவர்களான விலைமாதர்களுடன்,

 

     சீரிய போது போக்குதல் ஆமோ--- சிறந்த பொழுதினை அடியேன் போக்குவது தகுமோ? (தகாது.)

 

      நீ இனி வா எனா--- (ஆதலால்) தேவரீர்இனி என்னை வா என்று அழைத்து,

 

     பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே--- அன்புடன் ஆண்டு அருளுகின்ற ஒரு நாள் என்று உண்டாகும்

 

 

பொழிப்புரை

 

 

     திருஞானசம்பந்தராக வந்து,உமையம்மையார் அளித்த ஞானப்பாலின் மணம் மாறாத,திருவாயால் பாடிய திருப்பதிகம் பொருந்திய ஏடானது,வைகை ஆற்றின்) நீரை எதிர்த்துப் போகவும்வாதுக்கு வந்துபாடலுக்குத் தோற்றஎண்ணாயிரம் சமணர்கள் ஆகிய மூடர்கள்இந்தப் பூமியின் மீது கழுவில் ஏறிடவும்திருநீற்றை இடாதிருந்த தமிழ்நாடு ஈடேறும்படியாகத் திருவருள் புரிந்துபாண்டிய மன்னன் முதலான அனைவர்க்கும் திருநீறு அளித்துப் பாதுகாத்த உமது அருட்கருணையால்தனது உடல் கூனும்உள்ளக் கூனும் நிமிரப் பெற்ற மன்னன் ஆகிய பாண்டியனும்,உலகமே போற்றும் ஒப்பற்ற பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும்திருவாலவாய் என்று வழங்கப்பெறும் மதுரையம்பதியினரும் நல்வாழ்வு பெறுமாறு திருவுள்ளம் பற்றி அருளிஞானப் பேற்றை அருளிய குழந்தையே! 

 

     வேலவரே!

 

     மயில் வீரரே!

 

     ஞானத்தைப் போதித்தவரே!

 

     குழந்தையே!

 

      காவிரியாற்றின் நீர் நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழநாட்டில் உள்ளோர் வழிபடுகின்ற பூவாளூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

 

      இயமனின் வேல் போன்றதும்அம்பினைப் போன்றதும்அறுக்கும் வாளினைப் போன்றதும்விடத்தை ஒத்ததும் ஆன கண்களால்காமுகரின் உள்ளத்தைக் கொல்லுகின்ற பெரும்பாவிகள்காமசாத்திரத்தையே தமது வாய்ப்பாடாகக் கொண்டுஅதையே ஏணியாக வைத்து காமுகரைக் காமத்தில் ஏறவிடுபவர்கள்;வருபவர் யாராக இருந்தாலும் காதல் ததும்பும் வார்த்தைகள் வாயாரப் பேசுபவர்கள்காம அனுபவத்துக்குப் பாத்திரமாக உள்ள பெரும் மூதேவிகள்தமது உடல் சுகத்துக்கு விலையாகப் பொருளைக் கேட்கின்ற மாயையின் வடிவமாக உள்ளவர்கள்அதிக மோக மயக்கத்தை ஊட்டுபவர்கள்வானத்தை நோக்கி நிமிர்ந்து சண்டை செய்ய வந்த யானையைப் போல நிமிர்ந்து நோக்கிப்பெருத்த முலைகள் எழுந்துள்ள மார்பகத்தைக் காட்டுபவர்கள்வேறுபாடுகளை உடைய மாயையகளைச் செய்து பராக்குக் காட்டுவதில் வல்லவர்களான விலைமாதர்களுடன்சிறந்த பொழுதினை அடியேன் போக்குவது தகுமோ? (தகாது.)ஆதலால்,தேவரீர்இனி என்னை வா என்று அழைத்து,அன்புடன் ஆண்டு அருளுகின்ற ஒரு நாள் என்று உண்டாகும்

 

 

விரிவுரை

 

காலன் வேல்--- 

 

வெல்லும் தொழிலை உடையது வேல். விலைமாதரின் கண்கள் காமுகரின் உள்ளத்தை வெல்லும்.

 

கணை---

அம்பு கூர்மையானது. விடுத்தால் தான் பிறரை அழிக்கும். விலைமாதரின் கண்களானவை இருந்த இடத்தில் இருந்தே பிறரை அழிக்கும்.

 

ஈர்வாள்--- 

 

அறுக்கும் வாள். வாளானது சென்று அறுக்கும். விலைமாதரின் கண்கள் இருந்த இடத்தில் இருந்துகொண்டே அழிக்கும்.

 

ஆலமு(ம்) நேர் க(ண்)ணால்--- 

 

அலம் --- விடம். 

 

விடம் உண்டாரைக் கொல்லும்.

 

விலைமாதரின் கண்கள் கண்டாரைக் கொல்லும்.

 

காம சாத்திர வாய்பாடு ஏணிகள்--- 

 

வாய்ப்பாடு --- ஏடு பாராமல் சொல்லும் பாடம். நூல்கள் இல்லாமல் கேள்வியால் படித்த பாடம்.

 

காமசாத்திரத்தை நூல்கள் வாயிலாகக் கல்லாதுபழக்கத்தாலேயே கற்றவர்கள் விலைமாதர்கள்.

 

காமுகரைத் தமது காமசாத்திரக் கலையினை ஏணியாக வைத்து ஏறவிட்டுபின்னர் வருத்துவார்கள்.

 

அறிவு நூல்அருள் நூல்கள் கற்றவர்கள்,தாம் கற்றதையே ஏணியாக வைத்துப் பிறரை ஏற்றிவருந்தாவகைக் காப்பாற்றுவார்கள்.

 

 

போக பாத்திர மாமூதேவிகள்--- 

 

மூதேவி --- திருமகளின் முன் பிறந்தவள். அழகு இல்லாதவள். தீய பேற்றுக்கு அதிதேவதை ஆனவள்.

 

போக பாத்திரம் --- அனுபோகத்திற்குது துணையாக இருப்பவர்கள்.

 

"மோக பாத்திரம்" என்பது பாடமானால்,மோகத்தை விளைப்பதற்கு இடமாக உள்ளவர்கள் என்று பொருள்படும்.

 

 

காசு கேட்டிடு(ம்) மாயா ரூபிகள்--- 

 

அருளைக் கருதாதுபொருளையே கருதிதமது உடல் சுகத்தை விலை பேசுவர்கள் விலைதார்கள். பொருளைப் பற்றக் கருதிபல மயக்கு வித்தைகளைப் பயில்பவர்கள்.

 

அதிமோக மாலை மூட்டிகள்--- 

 

மாலை --- மால்மயக்கம். மோகமயக்கத்தை ஊட்டுபவர்கள்.

 

மாயா மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ --- 

 

பராக்கு --- கவனம் இன்மை. கவனம் மாறுதல்.

 

சீரிய போது போக்குதல் --- சிறந்த பொழுதைக் கழித்தல்.

 

இந்த மனித உடம்பு மிகமிக அருமையினும் அருமையானது. பிறப்பின் நோக்கம்இனிப்பிறவாமையே ஆகும். அப் பிறவாமையைப் பெறுதற்குரியது மனிதப் பிறப்பே ஆகும். எத்தனையோ காலம் ஈட்டிய நற்பயனால் வருவது இம்மானுடம். அண்டசம்சுவேதசம்உற்பீசம்சராயுசம் என்ற நால்வகைப் பிறப்புக்களில் மாறிமாறி பிறந்து இறந்து இம் மனித உடம்பு எடுப்பதுகடலைக் கையால் நீந்திக் கரை சேர்வது போலாகும்.

 

அண்டசம் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோடு

எண்தரு நால்எண்பத்து நான்குநூறு ஆயிரம்தான்

உண்டுபல் யோனி எல்லாம் ஒழித்து மானுடத்து உதித்தல்

கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியம்காண்.

                                                                                                ---  சிவஞான சித்தியார்.

 

“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்பார் ஔவையார்.

 

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்

யாதினும் அரிதுஅரிது காண்

இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ

யாது வருமோ அறிகிலேன்...

 

என்று கல்லும் கனியக் கூறுவார் அநுபூதிச் செல்வராகிய தாயுமானார்.

 

பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கரிய பிரான்அடி பேணார்..

 

என்பார் திருமூல நாயனார்.

 

நமது வாழ்நாள் மிகவும் சிறந்தது. ஒவ்வொரு கணமும் விலை மதிக்க முடியாத மாணிக்கமாகும். சிறந்த இந்த உடம்பையும் உயர்ந்து வாழ்நாளையும் வீணில் கழித்தல் கூடாது. பயனுடையதாகப் புரிதல் வேண்டும். களியாடல்களிலும்,வீண் பேச்சுக்களிலும்வம்புரைகளிலும்வழக்காடுவதிலும் நமது நாளைக் கழிப்பது பேதைமையாகும். காமதேனுவின் பாலைக் கமரில் விடுவதுபோல் ஆகும். தனியே இருந்து இதனைச் சிந்தித்தல் வேண்டும். பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரே ஈசன் கீழ்க்கணக்கில் எழுதுவான். சென்ற வாழ்நாளை மலையளவு செம்பொன் கொடுத்தாலும் திரும்ப அடைதல் இயலாது.

 

"ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்

     ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்

வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்

     வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே

வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே

     மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ

நாடு கின்றவர் நாதன்தன் நாமம்

     நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே". 

 

என்பர் இராமலிங்க அடிகள்.

 

இத்தகைய சிறந்த நேரத்தைச் சிலர்பொழுதே போகவில்லைஎன்றும் பாழும்பொழுது என்றும் கூறி அல்லல் உறுகின்றனர். சிலர் வீண்பொழுது கிழிக்கின்றனர்.

 

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்

மென்றாலும் அயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்

மன்றாடு மலர்ப்பாதம் ஒருபோதும் மறவாமல்

குன்றாத உணர்வுஉடையார் தொண்டராம் குணமிக்கார்.

 

என்ற தெய்வச் சேக்கிழாரின் அருமைத் திருவாக்கை நன்கு சிந்தித்து உய்க.

 

மெய்த்தவர் அடிக்குற் றேவலின் திறத்தும்,

      விளங்கும் ஆகமஉணர்ச் சியினும்,

புத்தலர் கொடுநின் பரவுபூ சையினும்

      பொழுதுபோக்கு எனக்குஅருள் புரிவாய்;

முத்தமும் அரவ மணிகளும் எறிந்து

      முதிர்தினைப் புனத்துஎயின் மடவார்

தத்தைகள் கடியும் சாரல்அம் சோண

      சைலனே கைலைநா யகனே.

 

"சோணசைல மாலை" என்னும் நூலில் பொழுதுபோக்கு எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற அறிவுறுத்துகின்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

இதன் பொருள் ---

 

முதிர்ந்த தினைப்புனத்தைக் காவல் செய்யும் வேடர் மகளிர்முத்துக்களையும்மணிகளையும் எறிந்து கிளிகளைத் துரத்துகின்ற சாரலோடு விளங்கும் சோணசைலப் பெருமானேதி! ருக்கயிலையின் நாயகனே!  உண்மைத் தவம் உடையவர்களின் திருவடிகளை வழிபடுதலிலும்சிவாகமங்களை ஆய்ந்து ஓதி உணர்தலிலும்அன்று அலர்ந்த மலர்களால் உம்மை வழிடுகின்ற திறத்திலுமே எனது பொழுது கழியுமாறு அருள் புரவீராக.

 

எந்நேரமும் நல் நேரமாகக் கழிய வேண்டும். திருவருள் தாகம் இருத்தல் வேண்டும். எடுத்த இப்பிறப்பிலேயே பிறப்பின் இலட்சியத்தைப் பெறப் பெரிதும் முயலுதல் வேண்டும்.

 

"பொய்திகழும் உலகநடை என்சொல்கேன்,என்சொல்கேன்,

                பொழுதுபோக்கு ஏது என்னிலோ,

  பொய்உடல் நிமித்தம் புசிப்புக்கு அலைந்திடல்,

                புசித்தபின் கண்ணுறங்கல்,

கைதவம் அலாமல் இது செய்தவம் அதுஅல்லவே,

                கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க்

  கண்டது இது விண்டு இதைக் கண்டித்து நிற்றல்எக்

                 காலமோ அதை அறிகிலேன்"

 

என்று அறிவுறுத்துகின்றார் தாயுமானார்.

 

இதன் பொருள் ---

 

நிலை இல்லாது சென்று கொண்டிருக்கின்ற இந்த உலகமே பெரிது எனக்கொண்ட,உலகத்து வாழும் மதியிலா மாந்தர்தம் உலக ஒழுக்கத்தினை என்னவென்று சொல்லுவேன்என்னவென்று சொல்லுவேன். அம் மக்கட்குப் பொழுது எவ்வாறு போகின்றது என்னில்நிலையாத தத்தம் உடலின்பொருட்டு உண்ணவேண்டிய உணவினுக்கு ஓயாது அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஐயம் ஏற்று உண்பதும். உண்ட களைப்பு நீங்க,நன்றாய்க் கண்ணுறக்கம் கொள்ளுதலும்ஆகிய பிறப்பிற்குரிய இவைகள் வஞ்சனைச் செய்கைகள் அல்லாமல்,நல்ல செய்தவம் ஆகாதல்லவாகண்ணில்லாத குருடர்க்கும் வெட்ட வெளியாகக் கண்ட செய்தியாகும் இது. இப் பொய் ஒழுக்கினை உளமாரக் கண்டித்து விலகி அடியேன் நிற்றற்குரிய காலம் எக்காலம் என்பதை அறிகிலேன்.

 

     எனவேஅரிதாக வாய்த்த வாழ்நாளைப் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளவேண்டும். துன்பைத்தையே விளைத்துநரகத்தில் அழுத்தும் விலைமாதர் கூட்டுறவில்,பொருதைக் கழித்தல் ஆகாது என்கின்றார் அடிகளார்.

 

பால் அறாத் திருவாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயேவாது செய் பாடல் தோற்ற இரு நாலாம் ஆயிர சமண் மூடர் பாரின்மேல் கழுமீதே ஏறிட--- 

 

பாலறா வாயர் --- திருஞானசம்பந்தர்.

 

இரு நாலாம் ஆயிர சமண் மூடர் --- அறிவில்லாத எண்ணாயிரம் சமணர்கள்.

 

எள்அத் தனைவருந்து உறுபசிக்கும்

                        இரங்கி, பரந்து சிறுபண்டி

            எக்கிக் குழைந்து, மணித்துவர்வாய்

                        இதழைக்குவித்து, விரித்து எழுந்து

துள்ளித் துடித்து, புடைபெயர்ந்து,

                        தொட்டில் உதைத்து, பெருவிரலைச்

            சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,

                        தோளின் மகரக்குழைதவழ,

மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல்

                        விளைத்து, மடியின் மீதுஇருந்து,

            விம்மிப் பொருமி முகம்பார்த்து,

                        வேண்டும் உமையாள் களபமுலை

வள்ளத்து அமுதுஉண்டு அகமகிழ்ந்த

                        மழலைச் சிறுவா! வருகவே!

     வளருங் களபக் குரும்பைமுலை

                        வள்ளி கணவா! வருகவே! ---திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.

 

சீகாழியில் வாழ்ந்திருந்த சிவபாத இருதயர் வழக்கம்போல் ஒருநாள் நீராடப் போனார். பிள்ளையார் அழுதுகொண்டே அவரைப் பின்தொடர்ந்தார். சிவபாத இருதயர் திரும்பிப் பார்த்து, முனிவார் போலப் பிள்ளையாரை விலக்கினார். பிள்ளையார் விடவில்லை, பின் தொடர்ந்தார். சிவபாத இருதயர் அவரை அழைத்துக் கொண்டு போய், பிரமதீர்த்தக் குளக்கரையை அடைந்தார். பிள்ளையாரைக் குளக்கரையில் வைத்து, தாம் மட்டும் நீரிலே மூழ்கி, அகமருடம் செய்தார். 

 

கரையில் இருந்த பிள்ளையார், தந்தையைக் காணாது, நொடிப் போதும் தரியாதவர் ஆனார். அச் சமயத்தில், சிவபெருமானை வழிபட்ட முன்னுணர்ச்சி அவர்பால் மூண்டு எழுந்தது. பிள்ளையார் அழத் தொடங்கினார். கண்மலர்களில் நீர் ததும்புகின்றது. கைம்மலர்கள் கண்களைப் பிசைகின்றன. மணிவாய் துடிக்கின்றது. பிள்ளையார் அழுகின்றார். முன்னைத் தொடர்பு உணர்ந்தோ, பிள்ளைமையாலோ அழுகின்றார். திருத்தோணிச் சிகரம் பார்த்து, "அம்மே! அப்பா!" என்று அழுகின்றார்.

 

தடங்கருணைப் பெருங்கடலாகிய சிவபெருமான், பிள்ளையாரின் அழுகையைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு, உமையம்மையாருடன் குளக்கரையை அடைந்தார். சிவபெருமான், உமையம்மையைத் திருநோக்கம் செய்து, "உனது முலைகளில் பொழிகின்ற பாலைப் பொன் கிண்ணத்தில் கறந்து, இவனுக்கு ஊட்டு" என்றார். உமையம்மையார் அப்படியே, திருமுலைப் பாலைப் பொன் கிண்ணத்தில் கறந்து அருளி, எண்ணரிய சிவஞானத்தைக் குழைத்து, பிள்ளையாருக்கு ஊட்டினார். பிள்ளையாரின் அழுகை தீர்ந்தது. சிவஞானப் பாலை உண்டமையால், சிவஞானசம்பந்தர் ஆயினார்.

 

"எண்ணரிய சிவஞானத்து 

     இன் அமுதம் குழைத்து அருளி

உண் அடிசில் என ஊட்ட

     உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்து அருளிக்

     கையிற்பொற் கிண்ணம்அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து

     அங்கணனார் அருள்புரிந்தார்".      --- பெரிய புராணம்.

 

"யாவருக்கும் தந்தைதாய் எனும் இவர் இப்படி அளித்தார்.

ஆவதனால் ஆளுடையபிள்ளையாராய் அகில

தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்

தாவில்தனிச் சிவஞான சம்பந்தர் ஆயினார்". --- பெரிய புராணம்.

 

"சிவன் அடியே சிந்திக்கும்திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அறமாற்றும்பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம்உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்,

தவ முதல்வர் சம்பந்தர்தாம் உணர்ந்தார் அந்நிலையில்".  --- பெரிய புராணம்.

 

பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி,

     பயில்தரு வெற்புத் தரும் செழுங்கொடி

     பணைமுலை மெத்தப் பொதிந்து பண்பு உறு ......கின்றபாலை,

பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்

     பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்

     பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.   ---  திருப்புகழ்.

 

நுகர் வித்தகம் ஆகும் என்று உமை 

மொழியில் பொழி பாலை உண்டிடு

     நுவல்மெய்ப்பு உள பாலன் என்றிடும் ......இளையோனே! ---  திருப்புகழ்.

 

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. "விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்" என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல்சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கிமுடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல்பல சமயங்கள்அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப வகுக்கப்பட்டன.  ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

 

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலேகொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவிஅரசனும் அம் மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின.உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால்சோழ மன்னனது திருமகளாய்பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும்,அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து,பாண்டிய அமைச்சராய் இருந்துசைவநிலைத் துணையாய்அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்திஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள். 

 

அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும்அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்துமுறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள்அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்துபாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து,சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்துஅதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள். 

 

சம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கிஅப்பரிடம் விடை கேட்டனர். திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை உன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்றுகோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

 

வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்

            மிகநல்ல வீணைதடவி

 மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்

            உளமே புகுந்த அதனால்,

 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

            சனி பாம்பு இரண்டும் உடனே,

 ஆசு அறும் நல்லநல்ல,அவைநல்லநல்ல

            அடியாரவர்க்கு மிகவே”

 

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்துஅப்பரை உடன்படச் செய்து விடைபெற்றுமுத்துச் சிவிகை ஊர்ந்துபல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்கபாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார். 

 

எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும்,அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.

 

சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கிகுலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடிகண்ணீர் ததும்பி கைகூப்பிமண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்துஅவரைத் தமது திருக்கைகளால் எடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே” என்னலும்குலச்சிறையார் கைகூப்பி,

 

 “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் 

     இனி எதிர் காலத்தின் சிறப்பும்

இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால் 

     எற்றைக்கும் திருவருள் உடையேம்

நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் 

     நற்றமிழ் வேந்தனும் உய்ந்து,

வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்

     மேன்மையும் பெற்றனம் என்பார்"    --- பெரியபுராணம்.

 

மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரியமங்கையர்க்கரசியாரையும்குலச்சிறையாரையும் சிறப்பித்து திருசானசம்பந்தர் திருப்பதிகம் பாடிகோயிலுள் புகுதலும்அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க,பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறிஆலவாயானைத் தெரிசித்துதமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார்.

 

சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண்டுமுட்டு” “கேட்டுமுட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அனுமதி பெற்று,திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்றுதாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து,ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்கசம்பந்தர் இது அரசனாணையால் வந்ததென்றுணர்ந்து,

 

    “செய்ய னேதிரு வாலவாய் மேவிய

  ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்

  பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்

  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

 

என்று பாடியருளினார். 

 

“பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லிமயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். 

 

மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கிதிருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும்அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூறஅரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான் சேருவேன்அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

 

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை

வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்

தேன் நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்

கானத்தின் எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.   --- பெரியபுராணம்.

 

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறிஅரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். சம்பந்தர் அபயந்தந்துஅடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்றுதென்னவனாயுல காண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே ” என்று பாடி விடைபெற்றுபாண்டியர் கோன் மாளிகை புக்கார். 

 

ஆலமே அமுதமாகஉண்டுவானவர்க்கு அளித்துக்

காலனை மார்க்கண்டர்க்காக்காய்ந்தனை,அடியேற்கு இன்று

ஞாலம்நின் புகழே ஆகவேண்டும்நான் மறைகள் ஏத்தும்

சீலமே! ஆல வாயில்சிவபெருமானே! என்றார்.--- பெரியபுராணம்.

 

பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பிதலைப்பக்கத்தில் பொன்னால் ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க,சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச,கவுணியர் வேந்து,

 

மானின் நேர் விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந் தேவி! கேள்

பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்,

ஆனைமாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்

ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

 

என்று பாடித் தேற்றினார்.

 

            அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமெனஅமணர் இடப்புறநோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்கசுவாமிகள்ழுமந்திரமாவது நீறுழு என்ற திருப்பதிகம் பாடிவலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டுபாலறாவாயரைப் பணியபிள்ளையார் மீண்டுத் திருநீறு பூசநோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

 

            பின்னர்சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெரு நெருப்பு மூட்டினர். சம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை யிடஅவை சாம்பலாயின. புல் புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவதென்று துணிந்தனர். வையை யாற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விடஅது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது.திருஞானசம்பந்தப் பெருமான் "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் அற்புதத் திருப்பாசுரம் பாடிஅந்த ஏட்டினை வைகையாற்று வெள்ளத்தில் இட்டார். அந்த ஏடு நீரை எதிர்த்துச் சென்றது.  "வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்துநின்ற சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையுங் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.

 

 

நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட பாதுகாத்து அருளாலேகூன் நிமிர் இறையோனும்ஞாலம் ஏத்தியது ஓர் மாதேவியும்ஆலவாய்ப் பதி வாழ்வாமாறு எ(ண்)ணும் ஞான பாக்கிய பாலா--- 

 

திருஞானசம்பந்தரின் அருள் நோக்கத்தால்உடல் கூனும்உள்ளக் கூனும் நீங்கிமீண்டும் சைவனாக மாறிய பாண்டிய மன்னவனுக்கு திருஞானசம்பந்தர் திருநீறு வழங்கினார். அவன் அதனை இருகரத்தும் ஏந்தி அணிந்து இன்புற்றான். அதனைக் கண்ட மக்கள் அனைவரும் திருநீறு இட்டு சைவர்கள் ஆனார்கள்.

 

தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்,

முன்னவன் பணிந்து கொண்டு,முழுவதும் அணிந்து நின்றான்,

மன்னன் நீறு அணிந்தான் என்று,மற்றவன் மதுரை வாழ்வார்,

துன்னி நின்றார்கள் எல்லாம் தூயநீறு அணிந்து கொண்டார்.  ---பெரியபுராணம்.

                                                                                          

பூதிமெய்க்கு அணிந்து,வேந்தன்

            புனிதனாய் உய்ந்த போது,

நீதியும் வேத நீதி

            ஆகியே நிகழ்ந்தது எங்கும்,

மேதினி புனித மாக

            வெண்ணீற்றின் விரிந்த சோதி

மாதிரம் தூய்மை செய்ய

            அமண்இருள் மாய்ந்தது அன்றே. ---பெரியபுராணம்.

 

"மங்கையர்க்குத் தனியரசி,எங்கள் தெய்வம்,

    வளவர்திருக் குலக்கொழுந்து,வளைக்கை மானி,

செங்கமலத் திருமடந்தை,கன்னி நாடாள்,

    தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை,

எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே

    இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்

பொங்கு ஒளிவெண் திருநீறு பரப்பினாரைப்

    போற்றுவார் கழல் எம்மால் போற்றல் ஆமே." --- பெரியபுராணம்.

 

என்பது தெய்வச் சேக்கிழார் பெருமான் அருள்வாக்கு.

 

இதன் பொருள் ---

 

மங்கையர்க்கு எல்லாம் ஒப்பில்லாத பேரரசியும்,எமது தெய்வமும்சோழரின் குலக்கொழுந்தாக விளங்குபவரும்வளையலை அணிந்த பெருமையுடையவரும்செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளைப் போன்றவரும்பாண்டி நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்திற்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய பாவை போல்பவரும்எங்களுடைய பெருமானாரான சீகாழித் தலைவரின் அருளால் பெரிய தமிழ் நாட்டிற்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கிமேலோங்கிய ஒளியைத் தரும் நீருநீற்றைப் பரவச் செய்தவருமான மங்கையர்க்கரசியாரைப் போற்றுபவரின் திருவடிகள் எம்மால் போற்றத்தகுவதாகும்.

 

உலகமெல்லாம் போற்றி வணங்குகின்ற அருட்தாய் ஆகிய மங்கையர்க்கரசியாரின் திருவுள்ளம் குளிர்ந்தது. பாண்டிய நாடு சைவம் மேவி வாழ்ந்தது. 

 

பாண்டிய நாட்டு மக்கள் யாவரும் திருஞானசம்பந்தப் பெருமானைப் போற்றினர்.

 

மீனவன் கொண்ட வெப்பை

            நீக்கிநம் விழுமம் தீர்த்த

ஞானசம் பந்தர் இந்த

            நாயனார் காணும் என்பார்;

பால்நறுங் குதலைச் செய்ய

            பவளவாய்ப் பிள்ளை யார்தாம்

மானசீர்த் தென்னன் நாடு

            வாழவந்து அணைந்தார் என்பார்.  ---பெரியபுராணம்.

 

 

ஞான பாக்கிய வேலா,ஞான தீட்சித சேயே--- 

 

வழியினில் வாழ்ஞான போதக!

பரம சுவாமீ! வரோதய!

     வயலியில் வேலாயுதா! வரை ...... எங்கும்ஆனாய்.--- திருப்புகழ்.

 

சிவகாமிக்கு ஒரு தூர்த்தர்,எந்தையர்,

     வரி நாகத் தொடையார்க்கு உகந்துரு

     சிவஞானப்பொருள் ஊட்டும் முண்டக..அழகோனே! --- திருப்புகழ்.

 

எல்லார்க்கும் அருட்குருநாதராக விளங்கிதனக்கு குருவாக யாரையும் இல்லாத பரமகுருநாதர் முருகப் பெருமான்.

 

 

காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மாமழ நாடு போற்றிய பூவாளூர் உறை பெருமாளே--- 

 

மழநாடு என்பது கொல்லிமழவன் ஆண்ட நாடு என்பதைப்  பெரியபுராண வாயிலாக அறியலாம்.

 

பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்தலம் இருந்ததால், ‘பூவாளியூர்என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி பூவாளூர்என்றானது.

 

இங்குள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் திருமூலநாத சுவாமிஇறைவி பெயர் குங்கும சவுந்தரி அம்பாள். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவனின் திருச்சுற்றின் தென்புறம் நர்த்தன கணபதிதட்சிணாமூர்த்திமேல்புறம் அண்ணாமலையார்தெற்கில் சிவதுர்க்கை திருமேனிகள் உள்ளன. ஆலயத்தின் திருச்சுற்றின் தெற்கில் நால்வர் மற்றும் நாயன்மார்களின் திரு மேனிகள் அழகுற அமைந்துள்ளன. பொதுவாக நால்வர் வரிசை என்பது சம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர்மாணிக்க வாசகர் என்ற முறையிலேயே அமைவது வழக்கம். ஆனால் இங்கு மாணிக்கவாசகர்சுந்தரர்சம்பந்தர்திருநாவுக்கரசர் என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. காரணம் தெரியவில்லை. நாயன்மார் வரிசைக்கு எதிரே மகாலிங்க மூர்த்தியின் தனி சன்னிதி உள்ளது.

 

தனிச் சந்நிதியில் ஆறுமுக பெருமான் வள்ளிதெய்வானையுடன் அழகு திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

 

திருச்சி - லால்குடி நெடுஞ்சாலையில்,லால்குடியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூவாளூர் என்ற இந்தத் திருத்தலம்.

கருத்துரை

 

முருகா! விலைமாதர் கூட்டுறவில் வாழ்நாளைக் கழிக்காமல்அடியேனை அழைத்து அருள் உபதேசம் புரிவாய்.

 

                        

 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...