பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போஜனம் செய்யும் பெருமை

 


பெற்ற தாய் பசித்திருக்க

பிராமண போஜனம் நடத்தும் பெருமை

-------

 

      இல்லற தருமத்தில் நிற்கின்ற ஒருவர்மறைந்த முன்னோர்கடவுள்விருந்தினர்சுற்றத்தார்தான் என்று சொல்லப்பட்ட ஐவகையினர் இடத்தும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து வருதலே தலையானது ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 

 

"தென்புலத்தார்தெய்வம்விருந்துஒக்கல்தான்என்றுஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

தென் --- அழகுஞானம்சிறப்பு. புலம் --- அறிவு.

 

தென்புலத்தார் என்பதுமெய்யறிவு உடையவர்சான்றோரைக் குறித்தது என்கின்றார்கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்.

 

தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையில் இருப்பவர் என்பது பொருள். இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாக ஒரு நம்பிக்கையுண்டு. அதனால்நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களைத் தென்திசையில் உள்ளவர் எனக் கூறுவது மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு என்பது,ஓர் ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம்.

 

நம்மோடு வாழ்ந்து இருந்து மறைந்த முன்னோர்களைத் தென்புலத்தார் அல்லது பிதிரர் என்போம். பிதிரர் ஆவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் தேவ சாதியர் என்கின்றார் பரிமேலழகர். அவர்க்கு இருக்கும் இடம் என்பதால் தென்புலத்தார் எனப்பட்டார். இறந்து போனவரது புத்திரர் முதலியோர் செய்யும் கருமங்களினால் மகிழ்ச்சி உற்றுஇறந்தவர்க்கும் அவரது இனத்தவர்க்கும் நேர்ந்த துர்க் கதியை நீக்கவும்நற்கதியை அளிக்கவும் வல்ல ஒரு வகை தேவசாதியார் பிதிர்க்கள் எனப்படுவர். இவர்கள் இயற்கைத் தேவர்களில் ஒரு வகையினராய் இருத்தல் பற்றிபிதிரராவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் கடவுள் சாதி என்று கூறப்பட்டது. இயற்கைத் தேவர்கள் அல்லாதார்கருமத் தேவர்கள் எனப்படுவர். அவர்கள்புண்ணியத்திற்கு ஏற்பசுவர்க்காதி போகங்களை அனுபவித்து,புண்ணியம் கழிந்த உடனேஅவ்விடத்தினின்றும் நீங்கி விடுபவர்கள். 


இல்லறத்தானின் கடமைகளில் ஒன்றுநம்மிடையே வாழ்ந்து மறைந்தோரைகுறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதல் ஆகும். இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினை ஆகும். தென்புலத்தாரை நினைத்து அடையாள முறையில் சில உணவுகளைப் படைத்துஅவர் பெயரால்இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். நம்முடைய வாழ்க்கை முறையில்முன்னோர்களை என்றும் மறத்தல் கூடாது. எனவேதான்திருவள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார். 

 

"தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்" என்பது புறநானூறு. இதனால்,முன்னோரை வழிபடுகின்ற நல்ல புதல்வர்களைப் பெறுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

 

விருந்து என்பது சுற்றத்தாரையும்நண்பர்களையும் குறிக்காது. விருந்து என்ற சொல்லுக்கு,புதிதாய் வருபவரை உணவளித்துப் போற்றுதல் என்று பொருள். விருந்தினர் என்றால்புதியவர்அதிதி என்ற பொருள். அதிதிகள் யார்?என்று அறநெறிச்சாரம் கூறுவது காணலாம்.

 

அட்டுஉண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்

அட்டு உண்ணா மாட்சி உடையவர், --- அட்டு உண்டு

வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்,

வீழ்வார்க்கு வீழ்வார் துணை.       --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் --- 

 

சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு,விருந்தினர் என்போர்எந்தக் காலத்திலும் சமைத்து உண்டு வாழ இயலாத பெருமையினை உடைய துறவறத்தினரே ஆவார். சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்குஅவ்வாறு வாழும் இல்லறத்தாரே விருந்தினர் ஆவார் என்று சொல்லுதல்மலை உச்சியில் இருந்து நிலத்தின் மீது விழுகின்றவர்க்குஅவ்வாறு விழாமல் நின்றவரே துணை ஆவார் என்று எண்ணுதல் போன்றது ஆகும்.

 

"ஓர் இராத்திரி பரியந்தம் புதிதாக வந்தவன் அதிதி எனத் தக்கவன். நாள்தோறும் வாராதுஒரு காலத்து வருபவனுக்கு அதிதி என்று பெயர்" என்று மனுநூல் சொல்லுகின்றது. "அறவோர்க்கு அளித்தலும்,அந்தணர் ஓம்பலும்,தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்" என்று சிலப்பதிகாரம் கூறுவதால்தொன்று தொட்டே விருந்தினரை எதிர் கொள்ளுதல் இல்லறத்தானுடைய கடமை ஆயிற்று என்பது பெறப்படும்.

 

இல்லறத்திற்கு உரிய நெறிகளிலே நின்று வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள் என்பதை,

 

அரசுகொள் கடன்கள் ஆற்றி 

     மிகுதிகொண்டு அறங்கள் பேணி

பரவு அரும் கடவுள் போற்றி 

     குரவரும் விருந்தும் பண்பின்

விரவிய கிளையும் தாங்கி 

     விளங்கிய குடிகள்ஓங்கி

வரைபுரை மாடம் நீடி மலர்ந்து 

     உள பதிகள் எங்கும்.

 

எனப் பெரியபுராணத்தில்திருநாட்டுச் சிறப்பு என்னும் பகுதியில் வரும் பாடல் கூறும்.

 

இதன் பொருள் --- (உழவர்கள் தாங்கள் அறுவடை செய்து குவித்து வைத்துள்ள நெல்லில்) அரசர்க்குச் செலுத்தவேண்டிய ஆறில் ஒரு பங்கு கடமையைச் செலுத்திய பின்எஞ்சிய விளைவைக் கொண்டு,முதலில் செய்யத் தக்கன ஆகிய அறங்களை விரும்பிச் செய்து,வழிபாட்டிற்கு உரிய கடவுள் பூசையைப் பாராட்டிச் செய்துதென்புலத்தார்களையும்விருந்தினரையும் ஒழுக்கமுடைய சுற்றத்தாரையும் ஓம்பிஅதனால்விளக்கம் பெறும் குடிகளால் செழுமையாக அமைக்கப்பட்ட மலைபோன்ற மாடங்களை உடைய ஊர்கள் எங்கும் நிறைந்திருப்பது சோழ நாடு.

 

     அரசுகொள் கடன்கள் ஆற்றுதல் அரசுக்குச் சேரவேண்டியபகுதியாகிய ஆறில் ஒரு பங்கு இறைப்பொருளின் கடமையைச் செலுத்துவது ஆகும். இறைப் பொருளை முறையாகச் செலுத்துதல் குடிமக்களின் கடமையாகும்.அவை காலத்தாலும் இடத்தாலும் மற்றும் பலவற்றாலும்வேறு வரி வகைகளும் கூட்டி,மேலும் பலவாய்ப் பின்னரும் அதிகரிக்கக் கூடும் என்பதால் "கடன்கள்" என்றும் சொல்லப்பட்டது. இது குடிகளின் கடமைகளில் முதல் கடமையாகும். எனவே தான்,தெய்வத்தின் முன்னர் வைத்து முதலில் கூறப்பட்டது. 

 

     வரிகொடா இயக்கம் முதலிய இக்காலத் தோற்றங்கள்,அந்நாள் தமிழ்மக்களுக்கு உடன்பாடு அல்ல என்பது இதனால் விளங்கும்.

 

     வருவாயில் ஒரு பங்கை அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியாகச் செலுத்திஎஞ்சியதைக் கொண்டுதென்புலத்தார்தெய்வம்விருந்து ஒக்கல்தான் என்னும் ஐம்புலத்து ஆறினை ஓம்பினார்கள் மக்கள் என்று அறியப்படுகின்றது. ஆகவருவாயை ஆறு பங்காகப் பிரித்துஒரு பங்கினை அரசுக்குச் செலுத்திஎஞ்சியதைக் கொண்டு அறநெறியில் வாழ்ந்தார்கள்.

 

     திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு பாடல்களாலும்நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நன்கு உணரலாம்.

 

கற்றை வை களைந்து தூற்றி,

         கூப்பிஊர்க் காணித் தெய்வம்,

அற்றவர்க்கு அற்றவாறு ஈந்து,

         அளவை கண்டுறில் ஒன்று

கொற்றவர் கடமை கொள்ள,

         பண்டியில் கொடுபோய்த் தென்னாடு

உற்றவர்,சுற்றம்,தெய்வம்

         விருந்தினர்க்கு ஊட்டி உண்பார்.

 

பாண்டி நாட்டிலே வாழ்ந்த குடிகளைப் பற்றிக் கூறுகின்ற இப் பாடலின் பதப்பொருள் ---

   

கற்றை வை களைந்து தூற்றி --- அறுவடை செய்து கற்றையாக வைக்கப்பட்டுள்ள வைக்கோலை கட்டு நீக்கி அடித்து,பதர் போகத் தூற்றி கூப்பி --- நெல்லைப் பொலிகளாகக் குவித்து வைத்து, (அவ்விடத்திலேயே)ஊர்க் காணித் தெய்வம் --- கிராம தேவதைகளுக்கும் அற்றவர்க்கு --- வறியவர்களுக்கும் அற்றவாறு ஈந்து --- வரையறுத்தபடி கொடுத்து,அளவை கண்டு --- அளந்து பார்த்துகொற்றவர் கடமை ஆறில் ஒன்று கொள்ள --- மன்னருக்கு இறைப்பொருளாகஆறில் ஒரு கூறு கொள்ளக் கொடுத்து பண்டியில் கொடுபோய் --- மிகுதியை வண்டிகளில் கொண்டு போய் தமது இருப்பிடத்திலே சேர்த்து தென்னாடு உற்றவர் --- தென்புலத்தைச் சேர்ந்தவர்களையும்சுற்றம் --- சுற்றத்தாரையும்,  தெய்வம் ---- தேவரையும்விருந்தினர்க்கு --- விருந்தினரையும்,  ஊட்டி --- உண்பித்து,  உண்பார் - (அந்நாட்டினர்) தாமும் உண்பார்.

 

பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை அந்த

நன்மலை மானக் கூப்பி நல்கிப் பல் குடியும் ஓம்பித்

தென்மலைக் கிழவன் தெய்வம் தென்புல வாணர் ஒக்கல்

தன்மனை விருந்து காத்துத் தருக்கினால் இருக்கும் நாளில்.

                      --- தி.வி.புராணம்மேருவைச் செண்டால் அடித்த படலம்.

 

 இதன் பொருள் --- 

 

     பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை --- (பின்பு) மேருமலைத் தெய்வம் கொடுத்த அ த்தூய்மையாகிய பொருளைஅந்த நல்மலை மானப் கூப்பி --- அந்த நல்ல மேருமலையைப் போலக் குவித்துபல் குடியும் நல்கி ஓம்பி --- பல குடிகளுக்கும் கொடுத்துப் பாதுகாத்துதென்மலைக் கிழவன் --- பொதிகை மலைக்கு உரியவனாகிய உக்கிரவழுதிதெய்வம் தென்புல வாணர் ஒக்கல் தன்மனை விருந்து காத்து ---தெய்வத்தையும்,தென்புலத்தாரையும்,சுற்றத்தாரையும்,தனது இல்லில் வந்த விருந்தினரையும் ஓம்பிதருக்கினான் இருக்கும் நாளில் --- களிப்புடன் இருக்கும் காலத்தில்.         

 

மின்னார் சடையான் தமர்,ஆய்ந்தவர்,வேதச் செல்வர்,

தென்னாடர் தெய்வம்,விருந்து,ஒக்கல்,செறிந்து நட்டோர்,

முன்னாம் எவர்க்கும் முகில்போல் வரையாமல் நல்கி,

எந்நாளுநம் நோயின்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான்.

                               --- தி.வி.புராணம்உலவாக்கோட்டை அருளிய படலம்.

  

இதன் பொருள் ---

 

மின் ஆர் சடையான் தமர் --- மின் போன்ற சடையை உடைய சிவபெருமானது அடியார்களும்ஆய்ந்தவர் வேதச் செல்வர் --- வேதத்தை ஆராய்ந்தவர்களாகிய அந்தணர்களும்தென்னாடர் தெய்வம் விருந்து ஒக்கல் --- பிதிரரும் தெய்வமும் விருந்தும் சுற்றத்தாரும்செறிந்து நட்டோர் --- நெருங்கி நட்புச் செய்தோரும்முன் ஆம் எவர்க்கும் --- முதலாகிய யாவர்க்கும்முகில் போல் வரையாமல் நல்கி --- மேகம் போல் வரைவின்றிக் கொடுத்துஎந்நாளும் நோய் இன்று அளகாதிபன் என்ன

வாழ்ந்தான் --- எஞ்ஞான்றும் வறுமை நோயின்றிக் குபேரன் போல வாழ்ந்து வந்தான்.

 

     இல்லறத்தார்க்கு உரிய இந்தத் தலையாய கடமைகளை ஆற்றாமல்ஒருவன் தனியாக இருந்து உண்பது,கொக்கு தான் பிடித்த மீனைத் தனியாக இருந்து தின்பதற்கு ஒப்பாகும் என்கின்றது "நீதிவெண்பா" என்னும் நூல்.       

                        

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு

இன்புறத்தான் உண்டல் இனிதாமே --- அன்புறவே

தக்கவரை இன்றித் தனித்து உண்டல் தான் கவர்மீன்

கொக்கு அறுத்தல் என்றே குறி.          --- நீதிவெண்பா.

 

     இதை ஒட்டியே, "தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்" என்னும் வழக்குச் சொல் உண்டானதாகவும் கொள்ளலாம். இல்லறத்தான் ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட மேற்குறித்த கடமைகளைச் செய்துஎஞ்சிய பொருளைக் கொண்டு பிற தானங்களைச் செய்யலாம். அவ்வாறு,செய்யாமல்தன்னைப் பிறர் மதிக்கவேண்டும் என்பதற்காகவோஅல்லது அறியாமையாலோபிற அறங்களைச் செய்வது, "பெற்ற தாய் பசித்து இருக்க,பிராமண போஜனம் செய்து பெருமை தேடிக் கொண்டதாக அமையும்" என்கின்றது "தண்டலையார் சதகம்".

 

சுற்றமாய் நெருங்கி உள்ளார்,தனை அடைந்தார்,

     கற்று அறிந்தார்,துணைவேறு இல்லார்,

உற்ற வேதியர்பெரியோர்க்கு உதவி அன்றிப்

     பிறர்க்கு உதவும் உதவி எல்லாம்,

சொற்றநான் மறைபரவும் தண்டலையா

     ரே! சொன்னேன்! சுமந்தே நொந்து

பெற்றதாய் பசித்து இருக்கப் பிராமணபோ

     சனம் நடத்தும் பெருமை தானே.        --- தண்டலையார் சதகம்.

 

இதன் பொருள் ---

 

சொற்ற நான்மறை பரவும் தண்டலையாரே --- கூறப்பட்டநான்கு மறைகளும் போற்றும் தண்டலையாரே!,சுற்றமாய் நெருங்கியுள்ளார்தனை அடைந்தார்,கற்று அறிந்தார்,துணைவேறு இல்லார்,உற்ற வேதியர்பெரியோர்க்கு உதவி அன்றி --- உறவினராகத் தன்னை நெருங்கி உள்ளவர்களும் தன்னைச்சார்ந்தவர்களும்கற்று அறிந்தவர்களும்,வேறு சார்பு இல்லாதவர்களும்,வந்தஅந்தணர்களும்,பெரியோர்களும் ஆகியவர்க்கு உதவாமல்,  பிறர்க்குஉதவும் உதவி எல்லாம் --- மற்றவர்களுக்கு உதவும் உதவிகள் யாவும்சுமந்தேநொந்து பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போசனம் நடத்தும்பெருமை தானே --- (பத்து மாதங்கள் வயிற்றில்சுமந்து வருந்திப் பெற்றெடுத்துவளர்த்து ஆளாக்கிய தாயானவள் பசியுடன் வாடி இருக்கும்போதுபிராமணர்களுக்கு உணவு படைத்துப் பெருமை தேடிக் கொள்வதைப் போன்றது ஆகும்.

 

     இல்லறத்தான்தனக்கு விதிக்கப்பட்ட கடமையை நிறைவேற்றாமல்புறக்கணித்துபிற அறங்களைச் செய்வதால் பயனில்லை என்பதும்அது அறம் ஆகாது என்பதும்அது வெற்று ஆரவாரமாகவே அமையும் என்பதும் இதனால் பெறப்படும்.

 

     

 

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...