புத்தியில் உறைக்கவில்லையே, ஏன்?

 


அறிவில் உறைக்கவில்லையேஏன்?

-----

 

எத்தனைதான் கற்றாலும்,எத்தனைதான் கேட்டாலும்,

எத்தனை சாதித்தாலும் இன்புறா,-சித்தமே

மெய்யாகத் தோன்றி விடும்லக வாழ்வு அனைத்தும்

பொய்யாகத் தோன்றாத போது.      

 

குருஞானசம்பந்த தேசிக பரமாசாரியார் பாடிய சிவபோகசாரம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

     உலகியல் பொருள்கள் அனைத்தும்நிலையற்றவை;அவற்றால் பெறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவைஅவற்றை அனுபவிக்கின்ற இந்த உடம்பும் நிலையற்றது என்ற உணர்வு தோன்றாதபோது,எவ்வளவு நூல்களைக் கற்றாலும்எவ்வளவுதான் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் வாயிலாகக் கேட்டாலும்எவ்வளவுதான் உலகப் பொருள்களை அனுபவித்து இருந்தாலும்உண்மையான இன்பம் வந்து எய்தாது. 

 

     எனவேநூல்களைக் கற்றதன் பலனாகவும்,கேட்டதன் பலனாகவும்நிலையானது எதுநிலையற்றவை எவைஎன்கின்ற அறிவு உண்டாக வேண்டும். நிலையற்ற பொய்ப் பொருள்களால் வரும் நிலையற்ற சிற்றின்பத்தை விடுத்துநிலையான இன்பத்தைத் தரும் மெய்ப்பொருளைத் தேட முனைதல் வேண்டும்.

 

"கற்ற அறிவால் உனை நான் கண்டவன்போல் கூத்தாடில்

குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே".     --- தாயுமானார்.

                                    

     நூல்களைக் கற்றுவிட்டதாலேயேநூல்களில் சொல்லி வைத்துள்ள வேடங்களைப் புனைந்து கொண்டதாலேயேஇறைவனைக் கண்டுவிட்டதாகக் கூத்தாடிக் கொண்டு இருத்தல் கூடாது. அந்தக் குற்ற உணர்வுதனக்குத் தானே வருந்தும் நிலையில் முடியும்.

 

வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும்

நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே.           --- தாயுமானார்.

                                  

     அருளில் நாட்டம் உள்ளவர் போல் காட்டிக் கொண்டுஅளவற்ற நூல்களைப் பிதற்றிக் கொண்டுஉள்ளத்தில் பொருளாசை கொண்டு வஞ்சனையையும்பொய்யையும் வைத்துக் கொண்டு,பிறர் பொருள் மேல் பொறாமை கொண்டு இருப்பதால் நன்னெறி வாய்க்காது.

 

கேட்டதையே சொல்லும் கிளிபோல்,நின் அருளின்

நாட்டம் இன்றி வாய்பேசல் நன்றோ பராபரமே!             --- தாயுமானார்.

 

     கிளியானது, தான் கேட்டதை அப்படியே சொல்லும். கேட்ட பொருளில் அதற்கு நாட்டம் சிறிதும் இல்லை. "பேச்சு பேச்சு என்னும்பெரும்பூனை வந்தக்கால்கீச்சு கீச்சு என்னும் கிளி" என்று ஔவையார் சொன்னது போலசொன்னதை எல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு இருந்த கிளியானது,பூனையைக் கண்டவுடன் கீச்சு கீச்சு என்று பயத்தால் அலறுவதில் இருந்தே தெரியவரும். அதுபோல அருளில் நாட்டம் இல்லாமல்பொருளில் நாட்டம் வைத்துகற்றதை எல்லாம் வாய் கிழிய உளறுவது பயனற்றது.

 

பொய்யைப் பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவுஉன்

மெய்யருளே அன்றோ?விளம்பாய் பராபரமே.                --- தாயுமானார்.

                    

     கற்றதையும் கேட்டதையும் கொண்டுநன்கு சிந்தித்துநிலைத்த பொருள் எதுநிலையற்ற பொருள் எது என்று பகுத்தறிந்து கொள்ளவேண்டும். பொய்யைப் பொய் என்று அறியும் அறிவு விளங்கவேண்டும். அதற்கு இறைவன் திருவருள் ஆதாரமாக நிற்கும். (போதம் --- உண்மை அறிவு)

 

            நான் கற்றவன்நிரம்பக் கேள்வி ஞானம் உள்ளவன் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு இருந்துகற்றதன் பொருளை உணராமல் இருத்தல் கூடாது.

 

வாசியும் மூசியும் பேசி வகையினால்

பேசி இருந்து பிதற்றிப் பயன் இல்லை,

ஆசையும் அன்பும் அறுமின்அறுத்தபின்

ஈசன் இருந்த இடம் எளிது ஆகுமே.         --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     வாசி யோகத்தின் பெருமையையும்அதில் பயிலும் யோகியின் பெருமையையும் நூல்களால் உணர்ந்து,அவற்றை வகைவகையாக விரித்து உரைப்பவனைப் போலஞானிகளும் விரித்து உரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால்,நீங்கள் உயிர் அல்லாத பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும்,உயிர்ப் பொருள்கள்மேல் செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீங்கள் இறை நிலையை அடைதல் எளிதாகும்.

 

            முதலில் சொன்னது போல எவ்வளவுதான் கற்றாலும்,எவ்வளவுதான் கேட்டாலும்உண்மைப் பொருள் விளங்கவில்லையானால்அவனை அறிவில்லாதவன் என்றுதானே சொல்லவேண்டும். அறிவின்மையை "பொறியின்மை" என்கின்றார் திருவள்ளுவ நாயனார். "பொறியிலாததவர்களே" என்று விளித்து,உங்களுக்கு ஏன் உண்மை அறிவு விளங்கவில்லைஎன்று வினவுகின்றார் அப்பர் பெருமான்...

 

குறிகளும்,அடையாளமும்,கோயிலும்,

நெறிகளும்அவர் நின்றது ஓர் நேர்மையும்

அறிய,ஆயிரம் ஆரணம் ஓதிலும்,

பொறியீலீர்! மனம் என்கொல் புகாததே?   --- அப்பர்.

 

இதன் பொருள் ---

 

     அறிவற்றவர்களே! குறிகளும்அடையாளமும்கோயிலும்நெறிகளும்நீங்கள் வழிபடுகின்ற இறைவர் நின்றதோர் நேர்மையும் நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக ஆயிரம் வேதங்கள் கூறி இருந்தாலும்,உமது மனமானது அவற்றுள் புகாதது ஏனோ?

 

     இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும்அவரவர் நாகரிகத்தில் சிறந்து இருந்தாலும்இல்லாவிட்டாலும்எல்லோரும் "கடவுள் ஒருவர் உண்டு" என்னும் உணர்ச்சி உள்ளவர்களாகவே இருப்பார்கள். "கடவுள் உணர்ச்சி இல்லாத ஒரு மக்கள் கூட்டத்தாரைக் காண்பது இயலாது" என்று மேனாட்டு அறிஞர்களாலும் சொல்லப்பட்டு உள்ளது. மிக உயர்ந்தோர் முதல்தாழ்ந்தோர் வரை கடவுள் உணர்ச்சியும்அதற்கு ஏற்ற பலவகையான வணக்க முறைகளையும் உடையவராய் உள்ளதைக் காணலாம். இந்த உணர்ச்சி அவர்களுக்கு ஏன் வந்ததுஎன்றால்தாம் பெற்றுள்ள உடம்பினையும்உடம்புக்கு வேண்டிய இந்த உலகப் பொருள்களையும்உடம்பு நிலவுவதற்கு வேண்டிய இடத்தையும் வேண்டியவர்களாய் அவர்கள் இருக்கின்றனர். காரணம்,இந்த உடம்பையோஇது உலவுகின்ற இந்த உலகத்தையோ,உலகத்தில் உள்ள அனுபவப் பொருள்களையோ தாமாக உண்டாக்கிக் கொள்ளும் வல்லமை மனிதர்க்கு இல்லை.

 

     அழகான சிற்பங்களை வடிவமைத்தவர்அழகான பொருள்களைக் கண்டுபிடித்தவர்அறிவு நூல்களைச் செய்தவர்,சித்தர்அருளாளர் என்று யாராவது உயிருடன் இருந்தால்அவர்களைக் காணவேண்டும்வணங்கவேண்டும் என்னும் உணர்வு ஒருவருக்கு உண்டாவது இயல்பு. அப்படி இருக்க எண்ணிறந்த உடம்புகளையும்எண்ணிறந்த உலகங்களையும்உலகப் பொருள்களையும் படைத்துக் காத்து அளித்து வரும் இறைவனைக் காண்பதற்கு ஆவல் உண்டாவதும் இயல்பே. மக்களில் சிறந்தவராக உள்ள சிலரை வணங்குவதில்நமக்கு ஆவல் இருக்குமானால்அதனால் இன்பம் உண்டாகுமானால்,எல்லாம் வல்ல இறைவனைக் காண ஆவல் உண்டாவதும்,அதனால் இன்பம் உண்டாவதும் இயல்பே.

 

     உலகத்தில் பிறரை வணங்குவதுஅவர்பால் கொண்டுள்ள அச்சத்தாலும் நிகழும். அன்பினாலும் நிகழும். எல்லா வளங்களையும் உடையவனும்எல்லா வளங்களையும் உயிர்களுக்கு வழங்குபவனும் ஆகிய இறைவனையும்அச்சத்தால் வணங்குபவர்களும் உண்டு. அவன்பால் அன்பு உடையவர்களாய் வணங்குபவரும் உண்டு. "இறைவனை வணங்கவில்லையானால்,நமக்குத் தீங்கு உண்டாகும்" என்னும் அச்சம் காரணமாகவும்,பயன் கருதியும் வணங்குவோரும் உண்டு. இந்த அச்ச உணர்வை மக்களுக்கு விளைக்கும் சமயவாதிகள் உண்டு. "எல்லாம் வல்ல பரம்பொருள்ஒன்றுக்கும் பற்றாத எளியவர்களாகிய உயிர்களிடத்து அன்பும் அருளும் உடையவன். அவனுடைய பேரன்பினால் நாம் வாழுகின்றோம்" என்று உள்ளத்தில் இறைவன் மீது கொண்ட அன்பினால்அவன் தந்த வளங்களை எண்ணிநன்றி உணர்வோடு வணங்குவோரும் உண்டு. இதை வலியுறுத்திய அருளாளர்களும் உண்டு.

 

     இறைவனுக்கு என்று வகுக்கப்பட்ட குறிகள் என்பவை,கடவுள் திருமேனிகளைக் குறிக்கும்அடையாளங்கள் எனப்படுபவைஇறைவனுக்கு உண்டானவைகளும்அவனை வழிபடுவோர்க்கும் உண்டாக்கப்பட்டவைகளாகிய அடையாளங்கள் அல்லது சின்னங்கள்,இவறைவனை வணங்குதற்கு என்று உருவாக்கப்பட்ட கோயில்கள்இறைவன் நின்ற அழகு அல்லது நடுநிலைமை இவற்றை உணர்ந்துகொள்ளுவதற்கு என்றே வேதங்கள் என்னும் அறிவு நூல்கள்அவரவர் மொழிகளில் உருவாக்கப்பட்டன. அந்தந்த சமயத்துக்கு உரிய வேதநூல்கள் பலவற்றைக் கற்றிருந்தும்,அவற்றின் உண்மையை உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். அவற்றை ஓதினாலும்,ஏன் புத்தியில் உறைக்கவில்லை என்று வினவுகின்றார் அப்பர் பெருமான்.

 

குறிகள் --- திருமேனிகள்

 

     இறைவனுக்கு என்று எந்த உருவமும் பெயரும் (NAME OR FORM)சொரூப நிலையில் இல்லை. சொரூப நிலை என்பது உண்மை நிலை அல்லது இயல்பு நிலை. இயல்பாகவே இறைவனுக்கு ஒரு திருமேனியும் இல்லைஒரு திருப்பெயரும் இல்லை. நாம்தான் அவனுக்குத் திருமேனிகளை உண்டுபடுத்திஒவ்வொரு திருமேனிக்கும் ஒரு திருப்பெயரை வைத்து வழிபடுகின்றோம். "ஒரு நாமம்ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்குஆயிரம் திருநாமம் பாடி" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     இறைவன் அறிவும் ஆற்றலும் நிறைந்தவன். நிறைந்தவன் என்றாலே குறைவில்லாது நிரம்பப் பெற்றவன் என்று பொருள். "குறைவிலா நிறைவே! கோது இலா அமுதே! ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே!" என்பார் மணிவாசகர். ஆனால்,உயிர்கள் சிற்றறிவும்சிறு ஆற்றலும் உள்ளவை. இறைவனைப் போலவேஉயிர்களுக்கும் ஒரு வடிவமும்ஒரு பெயரும் சொரூப நிலையில் இல்லை.

 

     இறைவனுக்கு உண்டாக்கப்பட்ட திருமேனிகள்இறைவன் தன் அன்பர்க்கு அவ்வப்போது காட்டியருளிய திருவுருவங்களின் வடிவங்களே ஆகும். பசுவின் பால் அதன் உடலில் பரவி இருந்தாலும் அதனைக் கறந்து கொள்ளுதற்குரிய உறுப்பு அதன் மடியே ஆகும். அதுபோலஎல்லாப் பொருள்களுமே இறைவன் பிரிவறக் கலந்து நிற்கும் இடங்கள் தாம் என்றாலும்திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களே அவன் விளங்கித் தோன்றும் இடங்கள் ஆகும். 

மெய்யறிவு விளங்கப் பெறாதவர்க்குஇறைவன் அத் திருமேனிகளில் வெளிப்படாது,அங்கு மறைந்து நின்றே அருள்புரிவான். மெய்யறிவு சிறிது விளங்கப் பெற்றவர்க்குவிறகில் தீ கடைந்த பொழுதில் வெளிப்பட்டுத் தோன்றுவது போல,அத் திருவுருவில் இறைவன் விளங்கி நின்று அருளுவான்.கடையாத பொழுது விறகில் தீ வெளிப்படாதது போல,வழிபாடு இல்லாத பொழுது அங்கு விளங்காது நிற்பான்.மெய்யறிவு விளங்கப்பெற்ற ஞானிகள் அனைத்துப் பொருளையும் சிவமாகக் காணும் தன்மை உடையவர். அவர்கள் திருக்கோயிலில் உள்ள திருவுருவத்தையும் சிவமாகவே காண்பர். அவர்களுக்கு இறைவன்கன்றை ஈன்ற பசு,தன் கன்றை நினைந்த அளவில் அதன் மடியில் பால் தானே விம்மி ஒழுகுவது போல,அத் திருவுருவில் தானே வெளிபட்டு அருள்புரிவான். 

 

     எனவேசமயத்தார் ஒவ்வொருவரும் அவரவருக்கு விளங்கிய நிலையில் இறைவனுக்குத் திருமேனிகளை வடித்து வைத்தனர். இறைவன் இல்லை என்னும் சமயத்தாரும் கூடஅச் சமயத்தை வகுத்த பெரியோர்களைஅவர்களது திருமேனி வாயிலாக வழிபடுகின்றனர். ஆகஉருவ வழிபாடு உண்டு.

 

     எனவேவழிபடுவதற்கு உரிய குறிகள் (திருமேனிகள்) பலவாக இருந்தாலும்,அவற்றின் மூலமாக நமக்கு உண்டாக வேண்டியது மெய்யறிவு ஆகும்.

 

அடையாளங்கள் ---

 

     அப்படி உண்டாக்கப் பெற்ற திருமேனிகளுக்குஅவரவர் எண்ணப்படிஓர் அடையாளத்தையும் உண்டாக்கி வைத்தனர். அத் திருமேனிகளை வழிபடுவோர்க்கும் சில அடையாளங்களை உண்டாக்கி வைத்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட அடையாளங்கள் யாவும் ஒரு கருத்தை விளக்குவதாகவே இருக்கும். சமயச் சின்னங்களின் உண்மை அறியாதுஏளனமாகப் பேசுதல் அறிவுடைமை அல்ல.

 

கோயில்கள் ---

 

     ஒவ்வொரு சமயத்தார்க்கும் உள்ள கோயிலின் அமைப்பு வேறு விதமாகவே இருக்கும். அதற்கு ஒரு காரணமும் சொல்லப்படும். நாம் வசிக்கின்ற வீடு கூட அவரவர் விருப்பத்திற்கும்பொருள் வசதிக்கும் ஏற்ப விதவிதமாகத் தான் உள்ளது. இதுதான் சரியானதுஇது சரியல்ல என்று யாரும் வாதிட்டு உண்மை காண முடியாது. வீடு என்பது வாழ்வதற்காக உள்ளதுபோல்கோயில் என்பது வழிபாட்டுக்காக உள்ளது.

 

நெறிகள் ---

 

     நெறி என்னும் சொல்லுக்கு வழி என்று பொருள். இங்கே சமயக் கொள்கையைக் குறிக்கும். ஒவ்வொரு சமயமும் ஒரு கொள்கையைக் கொண்டு இருக்கும். ஓர் ஊருக்குச் செல்வதற்குப் பல வழிகள் உள்ளது போல என்று அறிக. எந்த வழியில் சென்றாலும்குறிப்பிட்ட ஊர் அடையலாம். ஆனால்அந்த ஊருக்கு உள்ள வழிகளை எல்லாம் அறியாதவர்கள்இந்த வழிதான் சிறந்தது என்பார்கள். இதைக் காட்ட,

 

ஒன்றதே பேரூர்வழி ஆறு அதற்கு உள

என்றது போல இருமுச் சமயமும்;

நன்றுஇது தீதுஇது என்று உரையாளர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

 

என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.

 

     சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று,கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும்,கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைவதற்குச் சாதனமாக உள்ளன. நான் சொல்லும் இந்த வழியே நல்லதுபிறர் கூறும் வழிகள் எல்லாம் தீயனவே என்று (உண்மை அறிவு விளங்காமல்தாம் உணர்ந்த்ததையே சொல்லிப்)  பிணங்குகின்ற சமயவாதிகள் எல்லாம்,மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

 

     எல்லாச் சமயங்களும்மக்கள் அறிவு நலம் பெற்று வாழ்வதன் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாதுஅவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு,மருண்டு வாதித்துப் பிணங்குவோர்மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்றுபிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பதை விளக்க, "ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உளஎன்றார்.

 

     அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோபிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். ஒழுங்காகக் கற்பதும் இல்லைகேட்பதும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால்இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோஅதுபோலத் தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்னகுரைத்தல் தான். பேதையின் இயல்பு என்னதான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

 

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்

 

என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள்பூசலிடுவார்கள்இனியும் பூசலிட்டுக் கொண்டு தான் இருப்பார்கள் என்பது இதன் பொருள்.சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவுஅறிவுஞானம்அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

 

     இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணிமாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோஅந்த அளவுக்கு அறிவு ஊறும். அதுகொண்டே,"பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

 

     கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்குஅவன் காணும் பொருள்கள் எல்லாம் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவுநாளை பொய்யாகலாம்மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

 

"பித்தர்குணம் அதுபோலஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

 

     பைத்தியம் பிடித்தவனுக்குத் தன் செய்கை அல்லாது பிறரைப் புரிந்து கொள்ள வராது. அவனது செயல் ஒருகால் அறிவு உள்ளது போலவும்இன்னொருகால் அறிவில்லாதது போலவும் தோன்றும். அதுபோலஅறிவு விளங்கியது போலஅறிவின்றிப் பேசுகின்ற சமயவாதிகளின் பேச்சில் அறிவு மயங்கிக் கட்டுண்டவர்கள்மேருமலையை அடைய எண்ணிப் போய்,அதை அடையாமல் கடலில் விழுந்ததைப் போல் ஆவார்கள். 

 

அவர் (கடவுள்) நின்றது ஓர் நேர்மை ---

 

     நேர்மை என்பது உண்மைநீதிஅறம் என்னும் பொருள்களை உடையது. இறை நீதியானது எல்லோர்க்கும் ஒரு நிலையாய் உள்ளது. இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லை. அவரவர் செயலுக்கு ஏற்ற பலனை அருள்பவன் இறைவன். அவரவர் வினைவழியே பயனை அளிப்பவன். "நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே" என்றார் வள்ளல்பெருமான். யார் யார் எந்த எந்த செயலை,எதை எண்ணிச் செய்கின்றார்களோஅந்த அந்தப் பலனை அருள்பவன் இறைவன்.

 

     ஆஇறைவனுக்கு வகுக்கப்பட்ட குறிகள்இறைவனுக்கும் அவனை வழிபடுகின்ற அடியார்களுக்கும் உண்டான அடையாளங்கள்மனிதனால் உண்டாக்கப்பட்ட பலவவகையான கோயில்கள்இறைவனை அடைவதற்கு உரியதாக வகுக்கப்பட்ட நெறிகள்இறைவன் அருளும் திறம் ஆகிய இவற்றின் உண்மைப் பொருள்களை அறிந்து தெளிந்து கொள்ளபலவகையான நூல்கள்அவரவர் சமயத்திலேயே வந்துள்ளன. அவற்றினைப் பலகால் ஓதியும் கேட்டும் கூடஇன்னமும் மக்களுள்ளும்சமயங்களுள்ளும்உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டுதானே இருக்கின்றீர்கள்.எத்தனைதான் கற்றாலும்எத்தனைதான் கேட்டாலும்உண்மைப் பொருளானது இன்னமும் உங்கள் புத்தியில் நுழையவில்லையே. அறிவற்றவர்களே! இது ஏன்என்று வினவுகின்றார் அப்பர் பெருமான். 

 

குறிகளும்,அடையாளமும்,கோயிலும்,

நெறிகளும்அவர் நின்றது ஓர் நேர்மையும்

அறிய,ஆயிரம் ஆரணம் ஓதிலும்,

பொறியீலீர்! மனம் என்கொல் புகாததே?         --- அப்பர்.

 

சமயச் சிலுகு இட்டவரைத் தவறி,

     தவம் முற்ற அருள் ...... புகநாடும்

சடு பத்ம முக! குக! புக்க கனத்

     தணியில் குமரப் ...... பெருமாளே.       --- திருப்புகழ்.

 

"சமயச் சண்டையிடுகின்ற சமயவாதிகளின் கூட்டத்தை விட்டு விலகி,எனது தவம் நிறைவாகவும் திருவருளில் புகவும் அடியேன் விரும்புகின்ற தாமரை போன்ற ஆறுமுகங்களை உடையவரே" என்பது அருணகிரிநாதர் கூற்று.

 

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்,

     சமய பஞ்ச பாதகர் ...... அறியாத,

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன,

     சரண புண்டரீகம் ...... அது அருள்வாயே. --- திருப்புகழ்.

 

என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். "சகரர்களால் ஏற்பட்டதும்சங்குகள் உள்ளதுமான கடலைப் போல,பெருத்த ஆரவாரத்துடன் வாதம் செய்கின்றவராகிய சமயவாதிகளான பஞ்ச மாபாதகர்களால் அறியப்படாததும் ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும் கிண்கிணியும் தண்டையும் அணிந்துள்ளதுமான திருவடித் தாமரையைத் தந்து அருள்வாயாக".

 

     சமயபேதங்களைத் தமது அறிவு நிலைக்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டுவாதம் புரிவதால் இறைவன் திருவடி வாய்க்காது.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...